World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: LTTE Heroes Day speech reveals an organisation in crisis

இலங்கை: தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின உரையானது அவ்வமைப்பு நெருக்கடியில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது

By K. Ratnayake
1 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தும் "மாவீரர் தின உரை", ஒரு பிரதான கொள்கைப் பிரகடனமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 27ல் ஆற்றிய உரையானது, அந்த அமைப்பு போருக்குத் திரும்புவது மற்றும் தீர்வே தென்படாத "சமாதான முன்னெடுப்பு" ஆகிய இரண்டுக்கும் இடையே அகப்பட்டு, ஆழமான அரசியல் கொந்தளிப்பில் உள்ளதைக் காட்டுகிறது.

தமிழர்கள் மத்தியில் பெருகிவரும் விரோதப்போக்கையும், தங்கள் சொந்த அணிகளில் ஏற்பட்டுள்ள விரக்தியையும் நன்கு அறிந்துள்ள பிரபாகரன், சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்கப்படவில்லை என்றால் தற்போதைய தேக்க நிலை முடிவின்றி தொடரப்போவதில்லை என விசேடமாக புலிகளின் போராளிகளின் தியாகத்தை குறிக்கும் தினத்தன்று எச்சரிக்கை விடுக்கத் தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடரப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் இருண்டு காணப்படுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) மகிந்த இராஜபக்ஷ புதிய இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த உரை வந்துள்ளது. இரண்டு சிங்கள தீவிரவாத கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹலெ உறுமய (JHU) ஆகியக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இக்கட்சிகள் இரண்டும் புலிகளுக்கு தொடர்ச்சியான இறுதி நிபந்தனைகளை விடுக்குமாறு வலியுறுத்தியிருந்தன.

2002ல் கையெழுத்திடப்பட்ட தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தத்தை திருத்த இருப்பதாகவும், சுனாமி நிவாரணங்களை விநியோகிப்பதற்காக கடந்த ஆண்டு புலிகளுடன் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட பொதுக் கட்டமைப்பை கலைப்பதாகவும், "நெருக்கடியில் தொடர்புடைய அனைத்து கட்சியினருடனும்" சமாதானம் பற்றி கலந்துரையாட இருப்பதாகவும் இந்த வாரம் இராஜபக்ஷ அறிவித்துள்ளார். புலிகள் இந்த நடவடிக்கைகளுள் ஏதேனும் ஒன்றுக்கு அல்லது அனைத்திற்கும் உடன்பட்டாலும், அது முன்னர் ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டில் இருந்து ஒரு அவமானகரமான பின்னடைவுக்குள் சிக்கவைக்கும்.

தன்னுடைய உரையில் பிரபாகரன் எச்சரித்ததாவது: "பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இலலை. ஆகவே வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தை புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்." இது எமது "உறுதியான, இறுதியான, அவசர வேண்டுகோளாகும்" என பிரகடனம் செய்த அவர், இது நிராகரிக்கப்பட்டால், புலிகள் "அடுத்த ஆண்டு சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை, [தமிழ்] தாயகத்தில் சுய அரசாங்கத்தை நிறுவும் போராட்டத்தை தீவிரப்படுத்துவர்," என்றும் தெரிவித்தார்.

புலிகளின் விரக்தியானது ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்துடன் பெப்ரவரி 2002இல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்ட உண்மையில் இருந்தே வெளிப்படுகிறது. இதற்குப் பின் நடந்த பேச்சுவார்த்தைகளில், கொழும்புடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுவதற்கு பிரதியுபகாரமாக தனித் தமிழ் அரசுக்கான தன்னுடைய மையக் கோரிக்கையை அது கைவிட்டிருந்தது; அது சாராம்சத்தில் சிங்கள, தமிழ், முஸ்லீம் ஆளும் உயரடுக்குகளுக்கிடையே தொழிலாள வர்க்கத்தை தம் பரஸ்பர நலன்களுக்காக சுரண்டுவதற்கான பேரமாகும்.

ஆனால் சமாதான பேச்சுவார்த்தைகள் இலங்கை இராணுவப் படைகளின் தொடர்ந்த ஆத்தரமூட்டல் நடவடிக்கைகளை அடுத்து 2003 ஏப்ரலில் முறிந்து போயின. ஐ.தே.மு அரசாங்கமானது போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜே.வி.பி போன்று சிங்களத் தீவிரவாதிகள், இராணுவம் மற்றும் அரசு அதிகாரத்துவத்தின் சில பிரிவினரும் முன்னெடுத்த ஆக்கிரோஷமான பிரச்சாரத்தை எதிர்கொண்டது. பெப்ரவரி 2004ல் ஐ.தே.மு அரசாங்கம் "தேசியப் பாதுகாப்பை கீழறுக்கிறது" எனக்கூறி குமாரதுங்க தன்னிச்சையாக அரசாங்கத்தை கலைத்தார்.

