World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Europe in crisis

ஐரோப்பா நெருக்கடியில்

By Peter Schwarz
7 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் சஞ்சிகையான சமத்துவம் இல் ஜூலை-ஆகஸ்ட் பதிப்பில் வந்துள்ள ஆசிரிய தலையங்கத்தை கீழே காணலாம். உலக சோசலிச வலைத் தளத்தில் வரும் கட்டுரைகளால் தொகுக்கப்பட்ட ஒரு சஞ்சிகையாக இந்த ஏடு வெளிவருகிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் தான் ஆழ்ந்த நெருக்கடியில் இன்னும் இருப்பதை அறிந்துள்ளது. ஜூன் மாதம் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உச்சிமாநாடு சரிவுற்றது, அதைத் தொடர்ந்து அரசாங்க தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் வசைபாடியது என்பவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் முன்னோடி அமைப்புக்களிடம் வாடிக்கையாக காணப்படும் பூசல்களுக்கும் அப்பால் சென்றுவிட்டது. ஐரோப்பாவை ஒரு முதலாளித்துவ முறையில் ஒன்றுபடுத்தும் திட்டம் ஒரு முட்டுச்சந்தி நிலைக்கு வந்து, அதில் இருந்து வெளியேறும் வழி தெரியாமல் ஒரு திகைப்பு ஏற்பட்டுள்ளது.

மூன்று காரணிகள் இதில் பங்கு வகிக்கின்றன

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள பிராந்திய, சமுதாய தீவிர முரண்பாடுகளை குறிப்பிட்ட மட்டத்திலேனும் நிவர்த்திசெய்யும் நிலைப்பாட்டை பூகோளமயமாக்குதல் அடிப்படையிலேயே இல்லாதொழித்துவிட்டது. குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு, குறைந்த வரிவிதிப்பு உள்ள நாடுகளுக்கான உலகந்தழுவிய போட்டியில் விவசாய உதவித்தொகைகள், பிராந்திய வளர்ச்சி போன்ற உதவிகளை இனி ஐரோப்பிய மூலதனம் கொடுப்பதற்கு முடியாதுள்ளதுடன், அதே போன்று வரிகள் திரட்டி, முதலாளிகளிடம் இருந்து கிடைக்கும் வருமதிகள் மூலம் பொது நல அரசிற்கான செலவினங்களை செய்வது என்பதும் இயலாமற் போய்க் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ள விவசாய உதவித்தொகைகளை பிரிட்டிஷ் பிரதம மந்திரி "அறிவற்ற செயல்" என குறிப்பிட்டிருப்பது இந்த உண்மையைப் பற்றிய தெளிவான வெளிப்பாடு ஆகும்.

ஆனால் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சமநிலையை கருத்திற் கொண்டு கவனமாக வளர்க்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டுள்ள முழு சமூக, அரசியல் உடன்பாடுகளை உடைவிற்கு கொண்டுவராமல் இந்த உதவித் தொகைகளுக்கு முடிவும் கட்ட முடியாது. இதன் விளைவுகள் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளில் மட்டும் நின்றுவிடாமல், ஆக்கிரோஷமான முறையில் தேசிய நலன்களின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகை பெருகும். பிரான்சின் கோலிஸ்டுகள், இத்தாலிய பெர்லுஸ்கோனியர்கள், பிரிட்டிஷ் தொழிற்கட்சி வாதிகள் மற்றும் ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் ஐரோப்பிய கருத்திற்கு உதட்டளவு மரியாதை கொடுத்தாலும்கூட, தங்களுடைய சொந்த தேசிப் பொருளாதார, அரசியல் நலன்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகுமானால் அதைப் பாதுகாப்பதற்கு போராடுவர்.

இரண்டாவது காரணி அமெரிக்காவில் இருந்து வரும் பெருகிய அழுத்தம் ஆகும். ஈராக்கியப் போர் தொடங்கியதில் இருந்தே, வாஷிங்டன் தன்னுடைய செல்வாக்கை ஐரோப்பாவில் பயன்படுத்தி உலக அரங்கில் தனக்கு ஒரு போட்டியாளர் வந்துவிடும் நிலையை நாசத்திற்குட்படுத்தித்தான் வந்துள்ளது. இந்தக் கொள்கைக்கு அதற்கு இங்கிலாந்தின் ஆதரவு உள்ளது; ஏனெனில் ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் எதிராக தன்னுடைய நிலையை தக்க வைத்துக்கொள்ள இது சிறந்த முறை எனவும் இதையொட்டி அமெரிக்காவின் இளைய பங்காளி போல் தான் நடந்து கொள்ள முடியும் என்றும் அது கருதுகிறது. அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பதற்கு பெரும் விருப்பத்தை காட்டும் வகையில், கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நிறைய புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் உள்ளன; அவை ஜேர்மனிய பிரான்ஸ் நாடுகளின் ஆதிக்கத்தை கண்டு அச்சப்படுவதுடன் எல்லாவற்றிற்கும் மேலாக பேர்லின்-பாரிஸ்-மாஸ்கோ ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுமோ என்ற கவலையையும் கொண்டுள்ளன.

