World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After the defeat of the referendum in France

Chirac appoints a new government

பிரான்சில் வாக்கெடுப்பின் தோல்விக்கு பின்னர்

சிராக் ஒரு புதிய அரசாங்கத்தை நியமிக்கிறார்

By Antoine Lerougetel and Peter Schwarz
2 June 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய அரசியலமைப்பு உடன்படிக்கை மீதான வாக்கெடுப்பு தோல்வியுற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜனாதிபதி ஜாக் சிராக் தன்னுடைய பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃப்ரனை பதவியில் இருந்து அகற்றிவிட்டு ஒரு புதிய அரசாங்கத்தை முன்னாள் உள்துறை மந்திரியான டொமினிக் டு வில்ப்பன் தலைமையில் அமைத்துள்ளார்.

தன்னுடைய ஜனாதிபதி அதிகாரத்தில் பெரிதும் வலிமையிழந்துள்ள சிராக், தன்னுடைய மந்திரிசபையை மாற்றி அமைப்பதின்மூலம் ஓரளவு அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தும் நம்பிக்கையற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 1969ம் ஆண்டு ஒரு அரசியலமைப்பு வாக்கெடுப்பில் தோல்வியுற்ற பின்னர், புகழ் பெறும் வகையில் சார்ல்ஸ் டு கோல் ராஜிநாமா செய்தது போல், தான் ராஜிநாமா செய்வதற்கில்லை என்பதை கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டார். முக்கிய எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சியும் வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து, செல்வாக்கிழந்ததால், பதவியில் இருப்பேன் என்று அடித்துக் கூறுவது அவருக்கு எளிதாயிற்று.

கடந்த மூன்று ஆண்டுகளாக அரசாங்கத்தை வழிநடத்திவந்த பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃப்ரன் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. இவர் பெரிதும் செல்வாக்கிழந்திருந்ததோடு, வாக்கெடுப்பு வெற்றி பெற்றிருந்தாலும் பதவியை விட்டு விலக நேர்ந்திருக்கும். ஆனால் அவருக்குப் பின் யார் பதவிக்கு வருவார் என்பது அப்பொழுது தெளிவாக இல்லை.

சிராக்கின் UMP கட்சி (Union for a Popular Movement), சிராக்கின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தலைவர் நிக்கோலா சார்க்கோசியின் ஆதரவாளர்கள் என்று இரு பெரும் பிளவுகளை கொண்டுள்ளது. டு கோல் இன் பழைய ஆதரவாளர்கள் குறைந்து வந்த போதிலும் சிராக்கிற்கு ஆதரவு கொடுத்து தொழிற்சங்கங்களுடன் ஒரு சமூக கூட்டுழைப்பு என்ற போர்வையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், சார்க்கோசி மிகத்தீவிரமான புதிய-தாராளவாத பொருளாதாரத் திட்டத்தை, தாட்சர் முறையில் வகுத்துக் கொண்டு, அத்துடன் சட்டம்-ஒழுங்கு நலன்கள், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்பு என்பவற்றையும் இணைத்து வளர்த்து வருகிறார்.

தான்தான் சிராக்கிற்கு பின்னர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை பலமுறை சார்க்கோசி வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் விருப்பத்திற்கு எதிராக இவர் கடந்த ஆண்டு UMP கட்சியின் தலைமைப் பதவியை வெற்றி கொண்டார்; ஜனாதிபதியோ இக்கட்சியை 2002ல் தன்னுடைய ஆட்சியை உயர்த்திக் கொள்ளும் வகையில் அமைத்திருந்தார்.

வாக்கெடுப்பில் ஏற்பட்டுள்ள தோல்வி சிராக்கை பலவீனமாக்கியுள்ளதுடன், விசுவாசத்துடன் "வேண்டும்" வாக்கிற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், எப்பொழுதும் சிராக்கின் பிரச்சாரத்தில் இருந்து சற்று வேறுபட்டே இருந்த சார்கோசிக்கு ஆதாயத்தைக் கொடுத்துள்ளது.

