World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Anger over Sri Lankan government's "rehabilitation" plans

இலங்கை அரசின் "புனர்வாழ்வு" திட்டங்கள் மீதான ஆத்திரம்

By Panini Wijesiriwardana
28 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையை சுனாமி தாக்கி ஒரு மாதத்திற்கு பின்னரும், பேரழிவின் வீச்சு இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தீவின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் விசாலமான சேதம் ஏற்பட்டுள்ளது. முழு கிராமங்களும் அங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பாலானவர்களையும் சேர்த்து கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுவிட்டன. இழப்புகளை ஈடுசெய்ய எதிர்பார்த்திருக்கும் உயிர் பிழைத்தவர்கள் மத்தியில், அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகளின் ஒழுங்கற்ற மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நிலைமையையிட்டு அதிருப்தி வளர்ந்து கொண்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அரசாங்க அமைப்புகளிடையே உடன்பாடு இல்லை. தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் பணிக்குழு (TAFREN) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000, காணாமல் போனோர் 6,000 பேர் மற்றும் 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வெகுஜன பாதுகாப்பு அமைச்சு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 38,000ற்கு சற்றே அதிகமாக தந்துள்ள அதேவேளை, நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் அமைப்பான தேசிய நடவடிக்கை நிலையம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,956 என்று மதிப்பிட்டிருக்கிறது.

குறிப்பாக மீனவர் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டெய்லி மிரர் பத்திரிகை ஜனவரி 15 வெளியிட்டுள்ள செய்தியின்படி, 7,500 மீனவர்கள் பலியாகியுள்ளனர், 5,600 பேரை இன்னமும் காணவில்லை, 90,000 பேருக்கு மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 18,500 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிந்துவிட்டன. மேலும் 250,000 வீடுகளும் 312 பாடசாலைகளும் 72 மருத்துவமனைகள் அழிந்துவிட்டன.

"நாட்டை மீளக் கட்டியெழுப்பும்" தனது பிரசாரத்தின் ஓர் அங்கமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் இடம் பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை கட்டித் தருவதாக உறுதியளித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 ரூபாவும் (50 அமெரிக்க டொலர்கள்) தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் 2,500 ரூபாவும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆயினும் இந்த உதவி சுனாமியால் நேரடியாக தங்களது ஜீவனோபாயத்தை இழந்தவர்களுக்கே கிடைக்கும். தங்கள் வலைகளையும் படகுகளையும் பழுது பார்த்து பணியாற்றி கொண்டுள்ள மீனவர்கள் உட்பட ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் கடற்கரையிலிருந்து 100 மீட்டர்களுக்கு உள்ளேயும் வடக்கு மற்றும் கிழக்கில் கடற்கரையிலிருந்து 200 மீட்டர்களுக்குள்ளேயும் வீடுகளைக் கட்டுவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தன்னிச்சையாக தடைவிதித்துள்ளார். தப்பிப் பிழைத்தவர்களுக்கு கடற்கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி பாதுகாப்பான இடங்களில் வீடு கட்டித் தருவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. இந்தக்கட்டளை ஒரு எதிர்கால பேரழிவை தடுப்பதற்கு ஏதாவதொரு நடவடிக்கை எடுத்திருப்பதாக காட்டும் காலங்கடந்த முயற்சியாகும். ஆனால், ஒட்டு மொத்த திட்டம் எதுவுமின்றி, சாதாரண மக்களுக்கு அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி முற்றிலும் அலட்சியமாக அதிகாரத்துவ அடிப்படையில் இந்தக் கட்டளை திணிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கடற்கரையில் தங்களது படகுகளையும் வலைகளையும் காப்பாற்றுவதற்காகவும் உடனடியாக கடலுக்குள் செல்ல வசதியாகவும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடையே இந்த முடிவு பரவலான ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. நாட்டின் கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்காக சிறிய உணவு விடுதிகள் மற்றும் சிறிய வர்த்தக அமைப்புகளை நடத்திவந்த கணிசமான மக்களில் பலர் தங்களது ஜீவனோபாயத்தையே பறிகொடுக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

சில பிரதேசங்களில் பெரிய சுற்றுலா மையங்கள் உட்பட கடற்கரையிலுள்ள வியாபார நிலையங்களையும் அகற்றிவிட வேண்டும் என்று சிறிதுகாலமாக அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. மத்திய கிழக்கிற்கும் கிழக்கு ஆசியாவிற்குமிடையில் கப்பல் போக்குவரத்திற்கு வசதி செய்யும் வகையில் தென் பகுதி நகரமான ஹம்பந்தொட்டையில் ஒரு பெரிய துறைமுகத்தை கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பாரிய திட்டத்திற்காக தங்களது வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்றும்போது எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழும் என்ற அச்சத்தால் அந்த முன் பிரேரணை கிடப்பில் போடப்பட்டிருந்தது.

