World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

The death of China's "red capitalist" and the 1949 revolution

சீனாவின் "சிவப்பு முதலாளித்துவ வாதியின்" மரணமும் 1949 புரட்சியும்

By John Chan
29 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

மாவோ சேதுங் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தை ஆதரித்த, 1949-க்கு முந்தைய சீன முதலாளித்துவ செல்வந்த தட்டில் ஒரு முன்னணி உறுப்பினராக இருந்த ரோங் யிரன் (Rong Yiren) பெய்ஜிங்கில் தமது 89-வது வயதில் அக்டோபர் 26 அன்று காலமானார். "சிவப்பு முதலாளித்துவ வாதி" என்று நன்கு அறியப்பட்ட ரோங்கின் வாழக்கை ஸ்ராலினிச ஆட்சியோடும் சீன முதலாளித்துவ பகுதிகளோடும் எடுத்த எடுப்பிலிருந்தே நிலவிவந்த நெருக்கமான உறவுகளை சுருங்கக் கூறுகிறது.

சின்ஹூவா செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வமான இரங்கல் குறிப்பில், ரோங், "நவீன சீன தேசிய தொழிலதிபர்களில் ஒரு முன்னணி பிரதிநிதி, ஒரு தனிசிறப்பு வாய்ந்த தேசிய தலைவர், ஒரு போற்றத்தக்க தேச பக்தர் மற்றும் ஒரு கம்யூனிச போராளி" என்று பாராட்டியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு மூத்த தலைவர்களுக்கு கல்லறை மைதானமாக பயன்படுத்தப்பட்டுவரும் பெய்ஜிங்கிலுள்ள பாபவோ குன்றுப்பகுதியில் நடைபெற்றது. பிரதமர் வென் ஜியாபோ தலைமையில் டசின் கணக்கான முன்னணி சீனத்தலைவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அவர் காலமான நேரத்தில் ''கம்யூனிச போராளி'' என்றழைக்கப்பட்டவர், சீனாவின் மிகப் பெரும் பணக்கார தனிமனிதர்களில் ஒருவராக இருந்தார். 1979-ல் சந்தை சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ரோங் சீனப் புரட்சிக்கு முன்னர் தனது குடும்பம் வைத்திருந்த சொத்துக்களுக்கும் மிக அதிகமான அளவில் தனது தொடர்புகளை பயன்படுத்தி செல்வத்தை குவித்தார்.

1979-ல் சீனாவின் சர்வதேச அறக்கட்டளை மற்றும் முதலீட்டுக் கழக தலைவராக ரோங் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 முதல் 1998 வரை சீனாவின் ஒரு துணை ஜனாதிபதியாக பணியாற்றினார் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸில் செயலாற்றும் அதிகாரமுள்ள ஒரு பதவியை வகித்து வந்தார். 2000ல் அமெரிக்காவை தளமாகக்கொண்ட Forbes சஞ்சிகை அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிட்டிருந்தது.

ரோங் யிரன் 1916 ஆம் ஆண்டு கிழக்கு ஜியாங்சூ மாகாணத்தில் பிறந்தார் மற்றும் ஷங்காயிலுள்ள சென்ட் ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஒரு பணக்கார முதலாளித்துவ குடும்பத்தில் பிறந்த அவர் சலுகைமிக்க சிறப்போடும் சொகுசு மாளிகையிலும் வாழ்ந்தார். மற்றும் பிரிட்டன் தயாரிப்பான விளையாட்டு வீரர்களுக்கான காரையும் ஓட்டுவார்.

1949 புரட்சியின் போது ரோங் குடும்ப வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். அப்போது அது 80,000 ஊழியர்களுள், 20-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளையும் மாவு ஆலைகளையும் சொந்தமாக கொண்டிருந்தது. அவர் ஷங்காயிலுள்ள ஒரு வங்கியின் தலைவராகவும் பணியாற்றி வந்தார். இப்படிப்பட்ட பணக்கார ரோங் எப்படி மாவோயிச ஆட்சியை ஆதரிக்க வந்தார் என்பது அந்த ஆட்சி அடிப்படையாக கொண்டிருந்த ஸ்ராலினிச முன்னோக்குடன் பிணைந்திருக்கிறது.

