World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Chinese police crackdown on village protest over illicit land seizure

சட்ட விரோத நிலக் கைப்பற்றலை கண்டித்த கிராம மக்கள் மீது சீன போலீசார் நடவடிக்கை

By John Chan
9 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஹெனான் மாகாண தலைநகரான Zhengzhou பகுதியைச்சேர்ந்த Shijiahe கிராமத்தில் ஜூலை 31 அதிகாலையில் சுமார் 600 சீன போலீசார் கண்ணீர் புகைகள், துப்பாக்கிகள், நாய்கள் மின்சாரத்தடிகளுடன் பெரும் நடவடிக்கையில் இறங்கினர். இந்த நடவடிக்கையில் குறைந்த பட்சம் 30 கிராம மக்கள் காயமடைந்ததுடன், மிகப்பெரும்பாலோர் ரப்பர் குண்டுகளால் காயமடைந்தனர். நான்கு பேர் காவலில் வைக்கப்பட்டனர்.

Zhengzhou நகர அதிகாரிகள் இந்த சம்பவம் பற்றி கருத்துக்கூற மறுத்துவிட்டதுடன், சீனாவில் ஊடகங்கள் எதுவும் இதுபற்றிய தகவல் தரவில்லை. ''நாங்கள் எந்த கருத்துகளும் கூற முடியாது, அவை இரகசியம் என்பதற்காக அல்ல, [ஆனால் ஏனென்றால்] உண்மைகளை தெளிவுபடுத்துவதற்கு எங்களுக்கு அவகாசம் தேவை'' என்று ஒரு அரசாங்க பேச்சாளர் கூறினார்.

இணைய தளத்தில் ஒரு கிராமவாசி விடுத்துள்ள செய்தியில் போலீசார் ஆரம்பத்தில் ''தகராறுகளை உருவாக்கிய'' ஒருவரை தேடிவந்ததிருக்கிறார்கள்---- அந்த கிராமத்தலைவர் Liu Guozhao சட்ட விரோதமாக நிலத்தை விற்பனை செய்ததை கண்டித்து உள்ளூரில் கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தவராவார். சென்றவார நடவடிக்கைக்கு முன்னர், கண்டன தலைவர்களை கைது செய்து கொண்டு செல்வதைத்தடுக்க, நிராயுதபாணிகளான கிராம மக்கள் போலீசாரை எதிர்த்து நின்றனர்.

நிலவிற்பனைகளை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இது சுமார் 150 ஹெக்டேர் விவசாய நிலம், இது 6000 இற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமானதும், அந்த நிலத்தின் மதிப்பு 40 மில்லியன் யான்கள் (சுமார் 4.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஆகும். வலைத் தளத்தில் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களை அம்பலப்படுத்துவற்காகவும், விவசாயிகள் அவலநிலை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காகவும் போலீசார் பிடியில் இருந்து தான் தப்பி இருப்பதாக அந்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கிராமவாசி குறிப்பிட்டார்.

South China Morning Post பத்திரிகை தந்துள்ள தகவலின்படி, ஜூன் மாதம் முதல் அந்த கிராம வாசிகள் கண்டனம் செய்து வருகின்றனர். கிராமத்தலைவரின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மற்றும் நகர அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினர், ஆனால் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. ஜூலை 31ல் மற்றொரு கண்டன பேரணியை நடத்தப்போவதாக அச்சுறுத்தியபோது பாதுகாப்பு படைகள் அனுப்பப்பட்டன.

வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளபடி போலீஸ் அதிகாரிகள் அதிகாலை 2 மணிக்கு, 50 இற்கும் மேற்பட்ட கவசவாகனங்கள் புடைசூழ அந்த கிராமத்தில் புகுந்தனர். கதவை எட்டி உதைத்து ஜன்னல்களை உடைத்தெறிந்து உள்ளூர் வைத்தியரையும், அவரது புதல்வரையும் கைது செய்தனர். ''பக்கத்து வீட்டுக்காரர்கள் கூக்குரல் கேட்டு எழுந்ததாக கூறினார், அவர்கள் என்ன நடக்கிறது என்று விசாரிக்க வெளியில் வந்ததும், போலீசார் அவர்களை குண்டாந்தடியால் அடித்து வீட்டுக்குள் செல்லுமாறு கூச்சலிட்டனர். ஆனால் கிராம மக்கள் தங்களது பிரதிநிதிகளை பிடித்துசெல்ல முயலுகின்றனர் என்பதை உணர்ந்துகொண்டு தெருக்களில் கூட்டமாய் ஒன்று சேர்ந்தனர்...

