World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Egyptian government suppresses opposition while US turns blind eye

அமெரிக்கா கண்ணை மூடிக்கொண்டிருக்கிற நேரத்தில் எகிப்து அரசாங்கம் எதிர்ப்பை ஒடுக்குகிறது

By Rick Kelly
21 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

அண்மை வாரங்களில் எகிப்தின் முன்னணி எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 29 ல் நாடாளுமன்ற உறுப்பினரும், அண்மையில் அமைக்கப்பட்டுள்ள Al-Ghad (நாளை) கட்சி தலைவருமான அய்மன் அல் நூரை (Ayman Al nur) அரசு பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் அல் நூர் பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனது கட்சியை பதிவு செய்து கொள்வதற்காக 1000 திற்கு மேற்பட்ட கையெழுத்துக்களை போலியாக தயாரித்ததாக அந்த முன்னாள் பத்திரிக்கையாளர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

Al-Ghad ன் துணைத் தலைவரும் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மற்றும் கட்சியின் முதலாவது செய்திப் பத்திரிக்கை வெளிவருவதும் ஒடுக்கப்பட்டிருக்கிறது. அல் நூர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்து, அரசாங்கம் ஒரு பொய் வழக்கு தொடுப்பதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அவரது வழக்கு எகிப்திற்கு உள்ளேயும் அமெரிக்காவிலும் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கைது செய்யப்பட்டிருக்கும் பலரில் அல் நூரும் ஒருவர். ஜனவரி 31 ல் போலீஸார் இஸ்லாமிய முஸ்லீம் சகோதரத்துவ அமைப்போடு (Islamist Muslim Brotherhood) தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேரை கைது செய்து சட்ட விரோதமான அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதாக அவர்கள் மீது குற்றம்சாட்டினர்.

ஜனவரி 28 ல் மார்வா பாரூக், பாகு அப்துல்லா மற்றும் பத்திரிக்கையாளர் இப்ராஹிம் எல்-சஹாரி ஆகிய மூன்று பேரையும் கெய்ரோ சர்வதேச புத்தக கண்காட்சியில் போலீஸார் கைது செய்தனர். சோசலிச ஆய்வு நிலையத்தின் உறுப்பினர்களான அந்த மூவரும் எகிப்தில் மாற்றத்திற்காக ஒரு சோசலிச பார்வை என்ற புத்தகத்தை விற்பதற்கு முயன்றனர். அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் புத்தகத்தை வினியோகித்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உண்ணாவிரதத்தை துவக்கிய பின்னர்தான், பிப்ரவரி 8 ல் எல்-சஹாரி விடுதலை செய்யப்பட்டார்.

அரசாங்கத்தின் எதிரிகளுக்கு ஒரு சக்திவாய்ந்த சமிக்கை தருகின்ற வகையில்தான் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், மேலும் ஆறு ஆண்டுகள் தனது பதவி நீடிப்பை பாதுகாப்பதற்கு மேற் கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக அண்மை மாதங்களில் எதிர்ப்பு பெருகி வருகிறது. 76 வயதான அவர் 1981 முதல் எகிப்தில் ஆட்சி செய்து வருகிறார். மற்றும் 2011 வரை தனது பதவியை நீடிப்பதற்கு தற்போது முயன்று வருகிறார். முபாரக்கின் மகன், அவரது வாரிசாக உருவாவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஊகங்கள் வெளியிடப்பட்டன. கமால் முபாரக், தனது தந்தைக்கு ஆலோசகராகவும், ஒரு பணக்கார வர்த்தகராகவும், எகிப்தில் பரவலான வெறுப்பிற்கு இலக்கானவராகவும் உள்ளார்.

ஜனாதிபதி வழக்கமாக தனது அரசியல் எதிரிகளை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருவதுடன், ஊடகங்கள் மீது ஒரு கடுமையான முன்தணிக்கை முறையை செயல்படுத்தி வருகிறார். என்றாலும், அவரது சர்வாதிகாரத்திற்கு ஒரு போலி அரசியல் சட்ட முகமூடி போர்த்தப்பட்டிருக்கிறது. தேசிய நாடாளுமன்றம் ---இதில் முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சி மேலாதிக்கம் செலுத்தி வருகிறது--- ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளில் ஒரு ஜனாதிபதியை நியமிக்கிறது. அந்த நியமனத்திற்கு பின்னால் அந்த ஒரே பிரதிநிதியை கருத்தெடுப்புகளில் ஏற்கலாம் அல்லது தள்ளுபடி செய்து விடலாம்.

