World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Unite European workers and youth against militarism and social reaction

இராணுவவாதம் மற்றும் சமூக பிற்போக்குக்கு எதிராக ஐரோப்பிய தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்து

Statement of the Socialist Equality Party and World Socialist Web Site
18 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பா முழுவதும் மார்ச் 19 அன்று ஈராக்கியப் படையெடுப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டங்களில் கீழ்க்கண்ட துண்டுப் பிரசுரம் வழங்கப்பட உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தலைநகரான புருஸ்ஸல்ஸ், மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களிலும் சமூக பிற்போக்கு மற்றும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மார்ச் 19 அன்று நடைபெற உள்ளன. உத்தியோகபூர்வமாக இதனை ஏற்பாடு செய்யும் மற்றும் அரசாங்கத்திற்கேற்றவாறு நடந்து கொள்ளும் அமைப்பாளர்களுக்கு மாறாக, இராணுவவாதம், வாழ்க்கைத்தரங்கள், ஜனநாயக உரிமைகள் இவற்றிற்கு எதிரான தாக்குதல்களை எதிர்ப்பதற்கு ஒரு சுயாதீனமான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுமாறு, கண்டத்தின் உழைக்கும் மக்கட்தொகையினர் அனைவரையும் நாம் அழைக்கின்றோம்.

ஈராக்கிய போர் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை மார்ச் 19 குறிக்கிறது. இந்தப் போர் ஒரு வரலாற்று திருப்பு முனையைக் குறிக்கிறது. அதிக பாதுகாப்பு அற்ற ஒரு நாட்டின்மீது, பொய்களின் அடிப்படையிலும், சர்வதேச சட்டத்திற்கு மாறாகவும் அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. இதுவரை, யுத்தமானது குறைந்தபட்சம் 100,000 ஈராக்கியரையும் அதேபோல 1,500 அமெரிக்கப்படையினரையும் உயிரிழக்கச்செய்துள்ளது மற்றும் 10,000 அமெரிக்கப்படையினர் காயமடைந்துள்ளனர். 250,000 மக்கட்தொகையினரை கொண்டிருந்த பல்லூஜா நகரம் தரைமட்டமாக தகர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 9,000 ஈராக்கியர்கள் அமெரிக்கரால் நடத்தப்படும் கடுஞ்சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். வலிந்து தாக்கும் போரும் ஆக்கிரமிப்பும், போர்க்குற்றங்களாக இருந்தன, இன்னும் இருக்கின்றன.

புஷ் நிர்வாகம் இராணுவ வலிமை மூலமும் சர்வதேச சட்டத்தைப் பற்றி பொருட்படுத்தாமலும் தன்னுடைய நலன்களை வலிந்து செயற்படுத்துவதை தொடரும் என்று தெளிவுபடுத்தி உள்ளது. புஷ்ஷின் மறுதேர்தலுக்கு பின்னர், ஜோன் நெக்ரோபோன்ட், எலியட் ஆப்ராம்ஸ், ஜோன் போல்டன் போன்று, இலத்தின் அமெரிக்காவில் இராணுவ ஆட்சிகளையும் கொலைப் படைகளையும் ஆதரித்ததன் மூலம், குறிப்பாக நிகரகுவாவில் கான்ட்ரா போரை ஆதரித்ததன் மூலம் தங்களின் உயர்வை பெற்றவர்கள், இன்று மிக உயர் அரசியல் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இப்பொழுது சிரியா மற்றும் ஈரானை இலக்கு கொண்டுள்ளது.

ஈராக்கிய போரை நிராகரித்திருந்த சில ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவை முற்றிலும் பாசாங்குதனமான தன்மையை தாங்களே வெளிப்படுத்தியுள்ளன. அவர்கள் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு தங்கள் ஒப்புதலைக் கொடுத்த பின்னர், ஈராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி கொடுப்பதில் தீவிர ஆதரவைக் கொடுத்துள்ளதுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் சிலவற்றை விலக்கிக்கொள்ள வகைதரும் முறையில், தங்களுடைய படைகளையும் அங்கு அனுப்பி வைத்துள்ளன.

