World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president on a political tightrope

இலங்கை ஜனாதிபதி அரசியல் கயிற்றின் மீது நிற்கின்றார்

By K. Ratnayake
14 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சுனாமி நிவாரண வேலைகளை கையாள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வதற்கான அவரது நடவடிக்கைகள் சம்பந்தமாக, அரசாங்கத்திலேயே உள்ள பிரிவுகளிடமிருந்தும் மற்றும் வெளியிலிருந்தும் வரும் கூர்மையான எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கின்றார். தீர்மானிக்கப்பட்டுள்ளபடி அடுத்த வாரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதை தடுப்பதற்கான இந்தப் பிரச்சாரத்திற்கு, குமாரதுங்கவின் பிரதான அரசாங்கப் பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமை வகிக்கின்றது.

அமெரிக்க மற்றும் ஏனைய வல்லரசுகளின் அழுத்தத்தின் காரணமாக விடுதலைப் புலிகளுடன் பொதுக் கட்டமைப்பை அமைத்துக்கொள்வது என்பது ஜனாதிபதிக்கு ஒரு தீர்க்கமான விடயமாகியுள்ளது. இந்த பிரேரணை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுனாமி நிவராணங்களுக்காக நிதிகளை பகிர்ந்தளிப்பதற்கான ஒரு வழியாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்தகைய உடன்படிக்கை, விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் 20 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த மோதலுக்கு முடிவு கட்டுவதற்காக, இடை நிறுத்தப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க நெருக்குவதன் பேரில் பயன்பட முடியும் என்ற மேலதிக அனுகூலத்தையும் கொண்டுள்ளது.

குமாரதுங்க இந்த பிரேரணையை ஏற்றுக்கொண்டாலும், இது விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு சமனானதாகும் என்ற ஜே.வி.பி யின் கண்டனத்தின் காரணமாக அவர் தொடர்ந்தும் பின்வாங்குகின்றார்.

விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு வரத் தயாராகுவதாக குமாரதுங்க கடந்தவாரம் வலியுறுத்தியதை அடுத்து பதட்ட நிலைமைகள் கூர்மையடைந்தன. அரசாங்கத்துடனும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் கிரிஸ்டினா ரொக்கா, நோர்வே விசேடத் தூதுவர் எரிக் சொல்ஹெயிம் ஆகியோர் இலங்கை வந்ததையடுத்து, சமாதான பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

மே 16-17 ல் உலக வங்கி அனுசரனையில் கண்டியில் நடைபெறவுள்ள அபிவிருத்தி மன்ற கூட்டத்திற்கு முன்னதாக, பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி இரு சாராரும் நகரவேண்டும் என நிதி வழங்கும் நாடுகள் விரும்புவதாக இராஜதந்திரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். ஆசிய அபிவிருத்தி வங்கி பேச்சாளர் ஒருவர், மன்ற கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பு முக்கியமான விடயமாக இருக்கும் என டெயிலி மிரர் பத்திரிகைக்கு கூறியதை அடுத்து, இந்தத் திகதிகள் குமாரதுங்கவுக்கு காலக்கெடுவாகியுள்ளன. பொதுக் கட்டமைப்பை உருவாக்கியதை அடுத்து, "நிவராணம் மற்றும் மீள்கட்டுமானத்திற்கு தேவையான நிதிகளை எங்களால் வழங்க முடியும்" என அவர் தெரிவித்துள்ளார்.

குமாரதுங்க இந்தக் கால எல்லையை அடையத் தவறின், சுனாமி நிவாரணத்திற்காக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்களை இழக்க நேரிடும். திறைசேரி செயலாளரின்படி, வாக்குறுதியளிக்கப்பட்ட 1.8 பில்லியன் டொலர்களில் 750 மில்லியன் டொலர்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

முழு சிங்கள பேரினவாத சக்திகளின், எல்லாவற்றுக்கும் மேலாக தனது சொந்த கூட்டணி பங்காளியான ஜே.வி.பி யின் கடுமையான எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ளதை அறிந்துகொண்டுள்ள குமாரதுங்க, பொதுக் கட்டமைப்புக்கு ஆதரவு சேர்க்க அவநம்பிக்கையான நிலையில் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார். ஆபத்துக்கள் உயர்ந்தவையாக உள்ளன. மே 3 அன்று, பெளத்த மற்றும் கிறிஸ்தவ தலைவர்களின் கூட்டமொன்றில், "இந்த முன்னெடுப்புகளில் அரசாங்கம் கவிழக்கூடும்" மற்றும் தான் "ஜனாதிபதி பதிவியை இழக்கக் கூடும்", ஆனால் அவற்றை விட "நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்துவது தேசிய நலனாகும்," என அவர் குறிப்பிட்டார்.

