World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India joins the scramble for oil

எண்ணெய் தேடும் போட்டியில் இந்தியாவும் சேர்கிறது

By Parwini Zora and Daniel Woreck
12 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

"ஆசியாவிலுள்ள நம்மில் எவரும் வெளியாருடைய மூலோபாயங்களுக்கு பலியாகிவிடக் கூடாது. மற்றவர்களது, பூகோள அரசியலை எதிர்கொண்டு நிற்பதற்கு ஒரேவழி எமது சொந்த பூகோள அரசியலை உருவாக்கிக் கொள்வதுதான்".

மணி சங்கர் ஐயர், இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்.

அண்மையில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை தேடும் பூகோளப் போட்டிகளில் சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உட்பட இதர ஆசிய நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்து கொண்டிருக்கிறது. பன்னாட்டு எண்ணெய்க் குழாய் வழித்தடங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து எண்ணெய் எரிவாயு உற்பத்தி பேரங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியா உலக எரிபொருள் வளங்களில் ஒரு பெரும் பங்கிற்கு உரிமை கொண்டாட இராஜதந்திர ரீதியாக முயன்று வருகிறது. தேசிய சக்தி (energy) தொழிற்துறையை மறுசீரமைப்பு செய்வதற்கு ஒரு பெரும் அளவிலான நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டிருக்கிறது. ("அரச எண்ணெய் நிறுவனங்களை இணைக்கும் இந்திய அரசாங்கம்") என்ற கட்டுரையை காண்க.

பொருளாதார அத்தியாவசியங்களின் அடிப்படையினால், இந்தியாவிற்கு எண்ணெய் தேவைப்படுகிறது என்றாலும், வெளிநாட்டு எரிசக்திகளில் இந்தியா ஒரு பிரதான பங்களிப்பாளராக எழுவது உலகின் பூகோள அரசியலில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். ஏற்கனவே, எண்ணெய் வளம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் மிகத் தீவிரமான போட்டியை உருவாக்கியுள்ள சூழ்நிலைகளில் இதுவும் அந்தப் போட்டியில் இறங்குகிறது.

நாட்டின் சர்வதேச எண்ணெய்க் கொள்கை அமெரிக்காவுடன் உராய்வை ஏற்படுத்தும் ஒரு புள்ளியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியா பாக்கிஸ்தான் வழியாக ஈரானிலிருந்து குழாய் மூலம் எண்ணெய் கொண்டு வரும் திட்டம் தொடர்பாக நடத்திவரும் பேச்சு வார்த்தைகளை சீர்குலைப்பதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்திசெய்து கொள்வதும் மற்றும் இந்தியா எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா நாட்டின் நட்பை நாடுவதும், அமெரிக்காவின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற வல்லமை கொண்டவை ஆகும்.

எரிசக்தி தேவைகளும் எரிசக்தியின் சப்ளைகள் மீதான கட்டுப்பாடுகளை நிலைநாட்டுவதும், எல்லா பெரிய வல்லரசுகளின் மூலோபாய கணிப்பீடுகளுக்கு முக்கியமானதாகும். அது எந்தவகையிலும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கு முக்கியத்துவம் குறைந்ததல்ல, அது தனது விடுதலைக்கு பிந்திய தேசிய அபிவிருத்தி மூலோபாயத்தை 1991-ல் கைவிட்டு இந்தியாவை பூகோள உற்பத்திக்கான, அலுவலக செயல்முறைக்கான (processing) மற்றும் ஆராய்ச்சி உற்பத்திக்கானதாகவும் மாற்ற முயன்று வருகிறது மற்றும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தில் தனது வளர்ந்துவரும் எடையை பயன்படுத்தி அதன் அணுசக்தி, விண்வெளி மற்றும் இராணுவ வல்லமைகள் அடிப்படையில் ஒரு பெரிய வல்லரசு அந்தஸ்தை பெறுவதற்கு முயன்று வருகிறது.

