World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

WSWS holds public meetings in Australia on Asian tsunami disaster

ஆசிய சுனாமி பேரழிவு பற்றி ஆஸ்திரேலியாவில் உலக சோசலிச வலைத் தளம் நடத்திய பொதுக்கூட்டங்கள்

By Laura Tiernan
8 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஆசிய சுனாமி எழுப்பியுள்ள பூகோள அரசியல் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் இரண்டு வெற்றிகரமான பொதுக்கூட்டங்களை உலக சோசலிச வலைத் தளம் நடாத்தியது. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் சிட்னியிலும் மெல்போர்னிலும் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றினார். சிட்னியில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த்தும் கலந்துகொண்டார்.

சிட்னி பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் நிக் பீம்ஸ் குறிப்பிட்டதாவது, ஒவ்வொரு நாட்டிலும் டிசம்பர் 26-ல் நடைபெற்ற துயர சம்பவங்கள் குறித்து சமுதாயத்தில் பரவலான பிரிவினர் தங்களது கவலைகளை வெளியிட்டனர். அதே நேரத்தில் பெரிய நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்ான மக்களுக்கு அவர்களை இழிவுபடுத்துகின்ற வகையில் மிக சொற்ப தொகையை உதவியாக அறிவித்தனர். இது அவர்களது முழு புறக்கணிப்பு மனப்பான்மையையும் மக்களை இழிவுபடுத்துகின்ற தன்மையையும் வெளிக்காட்டியது என்று குறிப்பிட்டார். தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பணி, இந்த பேரழிவினால் எழுப்பப்பட்ட வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சனைகளை விவாதித்து அதன் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் மாற்றை விரிவாக எடுத்துரைப்பதாகும் என்று பீம்ஸ் குறிப்பிட்டார்.

சிட்னி கூட்டத்தில் உரையாற்றிய WSWS சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினர் பீட்டர் சைமண்ட் இந்துப் பெருங்கடலில் ஒரு சுனாமி எச்சரிக்கை அமைப்பு இல்லாததை சுட்டிக்காட்டினார் மற்றும் டிசம்பர் சுனாமியினால் ஏற்பட்ட பெரும் அளவிலான சாவுகளை முற்றிலுமாக தடுத்திருக்க முடியுமென்று எடுத்துக்காட்டினார். பசிபிக் பெருங்கடலில் 1960களின் தொடக்கத்திலிருந்து, ``கம்பியூட்டர் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு மிக வேகமாக புள்ளி விவரங்களை ஆய்வு செய்து சுனாமி தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய பகுதிகளுக்கு தகுந்த முன் எச்சரிக்கைகளை தரக்கூடிய வல்லமையுள்ள`` ஒரு உயர் தொழில்நுட்ப எச்சரிக்கை அமைப்பு உள்ளது.

நடப்பு தொழில்நுட்ப திறமைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஜப்பானில் அமைக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை முறையாகும்; ``3,500 பூகம்ப உணர்வு மையங்களும் 180 பூகம்ப பதிவு நிலையங்களும் நாடு முழுவதிலும் சங்கிலித் தொடர்போல் கடல்அலைகளை பதிவு செய்கின்ற நிலையங்களோடு இணைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் 80 ஆழ்கடல் உணர்வு பதிவு மையங்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றன. ஒரு சுனாமி ஏற்படுகின்ற வாய்ப்புகளை 100,000 சிமுலேசன் முறைகளில் பதிவு செய்து அதனுடைய முடிவுகளை 5 நொடிக்குள் எச்சரிக்கைகளாக அனுப்புகின்ற வல்லமை படைத்த கம்பியூட்டர்கள் இயங்குகின்றன. எச்சரிக்கை அறிவிப்புக்கள் தொலைக்காட்சிகளில் உடனடி செய்தியாக வெளியிடப்பட்டு தொலைபேசிகள் மூலமோ செயற்கைகோள் தகவல் தொடர்பு மூலமோ அதிகாரிகள் எச்சரிக்கப்படுகின்றனர். பெரிய துறைமுகங்களையும், அதைச் சார்ந்த அமைப்புக்களையும் பாதுகாக்கும்பொருட்டு தொடரான கழிமுகப்பகுதிகளும் வெள்ளத்தை வெளியேற்றுகின்ற வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.``

``இவை எதுவும் இந்துப் பெருங்கடலில் இல்லை. விஞ்ஞானிகள் அடிக்கடி சுனாமியின் ஆபத்துக்கள் பற்றியும் ஒரு சுனாமி எச்சரிக்கை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கூறிவந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக வங்கக்கடலை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் சற்றும் எதிர்பாராத வகையில் சிக்கிக்கொண்டனர்.``

பிரதான பேச்சாளர் விஜே டயஸ் சுனாமியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் விரிவான அரசியல் தாக்கங்களை எடுத்துரைத்தார். அங்கு 40,000க்கு மேற்பட்ட மக்கள் தங்களது உயிரை இழந்திருக்கின்றனர். (அவரது முழு அறிக்கை நாளை பிரசுரிக்கப்படுகிறது).

