World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Protests erupt in tsunami-devastated areas of Sri Lanka

இலங்கையில் சுனாமியால் அழிவுற்ற பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கின்றன

By Ivan Weerasekera and W.A. Sunil
25 June 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையை டிசம்பர் 26 சுனாமி தாக்கி ஆறு மாதங்கள் கடந்த பின்னரும், தீவின் கரையோரப் பிரதேசங்களின் பெரும்பகுதியில் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் தற்காலிக கூடாரங்களிலும், அகதி முகாங்களிலும் அல்லது உறவினர்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பதோடு ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கின்றனர். வாக்குறுதியளிக்கப்பட்ட பெருமளவு உதவி நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படாததோடு மீள் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

கடற்கரைக்கு அருகில் மீள் கட்டுமான வேலைகளை மேற்கொள்வதற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறையான தடை, பல குடும்பங்கள், குறிப்பாக தமது வாழ்க்கையை பழைய நிலைக்கு திருப்ப முயற்சிக்கும் மீனவர் குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை அதிகப்படுத்தியுள்ளது. தாம் முன்னர் வாழ்ந்த இடங்களில் வீடுகளை கட்டுவதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர்களுக்கு எந்த பதிலீடும் வழங்கப்படவில்லை.

கடந்த வாரம், உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் குழுவொன்று கொழும்பின் தென்பகுதிக்கு சென்றிருந்தது. இங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கத் தவறியமைக்கு எதிராக இந்த மாதம் ஒரு தொகை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அம்பலங்கொடைக்கு அருகிலான கடற்கரை பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மரங்களையும் பாரமான பொருட்களையும் போட்டு பிரதான வீதியை தடை செய்தனர்.

ஜூன் 17 அன்று காலை, நாங்கள் மூன்றாவது கண்டன ஊர்வலத்தை நேரில் கண்டோம். 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும், கடற்கரை கிராமமான தெல்வத்தையிலிருந்து மூன்று கிலோமீட்டர்கள் ஊர்வலமாக நடந்து சீனிகம கிராமத்தை வந்தடைந்தனர். தெல்வத்த, பெரலிய, சீனிகம மற்றும் வெரலான ஆகிய கிராமங்கள் சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு புராதான தேவாலய பூமியொன்றில் கூடினர்.

ஒரு பேச்சாளர் எம்முடன் உரையாடும் போது: "எங்களை ஆறு மாதங்களாக ஆதரவற்ற நிலையில் தள்ளிய உணர்வற்ற அதிகாரிகளுக்கு இந்த புனித ஸ்தலத்தின் முன் தேங்காய் அடித்து சாபம் விடுவதற்காகவே நாங்கள் இங்கு வந்தோம். அவர்கள் இரண்டு மாதங்களின் பின்னர் மாதாந்தம் வழங்கிய உதவித் தொகையை நிறுத்திவிட்டார்கள் மற்றும் இப்போது எங்களது பங்கீட்டையும் நிறுத்த தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். இது, எந்த எச்சரிக்கையுமின்றி எங்களை பேரழிவு தாக்கிய பின்னர், நாங்கள் உயிர் பிழைத்திருக்க உதவுகின்ற ஒன்றையும் இல்லாமலாக்குவதாகும்," என்றார்.

11 நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிசார் அணிதிரட்டப்பட்டு, ஒரு பெரும் மோதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் இராணுவ வீரர்களை போல் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தனர். பிரதான பாதை நெடுகிலும் அதற்கு சமாந்தரமாக செல்லும் புகையிரத பூதை பூராவும் ஒவ்வொரு 500 மீட்டர்களுக்கும் கலகம் அடக்கும் பொலிசாரும் மற்றும் பொலிஸ் குழுக்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். சீனிகமவில் பாதைகளில் தடைகளை போடுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை செய்தனர்.

