World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Whatever happened to "new" Europe?

Britain and new eastern EU members at loggerheads over budget

"புதிய" ஐரோப்பாவிற்கு என்ன ஆயிற்று?

பிரிட்டனும் புதிய ஐரோப்பிய ஒன்றிய கிழக்குப் பகுதி உறுப்புநாடுகளும் பட்ஜட் பற்றி கருத்து வேறுபாடுகள்

By Niall Green
29 June 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 16-17ல் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவுசெலவுத் திட்ட உச்சி மாநாடு பொறிந்ததை அடுத்து, ஐரோப்பாவின் புதிய, வறிய நாடுகள் கடைசி நிமிஷத்தில் சமரசத்திற்கு வாதிட்டு தங்களுக்கு கொடுக்கவேண்டிய உதவித்தொகையில் சிறிதேனும் கொடுக்கவேண்டும் எனக் கோரிய பரிதாப நிலை ஏற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தை பில்லியன் கணக்கான யூரோக்களுக்காக நம்பியிருக்கும் முன்னாள் ஸ்ராலினிச கிழக்கு ஐரோப்பிய நாடுகள், பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் ஆகிய பெரு நாடுகளிடையே சில உடன்பாட்டை வளர்ப்பதற்காக, 2007-2013 வரவுசெலவுத்திட்டத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு பகுதியை தரவும் தயாராக இருந்தனர்.

இதற்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக இருந்த லுக்சம்பெர்க்கின் பிரதம மந்திரி ஜோன்-குளோட் ஜன்கர், கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துள்ள 10 உறுப்பு நாடுகள் முழுமையாக இணைவதற்கு உதவும் வகையில், பிரிட்டன், ஆண்டு ஒன்றுக்கு பெற்று வந்த தன்னுடைய 5.1 பில்லியன் யூரோக்கள் சலுகையில் குறைந்தது ஒரு பகுதியையாவது குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியதை அடுத்து இந்த நெருக்கடி வெடித்தது. இதற்கு விடையிறுக்கும் வகையில், பிரிட்டனின் பிரதம மந்திரி டோனி பிளேர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது விவசாயக் கொள்கையை (Common Agricultural Policy- CAP) யும் அதனால் முக்கிய நலன்களை பெறும் பிரான்சையும் தாக்கினார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இன்னும் பொதுவான வகையில் "பழைய" ஐரோப்பாவை தாக்குவதற்கும், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பொதுவாகவே ஐரோப்பிய ஒன்றியம் ஆக்கிரோஷமான முறையில் தடையற்ற சந்தை சீர்திருத்தங்களை கொண்டுவராததற்கு இருக்கும் ஏற்கத்தகாத மிக மெதுவான மாறுதல்முறையையும் கண்டித்தார்.

பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக்குடனான மோதலில், பிளேயர் ஏனைய பிரச்சினைகளின் மீது கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் செல்வந்தத்தட்டுக்களுடனும் அவரது இயல்பான கூட்டாளிகளுடனும் பூசலைக் கண்டார். போலந்தின் பிரதம மந்திரி Marek Belka, பிரிட்டிஷ் பிரதம மந்திரியிடம் இறைஞ்சினார்: "ஒரு சமரசத்தை நீங்கள் தடுத்தீர்கள் என்றால், நாங்கள் போற்றுபவராக நீங்கள் இருக்கமாட்டீர்கள்."

தன்னை ஐரோப்பாவின் தடையற்ற சந்தையின் தலைமை நிர்வாகி போல் இருத்திக் கொண்டுள்ள பிளேயர், கிழக்கு ஐரோப்பாவின் வலது-சாரி, வரி-எதிர்ப்பு, பொதுநலச் செலவின-எதிர்ப்பு உயர் தட்டினர் அவரை உச்சி மாநாட்டை கெடுக்கும் உத்திகளை கையாளுவதாக தாக்கியதில், சற்றே நிலைகுலைந்து போனார்.

அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்டினால் "புதிய" ஐரோப்பா என்று சிறப்பு பெயர் சூட்டப்பட்டவாறு, இப்பகுதிகள், பிரான்ஸ்-ஜேர்மனி ஐரோப்பாவின் மையத்தை பலவீனப்படுத்துவதற்கு வாஷிங்டன் சார்பிலான பிளேயர் மேற்கொண்டுள்ள முயற்சிக்கான அத்தகைய ஆதரவு தளமாக நிரூபிக்கப்படாததில் வியப்பு ஏதும் இல்லை. இந்த "புதிய" ஐரோப்பாவின் முக்கியத்துவம் வாஷிங்டனை பொறுத்தவரையில் அதன் அரசியல் ஒன்றிணைந்த தன்மை என்பதில் இல்லாமல், வறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எளிதில் வயப்படுத்தப்பட்டு, சூழ்ச்சிக்கையாளலுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதால்தான்.

இதே காரணத்திற்காகத்தான், முன்னாள் ஸ்ராலினிச நாடுகளும் ஐரோப்பிய பட்ஜெட்டை பிளேயர் தகர்ப்பதற்கும், விவசாய செலவினங்கள்மீது பிளேயர் தாக்குதல் நடத்துவதற்கும் உடன்படப் போவதில்லை; ஏனெனில் அத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாலும் ஜேர்மனிய அளிப்புக்களின் மூலம் கிடைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியை ஆபத்திற்குட்படுத்திவிடும்; அவற்றை நம்பித்தான் இந்தாடுகளின் பலவீனமான பொருளாதாரங்கள் உள்ளன.

இதற்கு மாறாக, பிரிட்டனுக்கு உச்சி மாநாட்டில், ஹாலந்து, ஸ்வீடன், மற்றும் பின்லாந்து என்று மக்கட்தொகை கணக்குப்படி அதிகமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடைகள் வழங்கும் நாடுகளில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது; இந்நாடுகள், தங்கள் உள்நாட்டு பொதுநலச்செலவுகளை குறைத்துக் கொண்டு ஐரோப்பிய கருவூலத்திற்கு கூடுதலாகப் பணத்தை கொடுக்கும் முயற்சியில் தயக்கம் காட்டுகின்றன.

பட்ஜெட்டை பற்றிய பிளேயரின் சிந்தனையில் ஒரு மூலையில் ஸ்பெயினும் உள்ளது; அது ஐரோப்பிய ஒன்றிய நிதியில் இருந்து மிகப் பெரிய நலன்களை, ஆண்டு ஒன்றுக்கு 8.7 பில்லியன் யூரோக்கள் என்று பெறுகிறது.

தனக்கு முன்பு பதவியில் இருந்து அமெரிக்கா, பிரிட்டனுடன் உடன்பாட்டை கொண்டிருந்த கன்சர்வேடிவான ஜோஸ் மரிய அஜ்நர் போல் இல்லாமல், ஸ்பெயினை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ்-ஜேர்மன் தலைமைக்குள் கொண்டுவர முயலும் பிரதம மந்திரி ஜோஸ் லூயி ஜாபடெரோ, ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப்புற விரிவாக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஸ்பெயின் பெறும் பணத்திற்கு அச்சுறுத்தலை கொடுக்கும் என்பதோடு, ஐரோப்பாவின் குறைவூதிய உழைப்பு அரங்கை கொண்டுள்ள நாடு என்ற பெயருடைய ஸ்பெயினின் நிலைக்கும் ஆபத்து வரும் என்று கருதுகிறார்.

ஐரோப்பிய பட்ஜெட்டில் தனக்கு கிடைக்கும் ஆண்டுச் சலுகையில் ஒரு பகுதியை குறைத்து கொள்ளுவதற்கு வகை செய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றிய. பண்ணைகளுக்கு உதவித் தொகை அளிப்பதில் வெட்டு கொண்டுவர வேண்டும் என்று வளைந்து கொடுக்காமல் பிளேயர் கொண்டுள்ள நிலைப்பாட்டில் புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் சீற்றம் அடைந்துள்ளனர். பிரிட்டனை குறிப்பிட்டு, பெல்கா அது "தேசிய தன்முனைப்புவாதத்தை" அதிகமாக உச்சி மாநாட்டில் காட்டியுள்ளது என்று குறை கூறியுள்ளார்; இதற்கு முன்பு சிராக் "இரண்டு அல்லது மூன்று பணக்கார நாடுகளின் தன்முனைப்புவாதம்" தான் பேச்சுவார்த்தைகள் முறிவிற்குக் காரணம் என்று கூறியதைத்தான் கிளிப்பிள்ளை எதிரொலிப்பதுபோல் இவருடைய கருத்து இருந்தது.

