World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

May Day 2005: Sixty years since the end of World War II

2005ம் ஆண்டு மே தினம் : இரண்டாம் உலகப் போர் முடிந்து 60 ஆண்டுகள்

பகுதி 1 | பகுதி 2

By David North
3 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் 30 அன்று பேர்லினிலும், மே 1 அன்று லண்டனிலும் நிகழ்ந்த மேதினக் கூட்டங்களில், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த் ஆற்றிய உரையின் முடிவுரை பகுதி கீழே வெளியிடப்பட்டுள்ளது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, பாசிசத்தில் இருந்தும் முழுப் போர் ஒன்றில் இருந்தும் உலகம் வெளிப்பட்டுவந்த பின்னர், இனி இத்தகைய கொடூரங்கள் வருங்காலத்தில் நிகழாது என்ற நம்பிக்கையை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கொண்டிருந்தனர். ஆயினும் கூட, இப்பொழுது அத்தகைய மற்றொரு பேரழிவு ஒன்று மனித குலத்தை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இந்நிலை எவ்வாறு ஏற்பட்டது? இரண்டாம் உலகப் போரின் இறுதியில் தான் கொண்டிருந்த சோசலிச அபிலாசைகளை புரட்சிகர கொள்கைகளாக மாற்றி, முதலாளித்துவ அமைப்புக்கு தொழிலாள வர்க்கம் முடிவு கட்டுவதற்கு எது தடுத்தது? தொழிலாள வர்க்கத்திற்குள் புரட்சிகர உறுதிப்பாடும், துணிவும் இல்லை என்று கூறுவதில் அதி ஆவலாக உள்ள சோர்வுற்ற அவநம்பிக்கையாளர்கள் (தங்களுடைய ஊக்கமின்மையை நியாயப்படுத்துவதற்காக) கூறியுள்ளதில் விடை காணப்படமுடியாது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தொழிலாள வர்க்கத்திடையே அத்தகைய சிறப்பியல்புகள் தாராளமாகவே இருந்தன.

எனவே இதற்கு விடை போருக்குப் பிந்தைய காலத்தின் அரசியல் பற்றிய ஆய்வில் கட்டாயம் காணப்படும். ஹிட்லருடைய மூன்றாம் ரைகின் சரிவிற்கு பின்னர் மிக நெருக்கடியான நிலைமையில் இருந்து ஐரோப்பிய முதலாளித்துவம் தப்பிப் பிழைத்ததற்கு முக்கிய காரணம் ஸ்ராலினிச, சமூக ஜனநாயகக் கட்சிகளின் காட்டிக் கொடுப்பும், தொழிலாள வர்க்க அமைப்புக்களின் காட்டிக் கொடுப்பும் ஆகும். கம்யூனிஸ்ட் கட்சிகள் (சோவியத் ஒன்றியத்தில் இருந்த சோவியத் அதிகாரத்துவத்தின் முகவர்களாக செயல்பட்டவை) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆகிய இரண்டும் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் தூக்கி எறியப்படுவதை முற்றிலும் எதிர்த்தன. பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் இருந்த சக்தி வாய்ந்த எதிர்ப்பு இயக்கங்கள் ஸ்ராலினிச தலைவர்களால் நிராயுதபாணியாக்கப்பட்டுவிட்டன; முதலாளித்துவ அரசாங்கங்கள் மீண்டும் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் ஸ்ராலினிச தலைவர்கள் முதலாளித்துவ தலைவர்களுடனும், கட்சிகளுடனும் ஒத்துழைத்தனர். இவ்விதத்தில் ஸ்ராலினிச, சமூக ஜனநாயகக் கட்சிகள் வலுவற்றிருந்த ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அமெரிக்க ஏகாதிபத்திய இரட்சகர்களுக்கும், போரினால் சிதைவுற்றிருந்த பொருளாதாரங்கள் முதலாளித்துவ அடிப்படையில் மறுசீரமைக்கப்படுவதற்கு அவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய கால அவகாசத்தை கொடுத்து உதவின.