அன்று மாலை என்றுமில்லாத வகையில் ஒரு மோதல் வெடித்தது. ஊரவத்த பாலத்தில் கூடிய ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், பாறைகள், பொல்லுகள் மற்றும் சுனாமி அழிமானங்களையும் பயன்படுத்தி கொழும்பு காலி பிரதான பாதையை தடைசெய்தனர். பொலிசார் அவற்றை அப்புறப்படுத்த முயன்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களை கற்களை வீசி விரட்ட முற்பட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களே முன்னணியில் இருந்தனர்.

அதே பிரதேசங்களில் மேலும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. ஜூன் 12 அன்று, அம்பலங்கொடைக்கும் காலிக்கும் இடையில் உள்ள பெரலிய, தொடகமுவ, அக்குரல மற்றும் சீனிகம ஆகிய நான்கு கிராமங்களில் இருந்து சுமார் 2,000 பேர் ஒரு பஸ்ஸை பயன்படுத்தி கொழும்புக்கும் காலிக்கும் இடையிலான அதிவேகப் பாதையை மணித்தியாலக் கணக்காக தடைசெய்து வைத்திருந்தனர். பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்லுகள் மற்றும் துப்பாக்கி குழாய்களிலும் தாக்கியதையடுத்து அங்கு மீண்டும் ஒரு வன்முறை மோதல் ஒன்று ஏற்பட்டது. இதில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அடுத்தநாள் மாலை, கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி நூற்றுக்கணக்கானவர்கள் மீண்டும் வீதியை தடைசெய்தனர். பொலிசார் பின்வாங்கி கைதிகளை விடுதலை செய்ய தள்ளப்பட்டனர். பிரச்சினைகளை பற்றி அக்கறை செலுத்துவதாக பொலிஸ் அலுவலர்கள் வாக்குறுதியளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். எதுவுமே நிறைவேற்றப்படாத காரணத்தால் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததையே நாம் கண்டோம்.

கடற்கரையிலிருந்து 100 மீட்டர் நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களுக்கு பொருத்தமான இடங்களில் நிலமும் வீடும் வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றார்கள். இப்போது அவர்கள் வாழ்ந்த 100 மீட்டர் பிரதேசத்தில் மீள் கட்டுமானங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த பழைய இடங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல், அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட 2,50000 (2,500 அமெரிக்க டொலர்கள்) ரூபா வேண்டும் எனவும் கோரினர். வாக்குறுதியளிக்கப்பட்ட 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு மற்றும் அவர்களது தற்காலிக தங்குமிடத்திற்கு தண்ணீர், மின்சாரம் மற்றும் மலசல கூட வசதி போன்ற ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகளையும் அவர்கள் கோரினர்.

பரந்த பேரழிவு

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், தீவின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கின் கரையோரப் பிரதேசங்களில் நடப்பவற்றின் ஒரு சிறு மங்கலான காட்சி மட்டுமேயாகும். அம்பலங்கொடைக்கு தெற்கில் உள்ள கிராமங்கள், தென் மாகாணத் தலைநகரான காலியைச் சூழவுள்ள நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்த பிரதேசம் முழுவதிலும் 4,141 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23,053 குடும்பங்கள் அல்லது 120,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதைவிட கூடுதலானதாக இருக்கக் கூடும். கடல்பேரலைகள் கடற்கரையிலிருந்து சுமார் இரு கிலோமீட்டர்கள் நிலப்பரப்பை நாசமாக்கியுள்ளன. பெரலியவில் தண்டவாளத்திலிருந்து முழுமையாக அடித்துச் செல்லப்பட்ட ஒரு புகையிரதத்தில் 2,000 பயணிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதிய எதிர்ப்புகள் சம்பந்தமான பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பானது ஆர்ப்பாட்டங்கள் மீது பாய்ந்து விழுவதாகும். ஜூன் 20 அன்று வெளிவந்த டெயிலி மிரர் பத்திரிகையின் படி, தென்பகுதிக்கான துணை பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பிரதாப்சிங்க, பென்தொட்ட முதல் தங்கல்ல வரையான தென் கடற்கரை பிரதேசத்தில் எல்லா ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களையும் தடை செய்துள்ளார். உலக சோசலிச வலைத் தளம் பிரதாப்சிங்கவை தொடர்பு கொண்டபோது, அவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தான் "அதி வேக வீதியில் ஆர்ப்பாட்டங்களிலும் ஊர்வலங்களிலும் பங்குகொள்ள வேண்டாம்" என மக்களை எச்சரித்ததாக மட்டும் குறிப்பிட்டார்.