பூகோள எண்ணெய் செலவிடும் அளவைக்கொண்டு பார்க்கும்போது, இந்தியா ஒரு சிறிய பங்களிப்பைத்தான் செய்து வருகிறது. உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், உலக எண்ணெய் நுகர்வில் (consumption) 3 சதவீத அளவிற்கே உள்ளது. ஒப்புநோக்கும்போது, சீனா உலக எண்ணெயில் 7.6 சதவீதத்தை பயன்படுத்துகிறது. என்றாலும் இந்தியாவின் எண்ணெய் தேவைகள் கூர்மையான அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு மட்டுமே, இந்தியா கச்சா எண்ணெய்யை செலவிடுவது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்தியா எண்ணெய் இறக்குமதிகளை அதிகம் சார்ந்திருக்கிறது. இந்தியாவின் எண்ணெய்த் தேவைகளில் எழுபது சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது மற்றும் இந்தியா இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களின் மதிப்பில் மூன்றில் ஒரு பகுதி எண்ணெய் இறக்குமதியாகும். 2020 வாக்கில் இந்தியா தனது எரிசக்தி தேவைகளில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கார் சந்தை உலகிலேயே மிகவேகமாக உயர்ந்து கொண்டிருப்பதால், எண்ணெய் செலவிடுவதும் இறக்குமதிகளும் அதிகரித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சி, உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அண்மையில் அமெரிக்க இராணுவத் தலையீடுகளால் ஏற்பட்டுள்ள சமீபத்திய எண்ணெய் சப்ளை சீர்குலைவு, ஆகியவை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் பாதுகாப்பாகவும், மலிவாகவும் கிடைக்கின்ற வளங்களை தேடுவதற்கான போட்டியில் இந்திய அரசாங்கத்தை உந்தித் தள்ளியிருக்கிறது.

குறிப்பாக சீனாவைவிட பின்தங்கிய நிலையில் இருந்து விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக இந்தியா தற்போது பாதுகாப்பாகவும், பன்முக அடிப்படையிலும் எண்ணெய் எரிவாயு பெறுகின்ற முயற்சிகளை பின்னணியிலிருந்து உடனடியாக மேற்கொண்டிருக்கிறது. ஒரு பகுதி தனியார் மயமாக்கப்பட்டுவிட்ட எண்ணெய், இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ONGC) தலைவர், சுபீர் ரேகா, சமிபத்தில் புளும்பெர்கா டாட் காம்மிற்கு அளித்த பேட்டியில், சூடானிலும், இந்தோனேஷியாவிலும் எண்ணெய் பேரங்களில் சீனா வெற்றி பெற்றிருப்பது குறித்து இந்தியாவின் கவலைகளை தெரிவித்தார். "மூன்று முதல் நான்கு ஆண்டு" காலத்தில் சீனா தீவிரமாக வெளிநாட்டு எரிசக்தி வளங்களைத் தேடுவதில் "முந்தி விட்டது". கச்சா எண்ணைய் விலைகள் ''ஒற்றை இலக்கம் அளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்ட நிலையில்'' சீனர்கள் ''ஏராளமான எண்ணைய் எரிவாயு திட்டங்களை பெற்றுவிட்டனர்'' என்று ரேகா புகார் கூறினார். "நாங்கள் சர்வதேச சந்தைக்கு வந்த நேரத்தில், கச்சா எண்ணெய் சாதனை அளவிற்கு சென்று விட்டது, எவரும் சொத்துக்களை விற்கவில்லை" என்றும் அவர் கூறினார்.