ஸ்ராலினால் தொடரப்பட்ட கொள்கைகள் ஐரோப்பிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலை அக்கறைகளால் எந்த விதத்திலும் நிர்ணயிக்கப்படவில்லை (அவற்றிற்கு அவர் முற்றிலும் விரோதப் போக்கைத்தான் கொண்டிருந்தார்), மாறாக சோவியத் அரசின் தேசிய நலன்களாக அவர் கருதியவற்றால் நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பாவில் புரட்சி என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மோதலை தூண்டும் என்ற அச்சத்தை கொண்டிருந்த ஸ்ராலின் தொழிலாள வர்க்கத்தின் ஆட்சிஅதிகாரத்துக்கான போராட்டத்தை தடுத்து, வீழ்த்துவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்திருந்தார். எந்த இடத்தில் சோவியத் அதிகாரத்துவம் உள்நாட்டுப் போர் வெடிப்பதை தடுக்கும் வகையில் செல்வாக்கை குறைவாக கொண்டிருந்ததோ, அங்கெல்லாம் ஸ்ராலின் நேரடி நாச வேலையிலேயே ஈடுபட்டார். தான், கிரீஸ் பிரிட்டனின் செல்வாக்கிற்குட்பட்டது என்ற கருத்தைத் கொண்டுள்ளதாகவே, வின்ஸ்டன் சேர்ச்சிலிடம் உறுதிமொழியளித்திருந்த ஸ்ராலின், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியான KKE க்கு, ஜேர்மன் ஆக்கிரமிப்பு சீர்குலைந்து போனதற்கு பின் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின்போது உதவியளிக்காமல் இருந்து விட்டார். கிரேக்க உள்ளநாட்டுப் போர் பற்றிய வரலாற்றாளர் கருத்தின்படி, "KKE இன் அனைத்து உறுப்பினர்களும், குறிப்பாக அதன் தலைமையும்கூட, அழிக்கப்பட்டுவிடலாம் என்பது ஸ்ராலினுடைய கருத்தாகும். மனச்சாட்சி உறுத்தல் சிறிதளவும் இல்லாமல், அவர்கள் அழிவிற்கு செல்லட்டும் என்று ஸ்ராலின் அவர்களை கைவிட்டு விட்டார்."[1]

ஐரோப்பிய முதலாளி வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டிற்கும் போதிய மூச்சு வாங்கிக் கொள்ளும் அவகாசம் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் --அதில்தான் அமெரிக்க முதலாளித்துவம் தப்பிப்பிழைப்பதற்கு தங்கி இருந்தது-- மேற்கு ஐரோப்பாவின் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு ஏற்பட்டிருக்கவே முடியாது. போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த 1947ல் தான் மார்ஷல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் மேற்கு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏற்பட்டிருந்த புரட்சிகர இயக்கம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையினால் காட்டிக் கொடுக்கப்பட்டு, பின்வாங்க தலைப்பட்டது.

ஸ்ராலினிச, சமூகஜனநாயக அதிகாரத்துவத்தின் கொள்கைகள், முதலாளித்துவம் மீண்டும் மறு ஸ்திரப்படுத்தலுக்கு தேவையான அரசியல் வாய்ப்பை அளித்தன. உலகப் பொருளாதாரம் பின்னர் விரிவாக்கம் அடைந்தது, தேசிய சீர்திருத்தவாத்த்தின் செல்தகைமை பற்றி தொழிலாள வர்க்கத்திடையே பிரமைகளுக்கு சடரீதியான அடித்தளத்தை கொடுத்தது. 1890களில் இருந்திருந்த முந்தைய சீர்திருத்தவாதத்தின் "பொற்காலத்தில்", விரைவாக உயர்ந்த தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம், வெறுமனே முதலாளித்துவத்தில் மட்டும் நம்பிக்கையை ஊட்டி வளர்க்கவில்லை, மாறாக சமூக முன்னேற்றத்தின் ஒரு கருவியாக தேசிய அரசு நீடிக்கவல்ல தன்மையிலும் நம்பிக்கையை ஊட்டி வளர்த்தது.