செக் நாட்டின் நிதி மந்திரியான Bohuslav Sobotka, ஐரோப்பிய ஒன்றியத்தின் புது நாடுகள் உச்சிமாநாட்டின் தோல்விக்கு பொறுப்பாக்கப்படக்கூடாது என்றும் பிரிட்டனின் "அறம் பிறழ்ந்த, ஆதாரமற்ற" உதவிச் சலுகைதான் இதற்குப் பொறுப்பு என்றார்.

உச்சி மாநாட்டை தொடர்ந்து, இத்தேக்க நிலையில் இருந்து மீள்வதற்கு கண்டத்தின் தலைவர்கள் பரபரப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 27ம் தேதி, ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷரும் பிரான்சின் வெளியுறவு மந்திரி Douste-Blazy யும் வார்சோவில் போலந்தின் வெளியுறவு மந்திரி ஆடம் ரோட்பெல்டை சந்தித்தனர். ஐரோப்பிய விவகார பிரிட்டிஷ் மந்திரி டுக்லாஸ் அலெக்சாந்தரும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் கலந்து கொள்ளுவதில் ஆர்வம் காட்டவில்லை.

தற்போதைய பின்னடைவை முறிப்பதற்காக, போலந்தின் ஆணையர் Danuta Huebner ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு உச்சிமாநாடு கூட்டப்படலாம் என்று சிராக் கூறியதை போலவே அழைப்பு விடுத்துள்ளார்: "லுக்சம்பேர்க்கால் இன்னும் ஒரு சிறப்பு உச்சி மாநாடு கூட்டப்பட்டால் சமரசம் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று பேர்லின் ஏடான Zeitung க்கு அவர் கூறினார். 2007-2013 பட்ஜெட் பற்றி சமரசம் ஏதும் இல்லை என்றால், ஒரு தற்காலிக பட்ஜெட்டிற்கு போலந்து ஒப்புதல் தராது என்று போலந்தின் அரசாங்கம் கூறிவிட்டது: "குறைந்தது பாதியளவு அடிப்படை நிதியங்களை நாங்கள் இழந்து விடுவோம்" என்று அந்நாட்டில் ஐரோப்பிய விவகார மந்திரி Jaroslaw Pietras கூறினார்.

கிழக்கின் ஏழ்மை நிலை

கிழக்கு உறுப்பு நாடுகள் தங்களுடைய "அபிமான" நாட்டுடன் கொண்டுள்ள வேறுபாடுகள் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் போருக்குப் பின்னர் பெற்றிருந்த நலன்களின் இறுதிப் பகுதிகளையும் இழந்துவிட வேண்டும் என்ற பிளேயரின் கோரிக்கை மீதானது அல்ல; இந்த முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களான வார்சோ, பிராக், டால்லின், போன்றவை ஏற்கனவே தாங்களே அதைச் செய்து கொண்டிருக்கின்றன. இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் பிரிட்டிஷ் தலைவர் விரிவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பருவின பொருளாதாரக் கொள்கைகளின் (Macroeconomic policies) உறுதியை குலைப்பதாக அவை கருதுகின்றன.

பிரிட்டனின் ஒப்சேர்வர் நாளேடு, தன்னுடைய ஜூன் 19 பதிப்பில், "இப்படி தாமத்திற்குட்படுத்தப்பட்டுள்ள பட்ஜெட்டினால் பணக்கார நாடுகளுக்கு அதிக பாதிப்பு இல்லாவிடினும்," புதிதாக சேர்ந்துள்ள கிழக்கு நாடுகள் கடுமையான பாதிப்பிற்கு உட்படும் என்று எழுதியுள்ளது. பட்ஜெட்டை செயல்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு வரை தாமதம் ஏற்பட்டால், அது "போலந்து, ஸ்லோவேக்கியா போன்ற நாடுகளைப் பாதிக்கும்; ஏனெனில் போக்குவரத்து, உள்கட்டுமானம், முக்கியமான திட்டங்களுக்குச் செலவின ஒதுக்கீடுகளை அவை மேற்கொள்ள முடியாது" என்று அது குறிப்பிட்டுள்ளது.