ஆயினும், எதிர்காலத்தில் வெடிக்கவுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு பொலிஸின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. எங்களுடன் உரையாடிய இளைஞர்கள், பொலிஸ் அடக்குமுறை காரணமாக அவர்களை படம் எடுக்க அனுமதிக்கத் தயங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வதாக பொலிஸ் அச்சுறுத்தியதாக அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

அரசாங்கம் சுனாமியால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை நசுக்க அவநம்பிக்கையான முறையில் முயற்சிக்கின்றது. நிவாரணப் பணிக் குழுவின் தலைவர் திலக் ரனவிராஜா, ஜூன் 5 அன்று சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில்: "நான் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்களை வீடமைப்பு திட்டம் பற்றி கலதந்துரையாடுவதற்காக சந்தித்தேன். அவர்கள் வேலையின் முன்னேற்றம் பற்றி திருப்தி தெரிவித்தனர்," எனக் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறெனினும், "முகாம்களிலும் கூடாரங்களிலும் மக்கள் வசிப்பது உண்மை" என்பதை ரணவிராஜா ஏற்றுக்கொண்டார். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டிய அவர், பலருக்கு வீடுகள் உண்டு, ஆனாலும் அவர்கள் நிவாரண விநியோகங்களை பெறவேண்டும் என்பதற்காக அகதி முகாம்களை விட்டு வெளியேற மறுக்கின்றார்கள் என்றார். உண்மையான நிலைமை அதற்கு மாறானதாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வேறு பதிலீடுகள் இல்லாததாலேயே அடிப்படை வசதிகளின்றி முகாங்களில் சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு தற்காலிக வீடுகளும் குறைந்தபட்சம் 400 சதுர அடி (37 சதுர மீட்டர்) அளவானது என ரணவிராஜா செய்தித்தாளுக்கு தெரிவித்தார். உண்மையில், மிகப் பெரும்பாலானவை பலகைகள் மற்றும் மெல்லிய அலுமீனிய கூரைத் தகடுகளாலும் அமைக்கப்பட்ட ஒரு அறை கூடாரத்தை காட்டிலும் சிறியவையாகும். அதிகளவிலானவை 200 சதுர அடிக்கும் குறைவானவை. சீனிகம மற்றும் பெரலிய ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளவை 120 சதுர அடிக்கும் குறைவானவை. அவற்றில் சமையலறை, குளியலறை மற்றும் மலசலகூடம், மின்சாரம், தன்னீர் மற்றும் அடிப்படைத் தளபாடப் பொருட்கள் கூட கிடையாது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட பலர், உதவி நிதி தேவையானவர்களுக்கு பதிலாக, அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சென்றடைகிறது என ஆத்திரமடைந்துள்ளனர். "ஒரு வீட்டின் பெறுமதி 500,000 ரூபாய்கள் என அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தபோதிலும், அவை 200,000 ரூபாய்களுக்கு மேல் பெறுமதியற்றவை. அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் கட்டுமான ஒப்பந்தங்களின் மூலம் அவர்களது சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்கிறார்கள்" என அவர்கள் எம்மிடம் தெரிவித்தார்கள்.