மீழெழுச்சி பெற்ற தேசியவாதத்தால் எடுக்கப்படும் குறிப்பிட்டவடிவம் ஏதாவது ஒருநாடு எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளின் பிரத்தியேக பண்புகளில் சார்ந்திருந்தது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் என்று மிகவும் முன்னேற்றம் அடைந்திருந்த முதலாளித்துவ நாடுகளில், 1947க்குப் பிந்தைய பொருளாதார செழுமையானது தேசிய பொருளாதாரங்களின் தொடர்ந்த வளர்ச்சி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்ற உறுதியை கொடுத்ததுடன், முதலாளித்துவத்துடன் பாரம்பரியமாக தொடர்புடையதாக காணப்படும் சமூகத் தீமைகளையும் இறுதியில் அழித்துவிடுவதை உத்திரவாதப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஊக்குவித்தது. 1953ல் ஸ்ராலினின் மரணத்தை தொடர்ந்து, சோவியத் பொருளாதாரம் அடைந்த விரைவான வளர்ச்சியானது, சோசலிசத்திற்கு ஒரு தேசியப் பாதை முன்னோக்கு என்ற அதிகாரத்துவத்தின் முன்னோக்கிற்கு சட்ட முறைமையை ஏற்படுத்திக் கொடுத்ததுபோல் தோன்றியது. இதே தேசிய சோசலிச முன்னோக்குதான் சீனாவிலும் வெளிப்பாட்டை கண்டது, அங்கு மாவோ, சோசலிசத்தை முற்றிலும் ஒரு தேசியவாத அர்த்தத்தில் கொண்டிருந்தார். தேசியவாத முன்னோக்கின் இன்னொரு வடிவமான "இறக்குமதி பதிலீடு" பொருளாதார வேலைத்திட்டம், இந்தியா மற்றும் ஏனைய காலனித்துவம் அகற்றப்பட்ட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ தலைவர்களின் கொள்கைகளை வழிநடத்தியது.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, சோசலிச சர்வதேசிய வாதத்துக்கு ஒரு புதிய தேசிய நிர்வாணா (முக்தி) மாற்று என்று பலருக்கும் தோன்றியது. ஆனால் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ விரிவாக்கத்தின் முடிவு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நெருக்கடியின் வளர்ந்துவரும் அறிகுறிகள், 1970ன் தொடக்கத்தில் இருந்து, தேசிய பொருளாதாரத்தின் வரையற்ற வளர்ச்சியின் சாத்தியத்தில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருந்த அனைத்து கொள்கைகளையும் கீழறுத்துவிட்டது. செழுமைக் காலத்தில், உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை சக்திகள் பின்னணியில் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது போல் தோற்றம் அளித்து, தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்த ஆதரவை அளித்தது போல் தோன்றியது. ஆனால் நெருக்கடி நிலைமைகளின் கீழ், உலக மற்றும் தேசியப் பொருளாதார சக்திகளுக்கு இடையே உள்ள உண்மையான உறவுமுறை மிகத் தெளிவாக, அனைத்தையும் விரைவிலேயே அம்பலமாக்கி விட்டது. எந்த தேசிய திட்டமும், அதன் குறிப்பிட்ட இயல்புகள் எவையாக இருந்த போதிலும் கூட, சர்வதேச மூலதனத்தின் பெரும் சக்திக்கு எதிராக எந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்தின் நலன்களையும் காக்கும் வழிமுறைகளை வழங்க முடியாது.