எல்லா இதர காலனித்துவ நாடுகளையும் போல் சீனாவில் முதலாளித்துவம் வளர்ச்சியுற்றபோது அதே முரண்பாடுகளை எதிர்கொண்டது. சீன முதலாளித்துவம் ஒரு வரலாற்று ரீதியான முற்போக்கான பாத்திரத்தை வகிப்பதற்கு திராணி அற்றதாக இருந்தது. அது பொருளாதார ரீதியாக ஏகாதிபத்திய வல்லரசுகளை சார்ந்திருந்ததோடு, கிராமப் புறங்களில் அரை நிலபிரபுத்துவ நலன்களோடு பிணைந்திருந்தது மற்றும் மிகவேகமாக வளர்ந்து வந்த தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களால் கீழிருந்து தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வந்தது.

பேரரசுக்கு எதிரான 1911 புரட்சி, வரிசையான யுத்த பிரபுக்களின் வருடக்கணக்கான ஆட்சியை உருவாக்கியது மற்றும் 1925-1927-லிருந்து இரண்டாம் சீனப்புரட்சி நடைபெற்ற போது ஆழமான வர்க்க பதட்டங்கள் வெடித்தன. (KMT) சியாங்கே ஷேக்கின் கோமிண்டாங் கீழ் ஊழல் மிக்க சர்வாதிகாரம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து தொழிலாள வர்க்கம் நசுக்கப்பட்டது. ஜப்பானிய ஏகாதிபத்தியம் 1931-ல் மஞ்சூரியா மீது படையெடுத்தது மற்றும் அதற்குப் பின்னர் 1937-ல் நாடு முழுவதிலும் பேரழிவு கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், கோமிண்டாங் சர்வாதிகாரம் பொருளாதார மீட்சிக்கான அரசியல் நிலைமைகளை உருவாக்குவது என்பது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதையும் அதனால் ஒன்றுபடுத்தி வைத்திருக்க முடியாதிருந்தது. 1940 களின் கடைசியில் உருவான மிதமிஞ்சிய பணவீக்கம், அதிகாரபூர்வமான ஊழல் மற்றும் கடன் வழங்கும் முறையின் திவால் சீனாவின் தொழிற்துறைகளை ஆட்டம் காணச்செய்தது. கோமிண்டாங் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைக்கும் வல்லமை இல்லாததால் சீன முதலாளித்துவ பிரிவுகளை சேர்ந்த ரோங்கை போன்றவர்கள் மாஓ சேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் திரும்பினர்.

கிராமப்புற விவசாயிகளை அடிப்படையாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) நீண்ட காலத்திற்கு முன்னரே அதன் ஸ்தாபித கொள்கையான சோசலிச சர்வதேசியத்தை கைவிட்டது. அதற்குப் பதிலாக, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முன்னெடுக்கப்பட்ட "இரண்டு-கட்ட தத்துவத்தை" (two-stage theory) மாஓ பிடித்துக் கொண்டார். அது தான் 1927-ல் சீனத் தொழிலாள வர்க்கம் சந்தித்த துயரம் மிக்க தோல்விகளுக்கு நேரடியான பொறுப்பாகும். 1917 ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளை புறந்தள்ளிவிட்டு ஸ்ராலினிஸ்ட்டுகள் தொழிலாள வர்க்கம் ஆட்சியை கையில் எடுத்துக் கொள்ளும் எந்த சாத்தியக் கூறும் ஏற்படுவதற்கு முன் நீண்ட காலத்திற்கு முதலாளித்துவ வழியில்தான் சீனா செல்ல வேண்டும் என்று உறுதியாய் கூறினர்.

1945-ல் ஜப்பான் சரணடைந்த பின்னர் அதே முதலாளித்துவ-சார்பு முன்னோக்கை மாஓ முன்னெடுத்து வைத்து, கோமிண்டாங்குடன் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். ஓர் ''நான்கு வர்க்கங்களின் கூட்டு'' --- தேசிய முதலாளித்துவ வாதிகளின் ''முற்போக்கு'' தட்டினர் என்று அழைக்கப்படுபவர்கள், குட்டி முதலாளித்துவம், விவசாயிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கிடையில் ஒரு கூட்டணி என்ற ஒரு மந்திரத்தின் கீழ் இது வளர்த்தெடுக்கப்பட்டது.