ஆனால், அமெரிக்கா உலக, எண்ணெய் சப்ளைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு மேற்கொண்டுள்ள முயற்சி அதைவிட பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் படையெடுப்புக்கள் மூலம் அமெரிக்கா தனது இராணுவ சக்தியை முன்னிலைப்படுத்துவதன் மூலம் உலக எண்ணைய் சப்ளைகளில் தனது மரணப்பிடியை நிலைநாட்டிக்கொள்ள முயன்று வருகிறது என்பதை புதுதில்லி நன்றாக அங்கீகரித்துள்ளது மற்றும் இது இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு தீவிரமான முக்கிய அச்சுறுத்தலாக அமைகின்ற ஒன்றாக உள்ளது.

குளிர்யுத்தம் முடிந்த பின்னர் மற்றும் தேசிய பொருளாதார நெறிமுறைகளை கைவிட்டபின்னர், இந்திய அரசாங்கம் வாஷிங்டனுடன் ஒரு புதிய உறவை ஒரு இந்திய-அமெரிக்க மூலோபாய பங்குதாரராக அபிவிருத்திசெய்தது. தற்போது அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தக பங்குதாரராகும், செப்டம்பர் 11 தாக்குதல்களை தொடர்ந்து இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்க்ைகள் செய்து கொள்ளப்பட்டதை தொடர்ந்து இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவங்கள் இந்து மகாசமுத்திரத்திலும், தென்சீனக் கடலிலும் கூட்டாக இராணுவ பயிற்சிகளை பெருக்கிக்கொண்டுள்ளன.

இந்த உறவுகள் இருந்தாலும், இந்தியா மிக அவசரமாக பாதுகாப்பான எரிசக்தி வளங்களை தேடிக்கொண்டிருப்பது இந்திய-அமெரிக்க உறவுகளில் பெரிய பிழையான கோட்டை அபிவிருத்தியடைய பங்களிப்பு செய்துவிட்டது. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது படையெடுப்பு நடத்தியதை தொடர்ந்து புதுதில்லிக்கு சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் உட்பட இதர ஆசிய நாடுகளுடன் தனது உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவகாசமும் அவசியமும் ஏற்பட்டது, அதன் மூலம் அமெரிக்காவின் சக்தியை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறது.

பொருளாதார மற்றும் பூகோள மூலோபாய மோதல்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையில் ஆழமாகியுள்ளது. என்றாலும், முந்திய பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடங்கிய நடவடிக்கைகளை ஒட்டி இன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் சீனாவுடன் சமரசம் செய்து கொள்ள முயன்று வருகிறது. எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையில் ஏதாவது மோதல் உருவாகுமானால், அந்த நேரத்தில் இந்தியாவை ஒரு முன் அரங்கு அரசாக காட்டுவதற்கு வாஷிங்டன் கருதியிருப்பதை இந்தியா மிகுந்த விழிப்புணர்வோடு அணுகுகிறது. எரிசக்தி வளங்கள் மீது சீனாவுடன் நேரடியாக மோதிக்கொள்வதை தவிர்ப்பதற்கு அதிக அளவில் ஆர்வத்துடன் உள்ளது. ரஷ்யா, ஈரான் மற்றும் சூடான் உட்பட எண்ணெய் துறப்பணப்பணிகளில் இரு நாடுகளும் கூட்டுத் தொழில்களை செய்து வருகின்றன மற்றும் சீனா மேலும் நெருக்கமான ஒத்துழைப்பிற்கு முன்மொழிவு செய்திருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற இந்த மாற்றங்களை எதிரொலிக்கின்ற வகையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் "ராஜியதந்திர உறவுகள் மாறிவிட்டன மற்றும் இன்றைய தினம் அது பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் பெட்ரோலியம் சம்மந்தப்பட்டதாகும்" என்று அறிவித்தார். சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் Zhou Wenzhong இதே வார்த்தைகளை எதிரொலித்தார், "வர்த்தகம் வர்த்தகம்தான். வர்த்தகத்திலிருந்து அரசியலை பிரிக்க நாங்கள் முயலுகிறோம்" என்று குறிப்பிட்டார்.

