World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Turkish worker deported for drawing welfare benefits

ஜேர்மனி: நலன்புரி சலுகைகளை பெற்றதற்காக துருக்கி தொழிலாளி நாடு கடத்தல்

By Bülent Kent
3 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியின் புதிய புலம்பெயர்ந்தோர் சட்டங்கள் செயல்பட தொடங்கி ஆறு மாதங்களுக்கு பின்னர், அது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளிடையே எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை தெளிவாக காணமுடிகிறது. இந்த சட்டங்கள் ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரிடையே ஒருங்கிணைப்பை வளர்க்கும் என்ற அதிகாரபூர்வமான உறுதிமொழிகள் மாயை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன, அந்த நடவடிக்கைகள் அனைத்துமே நாடுகடத்துவதை எளிதாக்குவது பற்றியதாகும்.

அந்த சட்டம் அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்களை தருகிறது மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிராக மிகக்கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க அவர்களுக்கு வழிவகை செய்து தருகிறது. குறிப்பாக வருந்தத்தக்க வழக்கொன்று வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின், சொலிங்கன் நகரில் அண்மையில் நடந்திருக்கிறது; என்றாலும், அது மிதக்கும் பனிக்கட்டியின் நுனியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

Solinger Tageblatt ஜூன் 25-ல் வெளியிட்டுள்ள ஒரு செய்தியின்படி, துருக்கியிலிருந்து புலம் பெயர்ந்த யூசுப் பிங்கோல், ஜேர்மனியில் 35 ஆண்டுகள் வாழ்ந்து பணியாற்றிய பின்னர், கொலோனின் வான் விமான நிலையத்திலிருந்து துருக்கிக்கு நாடுகடத்தப்பட்டார். யூசுப் பிங்கால், ஒரு கிரிமினல் குற்றத்தை செய்தார் என்பதற்காகவோ, அல்லது அவர் தஞ்சம் புக தந்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதற்காகவோ, அவர் நாட்டிலிருந்து தூக்கிஎறியப்படவில்லை. அவர் வேலையில்லாதிருந்தார் மற்றும் நலன்புரி சலுகைகளை பெற்றிருந்தார் என்பதற்காக மட்டுமே அவர் வெளியேற்றப்பட்டார்.

Yusuf Bingöl 1969-TM ஒரு 15 வயது சிறுவனாக ஜேர்மனிக்கு வந்தார், அங்கு ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருந்த தனது தந்தையுடன் சேர்வதற்காக வந்தார். அவரது தலைமுறையை சார்ந்த பலரைப் போல், குறுகிய காலமே பள்ளிக்கல்வி பெற்றதாலும் மற்றும் ஜேர்மன் மொழியறிவு சிறிதே பெற்றிருந்த்தாலும் அதைப் பெறுவதற்கான வாய்ப்பு சிறிதே பெற்றிருந்ததாலும் அவர் ஒரு தொழிற்பயிற்சியை முடிக்க முடியவில்லை.

ஜேர்மனியில் மூன்றரை தசாப்தங்களாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் பிங்கால், பல்வேறு கம்பெனிகளில் ஒரு தொழில்திறன் பெறாத தொழிலாளியாக பணியாற்றி வந்தார். என்றாலும், அவருக்கு திடீரென்று பேரழிவு தாக்கியது, 2005 ஜனவரி ஆரம்பத்தின்போது, வேலையில்லாதிருப்போருக்கான சலுகைகளை கோரினார். Solinger Tagesblatt தந்துள்ள தகவலின்படி, ஜனவரி 17- ல் அவர் அதிகாரிகளிடமிருந்து அவர் குடியிருப்பதற்கான அனுமதியை நீடிக்க முடியாது என்று ஒரு அறிக்கையை பெற்றார். அதிகாரபூர்வமான தகவல் சொன்னது என்னவென்றால், அவர் "அந்த நாட்டிலிருந்து வெளியேற கடமைப்பட்டவர்" மற்றும் இந்த அறிவிப்பை அவர் புறக்கணிப்பாரானால் அவரை நாடு கடத்துவதாகவும் அது எச்சரித்தது. "அத்தகையதொரு அனுபவம் எப்போதுமே எனக்கு ஏற்பட்டதில்லை" என்று பிங்கோலின் வழக்கறிஞர் கூறினார்.

நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டளையை யூசுப் பிங்கால் பின்பற்றாததால், அவர் அதிகாரிகளால் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டார். பிங்கால் ஜேர்மனியில் 35 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் சமூக பாதுகாப்பு பயன்களை கோரிய ஒரே காரணமான வேலையில்லாமைக்கு ஆளாகியிருந்தாலும் இப்போதுள்ள சட்டங்களின்படியும், புதிய "ஹார்ட்ஸ் IV" தொழிலாளர் சீர்திருத்தங்களின் படியும், அந்த நாடுகடத்தல் முற்றிலும் சட்டபூர்வமானது.

புலம்பெயர்ந்தோருக்கான உரிமைகளை செயல்படுத்தும் முந்திய சட்டம், புலம் பெயர்ந்தவர்களில் ஒருவர் "ஜேர்மனியில் வாழும் தனக்காகவும் தனது உறவினர்களுக்காகவும், அல்லது தனது வீட்டில் தான் பராமரிப்பதற்கு பொறுப்பேற்றுள்ள நபர்களுக்காகவும் சமூக பாதுகாப்பு பயன்கள் கோரி மனுச் செய்வாரானால்" தங்களது விருப்ப அதிகாரப்படி எவரையும் நாடு கடத்த அதிகாரிகளுக்கு விருப்புரிமை தந்தது.

என்றாலும், இந்த அதிகாரம் மிக அபூர்வமாகத்தான் பயன்படுத்தப்பட்டது. அது வெளிநாட்டை சேர்ந்தவர்களை மிரட்டவும், படுமோசமான கூலிகள் கிடைக்கும் வேலைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அழுத்தங்களை கொடுப்பதற்காகவும் அது பிரதானமாக சேவைசெய்தது.

அந்த வாசகம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புதிய சட்டத்திலும் இடம்பெற்றிருக்கிறது, அதன் வாசகம் என்னவென்றால், ஒரு வெளிநாட்டுக்காரர் நாடுகடத்தப்படும் நிலை "அவர் தங்கியிருப்பது, பொது பாதுகாப்பு அல்லது ஒழுங்கிற்கு பாதிப்பை எற்படுத்தும் என்றால், அல்லது ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் இதர கணிசமான நலன்களுக்கு பாதகமாக அமையுமென்றால்'' வரக்கூடும் இந்த "நலன்கள் கணிசமான அளவிற்கு பாதிக்கப்படுவது'' எப்போது என்றால் "ஒரு வெளிநாட்டுக்காரர் தனக்காக, தனது உறவினர்களுக்காக அல்லது தனது வீட்டில் இருப்பவர்களுக்காக சமூக பாதுகாப்பு பயன்களை கோரும்போதுதான்".

இந்த தர்க்கவியல் படி, வேலையில்லாமையின் காரணமாக நலன்புரி பயன்கள் தருவது ஒரு சமூக உரிமையாக கருதப்படவில்லை, ஆனால் வரலாற்றின் மத்திய காலங்களில் நடந்ததைப்போல் அது உண்மையிலேயே அரசின் நலன்களுக்கு எதிராக செல்லும் ஒரு கருணைச் செயல் என்று கருதப்பட்டு, அத்தகைய பயன்களை கோருபவர்கள் பொதுப் பாதுகாப்பையும் ஒழுங்கையும் குலைப்பதாக நனவுபூர்வமாக இழிவுபடுத்தப்படுகின்றனர்.

புலம்பெயர்ந்தோருக்கான சொலிங்கன் ஆணையர், அனே வேக்காம்ப், அதிகாரிகளது நடவடிக்கை முற்றிலும் சட்டபூர்வமானது என்றாலும், இந்த விவகாரம் முழுவதையும் மிகுந்த சங்கடத்தோடு அணுகுகிறார். "மக்கள் நம்மோடு இவ்வளவு நீண்டகாலம் வாழ்வார்கள் என்றால், ஜேர்மன் குடிமக்களுக்குரிய அதே உரிமைகளையும் கடமைகளையும் அனுபவித்து ஆகவேண்டும்" என்று அவ்வம்மையார் வாதாடுகிறார்.

யூசுப்பின் இளைய சகோதரர் கேனன் பிங்கால், நடப்பு புலம்பெயர்ந்தோருக்கான கொள்கை மனித நேயமற்ற வகையில் மக்களை அலட்சியப்படுத்துவதாக அதிர்ச்சியடைந்ததுடன் தனது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார், "அவரை ஏன் நாடு கடத்தினார்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. அவர் [எந்தக் குற்றத்திற்காகவும்] எப்போதும் தண்டிக்கப்பட்டதில்லை. அவர் பணியாற்றினார் மற்றும் பல ஆண்டுகளாக வரிகளை செலுத்தி வந்தார், அவர் எந்த உதவியும் கேட்டதில்லை. அவரது சகோதரர்கள், உடன் பிறந்தாரின் மகள், மகன் அனைவரும் இங்கே வாழ்கிறார்கள், அவரது 25 வயது மகளும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் துருக்கிக்கே ஒரு அந்நியர் ஆவார்".