பெரும் வல்லரசுகள் மற்றும் கொழும்பில் உள்ள பெருவணிகத் தட்டினரின் அழுத்தத்தின் கீழ், குமாரதுங்க தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு "சமாதான வழிவகைகளை" மீண்டும் ஆரம்பிப்பதற்கு முற்பட்டார். வடக்கிலும் கிழக்கிலும் நிவாரணங்களை விநியோகிப்பதற்காக ஜூன் மாதம் புலிகளுடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் அவர் கைச்சாத்திட்டார். இந்த ஒப்பந்தம் புதிய பேச்சு வார்த்தைகளை நோக்கிய ஒரு படியாக கருதப்பட்டது. ஆனால் ஜே.வி.பி இந்த உடன்பாட்டை "நாட்டைக் காட்டிக் கொடுக்கும்" செயல் என கண்டனம் செய்ததோடு ஆளும் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. இறுதியாக உயர் நீதிமன்றம், இந்த உடன்படிக்கையின் கீழுள்ள முக்கிய விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்புக்கூறி அது செயல்படுத்தப்படுவதை தடுத்துவிட்டது. அந்த முடிவானது பேச்சுவார்த்தைகளை தொடக்குவதற்கான "கடைசி நம்பிக்கையையும் கொன்றுவிட்டது" என்று பிரபாகரன் அறிவித்தார்.

சாதாரண தமிழ் மக்களிடையே, கொழும்பு அரசாங்கத்துடனும் இராணுவத்தினருடனும் மட்டுமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் அதிருப்தி வளர்ந்து கொண்டிருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், வாழ்க்கைத் தரத்தில் கணிசமாக முன்னேற்றங்கள் இருக்கவில்லை. நூறாயிரக்கணக்கான மக்கள் இன்னும் அகதி முகாம்களிலோ அல்லது உறவினர், நண்பர்களுடனோ வாழ்ந்து வருகின்றனர். இராணுவம், கிழக்கிலும் வடக்கிலும் உயர் பாதுகாப்பு வலையங்களை பராமரிப்பதை வலியுறுத்தி வருகிறது. இது ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகள், நிலம் மற்றும் வியாபார நிலையங்களுக்கு திரும்புவதை தடை செய்துள்ளது. இதற்கும் மேலாக புலிகளால் விதிக்கப்படும் வரிகள், மிகுந்த இரட்டை சுமையாக உள்ளன. இதைத் தவிர தமிழ் மக்களுடைய "ஏகப் பிரதிநிதிகள்" தாங்களே என்ற போலி உரிமை கோரலை தக்கவைத்துக் கொள்ளுவதற்காக புலிகள் பயன்படுத்தும் குண்டர் வழிமுறைகள் மேலும் சுமையை அதிகரித்துள்ளன.

"போராட்டத்தை தீவிரப்படுத்துதல்" என்ற அவருடைய வாய்ச்சவாடல் ஒருபுறம் இருக்க, பிரபாகரனுடைய உரை போருக்கு மீண்டும் திரும்புவதில் குறிப்பிடத்தக்க தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் உட்பட இலங்கை மக்களிடையே, எந்தப் பிரிவினருக்கும் போர் பற்றி உற்சாகம் இல்லை என்பதை அவர் நன்கு அறிவார். இராஜபக்ஷவின் ஆக்கிரோஷ நிலைப்பாடும், அவருடைய பேரினவாத கூட்டாளிகள் கொட்டும் போர்முரசும் ஒரு புறம் இருக்க, புதிய அரசாங்கம் "ஒரு நியாயமான அரசியல் வடிவமைப்பை தருகிறதா" என்று "சிறிது காலம் பொறுத்திருந்து பார்க்க" புலிகள் முடிவுசெய்துள்ளதுனர் என்று அறிவித்தார்.