சிராக், டொமினிக் டு வில்ப்பனை பிரதமர் ஆக்கியதன் மூலம், அரசாங்கத்தின் தலைமையை தன்னுடைய மிக நெருக்மான, மிகுந்த விசுவாசமும் நம்பிக்கையும் உடையவரிடம் பொறுப்பைக் கொடுத்துள்ளார். அதே நேரத்தில், அவர் சார்கோசியை மீண்டும் அரசாங்கத்திற்கு அழைத்து இரண்டாம் இட முக்கியஸ்தராக அவருடைய பழைய பதவியான உள்துறை அமைச்சகத்தையும் கொடுத்துள்ளார்; முதல் ரஃப்ரன் அரசாங்கத்தில் சார்கோசி, அயராமல் சட்டம் ஒழுங்கிற்கும், குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கும் பாடுபடுபவர் என்று தனக்குப் பெரும் புகழைத் தேடிக் கொண்டார்.

தேர்ந்தெடுக்கப்படாத, உயர்குடும்பத்தைச் சேர்ந்த தூதரக, அரசாங்கப் பணியாளராக தன்னுடைய உத்தியோகத்தை கொண்டவராக டு வில்ப்பன் உள்ளார். இவர் மொரோக்கோவில் 1953ம் ஆண்டு பிறந்து, இளமையின் பெரும்பகுதியை நாட்டுக்கு வெளியே, வெனிசூலாவிலும் அமெரிக்காவிலும் கழித்தார். இவருடைய தூதரகப் பணி இவரை பிரான்சிற்கு வெளியேதான் இட்டுச் சென்றது. 1984ம் ஆண்டு அவர் வாஷிங்டனில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின் முதல் செயலராக நியமிக்கப்பட்டார்; 1989ம் ஆண்டு புது டெல்லி தூதரகத்தில் சேர்ந்தார். 1993ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சரகத்தில் அலன் யூப்பே இன் அலுவலர்களின் தலைவராக இருந்தார்; 1995ம் ஆண்டு எலீசே அரண்மனையில் சிராக்கின் தலைமைச் செயலராக இருந்தார். 2002ம் ஆண்டு ரஃப்ரனுடைய முதல் மந்திரி சபையில் வெளியுறவு மந்திரியாகவும், பின்னர் உள்துறை மந்திரியாகவும் பணியாற்றினார்.

பிரான்சின் அரசியல் அமைப்புமுறையின் பல முக்கிய உறுப்பினர்களை போலவே இவரும் உயர்குடும்பத்தை சார்ந்து, செல்வந்த தட்டின் ENA எனப்படும் தேசிய நிர்வாகக் கல்விக் கூடத்தில் (National School of Administration) பட்டப்படிப்பை முடித்தார்.

இவர் 24ம் வயதில் RPR எனப்படும் (Rassemblement pour la Republique) கோலிச கட்சியில் சேர்ந்து, அப்பொழுதில் இருந்து கோலிஸ்டாகவே செயல்பட்டு வருகிறார்; எந்தப் பதவிக்கும் இவர் போட்டியிட்டதில்லை. இவர் 1980ம் ஆண்டு சிராக்கை சந்தித்தார்; சிராக்கின் மிகுந்த நம்பகத்தன்மைக்கு உகந்த ஒத்துழைப்பாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். ஐக்கிய நாடுகள் மன்றத்தில், ஈராக்கின்மீதான அமெரிக்கப் படையெடுப்பை எதிர்த்து அத்தகைய நடவடிக்கைக்கு ஐ.நா.வின் ஒப்புதல் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியது இவருடைய உத்தியோக வாழ்க்கையின் மிகப் பெருமை வாய்ந்த நிகழ்வாகும்.

