World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Un report finds

US war in Iraq yields a social "tragedy"

ஐ.நா.அறிக்கை கண்டறிகின்றது

ஈராக்கில், அமெரிக்க போர் விளைவிக்கும் ஒரு சமூக "பெருந்துயரம்"

By David Walsh
18 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வு, ஈராக்கிய திட்டமிடல் மந்திரி பர்ஹம் சலி விவரித்துள்ள "ஈராக்கில் பெருந்துயரம் பொருந்திய வாழ்க்கை நிலைமை" என்பதைப் புலப்படுத்தியுள்ளது. பாக்தாத்தில் உள்ள கைப்பாவை ஆட்சியில் உள்ள இந்த மந்திரி ஈராக்கிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரழிவிற்கு காரணம், கடந்த 15 ஆண்டுகளாகவும், அதற்கும் மேலாகவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்நாட்டின்மீது இடையறாமல் நிகழ்த்திய தாக்குதலினால்தான் என்பதை கூறாததில் வியப்பேதும் இல்லை.

1980-களில் நிகழ்ந்த ஈரான்-ஈராக் போர், அதில் வாஷிங்டன் குளிர் காய்ந்தது; பின்னர் 1991ம் ஆண்டு வளைகுடாப் போர்; அதன் பின்னர் ஒரு தசாப்தத்திற்கும் மேலான பொருளாதார தடைகள்; இதன் பின் அமெரிக்க படையெடுப்பு, தொடர்ந்து நீடிக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆகியவற்றினால் கணக்கிலடங்கா இறப்புக்கள் அந்த நாட்டில் ஏற்பட்டுள்ளதோடு, நாட்டின் உள் கட்டுமானம், சுகாதாரம், கல்வி முறை பாழடைந்துள்ளது, மற்றும் மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்வில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளம் கொழிக்கும் ஈராக் இப்பொழுது அப்பிராந்தியத்திலேயே மிக அதிகமான வேலையின்மையை கொண்டிருப்பதுடன், குழந்தைகள் ஊட்டமின்றி இருப்பதோடு, நாட்டின் மின் தட்டுப்பாடு, வடிகால் பிரச்சினைகள் மற்றும் பல பொது நல சேவைகளும் சீர்கேடுற்றுள்ளன.

அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள பல சமூக வறிய நிலையின் குறியீடுகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* கிட்டத்தட்ட ஈராக்கிய குழந்தைகளில் கால் பங்கினர் தொடர்ச்சியான ஊட்டமின்மையினால் அவதியுறுகின்றனர்.

* ஈராக்கில் 2000-க்கும் 2004க்கும் இடையே பிறந்த குழந்தைகள் 40 வயதுக்குள் இறப்பதற்கான வாய்ப்புக்கள் அண்டை நாடுகளில் இருப்பதை விட மூன்று மடங்கு கூடுதலாக உள்ளது.

* நான்கு ஈராக்கிய குடும்பங்களில் மூன்றில் மின்வசதி உறுதியற்ற தன்மையில்தான் உள்ளது.

* நகர்ப்புற பகுதி குடும்பங்களில் 40 சதவீதத்தினர் தெருக்களில் சாக்கடைகள் பெருக்கெடுத்தோடும் நிலையில் அருகாமையில் வாழ்ந்து வருவதை காணமுடியும்.

* 722,000-க்கும் மேற்பட்ட ஈராக்கிய குடும்பங்களுக்கு பாதுகாப்பான அல்லது ஸ்திரமான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதில்லை.

* உயர்நிலை அல்லது மேனிலை கல்வித் தகுதி உடைய இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் என்பது 37 சதவீதமாக இருக்கிறது.