இந்தோ-சீனா-ரஷ்யாவிற்கிடையே ஒரு அதிகாரபூர்வமற்ற கூட்டணி ஆசியாவில் அமெரிக்கா ஊடுருவுவதை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக, சில பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஏப்ரல் 11-ல், இந்தியாவும் சீனாவும், ஒரு ''மூலோபாய பங்குதாரராக'' உருவாக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. "இந்தியாவும், சீனாவும் ஒன்று சேர்ந்து உலக நடைமுறையை மறுவடிவத்தை (reshape) செய்துவிட முடியும்" என்று சிங் அறிவித்தார். அந்த ஒப்பந்தத்தில் இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் உறுதிமொழிகள் ராஜியதந்திர உறவுகளை மேம்படுத்துவது மற்றும் இருவரும் இணைந்து ''பூகோள சவால்களையும், அச்சுறுத்தல்களையும்'' சமாளிப்பது ஆகியவையும் அடங்கும்.

ரஷ்யாவுடன் எரிசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்

சென்ற ஆண்டு, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்திய விஜயத்தின் போது இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தில் (memorandum) கையெழுத்திட்டன, அது காஸ்பியன் படுகையில் கூட்டாக இயற்கை எரிவாயுவை கண்டுபிடிப்பதற்கும், விநியோகிப்பதற்கும் வகை செய்தது, அதேபோல் இந்தியாவில் பூமிக்கடியில் எரிவாயு சேமிப்பு வசதிகளை உருவாக்கவும், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு தொழில்நுட்பத்தை மாற்றித் தரவும் வகை செய்தது.

சென்ற அக்டோபரில் மாஸ்கோவிற்கு விஜயம் செய்த இந்தியாவின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் மணி சங்கர் ஐயர் கூறினார்: "இந்தியா சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டில், ரஷ்யா நமது தேசிய எல்லை ஒருமைப்பாட்டிற்கு உறுதி செய்து தந்தது, மற்றும் அடுத்த அரை நூற்றாண்டில் நமது எரிசக்தி பாதுகாப்பிற்கு உறுதிமொழி தர முடிந்தது. நான் பேசுவது ரஷ்யாவுடன் எரிபொருள் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் சம்மந்தப்பட்டது, இது இந்தியாவிற்கு தேசிய பாதுகாப்பு அளவிற்கு முக்கியத்துவம் நிறைந்தது."

ரஷ்யாவுடன் எரிசக்தி வளம்மிக்க Sakhalin-1block-ல் இந்தியாவிற்கு ஏற்கெனவே 20 சதவீதம் பங்கு உள்ளது. ONGC Videsh Ltd மற்றும் the overseas arm of India's Oil and Natural Gas Corp. Ltd என்கிற வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் ஏற்கெனவே 1.7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறது, இந்த ஆண்டு பிற்பகுதியில் இது 3.5 பில்லியன் டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மேலும் Sakhalin 3 எண்ணெய் கிணற்றில் 1.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாகவும், ரஷ்யன்-Kazakh Kurmangazy கூட்டு எண்ணெய் கிணற்றில் மேலும் 1.5 பில்லியன் டாலர்களையும் முதலீடு செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது, இவை இரண்டும் காஸ்பியன் கடல் பகுதியில் உள்ளன. அதே திட்டத்திலிருந்து ஒரு பெரிய அமெரிக்க எண்ணைய் நிறுவனத்தை மாஸ்கோ அப்புறப்படுத்திய பின்னர், உடனடியாக Sakhalin 3 திட்டத்தில் இந்தியா இணைந்து கொள்ள ரஷ்யா அழைப்பு விடுத்திருப்பது குறிப்பாக கவனிக்கத்தக்கதாகும்.

