World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Veteran British surrealist dies

முதுபெரும் பிரிட்டிஷ் மிகையதார்த்தவாதி காலமானார்

By Paul Bond
2 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி 14ம் தேதி காலமான 92 வயதான கொன்ரோய் மாட்டொக்ஸ், பிரிட்டிஷ் மிகையதார்த்தவாதவாதத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றவர் ஆவார். இரண்டாம் உலகப்போருக்கு முன் அமைக்கப்பட்டிருந்த மிகையதாரத்தவாத குழுவில் எஞ்சியவரில் இவர் கடைசியாவார். இதைவிட குறிப்பிடத்தக்க அம்சம் அவர் தன் வாழ்நாள் முழுவதும் மிகையதார்த்தவாதத்தின் பால் ஆழ்ந்த விசுவாசத்தை கொண்டிருந்தது ஆகும். சமீபத்தில் அவரை பற்றிய ஒரு சிறுகுறிப்பை வெளியிட்ட சில்வானோ லெவியின் விளக்கப்படி, அவர் "பிரிட்டனின் மிக ஈடுபாடுடைய, ஆற்றல் மிகுந்த, நீடித்திருந்த மிகையதார்த்த வாதத்தின் விளக்க உரையாளராக இருந்தார்."

1912ம் ஆண்டில் மாட்டொக்ஸ் ஹெர்போர்ட்ஷையரில் பிறந்தார்: இவருடைய தந்தையார் அங்கு குடும்ப வியாபாரமான விதை வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். இலக்கண வகுப்பிற்கு செல்வதற்கு முன்பு, உள்ளூர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். மிகச் சிறிய வயதில் இருந்தே வண்ண ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தபோதிலும், அவர் ஒரு கலைக்கல்வி கூடத்திற்கு சென்றதோ, முறையான பயிற்சியை கொண்டதோ கிடையாது. இளம்பருவத்திலேயே மிக முக்கியமான செல்வாக்குகளின் கீழும் அவர் ஆட்பட்டிருந்தார். உதாரணமாக அவருடைய தந்தையார் வீடுமுழுவதையும் நாட்டுப்புற ஏலங்களில் வாங்கப்பட்ட கலைப் பொருட்களினால் அலங்கரித்து வைப்பதில் பெரும் விருப்பமுடையவராக இருந்தார்; இது மாட்டொக்சின் நீண்ட காலக் கலைப்பொருளுடனான ஆர்வத்தை ஆரம்பித்து வைத்ததுடன், புதிய பொருளை கண்டால் உந்துதல் பெறும் தன்மையையும் அவருக்கு அளித்திருந்தது. லூயி அரகொனுடைய நூலான Paris PeasantTM, "[அரகொன்] ஏதேனும் நிகழ்வதற்கு, ஏதேனும் வினோதமான அல்லது அசாதாரணமானது நடப்பதற்கு காத்திருப்பார்; அதுதான் அவருக்கு பொருட்களின் புதிய அமைப்பு பற்றி ஒரு பார்வையை கொடுத்தது. அத்தகைய அனுபவங்கள் வியப்பானவற்றில் மிகையதார்த்தவாதம் ஈடுபாடு கொள்ளுவதற்கு உகந்தவையானவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய தந்தையாரிடம் இருந்து மாட்டொக்ஸ் இவருடைய பிந்தைய படைப்புக்களுக்கு பெரும் ஊக்கம் கொடுத்த சமயவிரோதப் போக்கில் நீடித்த, நிலைத்த தன்மையை கற்றுக் கொண்டார். ("சமயம் என்பது மெதுவாக ஏற்படும் ஒழுக்கநெறி சிதைவின் மிருகத்தனமான அடையாளம் என்பதைத்தான் நான் வலியுறுத்தி ஏற்கிறேன்" என்று அவர் பின்னர் எழுதினார்.)