சிட்னியில் தமது உரையை ஆரம்பிக்கின்ற நேரத்தில் டயஸ், பிப்ரவரி 4- இலங்கை பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதாக கூறப்படுவதை குறிக்கின்ற 57-வது ஆண்டு விழாவாகும் என்பதைக் குறித்தார். அப்படியிருந்தும் சுனாமி ஏற்படுத்திய பேரழிவு தாக்கங்கள் அந்த நாட்டின் பொருளாதார பின்தங்கிய நிலையையும், பெரிய நாடுகளுக்கு பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படையில் தொடர்ந்து கீழ்ப்படிந்து செல்லும் நிலையில், அந்தத் தீவின் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களும் வாழ்கின்ற படுமோசமான வறுமை நிலையை எடுத்துரைத்தார்.

சுனாமி பேரழிவிற்கு ஒரு கொள்கை அடிப்படையிலான மார்க்சிச பதிலை அவர் எடுத்துரைத்தார். அதில் மனித நேய உதவி முயற்சிகளுக்கு கட்சியின் அணுகுமுறையும் அடங்கும். ``அவர்களது நிவாரணப் பணிகளை நாங்கள் மிகப்பெருமளவிற்கு பாராட்டுகிறோம், என்றாலும் காலாவதியாகிவிட்ட முதலாளித்துவ முறையின்கீழ் வெகுஜனங்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கும் ஒடுக்குமுறை சமூக மற்றும் அரசியல் நிலைப்பாடுகளின் கொடூரங்களில் இருந்து மீளவதற்கு ஒரு முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் தருவதுதான் எங்களது பிரதான பணியாகும். நிவாரண பணிகளைப் பொறுத்தவரை, சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை தரவேண்டியது, நாடு மற்றும் அரசாங்கத்தின் கடமையாகும் என்று உழைக்கும் மக்களிடையே நாடு மற்றும் அரசாங்கத்தின் கடமைகள் குறித்து ஒரு விழிப்புணர்வை நாம் வளர்த்தாக வேண்டும்.``

சுனாமியினால் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவருக்கும் நிலமும் வீடும் உடனடியாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது உட்பட, உயிரிழந்தவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும். மருத்துவமனைகள் பள்ளிகள், சாலைகள், தகவல்தொடர்புகள் ஆகியவற்றை சீரமைப்பதற்கு பொதுப்பணித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தார். ``போருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தையும் பணக்காரர்களுக்கு அவர்களது செல்வ உடமைகளுக்கேற்ப வரிவிதித்து அந்தத் தொகைகளையும் சேர்த்து நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்`` என்று கேட்டுக்கொண்டார்.

இறுதியாக சிட்னியில் உரையாற்றி, உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், ``சுனாமியின் மகத்தான வலிமை பற்றியும் நாடுகளை தாவிக் கடந்து, சாவையும் அழிவையும் உருவாக்கக்கூடிய தன்மை பற்றி மிகப்பெருமளவில் பேசப்பட்டிருக்கிறது. விரக்தியில் "அதுதான் தலைவிதி" என்று சொல்கின்ற அளவிற்கு அதன் வலிமை சென்றிருக்கிறது. இதுபோன்ற பிற்போக்குத்தனமான கருத்துருக்களில் ஒரு பிற்போக்குத்தனமான ஒரு சிந்தனைப் பார்வை பொதிந்திருப்பதாக அவர் கூறினார்.