ஒரு பயனற்ற அழைப்பு

பிரபாகரனுடைய மிதமான தொனி அவருடைய உரையின் மைய உந்துதலுடன் கட்டுண்டிருந்தது. இந்த மைய உந்துதல், புலிகளின் பிரச்சினைகளை "உணர்ந்துகொள்ளுமாறும்" மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க கொழும்புக்கு அழுத்தம் கொடுக்குமாறும் "சர்வதேச சமூகத்திற்கு" விடுக்கும் ஒரு அழைப்பாகும். புலிகளுக்கு "அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதற்கும்", "போராட்டத்தை சர்வதேசமயப்படுத்தி சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெறுவதற்கும்" சமாதானப் பேச்சுக்களில் பங்கு பெறவேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறினார்.

புலப்படுத்தும் வகையிலான குறிப்பு ஒன்றில், நாம் "தவிர்க்க முடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாக சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்ற நிர்ப்பந்திக்கப்பட்டோம். பிரதேச வல்லரசான இந்தியாவின் தலையீடு ஒரு கட்டத்திலும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் இன்னொரு கட்டத்திலுமாக சமாதான முயற்சிகளில் எம்மை ஈடுபடச் செய்தன" என்று பிரபாகரன் அறிவித்தார். இந்த "சூழ்நிலைகள்" அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு ஆகும். புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" பட்டியலின் இலக்குகளில் புலிகளும் உள்ளடக்கப்படுவதற்கான வாய்ப்புகளை எதிர்கொண்ட நிலையில் அவர்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை விரைவில் ஏற்று சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தனர்.

"சமாதான வழிவகைக்கு" ஆதரவளிக்கும் அதேவேளை, புலிகளின் "வன்முறையை கைவிட்டுவிட்டு", எந்தவித அரசியல் உடன்பாட்டையும் காண்பதற்கு முன்னர், ஆயுதங்களை களையும் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும் எனக் கோருவதில் வாஷிங்டன் வெளிப்படையாகவே இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக இருந்தது. "பயங்கரவாத அமைப்புக்கள்" பட்டியலில் இருந்து புலிகளின் பெயரை நீக்க மறுப்பதன் மூலம், மீண்டும் போர் தொடங்கினால் இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா உதவும் என்ற மெல்லிய அச்சுறுத்தலை பராமரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் உட்பட, வரிசையாக பல அமெரிக்க அதிகாரிகள் கொழும்பு வழியே பயணித்துள்ளனர்.

இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளை புஷ் நிர்வாகம் ஆதரவு கொடுப்பது 20 ஆண்டுகால யுத்தம் மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றிய எந்தவொரு அக்கறையினாலும் அல்ல. பல ஆண்டுகளாக போரை அலட்சியம் செய்துவந்துள்ள போதிலும், இந்திய துணைக் கண்டத்தில் வளர்ச்சிகண்டுவரும் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைக் கொண்டுள்ள அமெரிக்காவுக்கு, இப்பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருந்து வரும் யுத்தத்தை நிறுத்த வேண்டிய தேவை இருந்து கொண்டுள்ளது. இந்தியா, ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்ட அமெரிக்கா, புலிகள் எந்தவொரு இறுதி அரசியல் உடன்பாட்டிலும் ஒப்பீட்டளவில் ஒரு இரண்டாந்தர பாத்திரத்தையே எதிர்பார்க்க முடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

புலிகளின் பிரச்சினைகளை "புரிந்து கொள்வதற்கு" மாறாக "சர்வதேச சமூகம்" புலிகள் மீது ஒரே விதமான அழுத்தைத்தையே திணிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, புலிகளே அதற்குப் பொறுப்பு என்று கூறுவதற்கு உறுதியான சான்றுகள் இல்லாவிடினும் கூட, செப்டம்பர் மாதம் அதன் மீது பயணத் தடை ஒன்றை திணித்தது. நவம்பர் 17 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், உத்தியோகபூர்வமற்ற தேர்தல் பகிஷ்கரிப்பை அமுல்படுத்துவதில் "தெளிவான அச்சுறுத்தல் பிரச்சாரத்தில்" ஈடுபட்டதற்காக புலிகளை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது.

ஆயினும்கூட, பிரபாகரன் தன்னுடைய உரையில் அதே "சர்வதேச சமூகத்திற்கு" சற்று பரிதாபகரமான முறையில் அழைப்புவிடுக்கத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த தசாப்தத்தில் அல்லது அதற்கும் சற்று மேலான காலத்தில், மத்திய கிழக்கில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO), தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய கங்கிரஸ் (ANC) போன்ற "தேசிய விடுதலை இயக்கங்கள்", முதலாளித்துவ ஒழுங்கிற்குள் கிடைக்கும் ஒரு சிறு இடத்திற்கு பிரதியுபகாரமாக ஏகாதிபத்திய சக்திகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து போனது போலவே, புலிகளும் பழகிச் சலித்துப்போன அதே பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

