World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India in quandary over US-Iran conflict

அமெரிக்க - ஈரான் மோதல் மீதான குழப்ப நிலையில் இந்தியா

By Vilani Peiris and Keith Jones
30 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 24-ல் வியன்னாவில் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) நிர்வாக ஆளுநர்கள் கூடியபொழுது, சென்ற வார தொடக்கத்தில் இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அணு ஆயுத பரவல்தடை ஒப்பந்தத்தின் கடமைகளை ஈரான் நிறைவேற்றத் தவறிவிட்டது எனக்குறிப்பிடும் குற்றச்சாட்டுக்களை எதிர்ப்பதாக தெரிவித்தது.

ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான இடது முன்னணி, அரசாங்கத்தின் முடிவை உடனடியாக பாராட்டியது, அது, ஈரானுக்கு எதிரான பிரச்சினை வாக்கெடுப்புக்கு வருமானால், செப்டம்பர் 24-ல் IAEA கூட்டத்தில் அது செய்ததைப்போல் EU-3 (பிரிட்டன், ஜேர்மனி மற்றும் பிரான்சு) மற்றும் அமெரிக்காவோடு சேர்ந்து இந்தியா வாக்களிக்கும் என்று UPA அரசாங்கம் முடிவு செய்திருந்தது என்று நன்கு தொடர்பு கொண்டிருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளடங்கலான பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளுக்கு முரணாக அமைந்திருக்கிறது.

"ஈரான் அணுக்கரு ஆற்றல் சார்ந்த பிரச்சனையை ஐ.நா வின் முடிவிற்கு விட வேண்டும் என்பதை தவிர்ப்பதற்கு இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டிருப்பது பற்றி அரசாங்கம் எங்களுக்கு விளக்கம் தந்திருக்கிறது" என்று இந்திய மாக்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சுரி நவம்பர் 21-ல் UPA- இடதுசாரி அணி ஒருங்கிணைப்புக் கூட்ட முடிவில் நிருபர்களிடம் தெரிவித்தார். "அத்தகையதொரு நிலையைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முறையில் நாங்கள் மன நிறைவு அடைந்திருக்கிறோம்."

என்றாலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வல்லரசுகள் அணுவாயுத பரவல்தடை ஒப்பந்தத்தை (NPT) ஈரான் மீறியதாக கூறப்படுவதை உடனடியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அனுப்ப வேண்டுமென்று வலியுறுத்தப்போவதில்லை என ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக விரைவில் தகவல் வெளியானது.

இந்தவெளிச்சத்தில் பார்க்கும் போது, நவம்பர் 24 IAEA கூட்டத்தில் சிபாரிசை எதிர்ப்பதாக UPA வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஈரான் தொடர்பாக அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அது பணிந்துவிட்டது என்ற விமர்சனங்களிலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்கான ஒரு வெளிப்படையான சூழ்ச்சியாகும். அந்த நாட்டை இந்தியா அண்மை ஆண்டுகளில் தனது இராணுவ தளவாடங்களுக்கு ஒரு சந்தையாகவும் மற்றும் மிக முக்கியமாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு ஒரு கணிசமான பெரிய வளமாகவும் கருதி ஊடாடுவதில் கணிசமான அளவிற்கு தனது ஆற்றலை செலவிட்டு வந்திருக்கிறது.

