World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military fires on Jaffna university protest

இலங்கை இராணுவம் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

By our Jaffna correspondents
21 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை பாதுகாப்பு படைகள், இந்தவாரம் தொடர்ந்து இரண்டு நாட்களாக நிராயுதபாணிகளான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளன. இந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் ஏற்கனவே பதட்ட நிலைமையில் இருக்கும் வட இலங்கையை மேலும் எரியச் செய்துள்ளதுடன் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்று வருடகால யுத்த நிறுத்தத்தை கீழறுக்கவும் அச்சுறுத்துகிறது.

திங்கழன்று, யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழு அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றுகொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், யாழ்ப்பாண பிரதேசத்தில் தமிழர்கள் மீது இராணுவம் மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளை நிறுத்த கண்காணிப்புக் குழு தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரும் ஒரு கடிதத்தை கையளிப்பதற்காகவே அங்கு சென்றுகொண்டிருந்தனர்.

பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பரமேஸ்வரா சந்தியை ஊர்வலம் சென்றடைந்தபோது, அவர்கள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டனர். ஊர்வலம் செல்வதற்கான தமது உரிமையைப் பற்றி விவாதிப்பதற்காக பல்கலைக்கழக உபவேந்தர் முயற்சித்தபோது முன்னெச்சரிக்கையின்றி துப்பாக்கிப் பிரயோகம் செய்த துருப்புக்கள், கூட்டத்தை விரட்டியதுடன் தங்களிடமிருந்த துப்பாக்கியின் குழாய்களால் ஊழியர்களையும் மாணவர்களையும் தாக்கினர்.

பேராசிரியர் என். பேரின்பநாதன் மற்றும் மருத்துவபீட மாணவர் தலைவர் டி. காண்டீபன் உட்பட குறைந்த பட்சம் 14 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். சிப்பாய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்வகளில் உபவேந்தரும் பேராசிரியருமான சீ. மோகன்தாஸ் மற்றும் பேராசிரியர் ஆர். சிவச்சந்திரனும் அடங்குவர். தினக்குரல், தினகரன் மற்றும் நமது ஈழநாடு போன்ற தமிழ் பத்திரிகைகளின் நிருபர்களும் தாக்கப்பட்டதோடு அவர்களது புகைப்படக் கருவிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ சிப்பாய்களை சுற்றிவளைத்ததை அடுத்தே எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. மாணவர்களும் விரிவுரையாளர்களும் இராணுவத்தின் கூற்றை மறுக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஒரு மாணவரும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் துப்பாக்கிப் பிரயோகத்தால் காயங்களுக்குள்ளான இருவர் உட்பட நான்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடனும் உரையாடினர். பேராசிரியர் சிவச்சந்திரன்: "நாங்கள் கண்காணிப்புக் குழு அலுவலகத்திற்கே சென்றுகொண்டிருந்தோம். அது ஒரு அமைதியான பேரணி. பரமேஸ்வரா சந்தியில் வைத்து எங்களை இராணுவம் மறித்ததுடன் எச்சரித்தது. பயணத்தை தொடர்வதன் பேரில், அவர்களுக்கு புரியவைப்பதற்காக உபவேந்தர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்கள் சுட ஆயத்தமானதும் நாங்கள் அனைவரும் கீழே படுத்தோம். ஒரு சிப்பாய் என்னை துப்பாக்கியால் அடித்தார்," என்றார்.

பேராசிரியர் சிவச்சந்திரனின் ஒரு பக்கத் தோளில் காயமேற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறினார். "இப்போது நிலைமை அபிவிருத்தி கண்டுள்ளது, அது மோசமடையலாம். இராணுவம் நிலைகொண்டிருப்பதோடு ரோந்துப் பணிகளில் ஈடுபடும் நிலையில் மாணவர்கள் தமது படிப்பைத் தொடர்வது எப்படி?" என அவர் கேட்டார்.

22 வயது முகைமைத்துவ இரண்டாம் ஆண்டு மாணவனான வி. செந்திலின் முதுகில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளது. துப்பாக்கி குண்டை வெளியில் எடுப்பது ஆபத்தானதாக அமையும் என வைத்தியர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.

பொருளியல் விரிவுரையாளரான பேராசிரியர் என். பேரின்பநாதன், துப்பாக்கிப் பிரயோகம் தொடங்கியவுடன் கீழே படுக்க முயற்சித்தபோது அவரது வலது காலில் சூடுபட்டுள்ளது. இராணுவம் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கியது என அவர் கூறினார். "சமாதானம் இல்லை எனில் முன்னேற்றம் இல்லை. எங்களுக்கு சமாதான வாழ்வே வேண்டும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவ பீட இறுதியாண்டு மாணவனான டி. காண்டீபனை படையினர் துப்பாக்கியால் தாக்கியதில் அவரது தொடையில் காயமேற்பட்டுள்ளது. அவர் மயங்கிய பின் ஏனைய மாணவர்களால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடியபோது: "நாம் எமது உபவேந்தர் மற்றும் விரவுரையாளர்கள் தாக்கப்பட்டதையிட்டு கவலைப்படுகிறேன். இராணுவம் புரிந்துணர்வு உடன்படிக்கையை கடைப்படிக்காத்தையிட்டு நாம் வருந்துகிறோம். படையினர் புரிந்துணர்வு உடன்படிக்கையை கடைப்படித்தால் மட்டுமே எங்களால் சமாதானமாக வாழ முடியும்," என்றார்.