ஆரம்பத்தில் இருந்தே, இந்த நாடுகளின் அரசாங்கங்கள், ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டை இராணுவத்தின் கீழ் அடிமைப்படுத்துவதை எதிர்க்கவில்லை; மாறாக அவர்கள் தங்களுடைய ஏகாதிபத்திய நலன்கள் பற்றிய அச்சத்தால் செயற்தூண்டல் கொண்டிருந்தனர். பெரும் எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா பகுதியை தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் அமெரிக்க முயற்சிகள் ஐரோப்பிய சக்தி (Energy) அளிப்புக்களையும், மிகுலாப சந்தைகளையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பிற்கு, ஐரோப்பாவின் வல்லரசுகள் தங்களுடைய மறு ஆயுதப் பெருக்கத் திட்டங்களை தொடக்குவதன் மூலமும், புஷ் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "முன்கூட்டியே தாக்கித்தனதாக்கும் தடுப்புப்போர்" கொள்கையை உள்ளடக்கும் தங்களின் சொந்த பாதுகாப்பு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமும் பதிலிறுத்துள்ளன. நேட்டோவில் இருந்தும் அதேபோல ஆயுத முகவாண்மையிலிருந்தும் சுதந்திரமான வகையிலும், உலகெங்கிலும் தலையீடு செய்யவல்ல ஐரோப்பிய இராணுவப் படைகளை நிறுவியுள்ளன, அதன் நோக்கம் கண்டத்தை அமெரிக்க ஆயுத தொழில்நுட்பத்தை நம்பியிரா வகையில் சுதந்திரமானதாக ஆக்குவதாகும்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் இரண்டுமே, ஈராக்கில் தொடங்கிய போருடன், உலகின் மூலப் பொருட்கள், சந்தைகள் மற்றும் குறைவூதிய உழைப்பு வளங்கள் ஆகியவற்றில் பெரும்பகுதியை கைப்பற்றுவதில் தங்களுக்குள் போட்டியிடும், நவீன காலனித்துவ முறையில் உலகை மறுபங்கீடு செய்வதை தீவிரமாய் முன்னெடுத்து வருகின்றன. இந்த வழிவகையின் தர்க்கம் இன்னும் கூடுதலான முறையில் இராணுவப் பூசல்களைப் பெருக்கும்; அவை சிரியா, ஈரான், வட கொரியா, சீனா, ரஷ்யாவும்கூட என்று தொடங்கி, இறுதியில் வல்லரசுகள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொள்ளுவதற்கு வகைசெய்யும். கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்ததைப் போலவே, உலகை பங்கிடலும், மறுபங்கிடலும் மற்றொரு உலகப் போருக்கான அபாயத்திற்குத்தான் ஊக்கம் கொடுப்பதாக அமையும்.

இராணுவவாதத்தின் வளர்ச்சியானது, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை அழிப்பதுடன் இணைந்துள்ளது. புஷ்ஷின் "பயங்கரவாதத்திற்கெதிரான போர்" என்பது இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய பக்கங்களை கொண்டுள்ளது. சர்வதேச அளவில், தடையற்ற முறையில் தன்னுடைய இராணுவ வலிமையை பயன்படுத்துவது என்பதை அது உட்குறிப்பாக கொண்டுள்ளது. உள்நாட்டை பொறுத்தவரையில், அது அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழிப்பதில் சம்பந்தப்பட்டுள்ளது, ஒரு போலீஸ்-அரசு எந்திரம் தோற்றுவிக்கப்பட்டு, செல்வந்தர்களுக்கு சாதகமாக இன்னும் கூடுதலான முறையில் தேசிய செல்வத்தை மறுவிநியோகம் செய்வது ஆகும்.

ஐரோப்பாவும் இதே வழியைத்தான் பின்பற்றுகிறது. ஐரோப்பிய ஒன்றிய குடையின் கீழ் பொருளாதார ஒருங்கிணைப்பை கொண்டுவருவதன் நோக்கமே ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் அழிப்பதன் மூலம் ஐரோப்பிய வல்லரசுகள் மற்றும் நாடுகடந்த நிறுவனங்கள் உலக அரங்கில் தங்களின் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக போட்டித்திறன் மிக்கதாக செய்வதற்காகும்.