''ஒரு தெருச் சந்திப்பில் 200 இற்கு மேற்பட்ட கிராம் மக்கள் வந்து மூன்று கவச வாகனங்களையும், சுமார் 100 போலீஸ் அதிகாரிகளையும் சுற்றி வளைத்துக்கொண்டு நின்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர், அப்போதும் கூட்டம் கலையாததைக் கண்டு அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தனர். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் திருப்பிச் செல்லத் தொடங்கியதும், போலீசார் திரும்பிக் கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி சுட்டதாக நேரில் கண்டவர் தெரிவித்தார்.''

கிராமத்தை சேர்ந்த Liu இன் தாய் சுடப்பட்ட பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார், Liu South China Morning Post பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போது ''மாவட்ட அரசாங்கம் 400 அதிகாரிகளை அந்த கிராமத்திற்கு அனுப்பி சமாதானப்படுத்தவும் மேலும் மனுக்கள் வராது தடுக்கவும் முயன்றனர். ''அது வெறும் நாடகம் தான். மற்ற சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் கிராம மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்குக்கூட அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் மருத்துவ உதவிக்காக எனது தாயாரிடம் 1000 யான்களை தர முயன்றனர், மேலும் மனுக்களை அனுப்பாமல் எங்களை தடுப்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார்கள் என்ற உண்மையான நோக்கத்தை அறிந்து கொண்ட நாங்கள் அதை புறக்கணித்தோம்.'' என்றார்.

விடுமுறையில் கிராமத்திற்கு திரும்பியிருந்த ஒரு கல்லூரி மாணவரான Li Jie, Voice of America விற்கு கூறியதில் Zhengzhou நகர துணைமேயர் அவரது குடும்ப வீட்டிற்கு வந்திருப்பதாக தெரிவித்தார். மனுக்கொடுப்பதில் கலந்துகொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொண்டதாகவும், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியதாக தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு அவர்களது வாழ்விற்கு தேவைப்படும் நிலத்தை ஊழல்மிக்க அதிகாரிகள் தொழிற்துறை வளர்ச்சிக்காகவும், நகர்புற மேம்பாட்டிற்காகவும் நிரந்தரமாக புடுங்கிக்கொண்டிருப்பதாக லீ தெரிவித்தார். இந்த கண்டனப் பேரணிகள் மற்றும் மனுக்களை உள்ளூர் அதிகாரிகள் மூடிமறைத்து விடுவதாக சில வழக்குகளில் பாதுகாப்புப்படைகள் அடக்குவதாகவும் அவர் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற சம்பவம் கிராமப்பகுதிகளின் பிரச்சனை குறித்து சீன தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Shijiahe போலீஸ் நடவடிக்கை தகவல் தரப்பட்ட சில நடவடிக்கைகளில் ஒன்றாகும். Radio Free Asia தந்துள்ள தகவலின்படி, தெற்கு குவாங்டங் மாகாணத்திலுள்ள Dongguan பிரதேச Humen சிறுநகரத்திற்கு ஜூன் 30-லும் போலீஸார் அனுப்பப்பட்டனர். தங்களது விவசாய நிலம் மாற்றப்படுவதை கண்டித்து அரசாங்க அலுவலகங்களுக்கு வெளியில் கண்டனப் பேரணிகளை நடத்திக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை கலவரத்தடுப்பு போலீசார் துப்பாக்கிகள் மற்றும் ஒன்பது கவச வாகனங்கள் கொண்டு சிதறடித்தனர்.

இந்த கண்டனங்கள் பரந்த நிகழ்ச்சிபோக்கை சுட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறன. சீனாவில் படுவேகமாக நடைபெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள், நிலவாணிப ஊக பேரம் பூரிப்பு ஆகியவற்றால் மாகாண தலைமையிட அதிகாரிகளில் இருந்து கிராமக் குழு உறுப்பினர்கள் வரை முறைகேடாக பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளன. வர்த்தகர்களோடு கூட்டுசேர்ந்து, இந்த அதிகாரிகள் பல்வேறு வகைப்பட்ட முரட்டுத்தன நடவடிக்கைகளை பயன்படுத்தி சிறிய உழவர்களை தங்களது நிலத்திலிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற பெரிய நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகின்றன.

