World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Bitter dispute over timing of Sri Lankan presidential election

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலம் குறித்து கசப்பான சர்ச்சை

By Nanda Wickremasinghe
23 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்றம் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலம் குறித்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு இந்த வாரம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கவுள்ளது. இந்த தேர்தல் திகதி, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகளுக்கும் இடையிலான ஒரு நீண்ட மற்றும் கடும் வெறுப்புணர்ச்சி கொண்ட ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாகி இருப்பதானது, கொழும்பில் உள்ள ஆளும் வட்டாரம் எளிதில் கையாளமுடியாத அரசியல் முட்டுக்கட்டையை அடைந்துள்ளது என்பதற்கான இன்னுமொரு அறிகுறியாகும்.

1999 டிசம்பரில் ஒரு வருடம் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த குமாரதுங்க, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக அவரது உயிர் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த தாக்குதல் முயற்சியின் பின்னர், அனுதாபங்களை சேகரித்துக்கொண்டு வெற்றி பெற்றார். அவர் தனது இரண்டாவதும் மற்றும் இறுதியான ஆறு வருடகால ஆட்சிக்குமாக அதே மாதம் பகிரங்கமாக பதவிப்பிரமானம் செய்துகொண்டார். இலங்கை அரசியல் யாப்பின்படி, ஒரு ஜனாதிபதியால் இரண்டு முறை மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும்.

ஆயினும், 2000 டிசம்பரில், குமாரதுங்க இரகசியமாக இரண்டாவது முறையும் பதவிப்பிரமானம் செய்துகொண்டார். இந்த நிகழ்வு வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்காததோடு 2003 டிசம்பரில் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு விபரங்கள் கசிந்த பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது. பதவிக்காலம் முடியும் முன்னரே முதல் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த காரணத்தாலும் மற்றும் 1999ல் அன்றி 2000 ஆண்டிலேயே தாம் உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமானம் செய்துகொண்ட காரணத்தாலும் 2006 டிசம்பர் வரையும் அடுத்த தேர்தல் நடைபெறாது என ஜனாதிபதி கூறிக்கொள்கிறார்.

இலங்கையில் வழமையில் இல்லாத இந்த அசாதாரணமான நடவடிக்கையை சர்ச்சைக்குள்ளாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), இந்த ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இடைவிடாமல் அழைப்பு விடுக்கின்றது. ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த வருடம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி கடந்த மாதம் ஒரு பெயரளவிலான "மக்கள் சக்தி" பிரச்சாரத்தை முன்னெடுத்தார். தென் நகரமான ஹம்பந்தொட்டையில் ஆரம்பித்த ஒரு வாரகால யாத்திரை, ஜூலை 12 அன்று கொழும்பில் 100,000 மக்கள் ஒன்று கூடிய ஒரு கூட்டத்துடன் முடிவடைந்தது. ஐ.தே.க தனது கோரிக்கைக்காக ஒரு மனுவில் பத்துலட்சம் கையொப்பங்களை சேகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த சர்ச்சையின் கசப்பான நிலை பணையமாக வைக்கப்பட்டிருப்பது என்ன என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அரசியலமைப்பு அதிகாரங்கள் விரிவானவையும் மற்றும் அமைச்சர்களையும் அரசாங்கத்தையும் நியமிக்கும் மற்றும் பதவி விலக்கும் அதிகாரங்களை உள்ளடக்கியதாகும். குமாரதுங்க ஏற்கனவே இவற்றை முழுமையாக சுரண்டிக்கொண்டுள்ளார். 2003 நவம்பரில், ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க எடுக்கும் முயற்சிகளில் நாட்டின் தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக குற்றம் சாட்டிய பின்னர், பாதுகாப்பு, உள்துறை மற்றும் தகவல்தொடர்பு ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்களையும் அவர் அபகரித்துக் கொண்டார்.