ஐரோப்பாவின் புதிய அரசியல் அமைப்பானது, ஐரோப்பிய குடிமக்களுடைய உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை; மாறாக பெரு வர்த்தகத்தினரின் மற்றும் ஆளும் செல்வந்த தட்டினரின் உரிமைகளை தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் உத்தரவாதம் செய்வதாகும். "பணிகள், பொருட்கள் மற்றும் மூலதனம்" இவற்றை தடையின்றி எங்கும் செல்ல அனுமதிக்கும் அதே நேரத்தில், தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து செல்லும் உரிமைமீது கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

இத்தன்மையில் மிக இழிந்த நிலைப்பாட்டின் வெளிப்பாடாக, அவர்கள் அரசியல் புகலிடம் கோருபவர்களையும், குடியேற விழைவோரையும் நடத்தும் முறை உள்ளது. ஐரோப்பிய எல்லைகளில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர், ஏனெனில் ஐரோப்பா ஒரு அடைக்கப்பட்ட கோட்டையாக மாற்றப்பட்டு விட்டது. அரசியல் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள "விடுதலை, பாதுகாப்பு, நீதி" என்ற கருத்துக்கள், "தடையற்ற, சிதைவிற்குட்படாத போட்டியுடைய ஒற்றை சந்தையை" பாதுகாப்பதற்கு உறுதி அளிப்பதற்கு ஆகும். அரசியல் அமைப்பானது மேலும், அமெரிக்கா, நேட்டோ இவற்றில் இருந்து ஐரோப்பாவை ஒரு சுதந்திரமான சக்தியாக்கும் ஒரு பொது இராணுவக் கொள்கையை வடிவமைப்பதை முன்னோக்குகிறது; அத்தகைய இராணுவம் அதன் சொந்த கட்டமைப்பு ஆணையகத்துடன் ஒரு வெளியுறவு அமைச்சரின் கீழ் இயங்கும்.

அவசியமான முன்னோக்கு என்ன?

இப்போக்கு ஐரோப்பிய உழைக்கும் மக்களிடத்தில் இருந்து பரந்த முறையில் எதிர்ப்பை சந்தித்து ள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஈராக்கியப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மில்லியன் கணக்கான மக்கள் வீதிக்கு வந்தனர். இத்தாலியிலும், பிரிட்டனிலும் முறையே பெர்லுஸ்கோனி, பிளேயர் அரசாங்கங்கள் போரை ஆதரித்ததால் இந்த ஆர்ப்பாட்ட அணிகள் மிகப் பெரிய முறையில் அந்த நாடுகளில் இருந்தன. அப்பொழுதில் இருந்தே பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இன்னும் ஏராளமான நாடுகள், இடையாறாமல் கொடுக்கப்படும் பொது நலத்திட்ட வெட்டுக்களுக்கு எதிரான தொடர்ச்சியான வெகுஜன எதிர்ப்புக்களால் ஆட்டம் கண்டிருந்தன.

ஆயினும், இந்தப் பரந்த எதிர்ப்பை ஐக்கியப்படுத்தி போரின் மூலத்திற்கும் பிற்போக்கிற்கும் -முதலாளித்துவ இலாப அமைப்பு மற்றும் அது தளமாகக் கொண்டிருக்கும் தேசிய-அரசுமுறை இவற்றுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் அதனை இயக்கக் கூடிய செயல்தன்மை நிறைந்த ஒரு முன்னோக்குத்தான் இந்த எதிர்ப்புக்களில் பற்றாக்குறையாக உள்ளது.

போரையும் சமூகப் பிற்போக்கையும் எதிர்ப்பதற்கு, அதற்கான காரணங்களை -முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியை ஒருவர் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்: போர் மற்றும் சமூக பிற்போக்கிற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு தேவையாகும். தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் ஒன்றுபட்டு, மனிதத் தேவைகளை இலாப உந்துதலுக்கு மேலாக வைக்கும் ஒரு சோசலி சமுதாயத்திற்காக போராடவேண்டும்.

