World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: What is Oskar Lafontaine up to?

ஜேர்மனி: ஒஸ்கார் லாபொன்தன் எங்கே போகிறார்?

By Ulrich Rippert
16 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகிய முன்னணி SPD யின் (சமூக ஜனநாயகக் கட்சி) தலைவர் ஒஸ்கார் லாபொன்தன் (Oskar Lafontaine) சென்றவாரம் ஒரு ஊடகத் தாக்குதலை தொடக்கினார். ஜேர்மனியின் முன்னணி சஞ்சிகைகளில் ஒன்றான Spiegel க்கு பேட்டியளித்த அவர், SPD தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மற்றும் ஷ்ரோடர் பதவி விலகாவிட்டால் 2006 தேசியத் தேர்தலில் ஒரு மாற்று இடது அமைப்பை தாம் ஆதரிக்கப் போவதாக அறிவித்தார்.

வேலையிழந்தவர்கள் பெற்றுவரும் பயன்களை 2005 ல் ரத்துச்செய்யும் திட்டம் செயல்படத் தொடங்குவதற்கு எதிராக பொதுமக்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருவதை கருத்தில் கொண்டு, ஒஸ்கார் லாபொன்தன் இவ்வாறு அறிவித்துள்ளார். இந்த வெட்டுத்திட்டங்கள் 'Hartz IV'' என்று அழைக்கப்படுகின்ற சட்டத்தில் அடங்கியுள்ளன. அத்தகைய வெட்டுக்களை முன்மொழிந்த தலைவர் பெயரால் அது இயற்றப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் அதன் பயன்கள், சமூகப் பாதுகாப்பு அளவிற்கு வெட்டப்படுமென்பது அதன் முக்கியமான சட்ட விதியாக இருக்கிறது.

இது தவிர, மனுதாரர்கள் 15 பக்க படிவத்தை நிரப்ப வேண்டியது அவசியமானதாகும். தற்போது அந்தப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் விவரங்களை சேகரிப்பதற்கான கேள்விப்பட்டியலில் நிதி சம்பந்தமாக விவாதிப்பது நிர்வாண சோதனைக்குச் சமமானதாக உள்ளது. உதவிபெறவிருப்பவர்கள் தங்களது நிதி நிலவரம் குறித்து மிக நுட்பமான விவரங்களை எல்லாம் தரவேண்டும். ஆயுள் காப்பீடு மற்றும் முதியோர் காப்பீடு ஆகியவற்றைப்பற்றிய விவரங்களையும் தர வேண்டும். (பொது சமூக காப்பீடுமுறை அகற்றப்பட்டதன் விளைவாக இது போன்ற தனியார் காப்பீட்டுக் கொள்கைகள் தவிர்க்க முடியாதவையாக ஆகிவிட்டன) பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவரின் சொத்துக்கள் மற்றும் வருவாய்கள் பற்றிய பட்டியல்களும் கொடுக்கப்பட வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களை ஒட்டக் கறந்துவிட்டு, மற்றும் கணிசமான செலவில் காப்பீட்டு வைப்புத்திட்டம் ரத்துச் செய்துவிட்ட பின்னர்தான் மிகக்குறைந்த சமூக ஆதரவுத் திட்டத்திற்கு விண்ணப்பதாரர் தகுதியுடையவர் ஆகின்றார்.

"Hartz IV" திட்டத்திற்கு எதிராக அண்மை வாரங்களில் பல ஜேர்மன் நகர மற்றும் மாநகரங்களில் அதற்கெல்லாம் மேலாக கிழக்கு ஜேர்மனியில் வெகுஜனங்கள் தன்னியல்பாக கண்டனப் பேரணிகளில் இறங்கினார்கள். மேற்கு ஜேர்மனியைவிட கிழக்கு ஜேர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் இரு மடங்கு அதிகமாக உள்ளது.

