World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

Suharto's political machine backs Megawati in Indonesian poll

இந்தோனேசியத் தேர்தல் வாக்களிப்பில் மேகவதியை ஆதரிக்கும் சுகார்ட்டோவின் அரசியல் இயந்திரம்

By John Roberts
26 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

இந்தோனேஷிய ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவிருக்கிறது. பதவியிலிருக்கும் ஜனாதிபதி மேகவதி சுகர்னோ புத்திரி சென்றவாரம் கோல்கார் ஐக்கிய முன்னேற்றக் கட்சி (PPP) மற்றும் பல சிறிய கட்சிகளுடன் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி மேகவதி, தனது போட்டியாளரான சுசிலோ பாம்பாங் யூடோயோனோவிற்கு எதிரான போட்டியில், குறைந்தபட்சம் இந்த காகித உடன்படிக்கை மூலம் வெற்றிகரமாய் முடிக்கமுடியுமா என்பது செப்டம்பர் 20 வாக்குப்பதிவில் உறுதியாகிவிடும். முதல் சுற்று வாக்குப்பதிவில், மேகவதிக்கு 26.6 சதவீத வாக்குகளுக்கு எதிராக யூடோயோனோ 36.6 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால், அவர் கோல்கார் வேட்பாளர் விரன்டோவிற்கு கிடைத்த 22.2 சதவீத வாக்குகள் மற்றும் PPP கட்சியைச் சேர்ந்த ஹம்லா காஷ்ற்கு கிடைத்த 3.0 சதவீத வாக்குகள் ஆகியவற்றை கூட்டிப்பார்த்தால் மேகவதி வெற்றி பெறுவதற்கு தேவைப்படும் 50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றுவிடுவார்.

மேகவதியைப் பொறுத்தவரை என்ன பிரச்சனை என்றால் இந்தக் கணிப்புக்கள் அதிகமான முக்கியத்துவம் இல்லாதவை என்பதாகும். எல்லா கட்சிகளுமே உறுதியான மக்களது ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. யூடோயோனோ ஒரு முன்னணி வேட்பாளராக வந்திருப்பதே வாக்காளர்களிடையே நிறுவனமயமான கட்சிகளுக்கு எதிராக நிலவுகின்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியான அவர், மார்ச் மாதம்வரை மேகவதியின் மூத்த பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய பிறகு ராஜினாமா செய்துவிட்டு, தனது சொந்த ஜனநாயக கட்சியை உருவாக்கி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் தமது எண்ணத்தையும் அறிவித்தார்.

உண்மையிலேயே, பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுகார்ட்டோ சர்வாதிகாரத்தின் அரசியல் சாதனமான கோல்கார் கட்சியுடன் மேகவதி செய்து கொண்டுள்ள பேரம் அவருக்கு கிடைக்கின்ற வாக்குகளை மிக எளிதாக பாதித்துவிடும். அவர், ஆயுதப் படைகளோடு (TNI) மிக நெருக்கமாக ஒத்துழைத்து பணியாற்றி வருவது அவர் ஒரு ''சீர்திருத்தவாதி'' என்ற அவரது செல்வாக்கை முழுமையாக சிதைத்துவிட்டது. முதலில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் ரஹ்மான் வாஹித் மீது 2001 ல் நடைபெற்ற நீண்ட பதவிநீக்க விசாரணைகளின் போதும், அதற்கு பின்னர் பாப்புவா மற்றும் அக்கே பகுதியில் நடைபெற்ற இராணுவ அடக்குமுறைக்கு அவர் தந்த ஆதரவினாலும், அவரது செல்வாக்கு முழுமையாக சரிந்துவிட்டது.