குமாரதுங்க, பேரினாவாத இயக்கங்களின் மையத்தில் இருக்கும் பெளத்த பிக்குகளை திருப்திப்படுத்தும் முயற்சியில், "விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கான நடைமுறை சாத்தியங்கள் உயர்ந்த மட்டத்தில் இருப்பதுடன்" "முதல் தடவையாக விடுதலைப் புலிகள் அரசாங்கத்தின் இறைமையை ஏற்றுக்கொள்ள உடன்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

பேரினவாத எதிர்ப்பையிட்டு பீதியடைந்திருந்த குமாரதுங்க, பொதுக் கட்டமைப்பு பற்றிய விபரங்களை இன்னமும் பகிரங்கமாக வெளியிடவில்லை. மதத் தலைவர்கள் ஒரு வரைவை பார்க்க வேண்டும் என கேட்டபோது, அது சாத்தியமற்றது என அவர் கூறிய போதிலும், மூடிய கதவுக்குள் நடந்த கூட்டத்தில் விபரங்களை வழங்கியிருந்தார்.

ஊடகங்களுக்கு கசிந்த தகவல்களின்படி, இந்த அமைப்பு சுனாமிக்கு பிந்திய முகாமைத்துவ அமைப்பு என அழைக்கப்படுவதோடு ஒரு வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். இதன் நடவடிக்கைகள், வடக்கு கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் கடலில் இருந்து 2 கிலோமீட்டர்களுக்கு வரையறுக்கப்பட்டிருக்கும். பிரதான தேசிய சபை, அரசாங்கம், விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லிம் அமைப்பில் இருந்து மூன்று பிரதிநிதிகளை கொண்டிருக்கும். பிராந்திய சபையானது ஐந்து விடுதலைப் புலி உறுப்பினர்கள், மூன்று முஸ்லிம்கள் மற்றும் மூன்று அரசாங்க உறுப்பினர்களையும் உள்ளடக்கியிருக்கும்.

எதிர்ப்புகளின் தோற்றுவாய் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல. குமாரதுங்க தனது சொந்த ஆளும் கூட்டணியிலும் மற்றும் எதிர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் (ஸ்ரீ.ல.மு.கா) உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பெருமளவில் உள்ளடக்கிய, முஸ்லிம் சமாதான செயலகத்தின் பிரதிநிதிகளை கடந்த வாரம் சந்தித்தார். ஸ்ரீ.ல.மு.கா மற்றும் அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட, தங்களால் விடுதலைப் புலிகளுடன் வேலை செய்ய முடியாது என சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த எதிர்ப்புக்கள், மீள்கட்டுமானத்திற்கும் நிவாரண வேலைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை தாங்கள் இழந்து விடக்கூடும் என முஸ்லிம் குழுக்களுக்கிடையில் நிலவுகின்ற பீதியினால் தூண்டிவிடப்படுகின்றன.

கடந்த வெள்ளியன்று குமாரதுங்க திட்டங்களை தெளிவுபடுத்துவதற்காக ஜே.வி.பி தலைவர்களை சந்தித்தார். இந்த பொதுக் கட்டமைப்பு விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்தும் எனவும், அதற்கு "அங்கீகாரம்" வழங்குவதோடு "ஐ.நா அங்கீகாரத்திற்கும் வழிவகுக்கும்" மற்றும் பிரேரிக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் "நிறைவேற்று அதிகாரத்தைக்" கூட கொண்டிருக்கும் எனவும் ஜே.வி.பி வலியுறுத்தியது.

