World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Beijing on heightened alert after the death of Zhao Ziyang

ஜாவோ ஜியாங்கின் மரணத்திற்குப்பின் உச்சநிலை எச்சரிக்கையில் பெய்ஜிங்

By John Chan
25 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவோ ஜியாங், ஜனவரி 17ம் தேதி காலமானமை, பெய்ஜிங்கில் ஒரு பதட்டம்மிக்க, வெடித்தெழும் திறனுடைய அரசியல் சூழலை தோற்றுவித்துள்ளது.

85 வயதாகியிருந்த, அவமதிப்பிற்குட்பட்டிருந்த ஜாவோ, 1989ம் ஆண்டு தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற பெரும் வெகுஜன எதிர்ப்புடன் நெருக்கமாக அடையாளம் காணப்பட்டிருந்தார். இவருடைய மரணம் பரந்த வகையிலான அதிருப்தி, ஜனநாயக உரிமைகள் மற்றும் கெளரவமான வாழ்க்கைத் தரங்கள் இவற்றிற்கான கோரிக்கைகள் மீதான குவிமையமாகிவிடுமோ என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். சொல்லப்போனால் அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்சியின் முன்னாள் செயலாளர் ஹுயாவோபாங்கின் மரணத்தை ஒட்டிய பொதுமக்களுடைய துக்கம்தான், 1989 நிகழ்வுகளுக்கு உந்துதலை அளித்திருந்தது

ஜாவோவின் மரணம் பற்றி சீனத் தலைவர்கள் எந்த அளவிற்கு பதட்டத்தை கொண்டிருந்தனர் என்பது, கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களிடம் என்ன விளைவு ஏற்படும் என்பதைச் சோதிக்கும் வகையில் அவர் "இறந்துவிட்டார்" என அரசாங்கம் இருமுறை போலியான செய்தியை வெளியிட்டதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கடந்த வாரம் உயர்மட்ட CCP தலைவர்கள் ஜாவோவின் உண்மையான மரணத்தை எப்படி எதிர்கொள்ளுவது என்று முடிவெடுப்பதற்குப் பல தொடர்ச்சியான அவசர கூட்டங்களை நடத்தினர். கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சாங் ரென்குயோங், ஜனவரி 8ம் தேதி இறந்தபோது எத்தகைய விளைவும் நேர்ந்துவிடவில்லை.

ஹாங்காங்கை தளமாகக் கொண்டுள்ள Oriental Daily இதழின்படி, ஜனாதிபதி ஹு ஜின்டாவோ, தன்னுடைய மற்றும் அரசின் பாதுகாப்புத் தலைவர் லுவோ காங் தலைமையில் ஒரு சிறப்பு பணிப்படையை அமைத்து, அதில் நாட்டின் போலீஸ் மற்றும் துணைப்பாதுகாப்பு பிரிவினர்கள் மீது நேரடிக்கட்டுப்பாட்டை கொண்டுள்ளார். சீனப் புத்தாண்டையொட்டி வரும் தினங்கள் "மிகவும் உணர்வைக் காட்டும் காலமாக இருக்கலாம்" என்ற கவலையில், பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மில்லியன் கணக்கான கிராமப்புறத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களை பெரு நகரங்களைவிட்டு அகன்று, விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளது. பிராந்திய அரசாங்கங்களும் ஜாவோவிற்காக எவ்வித பொது இரங்கல் கூட்டங்களைத் தடுக்குமாறு கோரப்பட்டுள்ளன.

ஜாவோவின் மரணம் பெரும் தணிக்கைக்கு உட்பட்டுள்ளது. அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான Xinhua இரண்டு சிறு பந்திகளை எழுதியுள்ளது; இதில் "தோழர் ஜாவோ ஜியாங்" மூச்சுத் திணறல் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களினால் பாதிப்புற்று இறந்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அவருடைய பின்னணி பற்றியோ, சாதனைகள் பற்றியோ எந்தக் குறிப்பும் கூறப்படவில்லை. ஏராளமான இணையதளச் செய்தி அறிவிப்புக்களை அதிகாரிகள் மூடிவிட்டனர். ஜனவரி 18 அன்று வாஷிங்டன் போஸ்ட் அளித்த தகவலாவது: "இணைய தளங்களில், குறிப்பாக கல்லூரிச் செய்திப் பலகைகளில், உபயோகிப்பவர்கள் பல்லாயிரக்கணக்கான குறிப்புக்கள் இல்லாவிடிலும், நூற்றுக்கணக்கான துயரச் செய்திக் குறிப்புக்களைக் கொடுத்தனர்; இவற்றில் பெரும்பாலானவை விரைவில் அழிக்கப்பட்டு விட்டதைத்தான் அவர்கள் காணமுடிந்தது."