திரைக்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து எழுந்த அழுத்தங்களின் காரணமாக, அவசரகால நிலையை அமுல்படுத்துவதில் இருந்து கடைசி நிமிடத்தில் அவர் பின்வாங்கினார். ஆயினும் 2004 பெப்பிரவரியில், முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை மேற்கொண்ட அவர், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்த அரசாங்கத்தை முழுமையாகப் பதவி விலக்கியதோடு புதிய தேர்தலுக்கும் அழைப்பு விடுத்தார். சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) கூட்டணி சேர்ந்துகொண்ட அவரது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), ஐ.தே.க வின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தால் ஏற்பட்டிருந்த அதிருப்தியை பயன்படுத்தி 2004 ஏப்பிரலில் நடந்த தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றது.

கடந்த வருடம் பூராவும் அரசியல் நெருக்கடி மட்டுமே ஆழமடைந்தது. தனது கூட்டணி அரசாங்கத்துடன், தலைகீழாக மாறிய குமாரதுங்க, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உறுதிகொண்டார் --இதில் பெரும் பகுதி, நாட்டின் கூர்மையான பொருளதார நெருக்கடியை தனிப்பதன் பேரில் வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதை இலக்காகக் கொண்டிருந்தது. எவ்வாறெனினும், இந்த முன்னெடுப்புகளில் அவர் தனது பேரினவாத பங்காளிகளால் தனிமைப்படுத்தப்பட்டார். ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் ஒரு பொது சுனாமி நிவாரண உடன்படிக்கையை கைச்சாத்திட்டதை அடுத்து, ஜே.வி.பி உடனான பதட்ட நிலைமைகள் வெடிக்கும் நிலையை எட்டின --இந்த உடன்படிக்கையை நாட்டைக் காட்டிக்கொடுத்த செயலாக ஜே.வி.பி கண்டனம் செய்கின்றது.

ஜே.வி.பி வெளியேறியதில் இருந்து, 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் கூட்டணி வெறும் 80 ஆசனங்களுடன் சிறுபான்மையாகியுள்ளது. அரசியல் ஸ்தாபனத்தின் மீதான வெகுஜனங்களின் வெறுப்பின் காரணமாக எந்தவொரு கட்சியும் ஒரு புதிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை. குமாரதுங்கவின் முன்னைய நடவடிக்கைகளை மனதில் கொண்டுள்ள ஐ.தே.க, அரசாங்கத்தில் இணைவதற்கு அல்லது ஒரு சொந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான குமாரதுங்கவின் அழைப்பை நிராகரித்து விட்டது. சாத்தியமாகும் வரையில் நீண்ட காலத்திற்கு ஜனாதிபதி பதவியில் இருக்க குமாரதுங்க முயற்சிப்பதைப் போலவே, ஐ.தே.க வும் அந்தப் பதவியையும் அதன் சர்வாதிகார அதிகாரங்களையும் கைப்பற்றிக்கொள்ள முயற்சிக்கின்றது.

ஜே.வி.பி வெளியேறியவுடன், அரசாங்கத்திற்கும் அதன் சுனாமி மீள் கட்டுமான திட்டங்களுக்கும் ஆதரவளிக்குமாறு எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த குமாரதுங்க, பின்னர், தற்போது நிலவுவதைப் போன்ற நிலைமைகளின் கீழ் "சர்வாதிகாரங்களும் மற்றும் இராணுவ சர்வாதிகாரங்களும்" அடிக்கடி எழும் என குறிப்பாக எச்சரித்தார். அதை அடுத்து, தேசிய தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், "எல்லா அமைச்சுக்களையும் தனது அதிகார வரம்பின் கீழ் கொண்டுவருவதற்கு தன்னிடம் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் இருப்பதாக" பிரகடனம் செய்தார் --வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டால், தேவை ஏற்பட்டால் அவரால் தனி மனித ஆட்சியை ஸ்தாபிக்க முடியும் மற்றும் கூடும் என்பதேயாகும்.

அதிகாரப் போராட்டம்

இதன் பெறுபேறாக, உயர் நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகளில் ஒரு பெரும் பேரமே தங்கியுள்ளது. முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவும் மற்றும் தனது முன்னைய பதவிக்காலம் முழுவதற்கும் சேவையாற்றுவதற்குமான இயலுமையை அரசியலமைப்பு தனக்கு வழங்கியுள்ளதாக குமாரதுங்க கூறிக்கொள்கிறார். இந்த காரணங்களின் மூலம், ஆட்சியைக் கைவிடுவதற்கு அவருக்கு 2006 டிசம்பர் வரை காலமுள்ளது.