ஜனவரி 15 அன்று, குமாரதுங்காவின் தடையை கட்டாயமாக செயல்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு பொலீஸுக்கு பிறப்பித்த உத்தரவு, ஒரு தொடர் கண்டனப் பேரணிகளை கிளறிவிட்டிடுள்ளது. அடுத்த நாள் ஹம்பந்தொட்டையில் தங்களது அழிந்துவிட்ட வீடுகள் அல்லது ஒரு பகுதி சேதமடைந்த வீடுகளிலிருந்து வெளியேறுமாறு போலீஸார் பிறப்பித்த கட்டளைகளுக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களது சம்மதமின்றி கடற்கரையிலிருந்து 3 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள கஜுவத்தையில் இந்தக் குடும்பங்களை அரசாங்கம் மீண்டும் குடியமர்த்தி வருகிறது. அடுத்த நாள் தென் மாவட்டமான மாத்தறையில் மிரிஸ்ஸ என்னும் கிராமத்தில் உள்ள மீனவர்களும் இதே பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜனவரி 19 அன்று, ஹம்பந்தொட்டையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் தங்களை கொன்னொருவ பகுதிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பேரணி நடத்தினர். அங்கு பிரதமர் மஹிந்த ராஜாபக்ஷ புதிய நகருக்கு அடிக்கல் நாட்டிக்கொண்டிருந்தார். கொன்னொருவ ஒரு ஒதுக்குப்புறமான பிற்படுத்தப்பட்ட பகுதியாகும். அதைச் சுற்றிலும் காட்டு யானைகள் உட்பட கொடிய வன விலங்குகள், நடமாடிக்கொண்டிருக்கிற ஆபத்தான வனப்பகுதி உள்ளது.

ராஜாபக்ஷ ஜனவரி 22 அன்று, ஹம்பந்தொட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் குடியமர்த்தும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுடன் விவாதிக்க முயற்சித்த போது, தனது தேர்தல் தொகுதியிலேயே மக்களின் விமர்சனத்திற்குற்பட்டார். அங்கிருந்து அவர் வெளிநடப்பு செய்யத் தள்ளப்பட்டார். அன்றைய தினமே தெற்கு கரையோர நகரமான காலியிலும் இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக கடைச் சொந்தக்காரர்களின் குழுவொன்று ஆர்ப்பாட்டம் செய்தது.

ஏனைய பகுதிகளிலும் உதவிகள் கிடைக்காதது பற்றியும் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 13 அன்று, சேதங்கள் பற்றிய மதிப்பீடோ அல்லது மறுசீரமைப்பு திட்டங்களோ இன்றியும் கலந்தாலோசிக்காமலும் இடிபாடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிராக, கிழக்கு நகரான கல்முனையில் சுமார் 1000 பேர் கண்டன பேரணி நடத்தினர். அரசாங்கம் தற்காலிக தங்குமிடங்களைக் கூட ஏற்பாடு செய்யத் தவறிவிட்டது. ஆவேசம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், வீடமைப்பு, கட்டுமான மற்றும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் பேரியல் அஷரப்பின் பிரதிநிதிகளை விரட்டியடித்தனர். மற்றும் கிழக்கு உட்கட்டமைப்பு அமைச்சர் ஏ.எல்.எம். அத்தாவுல்லாவையும் விரட்டினர்.