ஆகவே, லாபொன்தன் இந்தக் கண்டனங்களை பயன்படுத்திக்கொள்ள முயலுகிறார். Spiegel பேட்டியில், அதிபர் ''முற்றிலுமாக அவமதிப்புக்குள்ளாகியுள்ளார்'' என்று குறிப்பிடுகிறார். SPD - பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகள் பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக வர்ணித்துள்ளார். ''யுத்தத்திற்கு பின்னர் வேலையின்மையின் மட்டம் அதிகரித்து அதிகமான வரவு செலவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, மிகப்பெருமளவில் SPD தனது உறுப்பினர்களையும், வாக்காளர்களையும் இழந்துவிட்டது'' என்று குறிப்பிட்டார்.

லாபொன்தன் கூறுவதை, நீண்ட காலமாக தயாரித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. போருக்கு பிந்தைய ஜேர்மனியின் வரலாற்றில் நலன்புரி சேவைகளை மிகப்பெருமளவில் சிதைத்துவிட்டதற்கு பொறுப்பானவர்களையும் மற்றும் ஷ்ரோடரையும் ''ஆதரிப்பதற்கு மக்கள் தயாராக இல்லை.'' இந்தக் கொள்கைகளை அதிபர் நீடித்துக்கொண்டிருப்பாரானால், புதிய இடது கட்சி அமைக்கப்படுவதை தான் ஆதரிக்கப்போவதாக லாபொன்தன் கூறினார்.

லாபொன்தன் என்ன செய்யப்போகிறார்? அவர் பங்கெடுத்துக்கொள்ளும் புதிய இடது கட்சி நலன்புரி அரசு சிதைவதை உண்மையிலேயே தடுத்து நிறுத்துமா? நிறுவனமயமான அரசியல்வாதிகளின் அறிவிப்புக்களை விமர்சன ரீதியாக ஆராய்வதற்குப் பதிலாக, அவர்கள் பேசுவதையே நல்ல நாணயம் என்று எடுத்துக்கொள்பவர்கள் தான் அவ்வாறு நம்புவார்கள்.

லாபொன்தனின் வரலாறு, அவரது அரசியல் கருத்துக்கள் மற்றும் அவரது நடவடிக்கைகள் என்பன அவரது உண்மையான நோக்கங்கள் என்பன, அவரது வாய்வீச்சு உரைகளில் இருந்து வேறுபட்டவை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன. சமூக வெட்டுக்களுக்கு எதிராக உருவாகும் இயக்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் SPD யின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் வளரும் என்ற கவலைகளால் உந்தப்பட்டு அவர் செயற்படுகிறார். ''இடது'' முகமூடி போடப்பட்டு, லாபொன்தனால் ஆதரிக்கப்படும் ஒரு புதிய கட்சி, அந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்க முயன்று அந்த இயக்கத்தையே நசுக்க கட்டளையிடும். அத்துடன், அதனை மீண்டும் சமூக ஜனநாயக அரசியல் முகாமிற்கு கொண்டு வந்துவிட முயலும்.

நிதியமைச்சராகவும், கட்சித் தலைவராகவும் இருந்து 1999 ல் பதவி விலகிய ஒஸ்கார் லாபொன்தன், பெரும்பாலும் அடங்கிப்போகும் ஒருவராக இருந்தார். அவர், சில பேட்டிகளைக் கொடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுவதைக் காண முடியும். Bild பத்திரிகையில் அரசாங்கத்தை விமர்சித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். ஆனால், அவர் எந்த நடைமுறை முடிவுகளையும் வரையவில்லை. எப்பொழுதும் SPD தனது அரசியல் தாய்வீடாகவே உள்ளது என்றும், என்றைக்கும் எந்தக் கட்சியையும் தான் உருவாக்கப் போவதில்லை என்றும் கூறுகிறார்.

