World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Victory Day celebration in Russia reveals deepening political and social tensions

ரஷ்யாவில் வெற்றி நாள் கொண்டாட்டம், ஆழ்ந்த அரசியல், சமூக பதட்டங்களை வெளிப்படுத்துகின்றது

By Andrea Peters
11 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், நாஜி ஜேர்மனியை சோவியத் தோற்கடித்த நாளின் 60 வது ஆண்டு நிறைவை, உலக விவகாரங்களில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை உயர்த்தும் வகையில் ஒரு நிகழ்வாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற விருப்பம் கொண்டிருந்த நிலையில், அன்றைய தின நிகழ்வுகள் நாட்டைப் பெரிதும் அழுத்திக் கொண்டிருக்கும் அரசியல், சமூக நெருக்கடிகளின் ஆழ்ந்த தன்மையை வெளிப்படுத்தவே துணை நின்றன.

வெற்றி நாள் விழா வருவதற்கு ஒரு வாரம் முன்னரே, தலைநகரம் ஒரு பெரிய இராணுவ முகாம் போல் மாற்றப்பட்டிருந்தது; மாஸ்கோ நகரத்தின் மையப்பகுதி கிட்டத்தட்ட மூடப்பட்ட கோட்டை போல் ஆயிற்று. பாதசாரிகளும், கார் போக்குவரத்தும் சிறப்பு அனுமதி அட்டைகள் இல்லாவிட்டால் செல்வதற்கில்லை என்று தடைசெய்யப்பட்டது; முக்கியமான சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, நகரத்திற்குச் செல்லும் சாலைகளில் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

நகரத்தின் எல்லைப்பகுதிகளில் இருக்கும் அலுவலகக் கட்டிடங்களில் வேலைபார்ப்பவர்கள் அருகாமையில் கட்டிடங்களின் மேற்தளத்தில் இருந்த காவல் துப்பாக்கிக்காரர்களின் இலக்கிற்கு ஆளாகுவதை குறைக்க, அவர்கள் பால்கனி பக்கம் வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டனர்; ஒரு அறிக்கையின்படி, அரசாங்க அதிகாரிகள் வீடு இல்லாதவர்களையும், மாஸ்கோ நகரத்தில் அனுமதி இல்லாமல் வசிப்பவரை கண்டால் அவர்களையும் வெளியேற்ற உறுதிமொழி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய அசாதாரண பாதுகாப்பு, 50 வெளிநாட்டு தலைவர்கள் வருகை மற்றும் செச்சென் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இவற்றை காரணங்காட்டி பகிரங்கமாக நியாயப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு க்ரோஜ்னியில் நடைபெற்ற வெற்றி நாள் விழாக்களில் குண்டு வீசப்பட்டு, காகேசிய குடியரசின் மாஸ்கோ சார்புடைய ஜனாதிபதி அக்மட் காடிரோ உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர்.

மாஸ்கோ நகரவாசிகள் தங்களுடைய வீட்டிற்கு வெளியே வராதிருக்கும் வகையில் ஊக்கப்படுத்தப்பட்டனர்; முடிந்தால் நகரத்தைவிட்டுச் சென்று விடுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். செஞ்சதுக்கத்தில் விழாக்களுக்கு வருகை என்பது, சிறப்பு அழைப்பினருக்கு மட்டுந்தான் என்றாகிவிட்டது; அங்கு பல நாடுகளில் இருந்து படைப்பிரிவுகளின் அணிவகுப்பும், சோவியத் சகாப்த காலத்திய டாங்கு அணிவகுப்பு, ஒரு விமானப்படைப்பிரிவு அணிவகுப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பொதுவாக விடுமுறையை நகரத்தின் மத்திய தெருக்களில் களித்து மகிழும் மாஸ்கோ மக்கள், இந்த விழா நேரத்தில் நகரத்திற்கு வெளியே இருக்கும் பூங்காக்களிலும் விளையாட்டு மைதானங்களுக்கும் செல்லுமாறு பணிக்கப்பட்டுவிட்டனர். இந்தப் புவியியல் முறையிலான பிரிப்பு, புதிய ஆளும் செல்வந்தத்தட்டிலிருந்து உழைக்கும் மக்களைப் பிரிக்கும் பெரிய இடைவெளி மற்றும் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி இவற்றின் தெளிவான பிரதிபலிப்பாக இருந்தது.