1973ல் அயர்லாந்து இணைந்த பின்பு, அப்பொழுதிருந்த ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் ஸ்பெயின், போர்த்துகல், கிரீஸ் ஆகியவை 1980 களிலும் 1990 களிலும் சேர்ந்ததை அடுத்து, விரிவாக்கத்தினால் முக்கிய ஐரோப்பிய நாடுகள் வட்டார வளர்ச்சி உதவி நிதிக்காக பெரும் பணத்தை அளித்துள்ளன. இத்தகைய நிதிகளின் நோக்கம் வறியபகுதிகளில் போதுமான உள்கட்டுமானத்தை தோற்றவித்து, அதனால் பெரு வணிகங்கள் அங்கு ஆலைகளை அமைக்கவும், குறைவூதிய தொழிலாளர்களை பயன்படுத்தலாம் என்பதும் ஆகும். இந்தப் பணவரவு ஐரோப்பா முழுவதும் இருந்த வர்க்க அழுத்தங்களை குறைப்பதற்கும், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அடிப்படையை உறுதிப்படுத்தவும் உதவியது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைந்த, ஒப்புமையில் வறிய 10 நாடுகள், இதை ஒத்த சலுகைகள் தங்களுக்கும் பரந்த முறையில் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தன. போலந்து 60 பில்லியன் யூரோக்களை 2007-2013 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டில் எதிர்பார்த்தது. வேலையின்மை விகிதத்தில் மிக அதிகமாக உள்ள, மிக வறிய ஐந்து நாடுகளும் இதற்குக் கிழக்கே உள்ளன. இப்பகுதிகள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளன; அவற்றின் கனரக தொழில்கள் சரிந்ததால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன; அவற்றிற்கு உள்நாட்டில் இருந்து முதலீடு அதிக அளவில் வரவில்லை; ஆனால் கூடுதலாக 900 மில்லியன் யூரோக்கள் உதவித்தொகையை இச்சரிவுற்ற பட்ஜெட் காலத்தில் எதிர்நோக்கியிருந்தன. மற்ற புதிய உறுப்பு நாடுகளுடைய நிலைமையும் இதேபோல்தான் உள்ளது; செக் குடியரசு கிட்டத்தட்ட 17 பில்லியன் யூரோக்களையும், அதன் அண்டை நாடான ஸ்லோவாக்கியா 7.5 பில்லியன் யூரோக்களை உதவித் தொகையாக எதிர்பார்த்து நிற்கிறது.

2007-2013 பட்ஜெட் பற்றி உடன்பாடு ஏற்படாததால், புதிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தற்போதைய நிதி ஏற்பாடுகளுடன் திருப்தி அடைய வேண்டும்; அவை பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டில் எதிர்பார்க்கப்பட்ட தொகையில் மிகச் சிறிய விகிதம்தான். இந்நாடுகளில் பொது நிதிநிலையின் வறிய தன்மை, ஐரோப்பிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இரண்டும் தொடர்ந்து 15 ஆண்டுகள் கொடுத்திருந்த "அதிர்ச்சி வைத்தியத்திற்கு பிறகும்" எவ்வித குறிப்பிடத்தக்க உள்கட்டுமான திட்டங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி இல்லாமல் செயல்படுத்தப்பட முடியாது என்று உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நிதியங்கள் கிடைக்காத நிலை என்பது பெரும் திட்டங்களுக்காக கிழக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி முடக்கப்பட்டு, வட்டாரத்தில் உள்ள அரசாங்கங்களின் திட்டங்களை சீர்குலைத்துவிடும் என்று ஆகியுள்ளது.

போலந்தின் பொருளாதார மந்திரியான Krystyna Gurbiel, கார்டியன் பத்திரிகைக்கு ஜூன் 23 அன்று தெரிவித்ததாவது: "இது ஒரு பெரும் தாமதமாகும்; இதன் பொருள் திட்டங்களை செயல்படுத்த எங்களுக்கு மிகக் குறைவான காலம்தான் கிடைக்கும்.... விரைவில் முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், 2007 ஐ ஒட்டி, நாங்கள் போலந்திற்கு மிகவும் தேவையான திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போய்விடும்."