முதலாம் உலகப்போரில் காயமுற்றிருந்த தந்தையாரை பார்ப்பதற்கு மருத்துவ மனைக்கு சென்றிருந்ததை நினைவில் தக்க வைத்துக் கொண்டது இவருடைய இராணுவவாத எதிர்ப்பிற்கு பெரும் ஊக்கம் கொடுத்தது. ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட உலகை எதிர்ப்பதற்கு பற்பல வடிவங்களை கண்டறிவதற்கும் இது உந்துதலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். (இந்த அனுபவம் கிடைத்த அதே நேரத்தில், ஐரோப்பாவில் விடுதலையுற்றிருந்த கலைஞர்கள், அவர்கள் தப்பித்திருந்த தேசியத்தின் பெயரால் நிகழ்ந்த படுகொலைகளுக்கு தங்கள் ஆழ்ந்த வெறுப்புணர்வை காட்ட பாரிசில் குழுமினர். இந்தக் கலைஞர்கள்தாம் அரகோன், ஹான்ஸ் ஆர்ப், போல் எலுவார்ட் போன்றவர்கள்தாம் டாடாவின் சீற்றத்தை மிகையதார்த்தவாத புரட்சித் திறன்பால் செலுத்தினர்.) ஒரு பெண்மணி மனநோய் சீற்ற இழுப்பினால் பாதிப்பதை கண்ணுற்றது இவரிடம் மனச் சிதைவு, உளவியல் சிதைவுகள் பற்றிய நீடித்த கவர்ச்சியை ஏற்படுத்தியது.

1929ம் ஆண்டு பொருளாதார பெருமந்த காலத்தின்போது, குடும்பம் சிப்பிங் நோர்ட்டன் என்னும் இடத்திற்கு குடியபெயர்ந்து, அங்கு ஓர் உணவு விடுதியை நடத்தியது. கூடுதலான முறையில் ஓவியத்தில் ஈடுபாடு கொண்ட மாட்டொக்ஸ் வீட்டின் குதிரை இலாயத்தை ஒரு ஓவிய வரைதல் அறையாக (ஸ்டூடியோ) மாற்றினார். தனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் அசைவற்ற உயிர்ப்படங்களையும், இயற்கைக் காட்சிகளையும் வண்ணம் தீட்டி வந்தார். சில ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பம் மறுபடியும் குடியபெயர்ந்து, பர்மிங்ஹாமின் புறநகரான எர்டிங்ரனுக்கு சென்றது. அங்கு இவருடைய தகப்பனார் மதுவகைகளை இறக்குமதி செய்து விற்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். மாட்டொக்ஸும் பர்மிங்ஹாமிற்குச் சென்றார்; அங்கு வெல்ஷ் சதுப்பு நிலங்களில் இருந்ததைவிடக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன. சில எழுத்தர் வேலைகளை செய்துவந்திருந்த இவர், 1935 அளவில், வணிகம்-சந்தை பொருட்காட்சிகளுக்கான அரங்கங்களை வடிவமைக்கத் தொடங்கினார்.

பர்மிங்ஹாம் இவருக்கு பரந்த முறையில் கலாச்சார ஆதாரங்களை வழங்கியது; தனக்குக் கலையை கற்பித்துக் கொள்ளும் பணியில் அவரே ஈடுபடலானார். தன்னுடைய நேரத்தின் பெரும்பகுதியை நகரில் இருந்த கலைக் காட்சியகங்களில் செலவழித்தாலும், அவை அவருக்கு மனநிறைவைக் கொடுக்கவில்லை. (அங்கிருந்த காட்சியகங்களும் அவர்பால் அத்தகைய ஈடுபாட்டைத்தான் திருப்பின; சமீபத்தில்தான் பர்மிங்ஹாம் நகர கலைக் காட்சியகம் அவருடைய படைப்புக்களை வாங்கியுள்ளது.) இன்னும் கூடுதலான நேரத்தை பொது நூலகங்களில் செலவழித்து நவீன கலையை பற்றிக் கிடைப்பதை எல்லாம் படிக்கலானார். இவர் நவீன கலையில் பெற்ற படிப்பினைகள் சுயமாகக் கற்றுக் கொண்டவை ஆகும். ஆர்.எச்.விலேன்ஸ்கியின் கலையில் நவீன இயக்கம் The Modern Movement in Art (1927) என்ற நூலில் இருந்து நிறைய படங்களை அவர் பதிவு செய்துகொண்டார். இதே காலக்கட்டத்தில், நூலகங்களில் நூல்களை படித்தபோது, அவர் மிகையதார்த்த வாதம் பற்றி அறிந்தார். "ஒரு திருப்புமுனை, ஒரு புதிய இலக்கை வெளிப்படுத்தும் வகையில் திறக்கப்பட்ட வாய்ப்பான கதவு" என்று பின்னர் அவர் இதைப்பற்றிக் குறிப்பிட்டார். இந்த கட்டத்தில் இருந்து அவர் மிகையதார்த்தவாதத்துக்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.