நாட்டின் பொருளாதார நடவடிக்கை வேகத்தை ஓரளவிற்கு மட்டுப்படுத்துவதற்காக ''மைக்ரோ பொருளாதார கட்டுப்பாட்டு'' நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக ஏப்ரல் மாதம் சட்டவிரோதமாக நிலத்தை கைப்பற்றிக்கொள்வதை கட்டுப்படுத்தும் பல்வேறு நெறிமுறைகளை சீனப்பிரதமர் Wen Jiabao அறிவித்தார். அந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் மேற்பூச்சு நடவடிக்கைகள் தான் என்பதை அண்மைக்கால நடவடிக்கைகள் எடுத்தக்காட்டுகின்றன.

பெய்ஜிங் தொழில் நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் Hu Xingdu, Los Angeles Time இற்கு ''விவசாயிகளுக்கு உண்மையான நில சொத்துடமை இல்லை, எனவே அவர்கள் சரிசமமாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது. நிலம் முழுவதும் அரசாங்கத்திற்குத்தான் சொந்தம். பொது நலன் கருதி எந்த நிலத்தையும் அரசாங்கம் கையகப்படுத்திக்கொள்ள முடியும். இதில் விவசாயிகள் விட்டுக்கொடுப்பதைத் தவிர வேறுவழியில்லை.'' என கூறினார்.

1970களின் கடைசியில் பெய்ஜிங் மேற்கொண்ட சந்தைகள் சீர்திருத்த சார்பு நடவடிக்கைகளில் ஒன்றாக ''மக்கள் கம்யூன்கள்'' சிதைக்கப்பட்டபோது---- வீழ்ச்சியடைந்துவிட்ட வேளாண்மை உற்பத்தியை ஊக்கவிக்கின்ற ஒரு வழியாக 30ஆண்டு கால குத்தகைக்கு நிலம் விவசாயிகளுக்கு தரப்பட்டது. ஆனால், அதிகாரத்துவ முறைகேடான நிர்வாகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என சீனத்தலைமை கூறிய இக்கொள்கை பெரும்பாலான விவசாயிகளுக்கு ஒரு முட்டுச்சந்தி என்பதை நிரூபித்தது.

ஊழல் மிக்க அதிகாரிகளும், கிராம வர்த்தகர்களும் பணக்காரர்கள் ஆனார்கள், மிகப்பெரும்பாலான கிராம மக்கள் வறுமையில் தள்ளப்பட்டனர். மில்லியன் கணக்கான கிராம மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து, அங்க மலிவு தொழிலாளியாக, மோசமான வேலைநிலைமை கொண்ட கடைகளிலும், கட்டுமானத்தளங்களிலும் அல்லது விலை மாதர்களாகக் கூட மாறிவிட்டனர். அவர்கள் வாழ்கின்ற மிகக்கொடூரமான நிலை 19வது நூற்றாண்டின் இங்கிலாந்து தொழிலாள வர்க்கத்தோடு அல்லது 1920 களிலும், 1930 களிலும் Shanghai நாட்கூலி தொழிலாளர்களின் ஒடுக்கப்பட்ட நிலையோடு ஒப்பிடப்படுகிறது.

ஹேனன் மாகாணத்தில், Shijiahe கிராமம் அமைந்துள்ளது, சீனாவின் வறுமைமிக்க பிராந்தியங்களில் அது ஒன்று. 1990களில் பருத்தி போன்ற பொருட்களின் சந்தை விலை அரசு கொள்முதல் விலையைவிட உயர்ந்திருந்தபோது, உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், விவசாயிகள் தங்களது உற்பத்திப்பொருட்களை குறைந்த விலைக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தினர். இந்த நிலை தலைகீழாக மாறும்பொழுது, அரசு கொள்முதல் விலையை குறைத்ததுடன், அவர்களது பண்டங்களை வாங்கவும் மறுத்துவிட்டனர்.

உள்ளூர் அரசாங்கங்கள் இதுபோன்ற சுரண்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அதேபோல் மத்திய அரசாங்கம் நிதி வழங்காதபோது மக்களிடம் ஏராளமான வரியையும் கட்டணங்களையும் அவர்கள் வசூலித்தார்கள். கல்விக்கு நிதியளிப்பதற்கு மத்திய அரசாங்கம் மறுத்து விடுவதால் 30 முதல் 60 சதவீதம் வரை கல்விச்செலவை உள்ளூர் நிர்வாகங்கள் ஈடுகட்ட வேண்டியிருக்கிறது.

