World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Amid the devastation

Sri Lankan president issues appeal for "unity"

அழிவுகளுக்கு மத்தியில்

இலங்கை ஜனாதிபதி "ஐக்கியத்துக்காக" அழைப்புவிடுக்கின்றார்

By Wije Dias
30 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

இந்த சமுத்திர கொந்தளிப்பு இலங்கையை அழிவுக்குள்ளாக்கி இரண்டரை நாட்களின் பின்னர், இலங்கை ஜனாதிபதி இறுதியாக அந்த அவலங்கள் பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செவ்வாயன்று அவர் ஆற்றிய உரை இருட்டடிப்பு, தட்டிக்கழிப்பு மற்றும் வெற்று அனுதாபத்தின் ஒரு கலவையை உள்ளடக்கியிருந்தது. இந்த உரை அவரது அரசாங்கத்தின் வங்குரோத்தை மட்டுமன்றி தீவில் முதலாளித்துவ ஆளுமையின் வங்குரோத்தையும் ஏற்றுக்கொள்வதாக அமைந்திருந்தது.

குமாரதுங்கவுக்கு உண்மையைக் கூட சொல்லமுடியாமல் போனது. திங்களன்று 2,200 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 23,000 ஆக அதிகரித்ததுடன், அவசரசேவையில் ஈடுபட்டவர்கள் இடிபாடுகளுக்குள் தேட ஆரம்பித்ததோடு அவர்கள் பின்தங்கிய பிரதேசங்களை சென்றடைந்தவுடன் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு மதிப்பீட்டின்படி, ஜனத்தொகையில் 16 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்களில் பலர் மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் (10 அமெரிக்க டொலர்கள்) வருமானம் பெறுபவர்களாக உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். இப்பொழுது அவர்கள் ஏற்கனவே இருந்த நிலைமையையும் இழந்து தங்களது ஜீவனோபாயத்தையும் இழந்தவர்களாக உள்ளனர். இவர்கள் வாழ்வதற்கு ஒன்றுமே கிடையாது.

ஜனாதிபதி "ஆழ்ந்த அதிர்ச்சியுடனும் துக்கத்துடனும்" உரையாற்றியதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது "ஆழ்ந்த அனுதாபத்தைத்" தெரிவித்தார். ஆனால் அவரது உரையின் உள்ளடக்கமானது, அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அல்லது செயற்திறமின்மையை நியாயப்படுத்துவதோடு "இயற்கை அழிவின்" மத்தியில் ஐக்கியத்திற்கு அழைப்புவிடுப்பதாக இருந்தது. "பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி நிவாரணம் வழங்குவதாகவும்", முன்கூட்டி எச்சரிக்கை வழங்குவதற்காக விபத்து நிர்வாக பிரிவை முன்னேற்றுவதுடன் மீள் கட்டுமான வேலைகளுக்காக விசேட பணிக் குழுவொன்றை ஸ்தாபிப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.

இந்த வாக்குறுதிகளில் எவையும் நம்பத்தகுந்தவையல்ல. கொழும்பிலேயே கூட, உதவியை விட ஒரு அரசாங்க அதிகாரியைக் கூட காணவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ் சாட்டுகிறார்கள். காலியில் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் உணவு, சுத்தமான நீர் அல்லது மருந்து இன்றி சிரமப்படுவதாகவும் அவர்கள் தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சொந்த வளங்களில் அல்லது ஏனையோரின் உதவியில் தங்கியிருக்கத் தள்ளப்பட்டிருப்பதாகவும் ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டியிருந்தன. கடுமையான சேதங்களுக்குள்ளான கிழக்கு கரையோரத்திலும், அதே போல் வடக்கிலும் சிறிதளவு தகவல்களே கிடைத்த போதிலும், அங்கு நிலைமைகள் இதிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என நம்புவதற்கு காரணங்கள் கிடையாது.