ஈரான் பிரச்சனையை பாதுகாப்பு சபையின் முடிவிற்கு உடனடியாக விடவேண்டும் என்பதை வலியுறுத்தப்போவதில்லை என்று தாங்கள் முடிவு செய்தததாக அமெரிக்காவும் EU-3வும் கூறின ஏனெனில் ரஷ்யாவின் முன்மொழிவு ஒன்றின் மீது மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அந்த நாடுகள் அவகாசம் கொடுக்க விரும்புகின்றன, அது ஈரான் வழங்கும் யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு வாயுவை ரஷ்யாவிலுள்ள நிலையங்களில் ரஷ்யா செறிவூட்டி அதற்குப்பின்னர் ஈரானுக்கு திருப்பித்தர வேண்டும் என்பதாகும் (இது ஒரு சமரசம் என்று கூறப்பட்டாலும் இந்த முன்மொழிவு ஈரானை ஒரு தரம்குறைந்த வல்லரசு என்ற தனித்தன்மை கொண்ட ஒரு பிரிவில் சேர்க்கும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்( NPT-ல்) கையெழுத்திட்ட மற்ற எல்லா நாடுகளுக்கும் சிவிலியன் அணுசக்தி திட்டத்தை மேற்கொள்வதற்கான எல்லா அம்சங்களிலும் வழங்கப்பட்டுள்ள உரிமை ஈரானுக்கு மறுக்கப்படும்).

அமெரிக்கா- ஐரோப்பிய ஒன்றியம் சென்ற வாரக் கூட்டத்தில் தங்கள் நிலையிலிருந்து கீழே இறங்கிவந்ததற்கான உண்மையான காரணங்கள் சிக்கலானவை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வல்லரசுகள் ரஷ்யா மற்றும் சீனாவின் முழு ஒத்துழைப்பை பெற முடியுமென்று இன்னும் நம்புகின்றன இரண்டு நாடுகளுமே ஈரானுடன் முக்கியமான பொருளாதார உறவுகளை கொண்டிருக்கின்றன ஈராக்கில் ஒரு இராணுவ மற்றும் அரசியல் புதைசேற்றில் தொடர்ந்து ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா அந்த நாட்டை அமைதிப்படுத்துவதில் தெஹ்ரானின் உதவியை பெறக்கூடிய சாத்தியக்கூறை ஆராய விரும்புகிறது. IAEA கூட்டம் முடிந்த சில நாட்களுக்கு பின்னரே ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதர் சல்மே கலீல்ஷாத் நியூஸ் வீக்கிற்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதி புஷ் 2003ஆம் ஆண்டு இளவேனிற்காலத்திற்கு பின்னர் நேரடியாக ஈரானுடன் அமெரிக்கா முதலாவது தடவை பேச்சு நடத்துவதற்கு தமக்கு அதிகாரம் அளித்திருப்பதாக கூறினார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படையெடுப்பதற்குரிய அரசியல் மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகளை உருவாக்குவதில் ஒரு கணிசமான பங்கை வகித்த கலீல் ஷாத், "ஆப்கானிஸ்தானில் நேரடியாக நான் ஒப்பந்தம் செய்துகொண்டதுபோல் ஈரானியர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஜனாதிபதி எனக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறார்" என்றார்.

மேற்கு ஏகாதிபத்திய வல்லரசுகள் அணுக்கரு ஆற்றல் பிரச்சனையை பயன்படுத்தி தெஹ்ரானை மிரட்டுவதற்கும் இராஜதந்திரரீதியாக தனிமைப்படுத்தவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் போரை தொடங்குவதாகக் கூட அச்சுறுத்தவும் இன்னும் நோக்கங்கொண்டுள்ளன. IAEA-வில் இடம் பெற்றுள்ள பிரிட்டனின் தூதர் பீட்டர் ஜென்கின்ஸ், குறிப்பாக ஆத்திரமூட்டும் வகையில், நவம்பர் 24 கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பில் ஈரானிடம் ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றின் ஒரே நோக்கம் அணுஆயுதங்கள் திட்டத்திற்கு உதவுவதாகத்தான் இருக்கமுடியும் என்றும் கூறினார். அடுத்த IAEA கூட்டம் ஈரான் பிரச்சனை குறித்து பேரம் பேச மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதற்கு முன்பு ஒரு அவசரக்கூட்டத்தை நடத்துவதற்கான உரிமையை பிரிட்டன் வைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அமெரிக்க தூதர் கிரிகோரி ஸ்கல்ட் மட்டுமே கொஞ்சம் அதிகமாக கட்டுப்படுத்திக் கொண்டார். "(பாதுகாப்பு) சபைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் என்பதை ஈரான் புரிந்து கொள்ளவேண்டும் மற்றும் நிர்வாகக் குழு விரும்புகின்ற நேரத்தில் அது தாக்கல் செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