அதிகாரபூர்வ கொண்டாட்டத்தில் டஜன் கணக்கில் முன்னாள் வீரர்கள் பங்கு பெற்ற போதிலும் கூட, போரில் தப்பியவர்களில் பலர் நிகழ்ச்சியை காணக்கூட செஞ்சதுக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். "முன்னணிக்குச் செல்வதற்கு எனக்கு ஒன்றும் அழைப்புக் கொடுக்கப்பட தேவையில்லை" என்று அணியை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட 79 வயது முன்னாள் போர்வீரர் பெரும் வெறுப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்; அவரிடத்தில் உரிய அனுமதிச் சீட்டு இல்லாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஓய்வூதியம் பெறுவோரால் புட்டின் நிர்வாகம் பரந்த அளவில் வெறுக்கப்படுகிறது; அதுவும் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியவர்கள் இவருடைய அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள சமூக நலத்திட்டங்களில் மாற்றங்களினால் பெரும் வெறுப்பைக் காட்டியுள்ளனர். இந்த ஆண்டு ஆரம்பத்தில், ஆயிரக்கணக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் மாஸ்கோ, சென்ட் பீடர்ஸ்பேர்க் இன்னும் நாடெங்கிலும் உள்ள பல நகரங்களில் தெருக்களுக்கு வந்து, சமூக நலன்களில் சலுகையாக கொடுக்கப்பட்ட இலவச பொது வாகன பயன்பாடு போன்றவை பறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சிறு நஷ்ட ஈட்டுத்தொகை மட்டும் கொடுக்கப்பட்ட, மற்றும் பொதுநலச் செலவினங்களில் பெரும் வெட்டுக்கள் ஆகியவற்றிற்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

பெரும் தேசபக்த போரில், (இரண்டாம் உலகப்போர் ரஷ்யாவில் அவ்வாறுதான் அறியப்பட்டுள்ளது), சோவியத் ஒன்றியம் கொண்ட வெற்றிக்கு திருவிழா எடுப்பது, இன்று புட்டினை சூழ்ந்துள்ள முன்னாள் அதிகாரத்துவத்தினர், ரஷ்ய முதலாளித்துவ பகுதியினரை விட, நாஜிக்களை தோற்கடிக்க மகத்தான தியாகங்களை செய்திருந்த சாதாரண மக்கள் குடும்பங்கள் மில்லியன் கணக்கானவற்றிற்கு வேறுவிதமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

வெற்றித் திருநாள் நிகழ்ச்சிகளை புட்டின் நிர்வாகம் கவனத்துடன் கோர்த்து எடுத்து சோவியத் ஒன்றியத்திற்கும் ரஷ்ய நாட்டிற்கும் மரியாதை செலுத்தும் வகையில் திறம்பட அமைத்திருந்தது. மே 9ம் தேதி நிகழ்ச்சிகளில் அரிவாள், சுத்தியல் சின்னங்கள் இருந்த கொடிகள், சோவியத் இராணுவ இயந்திரத்தின் சாதனைகள், லெனினுடைய படங்கள், ஆகியவை ஏராளமாக இடம் பெற்றிருந்ததுடன், முன்னாள் வீரர்களும் சிகப்பு மலர்களை அசைத்தபடி அணிவகுத்துச் சென்றிருந்தனர்.

சாதாரண மக்கள், இந்த அடையாளங்களை சோவியத் மக்கள் ஹிட்லரை தோற்கடிக்கும் முயற்சிகளை நினைவுறுத்தும் வகையில் பார்த்திருக்கக் கூடும் என்றாலும், புட்டின் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் அவை ரஷ்ய தேசியவாதத்தை வளர்ப்பதற்கான ஒரு கருவியாக பயன்பட்டன. 1917ம் ஆண்டு சோசலிச மரபுகளின் எதிரியும், வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பு பேச்சாளருமான புட்டின், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் நாட்டுப்பற்றை சரியான முறையில்தான் அறிந்து வைத்துள்ளார்.