உபவேந்தர் மோகன்தாஸ் திங்களன்று பல்கலைக்கழகத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், இராணுவத்தின் தாக்குதல் "அரசியல் நோக்கங் கொண்டது" எனத் தெரிவித்தார். "ஒரு முக்கியமான கல்வி நிறுவனம் இயங்குவதற்கு அமைதியான சூழல் அவசியமானது" என்ற அடிப்படையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள ஒரு இராணுவ அரனை அகற்ற வேண்டும் என அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

செவ்வாயன்றும் வன்முறைகள் தொடர்ந்தன. ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை குழப்புவதற்காக நண்பகலில் சுமார் 100 இராணுவ சிப்பாய்களும் பொலிசாரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தனர். கண்ணீர்ப் புகையும் துப்பாக்கி பிரயோகமும் நடந்ததோடு மாணவர்கள் தாக்கப்பட்டனர். உடற்பயிற்சி கல்வி விரிவுரையாளர் எம். இளம்பிறையன் மற்றும் கெளரி செந்தில் என்ற மாணவனையும் துருப்புக்கள் கைது செய்தன. ஆகாயத்தை நோக்கியே சுட்டதாக இராணும் தெரிவித்த போதிலும் பல்கலைக் கழக கட்டிட சுவர்களில் துப்பாக்கிக் குண்டுகளால் ஏற்பட்ட சேதத்தை எமது நிருபர்களால் காண முடிந்தது.

பின்னர் அதேதினம், யாழ்ப்பாண நகரின் கஸ்தூரியார் வீதியில் முச்சக்கர வண்டி சாரதிகளின் ஆர்ப்பாட்டத்தையும் இராணுவத்தினர் கலைத்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இருபாலையில் இராணுவத்தினர் இதற்கு முன்னர் முன்னெடுத்த தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த சம்பவத்தில் அவர்களது வாகனங்களில் சிலவும் சேதமுற்றுள்ளன.

கடந்த வாரம் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகவே இந்த பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம் வெளிப்பட்டது. துருப்புக்கள் அரியாலை, மயிலங்காடு, ஏழாலை வடக்கு, மாந்தன் மற்றும் மண்டைதீவு உட்பட யாழ்ப்பாண குடாநாட்டின் பல பகுதிகளில் காரணமின்றி சுற்றிவளைத்து தேடுதல்களை மேற்கொண்டது. பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். டிசம்பர் 15 அன்று, யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்ட, புலிகளுக்கு சார்பான தமிழ் நாளிதழான நமது ஈழநாடு அலுவலகம் தேடுதலுக்கு உள்ளானதோடு அதன் ஊழியர்களும் இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டனர்.

டிசம்பர் 18 நடந்த இன்னொரு சம்பவத்தில், புங்குடுதீவு கிராமத்தவர்களை கடற்படையினர் தாக்கினர். இந்த கிராமத்தவர்கள், 20 வயது இளயதம்பி தர்ஷினி எனும் யுவதி கடற்படையினர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துவிட்டதாக சந்தேகித்து அதற்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்ஷினி காணாமல் போனதன் பின்னர், அவரது உடல் உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றுக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இளம் பெண்களை இராணுவத்தினர் தொந்தரவு செய்வதாக உள்ளூர்வாசிகள் தொடர்ந்தும் முறைப்பாடு செய்துவந்துள்ளனர். ஆத்திரமடைந்த ஒரு குழு உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தபோது கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். 55 வயதானவர் உட்பட பலர் காயமடைந்திருந்தனர்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, திங்கட் கிழமை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டனம் செய்ய மறுத்ததோடு ஒரு முழுமையான அறிக்கை தேவை என்று மட்டுமே கட்டளையிட்டார். அவரது பிரதிபலிப்பு, அவரது கடந்த தேர்தல்கால பங்காளிகளான, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்களத் தீவிரவாத கட்சிகளுடன் இணங்கிப் போகின்றது. இக்கட்சிகள் புலிகளுடனான யுத்த நிறுத்தத்தை எதிர்க்கின்றன.

புலிகள் தொடர்பாக தனது கடும்போக்கால் புகழ்பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிப்பதே ஆட்சிக்கு வந்தவுடன் இராஜபக்ஷவின் முதல் நடவடிக்கையாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 4 மற்றும் 6ம் திகதிகளுக்கிடையில் 14 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பலப்படுத்துமாறு பொன்சேகா கட்டளையிட்டார். குறிப்பாக கிழக்கில், புலிகளுக்கும் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் அல்லது அதன் துணைப்படைகளுக்கும் இடையில் ஒரு வருடத்திற்கும் மேலாக துப்பாக்கிப் பிரயோகங்களும் பழிவாங்கும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் 6 அன்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பொன்சேகா பிரகடனம் செய்ததாவது: "அவர்களது சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நாம் சிப்பாய்களுக்கு கட்டளையிட்டுள்ளோம்." இந்தவாரம் நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இராணுவம் தமிழ் சிறுபான்மையினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஆத்திரமூட்டும் வகையில் நசுக்குவதோடு மீண்டும் யுத்தத்திற்கு திரும்புவதற்கான வழிவகைகளை அமைக்கின்றது.

Top of page