இந்த விடயத்தில் பிரதான பொறுப்பாளியான தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்க, ஜனாதிபதியுடன் நேரடியாக முரண்படுகின்றார். ஆகஸ் 15 அன்று உயர் நிதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட பதில்களில், ஜனாதிபதியின் தற்போதைய பதவிக் காலம் 1999 டிசம்பர் 22 அன்றே தொடங்கியதாக தான் நம்புவதாகவும், அதன் காரணமாக அரசியலமைப்பின்படி புதிய தேர்தல் இந்த ஆண்டே நடத்தப்பட வேண்டும் என திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க விவகாரத்தை உயர் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரவில்லை. அது பல சிரேஷ்ட நீதிபதிகளை புறக்கணித்து, குமாரதுங்கவால் பதவிப் பிரமானம் செய்துவைக்கப்பட்ட பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வாவையிட்டு கூர்மையான விமர்சனங்களைக் கொண்டுள்ளது. குமாரதுங்கவின் ஆதரவாளர்களில் சிலரும் கூட, சில்வா இந்த வழக்கிற்கு தலைமை வகிக்க முடியுமா என கேள்வியெழுப்பியுள்ளனர். அவர் பிரதம நீதியரசர் என்ற வகையில், 2000 ஆண்டில் குமாரதுங்கவின் சர்ச்சைக்குரிய பதவிப்பிரமானத்தை ஏற்றுக்கொண்டவராக இருப்பதோடு அவரே விளைவுகளின் பணயமாகியுள்ளார்.

சிங்களத் தீவிரவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரான ஒமல்பே சோபித்த, ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டே நடத்த தேர்தல் ஆணையாளருக்கு கட்டளையிடுமாறு உயர் நீதிமன்றத்தை கோரும் ஒரு மனித உரிமைகள் மனுவைப் பதிவு செய்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவின் வேண்டுகோளை ஒதுக்கித் தள்ளுமாறு ஸ்ரீ.ல.சு.க உயர் நீதிமன்றத்திற்கு முறையிட்டுள்ளது. குமாரதுங்கவும் இந்த விவகாரம் சம்பந்தமான சட்ட ஆலோசனையை நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

ஆகஸ்ட் 12 அன்று, வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையும் கொழும்பில் அரசியல் பதட்ட நிலைமையை மேலும் எரியச் செய்துள்ளது. கூர்மையான பிளவுகள் இருந்த போதிலும் ஸ்ரீ.ல.சு.க, ஐ.தே.க, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பெரும்பாலும் எல்லா பிரதான கட்சிகளும் கடந்த வியாழனன்று அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதில் ஒன்றிணைந்துள்ளன. இப்போது குமாரதுங்க ஆர்ப்பாட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் தடை செய்யவும் மற்றும் ஊடகத் தணிக்கைகளை திணிக்கவும் அதிகாரங்களை கொண்டுள்ளார். இராணுவமும் பொலிசும், வீடுகளை சோதனையிடவும் விசாரணையின்றி சந்தேக நபர்களை கைது செய்யவும் மற்றும் தடுத்துவைக்கவும் அதிகாரங்களை கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் உண்மையான இலக்கு, கதிர்காமர் கொலையாளிகளோ அல்லது கொலைக்கு கட்டளையிட்டதாக இதுவரை ஆதாரங்கள் எதுவுமின்றி குற்றஞ் சாட்டப்பட்டுவருகின்ற விடுதலைப் புலிகளோ அல்ல. அதற்கும் மேலாக, எல்லா பிரதான கட்சிகள் பற்றிய மாயையிலிருந்து மேலும் மேலும் மீண்டு வருகின்ற மற்றும் குறிப்பாக டிசம்பர் 26 சுனாமியால் ஏற்படுத்தப்பட்ட அழிவின் பின்னர், வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்ற பிரதான கட்சிகள் தவறியமையையிட்டு அதிருப்தி கண்டுள்ள உழைக்கும் மக்கள் மீது பாய்ந்து விழுவதற்காக, பாதுகாப்பு படையினருக்கு அவசரகால அதிகாரங்களை வழங்குவதில் ஆளும் கும்பல்கள் தமக்குள்ளான வேறுபாடுகளை ஓரங்கட்டி வைத்துவிட்டன.

தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை மீதான ஆளும் வர்க்கத்தின் அதிருப்தியானது, லங்கா மந்த்லி டைஜஸ்ட் (Lanka Monthly Digest) சஞ்சிகையில், ஒரு முன்னணி வர்த்தகத் தலைவரான ரென்ஸி விஜேதிலக வெளியிட்ட கருத்துக்களில் வெளித்தோன்றியுள்ளது. "நாட்டின் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்தாகியுள்ளது" என பிரகடனம் செய்த அவர், சந்தை மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்கான அமைப்பாக மலேசியாவில் பயன்படுத்தப்பட்டுள்ள சர்வாதிகார வழிமுறையையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் விக்கிரமசிங்க, ஜனநாயகத்திற்கான ஒரு அறப்போராக இந்தாண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்துள்ளார். ஆகஸ்ட் 19 அன்று, ஹட்டனில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஐ.தே.க "ஜனநாயக உரிமைகளுக்காகவும் வெகுஜனங்களின் வாக்குரிமைக்காகவும் மற்றும் மக்களின் இறைமையைக் காப்பதற்காகவும்" போராடுவதாக பிரகடனம் செய்துள்ளார். பரந்த அதிருப்திக்கு அழைப்புவிடுத்த அவர், "ரொக்கட் வேகத்தில் அதிகரிக்கும் விலைவாசியானது மக்களின் வீடுகளுக்குள் யுத்தத்தை மூட்டிவிடுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க வின் பிரச்சாரம் ஜனநாய உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது வறுமையை தணிக்கவோ எதையும் செய்யப் போவதில்லை. ஐ.தே.க வின் தனியார்மயமாக்கல் பொருளாதார திட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் கட்டளையிடப்பட்ட பொதுச் செலவிலான வெட்டு ஆகியவற்றால் ஏற்பட்ட பரந்த அதிருப்தியின் காரணமாக விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது கடந்த வருடமேயாகும். அரசியல் எதரிகளின் ஜனநாயக உரிமைகள் மீதும் மற்றும் மிகவும் பரந்தளவில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதும் இரக்கமின்றி சவாரி செய்வதில் குமாரதுங்கவைப் போலவே ஐ.தே.க வின் முன்னைய ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாசவும் இரக்கமற்றவர்களாகும்.

சர்வதேச ஆதரவு குமாரதுங்கவிடமிருந்து வழுக்கிச் செல்வதற்கான ஒரு அறிகுறியாக, சர்வதேச ஜனநாயக பேரவை இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி கடந்த மாதம் சிறிது விளம்பரப்படுத்தப்பட்ட தீர்மானத்தை வாஷிங்டனில் எடுத்தது. இந்தப் பேரவை அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, பிரித்தானியாவில் பழமைவாதக் கட்சி மற்றும் அவுஸ்திரேலியாவில் தாராளவாதக் கட்சி உட்பட உலகம் பூராவும் 80க்கும் மேற்பட்ட வலதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கியதாகும். இந்தப் பேரவையின் மாநாட்டிற்குச் சென்றிருந்த விக்கிரமசிங்க, தெற்காசியாவிற்கான அதன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் வளர்ச்சி கண்டுவருகின்ற இந்த பிராந்தியத்தில், அரசியல் ஸ்திரநிலைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலமான தீர்வை அடையுமாறு புஷ் நிர்வாகம் தொடர்ந்தும் நெருக்கி வருகின்றது. அமெரிக்காவினதும் மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளதும் ஆதரவு தனக்கு கிடைப்பதாக விக்கிரமசிங்க உணர்ந்தால், உயர் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு பற்றி அக்கறை செலுத்தாமல் இந்தாண்டு தேர்தலை நடத்துவதற்கான பிரச்சாரத்துடன் அவர் முன் செல்லக் கூடும். நீதிமன்றத் தீர்ப்பானது நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக பெரும்பாலும் நிச்சயமாக அதை உக்கிரப்படுத்தவே செய்யும்.

Top of page