புலிகளின் தலைவர்களால் காடுகளில் அணியப்படும் சீருடைகளில் இருந்து வணிகக் கனவான்களின் ஆடைகளுக்கு முற்றிலுமாக மாற்றமடைய முடியாமல் போனதற்குக் காரணம் அவர்களது முயற்சியின் குறைபாடு அல்ல. புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் என்டன் பாலசிங்கம், 2003ல் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, நாட்டை "வெற்றிகரமான புலிப் பொருளாதாரமாக மாற்றுவதில்" இலங்கை தலைவர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, "தமிழ் புலிகளை தங்களின் சம பங்காளிகளாக அரவணைப்பதன் மூலம் சிறிந்த முறையில் நிறைவேற்றப்பட முடியும்" என்று தெரிவித்தார். பிரபாகரன் தன்னுடைய அண்மைய பேச்சில், தேவைப்படுமாயின் புலிகளிடம் "வலுவான" நிர்வாக அமைப்பு, ஒரு சக்திவாய்ந்த இராணுவப் படை மற்றும் "சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க போலீஸ் படை மற்றும் நீதித்துறை அமைப்பும்" இருப்பதாக விளக்கியுள்ளார்.

பிரபாகரனுடைய நிலைப்பாட்டில், யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதிலிருந்து மூன்று வருட காலத்தில், தாம் வழங்கிய சலுகைகளுக்கு பிரதியுபகாரமாக ஒட்டுமொத்தத்தில் புலிகள் எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை. ஒரு மூலையில் தள்ளப்பட்டுள்ள நிலையில், புலிகள் போருக்குத் திரும்புவதற்கான முடிவைக்கூட எடுக்கலாம். கொழும்பில் இருக்கும் அரசியல் வாதிகள் சாதாரண மக்கள் எதிர்கொண்டுள்ள ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடியில் இருந்து கவனத்தை திசைதிருப்பவுதற்கு தமிழர் விரோத பேரினவாதத்தை தூண்டிவிடுவதைப் போலவே, புலிகளின் தலைமையும் தன்னுடைய சமூக அடித்தளத்தை தூக்கி நிறுத்தும் விரக்தியடைந்த முயற்சியில் சிங்கள-எதிர்ப்பு வகுப்புவாதத்தை அதிகரித்த அளவில் தூண்டிவருகிறனர்.

தொடர்ச்சியான கொழும்பு அரசாங்கங்களின் தமிழர் எதிர்ப்பு பாரபட்ச உணர்விற்கு சிறிதும் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள் அல்லாத சாதாரண உழைக்கும் மக்களுடன், சிங்கள ஆளும் உயரடுக்குகளை சமப்படுத்தி பலமுறையும் பிரபாகரன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுப் பேசினார். "சிங்கள தேசம் மகாவம்ச மனவுலகில் தொடர்ந்தும் மூழ்கிப்போயுள்ளது" என்றும் "வரலாற்றளவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய தேசத்தையும்" அவர்களின் "தாயகத்தையும்" அங்கீகரிக்க மறுக்கின்றது என்றும் அவர் அறிவித்தார்.

வகுப்புவாதத்திற்கு பிரபாகரன் சென்றுள்ளமை அரசியல் வங்குரோத்தை ஒப்புக்கொண்டது போலாகும். கொழும்பில் உள்ள அதன் சிங்கள எதிர்த்தரப்பினர் போலவே, கிழக்கிலும் வடக்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் எதிர் கொண்டுள்ள சமூகத் துயருக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஒரு புறம் இருக்க, தீவின் பேரழிவுகர போருக்கு ஒரு முற்போக்கான தீர்வைக் கொடுப்பதற்கு திறனற்று உள்ளது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆக்கிரோஷ நிலைப்பாட்டிற்கு இதன் ஒரே விடையிறுப்பு, பிற்போக்கு பேரினவாத வாய்வீச்சுக்களால் அரசியல் சூழ்நிலையை நஞ்சாக்குதல் மற்றும் குருதி சிந்தும் போருக்குத் திரும்பும் அச்சுறுத்தல் போன்றவையாகவே உள்ளன.

See Also :

இலங்கை தேர்தல்களுக்கு பின்னர்: தொழிலாள வர்க்கத்திற்கு அடுத்தது என்ன ?

அரசாங்கம் அமைப்பதில் இலங்கையின் புதிய ஜனாதிபதி நெருக்கடியை எதிர்கொள்கிறார்

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Top of page