ஈராக்கிய மக்களின் வாழும் நிலை மதிப்பீடு 2004 எனப்படும் எனப்படும் (Iraq Living Conditions Survey 2004 (ILCS)), இந்த ஆய்வு ஐ.நா. அபிவிருத்தி வேலைதிட்ட அமைப்பினால் ஈராக்கிய திட்டம், வளர்ச்சி, கூட்டுறவு அமைச்சரகத்தின் ஒத்துழைப்போடு, மேற்கொள்ளப்பட்டு பாக்தாத்தில் உள்ள புள்ளிவிவர மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்திற்கான மைய அமைப்பிலிருந்து (Central Organisation for Statistics and Information Technology), ஒரு நோர்வேஜியனியரிடம் பயிற்சி பெற்ற குழுவினரால் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஏப்ரல்-ஆகஸ்ட் 2004-ல் ஈராக்கிலுள்ள 18 மாகாணங்களில், 21,688 வீட்டு உறுப்பினர்களுடன் நடத்திய பேட்டியில் இருந்து பெறப்பட்ட முடிவாகும்.

ஈராக்கிய உள் கட்டுமானம், வீடுகள், சுற்றுச் சூழல், சுகாதார முறை, மகளிர் நிலை, தொழிலாளர் சந்தை, வாழ்வின் இதர கூறுபாடுகள் ஆகியவற்றை பற்றிய தங்கள் பகுப்பாய்வில், UNDP அறிக்கையில் கட்டுரையாளர்கள் மீண்டும், மீண்டும் தங்கள் கண்டுபிடிப்புக்களை பற்றி கூறும்போது சில சொற்கள், சொற்றடர்களையே பிரயோகிக்கின்றனர்: ''ஆபத்து என்பது கணக்கிலடங்கா தடவையும், "மோசமாகிறது,'' சீர்கெடுகிறது'' "வீழ்ச்சியின் பின்னணியில்", "பின்னடைவில் வளர்ச்சி" போன்றவையே அவை.

வேறுவிதமாகக்கூறினால், மிகக் கடுமையான விளைவை காட்டக்கூடிய புள்ளிவிவரங்களை தவிர, முதலாளித்துவ சமூக ஆராய்ச்சியாளர்களின் வரண்ட, பயந்த சொற்றோடர்களுள்ளேயே இன்றைய ஈராக்கின் மனித வேதனைகளின் பரப்பை காணமுடியும்.

பல தனியான கருத்தாய்வுகளில் இருந்து தொகுத்து இந்த ஆய்வைப் பற்றிய திரட்டை கூறினால், ஈராக்கிய சமுதாயம் 1970-களில் கணிசமான முன்னேற்றங்களை கொண்டிருந்தது; இதற்கு காரணம் "எண்ணெய் வருவாய் வியத்தகு அளிவில் பெருகியது. ...இந்த விரைவான பொருளாதார வளர்ச்சி காலம் குறிப்பிடத்தக்க வகையில் கிராமப்புறத்தில் இருந்து நகரத்திற்கு மக்கள் புலம்பெயர்வதையும் காட்டியது... பொதுத் துறையில் மற்றும் அரசிற்கு-சொந்தமான நிறுவனங்களில் வேலைகள் பெருகின, அவற்றையொட்டி குடும்பங்களின் வருமானங்கள் பெருகிய வண்ணம் இருந்தன."

எவ்வாறாயினும், ஈராக்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1980-ல் இருந்து சரியத் தொடங்கியது; இந்த அறிக்கைன்படி: "பல போர்கள், பொருளாதாரத் தடைகள், பொருளாதார நிர்வாகம் திறமையற்று இருந்தது ....வீடுகள் தொடர்ந்து வருமானத்தில் சரிவைக் கடந்த 25 ஆண்டுகளாக காணத்தொடங்கின; இந்த நிலைமை மத்தியதர வருமானம் உள்ள நாடுகளில் கேள்விப்பட்டிராத விஷயமாகும்." உலகின் இரண்டாம் பெரிய எண்ணெய் இருப்புக்கள் நிரூபணமாகியுள்ள (சில ஆய்வாளர்களின் கருத்தின்படி இன்னும் கண்டுபிடிக்கப்படாத இருப்புக்களே இதை செளதி அரேபியாவிற்கு நெருங்கியவகையில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு என்று கொண்டுவிடும்) உள்ள நாடு என்ற முறையில் இந்தச் சரிவு மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