இந்த அர்ப்பணிப்புடன் மாட்டொக்சின் வாழ்க்கை மிகையதார்த்தம் என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது. இவருடைய தனிமை 1935ல் இவர் ஜோன் மற்றும் ரோபெர்ட் மெல்வில் சகோதரர்களை சந்தித்த அளவில் முடிவுற்றது; அவர்கள் இருவரும் பர்மிங்ஹாமின் மிகப்புதிய (Avant-garde) அரங்கில் தீவிரமாக இருந்தவர்கள். ஜோன் ஓர் ஓவியராவார்; ரோபர்ட் (பின்னர் New Statesman இல் கலைத் திறனாய்வாளரானார்) ஓர் எழுத்தாளராக இருந்ததோடு பிக்காசோ பற்றிய பரந்த அறிவைக் கொண்டிருந்தார். மெல்வில் சகோதரர்கள் மாட்டொக்சிற்கு பிரிட்டனில் இருந்த மற்ற மிகையதார்த்த வாதிகளை அறிமுகப்படுத்தினார். பர்மிங்ஹாம் மிகையதார்த்தவாத குழு பின்னர் அமைக்கப்படுவதற்கு இவர்கள் ஒத்துழைப்பும் அடிப்படையாக இருந்தது.

பிரிட்டனில் மிகயதார்த்தவாத படைப்புக்களின் முதல் பெரும் காட்சி 1936ல் நிகழ்த்தப்பட்டது; இது நியூ பேர்லிங்டன் காட்சியகத்தில் "சர்வதேச மிகையதார்த்த கண்காட்சி" என்ற பெயரில் நடத்தப்பட்டது. மாட்டொக்சோ, மெல்வில்லோ இதற்கு ஓவியங்களை அனுப்பிவைக்கவில்லை. மாறாக, அவர்கள் அங்கு காட்சியில் வைக்கப்பட்டிருந்த பல புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புக்களை விமர்சித்தனர். ஹென்ரி மூர், கிரஹாம் சதெர்லான்ட் மற்றும் ஹெர்பேர்ட் ரீட் ஆகியோர் மிகையதார்த்தவாதிகள் அல்லர் என்றும், அவர்கள் உண்மையில் மிகையதார்த்த சிந்தனைகள் பற்றி நன்கு அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார். (மூர், ரீட் இருவருமே இக்காட்சியகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர்களாக இருந்தனர்). வனப்புடைய சில ஓவியங்கள் ஏற்கப்படக் கூடிய வகையில் உள்ளன என்ற தாக்குதலை மட்டும் மாட்டொக்ஸ் செலுத்தினார்.