1980களில் சோவியத் அதிகாரத்துவத்தின், தேசிய போலிச் சோசலிச கற்பனாவாதம் சிதறிப்போனது. சீனாவை பொறுத்தவரையில் மாவோவுடைய ஆட்சியின் தன்மை பற்றிய நீண்ட நாள் விவாதம் தீர்க்கமாக தீர்க்கப்பட்டது. 1950களின் ஆரம்பத்தில், ஏர்னஸ்ட் மண்டெல், மிசேல் பப்லோ இன்னும் பல கோட்பாட்டாளர்கள், ட்ரொட்ஸ்கியின் உன்னதமான மார்க்சிச கருத்துருக்களை, புதிய அரசியல் வளர்ச்சிக்கு எதிராக போதுமானதாக இல்லை என்ற முடிவிற்கு வந்து, சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அமைப்பு இல்லாமல் அல்லது பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை வென்று கைப்பற்றுவதற்காக அடிப்படையாக கொள்ளும் புதிய புரட்சிகர மற்றும் பரந்த ஜனநாயக அதிகார அமைப்புக்கள் இல்லாமல், சோசலிசம் அடையப்படக்கூடியது என்ற ஆதாரத்தை சீனாவில் கண்டனர். இவர்கள் ஒரு புதிய அரசியல் வகையினத்தை கண்டுபிடித்தனர்; இதை அவர்கள் "ஊனமுற்ற" தொழிலாளர் அரசு எனப் பெயரிட்டனர், அதாவது தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை திறமையாகப் பயன்படுத்தும் உண்மையான, ஜனநாயக நிறுவனங்கள் எவையும் இல்லாத ஒரு "தொழிலாளர் அரசாக" இருந்தது. இவ்வரசின் பரிணாம வளர்ச்சி, இறுதியில் சீனாவை தவிர்க்க முடியாமல் பூகோள முதலாளித்துவ உற்பத்தியின் அடித்தளமாக மாறுவதற்கு இட்டுச்சென்றது. 1949ல் மாவோ சேதுங்கால் நிறுவப்பட்ட அரசு "ஊனமுற்ற முதலாளித்துவ அரசு" என்று அழைக்கப்பட்டிருந்தால், மிகவும் துல்லியமாக விளக்கப்பட்டிருந்திருக்க முடியும் என்பது இன்று நன்கு தெளிவாகியிருக்கிறது.

கடந்த ஆறு தசாப்தங்களின் அனுபவத்தில் இருந்து ஏதேனும் படிப்பினை கற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால், அது முதலாளித்துவம் சர்வதேசவாதத்தின் அடிப்படையில்தான் தோற்கடிக்கப்பட முடியும் என்பதாகும். அனைத்து தேசிய மாற்றுக்களும் செல்வாக்கிழந்துவிட்டன. மே தினக் கொண்டாட்டம் அதன் மூல உள்ளடக்கத்தில் மீண்டும் புத்துயிர்ப்பு கொடுக்கப்பட வேண்டும்; இந்நாளில் தொழிலாள வர்க்கம் சர்வதேசியத்தை ஒரு பொது தேசம் கடந்த ஒற்றுமையின் வெளிப்பாடு என்று மட்டும் இல்லாமல், தன்னுடைய அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கிற்கான அஸ்திவாரம் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தும்.

என்னுடைய உரையை ஆரம்பித்த கருத்துக்கு திரும்புவதன் மூலம் இக்குறிப்புக்களை கூறி உரையை முடிக்க என்னை அனுமதியுங்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்து 60 ஆண்டுகள் கழித்து, வறுமை, சுரண்டல், ஒடுக்குமுறை இவற்றில் இருந்து தூய்மைப்படுத்தப்பட்டுவிட்ட ஓர் உலகத்திற்கான நம்பிக்கைகளும், அபிலாசைகளும் இன்னும் அடையப்படவில்லை. உண்மையில், அரசியல் மற்றும் அறிவார்ந்த நிலைமை பிற்போக்குத் தன்மையில்தான் வளர்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் எஞ்சியிருந்த சமூக நலன்களை துடைத்துக்கட்டுவதற்கான ஆளும் செல்வந்த தட்டுக்களினால் ஆன உந்துதல், தவிர்க்கமுடியாமல், மிகப் பிற்போக்கான கருத்தியல்களால் -- எல்லாவற்றுக்கும் மேலாக, மதம் பற்றிய கருத்தியல்களால் பின்தொடரப்படுகிறது.