இந்த ஏட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எழுதினோம்: "அமெரிக்காவின் ஆணைகளுக்கு அடிபணிந்து நிற்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, அந்நிலை பிரான்சின் பழமைவாத நாளேடான Le Figaro குறிப்பிட்டுள்ளபடி, தாங்கள் "ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சிப்பகுதியினுள்" அமெரிக்காவின் கீழ்நிலைக்கு ஒதுக்கலை ஏற்றுக் கொள்வதாக அர்த்தப்படுத்தும். ஆனால் பகிரங்கமாக எதிர்ப்பது ஐக்கிய அமெரிக்க அரசுகளுடன் உள்ளார்ந்த ரீதியாக அழிவுகரமான இராணுவ மோதலின் ஆபத்து நேர்வை எழுப்பும். எந்த மாற்றீடாயினும், அல்லது இரண்டுக்கும் இடையிலான ஏதோ நடுப்பாதை ஆயினும் அது ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியிலான உறவுகளை ஆழமாக சீர்குலைத்துவிடும். மேலும், அமெரிக்காவிற்கும் "பழைய" ஐரோப்பாவிற்கும் இடையிலான மோதலின் சமூக விளைபயன்கள் உள்நாட்டு வர்க்கப் பதட்டங்களை தவிர்க்க முடியாத வகையில் உக்கிரப்படுத்தும்". (See "அமெரிக்காவை எப்படி சமாளிப்பது? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை" by David North)

அப்போது முதல், ஐரோப்பாவின் சங்கடம் அதிகரித்துத்தான் உள்ளது. "பழைய" ஐரோப்பாவில்கூட அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகள் வேண்டும் என்று வாதிடும் குரல்கள் அதிகமாக ஒலிக்கின்றன. இதை நியாயப்படுத்தும் வகையில் சீனா, இந்தியா ஆகிய நாடுகள் விரைவில் பொருளாதார எழுச்சி பெற்று அறைகூவலுக்கு உட்படுத்தும் எனப்படுகிறது; இதன் பொருள் மிகச் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய முகாம்கள்கூட ஒன்றோடொன்று மோதமுடியாத நிலை வந்துள்ளது என்பதாகும்.

ஆனால் இதைச் செயல்படுத்துவதைவிட கூறுதல்தான் எளிது. மிக ஆற்றல் வாய்ந்த பொருளாதார சக்திகள் வாஷிங்டனுடன் சமரசம் செய்து கொள்ளமுடியாமல் குறுக்கே நிற்கின்றன. உலகத்தின் மற்றய பகுதிகளின் இழப்பில்தான் பெருகிய முறையில் அமெரிக்கா வாழ்ந்து வருகிறது. அதன் வர்த்தக செலுத்துமதி பற்றாக்குறை இந்த ஆண்டின் முதல் கால்பகுதியில் ஒரு புதிய நிலையான $195 பில்லியனை எட்டியுள்ளது. அது கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு $800 பில்லியன் என்பதைக் காட்டுகிறது. இதற்கு ஈடு செய்யும் வகையில் 2 பில்லியன் டொலர்கள் அமெரிக்காவிற்குள் ஒவ்வொரு நாளும் உள்பாய வேண்டும்.