புஷ் நிர்வாகமும் அதன் வலதுசாரிக் கொள்கையும், அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும். முதலாவது எடுத்துக்காட்டில், அமெரிக்காவின் உலகப் பொருளாதார அந்தஸ்தில் இது நீண்ட வீழ்ச்சியை கொண்டிருக்கிறது; அது சுமக்கின்ற மாபெரும் கடன் மற்றும் டாலருக்கு போட்டி நாணயமாக யூரோ வெளிப்படுவதில் பிரதிபலிக்கிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெறும் போர்கள் அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டு தன்னுடைய இராணுவ ஒப்புயர்வற்றநிலையைப் பயன்படுத்துவதன் மூலம் இப் பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் முயற்சியைத்தான் உருக்கொண்டுள்ளது. இந்த நிலையுடன் மிக நெருங்கிய தொடர்பு உடையதாக அமெரிக்காவிற்குள் சமூக சமத்துவமற்ற நிலையின் வெடிக்கக்கூடியதான வளர்ச்சி இருக்கிறது. அமெரிக்க சமுதாயத்தின் மேல்மட்டத்தில் செறிந்துள்ள செல்வக்குவிப்பு, அதேவேளை பெரும்பாலான மக்கள் அதிகரித்த அளவில் பாதுகாப்பு அற்ற மற்றும் கடுமையான வாழ்வைச் சந்தித்திக் கொண்டு இருப்பதும், ஜனநாயக அமைப்பு முறைகளுடன் இயைந்து செல்லமுடியாததாக இருக்கிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஐரோப்பாவிற்கான நேரடி விளைவுகளைக் கொண்டுள்ளது. போருக்குப் பிந்தைய காலத்தில் நிலவிய சமூக சமரசக் கொள்கை, அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான தன்னுடைய குளிர்யுத்த கொள்கையின் நலன்களில், அமெரிக்கா மேற்கு ஐரோப்பிய போட்டியாளர்களையும் மீளக்கட்டமைத்து வளர்த்து விட்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, தான் இனி ஐரோப்பிய மூலதனத்தை ஸ்திரப்படுத்தும் ஒரு கொள்கையை பின்பற்றவேண்டிய தேவை இல்லை என்பதை அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டிற்கு உணர்த்திவிட்டது. இந்த அமெரிக்க கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் வெடிப்புத் தன்மையுடைய பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ பதட்டங்களை கட்டவிழ்த்துள்ளது. ஐரோப்பிய ஏகாதிபத்தியமானது, அதிகரித்த அளவிலான தாக்கும் பண்பு மற்றும் உள்நாட்டில் "அமெரிக்க" சமூக நிலைமைகளை அறிமுகப்படுத்துதல் இவற்றுடன் தன்னுடைய சொந்த பூகோள நலன்களைப் பின்பற்றுவதன் மூலம் இதற்குப் பதில் கொடுத்துள்ளது.

இந்தப் போக்கானது, சமூக ஜனநாயக மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகள் போன்றவற்றால் ஆதரிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் இருக்கும் சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம், மற்றும் பிரான்சில் உள்ள கன்சர்வேடிவ்கள் அல்லது பிரிட்டனில் உள்ள தொழிற்கட்சி அரசாங்கம் இவற்றினது கொள்கைகளுக்கு இடையே மிகச் சிறிய கருத்து வேறுபாடுகள்தான் உள்ளன. ஈராக் போரைப் பற்றிய மாறுபட்ட கண்ணோட்டம் இருந்தாலும், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஐரோப்பிய இராணுவத்தைக் கட்டி எழுப்புவதில் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன. அதிகரித்துவரும் இராணுவவாதமும் சமூகப் பிற்போக்கும் வெறுமனே ஒரு குறிப்பிட்ட கொள்கையின் விளைவு அல்ல, மாறாக, அவை முதலாளித்துவ அமைப்பு முறையிலேயே ஏற்பட்டுள்ள ஆழ்ந்த நெருக்கடியின் விளைவுதான் என்பதை இதுவே தெளிவாக்குகிறது.