அவர்கள் குறைகூறியிருந்தவர்களில் சில கலைஞர்கள் மிகையதார்த்தவாதத்துடன் மிகக் குறைந்த தொடர்புடையவர்களாகத்தான் இருந்தனர் என்பது வெளிப்படை. ஆனால் அக்காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் கலைஞர்களிடையே மிகையதார்த்தவாதிகள் என்று கருதிக் கொண்டவர்கள் பட்டியிலில் ரீட் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தவர் ஆவார். மிகையதார்த்த வாதத்தின் சில கூறுபாடுகளுக்கு ரீட் ஆதரவு காட்டினார்; ஆனால் மாட்டொக்ஸ் இயக்கத்தின் சர்வதேச தன்மையை கருத்திற்கொண்டு ரீடின் குறுகிய நோக்கமுள்ள படைப்புக்களை எதிர்த்தார்.

1936ம் ஆண்டு கண்காட்சியில் மாட்டொக்ஸ், ஆண்ட்ரே பிரெட்டன், மாக்ஸ் ஏர்ன்ஸ்ட், சால்வடோர் டாலி ஆகியோரையும் சந்தித்தார். அவர்கள் மூலம் பாரிஸ் நகரில் இருந்த ஓவியர்களுக்கு அறிமுகக் கடிதங்களைப் பெற்றார். 1937ம் ஆண்டு முதல்தடவையாக அவர் பாரிசுக்கு சென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை அவர் பாரிசுக்குச் சென்று அங்கு இருந்த மான் ரே, (குறிப்பாக) ஜோர்ஜ் ஹ்யுஜ்னே அடங்கியிருந்த மிகையதார்த்தக்குழு உறுப்பினர்களுடனும் ஒத்துழைத்தார். இலண்டனுக்கு திரும்பிவந்த பின்னர், அவர் 1938ம் ஆண்டு இங்கிலிஷ் மிகையதார்த்த குழுவில், மெல்வில்லுகளுடன் சேர்ந்துகொண்டு, இணைந்தார்.

இக்காலக்கட்டம் மிகையதார்த்தவாதத்தின் மீது, தொடர்ந்த தாக்குதல் நடந்த காலம் ஆகும்; சர்வதேச அளவில் இதை முடுக்கிவிட்டவர்கள் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆவர். அவர்கள் இதை "எதிர்ப்புரட்சிக்" கலை என்று குற்றம் சாட்டி, சோசலிச யதார்த்தவாதத்திற்காக உழைத்தனர். Guernica இலண்டனில் காண்பிக்கப்பட்டபின்னர், பிக்காசோ மிகையதார்த்தவாதிகளின் தீய செல்வாக்கிற்குட்பட்டுவிட்டதாக குறைகூறப்பட்டார். அந்த ஓவியமும் பெரும் ஏறமாற்றத்தை வெளிப்படுத்தியதற்காக விமர்சிக்கப்பட்டது.

இதற்கு எதிராக, E.L.T. மெசென்ஸ், "இங்கிலாந்தில் வாழும் கலை" என்ற பெயரில் ஒரு கண்காட்சியை இலண்டன் காட்சியகத்தில் 1939ம் ஆண்டு முன்பகுதியில் நடத்தினார். பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போக்கிற்குத் தலைமைதாங்கும் திறனை மிகையதார்த்த வாதம் கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது. மிகையதார்த்தவாதம் இல்லாத படைப்புக்களை அளித்தவர்களில் பலர் ஐரோப்பாவில் இருந்து நாடுகடத்தலுக்கு பின் திரும்பி வந்திருந்த அமைப்பியல்வாதிகள் (Constructivists) ஆவர். அவர்களுடைய படைப்புக்களுடன் பிரிட்டிஷ் மிகையதார்த்தவாதிகளின் படைப்புக்களும் இருந்தன; இதில் மாட்டொக்சின் படைப்புக்களும் இருந்தன.