புரட்சிகர ஆட்சிக்கவிழ்ப்பு

கோமிண்டாங் அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளவில்லை. உள்நாட்டுப் போர் உருவாயிற்று. அமெரிக்க ஆதரவு கோமிண்டாங்கை பலவீனப்படுத்தும் வகையில் சோவியத் யூனியன் தொழிற்துறையில் வளர்ந்துள்ள மஞ்சூரியாவின் மாகாணங்களை பிடித்துக் கொண்டது. மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான ஜப்பானிய ஆயுதங்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தது. மாவோவின் கொரில்லா படைகள் நகரங்களை பிடிப்பதற்கும் வல்லமையுள்ள போர்க்கள இராணுவங்களாக மாற்றப்பட்டன. 1949-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தீர்க்கமான இராணுவ வெற்றியை பெற்றது மற்றும் கோமிண்டாங் வீழ்ச்சியடைந்தது. ஷியாங்கே-சேக்கும் அவரது ஆட்சியோடு தொடர்பு கொண்டிருந்த முதலாளித்துவ செல்வந்தத்தட்டினரும் தாய்வான் தீவிற்கு தப்பி ஓடினர்.

என்றாலும் ரோங் யிரன் போன்ற சில முதலாளித்துவவாதிகள் KMT ஆட்சியின் போது நிலவிய குழப்பத்திற்கு பின் CCP ஆட்சிக்கு வந்ததை வரவேற்றனர். மாவோவின் விவசாய ''செம்'' படைகள் பெரிய நகரங்களில் நுழைந்தன. அவர்கள் தொழிலாள வர்க்கத்திடையே எந்த வகையான சுதந்திரமான அமைப்பு ஏற்பட்டாலும் அதற்கான சமிக்கைகளை ஒடுக்கினர். மற்றும் தனியார் சொத்தை பாதுகாத்தனர். ஷங்காயில் புதிய ஆட்சி நிதிகளையும் கச்சாப் பொருட்களையும் ஒப்பந்தங்களையும் ரோங்கின் வர்த்தகத்திற்கு வழங்கி, அதை சிதைந்து விடாது காப்பாற்றியது.

ரோங் பின்னர் நினைவுபடுத்திக் கூறுகையில் ''கம்யூனிஸ்ட்டுகளின்'' வெற்றி பற்றி தமக்கு நிலவிய சிறிய கவலைகளும் விரைவில் மறைந்து விட்டன என்றார். "கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்றுக் கொண்டு நான் ஒரு கையை மட்டுமே உயர்த்தினேன். நான் இரண்டுகைகளையும் உயர்த்தியிருந்தால் அது சரணாகதியாக ஆகியிருக்கும். நான் ஒரு கையை மட்டும் உயர்த்தியது தவறாகும். இப்போது நான் கட்சிக்கு ஆதரவாக இரண்டு கைகளையுமே உயர்த்துகிறேன்" என்று அவர் அறிவித்தார்.

ரோங் மட்டுமே அப்படி ஆதரவு தெரிவிக்கவில்லை. முன்னாள் கோமிண்டாங் ஆட்சியின் பிரிவுகள் புதிய அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டன. கோமிண்டாங் நிறுவனர் சன் யாட் சென்னின் விதவை சோங் குங்லிங், மாஓ 1949 அக்டோபரில் தியனென்மென் சதுக்கத்தில் சீன மக்கள் குடியரசு (PRC) அமைக்கப்பட்டதை அறிவித்தபோது, அவருடன் பக்கத்தில் நின்றார். ஷியாங்கின் சர்வாதிகாரத்தை எதிர்த்து வந்த ஒரு டசின் முதலாளித்துவ அரசியல் கட்சிகள் ''இடது KMT" என்றழைக்கப்பட்ட கட்சி உட்பட CCP-யின் அரவணைப்பை ஏற்றுக் கொண்டன. அவர்கள் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டை (CPPCC) அமைத்தனர். அது சீன மக்கள் குடியரசின் அரசியலமைப்பு நகலை உருவாக்கியது.