இந்த உணர்வு "தனி ஒருநாட்டில் சோசலிசம்" என்ற கொள்கை ஸ்ராலினால் கட்டமைக்கப்பட்டதில் உள்ளடங்கி நின்றதாகும். மே 9 திருவிழா நிகழ்வுகளை இந்த மரபுகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கிரெம்ளின் அமைத்தது; அதே நேரத்தில் சாதாரண மக்கள் சோவியத் காலத்தில் ரஷ்யர்கள் நிகழ்த்திய சாதனைகளைப் பற்றி பெருமித உணர்வும், கடந்த காலத்தை நினைத்து மகிழும் கருத்தும் நிர்வாகத்தால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

செஞ்சதுக்கத்தில் வெற்றி நாள் விழாக்களில் பார்வைக்கு ஒன்றும் வைக்கப்படவில்லை என்றாலும், இத்தினத்திற்கு முன் இருந்த பரபரப்புக்கள் ஸ்ராலினுடைய தோற்றத்தை பற்றி மீண்டும் ஒரு எழுச்சி கொடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் ஆதரவைக் கொண்ட முயற்சிகளில் இருந்தது. மே9 க்கு முதல் வாரத்தில் ஸ்ராலினின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. "வெற்றி தொடர்வண்டி (ரயில்)" ஒன்று மாஸ்கோவின் பைலோருஸ்கி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது இது வெற்றிபெற்ற சோவியத் படைவீரர்கள் முன்னணியில் இருந்து திரும்பிய பாதையின் மூலம் வந்தது; அந்த எஞ்சினில் சர்வாதிகாரியின் மிகப் பெரிய படம் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. ஸ்ராலின், ரூஸ்வெல்ட் மற்றும் சேர்ச்சில் இவர்களுடைய சிலைகளும் மே 9 நிகழ்வில் திறக்கப்படுவதாக இருந்தது; ஆனால் ஒருவேளை எதிர்ப்பு கிளம்புமோ என்ற கவலையில் நகர அதிகாரிகள் அத்திட்டத்தை கைவிட்டுவிட்டனர்.

முன்பு ஸ்ராலின்கிராட் என்று அழைக்கப்பட்டிருந்த வோல்கோகிராட் நகரத்தில், யால்டா உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்த மூவரின் புதிய சிலைகள் இந்த வார ஆண்டுவிழாவை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி நகரத்தின் பெயர் மீண்டும் ஸ்ராலின்கிராட் என்று ஆக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. கிழக்கு சைபீரியக் குடியரசான யாகுடியா-சாகாவில் அன்றைய சிறப்பு விழாக்களின் ஒரு பகுதியாக ஒரு புதிய ஸ்ராலின் சிலை திறக்கப்பட்டது. மாஸ்கோவிற்கு புறத்தே ஒரு சில மைல்கள் தள்ளியுள்ள ஓரியோல் நகரத் தலைவர்கள் சமீபத்தில் முன்பு அகற்றப்பட்டிருந்த ஸ்ராலின் நினைவுச் சின்னங்கள் மீண்டும் கொண்டுவரப்படவேண்டும் என்றும், சோவியத் ஒன்றிய பொறிவிற்குப் பின்னர் ஸ்ராலின் பெயர் அகற்றப்பட்ட பல தெருக்கள் மீண்டும் ஸ்ராலின் பெயரில் இருக்கவைண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

புட்டினே கூட ஸ்ராலினை நேரடியாகப் புகழாமல் இருப்பதில் கவனத்தைத்தான் கொண்டுள்ளார்; சமீபத்தில் ஒரு ஜேர்மன் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவரை "கொடுங்கோலர்" என்றுதான் விவரித்துள்ளார். ஸ்ராலின் மீட்பிற்கு கிரெம்ளின் வெளிப்படையாக ஆதரவு கொடுத்தால், புட்டின் நிர்வாகத்தின் மீதான புஷ் நிர்வாகத்தின் தாக்குதலுக்கு வெடிமருந்து கொடுத்தது போல் ஆகிவிடும். புஷ் நிர்வாகம், ரஷ்யாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக நிறுவனங்களை கூடப் படிப்படியாக அழிப்பதாக புட்டின் நிர்வாகத்தின் மீது வழமையாக குறைகூறிவருகிறது.