மாட்டொக்ஸ் மீண்டும் பாரிசுக்குச் சென்றார்; ஆனால் போர் வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்படவே பிரிட்டனுக்குத் திரும்பிவிட்டார். ("நினைவிடங்களைச் சுற்றி மணற்சாக்கு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டதை பார்த்தவுடன், வெளியேறவேண்டிய காலம் வந்து விட்டது என்று முடிவெடுத்தேன்."). அவர் பர்மிங்ஹாமிற்கு திரும்பினார்; அங்கு பாதுகாப்பு அமைச்சகம் சினிமா புரொஜக்டர்களின் பகுதிகளை ஆராய்ந்து, வடிவெடுக்கும் வேலையில் அவர் அமர்த்தப்பட்டார். அதே நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்திருந்த, மெல்வில்லுகள், எம்மி பிரிட்ஜ்வாட்டர் அடங்கிய மிகையதார்த்தவாதக் குழுவின் குவிமையமாகவும் இவர் விளங்கினார்.)

போராண்டுகள் இவருடைய மிகச் சிறந்த, அரிய படைப்புத் திறனை வெளிப்படுத்திய காலமாக இருந்தன; பல தலைசிறந்த படைப்புக்களை இவர் படைத்தார். "மிகையதார்த்தவாதத்தின் நோக்கம்" என்று ஒரு கட்டுரையை இவர் London Bulletin உடைய மூன்று சிறப்புப் பதிப்புக்களுக்காக வழங்கினார்; இது "இலக்கின் நெருக்கடி" என்ற ஆண்ட்ரே பிரெட்டன் எழுதிய கட்டுரையின் தொடர்ச்சியாகும். அதே ஆண்டின் "தன்முனைப்பு தட்டச்சுக் கருவி" (Onanistic Typewriter") என்பதையும் படைத்தார்; இதில் ஒவ்வொரு தட்டச்சிலும் ஓர் ஊசிமுனை மேல்நோக்கிய வகையில் இருக்க, சுழலும் கருவி குருதி படிந்து அமைக்கப்பட்டது. "சாதாரண விஷயங்களில், பகுத்தறிவுத் தன்மை இருப்பதற்கு எதிராக உளைச்சலும், தொய்ந்து போதலும்" எவ்வாறு ஏற்படுகின்றன என்பதை அவர் கண்டறிய முற்பட்டார். "Ecremage" என்ற வகையில், நீர்த் தட்டு ஒன்றில் மிதக்கும் எண்ணெய் ஓவியத்தின் மீது காகிதம் இழுக்கப்பட்டு வெளிப்படும் கலைப்படைப்பிற்கும் அவர் முன் வழிகாட்டியாக திகழ்ந்தார்.

மிகையதார்த்தவாதிகள் ஓரளவிற்கு அரசியல் நெருக்கடியை வருமுன்னர் ஊகித்தறிந்ததாகவும், அந்நிலைக்கு காரணமான சமுதாயத்தை விமர்சித்திருந்ததாக செய்தி ஊடகங்கள் பெருமைப்படுத்தினாலும், இந்த எதிர்ப்பை காட்டுவது தங்கள் விருப்பம் என்று மிகையதார்த்தவாதிகள் கூறியதற்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியது. உதாரணமாக 1940ம் ஆண்டு நடைபெற்ற "இன்றைய மிகையதார்த்தவாதம்" கண்காட்சி பற்றி Manchester Guardian, "இதுபோன்ற நேரத்தில் மிகையதார்த்தவாதம் தேவையற்றது என்று தோன்றுகிறது; மிகையதார்த்தவாதம் உளவியலுக்குப் பொருந்தும் நல்ல கலவைப் பொருள்தான்; ஆனால் இப்பொழுது கலவைச்சுவை பொருளுக்கு நேரமில்லை" என்று எழுதியது.

தேசிய போர் முயற்சிக்கு இழுக்கும் மறைப்பில், மிகையதார்த்தவாதத்தின் புரட்சிகர நோக்கங்கள் தாக்குதலுக்கு உட்பட்டாலும், மிகையதார்த்தவாதிகள் அவற்றை தொடர்ந்து பேசித்தான் வந்தனர். 1940ம் ஆண்டின் London Bulletin உடைய முதல்பக்கம், "விருப்பம், நம்பிக்கை இவற்றின் எதிரிகள் வன்முறையில் எழுச்சி பெற்றுள்ளனர்" என்று குறிப்பிட்டதுடன் "எங்கு தோன்றினாலும்" ஹிட்லரின் சிந்தனைப் போக்கு எதிர்த்துப் போராடப்படவேண்டியதாகும் என்று கூறியது.