அந்த நேரத்தில் அவர் எடுத்திருந்த நிலைப்பாடும் அவருடைய கண்ணியமான முறையும் பிரான்சில் அவருக்குப் பெரும் மதிப்பையும் அமெரிக்க வலதுசாரிகளின் முடிவற்ற வெறுப்பையும் தேடித்தந்தது. 2003 பெப்ரவரி 14ம் தேதி பாதுகாப்புக் குழுவில் போர் தொடங்குவதற்கு சற்று முன்னர் அவர் மிகச் சரியாகவே சுட்டிக்காட்டினார்: "எந்தத் தடையும் இன்றி ஓர் உண்மை போல், எளிதான தீர்வு போல் போருக்குச் செல்லுதல் தோன்றலாம். ஆனால் போரில் வெற்றி பெற்ற பின்னர் சமாதானத்தை கட்டமைக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்."

பிரதம மந்திரியாக இவர் நியமிக்கப்படுவது, சிராக்கிற்கு சற்று கால அவகாசம் கிடைப்பதையும், பிரான்சில் சமூக அமைதியை காப்பதையும், சார்க்கோசியை சற்று கால தாமதப்படுத்துவதையும் பெரிதும் இலக்காகக் கொண்டுள்ளது.

தேர்தலை சந்திக்காத ஒரு நபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று அடிக்கோடிட்டுக் காட்டி, தன்னுடைய முக்கிய போட்டியாளரை அகற்றும் வகையில் சார்க்கோசி கருத்துத் தெரிவித்தார். சிராக் யாரை பிரதமராக நியமிக்கப்போகிறார் என்ற ஊகம் வளர்ந்த போது, டு வில்ப்பனை கருத்திற்கொண்டு சார்ப்கோசி அறிவித்தார்: "பிரான்சின் பெயரில் பேசும் உரிமை உண்டு எனக் கூறுபவர்கள், ஒருமுறையாவது தங்களுடைய வாழ்க்கையில் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை ஏற்றுத் தேர்தல்களில் பங்கு பெற்று, வெற்றி பெற்று, அதன் நம்பிக்கையும் பெற்றிருக்க வேண்டும்."

ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிரான வாக்கு தாராளவாத பொருளாதாரக் கொள்கையின் வடிவாக இருக்கும் சார்கோசிக்கும் எதிராக என்ற உண்மையினால், சிராக், வில்ப்பனை நியமிக்க முடிந்தது எளிதாயிற்று. சிராக்கிற்கு நெருக்கமான ஆதாரம் ஒன்றை மேற்கோள்காட்டி, Le Figaro குறிப்பிட்டுள்ளபடி, "ஞாயிறன்று வாக்காளர்கள் திறந்த சந்தை கொண்ட ஐரோப்பா வேண்டாம் என்று கூறியுள்ளனர். சார்க்கோசி பொருளாதார தாராளவாதத்தின் உருவாகத் திகழ்கிறார். வாக்காளர்கள் அளித்துள்ள தகவலுக்கு விடையிறுப்பாக இவருடைய நியமனம் பொருந்ததாது."

ஆனால் சார்கோசியை அரசாங்கத்திற்குள் மீண்டும் கொண்டுவந்ததின் மூலம், சிராக் தன்னுடைய போட்டியாளரை குறிப்பிட்ட கட்டுப்பாடு, ஒழுங்கு இவற்றிற்கு உட்படுத்த முயன்றுள்ளார். அதே நாளேடு வர்ணித்தது: "நாட்டின் தலைவர், UMP இன் தலைவரை உள்துறை மந்திரியாக நியமித்து அரசாங்கத்தின் இரண்டாம் மட்ட தகுதியையும் கொடுத்திருக்கிறார்; பிரான்சுவா மித்திரோன் அடிக்கடி கூறுவது போல், ஒருவருடைய எதிரிகளை வெளியே கொள்ளுவதை காட்டிலும், அருகிலேயே வைத்திருப்பது சிறந்ததேயாகும்".

ஆனால் தன்னுடைய பேரவா மிகுந்த திட்டங்களை கைவிடும் விருப்பம் ஒன்றும் சார்க்கோசிக்கு கிடையாது. அரசாங்கத்தில் மீண்டும் சேரவேண்டும் என்பதற்கு, சிராக்கிற்கு அவமானம் தரும் ஒரு உடன்பாட்டை அவர் கூறினார்; தான் தொடர்ந்து UMP இன் தலைவராக இருப்பேன் என்பதே அது.