இலட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளின்றி இருப்பதோடு நோய்க்கும் பட்டினிக்கும் ஆளாகும் நிலையில் உள்ளனர். இன்னமும் சிறிதளவான அவசர உதவிகளே அவர்களை சென்றடைகின்றன. இந்த பேரிடருக்கான பொறுப்பு, கொழும்பில் உள்ள அரசாங்கம், மற்றும் அப்போதும் தற்போதும் அவர்களின் திட்டமின்மை மற்றும் முன்னறிவிப்பின்மை மட்டுமன்றி பிரதான முதலாளித்துவ சக்திகளிலும் தங்கியிருக்கின்றது. அவர்கள் அற்ப உதவிகளை செய்தாலும் கூட குமாரதுங்கவின் பாராட்டைப் பெறுகின்றனர்.

மீள் கட்டுமானத்தைப் பொறுத்தளவில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் கடந்த காலத்தில் விபத்துக்களின் போது அதன் முன்னோடிகள் செயற்பட்டது போல் இம்முறையும் செயற்படவுள்ளது. உடனடி நெருக்கடிகள் கடக்கப்படும்போது மீள் கட்டுமான உதவிக்கான வாக்குறுதிகளும் காற்றில் போய்விடும். உதாரணமாக பல மாதங்களுக்கு முன்னர் வரட்சியாலும் அதன் பின்னர் வந்த வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் உதவிகளுக்காக காத்திருக்கின்றார்கள்.

இப்பொழுது குமாரதுங்க எதிர்காலத்திற்காக முன்னெச்சரிக்கை கருவிகளை பொருத்துவதற்கு வாக்குறுதியளிக்கின்றார். இன்னமும் அவரும் அவரது அரசாங்கமும் அல்லது எந்தவொரு உத்தியோகபூர்வ முகவரும் கடல் கொந்தளிப்புக்கு முன்னதாக விழிப்பை ஏற்படுத்தாதது ஏன் என்பதை விளக்கவில்லை. சுமாத்ராவுக்கு அருகில் ஏற்பட்ட பெரும் பூமியதிர்ச்சி பற்றிய முதலாவது அறிக்கை வந்தவுடனேயே எச்சரிக்கை விடுக்கத் தவறியமை, குறைந்த பட்சத்திலேனும் குழப்பத்தையும் ஒழுங்குமுறையின்மையையும் சுட்டிக் காட்டுகிறது. இந்து சமுத்திரத்தில் சுனாமி எச்சரிக்கை அமைப்பு இல்லாததன் காரணமாக இலங்கை அதிகாரிகளால் கடல் பேரலை ஒன்று வந்து கொண்டிருப்பதை உடனடியாக உறுதிப்படுத்திக்கொள்வது சாத்தியமற்றதாக இருந்தது. ஆனால் பூமி அதிர்ச்சியின் அளவு முன்வரவுள்ள ஆபத்துப்பற்றி முடிவெடுப்பதற்கான முயற்சிகளை தூண்டிவிட்டிருக்க வேண்டும். ஆயினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதியின் வெற்று வாக்குறுதிகளின் பின்னால் இருப்பது, இந்த அழிவின் பின்னர் தோன்றக்கூடிய உள்ளார்ந்த அரசியல் பிரதிவிளைவுகள் பற்றிய அச்சமே அன்றி பாதிக்கப்பட்டவர்கள் மீதான அக்கறையல்ல. ஞாயிறன்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பிற்கு முன்னதாகவே இலங்கையின் அரசியல் நிலமை பெருமளவில் ஸ்திரமற்றிருந்தது. நாட்டின்20 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான ஒரு உறுதியற்ற யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருந்து கொண்டுள்ள போதிலும், மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான சமாதானப் பேச்சுக்கள் 2003 ஏப்பிரலில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன. குமாரதுங்கவும் அவரது சுதந்திர முன்னணி அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களில் நாட்டை விற்பதாக முன்னைய அரசாங்கத்தை கண்டனம் செய்வதன் மூலமும் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதாக வாக்குறுதியளிப்பதன் மூலமுமே ஆட்சிக்கு வந்தனர். பத்து மாதங்களுக்குள் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிரான வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புக்கு சுதந்திர முன்னணி முகங்கொடுத்தது.