சமூக ஜனநாயகமும் தொழிற்சங்கங்களும்

போருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எதிரான புருஸ்ஸல்ஸ் ஆர்ப்பாட்டமானது, தொழிற்சங்கங்கள் முதல் அட்டாக் மற்றும் சமாதான அமைப்புக்கள் போன்ற அமைப்புக்கள் வரை படர்ந்திருக்கும் ஒரு பரந்த கூட்டினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

உண்மையில் இந்த அமைப்புக்கள் அனைத்துமே ஏதேனும் ஒருவிதத்தில் சமூக ஜனநாயகத்துடன் தொடர்பு கொண்டவை ஆகும். ஜேர்மனிய IG Metall, Ver.di போன்ற தொழிற்சங்கங்கள் ஜேர்மன் அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து சமுக நலத்திட்டங்களில் வெட்டுக்கள், ஊதிய வெட்டுக்கள் இவற்றை சுமத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்றன. பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி பதவியில் இருந்தபோது அதன் ஒரு தட்டில் இருந்து அட்டாக் வெளித்தோன்றியது. ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் குரல் கொடுத்த ஐரோப்பிய சமூக மாமன்றம், கடந்த அக்டோபர் மாதம், லண்டனில் தொழிற்கட்சி தலைமையிலான லண்டன் பெருநகர சபையின் ஆதரவுடன் கூடி அவ்வாறு செய்திருந்தது.

இந்த அமைப்புக்கள் அனைத்தினதும் மையக் கருத்தாய்வே, நடைமுறையில் இருக்கும் "நவீன-தாராள" பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பில், முதலாளித்துவ ஐரோப்பிய ஓன்றிய பின்னணியிலேயே ஒரு சமுதாய பார்வை கொண்ட பொருளாதார கொள்கை சாத்தியம் என்பதாகும், மற்றும் அமெரிக்கா போல் இல்லாமல், ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்களை சமாதான கொள்கைகளை பின்பற்றுமாறு செய்யமுடியும் என்பதாகும். அவர்களுடைய நோக்கம் ஐரோப்பிய ஆளும் செல்வந்தத்தட்டுக்களின் மீது அழுத்தம் கொடுத்து அவர்களை தம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுமாறு செய்வதாகும். சோசலிச முன்னோக்கையும், சுயாதீனமான ஒரு சோசலிச அமைப்பைக் கட்டுவதையும் அவர்கள் நிராகரிக்கின்றனர்.

இத்தகைய முன்னோக்கு ஒரு முட்டுச்சந்துக்கே இட்டுச்செல்லும். சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புக்களிலிருந்து தொழிலாள வர்க்கம் தேவையான படிப்பினைகளை பெறுவதிலிருந்து இது தடுக்கிறது மற்றும் சமூக சீர்திருத்தவாதத்தின் காட்டிக்கொடுப்பு விளைவிக்கும் சக்தியில் அதன் பிரமைகளைக் கடந்து வருவதையும் தடுக்கிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சமூக ஜனநாயக அரசாங்கங்களின் தலைமையில் அமைந்திருந்தன. ஜேர்மனியிலும், இங்கிலாந்திலும் அவை இன்னும் அதிகாரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் அவர்கள் பெரு வர்த்தக நலன்களுக்கான பொருளாதார கொள்கைகளைத்தான் மக்கள்மீது சுமத்தியுள்ளனர். அவர்களின் வலதுபுற சாய்வு இனி மாற்ற இயலாததாகப் போய்விட்டது.