அதற்குப் பின்னர் தனியார் முதலீடுகளை பறிமுதல் செய்ததானது, சோசலிச கொள்கைகளை நோக்கி ஏற்பட்ட ஒரு திருப்பத்தை குறிக்கவில்லை. ஆட்சி ஒட்டு மொத்த பொருளாதார துறைகளையும் கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிராமப்புற நில உடைமை வர்க்கத்திற்கு சொந்தமான நிலத்தை எடுத்து நிலமில்லாதவர்களுக்கு விநியோகித்து கிராமப் புறங்களுக்கும் நகர்ப்புற முதலீடுகளுக்கும் இடையிலான தொடர்பை துண்டித்தது. இதற்கு முன்னர் நகர்ப்புற முதலாளிகள் நில குத்தகைகளையும் வட்டிகளையும் வாங்கி விவசாயிகளை சூறையாடி லாபம் அடைந்தனர். கோமிண்டாங் வீழ்ச்சியின் போது கணிசமான முதலீடு தாய்வானுக்கும் ஹாங்கொங்கிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ஓடி விட்டனர். அதே நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முற்றுகையினாலும் கொரியப் போர் வெடித்ததாலும் உலக முதலாளித்துவ சந்தையுடனான சீனாவின் தொடர்பு இடையூறுக்கு ஆளானது.

அதே நேரத்தில், பொருளாதார அமைப்பின் புது வடிவங்களுக்கு சோவியத் ஒன்றியத்துடனான பெய்ஜிங் கூட்டணி அவசியமானது. சோவியத் தொழில் நுட்பத்தையும் தொழிற்சாலைகளையும் சீனாவிற்குள் மாற்றுவதை ஒருங்கிணைப்பதற்காக அரசு திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. இந்த அபிவிருத்தி 1956-ல் தொழிற்துறை பொது தேசியமயமாக்கப்படலில் முடிந்தது அது ''சோசலிசத்திற்கான மாற்றம்'' என்று பாராட்டப்பட்டது. உண்மையாக அந்த திட்டத்தின் உள்ளடக்கம் சோசலிசம் அல்ல, மாறாக தேசிய சுயபூர்த்தியாகும். ஒரு பெரிய விவசாய நாட்டில் தொழிற்துறை அரச கட்டுப்பாட்டின் அடிப்படையில் கொண்டுவந்து தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஒடுக்குவதாக இருந்தது.

1956-ல் ரோங் தனது வர்த்தகத்தை அரசிடம் ஒப்படைத்தார். அவர் அவ்வாறு செய்ததற்காக, ''சிவப்பு முதலாளித்துவவாதி" என்று பாராட்டப்பட்டார். மற்றும் அவருக்கு 30 மில்லியன் யான்கள் அல்லது 12 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்கப்பட்டன----- அந்த நேரத்தில் அது கணிசமான தொகையாகும். 1966-ல் ''கலாச்சாரப் புரட்சி'' தொடங்கும் வரை அவர் ஆதாய பங்கீட்டு தொகைகளை பெற்று வந்தார். 1957-ல் அவர் ஷங்காய் துணைமேயராக நியமிக்கப்பட்டார். மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஆடைத்தொழில்துறை துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

CCP-ல் "முதலாளித்துவ சாலை அமைப்பவர்கள்'' என்று கூறப்பட்டவர்கள், முன்னணிக்கு வந்த நேரத்தில் ரோங்கிற்கு உயர்வு தரப்பட்டது. அப்படி வந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் டெங் சியாவோ பிங்கும் லியு ஷவோக்கியும் ஆவர். கிராமப்புறங்களில் ''சோசலிசத்தை'' உருவாக்கவேண்டும் என்ற பயனற்ற முயற்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாவோவின் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக பேரழிவுகளை உருவாக்கின. லியோவும் டெங்கும் ஸ்ராலினிச ''இரண்டு கட்ட'' தத்துவத்தை முன்னெடுத்து வைத்து சீனாவில் சோசலிசத்தை கொண்டு வருவதற்கான சடரீதியான அடிப்படை எதுவும் இல்லை என்பதை பொருளாதார நெருக்கடி எடுத்துக் காட்டுவதாக வாதிட்டனர். முதலாளித்துவ வளர்ச்சிக்காக பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் கூட கடந்து செல்லவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

1960-களின் கலாச்சார புரட்சி ---சாராம்சத்தில் மாவோவிற்கும் ''முதலாளித்துவ பாதை அமைப்பவர்களுக்கும்'' இடையில் நடைபெற்ற ஒரு கன்னைவாத போராட்டம்---- ரோங் தற்காலிகமாக ஓரங்கட்டப்பட்டதை கண்டது. 1966-ல் மாவோவின் செங்காவலர்கள் அவரது மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்து அவரது மனைவியை தாக்கினர். என்றாலும், பிரதமர் சூ என் லாய் மேலும் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்தார். அப்போது சூ "அவர் (ராங்) சீன தேசிய முதலாளிகளின் ஒரு பிரதிநிதி மற்றும் அவர் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் செல்வாக்குள்ளவர், அவரைப் பாதுகாத்து ஆக வேண்டும்'' என்று அறிவித்தார்.