நன்கு அறியப்பட்டிருந்த எதிர்ப்பாளர்கள், குறிப்பாக 1989 எதிர்ப்புக்களில் பங்கேற்றவர்கள், கடுமையான போலீஸ் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் தங்கள் தொலைப்பேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டதை அறிந்துள்ளனர்.

1989ல் களையெடுக்கப்பட்டிருந்த, ஜாவோவின் அன்பிற்குட்பட்டிருந்த பாவோ டோங்கும் தன்னுடைய படுக்கையறையைவிட்டு நீங்கக்கூடாது என்றும் ஜாவோவின் இல்லத்திற்குச் செல்லக்கூடாது என்றும் தடைசெய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ரேடியோ ப்ரீ ஏசியாவின் தகவல்படி, பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் கூறியிருந்ததாவது: "கதவைத் தாண்டி நீங்கள் செல்லமுடியாது. இது மேலிடத்து உத்தரவு." ஜாவோவிற்கு இரங்கல் தெரிவித்த குறிப்பின் ஒரு பகுதியாக, பாவோ, "ஜாவோவின் தலைமையை தனிமைப்படுத்தியது அவர்களுடைய வலுவற்றதன்மையயும், வெட்கம் கெட்ட தனத்தையும்தான் வெளிப்படுத்த உதவியுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஜாவோவின் வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய போலீஸ் படை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்கூட தங்கள் மரியாதையைச் செலுத்துவதற்கு, அதிகாரபூர்வ அனுமதி தேவை என்றிருந்தது. ஜனவரி 19 அன்று அதிகாரிகள் தடைகளைச் சற்று தளர்த்தியவுடன், குறைந்தது 3,000 பேர்களாவது, வேலையிழந்த தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், என்று பலரும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். அப்பொழுதில் இருந்து மீண்டும் அதிகாரிகள் கடுமையான வரம்புகளை புகுத்தியதால், துக்கம் அனுசரிப்பவர்களுடன் பூசல்களைத் தூண்டிவிட்டுள்ளனர்.

சீனாவில் இருக்கும் மனித உரிமைகள் அமைப்பு கொடுத்துள்ள தகவலின்படி, அவருடைய மரணத்தன்று பெய்ஜிங்கில் தனியார் இல்லங்களில் ஜாவோவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறு சடங்குகள் ஏராளமாக நடைபெற்றன. ஷாங்காயில் 700 முதல் 800 ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் மக்கள் காங்கிரஸ் இவற்றின் கூட்டுக் கூட்டத்திற்கு வெளியே, மிகுந்த தன்னார்வத்துடன் ஜாவோ பற்றிய தங்கள் பரிவுணர்வை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக ஆயிரம் போலீசார் அனுப்பப்பட்டனர்.

இன்னும் கூடுதலான 1,000 போலீஸ்காரர்கள் தியனன்மென் சதுக்கத்தில் பொதுத் துக்கம் கடைப்பிடிக்கப்படல் அல்லது பொது எதிர்ப்புக்கள் காட்டல் இவற்றைத் தடுப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஜாவோவின் மரணத்தைப் பற்றி இரங்கல் நடத்தும் முயற்சிகளில் பொது ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டதை அடுத்து, பல சீன நகரங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன. பெய்ஜிங்கில், ஜாவோ ஜின் என்னும் 1989 எதிர்ப்புக்களின் பழைய மாணவர் தலைவர் ஞாயிறன்று 5,000 பேர் அடங்கிய அணி ஒன்றை ஏற்பாடு செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

பெய்ஜிங் ஒரு சங்கடத்தில் அகப்பட்டுள்ளது. மிகக் குறைந்த பொது இரங்கலை அனுமதித்தாலும், அத்தகைய கூட்டங்கள் தங்களை உயிர்த்துக் கொண்டு, கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஆனால் ஜாவோவிற்கான பரிவுணர்வின் வெளிப்பாடுகள் அனைத்தையும் நசுக்க அரசாங்கம் முற்பாட்டால், இதற்குப் பெரும் பின்விளைவு ஏற்படக்கூடும்.