ஈரான் இந்தியா-அமெரிக்கா அணுக்கரு ஆற்றல் பேரம்

இந்து தந்துள்ள தகவலின்படி, மிக அண்மையில் நடைபெற்ற IAEA கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் - அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையே ஒரு நேரடியான மோதல் தவிர்க்கப்பட்டதில் இந்திய அதிகாரிகள் "மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தனர்"

சந்தேகத்திற்கு இடமின்றி இது ஒரு உண்மைதான். குளிர்யுத்த காலத்தில் இந்தியாவின் பாரம்பரிய முதல் எதிரியான பாக்கிஸ்தானுடன் உறுதியாக கூட்டு சேர்ந்திருந்த மற்றும் திரும்பத்திரும்ப இந்தியாவை மிரட்டி அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுக்கு பாடுபட வைக்க முயன்ற அமெரிக்காவுடன் இராணுவ உறவுகளையும் புவிசார் அரசியல் உறவுகளையும் இந்தியா நீட்டிப்பது தொடர்பாக, இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வந்தத்தட்டினருக்குள்ளே வெடித்துச் சிதறியுள்ள ஒரு பெரிய மோதலில் ஒரு முக்கியமான அம்சம் ஈரானுக்கும் அமெரிக்க - ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மோதல் தொடர்பான இந்தியாவின் அணுகு முறையாகும்.

குறிப்பாக புஷ் நிர்வாகம் இந்தியாவை ஒரு உலக வல்லரசாக மாற்றுவதற்கு உதவ முன்வந்திருப்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதில் கருத்துவேறுபாடு நிலவுகிறது----அந்த உதவி கணக்கிட்டிருப்பது இந்தியாவை ஆசியாவில் சீனாவிற்கு எதிரான ஒரு மூலோபாய எதிர் எடையாக பயன்படுத்தக்கூடிய வாஷிங்டனின் கணக்கீட்டால் தெளிவாக செயற்தூண்டல் அளிக்கப்பட்டதாகும்.

இந்திய - அமெரிக்க உறவின் நீட்டிப்புத் தொடர்பான சர்ச்சையின் பெரும்பகுதி உலக அணு ஆயுத நெறிமுறை ஆட்சிக்குள்ளே எந்தளவிற்கு அமெரிக்கா இந்தியாவிற்கு ஒரு சிறப்பு, உண்மையில் தனித்தன்மை கொண்ட, அந்தஸ்தை தர முன்வந்திருக்கிறது என்பதில் குவிமையப்படுத்தி இருக்கிறது.

இந்த ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜுலை மாதம் மேற்கொண்ட அமெரிக்க விஜயத்தின் போது ஒப்புதலளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை UPA அரசாங்கம் ஒரு பெரிய அதிரடி மாற்றம் என்று கருதுகிறது ஏனென்றால் அது இந்தியாவை ஐந்து பெரும் அணு ஆயுத அரசு உறுப்பினர்களுடன் மெய்நடப்பில் இணைத்துக் கொள்கின்ற வகையில் அமைத்திருக்கிறது, அமெரிக்கா மற்றும் இதர NPT-ல் கையெழுத்திட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சிவிலியன் அணுக்கரு ஆற்றல் தொழில் நுட்பத்தை இந்தியா பெறுவதற்கு வகை செய்கிறது.