``சோசலிச இயக்கத்தின் அடிப்படைக் கண்ணோட்டங்களையும் அடித்தளங்களையும் மீண்டும் நாம் தெளிவாக விளக்க வேண்டியது அவசியம்`` என்று நோர்த் குறிப்பிட்டார். அமெரிக்காவில் 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் உணவுப் பொருட்களுக்கு கையேந்தி நிற்கும் நிலை இருந்தது. அதற்கு பதிலளிக்கின்ற வகையில் மிகப்பெருமளவிற்கு பரவலாக பொதுப்பணித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நோர்த் நினைவுபடுத்தினார். ``இந்தப் பிரச்சினைகளை வெற்றிகொள்ள வழிமுறைகள் இருந்தது, வறட்சியும் பாலைவனமாகவும் இருந்த இடங்களில் நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.``

சோசலிச இயக்கத்தின் முன்னோடிகள் தொலைநோக்கோடு "இந்த பிரபஞ்சத்தை மாற்றுகின்ற அளவிற்கு மனிதன் அறிவியலை பயன்படுத்தும் திறன் கொண்டவன் என்று வாதிட்டனர் மற்றும் நம்பினர்" என்றார். இந்த கருத்துருக்களில் சோசலிஸ்டுகள் 18-ம் நூற்றாண்டில் உருவான அறிவொளி காலத்தில் மட்டுமல்லாது, அதற்கு இன்னும் முன்னால் 13ம், 14ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற மறுமலர்ச்சி காலத்து அறிவுஜீவித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தனர். அப்படியிருக்கும்போது இந்த அம்சங்களை நாம் இப்போது உண்மையில் விவாதிப்பது ஏன்? இதில் உண்மை என்னவென்றால் இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்துவைப்பதற்கு மனிதனிடம் வல்லமையும் இருக்கிறது, அதிகாரமும் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் மகத்தான தடைக்கற்கள் இயற்கையில் அல்ல, ஆனால் சமூகத்தில் உள்ளது.``

``சுனாமி ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற பேரழிவின் தீவிரத்தை பண்புரீதியாய் காட்டுகின்ற ஒரு அம்சம் தான். ஒவ்வொரு நாளும் எத்தனை ஆயிரம் மக்கள் ஆபிரிக்காவில் எய்ட்ஸ் நோய்க்கு பலியாகிறார்கள்? எத்தனை ஆயிரம் இளம் சிறுவர் சிறுமியர் தூய்மையான குடி தண்ணீர் கூட குடிப்பதற்கு கிடைக்காமல் வயிற்றுப்போக்கினாலும், வாந்தியினாலும் மற்றும் முற்றிலும் தடுக்கப்படக்கூடிய, நீண்டகாலத்திற்கு முன்னரே ஒழித்துக்கட்டப்பட்டுவிட்ட தொற்றுநோய்களுக்கு பலியாகிறார்கள்?" என நோர்த் சுட்டிக்காட்டினார்.

பகுத்தறிவுக்கு புறம்பான எல்லா வடிவங்களுக்கும் எதிராக மற்றும் கண்மூடித்தனமாக தனிப்பட்ட முறையில் சொத்துக் குவிப்பதற்கும் எதிராக சோசலிசத்தைப் பாதுகாப்பது என்ற விளக்கத்தோடு அவர் தனது உரையை நிறைவு செய்தார். ``பெருவர்த்தக நிறுவனங்களின் ஒலி பெருக்கிகளான ஊடகங்கள் சோசலிசம் செத்துவிட்டது என்று அறிவிக்கிறார்களே, அதில் அவர்கள் உண்மையிலேயே சொல்வது என்ன? தனியார் சொத்துக் குவிப்பு, இலாப வேட்டை அடிப்படையில் அமைந்த சமூக அமைப்பிற்கு அந்தக் கொள்கைகளுக்கு மாற்று எதுவும் உண்டு என்று நம்புவதே அபத்தமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். அதற்கு மாற்று எதுவுமில்லை என்கிறார்கள். நீங்கள் அதைப் பற்றி சிந்திக்கவே முடியாது என்கிறார்கள். அது நடக்காத காரியம் என்கிறார்கள். சோசலிசம் செத்துவிட்டது என்று அவர்கள் பிரகடனப்படுத்தவது நமது சமூக வாழ்வில் சமூக திட்டமிடல், நமது பகுத்தறிவை அறிவியல் அறிவை பயன்படுத்தி எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் ஒழித்துக்கட்டிவிட முடியும் என்பது நினைத்துப்பார்க்க இயலாதது என்கிறார்கள். ஆனால் சோசலிசம் அறிவியலை பயன்படுத்துவது சம்மந்தப்பட்டது. மனிதன் நுண்மான் நுழைபுலத்தோடு இயற்கை விதிகளையும், மனிதனின் கூர்த்த மதியைக் கொண்டு ஆய்வு செய்து அனைத்து இயற்கை சக்திகளையும் திரட்டி அதில் ஆதிக்கம் செலுத்தி, ஒரு உண்மையான சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிவிட முடியும் என்பதுதான் சோசலிச இயக்கத்தின் இதர மகத்தான கோட்பாடுகள்`` என்றார்.