அதிகாரபூர்வமான துக்கம் காட்டப்படுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தலைமையானது, சீனாவின் மூத்த தலைவர்களின் கல்லறைப் பகுதியான பெய்ஜிங்கின் பாபோவ் ஹில்லில், ஒரு "விடை கொடுத்து அனுப்பும் சடங்கை" நடத்த முடிவெடுத்துள்ளது. மற்றொரு பெயரளவு நடவடிக்கையில், துணை ஜனாதிபதியான ஜெங் குயிங்ஹோங் மற்றும் சில தலைவர்கள் ஜாவோவை, அவருடைய கடைசி நிமிஷங்களில் பார்ப்பதற்கு, விரைந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த "விடைகொடுத்து அனுப்பும் சடங்கு" கூட சில அரசியல் பிரச்சினைகளைக் கொடுத்துள்ளது. இதற்கு இன்னும் தேதி குறிப்பிடப்படவில்லை; மேலும் இப்பொழுதுள்ள சீனத்தலைவர்கள் ஜாவோவைப் பற்றி என்ன கூறுவது என்றும் முடிவெடுக்கவில்லை. இராணுவத்தைப் பயன்படுத்தி 1989ம் ஆண்டு எதிர்ப்புக்களை கொடூரமாக இரத்தம் சிந்தும் வகையில் அடக்கியதற்கு அவரது எதிர்ப்பை பற்றிய குறிப்பு பொது விவாதத்திற்கு வழிவகுக்கலாம்; அது ஆளும் கட்சிக்குள்ளேயே கொதித்துக் கொண்டிருக்கும் பிளவுகளை அதிகப்படுத்தலாம்.

குறைந்தது 20 மூத்த கட்சித்தலைவர்களாவது ஜாவோவிற்கு முழு அரசாங்க மரியாதையுடன்கூட இறுதிமரியாதைகள் நடத்தப்படவேண்டும் என்று கோரியுள்ளனர். அவருடைய குடும்ப உறுப்பினர்கள், 1989ல் ஜாவோ ஒரு "பெருந்தவறிழைத்து விட்டார்" என்று சீனத் தலைமையின் மதிப்பீட்டுடன் உடன்படவில்லை என்று செய்தி ஊடகத்திடம் கூறினர். அதிகாரபூர்வ அறிக்கைகளில் இத்தகைய கருத்துக்கள் அடங்கியிருந்தால் அவர்கள் பெய்ஜிங்குடன் ஒத்துழைக்க மாட்டோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தீர்க்கப்படாத சமூக முரண்பாடுகள்

ஜாவோவின் மரணத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, 1989 நிகழ்வுகளின் மூலம் வெளிப்பட்ட பிரச்சினைகள் எதையும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தீர்த்துவைக்கவில்லை என்ற உண்மையை உயர்த்திக்காட்டுகிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெரும் அளவில் சீனாவிற்குள் முதலீடு பாய்ந்துள்ளமை ஏழைகள், செல்வந்தர்களுக்கிடையே பிளவை ஆழப்படுத்தியுள்ளதுடன், எதிர்ப்புக்களின் பின்னணியில் இருந்த முரண்பாடுகளையும் நன்கு உயர்த்திக்காட்டுகிறது. குறிப்பாக விவசாயிகள் மத்தியில், ஆளும் எந்திரத்தின் சமூகஅடித்தளம் இன்னும் கூடுதலான முறையில் அரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் அரசியல் நிலைமையோ நொருங்கிவிடும் தன்மையை மிகுதியாக்கிவிட்டுள்ளது.