இப்படி நாஜிக்கள் தோல்வியடைந்த 60வது ஆண்டு நிறைவு விழாவில் ஸ்ராலினை மறு மீட்பு செய்ய பார்க்கும் முயற்சிகள் இரண்டாம் உலகப்போரின்போது சர்வாதிகாரி கொண்டிருந்த பங்கினை முற்றிலும் பொய்மைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டது ஆகும். சோவியத் ஒன்றியம் ஸ்ராலினின் குற்றங்களையும் மீறித்தான் பாசிசத்தின்மீது வெற்றி கண்டது. சோவியத் ஒன்றியத்தின் தலைசிறந்த இராணுவத் தளபதிகள் உள்பட, அக்டோபர் புரட்சியுடன் நெருக்கமாக அடையளப்படுத்திக் கொண்டவர்களுக்கு எதிரான பூண்டோடு அழிக்கும் அவருடைய செயல்பாடு போருக்கு முன்பு ஜேர்மனிய மற்றும் ஸ்பெயினின் தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுத்த செயல்கள் மற்றும் நாஜி ஜேர்மனியுடன் ஓர் உடன்பாட்டை கண்டது, சோவியத் ஒன்றியம் ஹிட்லரின் தாக்குதலை முற்றிலும் தயாரிப்பு இல்லாமல் சந்திக்கும்படி செய்துவிட்டது.

1990களின் போது நாட்டின், தேசிய நலன்களை மற்றும் தங்களுடைய சொந்த அதிகாரத்தையும் சலுகைகளையும் கீழறுத்த அமெரிக்க சார்புடைய ரஷ்ய ஆளும் தன்னலக்குழுவின் பகுதிகளின் நலனுக்காக புட்டின் பேசுகிறார். பெரும் தேசபக்த போரைச் சூழ்ந்துள்ள சோவியத் உருவகம், மற்றும் ஸ்ராலினுக்கு மறு ஏற்றம் ஆகியவை மக்களிடையே தேசியத்தை வளர்ப்பதற்கும், கடந்த 15 ஆண்டுகளில் ரஷ்யா அனுபவித்துவரும் சமூக சரிவானது, நாட்டின் பெரிய வல்லரசு நிலை இழப்பினால்தானே அன்றி, முதலாளித்துவ புனருத்தாரணத்தால் அல்ல என்று மக்களை நம்பவைக்கும் முயற்சிகளாகும்.

கிரெம்ளினின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும்கூட, 60வது ஆண்டு நிறைவு விழாக்கள் புட்டின் அரசாங்கம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொண்டிருக்கும் உறுதியற்ற நிலையைத்தான் வெளிப்படுத்தியுள்ளது.

லாட்வியன் தலைநகரில் புஷ் நிகழ்த்திய உரை மூலம் இவை ஓரளவு அதிகப்படுத்தப்பட்டன; அங்கு அவர் நிகழ்த்திய உரை ஒன்றில் ஸ்ராலின், ரூஸ்வெல்ட் மற்றும் சேர்ச்சில் மூவரும் யால்டாவில் 1945ல் கொண்டுவந்திருந்த போருக்குப் பிந்தைய உடன்பாட்டை கொடுங்கோன்மைக்கு ஒத்துழைக்கும் ஆவணம் என்று இகழ்ந்து கூறியிருந்தார்.

அமெரிக்க நிர்வாகம், புட்டின் ஆட்சியை பல மாதங்களாக ஜனநாயக விரோதத் தன்மையுடையது என்று கூறிவந்துள்ளதை தொடர்ந்து வந்த இந்த புஷ்ஷின் கருத்துக்கள் வேண்டுமென்றே வந்த ஆத்திரமூட்டலாகும். இதற்கு சோவியத் இராணுவம் பால்டிக் பகுதியில் நடந்து கொண்ட முறையை பாதுகாக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விடையிறுத்துக் கூறியதாவது: "எங்கள் மக்கள் தங்கள் தாய்நாட்டை மட்டும் காத்துவிடுவதோடு நின்றுவிடாமல், ஐரோப்பாவில் 11 நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தனர்" என்று கூறினார். அன்றே, CBS வாரச்செய்தி நிகழ்ச்சியான 60 நிமிஷங்களில், அமெரிக்கா தன்னுடைய ஆட்சியைக் குறை கூறியுள்ளது தொடர்பாக பேசுகையில், புட்டின் அமெரிக்கத் தேர்தல் குழுமுறையின் ஜனநாயக-விரோதத் தன்மையையும், மற்றும் 2000ம் ஆண்டில் எவ்வாறு புஷ் நாட்டின் தலைமை நீதிமன்றத்தால் பதவியில் இருத்தப்பட்டார் என்பது பற்றியும் சுட்டிக்காட்டினார்.