இத்தகைய வளர்ச்சியில் வெடிப்புத் தன்மை நிறைந்த விளைவுகளைப் பற்றி பழமைவாத பொருளாதார நிபுணர்கள்கூட எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அவர்களுள் ஒருவரான கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஜெப்ரி சாக்ஸ் ஜேர்மனிய Suddeutsche Zeitung ஏட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் கூறுகிறார்: "மிகவும் விபரீதமான, ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வகைகளில்தான், தன்னுடைய பிரச்சனைகளின் விளைவாக அமெரிக்கா இப்போது மற்றவர்களை தாக்கி கொண்டிருக்கிறது. வரிகளில் மிகப் பெரிய குறைப்பும் இராணுவச் செலவில் பெரும் அதிகரிப்பும் ஏற்றுமதிகள் மிக அதிகம் செய்யப்படவேண்டும் என்ற நிலைக்கு வந்து வர்த்தக நிலுவையில் அச்சத்தை தரக்கூடிய பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது; இது ஏற்கனவே நலிவுற்றிருக்கும் அமெரிக்க வரவுசெலவுத்திட்டத்தின் தன்மையை இன்னும் மோசமாக்கியுள்ளது. ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவின் மீதும் மற்ற நாடுகளின்மீதும் "நியாயமற்ற வணிகம்" என்று கூறி குறைகூறி வருவதுடன் அவற்றின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அச்சுறுத்துகின்றனர்.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு தானும் உட்பட்டிருப்பதை ஐரோப்பா உணர்ந்துள்ளமை தர்க்கரீதியானதே. போயிங்கிற்கும் ஏர்பஸ்ஸிற்கும் தொடர்ந்து இருக்கும் வர்த்தக மோதல்கள் இதற்கான தெளிவான அடையாளம் ஆகும். இதற்கும் மேலாக எப்பொழுதும் குறைந்து கொண்டே வரும் எரிபொருள் விநியோகம் பற்றியும் போராட்டம் இருக்கிறது; இவற்றோடு கூட சீனப் பொருளாதாரத்தின் பெருகிய தேவைகளும் சிரமங்களை ஏற்படுத்துகின்றன; வாஷிங்டன் இவற்றிடமெல்லாம் தன்னைக் காத்துக் கொள்ளுவதற்கு இராணுவத்தை பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கிறது.

ஐரோப்பிய நெருக்கடியை வளர்க்கும் மூன்றாவது காரணி, தற்போதைய சமூக வளர்ச்சி பற்றி மக்களின் பரந்த பிரிவுகள் பெருகிய அளவில் எதிர்ப்பை காட்டுவது ஆகும்.

இந்தத் எதிர்ப்பு முதன்முதலாக ஐரோப்பா முழுவதும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிய போருக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் தெருக்களில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய முறையில் வெளிவந்தது. தங்கள் சொந்த காரணங்களுக்காக ஈராக்கிய போருக்கு ஒத்துழைக்காத ஐரோப்பிய அரசுகள் இந்த இயக்கங்களை தங்களுடைய நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஜேர்மனியில் ஜேர்மனிய அதிபர் ஷ்ரோடர் ஜேர்மனி போருக்கு ஆதரவு கொடுக்காது என்று அறிவித்ததை தொடர்ந்து சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்களின் நோக்கங்கள் அடிப்படையில் ஐரோப்பிய அரசாங்கங்களின் கருத்தை விட மாறுபட்டவையாக இருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்களை பொறுத்தவரையில் மிகச் சக்திவாய்ந்த பெருவணிக நலன்களின் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கும் சூழ்நிலையில் வெளிப்படும் போரும், இராணுவவாதமும் நிராகரிக்கப்பட வேண்டும். அரசாங்கங்களை பொறுத்தவரையில், தங்களுடைய ஏகாதிபத்திய நலன்களை அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக காக்கப்படவேண்டும் என்பதாகும்.

இந்த எதிர்ப்பு இன்னும் கூடுதலான வகையில் பின்னர் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி கூட்டரசுப் பொதுத் தேர்தல்களை வழமையாக நடத்த வேண்டிய காலத்திற்கு முன்னரே நடத்த திட்டமிட்டுள்ளது; இதற்குக் காரணம் அங்கு வாக்காளர்களும் அதன் கட்சி உறுப்பினர்களும் கூட்டம் கூட்டமாக சமூக ஜனநாயகக் கட்சி இன் பெருவணிக ஆதரவுச் செயற்பட்டியலை எதிர்த்து மாநில, வட்டார தேர்தல்களில் கட்சியை கைவிட்டுவிட்டனர். சமீபத்தில் ஐரோப்பிய அரசியலமைப்பு பிரான்சிலும், ஹாலந்திலும் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தாராள பொருளாதாரக் கொள்கை போக்கிற்கு பரந்த எதிர்ப்பையும் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக மக்களின் சீற்றமும் உள்ளதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது. சமூக ஜனநாயக மற்றும் பழைமைவாத கட்சிகள் பிரதிபலிக்கும் அதிகாரபூர்வ அரசியலில் இருந்து மக்களின் கருத்துக்கள் எல்லா இடத்திலும் இன்னும் இடதுபுறம் தள்ளி இருப்பது தெளிவாகியுள்ளது.