சுதந்திரச் சந்தைக்கு திரும்பியது

லியு மற்றும் டெங் போன்ற பிரமுகர்கள் களையெடுக்கப்பட்ட பின்னரும் நாட்டின் பொருளாதார தேக்கநிலையை போக்குவதற்கு மாவோவிடம் எந்தப் பதிலும் இல்லாத நிலையில் சீன பொருளாதாரத்தை திறந்து விடுகின்ற சந்தை-சார்பு முன்னோக்கை பெரும்பாலும் மேற்கொண்டார். அவர் 1971-ல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒருபேரம் செய்து கொண்டார். அது சீனாவிற்குள் வெளிநாட்டு முதலீடு வருவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியதுடன் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுடன் பொருளாதார உறவுகளுக்கும் வழி திறந்துவிட்டது.

1976-ல் மாவோ இறந்த பின்னர் டெங் ஜியாவோ பிங் ஆட்சித்தலைவராக உயர்ந்து ஒரு சுதந்திர சந்தை செயல்திட்டத்தை வெளியிட்டார். சீன சர்வதேச அறக்கட்டளையையும் முதலீட்டுக் கழகத்தையும் (China International Trust and Investment Corporation - CITIC) ஸ்தாபிப்பதற்கு டெங்கால், ரோங் யிரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலீட்டுக் கழகம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை சீனாவிற்கு ஈர்க்கும் பணியை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் ஓர் அங்கமாகும்.

CITIC அதன் முதல் ஆண்டு நடவடிக்கைகளில் ரோங் 4000-திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வர்த்தகர்களை சந்தித்தார். 1971-ல் பெய்ஜிங்குடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹென்றி கிசிங்கரையும் கூட நிறுவனத்தின் பிரதான சர்வதேச ஆலோசகர்களில் ஒருவராக நியமித்தார்.

ரோங் முதலீட்டிற்கு வசதி செய்து தருவதற்காக, சுதந்திர வர்த்தக வலையங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தொழில்களை தொடங்குவதற்கும் உதவினார். சீன தேசிய மக்கள் காங்கிரஸிற்கு ஹாங்கொங்கிலிருந்து வந்த பிரதிநிதியான பிலிப் வோங்க், சீன டெய்லியில் அக்டோபர் 28-ல் ''அவரது [ரோங்] ஆற்றலும் CITIC-யை ஏற்படுத்திய தொலை நேக்கும் இல்லாதிருந்தால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வளவு வேகமாக நடைபெற்றிருந்திருக்க முடியாது" எனக் குறிப்பிட்டார்.

1992-ல் ரோங்கின் CITIC யானது கப்பல் போக்குவரத்து மின்சார உற்பத்தி மற்றும் கட்டுமானம் ஆகிய பணிகளில் ஈடுபட்டு, ஒரு வர்த்தக சாம்ராஜியமாக வளர்ந்தது. இன்றைய தினம் CITIC உலகம் முழுவதிலும் 200 தொழிற்சாலைகள் வைத்திருக்கிறது. மற்றும் 6.3 பில்லியன் டாலர்கள் சொத்துக்களை கொண்டுள்ளது. CITIC வளர்கின்ற நேரத்தில் ரோங்கின் தனிப்பட்ட வர்த்தகங்களும் வளர்ந்தன. 1979-ல் அவர் அவரது மகன் லாரி ரோங்கை தனது முதலீடுகளை நிர்வாகம் செய்வதற்காக ஹோங்கொங் அனுப்பினார். 1.64 பில்லியன் டாலர்கள் செல்வத்தை உடைய சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் என லாரி ராங் Forbes சஞ்சிகையால் 2005-ல் குறிப்பிடப்பட்டார்.

1989 மே-ஜுனில் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்கள் ஒடுக்கப்பட்ட பின்னர், சீனப் பொருளாதாரத்தை மேலும் திறந்து விடுவதில் மூத்த ரோங் ஒரு முக்கிய பங்கை வகித்தார். ''சோசலிச அமைப்பை'' காப்பாற்றுவதற்காக, அது அவசியமானது என்று தியனென்மென் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை படுகொலை செய்ததை டெங் சியாவோ பிங் நியாயப்படுத்தினார். உண்மையில் அது ஆட்சியின் சுதந்திரச் சந்தை கொள்கையின் தாக்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டது.