இரண்டு கூட்டங்களிலும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் டயசிடம் சுனாமி பாதிப்பு பற்றியும் பெரிய அரசுகள் பணத்தை நன்கொடையாக தந்திருப்பதன் நோக்கம் மற்றும் தன்மை பற்றியும் சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோக்கு பற்றியும் பல கேள்விகளைக் கேட்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் இயற்கை பேரழிவு உழைக்கும் வர்க்கத்தை புரட்சிகர பாதையில் திரட்டுவதற்கு உதவியாக அமைய முடியுமா? என்று கேட்டார், அதற்கு பதிலளித்த விஜே டயஸ், லியோன் ட்ரொட்ஸ்கியின் "The Young Lehin" என்ற நூலைக் குறிப்பிட்டார். அது ஆரம்ப காலத்தில் லெனினுக்கும் பல்வேறு ரஷ்ய தீவிரப்போக்கினர் மற்றும் மக்கள் முதன்மைப் போக்கினருக்குமிடையில் (Populists) நிலவிய அரசியல் சர்ச்சையை ஆய்வு செய்கின்ற நூலாகும். அத்தகைய தீவிரப் போக்கினருள் ஒருவரான Vodovozov, லெனின் பஞ்ச நிவாரண நடவடிக்கைகளில் மக்கள் முதன்மைவாதிகளோடு சேர்ந்துகொண்டு பணியாற்றத் தவறியதற்கு காரணம் அவர் ரஷ்ய தொழில்மயமாதலுக்கு அடித்தளம் அமைக்கும் ஒரு முற்போக்கான வரலாற்று சாதனையை நிறைவேற்றுவதற்கு பஞ்சம் உதவுகிறது என்று நம்பியதுதான் என்று கூறினார்.

அதற்கு ட்ரொட்ஸ்கி அளித்த பதில்: ``Vodovozov அந்த விவகாரம் தொடர்பாக தனது நினைவுகளைக் குறிப்பிடுவது உல்யனோவின் (லெனின்) கருத்துக்களை எதிரொலிப்பதாக இல்லை. ஆனால் தாராளவாதத்தினர் மற்றும் மக்கள் முதன்மைவாதத்தினரது உள்ளத்தில் ஏற்படுத்திவிட்ட சிதைந்துவிட்ட பிரதிபலிப்பைத்தான் காட்டுகிறது. விவசாயிகள் அழிவதும் சிதைவதும் நாட்டின் தொழில்மயமாதலை வளர்க்கும் என்ற கருத்தே மிதமிஞ்சிய அபத்தமாகும். சிதைந்துவிட்ட விவசாயிகள் ஓட்டாண்டிகளாக ஆகிவிடுவார்கள் பாட்டாளி வர்க்கமாக ஆகமாட்டார்கள். பஞ்சம் ஒட்டுண்ணிகளுக்கு தீனியாகுமே தவிர பொருளாதாரத்தில் முன்னேற்றப் போக்குகளை காட்டாது. அந்த பழைய கருத்து வேறுபாடுகளின் காரசாரமான சூழ்நிலையை நியாயமாக எடுத்துக்காட்டுகின்ற ஒரு கருத்துருவாகத்தான் Vodovozov-வின் மிக அற்பமான சந்தேகத்திற்குரிய கதையை எடுத்துக்கொள்ள வேண்டும்.``

பேரழிவினால் புரட்சி தோன்ற முடியும் என்று எப்போதுமே மார்க்சிஸ்டுகள் நம்புவதில்லை என்று டயஸ் விளக்கினார். ஆனால், அத்தகைய பேரழிவு தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற ஆட்சியின் தன்மை என்ன என்பதை மிகவும் நேரடியாக வெகுஜனங்கள் பார்ப்பதற்கு இட்டுச்செல்கிறது. ``இத்தகைய ஒரு நிலவரத்தில் மாக்சிஸ்டுகளின் பணி என்னவென்றால் வெகுஜனங்களுக்கு இந்த சீரழிந்துபோன முதலாளித்துவ அமைப்புக்கு ஒரு சோசலிச மாற்று இருக்கிறது என்பதை ஆய்வு செய்து விளக்கம் தருவதுதான். அந்தத் தலையீட்டின் மூலம் மட்டுமே தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் தங்களது சொந்த அரசு அதிகாரத்தை பெற முடியும் என்ற மட்டத்திற்கு நனவை ஏற்படுத்த முடியும்.``

இலங்கையில் WSWS மற்றும் SEP பணிகளின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக 1000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் அந்தக் கூட்டங்களில் நன்கொடை வசூலாயிற்று.

Top of page