இவை பேரினவாதத்தை கிளறுவதை இலக்காகக் கொண்ட படுமோசமான மிகைப்படுத்தல்களாகும். விடுதலைப் புலிகள், யுத்தத்திற்கு பெயரளவிலான "அரசியல் தீர்வு" காண்பதில் பெரும் வல்லரசுகளின் தலையீட்டை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதை வெளிக்காட்டுவதன் பேரிலும் மற்றும் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியாங்களுக்கு நிதியைப் பெற்றுக்கொள்வதன் பேரிலும் இந்தப் பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டுள்ளனர். சுனாமிக்குப் பின்னர் சுமார் 5 மாதங்களில், ஏற்கனவே யுத்தத்தால் அழிவுக்குள்ளான இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களின் சீற்றம் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

இதுவரை குமாரதுங்கவின் அழைப்புகளுக்கு ஜே.வி.பி அசையாமலேயே இருக்கின்றது. அது "பொதுக் கட்டமைப்பு" வேண்டாம் என்ற சுலோகத்தின் கீழ் ஒரு தொடர்ச்சியான கூட்டங்களை திட்டமிட்டுள்ளதுடன் முதலாவது கூட்டம் கடந்த வியாழனன்று நடைபெற்றது.

அழுத்தத்தை உக்கிரப்படுத்துவதன் பேரில், பொதுக் கட்டமைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக ஜே.வி.பி அதன் முன்னணி அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஒரு பெளத்த பிக்குவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பேச்சாளருமான எல்லே குணவன்ச, "எங்களது பிரச்சாரத்திற்கு 30 க்கும் மேற்பட்ட மத மற்றும் சமூக அமைப்புகளும் ஆதரவைத் தெரிவித்துள்ளன" என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பிக்குகளுக்கு மத்தியில் இயங்கும் ஜே.வி.பி முன்னணி அமைப்பின் ஒரு பேச்சாளர், எங்களது பிணத்தின் மீது மட்டுமே விடுதலைப் புலிகளுக்கு பொதுக் கட்டமைப்பை அரசாங்கத்தால் கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

சிங்களப் பேரினவாத ஆதரவுக்காக ஜே.வி.பி யுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற இன்னுமொரு பெளத்த பிக்குகள் தலைமையிலான ஜாதிக ஹெல உறுமயவும் இந்த அமளியில் இணைந்துகொண்டுள்ளது.

பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), எல்லா முதலாளித்துவ கட்சிகளையும் விட மிகவும் வேறுபட்ட வகையில் வஞ்சகமான பாத்திரத்தை வகிக்கின்றது. கடந்த சில மாதங்களாக, அது நிதியை விநியோகிக்கவும் மீள்கட்டுமானங்களை தொடங்கவும் விடுதலைப் புலிகளுடன் ஒரு திட்டத்தை வகுக்காததற்காக குமாரதுங்கவை விமர்சித்து வருகின்றது. ஆனால், பொதுக் கட்டமைப்புக்கு எதிரான பிரச்சாரம் சூடுபிடித்தவுடன், சிங்கள பேரினவாத வாக்காளர் பிரிவின் மீது உறுதியாக பார்வையை செலுத்திக்கொண்டுள்ள ஐ.தே.க, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் இருக்கத் தீர்மானித்தது. பொதுக் கட்டமைப்பு பற்றிய ஒரு விளக்கத்தை கேட்பதற்காக குமாரதுங்க அனுப்பிய அழைப்பை நிராகரித்த ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் ஒரு இறுதி உடன்பாட்டை அடையும்போது தனது கட்சி பதிலளிக்கும் என எழுதினார்.