இத்தகைய போக்கிற்குப் பதில் கொடுக்கும் வகையில், அதிகாரபூர்வ அரசியல் இன்னும் வலதுபுறம்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி அதன் சமூகச் செலவின குறைப்புக்கள் திட்டமான 2010 செயற்பட்டியலில் எந்த விதமான மாற்றமும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டது. பழைமைவாத யூனியன் கட்சிகள் மற்றும் தராளவாத ஜனநாயகவாதிகளின் (FDP) அரசாங்கம் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கம் அமைக்கப்பட்டால், இன்னும் கூடுதலான வகையில் ஜனநாயக, சமூக உரிமைகள் தாக்குதலை அதிகப்படுத்தும். பிரான்சில், புதிய தாராளக் கொள்கை மற்றும் அமெரிக்காவுடன் நட்பு என்ற திட்டத்திற்கு வாதிடும் உள்துறை மந்திரி நிக்கோலா சார்கோசி, ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கு அடுத்து பதவிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் ஜேர்மனியிலும், பிரான்சிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைமை பதவி ஜூலையில் இருந்து கிடைப்பதையும் பயன்படுத்தி கண்டம் முழுவதும் பிரிட்டனில் சோதிக்கப்பட்டுவிட்ட முறையில் பொருளாதார ஏற்பாடுகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தன்னுடைய ஆரம்ப உரையின்போது, பிளேயர், ஐரோப்பா "நவீனமயப்படுத்தப்பட வேண்டும்" என்று கூறினார். "நம்முடைய சமூக முன்மாதிரியின் நோக்கம் நம்முடைய போட்டியிடும் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதாகும்." என்று பிளேயர் கூறினார். "ஐரோப்பிய ஒன்றியம் தேவையற்ற கட்டுப்பாடுகள் சிலவற்றை நீக்கிவிட வேண்டும்; அதிகாரத்துவ செயற்பாடுகள் சிலவற்றை அகற்ற வேண்டும், உலகந்தழுவிய, வெளிப்பார்வை நிறைந்த, போட்டிக்கு தயாராக இருக்கும் ஐரோப்பாவாக மாறவேண்டும்" என்று அவர் கூறினார். வெளியுறவுக் கொள்கையில் ஐரோப்பா ஒரு தீவிர பங்கு வகிக்கும் சக்தியாக இருக்க வேண்டும்; அமெரிக்காவுடன் அது போட்டியிட தேவையில்லை என்றும் அமெரிக்காவின் "நல்ல பங்காளியாக" இருக்கலாம் என்றும் பிரிட்டனின் பிரதம மந்திரி கூறினார்.

இங்கிலாந்தை ஒரு கண்ணோட்டம் விட்டால், பிளேயர் கூறுவதின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். 1950, 1960 களில் இருந்தது போல் வயதுமுதிர்ந்த காலம்தான் வறுமைக்கு காரணம் என்றில்லாமல் குறைந்த ஊதியம்தான் மீண்டும் வறுமைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மொத்தத்தில் இருக்கும் இல்லங்களில் மூன்றில் ஒரு பகுதி "உழைக்கும் ஏழைகள்" இல்லங்கள் என்று உள்ளன; அதாவது வேலை இருந்தும் கூட இந்த பிரிவினருக்கு கிடைக்கும் வருமானம் வாழ்க்கை செலவினங்களுக்கு பற்றாமல் உள்ளன. அதேநேரத்தில் பிரிட்டனில் வேலை நேரங்கள் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகமானவை ஆகும். அனைத்து குழந்தைகளிலும் நான்கில் ஒரு பகுதி அதிகாரபூர்வமாக ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்; தொழில் வளர்ச்சியுற்ற நாடுகள் அனைத்திலும் இது மிக உயர்ந்ததாகும். பெருவணிக வரிகள் ஐரோப்பாவிலேயே இங்கு மிகக் குறைவானது ஆகும். தொழிலாள வர்க்கத்தை பெரிதும் பாதிக்கும் மறைமுக வரிகள் ஐரோப்பாவிலேயே மிக அதிகம் ஆகும்.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் பிளேயரின் எதிரிகள், குறிப்பாக சமீபத்திய ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அவர்களுடைய செய்தித் தொடர்பாளராக இருந்த லக்சம்பேர்க்கின் ஜனாதிபதி ஜோன் குளோட் ஜங்கர் போன்றவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜேர்மனிய செய்தி ஊடகத்தில் பிளேயரின் திட்டங்கள் நல்ல முறையில் வரவேற்பு பெற்றிருந்தன. உண்மையில் ஜேர்மனியும், பிரான்சும் கடந்த ஆண்டுகளில் இங்கிலாந்தை ஒட்டி பெருவணிக வரிவிதிப்பு குறைப்பு, குறைவூதிய தொழிலாளர் அறிமுகப்படுத்தல், நீண்ட வேலைநேரம் போன்றவற்றைக் பற்றிக்கொண்டுள்ளன. பிளேயருடன் அவர்களுடைய முக்கிய வேறுபாடு வெளியுறவுக் கொள்கையில்தான் உள்ளது. அவர்கள் இன்னும் கூடுதலான முறையில் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து இருந்தால் வெளியுறவுக் கொள்கையில் ஒருமித்த குரலில் பேசமுடியும் என்றும் அமெரிக்காவை மீறிச் செயல்பட முடியும் என்றும் நினைக்கின்றனர்.