இந்த ஏற்பாடு இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முபாரக்கின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும், இந்த ஆண்டு நீறுபூத்த நெருப்புப் போன்றுள்ள எகிப்திய சமுதாயத்தின் அதிருப்தி இதுவரை கண்டிராத அளவிற்கு அரசியல் கட்டுக்கோப்பு பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி தேர்விற்கான பொது வாக்கெடுப்பு செப்டம்பரில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் அக்டோபரில் நடைபெறவிருக்கின்றன.

மூன்று அரசியல் செயலூக்கர்கள் ---ஒரு பெண்ணுரிமை எழுத்தாளர், சமூகவியல் பேராசிரியர் மற்றும் ஒரு முன்னாள் எம்.பி ஆகியோர்--- முபாரக்கிற்கு எதிராக தாங்கள் போட்டியிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாதபோதிலும், அவர்கள் ஒரு மில்லியன் கையெழுத்துக்களை திரட்டி ஒன்றிற்கு மேற்பட்ட வேட்பாளர்களை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில் அரசியல் சட்ட திருத்தம் கோரி ஒரு மனு கொடுக்க முயன்று வருகின்றனர்.

சென்ற ஆண்டு டிசம்பர் 12 ல், முபாரக் மீண்டும் பதவியில் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெய்ரோ உயர் நீதிமன்றத்தின் முன் 500 முதல் 1000 மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைவிட இரண்டு மடங்கு அரச பாதுகாப்பு படையினர் அங்கு திரண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றம் கோரும் எகிப்து இயக்கம் என்ற ஒரு கூட்டணி ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டணியில் நாசரிஸ்ட்டுகள், இஸ்லாமியவாதிகள் மற்றும் எகிப்தின் பல்வேறு ஸ்டாலினிசக் குழுக்களில் மிச்சம் மீதியிருந்தவர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்த உருவாக்கத்திற்கு கிபாயா (போதுமானது) இயக்கம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது கணிசமான விளம்பரம் பெற்றுள்ள கூட்டணியாகும். கெய்ரோ சர்வதேச புத்தகக் கண்காட்சியில் மற்றொரு சிறிய கண்டனம் நடத்தப்பட்டும், மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டும் இருக்கிறது.

ஆட்சிக்கு எதிர்ப்பு குறிப்பாக இளைஞர்களிடையே தீவிரமடைந்து வருகிறது. அவர்கள் தகவல் தொழில்நுட்பம் அபிவிருத்தியடைவதை சாதகமாக பயன்படுத்தி எகிப்தின் ஊடக முன்தணிக்கை முறையை தவிர்த்துவிட்டனர். ஏறத்தாழ நான்கு மில்லியன் வலைத் தளங்களை பயன்படுத்துவோரும் மற்றும் எண்ணிறந்த வலைத் தளங்களும் உரையாடும் அறைகளும் (chatrooms) முபாரக்கிற்கு எதிரான விவாதங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்படி பெருகி வருகிற அரசியல் அதிருப்தியோடு ஒரு தீவிர சமூக நெருக்கடியும் இணைந்து கொண்டுவிட்டது. ஏனெனில் ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருகின்றன. எகிப்திய பொருளாதாரம் மந்த நிலையிலுள்ளது. மற்றும் வேலையில்லாத் திண்டாட்ட நிலை 15 சதவீதமாகவுள்ளது. நபர்வாரி ஆண்டு வருமானம் 1200 டாலர்கள்தான். படுவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு மே மாதம் அரசாங்கம் மீண்டும் உணவு இரசீது (vouchers) முறையை கொண்டு வந்திருக்கிறது. இத்தோடு ஒப்பு நோக்கும்போது முதலாளித்துவத்தின் முன்னணிப் பிரிவுகள் நன்றாகவே வாழ்கின்றன ---கடந்த ஆண்டு எகிப்தின் பங்கு சந்தையில் விலைகள் இரட்டிப்பாக உயர்ந்தன.