ஹங்கேரியின் ஐரோப்பிய உறவு மந்திரியான Etel Barath, அதே ஏட்டிடம், "இது வெறும் பணப்பிரச்சினை மட்டும் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் எவ்வளவு கிடைக்கிறது, எந்த இலக்கிற்காக கிடைக்கிறது, எப்பொழுது கிடைக்கிறது, எவ்வாறு பணத்தை நாங்கள் பயன்படுத்தலாம் என்பவை அடங்கியுள்ளன. 2007-2013 க்கு நாங்கள் நன்கு தயார்நிலையில் இருக்கவேண்டும். இப்பொழுது இது சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நிறைய நேரத்தை இழந்துவிட்டோம்" என்று கூறினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரையில் மற்றொரு சிக்கல், பிரிட்டிஷ் அரசாங்கம் பொது விவசாயக் கொள்கையை தாக்கியிருப்பதும் ஆகும். CAP யில் இருந்து முக்கிய நலன்களைப் பெற்றது, பெறப்போவது பிரான்ஸ் என்றாலும்கூட, புதிய உறுப்பு நாடுகளுக்கும் நன்மை கிடைத்திருக்கும். இப்பகுதியில் ஏராளமான வேலைகள் விவசாயத்துறையில்தான் இன்னும் உள்ளன; ஆனால் மேற்கத்திய பண்ணையை ஆதிக்கம் செலுத்தும் விவசாய வணிகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இங்கு உற்பத்தித் திறன் மிகக் குறைவு ஆகும்.

போலந்து, பால்டிக் நாடுகள் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவற்றில் இருக்கும் பண்ணைப் பகுதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக வறிய, பொருளாதார பாதிப்பிற்கு உட்படக்கூடிய பகுதிகள் ஆகும். மேலும் அவை செல்வம் கொழிக்கும் நாடுகளின் பெருகிய போட்டியை வேறு சமாளிக்க வேண்டும் என்பதால் அவற்றின் துன்பங்களும் அதிகரிக்கும். ஹங்கேரியில் விவசாயிகளின் அதிக அளவு சீற்றத்துடன் கூடிய எதிர்ப்புக்கள் வந்துள்ளன; ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை தாங்கொணா இடர்பாடுகளை எதிர்கொள்ளுகிறது. அண்மையில் விவசாய அமைச்சர் Imre Nemeth இராஜினாமா செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டார்.

கிழக்கு ஐரோப்பாவிற்கு 2007-2013 ல் ஒதுக்கப்படும் குறைந்த CAP நிதி செல்வம் கொழிக்கும் விவசாயிகளினால் விழுங்கப்பட்டுவிடும் என்ற நிலையில், கிராமப்புற குட்டி முதலாளித்துவ அடுக்கும் ஓரளவு உதவித்தொகையை பெறும். இதனால், தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும், இப்பகுதியில் உள்ள அரசாங்கங்களுக்கு சமூகத் தளத்தில் கூடுதலான ஆதரவு கிடைக்கும்.

கார்டியினில் மீண்டும் Krustyna Gurbiel கருத்துரைத்ததாவது: "எங்களைப் பொறுத்தவரையில் CAP மிகவும் முக்கியமானது ஆகும். எங்களுடைய விவசாயிகள் பழைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் இருக்கும் விவசாயிகளைவிட மிகக் குறைந்த உதவித் தொகைகளைத்தான் பெற்று வருகின்றனர். எனவே எங்கள் விவசாயிகளை பாதிக்கும் தீர்விற்கு நாங்கள் உடன்படமாட்டோம். போலந்தை பொறுத்தவரையில் இது மிகவும் கடினமான பிரச்சினை ஆகும்."

ஹங்கேரியின் Etle Barath மேலும் கூறினார்: "பிரிட்டிஷ் தலைமை இருக்கும் வரை பட்ஜெட் பற்றி உடன்பாடு காண்பது என்பது மிகவும் கடினமாகும். பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே CAP ஐப் பொறுத்தவரையில் பெரும் பிளவு உள்ளது."