என்றாலும், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை மீதாக தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்ற வழியைப் பெறுகின்ற வகையில் சிக்கலான இராணுவ மற்றும் தொழில் நுட்ப ஒப்பந்தங்களில் இந்தியாவை பொறியில் சிக்கவைக்க அமெரிக்கா முயன்று வருகிறது என்று ஏனையோர் எச்சரித்துள்ளனர். இந்தியாவின் செல்வந்தத்தட்டினரில் இந்தக் கன்னைகளுக்கு தெளிவாகப் பேசும் பேச்சாளரான இடது முன்னணி, இந்தியா அமெரிக்க முதலீடு மற்றும் வர்த்தகத்தில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் ஆனால் இதர வகைகளில் இந்தியாவின் பாரம்பரிய ''அணிசேராக் கொள்கையை'' பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். இந்தக் கன்னை வாதிடுவது என்னவென்றால், இந்தியா அமெரிக்காவிலிருந்து தன்னை தள்ளி வைத்துக் கொண்டால், இந்தியா தனது சொந்த ''தேசிய நலன்களை'' அதாவது அதன் சூறையாடும் பெரிய வல்லரசு அபிலாசைகளை சிறப்பாக பின்பற்ற முடியும் என்பதாகும்.

செப்டம்பர் 24 IAEA கூட்டத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது இந்தக் கன்னையின் படுமோசமான அச்சங்களை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் வரலாற்று அடிப்படையிலான இராஜதந்திர/புவிசார்அரசியல் பாவனையிலிருந்து பெருமளவில் முறித்துக்கொள்கின்ற வகையில் UPA அரசாங்கம் அமெரிக்கா மற்றும் EU-3-க்கு ஆதரவாக வாக்களித்தது, அதே நேரத்தில் ரஷ்யாவும் சீனாவும் அணிசேரா இயக்கத்தின் முன்னணிநாடுகளும் அந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்த தீர்மானம் NPT உடன்படிக்கைகளுடன் ஈரான் ''ஒத்துழைக்கவில்லை'' என்று குற்றம் சாட்டியதுடன் தண்டனை வழங்கும் நடவடிக்கை எடுப்பதற்காக அந்தப் பிரச்சனையை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்புவதாக அச்சுறுத்தியது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல் இந்தியா அமெரிக்காவுடன் சேர்ந்து வாக்களித்தது என்றாலும், வாஷிங்டனுக்கு துதிபாடுவதில் இழிபுகழ் படைத்த பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை அரசாங்கங்கள் அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த வாக்கெடுப்பு நடப்பதற்கு முன், இந்தியா ஒரு வல்லரசாக ஆவதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறத் தகுதியுள்ள நாடுதானா என்பதை முடிவு செய்யும் சோதனையாக IAEA வாக்கெடுப்பு அமையும் என்று முன்னணி அமெரிக்க அரசியல்வாதிகள் தெளிவுபடுத்தினர். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் சென்ற ஜுலை மாதம் உருவாக்கப்பட்ட அணுக்கரு ஆற்றல் பேரத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்து கிடைப்பது, ஈரானுக்கு எதிராக வாஷிங்டனின் கட்டளைப்படி இந்தியா நடப்பதைப் பொறுத்தே அமைந்திருக்கிறது.

IAEA வாக்கெடுப்பு தொடர்பாக அமெரிக்காவின் அழுத்தங்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று UPA அரசாங்கம் அது சம்மந்தமாக வெளிவந்த செய்திகளுக்கு ஆவேசமாக மறுப்பு தெரிவித்தது. "சர்வதேச அரங்குகளில் எங்களது நிலைப்பாடுகள் எங்களது சுதந்திரமான மதிப்பீடுகளின் அடிப்படையில் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன, அது எங்களது கொள்கை அறிவிப்புக்களோடு ஒட்டி வருபவை மற்றும் எங்களது பெரிய தேசிய நலனை ஆதாரமாக கொண்டவை" என்று ஐ.நா விலுள்ள இந்தியத் தூதர் ரோனென் சென் குறிப்பிட்டார்.