இப்படி "கேள்விப்படிருக்க முடியாத" நிலைமை என்பது புவிசார்-அரசியலின் விளைவு என்றுதான் விளக்கப்பட முடியும், குறிப்பாக அமெரிக்கா ஏதாவதொரு வழியின் மூலம் (இராஜதந்திர சூழ்ச்சிகள், ஆக்கிரமிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலையில் நடத்தப்பட்ட கொடூரமான போர், பொருளாதாரத்தை நெரிக்கும் முயற்சி மற்றும் முழுஅளவிலான படையெடுப்பு உள்பட) மத்திய கிழக்கு நாட்டின் இயற்கை வளங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்ற உறுதிப்பாடாகும். இப்பொழுது நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால், வாஷிங்டன் வெற்றி கொள்ளப்பட்டுவிட்ட மக்களுடைய வாழ்க்கை நிலைமைகள் பற்றிச் சிறிதேனும் அக்கறை காட்டவில்லை.

ஈராக்கிய மக்களுக்கு எதிரான அமெரிக்கப் போரின் விளைவுகள் யாவை?

ஈராக்கின் உள்கட்டமைப்பை பொறுத்தவரையில், ILCS, அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடைகள், "தவறாக இயக்கப்பட்ட பொருளாதார கொள்கைகள்", மற்றும் மூன்று போர்கள் ஆகியவை அதன் மோசமடைதலுக்கு தத்தம் பங்கைக் கொடுத்துள்ளன என்று வாதிடுகிறது. மேலும். "சமீபத்தியப் போருக்குப் பின், கொள்ளை அடித்தல், பொதுச் சொத்துடமை அழிப்பு, பொதுப் பாதுகாப்பின்மை" ஆகியவற்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

மின் வசதி உறுதியற்ற நிலையில் இருப்பது ஈராக்கியர்களுக்கு இன்னும் மையப் பிரச்சினையாக உள்ளது. நகர்ப்புறங்களில் குறிப்பாக, பல இல்லங்களும் குறைந்த மின் வசதியைத்தான் கொண்டுள்ளன; "அதுவும் தரத்திலும், ஸ்திரத்தன்மையிலும் மிக மோசமாகக் குறைந்த தன்மையைத்தான் கொண்டுள்ளது." பாக்தாத்தில், அனைத்து இல்லங்களிலும் 92 சதவீதம் ஸ்திரமற்ற மின் பகிர்வினால் அவதியுறுகின்றன.

ILCS சராசரியாக, அனைத்து ஈராக்கிய இல்லங்களிலும் 33 சதவீதம் ஸ்திரமற்ற குடிநீர் வழங்குதலைத்தான் காண்கின்றன (சில சமயம் ஒரு வாரம் கூடத் தண்ணீர் கிடைக்காது); இதைத் தவிர 17 சதவீத இல்லங்களுக்கு பாதுகாப்பான அல்லது நிச்சயமான குடிதண்ணிர் என்பது கிடையாது. கிராமப்புறங்களில் 70 சதவீத வீடுகள் தங்களுக்குத் தேவையான குடிநீரைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை கொண்டுள்ளன; தெற்குப் பிராந்தியத்தில் இந்த எண்ணிக்கை 76 சதவீதமாகும். வறிய இல்லங்கள், இளவயது இல்லத்தலைவர்கள், குறைந்த கல்வி, சிறிய குழந்தைகள் குறைந்த எண்ணிக்கை இவற்றையுடைய இல்லங்கள் இன்னும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளன; "மரபுவழியில் சரிவிற்குட்படும் குடும்பங்கள் இந்த குறியீட்டின்படியும் பின்தங்கித்தான் உள்ளன."