சில வாரங்களுக்கு முன்னர்தான் SPD யின் சார் (Saar) மாநில மாநாட்டில் அவர் பகிரங்கமாக தற்போதைய கட்சியின் தலைவரான பிராங் மொந்பெரிங் (Franz Müntefering) உடன் கைகுலுக்கினார். செப்டம்பர் மத்தியில் சார் மாநில தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது வெளிப்படையாக ஷ்ரோடரை தாக்குதல் தொடுக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். அதற்குப்பின்னர் பல்வேறு SPD யின் தேர்தல் பேரணிகளில் பிரச்சார பேச்சாளராகக் அவர் கலந்துகொண்டார்.

மக்களின் பரந்த தட்டு தீவிரமாக அணிதிரள்வது வளர்ந்து வருவதைப்பற்றிய கவலையால், அவரது இன்றைய மாற்றம் தெளிவாக செயல் தூண்டப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நடந்துவரும் கண்டனப் பேரணிகளால் ஏற்படுகின்ற கொந்தளிப்பான சமூக மற்றும் அரசியல் விளைவுகள் குறித்து அவர் எச்சரிக்கையாக இருந்து வருகிறார்.

இதற்கெல்லாம் மேலாக, இந்தக் கண்டனப் பேரணிகள் அனைத்து நிறுவனமயமாகிய கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அப்பால், அவர்களது விருப்பத்திற்கு விரோதமாக, சுயாதீனமாக உருவாகி வருகின்றன என்பதில் அவர் கவலையடைந்திருக்கிறார். இதற்கு முன்னர் வெகுஜன கண்டனப் பேரணிகளில், குறிப்பாக சென்ற ஆண்டிலும் இந்த ஆண்டிலும் நடைபெற்றவற்றில் நுறாயிரக்கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டனர். ஆனால், அவை தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தவரை அவர் அமைதியாக இருந்தார்.

லாபொன்தன் தனது வார்த்தை ஜாலங்களை முற்றிலும் நனவுபூர்வமாக கையாளுகிறார். ஷ்ரோடருடைய கொள்கையின் சமூக அநீதியை மிக ஆவேசமாகக் கண்டிக்கிற அவர், சமூக நீதியை நிலைநாட்டும் மாற்றுக் கொள்கைகளை முதலாளித்துவச் சமுதாயத்தின் இன்றைய கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வந்துவிட முடியும் என்று கூறுகிறார்.

இது அரசியல் மோசடி என்பதை லாபொன்தன் நன்றாக அறிந்திருக்கிறார். உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்ட பின்னர், சர்வதேச நிதிச் சந்தை தேசிய எல்லைக்குள் செயல்படுகின்ற அரசியல் முடிவுகளுக்கு கட்டளையிடுகின்றன. எனவே, இந்தச் சூழ்நிலைகளில் 1970 அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சமூக சீர்திருத்தவாதக் கொள்கைகளுக்கு திரும்பிச் செல்வது பயனளிக்கும் தேர்வு என்பது நகைப்பிற்குரியது.

லாபொன்தன் கூறுவதைப்போல், சர்வதேச முதலாளித்துவ சந்தைகளின் நெறிமுறை தளர்த்தப்பட்டது, தக்க நேரத்தில் தடுக்கப்படாததால் உருவாகிவிட்ட ''மனப்பாங்கால்'' அல்ல. அது சடரீதியான நலன் உரிமை மீதான அடிப்படையைக் கொண்டிருக்கிறது. அத்துடன், அது 1970 களின் ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கம் வென்றெடுத்த நலன்களுக்கு எதிராக உலக ரீதியாக முதலாளித்துவம் மேற்கொண்ட அரசியல் தாக்குதலின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், அதில் கசப்பான போராட்டங்களும் சம்மந்தப்பட்டுள்ளன---- அமெரிக்காவில் விமான வழித்தட கட்டுப்பாட்டு அதிகாரிகள் PATCO வில் மேற்கொண்ட வேலைநிறுத்தம் மற்றும் பிரிட்டனில் ஒராண்டு முழுவதும் சுரங்கத் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் போன்றவை தோல்வியில் முடிந்தன.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இந்தத் தாக்குதலை எதிர்ப்பதற்கு எந்த நாட்டிலும் சமூக ஜனநாயகக் கட்சி முன்வரவில்லை. மாறாக, அவர்கள் செயலூக்கத்துடன் அல்லது மறைமுகமாக இதற்கு ஆதரவு தந்தார்கள். இதன் விளைவாக சமுதாயக் கட்டமைப்பிற்குள் ஒரு அடிப்படை மாற்றம் உருவாயிற்று. சமுதாயத்தின் மேல் தட்டிலுள்ள ஒரு சிறு தட்டினர் பெருமளவிற்கு செல்வத்தைக் குவித்து மிகப்பெருமளவில் அரசியல் அதிகாரப் பலனை பெற்றனர். இந்தத் தட்டுக்கள் எந்தவிதமான இடையூறுமில்லாமல் செல்வத்தைத் திரட்டிக் கொள்வதற்கு, மிகச்சிறிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் கூட அதற்கு மிகத் தீவிரமான எதிர்ப்பு அவர்களால் தூண்டிவிடப்படுகின்றன.