ஒரு சமூக வெடிப்பை எப்படித் தடுப்பது மற்றும் அதன் ஆட்சியை எப்படிப் பாதுகாத்து வைத்துக் கொள்வது? என 1989ல் எதிர்கொண்ட அதே இக்கட்டான நிலைமையைத்தான் பெய்ஜிங் இப்பொழுதும் எதிர்கொள்ளுகிறது. புதிய நடுத்தரவர்ககத்தை ஈர்க்கும் வகையில் சந்தை மறுசீரமைப்பு தீவிரப்படுத்தப்பட்டு, வரம்பிற்குட்பட்ட ஜனநாயக சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டால் ஒரு புதிய சமூக அடித்தளம் தோற்றுவிக்கப்பட அவை உதவும் என்று ஜாவோ வாதிட்டிருந்தார். 1989ல் தியனன்மென் சதுக்கத்தில் படுகொலைக்கு உத்தரவிட்டிருந்த டெங் சியாவோபிங்கும் ஏனைய கடுங்கோட்பாட்டாளர்களும், மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களை ஜாவோ ஊக்குவித்தது, வேலைகள், மற்றும் தரமான வாழ்க்கைத் தரம் வேண்டும் என்று ஒத்துப்போக முடியாதவற்றுக்கான கோரிக்கைகளைக் கொண்டிருந்த, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வறியவர்களால் எதிர்ப்பைக் காட்டுவதற்கே கதவு திறந்துவிட்டதாக சுட்டிக்காட்டினர்.

தியனன்மென் சதுக்கத்தில் ஏராளமான தொழிலாளர்களும் மிகப்பெரிய முறையில் எதிர்ப்புக்களை தெரிவிக்கக் கூடியபோது இந்தக் கட்டத்தில்தான், ஜாவோவும் அவருடைய ஆதரவாளர்களும் 1989 மே மாதம் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். இவர்கள் மாணவர்களுடைய கோரிக்கையான அரசியல் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவம் பயன்படுத்தப்படுவதையும் எதிர்த்தனர். இதன் விளைவாகத்தான், ஜாவோ தியனன்மென் சதுக்க இயக்கத்தின் அடையாளமாகப் பரந்த முறையில் கருதப்படுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

கடும் நடவடிக்கை எடுத்த பின்னர், மத்திய தலைமையிட அறிக்கை ஒன்று ஜாவோதான் நிகழ்வுகளுக்குக் காரணம் என்றும் "கட்சியை உடைக்கும் வகையில் கொந்தளிப்பிற்கு ஆதரவு தந்த பெரும் தவறினை தோழர் ஜாவோ ஜியாங் இழைத்துவிட்டார். கொந்தளிப்பு உருவாக்கப்பட்டு, வளர்ச்சியுறும் வகையில் அசைக்கமுடியாத பொறுப்பையும் அவர் கொண்டிருந்தார்" என்று அறிவித்தது. 1989 எதிர்ப்புக்களை இப்பொழுதெல்லம் சீனத்தலைமை "எதிர்ப்புரட்சிகர எழுச்சி" என்று குறிப்பிடுவதில்லை என்றாலும், அதன் மதிப்பீடு தொடர்ந்து மாறாமல்தான் இருக்கிறது.

Tiananmen Papers என்னும் 1989 நிகழ்வுகள் பற்றிய CCP உட்கட்சி ஆவணங்களின் தொகுப்பின் சக ஆசிரியராக இருந்த ஆண்ட்ரூ நாதன், BBC இடம் கடந்த வாரம் கூறினார்: "சீனா மிகப் பெரிய அளிவில் மாறியுள்ளது என்பதை நான் அறிவேன், 1989ல் இருந்த சீனா அல்ல இது. ஆனால் மாறுதல்களில் பலவும் சமூக பதட்டங்களில் புதிய கூறுபாடுகளைக் கொண்டுவந்துள்ளன; சமுதாயத்தில் அதிருப்தி அடைந்துள்ள புதிய பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. எனவே ஓர் அடையாளமான முறையில் ஜாவோ இன்னும்கூட இப்பொழுதுள்ள புதிய சமுதாய பிரச்சினைகளுக்கும் பொருந்தக்கூடிய நீதி என்னும் கருத்திற்காக, வறியவர்களுக்காக நிற்கிறார். எனவே, ஓர் அடையாளக் குறி என்னும் முறையில் அவர் ஆபத்துநிறைந்தவர்."