எகிப்தில் ஒரு சுயாதீனமான தொழிலாளர் வர்க்க இயக்கம் இல்லாமை ---அதற்கு எகிப்து ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன்மை பொறுப்பாகும்---- எதிர்ப்பு பெரும்பாலும் மசூதிகளிலிருந்தும், முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு போன்ற தடைவிதிக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளிலிருந்தும் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது.

Al-Ghad மற்றும் Kafiya போன்ற முதலாளித்துவ தாராளவாத இயக்கங்கள் ஒன்று திரண்டு கொண்டிருப்பதற்கு காரணம் சீர்திருத்த நடவடிக்கைகள் இல்லாமல், எகிப்தின் சமூக பிளவுகள் ஒரு வெடித்துச் சிதறும் அரசியல் வெளிப்பாடாக அமைந்துவிடும் என்ற பயத்தினால்தான். பல தாராளவாத அரசியல்வாதிகளுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளின் அளவு, அவர்களது கோரிக்கை பொருளடக்கத்தின் தன்மையோடு ஒப்பிடும்போது முற்றிலும் அளவிற்கு அதிகமானதாகும். எடுத்துக்காட்டாக அல் நூர், முபாரக் மற்றொரு முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பதை எதிர்க்கவில்லையென்றால், சில அரசியல் சட்ட சீர்திருத்தங்களுக்கு அவர் அனுமதிகளை வழங்குவார்.

சீர்திருத்தவாத அமைப்புகள் ஜனாதிபதி தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க கூடாது என்றும், 24 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் அவசரகால சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக பதிவு செய்யப்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன.

புஷ் நிர்வாகம் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது

இந்த மாதத் துவக்கத்தில் ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட துவக்க உரையில் எகிப்து சவுதி அரேபியாவுடன் சேர்ந்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கு இலக்காக குறிக்கப்பட்டுள்ள அமெரிக்க நட்பு நாடுகளில் ஒன்றாக குறிப்பிட்டிருந்தார். "மகத்தான பெருமை மிக்க நாடான எகிப்து மத்திய கிழக்கில் சமாதான வழியைக் காட்டியதோடு இப்போது மத்திய கிழக்கில் ஜனநாயகத்திற்கு வழிகாட்டும்" என்று புஷ் அறிவித்தார்.

இந்தக் கூற்றுக்கு அப்பாலும் அலை போன்ற கைதுகள் நடைபெற்றிருப்பதற்கு புஷ் நிர்வாகம் தனது கருத்துக்களை அமுக்கியே வாசித்துள்ளது. அல் நூரின் கைது குறித்து அரசுத்துறை ஒரு அறைகுறையான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. "அந்த கைது தந்திருக்கும் சமிக்கை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். அந்த கைது எங்களது உள்ளத்தில் எகிப்தில் ஒரு ஜனநாயக நடைமுறை பற்றிய கண்ணோட்டம் தொடர்பாக சந்தேகங்களை எழுப்புகிறது" என்று ஒரு பேச்சாளர் தெரிவித்தார்.

எகிப்தின் வெளியுறவு அமைச்சர் அகமட் அபூல் ஜெயிட் அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொண்டலிசா ரைசை பிப்ரவரி 15 ல் சந்தித்தார். அந்த விவாதத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரைஸ், பாலஸ்தீனம் ஈராக் மற்றும் சூடானில் அமெரிக்காவின் கொள்கைக்கு எகிப்து தந்துள்ள ஆதரவிற்காக "ஆழ்ந்த பாராட்டுதலை" தெரிவித்துக்கொண்டார். அல் நூரின் கைது பற்றி அவர் விவாதித்தாரா என்று கேட்ட பின்னர்தான் ரைஸ் "ஆம், நான் அந்த வழக்கு தொடர்பான எங்களது சக்திவாய்ந்த கவலைகளை எழுப்பினேன் மற்றும் இது பற்றி வெகுவிரைவில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற எங்களது மிக சக்திவாய்ந்த நம்பிக்கையையும் நான் வெளியிட்டேன்" என்று குறிப்பிட்டார்.