புட்டின் நிர்வாகத்திற்கு மற்றொரு தாக்குதல் என்ற முறையில், மே 9 நிகழ்ச்சிகளுக்கு பின்னர், மிகாய்ல் சாக்காஷ்வில்லியின் தலமையில் உள்ள அமெரிக்க சார்புடைய அரசாங்கம் இருக்கும் ஜோர்ஜியாவிற்கு செல்வதற்கு முன்பும், ரஷ்யாவில் கிரெம்ளின் ஆட்சிக்கு எதிராக இருப்பவர்களையும், ஜனநாயகவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களையும் புஷ் சந்தித்தார்.

இந்த 60ம் ஆண்டு நிறைவு விழாக்கள் ரஷ்ய அரசாங்கம் மேற்கொண்டிருந்த சில தூதரக நடவடிக்கைகள் தொடர்ந்து தோல்வியைக் கண்டதிலும் சற்று தளர்ச்சியை கண்டன. இது சோவியத் காலத்திற்குப் பின் மாஸ்கோ சற்றே சிதைவுற்ற அரசியல் செல்வாக்கைத்தான் கொண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது. தாங்கள் மேற்குப் புறம் கொண்டுள்ள சார்பை காட்டுவதற்கும் உள்நாட்டில் ரஷ்ய-எதிர்ப்பு தேசியவாதத்தை வளர்க்கும் பொருட்டும் எஸ்தோனியா மற்றும் லித்துவேனியா ஜனாதிபதிகள் இந்த விழாவை புறக்கணித்தனர்.

ஜோர்ஜியாவின் ஜனாதிபதி சாக்காஷ்வில்லியும் ஜோர்ஜிய எல்லைப் பகுதியில் ரஷ்ய இராணுவத் தளங்களை மூடுவது பற்றி செய்யப்பட்டிருந்த காலக்கெடு நிர்ணயத்தை மாஸ்கோ மதிக்கத்தவறியற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், கிரெம்ளின் கொடுத்திருந்த அழைப்பை இதேபோல் மறுத்துவிட்டார். நகோரோனோ-கரபாக் பகுதியின் கட்டுப்பாடு பற்றி ஆர்மினியாவுடன் எழுந்துள்ள பூசலின் விளைவாக அஜர்பைஜானுடைய தலைவரான இல்ஹம் அலியேவும் விழாவிற்கு வரவில்லை.

ரஷ்யாவின் மரபுவழியிலான செல்வாக்கு மண்டலத்தில் அது கொண்டிருக்கும் பூசல்கள் நிறைந்த நிலை, மிகத் தெளிவான முறையில் மே 8 அன்று, முன்னாள் சோவித் நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்குப் பின்னர் ஏற்படுத்திய பொதுநலநாடுகள் அமைப்பின் (CIS) தலைவர்களின் உச்சிமாநாட்டில் மிகத் தெளிவான முறையில் வெளிப்பட்டது. ரஷ்யாவின் மேற்கு எல்லைகள் மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்குப் பெரிதும் வளர்ந்து வருவதால் இந்த அமைப்பின் தலைவிதியே இப்பொழுது கேள்விக்குரியதாகிவிட்டது.

ஞாயிற்றுக் கிழமையன்று, சமீபத்தில் அமெரிக்க ஆதரவு பெற்ற "ஆரஞ்சுப் புரட்சி"யின் விளைவாக அதிகாரத்திற்கு வந்துள்ள உக்ரைனின், அமெரிக்க சார்புடைய ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோவ், CIS ஐ "அதிகம் பயனற்றது" என்று விவரித்துள்ளார்; இதில் அமைப்பின் உறுப்புநாடுகளில் காணப்படும் அரசியல் வளைவரைபாதைகளில் முக்கிய சீர்திருத்தங்கள் பிரதிபலிப்பாகவில்லை என்று அவர் குறைகூறியுள்ளார். உக்ரைன், அதேபோல் மற்ற CIS உறுப்பு நாடுகளான ஜோர்ஜியா, மோல்டோவா போன்றவை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சேர்வதற்கு இடம் கோரியுள்ளன. இப்பகுதியின் பொருளாதார இணைப்பை கருத்திற்கொண்டு தான் புதிய மாறுதல்களை CIS- க்குள் ஏற்படுத்த தயாராக இருப்பதாக மாஸ்கோ சுட்டிக் காட்டியுள்ளபோதிலும்கூட, இந்த கூட்டமைப்பு அதிகரித்தளவில் வெறும் அலங்கார அமைப்பு என்றுதான் கொள்ளப்படுகிறது.

Top of page