இந்த வாரம் நிகழ்ந்த நெருக்கடியான சம்பவங்கள் இந்த பதட்ட நிலைமைகளை மேலும் விரிவுபடுத்தவும் மோசமாக்கவுமே செய்யும். தற்போது இலட்சக்கணக்கானவர்கள் உணர்ந்துள்ள அதிர்ச்சியும் திகைப்பும், அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட நிவாரணங்களைக் கூட வழங்கத் தவறியமைக்கு எதிரான ஆத்திரத்தை துரிதமாக தூண்டிவிடும் என்பதையிட்டு குமாரதுங்கவும் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனமும் மிகவும் விழிப்பாக உள்ளனர். குமாரதுங்கவின் உரை, எல்லவாற்றுக்கும் மேலாக இந்த அரசியல் நேர வெடிகுண்டை செயலிழக்கச் செய்வதையும் மோசமான நிலைமைக்கு தயார்செய்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி ஆயுதப் படைகளையும் பொலிசாரையும் வேறுபடுத்தி விசேடமாக புகழாரம் சூட்டுவது தற்செயலானதல்ல. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கும் பொலிசாருக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சிப்பாய்களும் பொலிஸ் அதிகாரிகளும் சாதாரண மக்கள் எதிர்கொண்டுள்ள பயங்கரமான நிலைமையை தணியச் செய்வதற்காக தாங்களாகவே அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்கள். ஆனால் இதற்கு சமமான வகையில், அரசாங்கத்திற்கு எதிராக தோன்ற ஆரம்பிக்கும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்குவதற்கு இதே பாதுகாப்புப் படைகள் அணிதிரட்டப்படும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

ஐக்கியத்திற்கான "அழைப்பு"

குமாரதுங்க தனது உரையில் தேசிய ஐக்கியத்திற்கும் அழைப்பு விடுக்கின்றார். "இந்தப் பெரும் இயற்கை அனர்த்தத்துடன் போராடுவதற்கு சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் என பிரிந்து செயற்படுவது சாத்தியமானதல்ல. நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தனியொரு சமுதாயம் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவது சாத்தியமானதல்ல. இந்த மாபெரும் சவாலுக்கு அரசியல் கட்சிகள் சொந்தமாக தீர்வுகளை வழங்குவது என்பதும் கடினமான பணியாகும். ஆகவே, இந்த பெரும் அழிவிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்பும் தூய்மையான பணிக்கு நான் விடுக்கும் அழைப்பே இது. சகல வேறுபாடுகளையும் கைவிட்டு, எம்மைப் பிரிக்கும் எல்லைக் கோடுகளைக் கடந்து நாம் ஒரே நாடு ஒரே மக்களாக நிற்போம்," என அவர் பிரகடனப்படுத்தினார்.

கேள்வி என்னவென்றால்: ஐக்கியத்திற்காக அழைப்பு விடுப்பதற்கு இவ்வாறான ஒரு அவலம் இடம்பெறும் வரை காத்திருந்தது ஏன்? அதன் சாரத்திலேயே இது சாதாரண மக்களுக்கான ஒரு அழைப்பு அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, என்னதான் மோதல்கள் இருந்தாலும் சுனாமியின் தோற்றத்துடன் வெடிக்கவுள்ள எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை கூட்டாக எதிர்கொள்ள கசப்பான உள்முரண்பாடுகளை ஓரங்கட்டிவிட்டு ஒன்றிணையுமாறு இலங்கையின் ஆளும் கும்பல்களுக்கு விடுக்கும் அழைப்பாகும்.

1948 சுதந்திரத்தில் இருந்தே, ஆளும் வர்க்த்தின் பல தட்டுக்கள் அதிகாரத்தில் தங்களது சொந்த நுணுக்கமான பிடிப்பை பேணிக்கொள்வதற்காக தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிரிப்பதன் பேரில் இனவாதத்தை தூண்டிவந்துள்ளன. குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.மு) உள்நாட்டு யுத்தத்திற்கும் மற்றும் 65,000 உயிர்களை காவுகொண்ட தொடர்ச்சியான மோதல்களுக்கும் வழிவகுத்த சிங்களப் பேரினவாதத்தை ஊக்குவித்தமைக்கு நேரடிப் பொறுப்பாளிகளாவர். குமாரதுங்கவின் அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்களத் தீவிரவாதக் கட்சிகளின் ஆதரவிலேயே தங்கியிருக்கின்றது.