''சந்தை சீர்திருத்தத்தை'' முடுக்கிவிடுவதில் பெய்ஜிங்கின் உறுதிக்கு ஒரு அடையாளச் சின்னமாக, 1993-ல் ரோங் சீனாவின் துணை ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டார். பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் ரோங் பற்றிய மரணக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதை போல், "அந்த பதவி முக்கியமாக, அலங்கார பதவிதான். ஆனால் அது ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட்டது: சீனாவின் கம்யூனிச அரசியலும் சந்தைப் பொருளாதார புதிய கலப்படமும் இங்கு நீடித்திருக்கும் என்பதைத்தான் அந்த 'சிகப்பு முதலாளித்துவவாதி' வழியைக் காட்டினார்''. அதே ஆண்டு சீனாவில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடு 111 பில்லியன் டாலர்கள் அளவிற்கு பெற்றது. இது 1979 முதல் 1989 வரையிலான 10 ஆண்டு காலம் முழுவதிலும் முதலீடு செய்யப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

இந்த பாரியளவு வெளிநாட்டு முதலீடுகளின் வேகத்தின் விளைவு மிக வேகமாக சீன முதலாளித்துவ வர்க்கம் வளர்வதில் முடிந்திருக்கிறது. ரோங் போன்ற பழைய முதலாளித்துவ குடும்பங்களுடன் தாய்வானிலிருந்தும் ஹாங்கொங்கிலிருந்தும் திரும்பிவிந்த முதலாளித்துவவாதிகள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக வரிசைகளில் தங்களை ஒரு கணிசமான பிரிவாக பெரு நிறுவன வர்த்தகர்கள் என்று நிலைநாட்டிக் கொண்டனர். செப்டம்பரில் பிரெஞ்சு வங்கியான கிரெடிட் அக்ரிகோல் (Credit Agricole) வெளியிட்ட ஒரு அறிக்கையில், ''சீன முதலாளித்துவம்'' சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகையை தனியாருக்கு சொந்தமான கம்பெனிகள் உருவாக்கி வருகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது. சம்பிரதாயத்திற்காக ''அரசிற்கு சொந்தமானது'' அல்லது ''கூட்டுப்பண்ணை'' அடிப்படையிலானது என பதிவு செய்யப்பட்ட மிகப்பெரும்பாலான நிறுவனங்கள் உண்மையில் தனியார் நடத்துபவை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இன்றைய தினம் மாவோ வின் சீனா உலக முதலாளித்துவ ஒழுங்கின் முக்கிய முண்டு கொடுப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. உலக உற்பத்தியில் பெரும் பகுதி சீனத் தொழிலாளர் வர்க்கத்தை கொடூரமாக சுரண்டுவதை சார்ந்திருக்கிறது. இந்த ஆண்டு முதல் 10 மாதங்களில் சீனாவின் வெளி வர்த்தகம் 1.148 டிரில்லியன் டாலர்களை தொட்டுவிட்டது. மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவின் கருவூல கடன் பத்திரங்களை வாங்கிக் குவிக்கின்ற இரண்டாவது பெரிய நாடு சீனாவாகும். அது அமெரிக்காவின் பெரும் பற்றாக்குறைக்கு நிதி உதவுகிறது. எண்ணெய் மற்றும் கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்கின்ற முதன்மை நாடுகள் வரிசையில் சீனாவும் ஒன்று. அதன் மூலம் ஆஸ்திரேலியா போன்ற பல முதலாளித்துவ பொருளாதாரங்களுக்கு அது முட்டுக்கொடுத்து வருகிறது.

சீனா, ஒரு கம்யூனிச நாடல்ல என்பது பல மக்களுக்கு இன்றைய தினம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், முக்கிய பதவிகளை வகித்த மற்றும் ''கம்யூனிச'' சீனாவில் பாரிய அளவிற்கு செல்வத்தை குவித்த முதலாளித்துவவாதி ரோங்கினுடைய வாழ்வு -- சோசலிஸ்ட் ஆக இருப்பதாக பெய்ஜிங் ஆட்சி கூறிவருகின்ற கூற்றுக்கள் ஆரம்பத்திலிருந்தே மோசடியானது என்று விளக்கிக் காட்டுகிறது.

Top of page