பெய்ஜிங்கை எதிர்கொண்டுள்ள ஆபத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இணையதளத்தில் கடந்த வாரம் சுற்றறிக்கைக்கு விடப்பட்டிருந்த அறிவிப்பு ஒன்று, தடை செய்யப்பட்டுள்ள தாராளவாத அறிவுஜீவிகள், பாலுன் கோங் உறுப்பினர்கள், வேலையற்ற தொழிலாளர்கள், நிலமற்ற விவசாயிகள் இன்னும் "அரசியலில் ஊழல் நிறைந்த ஆட்சியின் கீழ் அநீதிகளில் வாடுபவர்கள், மற்றும் சீனாவின் அரசியல் விதி பற்றிக் கவலை கொண்டுள்ள வெளிநாட்டினர்" அனைவரும் தியனன்மென் சதுக்கத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

"திரு. ஜாவோ ஜியாங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது, சீனாவிலேயே கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள பெருத்த அவமானகரமான விஷயமாகும். ...கடந்த 15 ஆண்டுகளில் ஜூன் 4ம் தேதியின் இரத்தக்கறை இன்னும் உலர்ந்துவிடவில்லை. சமயத்திற்கு எதிரான அடக்குமுறை தீவிரமாகிக் கொண்டு வருவதுடன், மனித உரிமைகள் மீறலும் பேரழிவு கொடுக்கக் கூடிய வகையில் அடிக்கடி நடந்து வருகின்றன. மக்களுடைய வாழ்க்கைத் தரங்கள் சீரழிந்து கொண்டு வருகின்றன. எல்லா இடங்களிலும் எதிர்ப்புக்கள் எழுச்சியுற்று வருகின்றன; அரசாங்கம் கூடுதலான முறையில் பாசிசத் தன்மையைக் கொண்டுள்ளது."

1989ல் பல மாணவர்களிடையே இருந்த உணர்வுகளுக்கு மாறாக, இந்த அறிக்கை தற்போதைய அல்லது வரக்கூடிய சீனத் தலைமை சுயசீர்திருத்தத்தை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை; மாறாக இது "செய்யக்கூடிய நடைமுறை செயலுக்கு" அழைப்பை விடுத்துள்ளது. 1989ன் கூடுதலான புரட்சிகர சொல்வண்ணம் சிலவற்றை நினைவு கூரும் வகையில் இது அறிவித்துள்ளதாவது: "பெய்ஜிங் இன்னும் கூடுதலாக போலீஸ் மற்றும் சிறைச்சாலைகளை தயார் செய்யட்டும். நாம் எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு சென்று பாஸ்ரி ஐ (14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாரிசில் இருந்த படை அரண், சிறைச்சாலை, இது 1789ல் அழிக்கப்பட்டது) தகர்ப்போம்."

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை வீழ்த்திடுவதற்கு ஜாவோ எப்பொழுதுமே ஆதரவாக இருந்ததில்லை. அவருடைய அரசியல் கருத்துவேறுபாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும், முற்றிலும் தந்திரோபாய தன்மையைத்தான் கொண்டிருந்தன. பொருளாதார மறுசீரமைப்பின் வழிவகையை விரைவுபடுத்தும் வகையில் தலைமையிடத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிமுறையாக மாணவர் எதிர்ப்புக்களுக்கு ஊக்கம் கொடுத்தார், சீர்திருத்தம் தேவை என்ற அவர்களது கோரிக்கைகளுக்கு பரிவும் காட்டினார். ஆனால் மற்றய தலைவர்களைப் போலவே, இவர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் 1989ல் தலையீடு செய்தபோது அதனால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்திருந்தார். அவர் வெளியேற்றப்பட்ட பின்னர், ஜாவோ இந்த சமூகத் தட்டுக்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை, தன்னை பதவியில் இருந்து அகற்றியதை அமைதியுடன் ஏற்றுக்கொண்டார்.

எனவேதான் ஜாவோ, கடந்த வாரம் மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களில், சீனாவில் மிண்டும் சந்தை உறவுகளைக் கொண்டுவருவதில் அவரது முக்கிய பங்கைப் பாராட்டும் வகையில் "சீனாவின் கோர்பச்சேவ்" என்று புகழாரம் சூடியதில் வியப்பு ஏதும் இல்லை. உதாரணமாக, வெள்ளை மாளிகையின் செய்திச் செயலாளரான ஸ்காட் மக்கிளெல்லன் ஜாவோவை "ஒழுக்கநெறி நிறைந்திருந்த வீரர்", "சீனாவின் திறந்தமுறை பொருளாதாரக் கொள்கையின் முக்கிய சிற்பி" என்று அறிவித்தார்.