ஆச்சரியமற்ற வகையில் "ஐக்கியம்" என்ற பதம் உத்தியோபூர்வ ஸ்தாபனத்தின் ஏனைய தட்டுக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் "தேசிய ஐக்கியத்திற்கான அரசாங்கத்தின்" மூலம் உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டி கொடூரமான "மறுசீரமைப்பு" நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தவர்களாவர்.

டெயிலி மிரர் பத்திரிகை அதனது ஆசிரியர் தலையங்கத்தில், "ஆயிரக்கணக்கான உதவியற்ற மக்கள் அனுபவிக்கும் உள மற்றும் உடல் ரீதியான வருத்தங்களை தணிப்பதற்காக ஐக்கியம், சக்தி மற்றும் இரக்கம் மணப்பான்மைக்கு" அழைப்பு விடுத்தது. அழிவுக்கு முகம்கொடுப்பதற்காக ஒரு அனைத்துக் கட்சி குழுவை அமைப்பதன் பேரில் ஐ.தே.க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எடுத்த தீர்மானத்தை அது பாராட்டியது. இதே அழைப்பை விடுத்த ஐலண்ட் பத்திரிகை, புலம்பெயர்ந்தவர்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைத்து தேசிய ஐக்கியத்திற்கு ஊக்கமளிக்குமாறு வேண்டுகோள்விடுத்ததாக குறிப்பிட்டது.

பிரதான வர்த்தக அமைப்புகளின் ஒரு குழுவான கூட்டு வர்த்தக சம்மேளனம், வெளியிட்ட அறிக்கையில்: "இந்த பெரும் தேசிய அழிவானது இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது வேறுபாடுகளை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் இந்த அழிவுக்கு முகம்கொடுப்பதற்காக உளசக்தியையும் தைரியத்தையும் வழங்கி தலைமைத்துவத்தை வழங்குவதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் இது என நாம் உணர்ந்துகொண்டுள்ளோம்" என அது பறைசாற்றுகிறது.

ஐக்கியத்திற்கான அழைப்பு விடுதலைப் புலிகளுக்கும் அவதானத்துடன் விடுக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகால யுத்தத்தாலும் சுனாமியாலும் சீரழிந்து போன வடக்கு மற்றும் கிழக்கு கிராமத்தவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் முகம்கொடுத்துள்ள நிலைமைகள் மிக மிக மோசமானவையாகும். விடுதலைப் புலி அலுவலர்களும் இராணுவ துருப்புக்களும் சில பிரதேசங்களில் கூட்டு நிவாரண பணிகளை இணைந்து மேற்கொள்கின்றன. ஆயினும் ஏனைய பிரதேசங்களில் இராணுவத்தினர் சிங்களப் பேரினவாத குண்டர்களுடன் சேர்ந்து நலன்புரி நிவாரண அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுளைவதை தடுக்கின்றன.

இந்த விடயத்தையும் கருத்தில் கொண்டால் குமாரதுங்கவின் உரை இனம், மொழி அல்லது மத பேதங்களின்றி ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற மனநிலைக்கு அழைப்புவிடுப்பதன் மூலம் அரசாங்கத்தின் இலாயக்கற்ற நிலைமைக்கு எதிராக உழைக்கும் மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்பை செயலிழக்கச் செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முற்றிலும் வேறுபட்ட வகையில், பலர் தனிப்பட்டமுறையில் உற்சாகத்தையும், சொந்த அர்ப்பணிப்பையும் பெருந்தன்மையையும் அசாதாரணமான முறையில் வெளிக்காட்டியுள்ளனர்.