ஆனால் அரசாங்கத்தின் கூற்றுக்கள் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் புஷ் நிர்வாக அதிகாரிகளால் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகளால் திரும்பத்திரும்ப சீர்குலைப்பதாக அமைந்திருக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதர் டேவிட் சி. மல்போர்ட், முன்னாள் வெளியுறவு அமைச்சராக ஆகவிருந்த நட்வர்சிங்கை சந்தித்து தமது எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது நட்வர்சிங் வரவிருக்கின்ற IAEA கூட்டத்தில் ஈரான் பிரச்சனையை பாதுகாப்பு சபைக்கு விட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறப்போவதாக குறிப்பிட்டார். வரும் கூட்டத்தில் "இந்தியா செப்டம்பர் 24 கூட்டத்தில் தனது தேசிய நலன் மதிப்பீட்டை வெளிப்படுத்தியது. நாங்கள் "இந்தியா தனது தேசிய நலனை மதிப்பீடு செய்து அதன்படி வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என மல்போர்ட் கூறினார்.

இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் பெரும்பாலும் செப்டம்பர் 24 கூட்டத்தில் இந்தியா வாக்களித்ததை ஆதரித்தன. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ''முதிர்ச்சியின் அடையாளம்'' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள தலையங்கமாகும். "சனிக்கிழமையன்று சர்வதேச அணுசக்தி அமைப்பு கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது என்று முடிவு செய்ததிலும் மற்றும் ஈரான் அணுக்கரு ஆற்றல் கடமைப்பாடுகளை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிலும் அரசாங்கம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள புதிய முதிர்ச்சியை சமிக்ஞை காட்டியுள்ளது. ஒரேயடியாக இந்திய உலகிற்கு தெரிவித்தது என்னவென்றால் பூகோளப் பிரச்சனைகளை முடிவு செய்வதில் அது தனது சொந்த நலன்களை பின்பற்றி நடக்கும் என்பதுதான். சர்வதேச விவாதத்தில் அணு ஆயுதங்கள் பரவக் கூடாது என்று வெறுமனே கண்டனம் மட்டும் தெரிவிக்கும் நாடல்ல, அது பொறுப்பான ஒரு அணு சக்தி நாடு என்று கூறிக்கொள்கையில் அதை உள்ளார்ந்த பொருளுடன் செயல்படுத்திவருகிறது என்று கூறுகிறது. பன்முக நாடு அணியில், இந்தியாவின் வாக்கை தற்பொழுது முயன்றுபெற முடியும். மூன்றாவது உலக நாடுகள் ''குழு சிந்தனை'' அடிப்படையில் தானாகவே இந்தியாவின் முடிவு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லாம் நன்மைக்கே" என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா தனது அணுக்கரு ஆற்றல் உதவித் திட்டங்களில் மேலும் கோரிக்கைகளை வைத்திருப்பதால், IAEA-ல் இந்தியாவின் நிலைப்பாட்டை அப்பட்டமாக எதிர்க்கின்ற அல்லது ஆட்சேபிக்கின்ற குரல்கள் மற்றும் அமெரிக்க இந்திய அணுக்கரு ஆற்றல் பேரத்தை எதிர்ப்பவர்கள் அண்மைய வாரங்களில் எண்ணிக்கையிலும் விழிப்புணர்விலும் அதிகரித்திருக்கின்றனர். இவற்றில் இந்தியாவிற்கு சிவிலியன் அணுக்கரு ஆற்றல் தொழில் நுட்பத்தை மாற்றுவதற்கு தேவைப்படும் மாற்றங்களை அமெரிக்க நாடாளுமன்றம் சட்டமாக இயற்றுவதற்கு முன்னர், புதுடெல்லி தனது பெரும்பகுதி சிவிலியன் அணுக்கரு ஆற்றல் திட்டங்களை சர்வதேச கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்பது உள்ளடங்கும்.