ரஷ்யாவில் புட்டின் ஆட்சி பறிமுதல் செய்த ரஷ்ய Yukos எண்ணைய் நிறுவனத்தின் சொத்துக்கள், சிலவற்றை வாங்குகின்ற சாத்தியக்கூறை ஆய்வு செய்யும் ஆசிய வாடிக்கையாளர்களில் இந்திய-சீனா கூட்டு நிறுவனங்களும் இந்திய மற்றும் சீன எண்ணெய் நிறுவனங்களும் அணி வகுத்து நின்று போட்டியிடுகின்றன.

எரிசக்தி உற்பத்தியில் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துவதற்கு ஒருவகையில் எதிரிடையான முறையில், இந்த நகர்வுகள் தெளிவாக திட்டமிட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 14-ல், புதுதில்லியில் ஆசிய எரிவாயு வாங்குவோர் உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து, உரையாற்றிய இந்திய பெட்ரோலிய அமைச்சர் மணிசங்கர ஐயர் ஒரு ஆசிய எரிவாயு கிரிட்டை (gas grid) உருவாக்கிக் கொள்வதற்காக ஆசிய இயற்கை எரிவாயு தயாரிப்பவர்கள் ஒன்று சேர்ந்து வந்திருப்பதாக அறிவித்தார். அத்தகையதொரு பொது இணைப்பின் நோக்கம் இந்த பிராந்தியத்தில் எண்ணெய் இலாபத்தின் முழு பயனை அடைவதும் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் எரிபொருள் பாதுகாப்பை தடுக்கின்ற அளவிற்கு செயல்பட்டு வரும், "படுமோசமான மேற்கு நாடுகளின் மேலாதிக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கவும்தான்" என்று அவர் குறிப்பிட்டார்.

ஈரான் மற்றும் பாக்கிஸ்தானுடன் எண்ணெய் பேர ராஜதந்திரம்

முந்தைய பிஜேபி தலைமையிலான இந்திய அரசாங்கத்திற்கு ஈரானிலிருந்து இந்தியாவிற்கு எண்ணைய் மற்றும் எரிவாயு குழாய் இணைப்புக் கட்டுவது தொடர்பாக ஈரான் தெரிவித்த ஆலோசனை மீண்டும் ஆய்விற்கு வந்திருக்கிறது. அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ முற்றுகை பற்றி விடுத்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு எரிசக்தி பேரங்கள் மூலம் ஆசிய நாடுகளுடன் ராஜியதந்திர உறவுகளை பெறுவதற்கு ஈரான் தீவிரமாக முயன்று வருகிறது. ஜனவரி 7-ல் தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்துடன் (NIOC) ஒரு 40 பில்லியன் டாலர் பேர நகல் உருவாக்கப்பட்டது. அந்த பேரத்தின்படி 2009-லிருந்து 25 ஆண்டுகளுக்கு மேல் இந்தியா இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குகிறது. NIOC இரண்டு எண்ணெய் கிணறுகளையும் ஒரு எரிவாயு கிணற்றையும் உருவாக்கும்.

அண்மையில் இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொண்டலிசா ரைஸ் தெரிவித்த ஆட்சேபனைகள் உட்பட அமெரிக்காவின் எதிர்ப்புகள் காரணமாக ஈரானோடு தனது பேரங்களை நிறுத்திக்கொள்ளாது என்று இந்திய அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பின் மாநாட்டு நிகழ்ச்சியின்போது நிருபர்களுக்கு பேட்டியளிக்க ஐயர் கூறினார்; "அமெரிக்காவின் கவலைகள் என்ன என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டோம் மற்றும் நமது எரிசக்தி தேவைகள் என்ன என்பதை அமெரிக்கா நன்றாக அறிந்திருக்கின்றது......2025 வாக்கில் நமக்கு ஒரு நாளைக்கு 100 மில்லியன் கியூபிக் மீட்டர்கள் எரிவாயு தேவைப்படும். அமெரிக்கா அந்த அளவிற்கு நமக்கு சப்ளை செய்ய முடியுமா? நமது நாட்டிற்கு எரிபொருள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்" ('இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஈரானிய எரிவாயு இணைப்பை கைவிட அமெரிக்க அரசுத்துறை செயலாளர் வலியுறுத்துகிறார்" என்ற கட்டுரையை காண்க).

