World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

First-hand report from Sri Lanka

On a medical team to an LTTE-controlled area

இலங்கையிலிருந்து ஒரு நேரடி அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஒரு மருத்துவக் குழுவுடன்

By a correspondent
13 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு நகரமான பளைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மருத்துவக் குழு ஒன்றில் பங்கேற்ற ஒரு தாதியின் அனுபவங்களை இங்கு அறிக்கையாகப் பிரசுரிக்கின்றோம். பளை நகரமானது 2000 மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவருகின்றது. இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுனாமியின் தாக்கத்தை விபரிக்கும் கிடைக்கப்பெற்ற ஒரு சில அறிக்கைகளில் ஒன்றாகும். இங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பேரலைகளுக்கு பலியானதுடன் வீடுகளும் அடிப்படை சேவைகளும் அழிவுக்குள்ளாகியுள்ளன.

நாம் ஜனவரி 3 அன்று விடியற்காலை 1 மணிக்கு இலங்கையில் யுத்தத்தால் சீரழிவுக்குள்ளான பளை வைத்தியசாலைக்கு புறப்பட்டோம். எங்களது குழு தேசிய வைத்திய சாலையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் அனுப்பிவைக்கப்பட்ட மூன்றாவது குழுவாகும். எங்களது குழுவில், இலங்கை பொது சுகாதார சேவையிலிருந்து பத்து தாதிகள், நான்கு வைத்தியர்கள் மற்றும் இரு சாதாரண தொழிலாளர்களும், ஒரு அமெரிக்க ஆண் தாதியும், பிரித்தானியாவிலிருந்து வந்த ஒரு தாதியும் வைத்தியருமாக மூன்று வெளிநாட்டு தொண்டர்களும் பங்கேற்றனர்.

பேரழிவு இடம்பெற்றது முதல், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சர் பொருத்தமான ஒத்துழைப்புகள் இன்றியே மருத்துவக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டதுடன், இதற்கான முயற்சிகள் வைத்தியர்களாலும் தாதிகளாலுமே மேற்கொள்ளப்பட்டுவந்தன. நாங்கள் புறப்படுவதற்கு முதல் நாள், எங்களது குழுத் தலைவரும் ஏனையவர்களும் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளையும் அதே போல் எங்களது பயணத்திற்கான உணவு மற்றும் தண்ணீரையும் சேகரிப்பதற்காக செல்லவேண்டியிருந்தது. இவற்றில் எதையும் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு வழங்கவில்லை.

சுமார் காலை 7 மணியளவில் வட மாகாணத்தின் தென் எல்லை நகரமான வவுனியாவை சென்றடைய எங்களால் முடிந்தது. ஆனால் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இருந்து வந்த எங்களது குழு உறுப்பினர்களுக்கு அங்கிருந்து மேலும் பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் அந்தப் பிரதேசத்திற்கு செல்வதை விடுதலைப் புலிகள் விரும்பவில்லை என பிரதேச மருத்துவ ஆணையாளர் எம்மிடம் தெரிவித்தார்.

இலங்கை இராணுவமும் மற்றும் விடுதலைப் புலி போராளிகளும் வவுனியாவிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் ஓமந்தையில் சுமார் 500 மீட்டர்களுக்கு அமைந்துள்ள அவர்களது சோதனைச் சாவடிகளில் எங்களைத் தாமதப்படுத்தினர். பரிசோதனைக்காக பல லொறிகளும் வாகனங்களும் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது. சோர்வுற்ற பஸ் பயணிகள் தங்களது பொதிகளையும் அடையாள அட்டைகளையும் காண்பித்தவண்ணம் சோதனைச் சாவடிகளை கடந்துகொண்டிருந்தனர். இந்த சோதனைச் சாவடிகளில் மக்கள் மணித்தியாலங்களாக நின்றிருந்த போதிலும் அங்கு கதவுகள் இல்லாத நாற்றமெடுத்த மலசல கூடங்களே இருந்தன.

சிறு பிள்ளைகள் சிறிது பணம் சேகரித்து வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக கடலை விற்றுக்கொண்டிருந்தனர் --இது யுத்தத்தால் அழிவுற்ற பிரதேசங்களில் இன்னமும் தொடர்கின்ற வறுமையின் அறிகுறியாகும். வீதி ஓரங்களில் தரைமட்டமாக்கப்பட்ட அல்லது கூரைகளற்ற உடைந்த வீடுகளைக் காணக்கூடியதாக இருந்தது. உள்நாட்டு யுத்தத்தின் போது இப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிய சில தமிழ் மக்கள், பல வருடங்களுக்குப் பின்னர் திரும்பிவந்து அந்த சிதைவுகளுக்கு மத்தியில் ஓலைக் குடிசைகளை அல்லது சிறு வீடுகளை அமைத்துக்கொண்டிருந்தனர்.