அமெரிக்காவில், புஷ் நிர்வாகம், ஜனநாயக உரிமைகளின் அடிப்படை அரசியலமைப்பு தூணான அரசும் திருச்சபையும் பிரிந்திருக்க வேண்டும் என்பதை அழிக்க முற்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி தன்னை மீண்டும் ஒரு மதத்தொடர்புள்ள சமூகத்தின் அரசியல் கருவி என்று வடிவமைத்துக் கொள்ள முற்பட்டுள்ளது. கிறிஸ்தவ அடிப்படைவாத திருச்சபைகள், அவற்றின் உறுப்பினர்கள் ஆகியோரை அணிதிரட்டுவதன் மூலம் வலதுசாரி அரசியலுக்கு ஒரு வெகுஜன அடித்தளத்தை உருவாக்க முயற்சிக்கின்றது. அமெரிக்க மக்களுள்ளே உள்ள செயலிழந்த, நோக்குநிலையற்ற, சொல்லப்போனால் பகுத்தறிவு அற்ற கூறுபாடுகளின் மத்தியில் உணர்வுகளை வெறித்தனமாக தூண்டிவிடும் வகையில், குடியரசுக் கட்சியினர் தங்களுடைய எதிர்ப்பாளர்களை கடவுளின் விரோதிகள் என்றும், ஆதரவற்ற கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் என்றும் சித்தரிக்கிறது.

இந்தப் பிரச்சாரத்தின் பாசிசத் தன்மை பெருகிய அளவில் புலப்பட்டுக் கொண்டு வருகிறது. அமெரிக்க வரலாற்றாளர்களில் குறிப்பிடத்தக்கவராகிய, ஜேர்மனியில் இருந்து சிறிய வயதில் தப்பி ஓடி வந்த, Fritz Stern, சமீபத்தில் நாஜிக்கள் பயன்படுத்திய பிரச்சாரத்திற்கும் குடியரசுக் கட்சியினரின் தற்போதைய பிரச்சாரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றிக் குறிப்பிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். Foreign Affairs இதழின் சமீபத்திய பதிப்பில் ஸ்டெர்ன் எழுதியுள்ளார்: "இன்று நான் அமெரிக்காவின் உடனடி வருங்காலத்தை பற்றிக் கவலை கொண்டுள்ளேன்; இந்த நாடு 1930களின் ஜேர்மன் மொழி பேசும் மக்களுக்குப் புகலிடம் கொடுத்திருந்தது." நாஜிக்களும் எவ்வாறு சமய வகையிலான அழைப்புக்களை மக்கள் ஆதரவை திரட்டும் முயற்சியில் பயன்படுத்தினர் என்று அவர் நினைவுகூருகிறார்.

"கடவுள் தேசிய அரசியலுக்கும் இதற்கு முன்னரே கட்டி இழுக்கப்பட்டுள்ளார்; ஆனால் ஹிட்லர் இனவாதக் கொள்கையை, ஜேர்மனிய கிறிஸ்தவ சமயத்துடன் பிணைத்துக் கூறியது அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் மிகப்பெரிய அளவில் சக்திவாய்ந்த கூறுபாடாக இருந்தது. சிலர் சமயத்தை, அரசியலுடன் கலக்கும் அறநெறி ஆபத்துக்கள் பற்றி நன்கு உணர்ந்துள்ளனர்; ஆனால் பலரும் அதனால் ஏமாற்றப்பட்டுவிடுகின்றனர். போலித்தனமான முறையில் அரசியலை சமயத் தன்மையுடையதாக மாற்றுவதுதான் அவருடைய பெரும் வெற்றிக்கு குறிப்பாக, புராட்டெஸ்டான்ட் பகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணமாயிற்று."[2]