மேகவதியின் பொருளாதாரக் கொள்கைகளும் கூட அவரை பொதுமக்களிடம் செல்வாக்கற்றவராக உருவாக்கிவிட்டது. உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையான மறு சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர் முயற்சித்தார். அதன் மூலம் நாணயம் ஸ்திரப்படுத்தப்பட்டதாலும், அரசு வரவு செலவு திட்டக் குறைப்பாலும் அவற்றிடம் இருந்து குறைந்தபட்ச பாராட்டுதலை அவர் பெற்றார். எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் கணிசமான பொருளாதார வளர்ச்சிக்கு வழி செய்யவில்லை. மாறாக, அது சமுதாயத்தின் மிகவும் ஏழ்மையான பிரிவை கடினமாக பாதித்தது.

கோல்கார் கட்சியின் ஆதரவை சார்ந்திருப்பதன் மூலம், மேகவதி வாக்காளர்களிடமிருந்து மேலும் அந்நியமாகி வருகிறார். வாக்களர்கள் நிறுவனமயமான அரசியல் கட்சிகளிடமிருந்து ஒரு மாற்றீட்டை தேடிக்கொண்டிருக்கின்றனர். கோல்கார் ஆதரவை பெறுவதற்காக அக்கட்சிக்கு எட்டு கேபினட் அமைச்சர்கள் பொறுப்பை மேகவதி உறுதிசெய்து தந்திருக்கிறார். அக்கட்சிக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சென்ற வியாழக்கிழமை ஆடம்பரமாக நடத்தப்பட்ட விழா ஒன்றில் கோல்கார், PPP மற்றும் கிறிஸ்துவ அடிப்படையைக் கொண்ட சமாதானக் கட்சி ஆகியவற்றோடு மேகவதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

நிலவரத்தை தனக்கு சாதகமாக திருப்பிக்கொள்ள முயன்ற யூடோயோனோ, ஆளும் செல்வந்த தட்டுகளை ஏற்றுக்கொள்வதைவிட மக்களது ஆதரவுதான் மிக முக்கியமானது என்று அறிவித்தார். அரசியல் ஆதரவிற்காக காபினெட் அமைச்சர் பதவியையும், பணத்தையும் தருவதற்கு இயலாது என்று குறிப்பிட்டார். ''இது நேரடித் தேர்தல். நான் எனது சொந்தவழியில் பணியாற்றுவேன். மக்களது ஆதரவை பெறுவதற்காக அவர்கள் சொல்வதை கேட்பது முக்கியமாகும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

மேகவதியோடு ஒப்புநோக்கும்போது, SYB என்றழைக்கப்படும் யூடோயோனோ, தன்னை ஒரு ''சுயேட்சை'' என்றும், மக்கள் தலைவர் என்றும் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முயன்று வருகிறார். என்றாலும் அவரும் ஆளும் ஸ்தாபனங்களில் ஓர் அங்கம்தான். அவருக்கு இந்தோனேஷியாவிலும், சர்வதேச அளவிலும் பெருநிறுவன ஆளும் செல்வந்த தட்டுகளில் ஒரு பிரிவு கணிசமான ஆதரவு தந்துவருகிறது. அவர்கள், நாட்டின் பொருளாதார சரிவை தலைகீழாய் மாற்றவும், சந்தை சீர்திருத்தங்களை முன்னெடுத்துச்செல்ல அழுத்தம் கொடுக்கவும் தவறிவிட்டார் என்று மேகவதி மீது விரக்தியடைந்துள்ளனர்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவைப்படும் அளவிற்கு மேகவதி பணியாற்றவில்லை என்றும், நிர்வாகத்தில் மண்டிக்கிடக்கும் ஊழலை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்றும், பலவீனமான சட்ட அமைப்பு மற்றும் நெறிமுறை கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் முதலீட்டாளர்களும் பொருளாதார விமர்சகர்களும் புகார் கூறியுள்ளனர். இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் முதலீடுகள் தொடர்பான ஒப்புதல்கள் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் (GDP) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீடுகளின் அளவை கணக்கிடும் போது, 1970 களின் துவக்கத்திற்கு பின்னர் இப்போது மிகக்குறைந்த அளவிற்கே முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