சொலிங்கன் அதிகாரிகளுக்கான ஒரு பேச்சாளர் அச்சிம் சாலவ்ஸ்மேன் இந்தக் கொடூரமான நடவடிக்கையை நியாயப்படுத்தினார்: "யூசுப் பிங்கால் உரிய நேரத்தில் தகுந்த பதிலை தரவில்லை மற்றும் தேவையான சான்றை வழங்கவில்லை. மற்றும் பெப்ரவரி 7-ந் தேதிக்கு பின்னர்தான் அவர் அவரது அட்டர்னியை ஈடுபடுத்தியிருக்கிறார்" இது தவிர, டுஸ்ஸில்டோர்பிலுள்ள நிர்வாக நீதிமன்றம் சொலிங்கன் அதிகாரிகள் எடுத்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது. மிகுந்த இறுமாப்போடு, சால்வ்ஸ்மேன் மேலும் "அவருக்கு வேலை இருக்கிறது அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு அவரது வாழ்க்கை செலவுகளை சரிகட்ட வேறு எவராவது ஜாமீன் கொடுக்கிறார்கள் என்றால் நாங்கள் மீண்டும் பரிசீலனை செய்வோம். யூசுப் பிங்கால் மீண்டும் நாட்டிற்குள் நுழைய முடியும்." என்று குறிப்பிட்டார்.

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பிங்காலை மீண்டும் அனுமதிக்க அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள்----ஆனால் அவரை ஒரு மலிவூதிய தொழிலாளியாக பயன்படுத்த முடியும் என்கின்ற காலம் வரை மற்றும் அவர் தனது சமூக உரிமைகள் எதையும் கோராமல் இருக்கும்வரை.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக பாரபட்சம்

1960களில், ஜேர்மனியின் தொழிற்துறையில் தொழிலாளர்களுக்கான ஒரு பற்றாக்குறை ஏற்பட்டபோது கம்பெனிகள் சிறந்த ஊதியங்களை தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "விருந்தாளி தொழிலாளர்கள்'' (Gastarbeiter) என்றழைக்கப்பட்டவர்களை இத்தாலி, கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், யூகோஸ்லாவியா மற்றும் துருக்கியிலிருந்து நியமிக்கும் ஒரு கொள்கையை அதிகாரிகள் தொடக்கினர்.

1971 வாக்கில், இந்த வழியில் ஜேர்மனியில் 420,000 துருக்கி தொழிலாளர்கள் வந்து சேர்ந்தனர். 1973 நவம்பரில், சர்வதேச பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அதிபர் வில்லி பிரான்ட்டின் கீழ் அரசாங்கம் (சமூக ஜனநாயகக்கட்சி) அத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நியமனத்திற்கு தடைவிதித்தது. அந்த நேரத்தில், புலம் பெயர்ந்தோர் பொதுத்துறை பதவிகளை நிரப்பும்போது, ஜேர்மன் குடிமக்களுக்கு அடுத்தபடியாக கருதப்பட்டனர், அதே நிலவரம் இன்னும் நீடிக்கிறது. இந்த பாரபட்சமான கொள்கை வேலைகளில் நியமனம் செய்வதை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் சமூக பாதுகாப்பு பயன்களை மறுப்பதிலும் விரிவடைந்துள்ளது. ஓய்வூதியம், வேலையில்லாதோருக்கான ஊதியம் மற்றும் சுகாதார காப்பீடு போன்ற உரிமைகளை பெறுவதற்கு புலம்பெயர்ந்தோர் பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, பணியாற்றுவதற்கான அனுமதி உரிமைகளை வழங்குவதும் முன்பு இருந்ததைவிட கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஹெல்முட் கோலின் கிறிஸ்தவ ஜனநாயக அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளின்படி, தங்களது உறவினர்களுடன் சேர்ந்து கொள்வதற்கு ஜேர்மனிக்கு வருகின்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை ஒரு பணி அனுமதி வழங்கப்படமாட்டாது. இது குடும்பம் ஐக்கியப்படுவதற்கு சர்வதேசரீதியாக செல்லுபடியாகக்கூடிய உரிமையை கீழறுக்கின்ற தெளிவானதொரு முயற்சியாகும் மற்றும் ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்ற "விருந்தாளி தொழிலாளர்களின்" குழந்தைகள், கணவன்/ மனைவியர் நுழைவதை தடுப்பதாகும். இதே கொள்கை இன்னும் அகதிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது, அவர்களுக்கு சட்ட விதிப்படி பணி அனுமதி மறுக்கப்படுவது மட்டுமல்ல ஜேர்மன் குடிமக்களுக்கு வழங்கப்படுவதைவிட 30 சதவீதம் குறைவாகவே நலன்புரி ஊதியங்கள் வழங்கப்படுகின்றன.