ஆயினும், அழிவின் பரிமாணத்திற்கு குறிப்பிடத்தக்கவகையில் பொறுப்பேற்கவேண்டிய அரசியல் ஸ்தாபனத்துடன் கைகோர்ப்பதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் எதையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. சாதாரண உழைக்கும் மக்களின் சுயாதீன நடவடிக்கைகள், சமுதாயத்தை ஒரு சில செல்வந்தர்களின் இலாபங்களுக்காக அன்றி, வெகுஜனங்களின் சமூகத் தேவைகளை அடையும் பொருட்டு மேலிருந்து கீழ்வரை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான மேலதிக நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.

குமாரதுங்க தனது உரையின் முடிவில் இலங்கை ஆளும் வர்க்கத்தின் காலங்கடந்த வழிமுறையை நாடினார்: அவர் நாட்டின் மத நிறுவனங்களின் பின்னால் அணிதிரளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். டிசம்பர் 31ம் திகதியை தேசிய துக்கதினமாக பிரகடனம் செய்த அவர், உயிரழந்தவர்களுக்காக மூன்று நிமிட மெளன அஞ்சலி செலுத்துவதற்காக அன்று மாலை 6.30 மணிக்கு பல இடங்களிலும் சமய பிரார்த்தனைகளுக்காக சமூகமளிக்குமாறு முழு ஜனத்தொகைக்கும் அழைப்புவிடுத்தார். சிதைந்துபோன "இடது" கட்சிகள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இந்த வஞ்சகமான பயிற்சியை மேற்கொள்வதற்காக குமாரதுங்கவுடன் சேர்ந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.

அவர்கள் அனைவரும் தற்போதைய நிலைமைக்கான உண்மையான காரணத்தைப் பற்றிய எந்தவொரு விமர்சனரீதியான பரிசோதனையையும் செயலிழக்கச் செய்ய முனைகின்றனர். சுனாமியை அடுத்து இலங்கையில் லட்சக்கணக்கானவர்களும் தெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்களும் எதிர்கொண்ட அனர்த்தத்தம் தவிர்க்கமுடியாத கடவுளின் செயல் அல்ல. கடல் பேரலைகளை உண்டுபண்ணிய நில நடுக்கத்திற்கு நிச்சயமாக இயற்கை காரணமாக இருந்த போதிலும், அதன் விளைவுகள் இந்தளவு அழிவுகரமானதாக இருந்தது ஏன் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகும்.

பூமியதிர்ச்சியை சரியாக முன்கூட்டி அறிவிக்க இன்னமும் விஞ்ஞானத்தால் முடியாமல் இருக்கலாம், ஆனால் சுனாமியன் ஆபத்துப் பற்றி விழிப்பை ஏற்படுத்துவதற்கு பசுபிக் சமுத்திரத்தில் முன்னெச்சரிக்கை இணைப்பு உள்ளது. இந்து சமுத்திரத்தில் அவ்வாறான ஒரு அமைப்பு இல்லாதது ஏன்? கடல் பேரலைகளுக்கு மட்டுமல்லாமல் ஏனைய இயற்கை அழிவுகளுக்கும் இரையாகும் வகையில் மில்லியன் கணக்கான மக்கள் வங்காள விரிகுடாவைச் சூழ அமைந்துள்ள தாழ்நிலப் பகுதியில் குடிசைகளில் வாழத் தள்ளப்பட்டிருப்பது ஏன்?

ஆளும் கும்பல்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் பணயமாக வைக்கப்படும்போது, வளங்களும் திட்டங்களும் மிகுந்ததாக இருக்கும். எண்ணெய் வளம் மிக்க ஈராக்கை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கைப்பற்றிக்கொண்டபோது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்கள் குவிந்தன. ஆயினும், பத்தாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு பத்துலட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதிப்புக்குட்படுத்திய, தெற்காசிய அழிவுகள் நடந்து பல நாட்கள் தாமதமாகி கிடைத்த உத்தியோகபூர்வ பிரதிபலிப்புகளும் கூட சில மில்லியன் டாலர்களே ஆகும்.

Top of page