"இப்பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகள், மற்றும் ஈராக்கின் முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டால், ஈராக்கை பொறுத்தவரையில் பாதுகாப்பாக, உரிய காலத்தில் கொடுக்கப்படும் நீர் என்பது சரிவு நிலைக்கு வந்துவிட்டது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்....நகரப் பகுதியில் பாதுகாப்பான குடி தண்ணீர் கிடைக்கவில்லை என்பது 95-லிருந்து 60 சதவிகிதத்திற்கு வந்துவிட்டாலே பெரும் ஆபத்தாகும். மற்ற அரபு நாடுகளுடன் ஒப்பிட்டால், ஈராக் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது, நிலைமையின் சரிவைக் காணும்போது பெரும் பீதியூட்டும் வகையில் இருக்கிறது." திட்ட மந்திரியான சலியின் கருத்தின்படி, "1980-ம் ஆண்டு ஈராக்கிய குடும்பங்களில் 75 சதவீதம் தூய நீரைப் பெறும் வசதியைப் பெற்றிருந்தன.

சுகாதார நிலைமைகளும் "மோசமான சரிவை காட்டுகின்றன"; ஈராக்கிய வடிகால் முறைகள் "தலைகீழ் அபிவிருத்தியைத்தான் காட்டுகின்றன." பழைய, அழிக்கப்பட்டுவிட்ட வடிகால் முறைகளை பற்றிய அறிக்கைகள் ஆய்வு குறிப்பிடுகிறது; இதன் விளைவாக நிலத்தடிக் கசிவு ஏற்பட்டு அதையொட்டி குடி தண்ணீர் வசதிகளில் மாசுகள் படியும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

சிசுக்கள், குழந்தைகள் இறப்பு விகிதங்களும் இந்தப் பொதுப் போக்கைத்தான் காட்டுகின்றன. "பெருகிய முறையில் குழந்தைகள் நிலை சீர்குலைந்துள்ளதைத்தான்"ILCS புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. "அண்டை நாடுகளில் சிசுக்கள், சிறுகுழந்தைகள் இறப்புவிகிதம் குறைந்துள்ள பின்னணியில் ஈராக்கில் இவ்வாறு ஏற்பட்டுள்ளது." தாய்மைப் பேற்றின் போது ஏற்படும் இறப்பு விகிதம், அதாவது 100,000 குழந்தைகள் பிறப்பில் தாய்மார் இறப்பது 193 என்று உள்ளது, இந்த எண்ணிக்கை சிரியா, ஏமன் போன்ற பகுதிகளில்தான் இதைவிடக் கூடுதலாக இருக்கிறது. மீண்டும், "மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த தசாப்தங்களில் அடையப்பட்ட தாய்ப்பேற்றின் போது இறப்புவீதக் குறைவுத் திட்டத்தில் ஈராக் பங்கேற்றிருக்கவில்லை."

''பெரும்பாலான ஈராக்கியக் குழந்தைகள் தங்கள் வாழ்வின் முழுப்பகுதியையும் பொருளாதாரத் தடைகள் மற்றும் போரின் கீழ் கழித்துள்ளன" என்று ILCS குறிப்பிட்டுள்ளது. இந்த விளைவுகள், சமுதாயத்தில் மிகப் பாதிப்பிற்குட்படக்கூடிய உறுப்பினர்களுக்கு தவிர்க்கமுடியாததும், சோகமானதும் ஆகும். ஈராக்கில் குழந்தைகளிடையே ஊட்டமின்மை என்பது மிகப் பரந்த முறையில் காணப்படுகிறது. ஆறு மாதத்தில் இருந்து ஐந்து வயதுடைய குழந்தைகளில் கிட்டத்தட்ட கால் பங்கினர் தொடர்ச்சியான ஊட்டமின்மையினால் வாடுகின்றன, மிகக் கடுமையான ஊட்டமின்மை 10 சதவீதத்தினரை வாட்டி எடுக்கிறது. முந்தை ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது, ஊட்டமின்மைத் தரம், கடந்த நான்கு ஆண்டுகளில் மிக உயர்ந்தும் நிலைத்தும் இருந்திருக்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட மக்கட்தொகையில் 96 சதவீதம் முறையான உணவுப் பங்கீட்டைப் பெறும்போது இது ஒரு "ஆச்சரியமான விஷயமாகும்" என்று அறிக்கை கூறுகிறது.