சீனாவின் பொருளாதாரத் திட்டத்தில் பெரும்பகுதி 1980களில் ஜாவோ ஏற்படுத்திய அஸ்திவாரங்களின் அடிப்படையில் உள்ளது; அப்பொழுது கூட்டு விவசாயத்தை கட்டுப்பாட்டில் இருந்து அகற்றுதல், அரசாங்கம் திட்டமிடுதலை தகர்த்தமை, "சிறப்பு பொருளாதார பகுதிகளை" கடலோர சீனாவில் நிறுவி வெளிநாட்டு மூலதனத்தை ஈர்த்தமை போன்ற பல காரியங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். 1989ன் அமைதியற்ற நிலைக்குப் பின்னணியாக இருந்த சமூக சமத்துவமின்மை மோசமானதும், பணவீக்கமும், அதிகார வட்டத்து ஊழல்களும், ஜாவோவின் அரசியலினால் ஏற்பட்ட நேரடி விளைவுகளேயாகும்.

மேலும், 1989ல் ஜாவோவின் பங்கு பற்றி அதிக கவனம் காட்டப்படுகிறதே அன்றி, இனச் சிறுபான்மையினருக்கு எதிராக அதற்கு முன்பு அவர் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் பெரும்பாலும் மறக்கப்பட்டு விட்டன. 1985ம் ஆண்டு மே மாதம், ஜாவோ, ஜின்ஜியாங் மாநிலத்தில் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே ஒரு மாணவர் இயக்கம் ஜனநாயக உரிமைகளுக்காக ஏற்பட்டபோது அதைக் கடுமையாக அடக்குவதற்கு உத்தரவிட்டார். 1988ம் ஆண்டு ஜூன் மாதம், க்சின்ஜியாங் மாநிலத்தில் மாணவர் போராட்டத்திற்கு எதிராக இன்னும் ஒரு சுற்று அடக்குமுறைக்கும் அவர் அனுமதி தந்திருந்தார். ஒரு மாதத்திற்குப் பின்னர், ஜாவோ திபெத் நாட்டில் ஏற்பட்ட எழுச்சிகளை அடக்குவதற்கு தலைமை தாங்கி நின்றார்: அதில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில், சீனாவின் தற்போதைய ஜனாதிபதி ஹு ஜின்டாவோதான் திபெத் மாநிலக் கட்சிப் பிரிவின் தலைவராக இருந்தார்.

குறிப்பிடத்தக்க வகையில் தியனன்மென் சதுக்க படுகொலைக்கு பின்னர், கட்சித் தலைமை மொத்தமாக ஜாவோ பெரும் ஆதரவு கொடுத்திருந்த சந்தை சீர்திருத்தக் கொள்கைகளை தொடரத்தான் செய்தது. உண்மையில், எந்த எதிர்ப்பையும் அடக்குவதற்கு, குறிப்பாக உழைக்கும் மக்களுடையதை அடக்குவதற்கு பெய்ஜிங் காட்டிய இசைவுதான், சீனா வணிகத்திற்குத் தயாராக உள்ளது என்ற சக்திவாய்ந்த குறிப்பை சர்வதேச மூலதனத்திற்கு கொடுத்தது. பில்லியன் கணக்கான டாலர்கள், வெளிநாட்டு முதலீடாக சீனாவில் வெள்ளப்பெருக்கு போல் நுழைந்து, அந்நாட்டின் மலிவான, பெரும் கட்டுப்பாட்டிற்குள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர் உழைப்பை சுரண்ட தலைப்பட்டன. முற்றிலும் தனியார்மயம் இதையடுத்து ஏற்பட்டுவிட்டது; கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப்படும் இக் கட்சியானது, 2002ல் தன்னுடைய கதவுகளை முதலாளித்துவ தொழில்முயல்வோர்கள் கட்சியில் சேருவதற்கு சம்பிரதாயமாகபூர்வமாக திறந்து விட்டது.

இந்தக் கொள்கைகள் அனைத்திற்குமே ஜாவோ எளிதில் உடன்பட்டிருப்பார். இறுதிப்பகுப்பாய்வில், ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவத்தையும், இவர்கள் அனைவரும் பணிந்து, போற்றி வரவேற்கும் புதிய முதலாளித்துவ செல்வந்த தட்டையும் காப்பதில் சீனத்தின் கடுங்கோட்பாட்டாளர்கள் என்று அழைக்கப்படுவோரின் பொருளாதார, அரசியல் நலன்களைத்தான் இவரும் கொண்டிருந்தார்.

Top of page