அமெரிக்காவின் மிகச் சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவர் அத்தகைய எச்சரிக்கையை விடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக உணர்ந்திருப்பது அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி எவ்வளவு ஆழ்ந்துபோய் உள்ளது என்பதற்கு ஒரு குறிப்பு ஆகும். நாஜி ஜேர்மனி மீது அது கொண்ட வெற்றிக்கு 60 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்க அரசாங்கம் ஒரு பாசிச கருத்தியலுடன் கொஞ்சிக்குலாவுவதோடு, ஒரு பாசிச முறையிலான இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமும் கொடுத்துவருகிறது.

முதலாளித்துவ அரசியலானது சமயப் பிற்போக்குத் தன்மை, பழைமை வாதம் இவற்றில் சார்ந்திருப்பது ஆளும் செல்வந்த தட்டினரின் திவாலான தன்மையையும் நம்பிக்கை இழந்த நிலையையும் சுட்டிக் காட்டுகிறது. இது அமெரிக்காவில் மட்டும் அல்ல. அமெரிக்காவில், டெர்ரி ஷியாவோவின் வாழ்க்கையின் இறுதி வாரங்களில் தொடரப்பட்டிருந்த மனநோய் தீவிரக் கூக்குரல், உடனடியாக மத்தியகால முறையிலான சமயச் சடங்கு முறை எவ்வாறு இரண்டாம் ஜோன் போலின் மரணத்தை சூழ்ந்திருந்தது என்பதில் இருந்து இறுதியில் பெரும் பிற்போக்குவாதியான கார்டினல் ராட்சிங்கரை புதிய போப்பாக நியமித்தது வரை வெளிப்பட்டது. அதிநுட்ப தொழில்நுட்பரீதியான சாதனங்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் கரோல் வோஜ்டைலாவின் இறப்பு மற்றும் ராட்சிங்கரின் தேர்தல் செய்தி ஊடகத்தால் தகவல் அளிக்கப்பட்ட முறை, எனக்கு ட்ரொட்ஸ்கி 1934ல் அவர் லூர்துக்குச் சென்றிருந்தபோது கொடுத்த ட்ரொட்ஸ்கியின் விவரிப்பை நினைவுபடுத்தியது. "என்ன பண்பற்ற தன்மை, ஆணவம், இழிதன்மை!. அற்புதங்களுக்கு ஒரு கடை, இறையருளில் இழிதொடர்பு கொள்ளும் ஒரு வணிகம்... இதில் மிகச் சிறந்த ஏமாற்று என்னவென்றால், போப் லூர்திற்குக் கொடுத்த அருளாசி -- அதுவும் வானொலி மூலம். நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள அற்பமான அற்புதங்கள் வானொலி, தொலைபேசியுடன் அக்கம்பக்கமாக நிற்கின்றன! ஒரு பெருமைக்குரிய தொழில்நுட்பம், ரோமானிய தலைமைக் குறிகாரனின் மந்திரவித்தையுடன் இணைந்து செயல்படுவதை விட அதிகமாக இழிவையும், அருவருப்பையும் ஏற்படுத்தக் கூடியது வேறு எது? உண்மையில், மனிதகுலத்தின் சிந்தனை அதன் சொந்த கழிவுப்பொருளிலேயே (மலத்திலேயே) புதையுண்டு கிடக்கிறது."[3]