முதலாளித்துவக் கட்டுக்கோப்பிற்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாத உழைக்கும் மக்களின் அரசியல் தாக்குதல்தான் இந்த எதிர்ப்புக்களை முறியடிக்க முடியும். பெரு வர்த்தகத்தின் இலாப நலன்களுக்கு அப்பாற்பட்டு, பொதுமக்களது தேவைகளை இட்டு நிரப்புவதற்கு பொருளாதார வாழ்வு மறு சீரமைக்கப்பட வேண்டும். லாபொன்தன் அத்தகைய சோசலிச முன்னோக்கை பகிரங்கமாகவும், தீவிரமாகவும் எதிர்க்கிறார்.

லாபொன்தனின் சொந்த வரலாறானது அவரது சீர்திருத்தவாத வெற்றுப் பசப்புரையை மறுக்கிறது. சார் (Saar) மாநிலத்தின் பிரதமராக அவர் இருந்த போது, பல பெரிய எஃகு ஆலைகள் மூடப்பட்டதில் பங்கெடுத்துக் கொண்டார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்களை அழிப்பதற்கு தொழிற்சங்க தலைமையோடு ஒத்துழைத்தார். அதே நேரத்தில், தனது எதிரிகள் மீது கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எந்த ஜேர்மன் மாநிலத்தையும் விட கடுமையான நிலையில் பத்திரிகை சுதந்திரக் கட்டுபாட்டுச் சட்டத்தை அங்கு திணித்தார்.

முதலீடுகளின் நலன்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்று தற்போது லாபொன்தன் அறிவிக்கிறார் என்றால் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அவரே ஏன் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கேள்வியை மறுபடியும் எழுப்பவேண்டும். நிதியமைச்சர் என்ற முறையிலும், நாட்டின் மிகப்பெரிய கட்சித் தலைவர் என்ற வகையிலும் அவர் அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த வாய்ப்புள்ள இடத்தில் இருந்தார். என்றாலும், SPD யின் உறுப்பினர்களையும், மக்களையும் இதற்காக அணிதிரட்ட அவர் தயாராக இருக்கவில்லை. ஏனென்றால், முதலாளிகளின் சங்கங்களோடு கடுமையான மோதல் ஏற்படுமானால் உடனடியாக முதலாளித்துவக் கட்டுக்கோப்பு முழுவதும் கேவிக்குறியாக ஆக்கப்பட்டுவிடும். ஆகவேதான், லாபொன்தன் பதவி விலகினார். அதிகாரம் அனைத்தையும் தனது கட்சித் தலைமையையும் ஷ்ரோடரிடம் ஒப்படைத்தார்.