மூன்று பிள்ளைகளின் தாயான தெல்வத்தையை சேர்ந்த சித்திரா, தற்போது தனது சகோதரியுடன் வசிக்கின்றார். அவரது கணவர் ஒரு பஸ் நடத்துனர். சித்திரா தனது குடும்பத்தின் வருமானத்திற்காக மரக்கறி விற்கின்றார். தனது குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்காக உலோகப் பூச்சிடப்பட்ட 15 இரும்புத் தகடுகள் வழங்கப்பட்டதாக அவர் விளக்கினார். "ஒரு ஒழுங்கான குடும்பம் பிள்ளைகளுடன் அவ்வாறான ஒரு குடியிருப்பில் வாழ்வது எப்படி?" என அவர் கேட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) அல்லது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து எவரும் தங்களை வந்து பார்வையிடவோ அல்லது தங்களது பிரச்சினைகளைப் பற்றி கேட்கவோ இல்லை என அவர் ஆத்திரத்துடன் விளக்கினார். சுனாமி தாக்கியவுடன், அரசியல்வாதிகள் அவர்களது விஜயங்கள் மற்றும் வாக்குறுதிகள் பற்றி முளக்கமிட்டுக்கொண்டனர். இப்பொழுது அவர்கள் கவலைப்படுவதில்லை.

பெரலியவில் வசிக்கும் பி. இந்திக்க ருவண்: "நான் ஒரு மின்னியல் தொழில்நுட்ப வல்லுநர். நான் எனது வேலைத் தளத்தையும் உபகரணங்களையும் இழந்துவிட்டேன். அரசாங்கம் என்னைப் போன்று சுய தொழில் செய்தவர்களுக்கு தேவையான உபகரணங்ளளையும் கருவிகளையும் பெற்றுத்தருவதாகவும் மற்றும் வங்கிக் கடன், மின்சார கட்டணம் மற்றும் அடுகு வைக்கப்பட்ட நகைகளுக்கும் உதவி வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தது. ஆனால் அனைத்து வாக்குறுதிகளும் வெரும் ஊடகப் பிரச்சாரத்திற்காகவே," எனத் தெரிவித்தார்.

கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற இரு பிள்ளைகளின் தந்தையான ஏ. காமினி: "அரசாங்கம் வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதாக வாக்குறுதியளித்தது. இப்போது அவர்கள் எங்களை கோழிக் கூண்டுக்குள் தள்ளப் போகின்றார்கள்," என்றார். இன்னமும் கோவிலொன்றில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் 82 வயது மூதாட்டியான ரது மிசலின் நோனா, அரசாங்கம் உணவு பங்கீட்டை நிறுத்தத் திட்டிமிட்டிருப்பதாக கூறிய செய்தியையிட்டு கவலை கொண்டதாக தெரிவித்தார்.

நாங்கள் ஒரு வேலையற்ற இளைஞர்கள் குழுவோடு உரையாடினோம். அவர்கள் அனைவரும் அரசாங்கத்தையிட்டு மிகவும் வெறுப்படைந்திருந்தனர். தனது அதிருப்தியை வெளியிட்ட ஒரு இளைஞன்: "எங்களது மீன்படி படகுகளையும் உபகரணங்களையும் சுனாமி சேதப்படுத்தியுள்ள நிலையில் எங்களால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் உள்ளது. அரசாங்கம் படகுகளை வழங்குவதாக கூறிய போதிலும் முழு பிரதேசத்திற்கும் இரண்டு படுகுகளே வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் மிக மோசமாக அவமதிக்கப்பட்டுள்ளோம்," என்றார்.

ஒரு தொண்டர் நிறுவனமான பெரலிய அபிவிருத்தி அமைப்பின் ஒரு அலுவலர் பேசியபோது, ஜூன் முற்பகுதியில் பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை பற்றி கலந்துரையாட வருமாறு அரசாங்க அரசியல்வாதிகளுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தபோதிலும், நிராகரிக்கப்பட்டு விட்டதாக விளக்கினார். பின்னர் அவர்கள் எதிர்க் கட்சியான ஐ.தே.க விற்கு அழைப்பு விடுத்தனர். அதன் பிரதிநிதகள் வந்து வாக்குறுதியளித்த போதிலும் எதனையும் மேற்கொள்ளவில்லை.

தீவைச் சூழவுள்ள பத்தாயிரக்கணக்கான மக்களின் துன்பங்களை பற்றி அரசாங்கமும் எதிர்க் கட்சியும் வெளிக்காட்டியுள்ள கொடுரமான அக்கறையின்மையானது, முழு அரசியல் ஸ்தாபனமும் இழைக்கும் பெரும் குற்றமாகும்.

Top of page