UMP பாராளுமன்றக் குழுவிடம் 31ம் தேதி, டு வில்ப்பன் மந்திரிசபையில் தான் உள்துறை மந்திரி பதவியை வகிக்க உடன்பட்டதற்கு காரணம், "வரவிருக்கும் 22 மாதங்களில் [ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பதவிக்காலம்] UMP க்கும் அரசாங்கத்திற்கும் மோதல் என்றிருந்தால் வருங்காலம் நன்றாக இராது என்பதினால்தான்" என்று குறிப்பிட்டார்.

Le Figaro வின் புதன்கிழமை பதிப்பில் UMP க்குள் பூசலின் தீவிரம் பற்றிய குறிப்பு உள்ளது: "நேற்று காலை 9.00 மணி: தொலை பேசி மூலம் ஜாக் சிராக்கும், நிக்கோால சார்க்கோசியும் ஒருவருக்கு ஒருவர் சரியென்று கூறிக் கொண்டனர். இது சிறந்த வழி என்பதால் அல்ல, கெடுதலை தவிர்க்க வேண்டும் என்பதற்காக; அதாவது கட்சிக்குள் வெடிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக."

UMP பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சார்க்கோசி தன்னுடைய கருத்தை வலியுறுத்திப் பேசினார்: "ஒன்றில் நான், அரசாங்கத்திற்கு வெளியே இருந்து இன்று பிற்பகலில் இருந்து பூசல் தொடங்கும்; அல்லது நான் அதில் சேருவேன்; அப்பொழுது ஒற்றுமைக்கு உறுதியளிக்கும் வகையில் ஏற்பாடுகள் இருக்கும்." சிராக்கிற்கும், டு வில்ப்பனுக்கும் ஓர் எச்சரிக்கை கொடுத்த வகையில் உரையை முடித்தார்: "தவறு செய்யாதீர்கள்; நபர்களை மாற்றுவது போதாது. கொள்கையில் தீவிர மாற்றம் இருந்தால் ஒழிய, ஓர் அரசாங்கம் நம்பிக்கையை பெற முடியாது. என்னதான் நடந்தாலும், நான் UMP இன் தலைவராக தொடர்வேன். உறுப்பினர்களால் நான் மூன்று ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்; அந்தப் பணியை இறுதிவரையில் செய்வேன்."

Liberation செய்தியாளர் குறிப்பிடுகிறார்: "இது ஒழுங்காக நடக்கவில்லை என்றால், சில மாதங்களில் அரசாங்கத்தை தாக்கும் வகையில் அவர் ஒரு காரணத்தை கண்டு பிடிப்பார். மேலும் ஜனாதிபதி பிரச்சாரத்தை தான் மேற்கொள்ளுவதற்கும் எந்தத் தடையும் அவருக்கு இருக்காது."

இது ஒரு தெருச் சண்டைக்காரரின் நடைமுறையாகும். UMP ஐ எத்தகைய கட்சியாக மாற்ற அவர் விரும்புகிறார் என்பதைப் பற்றியும், எத்தகைய ஆதரவாளர்களை விரும்புகிறார் என்பது பற்றிய குறிப்பையும் இது கொடுக்கிறது.

Liberation ஒரு இளவயது UMP பிரதிநிதியை மேற்கோளிட்டு கட்சிக்கும் வளர்ச்சி பெற்று வரும் தீவிர உணர்வை பற்றிய தன்மையும் கூறுகிறது: "குழுக்குள் இருக்கும் சூழ்நிலையை காணும்போது, வில்ப்பனை நாம் சார்க்கோசி இல்லாமல் ஏற்றுக் கொண்டிருக்க முடியாது என்பது தெளிவாகிறது. இந்த இருவரைப் பற்றியும் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், பிரான்சின் சமூக முன்மாதிரிக்கு சவால் இன்னும் விடப்படவில்லை. சமூக முன்மாதிரி, தாராளவாதச் சவால் இவற்றிற்கிடையே தன் விருப்பத்தைப் பற்றி சிராக் ஒரு முடிவு எடுக்க விரும்பவில்லை; இதையொட்டி, என்ன நடக்க இருக்கிறது என்பதைப் பற்றி எங்களுக்கு சந்தேகம்தான் உள்ளது."