வர்த்தக வ்டடாரங்களில் நிலவுகின்ற உணர்வுகளை எதிரொலிக்கின்ற வகையில் Australian Financial Review ஆகஸ்ட் வெளியிட்ட விமர்சனத்தில் ''2001 ல், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் சில வெற்றிகளை பெற்றிருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடுகளையும், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான தெளிவான கண்ணோட்டமோ அல்லது புதிய கருத்துக்களோ இல்லை என்று பல வர்த்தகர்கள் நம்புகின்றனர்'' என்று எழுதியுள்ளது. யூடோயோனோவின் வெற்றி வர்த்தகர்களது நம்பிக்கையை மேம்படுத்தும் என்று அவர்கள் நம்பினாலும், அவர் தனது கொள்கைகளில் தெளிவான விளக்கங்கள் கூறவில்லை. குறிப்பாக, எந்த பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கம் கூறவில்லை.

ஜகார்த்தாவிலுள்ள சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் பீட்டர் பென்னிங் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும்போது, ''SBY னுடைய அரசாங்கம் ஏற்படுமானால் அது உடனடியாக ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை உருவாக்கும்'' என்று குறிப்பிட்டார். இந்தோனேஷிய தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் சோப்ஜன் வனன்டி, அமெரிக்க மற்றும் ஜப்பானியர்கள் உட்பட பல வர்த்தகர்கள் யூடோயோனோவை தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர் என்று குறிப்பிட்டார். ''SBY யுடன் நாம் பேசலாம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நம்மை சந்திக்க அவர் ஏற்கெனவே உறுதியளித்திருக்கிறார். நடப்பு அரசாங்கம் தற்போது நாம் சொல்வதைக் கேட்பதில்லை'' என்று அவர் மேலும் கூறினார்.

ஆளும் வட்டாரங்களின் கவலைகளைப் பொறுத்தவரை, யூடோயோனோ இரண்டு முக்கியமான தன்மைகளை கொண்டவராக உள்ளார். அவர், சுகார்ட்டோவின் கீழ் ஒரு இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய காலத்தில் பொதுமக்களது எதிர்ப்பை நசுக்குவதில் தனது கொடூரத் தன்மையை நிலைநாட்டியுள்ளார். 1996 ல் ஜகார்த்தாவில் தலைமை அலுவலராக பணியாற்றியபொழுது மேகவதி கட்சியின் தலைமை அலுவலகத்தின்மீது தாக்குதல் தொடுத்தும், 1999 ல் கிழக்கு தீமோரில் இராணுவ ஆதரவு வன்முறை நடந்தபோது அவர் ஆயுதப் படைகளின் பிராந்திய தளபதியாக பணியாற்றியும் வந்தார்.

இரண்டாவதாக, அவர் இராணுவ இயந்திரங்களோடு நெருக்கமாகத் தொடர்பு வைத்திருந்தாலும், ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் விரான்டோவைப்போல் அல்லாமல், சுகார்ட்டோ குடும்பத்திலிருந்தும் வர்த்தக குழுவின் தொடர்பிலிருந்தும் தனித்தே நிற்கிறார். பெருவர்த்தக பிரிவினரின் கண்ணோட்டத்தில் அவர் சுகார்ட்டோவிற்குப் பின் வளர்ந்த பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும், ஏகபோகங்களையும் ஒழித்துக்கட்டுவார் என்ற சிறந்த நம்பிக்கை ஊட்டுபவராக விளங்குகிறார்.

இரண்டாவது சுற்று வாக்குப்பதிவிற்கு முன்னர் ஒரு வாரம் தான் தேர்தல் பிரச்சாரம் நடக்க வேண்டுமென்று கட்டுப்படுத்தப்பட்டிருகிறது. என்றாலும், இரண்டு வேட்பாளர்களும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். சென்ற மாதத் துவக்கத்தில் சர்வதேச தேர்தல் முறைகள் பற்றிய அமைப்பு ஒன்று நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் சில குறிகாட்டிகள் தென்பட்டன. அதில், யூடோயோனோ, மேகவதியைவிட 66 சதவீதம் கூடுதலாக வாக்குகளைப் பெறுவாரென்றும், ஏற்கனவே மேகவதி 24 சதவீத வாக்குகளைத்தான் பெற்றாறென்றும் அறிவிக்கப்பட்டது