பிளேயருடைய ஐரோப்பாவிற்கான செயற்பட்டியலை பொறுத்தவரையில் சில பாராட்டுக்களும் வந்துள்ளன. செக் குடியரசின் வெளியுறவு மந்திரியான Cyril Sovbod பிரிட்டன் கூறியிருக்கும் பல சீர்திருத்தங்கள் பொருத்தமானவை என்று கருத்துரைத்தார், இக்கண்ணோட்டம் பழைய ஸ்ராலினிச நாடுகளின் பெரும்பாலான செல்வந்தத்தட்டினரால் ஐரோப்பிய ஒன்றிய பணம் தங்கள் கருவூலத்திற்கு வருவதில் இது தலையீடு செய்யாத மட்டத்திற்கு தத்துவரீதியாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும் நிலைப்பாட்டை பிரிட்டிஷ் நிலைமை அச்சுறுத்தத்தான் செய்கிறது; இது புதிதாக இணையும் நாடுகளின் அடிப்படை பொருளாதார நலன்களை நாசப்படுத்திவிடும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியும் கிழக்குப் புற விரிவாக்கமும்

பிரான்ஸ், டச் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய நெருக்கடி, பட்ஜெட் பற்றிய தேக்க நிலையுடன் இணைந்து கிழக்கில் இருக்கும் மக்களிடையே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நம்பிக்கையை பெரிதும் குறைத்துவிட்டன. ஜூன்17ம் தேதி அன்று செக் குடியரசில் ஸ்டெம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு 52 சதவிகிதத்தினர் அரசியலமைப்பிற்கு எதிராக என்றும் 48 சதவிகிதத்தினர் ஆதரவாக என்றும் கூறுகிறது. வாக்கெடுப்புத் திட்டத்தை செக் அரசாங்கம் கைவிட்டுவிட்டது; எஸ்தோனியாவும், போலந்தும்கூட அவ்வாறே திட்டத்தை கைவிட்டுவிட்டன. போலந்தின் பிரதம மந்திரி Marek Belka, "பட்ஜெட்டில் சமரசம் காணாததும், வாக்கெடுப்பு முடிவுகளும் ஒரே நேரத்தில் வந்தமை மற்றும் அரசியலமைப்பிற்கான ஒப்புதலை நாடுகள் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், ஆகியவை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பெரும் அழிவு, சோகம் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தும்" என்றார்.

"பெரும் அழிவு, சோகம்" என்பது உண்மைதான். பிரான்ஸ், ஜேர்மனி, பெனிலக்ஸ் நாடுகள் மற்றும் இத்தாலி ஆகியவை, ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான ஐரோப்பிய நிலக்கரி, எஃகு அமைப்பை (European Coal and Steel Community) ஏற்படுத்தி 50 ஆண்டுகளுக்கு பின்னர், புதிதாக நுழையும் நாடுகள் படிப்படியாய் ஆபத்து வெளிப்படும் ஒன்றாய் இணைதலில் தங்களையே கண்டுகொள்கின்றன..

2007ம் ஆண்டில் ருமேனியா, பல்கேரியா நாடுகளை இணைத்துக் கொள்ளும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது; மேலும் குரோசியா, துருக்கி மற்றும் உக்ரைனுக்கும் உறுப்புநாடு அந்தஸ்து கொடுப்பது பற்றிய தயாரிப்புக்கள் உள்ளன; இவை அனைத்தும் இப்பொழுது பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. ஆஸ்திரிய சான்ஸ்லரான Wolfgang Schuessel ஜனவரி மாதம் பிளேயரின் பதவிக்காலம் முடிந்த பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராவார்; "ஐரோப்பிய ஆணையம் பல்கேரிய, ருமேனிய இணைப்பை ஓராண்டேனும் ஒத்திவைத்துவிடும் என்று" தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், துருக்கி, குரோசியா ஆகியவை அனுமதிக்கப்படக் கூடிய நிலையும் -- இவை அனைத்தும் இப்பொழுதுள்ள புதிய உறுப்பு நாடுகளை காட்டிலும் மிக வறியவை, மேலும் மொத்தத்தில் 150 மில்லியன் மக்கட்தொகை கொண்டவை-- பெரிதும் தள்ளித்தான் போகும். ஜேர்மனிய கிறிஸ்தவ ஜனநாயகவாத MEP-ம் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவருமான Elmar Brok வெளிப்படையான கடுப்புடன் கூறினார்: "உக்ரைனை அனுமதித்தோம் என்றால், நாம் மூச்சுத் திணறிவிடுவோம்."