பழமைவாத அரசியல்வாதிகளே கூட எழும்புவதற்கு முன்னர், லாபொன்தன் இழப்பீடு எதுமில்லாமல் தொழிலாளர்களது வாராந்திர பணிக்காலத்தை குறைக்க வேண்டும் என்றும், பணியாற்றும் நேரத்தை வளைந்து கொடுக்கும் போக்குடன் அதிகரிக்க வேண்டுமென்றும் கோரி தாக்குதல்களையும் மேற்கொண்டார். 1998 ல் வெளியிடப்பட்ட SPD யின் தேர்தல் அறிக்கையில் ---இவரது ஆதரவுடன் எழுதப்பட்டது--- அரசாங்க மானியம் பெறும் குறைந்த ஊதிய தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு உதவித் தொகைகளை பெறுகிறபோது, அவர்களும் வேலையில்லாது இருப்பவர்களும் தாங்கள் பெறுகின்ற உதவித் தொகைகளுக்காக கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று இருக்கிறது. லாபொன்தன் நிதியமைச்சராக இருக்கும்போதுதான், அவரே முதலில் வேலையிழந்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ''உண்மையிலேயே தேவையுள்ளவர்களுக்கு'' மட்டுமே கட்டுப்படுத்தப்படவேண்டும் என்று கூறினார். இந்த நிலைப்பாட்டை அன்றைய SPD யின் பெரும்பான்மை புறக்கணித்தது.

லாபொன்தன் நலன்புரி சேவைமுறை சிதைக்கப்படுவதை தற்போது எதிர்க்கவில்லை. அத்தகைய வெட்டுக்களுக்கு சமூக ஆதரவு இல்லையே என்பதைப் பற்றித்தான் அவர் கவலைப்படுகிறார். பணக்காரர்களும் தங்களது பங்கைக் செலுத்த வேண்டும், அரசாங்கம் பெரு வர்த்தக நிறுவனங்களின் சேவகராக மட்டுமே செயற்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி, மக்கள் அந்த சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் லாபொன்தனின் போதனையாக இருக்கிறது.

Spiegel பேட்டியில் பல புள்ளிகளில் வில்லி பிரான்ட்டின் (Willy Brand) பாரம்பரியத்தில் லாபொன்தன் தன்னை இடம்பெறச் செய்கிறார். 1970 களின் ஆரம்பத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் வில்லி பிரான்ட் அதிபராக இருந்தார். ஆனால், அந்த பாரம்பரியம் என்ன?

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் உருவாக்கிய தீவிர இயக்கம் வெடித்துச் சிதறி 1968 ல் மாணவர் கிளர்ச்சி உருவானபோது, அந்த இயக்கத்தை வில்லி பிரான்ட் SPD யின் அங்கத்திற்குள் கொண்டு வந்து சமாளித்தார். ''அதிக ஜனநாயகம்'' மற்றும் ஒவ்வொருவருக்கும் கல்வி மற்றும் சமூக மேம்பாடு'' என்ற ஆரவார முழக்கங்களோடு வில்லி பிரான்ட் SPD ஐ கண்டனம் செய்த மாணவர்களுக்கு திறந்துவிட்டார். அதே நேரத்தில், பொதுத் துறைகளின் வேலைவாய்ப்புக்களில் ''தீவிரவாதிகளுக்குத்'' தடைவிதித்தார். இறுதியாக பிரான்ட்டிற்கு பதிலாக கெல்முட் ஸ்மித் (Helmut Schmidt) பதவியேற்றார். அவர் பழமைவாத தலைவரான கெல்முட் கோல் (Helmut Kohl) 16 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். வில்லி பிரான்டின் பதவிக் காலத்தில் தரப்பட்ட சமூக மற்றும் ஜனநாயக சலுகைகள் அனைத்தும் ரத்துச்செய்யப்பட்டன.