பளைக்கு செல்லும் வீதியருகில் இடையிடையே வறண்ட நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் மற்றும் பனை மரங்களையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் கைவிடப்பட்ட பெரும்பாலான நிலங்கள் புதர்களால் மூடப்பட்டிருந்தன. எங்களில் ஒருவர் கேட்டார்: "விடுதலைப் புலிகள் ஒரு தனி அரசை ஸ்தாபித்தால் அவர்களால் இந்த வெற்று நிலங்களில் என்ன செய்ய முடியும்? அவை தமிழ் மக்களுக்கு எப்படி உணவளிக்க முடியும்? என்று.

நாங்கள் 13 மணித்தியால பயணத்தின் பின்னர் பிற்பகல் 2 மணிக்கு பளை ஆஸ்பத்திரியை அடைந்தோம். அது விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ஆயுதப் படைகளுக்கும் இடையில் உக்கிரமான மோதல் நடந்த அதிவேக சாலைக்கு அருகில் அமைந்திருந்தது. மோதலின் முடிவில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு செல்லும் பிரதான நுளைவாயிலான ஆனையிறவில் இருந்த பிரதான இராணுவ முகாமை அது இழந்தது.

2000 ஆண்டு ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்களால் முழுவதுமாக அழிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போதைய "சமாதான முன்னெடுப்பின்" ஒரு பாகமாக மீளமைக்கப்பட்டு வருகின்றது. அழிவுக்கு முன்னதாக அங்கு 35 சுகாதாரப் பணியாளர்கள் இருந்தார்கள். இது இப்போது பூரண வைத்திய தகமை பெற்றிராத ஒரு பதிவு செய்யப்பட்ட வைத்திய அலுவலர் மற்றும் நான்கு பயிற்றப்படாத சுகாதார ஊழியர்களால் நிரப்பப்பட்டுள்ளது. அங்கு தாதிகளோ மருத்துவிச்சிகளோ கிடையாது.

ஒருகாலத்தில் இந்த ஆஸ்பத்திரி ஆண,பெண்,விபத்து மற்றும் மகப்பேறு என நான்கு வாட்டுகளுடன் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சேவையாற்றிவந்தது. வடக்கு பக்கம் மிகவும் அருகில் உள்ள சுகாதார வசதி 40 கி.மீ தூரத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையே ஆகும். தெற்குப் பக்கம் 25 கி.மீ தூரத்தில் உள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரியும் மற்றும் மேலும் 35 கி.மீ தொலைவில் உள்ள, சுனாமியால் ஒரு பகுதி பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு ஆஸ்பத்திரியுமாகும்.

டிசம்பர் 29 அங்கு சென்றடைந்த முதலாவது மருத்துவக் குழு, சேதமடைந்த முன்னைய நோயாளர் அனுமதிக்கப்படும் பகுதியின் மீது அமைக்கப்பட்டிருந்த, ஒரு பகுதி கட்டுமான வேலைகள் நிறைவு செய்யப்பட்டிருந்த கட்டிடத்தை திறந்தது. நாங்கள் அங்கு சென்றடைந்த போது டசின்கணக்கான சுனாமியால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இருந்தார்கள். அவர்கள் தொற்றுக் காயங்கள், வயிற்றுப் போக்கு, காய்ச்சல் மற்றும் உளவியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நோயாளர்களுக்கு உடனடி மருந்துகளும் சிகிச்சைகளும் அவசியமாகியிருந்த நிலையில், ஜனவரி 2 அன்று எங்களது இரண்டாவது குழு ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியதிலிருந்து அங்கு தாதிகள் எவரும் இருக்கவில்லை. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்து சில மருத்துவபீட மாணவர்கள் தாதிகளின் பணிகளை இட்டுநிரப்ப நம்பிக்கையிழந்த நிலையில் முயற்சித்துக்கொண்டிருந்தனர்.

சுகாதார வசதிகள் போதாது. நோயாளர்களுக்காக வைத்தியசாலைக்கு அருகில் வெற்று பீப்பாய்களையும் பொலித்தீன் விரிப்புக்களையும் கொண்டு நான்கு மலசலக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்து நீர்தாங்கியில் தண்ணீர் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தது.