அதே வழிகளில், அரசாங்கமும் ஊடகங்களும் புலம்பெயர்தோரையும், அகதிகளையும் பலிகடாக்களாக ஆக்க முயன்று வருகின்றன, ஜேர்மனியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்று பழிபோடுகின்றன.

ஒரு ஜேர்மன் கடவுச்சீட்டு இல்லாமல் வருகின்ற தொழிலாளர்கள் முதலில் அந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை பொதுவாக உணருகின்றனர் மற்றும் மிக அண்மையில் பூகோளமயமாக்கலின் திட்டவட்டமான விளைவுகளை அனுபவிக்கின்றனர். 1980-களின் கடைசியிலும், 1990-களிலும் தொழிற்துறை உற்பத்தியின் ஒரு பெரும் பேரம் குறைக்கப்பட்டது மற்றும் ஜேர்மனியிலிருந்து பிற நாடுகளுக்கு மாற்றப்பட்டது, ஊதியங்களை குறைப்பதற்கும் பணியாற்றும் காலத்தை நீடிப்பதற்கும் வேண்டி தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக மோதவிட்டார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் முதலில் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். மக்களில் இன்றையதினம் இந்தப்பிரிவை சார்ந்தவர்கள்தான் குறிப்பாக அதிக அளவில் வேலையில்லாமலும், வறுமையிலும் உள்ளனர்.

ஒரு துருக்கி தினசரி பத்திரிக்கையான எவரன்சல் உடன் துருக்கி ஆய்வுகள் நிலைய இயக்குனர் ஜேர்மனியிலுள்ள துருக்கி புலம்பெயர்ந்தோரை எதிர்நோக்கியுள்ள சமூக நிலவரத்தை கலந்துரையாடியிருக்கிறார்.

2005 ஆரம்பத்தில் ஜேர்மனியில் ஒட்டுமொத்தமாக 12 சதவீதம் பேர் வேலையில்லாதிருந்தனர், அவர்களில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 31 சதவீதமாகும். துருக்கியை பூர்வீகமாக கொண்டவர்களில் வேலையில்லாதிருப்போர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகும், இவர்கள் ஓராண்டிற்கு மேலாக வேலை தேடி வருபவர்கள். புள்ளி விவரங்களை துல்லியமாக கூறுவதென்றால், 216,000 துருக்கி புலம்பெயர்ந்தோர், குறைக்கப்பட்ட வேலையில்லாதோருக்கான பயன்களை பெற்று வருகின்றனர். ஒரு சராசரி குடும்பத்தில் 4 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்வோமானால், அதுபோன்ற பயன்களை சார்ந்து சுமார் 864,000 பேர் உள்ளனர்.

இது தவிர, துருக்கியிலிருந்து வந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 215,000 பேர், அவர்கள் மாதம் சராசரியாக 526 யூரோக்களைத்தான் ஓய்வூதியமாக பெறுகின்றனர். சட்டவிதிப்படி இந்த வருமானத்திலிருந்துதான் இரண்டு பேர் வாழ்வதற்கான செலவினங்களை சரிக்கட்ட வேண்டும், ஓய்வூதியம் பெறுவோரில் சுமார் 430,000 பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்களை கூட்டிப்பார்த்தால் துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட சுமார் 1 மில்லியன் மக்கள் ஜேர்மனியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

செல்வம் மற்றும் வறுமை தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை ஏறத்தாழ நான்கு புலம்பெயர்ந்தோரில் ஒருவர் ஏழை என்று முடிவு செய்தது, ஏனென்றால் அவர்களது வீட்டு வருமானம் சராசரி வருமானத்தை விட 60 சதவீதம் குறைவாகும். இந்த விகிதாச்சாரம் 1998-க்கும் 2004-க்கும் இடைப்பட்ட காலத்தில் 19.6 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்ந்து விட்டது. 6,15,000 பேருக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நலன்புரி ஊதியங்களை நம்பியிருக்கின்றனர், இது 8.4 சதவீத பங்காகும், ஜேர்மன் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களைவிட இது மூன்று மடங்கு அதிகமாகும்.