1970 களின் இறுதியில் லாபொன்தன் வலுவான எதிர்க்கட்சி இயக்கத்தை SPD ல் மீண்டும் பிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஸ்மித் அரசாங்கம் நேட்டோவுடன் செய்துகொண்ட இழிபுகழ் உடன்படிக்கையின் காரணமாக மேற்கு ஜேர்மனியில் அணு ஏவுகணைகள் நிறுவப்பட்டதை லாபொன்தன் பகிரங்கமாக எதிர்த்தார். மேலும், அவர் சமாதான இயக்கத்தின் ஒரு பகுதியை SPD யோடு இணைத்து வைத்து, SPD க்குள் ஒரு பிளவைத் தடுப்பதற்கு அவர் நடவடிக்கைகளை எடுத்தார்.

1990 களின் நடுவில் கெல்முட் கோலின் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி அரசாங்கம் மக்களது செல்வாக்கை இழந்து கொண்டு வந்த நேரத்தில், SPD க்கு தலைமை வகித்த ரூடோல்ப் ஷார்பிங்ற்கு (Rudolf Scharping) எதிராக லாபொன்தன் திடீரென்று பதவி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். அவர், கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கோலுடன் மிகத் தீவிரமான மோதல் போக்கை மேற்கொண்டார். இறுதியாக 1998 ல் SPD தேர்தலில் வெற்றிபெற்றது. தற்போது மக்களது வெறுப்பிற்கு மிகப்பெருமளவில் இலக்காகியுள்ள SPD மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் லாபொன்தன் முயற்சியால்தான் உருவாயிற்று.

SPD யிலிருந்து விலகிக்கொண்ட சமூக வெட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை சமூக ஜனநாயகக் கட்சியின் கீழ் கொண்டுவர வேண்டுமென்பதுதான் தற்போது லாபொன்தனின் நோக்கமாக உள்ளது. அதிபர் ஷ்ரோடர் அவரது பொருளாதார மற்றும் தொழிலாளர் அமைச்சரான வொல்ப்காங் கிளமோன்ட் (Wolfgang Clement) ஆகியோர் பெருவர்த்தக நிறுவனங்களின் குறுகிய நலன்களை உடனடியாக நிறைவேற்றி வருகின்றனர். ஆகவே, லாபொன்தன் மிக தொலைநோக்கு முன்னோக்கோடு முதலாளித்துவ ஆட்சி முழுவதையும் ஸ்திரப்படுத்த செயல்பட்டு வருகிறார்.

ஆகவே, கிழக்கு ஜேர்மன் தெருக்களில் இறங்கிக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்கள் மீண்டும் காட்டிக்கொடுக்கப்பட அனுமதிக்கக் கூடாது. 1989 இலையுதிர் காலத்தில் கிழக்கு ஜேர்மனி ஸ்ராலினிச அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற வெகுஜன கண்டனப் பேரணிகளை பல ஆர்ப்பாட்டக்காரர்கள் மிக விரிவாக நினைவுபடுத்துகின்றனர். அத்தோடு, பேரணியில் கலந்துகொண்டவர்கள் தமக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வேண்டுமென்று நம்புகின்றனர். இருந்தபோதிலும், சோசலிசத்திற்கான திசையில் விரிவான அரசியல் முன்னோக்கு இல்லாததால் முதலாளித்துவ ஆதரவு சக்திகள் இந்த இயக்கங்களுக்கு தலைமை ஏற்று பிற்போக்குத்தனமான முட்டுச்சந்தில் அதனைக் கொண்டுபோய் நிறுத்தி விடுகிறார்கள்.

இது மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது. சமூக பயன்களையும், மற்றும் இந்த அரசாங்கத்தால் தொடுக்கப்படும் அனைத்து விதமான தாக்குதலுக்கு எதிராகவும், முதலாளித்துவ முறைக்கு எதிராகவும், ஒரு சோசலிச முன்னோக்கோடு அரசியல் போராட்டம் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவேதான், ஷ்ரோடர் மற்றும் மொன்ட்பெரிங் தலைமையிலான SPD யை மட்டுமல்லாது ஒஸ்கார் லாபொன்தனின் சமூக ஜனநாயக வாய்வீச்சுக்களையும் தீர்க்கமாக நிராகரிக்க வேண்டும்.

Top of page