சென்ற சனிக்கிழமை, தெற்கு நகரான பூஸ்ஸவில், அரசாங்கம் போதுமான உதவிகளையும் நிவாரணத்தையும் வழங்கத் தவறியதை கண்டித்து தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திங்களன்று கூடாரங்கள் மற்றும் அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய பங்கீட்டுப் பொருட்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரி, சுமார் 300 இடம்பெயர்ந்த மக்கள், கொழும்பிலிருந்து 85 கி.மீ தெற்கேயுள்ள அம்பலங்கொட பிரதேச செயலகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நிலைமை மோசமடைந்து வருகிறது

தப்பிப்பிழைத்த பலரது நிலை மோசமடைந்து கொண்டு வருகிறது. சுனாமி தாக்கியதும் அரசாங்கம் உடனடியாக பல பாடசாலைகள் நிவாரண முகாங்களாக மாற்றியது. இப்போது புதிய கல்வியாண்டு தொடங்குவதற்காக அந்த முகாம்களை காலி செய்யவேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளது.

சில இடங்களில் சேதமடைந்த கட்டிடங்களில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இலங்கை தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சுவர்ணவாஹினி தந்துள்ள தகவலின்படி, பாடசாலை கட்டிடங்கள் உறுதியானவையா மற்றும் பாதுகாப்பானவையா என்பதை நிச்சயப்படுத்தும் முறையான சோதனை நடத்தப்படவில்லை.

அகதிகள் தற்காலிக கூடாரங்களில் வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பலர் அதை மறுத்துவிட்டு சேதமடைந்த தங்களது வீடுகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். மாத்தறையிலுள்ள மிகப்பெரிய நிவாரண முகாம்களில் ஒன்றான ராகுல கல்லூரியில் தங்கியிருந்த அகதிகளை உலக சோசலச வலைத் தள நிருபர்கள் சந்தித்தனர்.

ஒரு சாரதியான ஹேமாசத்திர உரையாடும் போது: "எனக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த ஒரு சிறிய கூடாரத்திற்குள் எப்படி நாங்கள் வாழ முடியும்? நான் ஒரு கூடாரத்தின் உரு மாதிரியை பார்த்தேன், அது ஒரு நாய் கொட்டடி போல் இருக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள முகாமில் முறையான கழிப்பிட வசதியில்லை. பலகையால் கட்டப்பட்ட எனது வீடு கடுமையாக சேதமடைந்திருந்தாலும் குடும்பத்தோடு அங்கேயே சென்று குடியேறிவிட நினைத்துக்கொண்டிருக்கிறேன்," என்றார்.

ஒரு மூதாட்டியான எட்லின் அவரும் இதே கருத்தை தெரிவித்தார்: "நானும் எனது சேதமடைந்த வீட்டிற்கு செல்லப்போகிறேன். இந்தக் கூடாரத்தை எனது வீட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எனது வீடு ஒரு சொர்க்கம்" என்றார் அவர்.

பஸ்கொட பிரதேச செயலாளரான ரணில் விக்கிரமசேகர உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கும் போது: "இந்த ஒரு பகுதி சிதைந்துபோன வீடுகளை குடியிருக்க பயன்படுத்த முடியும் என எந்த உறுதி மொழியையும் தருவதற்கு எந்தவிதமான அரசாங்க அமைப்பும் இங்கில்லை," என்றார். ஆனால் கூடாரங்களை தவிர வேறு மாற்றங்களை அவரால் கொடுக்க முடியவில்லை.

ஜனவரி மத்தியில் ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, சுனாமி பேரழிவினால் இலங்கையில் ஏழைகளின் எண்ணிக்கை 250,000 அல்லது மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கு மேல் உயரும் என உத்தேசிக்கப்ட்டுள்ளது. அந்த அறிக்கையை வெளியிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமை பொருளாதார ஆய்வாளர் இப்ஸல் அலி, "சுனாமியால் ஏற்பட்ட வறுமையின் தாக்கம் பிரமாண்டமானதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி தாக்குவதற்கு முன்னரும், உலக வங்கி டிசம்பரில் வெளியிட்டிருந்த "இலங்கை அபிவிருத்திக் கொள்கை ஆய்வு" அறிக்கையில், இலங்கை மக்களில் சுமார் 25 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தது. மட்டக்களப்பும் ஹம்பந்தொட்டையும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிப்புக்குள்ளான பிராந்தியங்களாகும். இப் பிராந்தியங்களில் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிரமாண்டமான சமூக பிரச்சனைகளை சுனாமி தாக்குவதற்கு முன்னரே தீர்த்து வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முற்றிலும் இலாயக்கற்றிருந்தது. இப்போது அந்த நிலைமை அதிகமாகிவிட்டது.

Top of page