கோல்கார் கட்சியின் ஆதரவானது மேகவதிக்கு ஓரளவு உதவும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. மூன்று தசாப்தங்கள் சுகார்ட்டோ சர்வாதிகாரத்தில் இந்தக்கட்சி, இந்தோனேஷியாவின் 32 மாகாணங்களில் உள்ள கிராமங்களில் தனது கிளைகளை அமைத்திருக்கிறது. இருப்பினும், இக்கட்சியின் ஆதரவாளர்கள் மேகவதிக்குத்தான் வாக்களிப்பர் என்று உறுதிசெய்து தரமுடியாது. ஏனெனில் மேகவதியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக கட்சிக்குள்ளேயே பிளவு நிலவுகிறது.

கோல்கார் கட்சியின் தலைவர் அக்பர் தாங்யோங் மேகவதியை ஆதரிக்குமாறு கட்சியை நிர்பந்தித்தார். ஆனால், இதர தட்டுகள் யூடோயோனோ பக்கம் சாய்ந்துள்ளன. யூடோயோனோவுடன் சேர்ந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் யூசேவ் காலா என்பவர் கோல்கார் கட்சி உறுப்பினர் ஆவர். அவர் ஜூலை 31 ல் 32 மாகாணங்களில், 23 மாகாணங்களைச் சேர்ந்த கோல்கார் தலைவர்களை சந்தித்து அவர்களது ஆதரவைக் கோரியுள்ளார். விரான்டோவும், தான் யூடோயோனோவை ஆதரிக்கப்போவதாக கோடிட்டுக் காட்டியுள்ளார். ஆகஸ்ட் 10 ல் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கோல்கார் தலைமைக்கு வருவதற்கு விரான்டோவும் முயலக் கூடுமென்ற வதந்தியை அவர் மறுக்கவில்லை.

மேகவதியை ஆதரிப்பது என்று கோல்கார் கட்சியின் தலைமை முடிவு செய்திருப்பது பற்றி தகவலை வெளியிட்ட Jakarta Post பத்திரிகையானது, அந்த முடிவு கட்சி ஆதரவாளர்களிடையே எந்த மாற்றத்தையும் செய்துவிடப் போவதில்லை என்று எழுதியுள்ளது. ஏனெனில் ''86 சதவீத கோல்கார் ஆதரவாளர்கள் யூடோயோனோவை ஆதரிக்கப்போவதாகவும், 9 சதவீதத்தினர் மட்டுமே மேகவதியை ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளனர்'' என்று எழுதியிருக்கிறது. சுரபாயாவில் சென்றவாரம் நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தலைவர் அக்பர் தாங்யோங், கிழக்கு ஜாவாவிலுள்ள கட்சி அலுவலர்கள் மேகவதியை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை ஏற்றுக்கொண்டாக வேண்டுமென்று நிர்பந்தித்தார்.

செப்டம்பர் 20 ல் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அடுத்து வருகின்ற நிர்வாகம் ஆளும் செல்வந்த தட்டினர் கோருகின்ற பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றத்தான் செய்யும். உழைக்கும் மக்களுக்கு அது மேலும் சுமையாகிவிடும். மேகவதி அல்லது யூடோயோனோ, இவர்களில் யார் பொறுப்பேற்றாலும், எந்தவித எதிர்ப்பையும் அடக்குவதற்கு அவர்கள் ஆயுதப் படைகளை பயன்படுத்துவர். சுகார்ட்டோ வீழ்ச்சியடைந்து ஆறு ஆண்டுகளில் இராணுவம் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்குப் பிரதான அரசியல் பொறுப்பை மேகவதியும், இதர ''சீர்திருத்தக்காரர்களும்தான்'' பொறுப்பு ஏற்க வேண்டும். எனெனில், உண்மையான ஜனநாயக உரிமைக்கான வெகுஜன இயக்கத்தை அவர்கள்தான் மூச்சு திணறடித்தனர்.

Top of page