ஐரோப்பாவில் எழுச்சி பெற்றுள்ள சமூக நெருக்கடிகள் என்ற இந்தப் பின்னணியில்தான் தேர்தல் மாற்றீடு (WASG), ஜனநாயக சோசலிச கட்சி (முன்னாள் கிழக்கு ஜேர்மனிய ஆளும் கட்சியான SED யின் பின்தோன்றல்) ஆகியவை, முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஓஸ்கார் லாபோன்டைன் தலைமையில் இணைதல் பரிசீலிக்கப்பட வேண்டும். முன்னாள் சமூக ஜனநாயக வாதிகள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், ஸ்ராலினிஸ்டுகள் ஆகியோரைக் கொண்டுள்ள இக்கட்சி வெளிப்படையாக ஒரு சோசலிச முன்னோக்கை நிராகரித்து முதலாளித்துவமுறை சொத்துரிமை வடிவமைப்புக்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடிக்கு லாபோன்னைனின் விடை ஒரு வலுவான ஜேர்மனிய பிரெஞ்சு ஆதிக்கம் நிறைந்த முதலாளித்துவ ஐரோப்பா ஆகும்; அதுதான் உலகின் மற்ற பகுதிகளின் நலன்களுக்கு எதிராகத் தன்னுடைய நலன்களை வலியுறுத்திக் கொள்ள முடியும் என்பது அவருடைய கருத்து.

இந்த அமைப்பின் பணி ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடையே சுயாதீனமான அரசியல் இயக்கத்தை தடைசெய்து, திசை திருப்பிவிட வேண்டும் என்பதாகும். ஓரிரு நாடுகளில் வேலைகளையும், ஊதியங்களையும் பாதுகாப்புச் சுவர் அமைப்பதின் மூலம் காத்திட முடியும் என்ற அதன் திட்டம், பிரயோசனமற்றது என்பது மட்டும் இல்லாமல் பிற்போக்குத்தனமானதும் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (PSG) என்னும் நான்காம் அகிலத்தின் ஜேர்மன் பகுதி இத்தேர்தல்களில் தேர்தல் மாற்றீடு (WASG) மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி (PSD) க்கு முற்றிலும் எதிரான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பங்கு பெற உள்ளது. சர்வதேச சோசலிச முன்னோக்கை பற்றிய விவாதத்தை வளர்க்கும் பொருட்டு நாங்கள் நான்கு மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறோம். ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவ முறையை எதிர்க்கும் ஒரு பரந்துபட்ட அரசியல் இயக்கத்திற்கு வழியமைக்கும் நோக்கத்தில் நாங்கள் போராடி வருகிறோம். எமது இலக்கு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை சமத்துவம் பதிப்பிற்கு மையமாக உள்ளது; இதில் லாபொன்டைன் கட்சியை பற்றிய பகுப்பாய்வு ஒன்றும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் அதிபருக்கான வேட்பாளர் Angela Merkel அரசியலில் எவ்வாறு எழுச்சியுற்றார் என்பது பற்றியும் உள்ளது. மற்ற கட்டுரைகள் பிரான்சிலும், ஹாலந்திலும் ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய வாக்கெடுப்பு பற்றியும், அமெரிக்காவை சூழ்ந்துள்ள சமூக, அரசியல் நெருக்கடி பற்றியும் உள்ளன. இந்தப் பதிப்பு "மே தினம் 2005; இரண்டாம் உலகப்போர் முடிந்து 60 ஆண்டுகள்" என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த்தின் உரையும் அடங்கியுள்ளது; இது தவிர ஜேர்மனிய நாடகாசிரியர் பிரெடெரிக் ஷில்லருடைய 200வது ஆண்டு நிறைவு பற்றிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது.

See Also:

சமூக சமத்துவத்திற்காக. ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக. PSG இற்கு வாக்களியுங்கள்.
(2005 ஜேர்மன் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை)

மே தினம் 2005: இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 60 ஆண்டுகள் பகுதி 1

Top of page