ஆஸ்பத்திரியில் 50 நோயாளர்கள் இருந்த போதும் 15 படுக்கைகளே இருந்தன. பெரும்பாலானவர்கள் பாய்களில் படுத்திருந்தனர். வயிற்றுப்போக்கு மற்றும் நரம்புகளூடாக தொடர்ச்சியாக மருந்து செலுத்தும் சிகிச்சைகள் தேவைப்பட்டிருந்த குழந்தைகளும் கூட நிலத்தில் கிடத்தப்பட்டிருந்தனர். ஆனால், செல்வந்தர்களுக்கும் சாதாரண தமிழ் மக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில், ஒருவர் வழமையான பென்சிலின் ஊசியை போட்டுக்கொள்வதற்காக பலவித ஆடம்பர வாகனங்களில் வந்தார். அவர் விடுதலைப் புலி தலைவர்களில் ஒருவர் என தெரியவந்தது.

பரந்த வறுமை

அவர்களது தோற்றம் மற்றும் ஆடைகளைக் கொண்டு பெரும்பாலான மக்கள் அனுபவிக்கும் கொடிய வறுமையை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அவர்கள் நிலப்பரப்பில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் அன்றாடக் கூலித்தொழிலில் ஈடுபடும் அதே வேளை, வடமராட்சிக் கிழக்கு கடற்கரையோரங்களில் உள்ளவர்கள் மீன்பிடியில் தங்கியுள்ளனர். ஆஸ்பத்திரி மீள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளி: "நான் ஒரு நாளைக்கு 300 ரூபாய்களையே (3 அமெரிக்க டொலர்கள்) பெறுகிறேன். நான் எனது குடும்பத்தை அன்றாடம் கொண்டு செலுத்த காலை 8 மணியிலிருந்து மாலை 4.30 வரை கடுமையாக வேலை செய்ய வேண்டும். யுத்தம் இல்லாவிட்டால் எங்களால் இந்த நிலைமைகளின் கீழ் வாழ முடியும். இல்லையேல், இந்த வகையிலான தொழிலும் கூட எங்களுக்கு கிடைக்காது," என்றார்.

சுனாமி வடமராட்சி கிழக்கைத் தாக்கிய போது பல குடும்ப உறுப்பினர்களையும் தனது உடமைகளையும் இழந்த ஒரு மீனவர்: "நான் வாழ்க்கையை ஓட்டுவதற்காக மீன் பிடித்தாலும் சில சந்தர்ப்பங்களில் உயிர்வாழ்வதற்காக ஏனைய தொழில்களையும் செய்வதுண்டு. யுத்தம் எங்களுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. எந்தவொரு கட்சியும் சாதாரண மக்களைப் பற்றி அக்கறையெடுக்கவில்லை," என விளக்கினார்.

சிலர் யுத்தத்திலிருந்து தப்புவதற்காக நாட்டைவிட்டு வெளியேறிய தங்களது உறவினர்களிடமிருந்து கிடைக்கும் வெளிநாட்டு நாணயத்தில் முழுமையாகத் தங்கியிருக்கின்றனர்.

யுவதிகள் அரசாங்க சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புக்களிலும் தொண்டர்களாக பணிபுரிவதை நாம் கண்டோம். சிலருக்கு நிவாரணங்கள் மட்டுமே கிடைக்கும் அதே வேளை, ஏனையவர்களுக்கும் ஒன்றும் கிடைப்பதில்லை. தொண்டர் சேவைகளில் ஈடுபடுவது சுகாதாரத் துறையில் தொழிலுக்கு விண்ணப்பிக்க உதவும் என அவர்கள் நம்புகிறார்கள்.

ஒரு சிரேஷ்ட மருத்துவிச்சி பிரதேசத்தில் சுகாதார வளமும் மனித வளமும் பற்றாக்குறையாக இருப்பதையிட்டு விமர்சித்தார். "இங்கு 10,000 மக்கள் உள்ள இடத்தில் ஒரே ஒரு மருத்துவச்சியே உள்ளார். எங்களுக்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது. சில பிரதேசங்களில் பாதைகளே கிடையாது," என்றார்.

மக்கள் பயங்கரமான நிலைமைகளுக்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். சிலர் பல தடவைகள் இடம்பெயர்ந்தும், தணது சொத்துக்களையும் அன்புக்குரியவர்களையும் இழந்துள்ளார்கள். ஒரு மருத்துவ மாணவர் விளக்குகையில்: "நாங்கள் 20 வருடங்களாக 'சுனாமிகளுடன்' வாழ்ந்து வந்துள்ளோம். தமிழ் மக்கள் அதற்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள்" என்றார்.