பெட்ரோலிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளிலேயே (OPEC) ஈரான் இரண்டாவது பெரிய கச்சா எண்ணைய் உற்பத்தி செய்கின்ற நாடு. உலகின் மொத்த நிரூபிக்கப்பட்ட கையிருப்புக்களில் 10 சதவீதம் ஈரானுக்கு சொந்தமானது மற்றும் உலகின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு இருப்புகள் உள்ள நாடாகும். மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் இயற்கை வளங்களுக்கும், பொருளாதார வாய்ப்புகளுக்கும் கட்டுபடியாகக் கூடிய ஒரு இணைப்புப் பாலம் ஈரான் என்று இந்தியா கருதுகிறது. பிப்ரவரியில் நடைபெற்ற மூன்றாவது எரிவாயு வாங்குவோர் மாநாட்டில், ஈரானின் தேசிய எரிவாயு ஏற்றுமதி நிறுவன (NIGE Co.) அதிகாரிகள் இந்திய பாக்கிஸ்தான் எல்லை வழியாக ஈரான் எரிவாயுவை கொண்டுவரும் குழாய் இணைப்பு தொடர்பாக பூர்வாங்க பேச்சு வார்த்தைகளை நடத்தினர், இந்தக் குழாய் இணைப்பு தொடர்பாக ஜூன் வாக்கில் டெஹ்ரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் ஈரானிய குழாய் இணைப்பு அபிவிருத்தி பாக்கிஸ்தானுடன் நெருக்கமான பொருளாதார உறவை வளர்த்துக்கொள்வதற்கும், இருதரப்பு எரிபொருள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் ஒரு வழி என்று புதுதில்லி கருதுகிறது. இந்த குழாய் இணைப்பு மூலம் இந்தியாவுடன் பூகோள அரசியல் மோதல் கொள்கையை மேற்கொள்ளும் பாக்கிஸ்தானின் வலிமையை வெட்டி முறித்து இந்திய பெருவர்த்தக நிறுவனங்கள் பாக்கிஸ்தான் சந்தையில் மேலாதிக்கம் செலுத்த வழிவகை செய்யும் என்று இந்திய அரசியல் செல்வந்தத்தட்டினர் கருதுகின்றனர்.

என்றாலும், பாக்கிஸ்தானுடன் நேரடி உடன்படிக்கை செய்துகொள்வதை தவிர்க்கும் வகையில் இந்தியா இரண்டு தனி உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கு முன்மொழிவுகளை தாக்கல் செய்திருக்கிறது-----ஒன்று இந்தியாவிற்கும் ஈரானுக்குமிடையே எரிவாயுவை வாங்குவதற்கான உடன்படிக்கை மற்றொன்று ஈரானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே குழாய் இணைப்பை உருவாக்குவதற்கான உடன்படிக்கை. உச்சி மாநாட்டின்போது ஆரம்பகட்ட குழாய் இணைப்புத்திட்டம் திருத்தப்பட்டு தெற்கு சீனாவரை குழாய் இணைப்பை விரிவுபடுத்தும் திட்டங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்தியா கிழக்கையும்.... மேற்கையும் நோக்குகிறது

புதுதில்லி இதற்கு முன்னர் கடைபிடிக்கப்பட்டுவந்த ஒதுக்கித்தள்ளும் கொள்கையை கைவிட்டுவிட்டு மியான்மரிலுள்ள இராணுவக் குழுவினருடன் தனது உறவுகளை புதுப்பித்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்ற அக்டோபரில் மியான்மர் இராணுவத் தளபதி Than Shwe ஒருவார இந்திய சுற்றுப்பயணத்தில் இந்திய அரசு அவருக்கு வரவேற்பளித்தது. அந்த விஜயம் மியான்மருடன் பக்கத்து வங்கதேசத்துடனும் நெருக்கமான ராஜியத்தந்திர உறவுகளை வைத்துக்கொள்ள வகை செய்வது, அத்துடன் வங்கதேசம் வழியாக இந்தியாவிற்கு மியான்மரின் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டுவர வகை செய்வதாகும்.