உறுப்புநாட்டு அந்தஸ்து பெறுவதற்கு இன்னும் மிகவும் தொலைவிடத்திலேயே இருக்கும் ருமேனியாவும் பல்கேரியாவும் மிகவும் வறிய நாடுகள்; தங்களுடைய பொருளாதாரங்களையும் உள்கட்டுமானங்களையும் செக் குடியரசு தரத்திற்கு கொண்டுவருவதற்குக் கூட அவற்றிற்கு மிகப் பெரிய நிதியுதவி தேவைப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைய விரும்புவோருக்கு மாற்று வழியை கூறும் வகையில், பொருளாதார, நிதித் துறைகளில் ஐரோப்பிய ஆணையராக இருக்கும் முன்னாள் ஸ்பானிய சோசலிச தலைவர் Joaquin Almunia, சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுடன் இணை உறுப்பினர் என்ற தகுதியை 2008ல் கொடுப்பதற்காக உடன்பாடு கொள்ளலாம் என்ற ஆலோசனையை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் இருதரப்பு திட்டம் செயல்படுத்தப்படுவது என்பது பிரான்சிலும், நெதர்லாந்திலும் ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய கருத்து வாக்கெடுப்புக்களின் எதிர்மறை முடிவுகளை நம்பியிருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

இப்படி குறைமதிப்பிற்குட்பட்ட, அரசியல் ரீதியாய் குறைவான ஒற்றுமையையும் கொண்ட --சற்றே தடையற்ற வணிக உடன்பாட்டைவிட கூடுதலான தன்மையை கொண்டுள்ள-- ஒரு ஐரோப்பிய அமைப்பு வடிவம்தான், ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப்பகுதிக்கு என்று மட்டும் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்குமாக வேண்டும் என்று லண்டனும், வாஷிங்டனும் கருதுவதாகும்

போருக்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றிணைப்பு செயல்திட்டம் -- ஒழுங்கமைக்கப்பட்டிருந்த, போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்திடமிருந்து வந்த புரட்சிகர அச்சுறுத்தலுடன் இணைந்தவகையில், சோவியத் ஒன்றியத்தின் வடிவில் ஒரு பொது எதிரியை எதிர் கொண்டிருந்த நிலைமைகளில் -அது, ஐரோப்பிய முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்தும்பொருட்டு தேசியப் பிளவுகளை சீர்படுத்தும் கண்டத்தின் அரசுகளின் திறனை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் நிலவிய பெருமந்தநிலைக்கும் பின்னர், கண்டத்தின் முதலாளி வர்க்கத்தினர் தங்களை மீண்டும் உத்வேகத்துடன் அமைத்துக் கொண்டு தங்கள் உலக நிலைப்பாட்டினை விரிவாக்கம் செய்வதற்காக அனுமதிப்பதில் ஐரோப்பிய செயல்திட்டம் பெரிதும் வெற்றியடைந்த அதேவேளை, சோவியத் ஒன்றியம் இல்லாமற்போனதும், அடுத்து அமெரிக்கா இராணுவவாதத்திற்கு மாறி தன்னுடைய நலன்களை, ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் ஆக்கிரோஷத்துடன் மேன்மைப்படுத்த கருதியுள்ள திருப்பமும் பழைய விரோதங்கள் திரும்புவதற்கான அரங்கை அமைத்துக் கொடுத்துள்ளது.

தற்போதைய பட்ஜெட் நெருக்கடியின் விளைவு எவ்வாறு இருந்தாலும், இந்தப் பிளவுகள் ஐரோப்பாவில் ஏகாதிபத்திய சக்திகளிடையே வருங்காலத்தில் வரவிருக்கும் மோதல்களுக்கு ஒரு முன்னோடி போல் ஆகியுள்ளது; இதில் பெருகிய முறையில் மாறுபட்ட இலக்குகளை உடைய தேசிய செல்வந்த தட்டினரின் தற்காலிக தேவைகளுக்கு ஏற்ப உடன்பாடுகள் மேற்கொள்ளப்படுவதும் முறிக்கப்படுவதும் இருக்கும்.

See Also:

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு பிளேயர் அச்சுறுத்தல் தருகிறார்: "மாற்றுக அல்லது மடிக"

''பழைய ஐரோப்பாவிற்கு'' எதிராக பிளேயர் பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறார்

Top of page