ஆயினும், அரசியல் அழுத்தங்கள் தொடர்ந்தன; சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிச கீழணிகளுக்குள்ளே காட்டிக்கொடுத்தலும் தொடர்ந்து நோக்குநிலை தவறச்செய்தன. இலண்டன் மிகையதார்த்தவாதக் குழுவின் வலுவற்றதன்மை வெளிப்படையானதும், மாட்டொக்ஸ், டோனி டெல் ரென்ஜியோ என்று ஸ்பெயினில் POUM இற்கு எதிராகப் போராடிய இத்தாலியருடன் நெருக்கமாக உழைத்தார். டெல் ரென்ஜியோ, பிரிட்டனின் மிகையதார்த்தவாதத்திற்கு விலைமதிப்பற்ற ஊக்கத்தைக் கொடுத்து, மாட்டொக்ஸ் தன்னுடைய பணியை தொடருமாறு செய்தார். 1945ம் ஆண்டு அவருடைய கலைப்படைப்புக்களில் சில, ஏனைய மிகையதார்த்தவாதிகளுடன் தொகுக்கப்பட்டு, போர் முயற்சியை கீழறுப்பதாக கருதப்பட்டு சிறப்பு போலீஸ் படையால் கைப்பற்றப்பட்டுவிட்டன.

போர் ஆண்டுகளின் அரசியல் நோக்குநிலைதவறல் மாட்டொக்சை கூடுதலான முறையில் தம்மிச்சை மனப்போக்கின் பக்கம், மைக்கேல் ரெமியின் அறிவார்ந்த Surrealismin Britain (1999) என்ற நூலில் வந்துள்ள மேற்கோளின்படி, "அரசியல் வாதிகள், கலை வணிகர்கள் இவர்களுடைய அற்ப செயல்பாடுகளை பொருட்படுத்தாததின் வெளிப்பாடு" என்ற முறையில் தள்ளியது. ஆனால் மாட்டொக்சின் பெருமைக்கேற்ப அவர் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாது என்று ஒப்புக்கொண்டாலும், உலகை மாறுதலுக்குட்படுத்தப்பட வேண்டிய தன் முயற்சிகளை தொடர்ந்தார் என்றுதான் கூறவேண்டும். "மிகையதார்த்தவாத பணி முடிவடைந்துவிடாது. இது கண்டறியும் ஆய்வு என்றுதான் கூறப்படவேண்டும், ஒரு பயணம், ஒரு போராட்டம் என்று கூறலாம். ஓவியங்கள் அடையாளம் காட்டும் அம்புக்குறிகள் ஆகும். அவை எங்கு அழைத்துச் செல்லுகின்றன என்பதற்கு நான் பல இடையூறுகளையும் வழியில் உள்ள தடைகளையும் கடந்து செல்லவேண்டும். அந்தக் காரணத்திற்காக என்னுடைய இறுதி மூச்சு வரை நான் மிகையதார்த்தவாதத்தினை தேடும் பணியில் தொடர்வேன்" என்று அவர் கூறினார்.

இவர் மீண்டும் மீண்டும் அதே படைப்புக்களுக்கு திரும்பினார். உதாரணமாக, இவருடைய அசாதாரண ஓவியப்படைப்பான "இழுப்புக்களின் கிட்டங்கி (Warehouses of Convulsion-1946)" பீதியில் ஆழ்ந்த பெண்கள் சவப்பெட்டி வடிவில் இருக்கும் பெட்டிகளில் இருந்து எழுந்து வருவதைக் காட்டுகின்றது. (இது கிடைக்காமல் போய்விட்டாலும், ரெமியினால் இதேபோன்ற பதிப்பு ஒன்று படைக்கப்பட்டது, பக்.288). ஒரு கன்னிகாஸ்த்ரீ போல் உடையணிந்த பெண்ணை கெடுப்பது போன்ற காட்சிகளையும் அவர் அரங்கேற்றினார். (கடைக் காட்சி ஜன்னல்களில் இத்தகைய படைப்புக்களை காட்டக்கூடாது என்று பர்மிங்ஹாம் நகரக் குழு அவரை தடுத்துவிட்டது).