மியான்மர் குழாய் இணைப்பு உடன்படிக்கை, மண்டல ஒத்துழைப்பில் ஒரு பெரிய நடவடிக்கை என்று இந்தியாவில் கருதப்படுகிறது. இந்திய வங்கதேச உறவுகளில் அது ஒரு குறிப்பான சிறப்பு அம்சம் என்று கருதப்படுகிறது. இந்திய பெட்ரோலிய அமைச்சர் கருத்தின்படி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதுதான் முதல் தடவையாக இந்திய சந்தைக்கு எந்தப்பொருளையும் கொண்டு செல்வதற்கு தனது எல்லையை பயன்படுத்திக்கொள்வதற்கு வங்கதேசம் இணங்கியுள்ளது.

நெருக்கமான பிராந்திய ஒத்துழைப்பிற்கு அண்மையில் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ASEAN மூலமாகவும் வங்கக்கடல் நாடுகளுக்கிடையிலான BIMSTEC உடன்படிக்கை மூலமாகவும் புதுதில்லி கிழக்கில் பாரம்பரியமாக சீனாவும் ஜப்பானும் மேலாதிக்கம் செலுத்திவரும் பிராந்தியங்களில் ஊடுருவுவதற்கு புதுதில்லி மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒருபகுதியாகும்.

இந்தியாவிற்கு மேற்கில் லிபியா, சூடான் மற்றும் ஐவரிகோஸ்ட் உட்பட ஆபிரிக்க நாடுகளுடன் எரிபொருள் பேரங்களை இந்தியா பெற்றிருக்கிறது. அதற்கப்பால் பல தென் அமெரிக்க நாடுகளுடன் நீண்ட உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இவற்றில் வெனிசுலா முக்கியமான நாடாக இடம்பெற்றிருக்கிறது. "வெனிசுலா, லத்தின் அமெரிக்காவில் நமது அம்பு முனையாகும்" என்று இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இதர தென்அமெரிக்க நாடுகளின் எரிபொருள் அங்காடியில் நுழைவதற்கு வெனிசுலாவை இந்தியா பயன்படுத்திக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையில் நெருக்கமான உறவுகள் உருவாவது ஹூகோ சாவேசின் ஆட்சியை தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நேரடியாக எதிர்த்து நிற்பதாக உள்ளது. இந்த மாதம் இந்தியாவிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த வெனிசுலா ஜனாதிபதி ஹீகோ சாவேசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஆறு எரிபொருள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இந்தியாவில் ONGC மற்றும் GAIL நிறுவனங்கள் சான்கிருஸ்டோபல் மற்றும் PDVSA வெனிசுலா எண்ணெய் கிணற்றில் 49% பங்குகளை வாங்குகின்றன, வெனிசுலா அரசுக்கு சொந்தமான நடத்துகின்ற எண்ணெய் நிறுவனம் கர்நாடகத்தில் அரசாங்கம் நடத்துகின்ற இந்தியாவின் மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் முதலீடு செய்யவிருக்கிறது.

வெனிசுலா உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு. வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியில் தற்போது 60சதவீதத்திற்கு மேல் அமெரிக்கா வாங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவை இவ்வாறு சார்ந்திருப்பதை குறைப்பதற்கு வெனிசுலா தற்போது தனது எண்ணெய் அங்காடிகளை பன்முகப்படுத்த முயன்று வருகிறது. அண்மையில் தனது உறவுகளை ஆழமாக்கி கொள்வதற்காக பெட்ரோலியத் துறையில் ரஷ்யா - சீனா, பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவுடன் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை செய்திருக்கிறது.

Top of page