தன்னுடைய நியமனங்களை சிராக் வெளியிட்டபோது குறிப்பிட்டிருந்த இலக்குகளை அடைவது இதையொட்டி முடியுமா என்றுதான் தோன்றுகிறது: "கட்சியை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வில், நான் நிக்கோலா சார்க்கோசியை அரசாங்கத்தில் ஒரு மந்திரியாகச் சேருமாறு அழைப்பு விடுத்தேன்; அவர் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்."

புதிய அரசாங்கத்தின் முன்னுரிமையானது, வேலை வாய்ப்புகள் என்று இருக்கும் எனவும், இதற்கு ஒரு "தேசிய அணிதிரட்டல்" தேவை என்றும் "எமது பிரெஞ்சு மாதிரியில் இதைப்பற்றி தெளிவாகப் பொறிக்கப்படும் என நான் முடிவெடுத்துள்ளேன்" என்றும் அவர் கூறினார்.

"இந்த மாதிரி ஆங்கிலோ-சாக்சன் வகையான மாதிரி அல்ல; அதே நேரத்தில் நகராத் தன்மையுடன் பொருந்தியிருக்கும் மாதிரியாகவும் இது இருக்காது" என்று சிராக் தொடர்ந்து கூறினார்: "இது இயக்க சக்தியை அடிப்படையாகக் கொண்டுள்ள ஒரு மாதிரியாக இருக்கும்; தனிப்பட்டவர்களின் ஆரம்ப முயற்சி ஊக்கம் பெறும், ஒற்றுமையுணர்வும் சமூகப் பேச்சுவார்த்தைகளும் நிறைந்திருக்கும்". வணிகமும், தொழிற்சங்கங்களும் சேருமாறு அழைப்பு விடுத்து அவர் கூறினார்: "வேலைவாய்ப்பிற்காகப் போராடுங்கள்; அதே நேரத்தில் நமக்கு நாமே உண்மையாகவும் இருக்க வேண்டும்."

இப்படி சார்கோசியின் வில்லுக்கு எதிரான வலுவற்ற அம்புகள் அதிக மாற்றத்தை கொண்டுவராது. வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தில் "பிரெஞ்சு மாதிரி" கைவிடப்பட வேண்டும் என்பதை சார்கோசி தன்னுடைய முக்கிய போர் முழக்கங்களுள் ஒன்றாகச் செய்துள்ளார்.

வாக்கெடுப்பில் "வேண்டாம்" வாக்கு "ஒரு அமைதியான எழுச்சி" என்று அழைக்கப்பட்டுள்ளது. இது தொழிலாள வர்க்கத்தின் கூடுதலான வெளிப்பாடாக, அரசியல் உயர் தட்டுக்கு எதிராக இருந்தது என்பதை அனைவரும் அறிவர்; இந்நிலைப்பாடானது மாபெரும் வேலை நிறுத்தங்கள், தெரு ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை வேலைப்பாதுகாப்புக்கள், பணி நிலைமைகள், ஊதியங்கள், சமூக, ஜனதாயக உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் போன்றவற்றிற்கு ரஃப்ரன் அரசாங்க காலம் முழுவதும் நடைபெற்று வந்தன. சார்க்கோசியை சுற்றி முதலாளித்துவம் சூழ்ந்து கொள்ளுவது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் மேற்கொண்டிருந்த உடன்பாடுகள், ஒருவகையான வர்க்க சமாதான காலம் என்பது முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்கின்றது.

See Also:

ஐரோப்பிய அரசியலமைப்பு புறக்கணிக்கப்பட்டது
பிரெஞ்சு மக்களின் "வேண்டாம்" வாக்கின் அரசியல் விளைவுகள்

ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய பிரெஞ்சு கருத்து வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்
ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக

Top of page