1960களில் இவர் இலண்டன் மாநகரை வந்தடைந்தார். ஒரு நபர் நிகழ்த்தும் காட்சிகள் 1963க்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்றன. அவருக்கு அதிக பணம் அதில் கிடைக்கவில்லை என்றாலும் அவருடைய பணியின் முக்கிய வேட்கை மிகையதார்த்தத்தின் மரபை பாதுகாத்தல் என்ற நோக்கம் இருந்தது; இவருடைய புதிய படைப்புக்கள், பழைய படைப்புக்களின் மறுபதிப்பு இவற்றிலும் இது தொடர்ந்தது. உதாரணமாக 1978ம் ஆண்டு, ஹேவர்ட் காட்சியகத்தின் "டடாவும், மிகையதார்த்தவாதமும் மறுபரிசீலனை" ஏற்படுத்திய சீற்றத்தினால் அதற்கு எதிராக, அதைத் திருத்தும் வகையில் எதிர் காட்சியகம் ஒன்றை அமைத்தார்.

"இவருடைய மிகையதார்த்த உறுதிப்பாடுகள் மாட்டொக்சை இலண்டன் கலையுலகிலிருந்து ஒதுக்கித் தனியே வைத்திருந்தது; இளைய கலைஞர்கள் அவருக்கு உளைச்சலை ஏற்படுத்தினர்" என்று இரங்கல் செய்தியாளர் ஒருவர் எழுதியுள்ளார். இது மிகையதார்த்தத்தின் தன்மையை தவறாகப் புரிந்துகொள்ளுவது ஆகும்; அவர் அதன்பால் கொண்டிருந்த பெரும் ஈடுபாட்டையும் பிழையாக அறிந்து கொண்டதும் ஆகும். மிகையதார்த்தத்தை வளர்த்து, அத்துடன் இணைந்திருக்க விரும்பியவர்களுக்கு தன் நேரத்தைக் கொடுப்பதில் அவர் பெருந்தன்மையுடன் இருந்தார். உதாரணமாக மைக்கேல் ரெனி Surrealism in Britain என்ற நூலை எழுதி முடிக்கும் வரை இவருடன்தான் தங்கினார். ஆனால் மிகையதார்த்த மாற்றம் பற்றி ஆராயாத படைப்புக்களை பற்றி இறுதிவரை மாட்டாக்ஸ் விரோதப்போக்கைத்தான் கொண்டிருந்தார்.

"மிகையதார்த்தவாதம்" என்பது முன்மொழிவதற்கு கடினமான பார்வையாகும்; ஆனால் நாம் வாழ்ந்து வரும் சமூக முறையில் இருந்து வெளியேறுவதற்கு அது ஒரு வழி அளிக்கிறது" என்று அவர் ஒரு முறை குறிப்பிட்டார். "சமூகம் ஒருநாள் மாறும்; நம்முடைய இடைவிடாத சலிப்பான வாழ்வில் இருந்து, நம்முடைய கனவுகளை உண்மையுடன் பிணைக்கும் திறனற்ற நிலையில் இருந்து நாம் தப்பிப்பிழைப்போம்" என்று அவர் ஒருமுறை கூறினார்.

கொன்ரோய் மாட்டொக்சின் படைப்புக்களின் மூன்று Tate Gallery இல் காணமுடியும் http://www.tate.org.uk/servlet/WorksList?searchid=18956&page=1\\

Top of page