முபாரக்கின் ஒடுக்குமுறை தொடர்பான எந்த கணிசமான எதிர்ப்பையும் அமெரிக்கா வெளிப்படையாக தெரிவிக்காதது, புஷ் நிர்வாகத்தின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பற்றிய வாய்வீச்சு மத்திய கிழக்கின் மீது அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதிபடுத்திக் கொள்ளும் கருவிதானே தவிர வேறு ஒன்றுமில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த பிராந்தியம் முழுவதிலும் கொடூரமான சர்வாதிகாரங்களை புஷ் நிர்வாகம் ஆதரிக்கிறது. அப்படியான ஆதரவு, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு உதவுமென்றால் உலகம் முழுவதிலும் அத்தகைய கொடூரமான சர்வாதிகாரங்களை நிர்வாகம் ஆதரிக்கும்.

ஓராண்டிற்கு ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்கள் வரை அமெரிக்காவிலிருந்து எகிப்து உதவியை பெறுகிறது. இது முபாரக் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விசுவாச பிரதிநிதியாக செயல்படுவதற்கு தரப்படுகின்ற ஒரு வெகுமதியாகும். புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்தின் மீதான போரை'' ஆதரிப்பதில் இந்த சர்வாதிகாரி முக்கியமான பங்களிப்பை செய்து வருகிறார். இதர பங்களிப்புகளுடன் சேர்ந்து, எகிப்தின் பாதுகாப்பு அமைப்புகள் CIA உடன் நெருக்கமாகவும், பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்பட்டு தன்னிடம் ஒப்படைக்கப்படுகிற கைதிகளை விசாரணை செய்வதிலும், சித்திரவதை செய்வதிலும் ''ஒத்துழைத்து'' வருகிறது.

இஸ்ரேலுக்கு தனது ஆதரவின் மூலம் இந்தப் பிராந்தியத்தில் முபாரக் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறார். இஸ்ரேல் ஆதரிக்கிற பாலஸ்தீன தலைவர் முஹமத் அப்பாசை முன்னிலைப்படுத்துவதில் அவர் முக்கிய பங்களிப்பு செய்தார். அண்மையில் அப்பாசையும் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனையும் ஷாம் எல் சேக்கில் (Sharm el-Sheikh) நடைபெற்ற உச்சி மாநாட்டில் எகிப்து விருந்தினராக உபசரித்துள்ளது.

அந்த உச்சி மாநாடு எகிப்து இஸ்ரேல் மேலும் இறுக்கமாக ஒத்துழைப்பதற்கு வழிவகைகளை தந்துள்ளது. காசாவுடன் தனது எல்லையை கண்காணிக்க முபாரக் உறுதியளித்தார். மற்றும் இந்த ஆண்டு பிற்பகுதியில் 700 எல்லைக் காவலர்களை அனுப்புவார். அத்துடன், எகிப்து பாலஸ்தீனிய போலிசாருக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இரண்டாவது இன்டிபாடா வெடித்துச் சிதறியதை தொடர்ந்து இஸ்ரேலிய எதிர்ப்பு உணர்வுகளுக்கு ஒரு சலுகையாக 2000 த்தில் திரும்ப அழைக்கப்பட்ட நாட்டின் தூதர் மீண்டும் இஸ்ரேலில் நியமிக்கப்பட்டுள்ளார்.

"எகிப்தில் ஷரோனின் செல்வாக்கை மேம்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரத்தை நடத்துவதற்கும், இஸ்ரேல் ஒரு சமாதான விரும்பி நாடு என்று சித்தரித்துக் காட்டுவதற்கும் ஒரு புதிய பேரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது" என்று கெய்ரோவில் அல்-அஹ்ரம் அரசியல் மற்றும் மூலோபாய ஆய்வுக் கழகத்தின் ஒரு மூத்த ஆய்வாளரான Emad Gad குறிப்பிட்டார். அரசாங்க ஊடகம் இஸ்ரேல் பிரதமரை தாக்குவதை நிறுத்திக்கொண்டதுடன் பத்திரிக்கைகளில் இழிவு படுத்துகின்ற கேலி சித்திரங்கள் வெளியிடப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சியோனிஸ்ட் அரசுடன் எகிப்தினுடைய இணைப்பு மக்களிடையே ஆழமான வெறுப்புணர்வை உருவாக்கியுள்ளன. மற்றும் முபாரக் மற்றொரு முறை ஜனாதிபதியாக பதவியில் நீடிப்பதற்கு மிகப் பெருமளவில் எதிர்ப்பு நிலவுவதற்கு அது ஒரு காரணமாக உள்ளது. ஷரோன் விஜயத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான எகிப்தின் பெரிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மற்றும் அவரை போர் குற்றங்களின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கூறினர். கெய்ரோவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஆதரவிற்கு எதிராக 20 க்கு மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தங்களது தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆனால், அத்தகைய உணர்வுகள் முபாரக்கை அசைக்கவில்லை. அவர் இஸ்ரேலுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை முடுக்கி விட்டுள்ளார். எகிப்தின் 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிவாயுவை வரும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேலின் மின்சார நிறுவனம் வாங்கிக் கொள்வதற்கு சென்ற மே மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாட்டை இஸ்ரேல் பத்திரிக்கைகளில் மட்டுமே தெரிந்து கொண்ட எகிப்து மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதேபோல் உள்நாட்டு அரசு ஊடகங்கள் அந்த செய்தியை மறைத்துவிட்டன.