பூகோள முதலாளித்துவ உள்ளடக்கத்தினுள்ளே "நவீன-தாராளவாதத்திற்கு" மாற்று ஏதும் இல்லை. உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்டமை முதலாளித்துவ தேசிய அரசின் கட்டமைப்பிற்குள்ளே செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தவாத கொள்கையின் அடிப்படையை கீழறுத்து விட்டுள்ளது. தற்கால பொருளாதார வாழ்வின்மீது ஆதிக்கம் கொண்டுள்ள நாடுகடந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியையும், சேவைத்துறைகளையும் எங்கு ஊதியங்களும் வரிகளும் குறைவாக இருக்கின்றனவோ, அந்த நாடுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். தொழிற் சங்கங்களும், சமூக ஜனநாயக கட்சிகளும் இத்தகைய போக்கிற்குமுன் செயலிழந்து நிற்கின்றன. தேசிய அரசின் பாதுகாப்பாளர்கள் என்ற முறையில், தேசிய மூலதனத்தின் நலன்களின் பேரில் அவை தவிர்க்கமுடியாத வகையில் தொழிலாள வர்க்கத்தின் ஊதியத்தை குறைப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை குறைப்பதற்குமான உந்துதலில் கட்டாயம் பங்கேற்றாக வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலமும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாளித்துவ செயற்பட்டியலை, ஒரு தேசிய சீர்திருத்தவாத நோக்குநிலையிலோ அல்லது தேசிய இறைமை காக்கப்பட வேண்டும் என்ற அழைப்பின் அடிப்படையிலோ எதிர்க்கப்பட முடியாதது ஆகும். அத்தகைய தேசிய முன்னோக்கு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பெருவர்த்தகத்தின் தாக்குதலுக்கு உட்படுத்தவும்தான் பயன்படும்.

மிக அடிப்படையான உரிமைகள் மற்றும் கடந்த காலத்தில் பெற்றுள்ள சமூக வெற்றிகளின் பாதுகாப்புக்கு அடிப்படையிலேயே மாறுபட்ட ஒரு மூலோபாயம் தேவைப்படுகிறது. அதன் மையத்தானத்தில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் இருந்தாக வேண்டும்.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளின் உருவாக்கம்தான், முழு கண்டத்தின் உற்பத்தி சக்திகள் அனைத்தையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அபிவிருத்தி செய்வதற்கான வழியை திறக்கச்செய்ய முடியும்.

சமூக ஜனநாயகத்தின் சமூக சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையை தகர்த்துவிட்ட அதே பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள்தான் சோசலிசப் புரட்சியின் மார்க்சிச வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான புறநிலைமைகளையும் கூட தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.

பூகோளமயமாக்கமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அணிகளை கட்டுக்கடங்காமல் பெருக்கியுள்ளது. அனைத்து முதலாளித்துவ சமுதாயங்களிலும் செல்வந்தருக்கும் ஏழைகளுக்கும் இடையிலான துருவமுனைப்படல், அதிகரித்த இராணுவவாதம், போர் மற்றும் வல்லரசுகளுக்கு இடையே பெருகிவரும் மோதல்கள் இவை அனைத்தும், சமூக விரோத போக்குகளை உடைவு நிலைக்கு கொண்டுவந்து விட்டன. மில்லியன் கணக்கான மக்கள் மரபு வழியிலான கட்சிகளில் இருந்து மனமுறிவு கொண்டுள்ளனர் மற்றும் ஒரு அரசியல் மாற்றீட்டை எதிர் நோக்கி உள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும் அதனுடைய அங்கமான உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளாலும் வெளியிடப்படுகிறது. இது உழைக்கும் மக்களுடைய முழு அரசியல் நனவையும் மேம்படுத்தவும், தொழிலாள வர்க்கத்தை சர்வதேச ரீதியாக ஐக்கியப்படுத்தும் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்திற்கான அடிப்படையை தோற்றுவிக்கவும் நிறுவப்பட்டுள்ளது. மிக முக்கியமான அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை பற்றி அன்றாடம் சோசலிச பகுப்பாய்வை அளிக்கும் வகையில் இது பல மொழிகளிலும் வெளியிடப்படுகின்றது.

உலக சோசலிச வலைத் தளத்தை படிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் கட்டி எழுப்பும் பணியில் ஈடுபடுமாறு போரையும் சமூக பிற்போக்கையும் தீவிரமாக எதிர்ப்பவர்கள் அனைவரையும் நாம் அழைக்கின்றோம்.

See Also:

மார்க்சிசம், அனைத்துலகக்குழு மற்றும் விஞ்ஞானபூர்வமான முன்னோக்கு: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடி பற்றிய ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை: ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக

Top of page