கல்வியை பொறுத்தவரை புலம்பெயர்ந்தோர் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களும் குழந்தைகளும் தெளிவாக வசதி குறைவான நிலையிலேயே உள்ளனர். 2002-ல் பள்ளிப்படிப்பை முடித்தவர்களில் 20 சதவீதம் பேர் பட்டம்பெறாமல் உயர்நிலைப்பள்ளி படிப்பை விட்ட புலம்பெயர்ந்தோர் குடும்பங்களை சார்ந்தவர்கள், ஜேர்மனியில் பிறந்த இளைஞர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே பட்டம் பெற தவறிவிட்டனர். பல்கலைக்கழகத்தில் இடம் பெறுவது ஒருபுறம் இருக்கட்டும், தொழிற்பயிற்சியை பொறுத்தவரை எந்த வித மாற்றத்தையும் காண முடியவில்லை. அண்மை ஆண்டுகளில் புலம்பெயர்ந்த இளைஞர்கள் தொழிற்துறை பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவிற்கு மோசமடைந்து வருகின்றது, 1994-ல் 10 சதவீதம் பேர் அளவிற்கு தொழிற்பயிற்சி பெற்றோர் 2002-ல் 6.5 சதவீத அளவிற்கு குறைந்துவிட்டனர். இன்றைய தினம், மூன்று பேரில் ஒருவருக்குதான் தொழிற்பயிற்சி பெறுகின்ற வாய்ப்பு உண்டு.

கல்வியை பெறுவதில் மற்றும் தொழிற்பயிற்சி பெறுவதில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வு நேரடியாக வறுமைக்குள்ளாகும் ஆபத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது. நலன்புரி சலுகைகளை பெற்றுவருகின்ற 60 சதவீதம் புலம்பெயர்ந்தோர் முறையான தொழிற்பயிற்சி பெற்றவர்கள் அல்ல. வேலை வாய்ப்பு சந்தையில் நெறிமுறைகள் தளர்த்தப்பட்டது மற்றும் பெருமளவில் வளைந்துகொடுப்பது குறிப்பாக புலம் பெயர்ந்தோரையும், அகதிகளையும் கடுமையாக பாதிக்கிறது. அவர்களுக்கு அடிக்கடி தற்காலிக வேலை வாய்ப்பு மட்டுமே கிடைப்பதால் அவர்கள் பணிக்கும் வேலையில்லா நிலைக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறார்கள், ஏறத்தாழ உயிரைத் தாக்குப்பிடிக்கும் நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஹார்ட்ஸ் IV தொழிலாளர் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் ஒன்று ஒன்றுமில்லாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது குறைந்த ஊதியப் பணிகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பதை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டு தொழிலாளர்களை ஒடுக்குவதற்கும் அவர்களை அச்சுறுத்துவதற்கும் ஆளும் செல்வந்த தட்டினர் தங்களது கையில் எடுத்துக்கொண்டுள்ள மிக வலிமையான ஆயுதம் ஜேர்மனியின் கட்டுப்படுத்தப்பட்ட புலம் பெயர்ந்தோருக்கான சட்டங்கள், அவை வேலையில்லாத நிலைக்கு தள்ளப்படும், புலம் பெயர்ந்தோரை மற்றும் நலன்புரி சலுகைகளை பெறுவோரை எளிதாக நாடு கடத்த வகை செய்கின்றன. யூசுப் பிங்காலை நாடு கடத்துவதற்கு இந்த ஆயுதத்தை சொலிங்கன் அதிகாரிகள் இப்போது பயன்படுத்தியிருக்கின்றனர் என்ற உண்மையானது ஒரு தனிப்பட்ட அல்லது தற்செயலாக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. திட்டமிட்டு புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தொடர்பான எல்லா உரிமைகளையும் அழிப்பது அனைத்து உழைக்கும் மக்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு வழியை திறந்து விட்டிருக்கிறது. ஜேர்மனியிலும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் வாழுகின்ற மில்லியன்கணக்கான புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளது தலைவிதியை நிர்ணயிக்கின்ற பொறுப்பை தொழிலாள வர்க்கம் கையில் எடுத்துக்கொண்டால்தான் அதன் உரிமைகளை பாதுகாத்து நிற்க முடியும்.

Top of page