சென்ற டிசம்பரில் எகிப்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஒரு மூன்று-வழி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அது எகிப்திற்குள் தகுதிவாய்ந்த தொழில்துறை வலயங்களை உருவாக்குவது சம்பந்தமானதாகும். இந்த வலயங்களுக்குள் செயல்படுகின்ற உள்நாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு தங்களது பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், அதில் ஒரு நிபந்தனை என்னவென்றால் அப்படி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் 11.7 சதவீத இஸ்ரேலிய உபகரணங்களை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

இந்த பேரங்கள் எதுவும் சாதாரண எகிப்தியர்களின் நிலைமைகளை மேம்படுத்தாது. என்றாலும், அது ஆளும் செல்வந்தத் தட்டினரை மேலும் பணக்காரர்களாக ஆக்கும்.

சீர்திருத்தத்திற்கான அழுத்தம்

புஷ் நிர்வாகம் முபாரக் ஆட்சியைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறது என்றாலும், இந்த ஆதரவிற்கும் இந்த பிராந்தியம் முழுவதிலும் ''ஜனநாயகத்தை'' பரப்ப வேண்டும் என்ற குறிக்கோளுக்குமிடையில் நிலவுகின்ற தெளிவான முரண்பாடுகள், இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நீண்டகால நலன்களுக்கு சேதம் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டின் பிரிவுகளுக்கிடையே கவலைகள் வளர்ந்துள்ளன. அத்துடன், அரசியல் மாற்றம் இல்லாமல் நாட்டின் சமூக பதட்டங்கள் வெடித்துச் சிதறி அரசாங்கத்தை படுமோசமாக சீர்குலைத்துவிடும் என்ற எகிப்தின் தாராளவாதிகளது கவலைகளையும் பலர் பகிர்ந்து கொள்கின்றனர்.

அல் நூர் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், கிளிண்டனின் அரசுத்துறை செயலாளராக பணியாற்றி வந்த மேடலைன் அல்பிரைட்டை அவர் சந்தித்தார். அரபு நாடுகளில் ஜனநாயகத்தை வளர்க்கும் வகையில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கின்ற நாடாளுமன்ற பணிக்குழுவின் தலைவராக அல்பிரைட் எகிப்து விஜயம் மேற்கொண்டிருந்தார்.

Al Ghad கட்சி மீதான ஒடுக்குமுறை, பிரதான அமெரிக்க செய்தி பத்திரிக்கைகளில் கூர்மையான தலையங்கங்களுக்கு வகை செய்திருக்கிறது. ஜனவரி 18 ல் "எகிப்திற்கு போதுமானது" பிப்ரவரி 2 ல் "Mr. புஷ்ஷிற்கு எகிப்து வைத்துள்ள சோதனை" என்ற தலைப்புகளில் 2 கட்டுரைகளை வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்திருக்கிறது. "எகிப்தில் ஜனநாயகம் வளர்க்கப்படுகிறது" என்ற தலைப்பில் பிப்ரவரி 4 ல் நியூயோர்க் டைம்ஸ் தலையங்கம் தீட்டியுள்ளது.

"இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்குமிடையில் ஒரு சமாதான தரகராக எகிப்தின் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் தந்து உதவுகின்ற பங்களிப்பானது, அவர் தன்னைத்தானே சர்வாதிகாரத்தில் நிலைநாட்டிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு விமர்சனங்கள் வருவதிலிருந்து அவரை காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பு தந்துவிட முடியாது. ஏறத்தாழ 24 ஆண்டுகள் பதவியிலிருந்து, இந்த ஆண்டு கடைசியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கான பொது வாக்கெடுப்பில் தன்னை ஒரே வேட்பாளராக அறிவித்து மேலும் 6 ஆண்டுகள் பதவியில் நீடிக்க அவர் தயாராகி வருவதாக தோன்றுகிறது. அதே நேரத்தில் தனது மகன் கமாலை பரோனிக் பாணியில் வாரிசாக ஆக்குவதற்கு வளர்த்து வருகிறார். பல ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு அமெரிக்க வரி செலுத்துவோர் பில்லியன் கணக்கான டாலர்களை தந்திருக்கின்றனர். எனவே, முபாரக்கின் எதேச்சதிகார ஆட்சியின் கீழ் வெடித்துச் சிதறும் நிலை உருவாகிக் கொண்டிருப்பது குறித்து வாஷிங்டன் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இதுதான்" என்று டைம்ஸ் அறிவித்திருக்கிறது.

இந்தக் கவலைகள் சில அரசியல் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக, முபாரக்கிற்கு நெருக்கடி கொடுப்பதற்கு புஷ் நிர்வாகம் பயன்படுத்தலாம். அத்தகைய முயற்சிகள் எதுவாக இருந்தாலும், அமெரிக்க அரசாங்கம் ஜனநாயக சீர்திருத்தத்தை நோக்கி கணிசமானதொரு நடவடிக்கை என்று பாராட்டக் கூடும். மற்றும் முபாரக்கின் ஆட்சி மேலும் 6 ஆண்டுகள் நீடிப்பதற்கு எகிப்து முதலாளித்துவ வர்க்கத்திற்குள் நிலவுகின்ற எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்கும் அது உதவும்.

இந்த அலை போன்ற கைதுகளுக்கு முன்னர், அத்தகைய முயற்சிகளுக்கு ஜனாதிபதி முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு குறிப்பான சமிக்கைகளைத் தந்தார். சென்ற நவம்பரில் Al Ghad கட்சி பதிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்தது. அப்போது பைனான்சியல் டைம்ஸ் இதுபற்றி விளக்கம் தரும்போது 28 ஆண்டுகளில் முதல் தடவையாக, ஆட்சியின் கட்சி பதிவுக் குழு ஒரு கடுமையான எதிர்க்கட்சியை அமைப்பதற்கு அனுமதி தந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. அரசாங்கப் பேச்சாளர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் இடையில் அரசியல் சட்ட மாற்றம் தொடர்பாக ஒரு ''தேசிய பேச்சுவார்த்தைக்கு'' ஏற்பாடு செய்யப்படும் என்று முபாரக் அறிவித்தார். இந்த பேச்சுவார்த்தை என்று அழைக்கப்பட்டது, அல் நூர் கைது செய்யப்பட்டு சில நாட்களில் நடத்தப்பட்டது.

புஷ் நிர்வாகம், முபாரக் உயர்ந்த செல்வாக்குள்ள தலைவர்களை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று விரும்புமே தவிர எந்தச் சூழ்நிலைகளிலும் நியாயமான ஜனநாயக சீர்திருத்தத்தை நெருங்கி வருகிற நடவடிக்கைக்கு கூட முபாரக்கிற்கு நெருக்குதல் தரமாட்டாது என்பது சந்தேகத்திற்கு இடமில்லை. முபாரக் ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடாகும். மற்றும் புஷ் நிர்வாகம் மத்திய கிழக்கில் அதன் தலையீடுகளுக்கு எகிப்தின் ஆதரவை நீடிப்பதன் மூலம், அந்த பகுதி முழுவதையும் பிரித்து நல்ல அறுவடையை குவிக்கலாம் என்று எதிர்பார்க்கிறது. ஆதலால், அரசியல் நடைமுறையிலிருந்து எகிப்திய மக்களை தொடர்ந்து விலக்கி வைத்திருப்பதன் மூலம்தான் அத்தகைய ஆதரவை புஷ் நிர்வாகம் தொடர்ந்து எகிப்திடமிருந்து பெற முயலுகிறது.

Top of page