1990ம் ஆண்டில், ஈராக் ஐ.நா.வளர்ச்சித் திட்டத்தில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் 50வது இடத்தைக் கொண்டிருந்தது; 2003ல் இது 126-வது இடத்தில் உள்ளது. ஈராக்கியக் குடிமகன் ஒருவரின் சராசரி உணவு உட்கொள்ளும் அளவு 3,300 கலோரிகளாகும்; ஐ.நா-அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளில், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் உணவின் கலோரி அளவு ஒரு நபருக்கு 1,000 கலோரிகள் குறைந்துவிட்டன அல்லது மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக ஆகிவிட்டது.

குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் இறப்பை ஏற்படுத்துவது வயிற்றுப் போக்கு ஆகும். இது தடுக்கப்படக்கூடிய நிலைமை ஆகும், பொதுவாக சுகாதாரச் சூழ்நிலை, சுத்தமான குடிக்கும் நீர் இருந்தால் ஏற்படாது. 1991ம் ஆண்டு அமெரிக்கத் தலைமையிலான போருக்கு முன் வயிற்றுப்போக்கினால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10 ல் 2 உயிரிழந்தன. இந்தச் சதவீதம் 10-க்கு 4 என்ற கணக்கில் போருக்குப் பின் உயர்ந்தது. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்களில் 1000 பேரில் 1990-ல் 1.6 என்று இந்நோயினால் ஏற்பட்ட இறப்பு, 1998ல் 19.3 என்று ஆயிற்று; அதாவது 12 மடங்கு அதிகமாயிற்று. ஈராக்கிற்கெதிரான பொருளாதார தடைகளின் விளைவாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் உயிரை இழக்கும் நிலை வந்தது என்பது பரவலாக ஒப்புக்கொண்டதாகும்.

பொதுவாக பாதுகாப்பிற்குட்பட்டது எனக் கருதப்படும் குழாய்த்தண்ணீருக்கும், குழந்தைப் பருவ வயிற்றுப் போக்கு குறைவாக இருப்பதற்கும் தொடர்பு உண்டு. சமீபத்தில் ஈராக்கில் அந்தத் தொடர்பு காணப்படவில்லை. இது ஈராக்கில் மின்வசதி ஒழுங்கின்மையினால் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது "வடிகால் பம்பு செட்டுக்கள் சரியாக இயங்காதது, வடிகால்கள் வழிவது ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது." வேறுவிதமாகக் கூறினால், "பாதுகாப்பான" குழாய் தண்ணீரும் ஈராக்கில் பலநேரமும் பாதுகாப்பற்றதாக போய்விடுகிறது.

மோசமான ஈராக்கிய சுகாதாரப் பாதுகாப்பு முறையை எதிர்கொள்கையில், ILCS ஆய்வாளர்கள் முன்வைத்துள்ள வாதத்தை பெரிதாக மேற்கோளிடுவது பொருத்தமானது ஆகும்.