தீர்வுகாண்பதில் பெரும் வல்லரசுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை தாம் இழந்து விடக்கூடும் என விடுதலைப் புலிகள் அஞ்சுகின்றனர். ஏனைய கட்சிகளைப் போலவே விடுதலைப் புலிகளும் உட்பாயும் உதவி மற்றும் ஏனைய நிதிகளையும் தனது சொந்த அரசியல் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்ள எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மே 7 அன்று விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப. தமிழ்செல்வன் ராய்ட்டருக்கு வழங்கிய செவ்வியில், மூன்று வருடகால யுத்த நிறுத்தம் இப்போது அபாயத்திற்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்தார். நிதி வழங்குபவர்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட 2 பில்லியன் டொலர் உதவியை பங்கிடுவதில் குமாரதுங்க பின்வாங்குவதோடு, இது கைச்சாத்திடப்பட்டாலும் கூட அமுலுக்கு வருவது சந்தேகத்திற்குறியதே எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த முரண்பாடுகள் இலங்கை ஊடகங்களில் கூர்மையான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஐ.தே.க வின் நிலைப்பாட்டையிட்டு அக்கறை செலுத்திய டெயிலி மிரர் பத்திரிகை, "நாட்டின் மிகப்பெரும் நலனை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றும் போக்கைத் தவிர்த்து," பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்க் கட்சி ஆதரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும், ஏனைய ஊடக பிரிவுகள் ஜே.வி.பி யின் பிரச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்கி வருகின்றன. மே 6 ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இந்த பொதுப் போக்கை எடுத்துக்காட்டியது. "பயங்கரவாத கருவிகள், அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளுக்கும் செவிமடுக்க மறுப்பதோடு, சிறுவர்களை படையில் சேர்த்தல், வற்புறுத்தி பணம் பறித்தல், அரசியல்வாதிகளை கொலை செய்தல் மற்றும் எதிரிகளை படுகொலை செய்தலை தொடருமானால், இந்த பூமியில் எந்த நாடு அதைக் கட்டுப்படுத்தக் கூடும்? அது அத்தகைய குற்றங்களை செய்யும் போது, இந்த பூமியில் ஒரு சட்டரீதியான அரசாங்கத்தால் எவ்வாறு அதனுடன் ஒரு கூட்டு நடவடிக்கையை வைத்துக்கொள்ள முடியும்? என அது கேள்வியெழுப்பியுள்ளது.

அரசாங்கம் இந்த நிலைமையையிட்டு அதிகரித்தளவில் அமைதியிழந்துள்ளது. ஜே.வி.பி தனது 39 பாராளுமன்ற உறுப்பினர்களை விலக்கிக்கொள்ளுமானால், அரசாங்கம் கவிழக்கூடும் அல்லது சிறுபான்மையாக இருந்து ஆட்சிபுரிய தள்ளப்படும். குமாரதுங்க பெரும் வல்லரசுகளின் நெருக்குவாரங்களை எதிர்கொள்ளும் அதே வேளை, பேரினவாதிகளது அல்லது இராணுவத்தினது ஆதரவை இழக்க விரும்பவில்லை. இந்த முட்டுக்கட்டையை பற்றி வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரிடம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்டபோது, ஜனாதிபதியை பொறுத்தவரையில் பொதுக் கட்டமைப்பிற்கு "உறுதியான கடப்பாடு" உள்ளது என அவர் தெரிவித்தபோதிலும், உதவி முகவர்கள் அரசாங்கத்தை கால அவகாசம் மற்றும் "கசப்பான உணர்ச்சிவசத்துடனும்" அழுத்தம் கொடுக்கக் கூடது என உடனடியாக சேர்த்துக் கூறினார்.

குமாரதுங்க கசப்பான தேர்வுகளை எதிர்கொள்கின்றார். ஒரு பக்கத்தில் அவர் பொதுக் கட்டமைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டால், ஜே.வி.பி யின் ஆதரவை இழக்க நேரிடும். இது சாத்தியமான வகையில் அரசாங்கம் கவிழ்வதற்கு வழிவகுக்கும். மறுபக்கத்தில், அவர் கையொப்பமிட மறுத்தால், அது யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முடிவுகட்டி உள்நாட்டு யுத்தம் மீண்டும் தொடங்க பாதையை திறக்கும். இந்த இக்கட்டான நிலை அவரது சொந்த உற்பத்தியாகும். ஐ.தே.க தலைவர் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, அவரது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிராக இராணுவம், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவையும் அணிதிரட்டுவதில் குமாரதுங்க பிரதான பாத்திரம் வகித்தார்.

அதே சமயம், சுனாமியின் பின்னர் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக, இலட்சக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் மிகவும் அத்தியாவசியமான நிவாரணம் மற்றும் மீள்கட்டுமானங்கள் மறுக்கப்பட்டு வந்துள்ளன. இவை இலங்கையில் எல்லா முதலாளித்துவக் கட்சிகளையும் வேறுபடுத்திக்காட்டும் இனவாத அரசியலின் பிற்போக்கு தர்க்கமாகும்.

Top of page