ஹேனன் மாகாணத்தில் மற்றொரு மதிப்பிழந்த பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பெரும் கடன் சுமையாலும் வறுமை வாட்டியதாலும் 1990களின் தொடக்கத்தில் அரசாங்கம் வகுத்தளித்த உள்ளூர் திரட்டல் அமைப்பின் ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பல சிறிய விவசாயிகள் தங்களது இரத்ததை விற்றனர். ஆனால் பாதுகாப்பற்ற நடைமுறை, பின்பற்றப்படாததால் பணத்தை பாதுகாக்க திட்டமிட்டு இலாபத்தை பெருக்கும் விளைபயனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் எயிட்ஸ் (HIV), கல்லீரல் அழிற்சி (Hepatitis B) மற்றும் இதர இரத்தத்தால் பரவுகின்ற நோய்களுக்கு இலக்காகினர்.

சீனத்தலைமை கிராமப்புற குழப்பநிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தாலும் கிராமப்புற பிரச்சனைகளின் அவசர தீர்வு குறித்து சம்பிரதாயச்சடங்காக வலியுறுத்திக் கொண்டிருந்தாலும், தானே கட்டவிழ்த்து விட்ட சந்தை சக்திகள் மீது எந்தவிதமான கட்டுப்பாட்டையும் கொண்டுவர முடியாத நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஜூலை 16இல் ஆசியா டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் கடற்கரைக் பகுதியைச்சார்ந்த Jiangsu மாகாண Taizhou நகரில் ''பிரதமர் Wen இன் (நிலவிற்பனை தொடர்பான) கட்டளைகள் மீறப்படுகின்றன, அலட்சியப்படுத்தப்படுகின்றன'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

நிலவள அமைச்சகம் தந்துள்ள தகவலின்படி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நகர்புற மற்றும் தொழிற்துறை மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களால் சீனா 6.7 மில்லியன் ஹெக்டேர் அல்லது 66,670 சதுர கிலோமீட்டர் விவசாய நிலப்பரப்பை இழந்துவிட்டது. ஏற்கனவே 800 மில்லியன் விவசாயிகள் வாழ்விற்கே போராடிக்கொண்டிருக்கிற நாட்டில் இந்த இழப்பு பெரிய சமூக அழுத்தத்தை உருவாக்கிவிடும். வியட்நாமில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து உணவு தானியங்களை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவது குறித்து கூட அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 5ல் ஆஸ்திரேலியன் பைனான்ஸ் ரிவியூ வெளியிட்டுள்ள தகவலின்படி, உணவு தானியங்கள் உற்பத்திக்குறைவினால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக சீனாவில் உணவு தானியங்களின் விலை உச்சாணிக்கொம்பிற்கு சென்றுவிட்டது. இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் கோதுமை விலை 38%, அரிசிவிலை 41%, பருத்தி 23%, எண்ணெய் வித்துக்கள் 22% விலை உயர்ந்துவிட்டது. நகரங்களில் குறைந்து ஊதியத்தில் தொழிலாளர்கள் போராடிக்கொண்டிருப்பதில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் சமூக பதட்டங்கள் கொழுந்துவிட்டு எரிய செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் Zhu Rongji 1990 களில் ''கிராம பிரச்சனைகளை தீர்த்து வைப்பது பற்றி'' முழக்கமிட்டதைப் போல், Wen கிராமப்புற வரி வெட்டு, விவசாய மானியம் குறித்தும், தானியங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதாகவும் கிராம மக்கள் கொழுந்துவிட்டு எரியும் அதிருப்தியை குறைப்பதாகவும் தேசிய மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மார்ச் மாதம் அறிவிப்புகளை அமுல்படுத்தினார். ஆனால் பெய்ஜிங்கின் உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) கடமைப்பாட்டின்படி, பொருளாதார மறுசீரமைப்பு விரைவுபடுத்தப்பட்டு அரசகட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது இந்தக் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் போதுமானவை மட்டுமல்லாது, பகிரங்கமாக நிலம் சூறையாடப்படுவது உள்ளடங்கலாக சிறு விவசாயிகள் எல்லாத் தரப்பிலிருந்தும் மேலும் கசக்கிப்பிழியப்படுவர்.

Top of page