பளை ஆஸ்பத்திரியில் நாங்கள் பணியாற்றிய மூன்று நாட்களும், இரண்டு டசின் வயிற்றுப் போக்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளித்தோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளாலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தாலும் பேணப்பட்டுவரும் அருகிலுள்ள எட்டு அகதி முகாம்களில் உள்ளவர்களாவர். இந்த முகாம்கள் விடுதலைப் புலிகளால் "நலன்புரி நிலையங்கள்" என அழைக்கப்படுவதுடன், இவற்றில் போதுமான உணவு மற்றும் தங்குமிடமின்றி 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

மிகப் பெரிய நிலையம் பளை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,000 மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட பாடசாலையில் சுமார் 6,000 பேர்வரை வசிக்கின்றனர். சில கட்டிடங்கள் யுத்தத்தால் சீரழிக்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவ மாணவர் கூறுகையில்: "முகாம் இந்த நிலைமையில் இருப்பதால் மக்களுக்கு நித்திரைகொள்ள பொருத்தமான அறைகள் கிடையாது" என்றார்.

அங்கு வெற்று பீப்பாய்களைக் கொண்டு பொலித்தீன் விரிப்புக்களால் சுற்றி மூடப்பட்ட தற்காலிக மலசலகூடங்கள் 40 அமைக்கப்பட்டுள்ளன. முகாமுக்கு அருகில் சதுப்பு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இவற்றுக்கு விளக்குகளோ அல்லது ஒழுங்கான பாதைகளோ கிடையாது. சுகாதார சேவைக்கான உதவி மாகாண ஆணையாளர் டாக்டர்.டி. சத்தியமூர்த்தி விளக்குகையில்: "கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு தண்ணீர் மற்றும் மலசலகூட வசதிகள் பற்றாகுறையாகவே உள்ளன. ஆகவே மக்கள், விசேடமாக சிறுவர்கள் கழிவுகளைப் போக்க வெட்டவெளியையே பயன்படுத்துகின்றனர். இந்த நிலைமை நிச்சயமாக தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்" என்றார்.

அகதிகளுக்கு காலை உணவுக்கும் இரவு உணவுக்கும் ரொட்டியே வழங்கப்படுகிறது. பகல் உணவிற்கு இரண்டு கறிகளுடன் சோறு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முகாமிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் தமிழீழ சுகாதார சேவை பணியாளர்களின் உதவியுடன் விடுதலைப் புலிகளால் சுகாதார நிலையங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு தகமைகொண்ட மருத்துவ அலுவலர்கள் இல்லை --செஞ்சிலுவை தொண்டர்கள் காயங்களுக்கு மருந்து கட்டுகின்றனர்.

ஜனவரி 5 அன்று இடைவேளையின் போது நாங்கள் வடமராட்சி கிழக்கு கரையோரப் பகுதிக்கு விஜயம் செய்தோம். அது உண்மையில் மிகவும் அழிவுற்ற பிரதேசமாகும். நிலப்பரப்பில் 1 கிலோ மீட்டருக்கு எல்லா வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருந்தன. அங்கு வீசிய துர்நாற்றம் இன்னமும் சடலங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக எங்களை சந்தேகிக்கச் செய்தது. ஒரு மீனவர் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தார். "யுத்த காலத்தின் போது கடுமையான சிரமங்களுக்கு மத்தியிலும் எங்களால் வாழ முடிந்தது. இறுதியாக எனது குடும்பத்தோடு சேர்த்து கடல் எல்லாவற்றையும் அழித்துவிட்டது" என அவர் கண்ணீருடன் கூறினார்.

ஜனவரி 6 அன்று நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட போது, நோயாளர்கள், மருத்துவ மாணவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் உள்ளூர் தொண்டர்களுடன் ஒரு சோகமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். "இதற்குப் பின்னர் எங்களை யார் பார்த்துக்கொள்வார்? என ஒரு நோயாளர் அழுதார். "எங்களுக்கு யுத்தம் தேவையில்லை. நாங்கள் உங்களிடமிருந்து பிரிய வேண்டியதில்லை. நாங்கள் ஒன்றாக வாழவேண்டும்" என ஒரு சுகாதார ஊழியர் துயரத்துடன் தெரிவித்தார்.

Top of page