புபுதிய போப் பெனடிக்டின் ஆன்மிகப் பயணத்தில் முக்கிய நிகழ்வு அவர் கூறும் 1968 நிகழ்வுகளின் கொடூரத் தன்மை பற்றியதாகும் என நமக்கு அறிவிக்கப்படுகிறது; அதாவது, அவருடைய சமய தத்துவ விரிவுரைகள் கொந்தளித்த மாணவர்களால் நிறுத்தப்பட்டது. அந்த ஆண்டின் எதிர்ப்புக்கள்தாம் மிகப் பெரிய அளவில் மூன்றாம் ரைகின் குற்றங்களுக்கு எதிராக ஆழ்ந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு உதவின; மேலும் அவற்றின் தாக்கம் ஜேர்மனியின் அறிவார்ந்த, அரசியல், சமூக வாழ்வில் இருந்தது என்பதும் ராட்சிங்கருக்கு எந்த அக்கறையையும் கொடுக்கவில்லை. மக்கட் திரளின் ஆர்ப்பாட்டம் "ஒழுங்கிற்கு" ("Ordnung") அச்சுறுத்தல் என்பதாக அவர் கருதுகிறார்; அவர்கள் அவரை பகுத்தறிவுச் சிந்தனை, மதச்சார்பின்மை இவற்றின் தீமைகளால் நம்பவைத்துள்ளனர் என்கிறார். ஏப்ரல் 17 அன்று, நியூயோர்க் டைம்ஸ் புதிய போப் "திருச்சபை இன்னும் சக்திவாய்ந்த முறையில் செயல்பட்டு மிக அச்சுறுத்தும் போக்கிற்கு எதிராக வெகுண்டு நிற்கவேண்டும் என விரும்புகிறார்; அதாவது பூகோளமயமாக்கல் என்பது இறுதியில் பூகோளம்தழுவிய சமயசார்பின்மைக்கு வழிவகுத்துவிடும் என்பதாகும் அது."

போப் பெனடிக்ட் அடையாளம் காட்டும் "பூகோளந்தழுவிய சமயசார்பின்மை" திருச்சபைக்கு மிக ஆபத்தானது என்பது, சாராம்சத்தில் என்ன? ஒரு சமுதாயத்தில் இருக்கும் அந்த போக்குகளை - அதாவது சோசலிசம், சர்வதேசியம் இவற்றின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் பொருளாதார, விஞ்ஞான, பண்பாட்டு, அரசியல் போக்குகளை வலுப்படுத்தல் தவிர வேறு ஒன்றும் இல்லை. போப்பின் பயங்கள் நியாயமானவையே என்று நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வரலாற்று வளர்ச்சியின் திசையில் மிகப் பெரும் செல்வாக்கை செலுத்தக்கூடிய சக்திவாய்ந்த புறநிலை சக்திகள் சர்வதேசியம் தேசியவாதத்தின் மீது, பகுத்தறிவு பகுத்தறிவற்றதன் மீது, உலகம் முழுவதிலுமான மனித அடையாளம் இன, தேசிய, சமய அடையாளத்தால் வரையறுக்கப்படும் ஒரு குறுங்குழுவாத அடையாளத்தின் மீது வெற்றிகொள்வதற்கு வழிவகுக்கும்.

இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின் இது கடந்து வந்துள்ள துயரங்கள், சோகங்கள் அனைத்தும் ஒரு புறம் இருக்க, சோசலிசம் என்பது பொருளாதார, சமூக வளர்ச்சியின் புறநிலை வரலாற்று தர்க்கத்தில் வேரூன்றியுள்ளது. முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி, தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச சக்தியாக, மீண்டும் போராட்டப் பாதையில் இயக்கிச்செல்லும் - இந்தப் பாதை, தவிர்க்க முடியாமல் சோசலிசத்தை நோக்கித்தான் செல்லும்.

Notes:
1. C.M. Woodhouse, The Struggle for Greece 1941-1949, Chicago, 2002, p. 289.
2. Fritz Stern, "Lessons from German History," Foreign Affairs (May-June 2005), p. 17.
3. Leon Trotsky, Diary in Exile 1935, New York, 1963, p. 93.

See Also:

டெர்ரி ஷியாவோவின் வழக்கும் அமெரிக்காவின் அரசியல், கலாச்சார நெருக்கடியும்

Top of page