இந்து தந்துள்ள தகவலின்படி, பிரபல இந்திய மூலோபாய வல்லுநர் மார்டின் சுபேரி அண்மையில் தயாரித்த ஒரு அறிக்கையில், அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட சிவிலியன் அணுக்கரு ஆற்றல் பேரம் காலாவதியாகிவிட இந்தியா அனுமதிக்க வேண்டும், ஏனெனில் இப்போது ''வாஷிங்டன் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதற்கு முயன்றுவருகிறது'' என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியான இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) அகில இந்திய அளவில் செயல்பட்டுவருகின்ற பல்வேறு அரசியல் கட்சிகளிலும் பாரம்பரியமாக மிக அதிகமாக அமெரிக்க ஆதரவு போக்கை மேற்கொண்டுள்ள கட்சியாகும். ஆனால் தேர்தல் அணுகூல கணிப்பின் ஒரு பாகமாக அது வாஷிங்டனுக்கு அரசாங்கம் விட்டுக் கொடுக்கும் போக்கில் நடந்து கொள்கிறது என்று விமர்சிப்பதில் சேர்ந்துகொண்டிருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அரசாங்கம் என்னசெய்கிறது என்று பார்க்கப்போவதாக குறிப்பிட்டு, சென்ற வாரம் நடைபெற்ற IAEA கூட்டத்திற்கு முன் அக்கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்துவிட்டது.

UPA அரசாங்கம், BJP தலைமையிலான கூட்டணி அரசாங்கம் எப்படி வலிந்து நவீன தாராளவாத சீர்திருத்ததங்களை முன்னெடுத்துச் சென்றதோ அதே அடிப்படையில் புவிசார் அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை வழியை முந்திய அரசாங்கத்தை போல் பின்பற்றி வருகிறது--இந்தியாவின் இராணுவச் செலவினங்களை பாரிய அளவிற்கு உயர்த்தியுள்ளது மற்றும் அமெரிக்காவுடன் மிக அதி நெருக்ககமான உறவுகளை பின்பற்றி வருகிறது, அதே நேரத்தில் ரஷ்யாவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சீனாவுடனும் மூலோபாய பங்குதாரர் முறையை நிலைநாட்டவும் வளர்க்கவும் முயன்று வருகிறது.

UPA-வும் இந்திய அரசின் புவிசார் அரசியல் மூலோபாய வல்லுநர்களும் மிகத் தெளிவாக அறிந்திருப்பது என்னவென்றால் வாஷிங்டன் இந்தியாவின் நட்புறவை விரும்புவதற்கு காரணம் ஜப்பானுடன் சீனாவை கட்டுப்படுத்தும் தனது மூலோபாயத்தில் அச்சாணியாக இந்தியா செயல்படும் என்பதால்தான். ஆனால் இந்தியாவின் நடப்பு ஆட்சி சூதாட்டத்தில் இறங்கியிருக்கிறது. ''உலக புவி-அரசியல் ஒழுங்கில் முக்கிய ஊசலாடும் அரசு'' என்று CIA கூறியிருப்பதற்கு ஏற்ப தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள விரும்பி வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு கணிசமான புவிசார் அரசியல் அணுகூலங்களை வென்றெடுக்க முடியும், அதே நேரத்தில் ஆபத்தான சிக்கல்களில் சிக்குவதை தவிர்த்துவிட முடியும் என்று இந்தியா கருதுகிறது.

ஈரானின் அணுக்கரு ஆற்றல் திட்டம் தொடர்பாக தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலின் விளைவு எதுவாக இருந்தாலும், பல வியப்பூட்டல்கள் இன்னும் இருக்கையில் - அதில் அடங்கியிருக்கின்ற ஜுலை மாதத்திலிருந்து நடைபெற்ற சம்பவங்கள் இது படுமோசமான ஆபத்துக்கள் நிறைந்த விளையாட்டு என்பதைக் காட்டியிருக்கின்றன.

இந்தியா ஒரு உலக வல்லரசாக ஆவதில் வாஷிங்டன் உதவ முன்வந்திருப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் பெருகிவரும் போர் வெறிப்போக்கிற்கும் நெருக்கடிகள் நிறைந்த நிலைக்கும் ஆதரவு தரும் ஒரு இளைய பங்குதாரர் பாத்திரத்தை புதுடெல்லி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஆகும்.

Top of page