"1980-களில், ஈராக் இப்பிராந்தியத்திலேயே சிறந்த சுகாதாரப் பாதுகாப்பு முறையை கொண்டதாக பரந்த அளவில் கருதப்பட்டது, இங்கு முன்னேற்றமான, முன்னேற்றமடைந்த மற்றும், அதிக அளவிலான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பும் இருந்தது. ஆனால் பல ஆண்டுகள் போர், பொருளாதாரத் தடைகள் என்ற பின், இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இப்பொழுதுள்ள பெரிய பிரச்சினைகளில் முக்கியமானவை சுகாதார ஊழியர்கள் குறைவாக இருப்பது, மருந்துகள் அதிகம் இல்லாதது, மருத்துவக் கருவிகள் செயற்பாடு இன்றி இருப்பது, மருத்துவமனை, சுகாதார மையங்கள் அழிக்கப்பட்டிருப்பது ஆகியவை காரணங்களாகும். சுகாதாரப் பணிகளும் பெரிதும் உள்கட்டமைப்புப் பிரச்சினைகளால் பாதிப்பிற்குட்பட்டுள்ளன, இழிந்த, தடை நிறைந்த மின் வசதி, தாழ்ந்த நிலையிலான சுகாதாரம், தாய்ந்த நிலையிலுள்ள செய்தித்தொடர்பு ஆகியவைதான் உள்ளது. இந்த வழியில் இந்த நிலைமை பண்பிடப்பட்டிருக்கிறது: "ஈராக் முதல் உலகச் சுகாதார முறைக்குப் பழக்கமாகி இருந்த ஒரு இரண்டாம் உலக நாடு; இப்பொழுது மூன்றாம் உலக நாட்டின் தொற்று நோய்ச் சார்பு மலிந்துள்ள நிலையில் காணப்படுகிறது." (Garfield, Zaidi & Lennock 1997)

1991-ல் அமெரிக்க தலைமையிலான முதல் போருக்கு முன், ஈராக்கில் 1,800 ஆரம்ப சுகாதார மையங்களின் வலைப்பின்னல் இருந்தது; 2001ஐ ஒட்டி அந்த எண்ணிக்கை 929 ஆக சரிந்துவிட்டது. இதில் மூன்றில் ஒரு பங்கு மறு சீரமைக்கப்பட வேண்டும். "மார்ச் 2003ன் இடைப்பகுதியில் ஏற்பட்ட போரை அடுத்து இன்னும் கூடுதலான வகையில் உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளின் நாசம் விளைந்துள்ளதாக தெரிகிறது." 1999-2003 காலத்தில், ஈராக்கில், அதன் அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் 100,000 மக்களுக்கு எத்தனை டாக்டர்கள் உள்ளனரோ அந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தனர்.

பல தசாப்தங்கள் நடைபெற்ற போர்கள் தங்கள் கடுமையான பாதிப்பை விட்டுச் சென்றுள்ளன. ILCS ஆய்வு இப்பொழுது 200,000-க்கு மேற்பட்ட ஈராக்கியர்கள் போரினால் ஏற்பட்ட தொடர்ந்த, நீண்ட காலக் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர் எனக் கூறுகிறது. 2003-ம் ஆண்டு அமெரிக்கா நிகழ்த்திய போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை துல்லியமாகக் கிடைக்கவில்லை; ஏனெனில் வாஷிங்டனோ அல்லது அதன் கைப்பாவை பாக்தாத் அரசாங்கமோ எண்ணிக்கையை குறித்துக் கொள்ளும் ஆர்வத்தை கிஞ்சிற்றும் காட்டவில்லை. The Lancelot என்னும் மருத்துவ இதழ் கடந்த ஆண்டு ஒரு மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 100,000 ஈராக்கியர்கள் போரில் இறந்திருக்கக் கூடும் என்று எழுதியுள்ளது. The Iraqi Living Conditions 2004 என்னும் அறிக்கை இந்த எண்ணிக்கை 18,000 க்கும் 29,000 இடையில்தான் இருக்கும் என்று கூறுகிறது.

இந்த அறிக்கையில் வெளிப்பட்டுள்ள முக்கியமான உண்மை அதிக சதவீத குழந்தைகள், மகளிர் மற்றும் முதியோர் நீடித்த ஊனத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பதாகும்; 1980, 1990-களின் போர்களை விட இது அதிகம் என்பதில் வியப்பில்லை; ஏனெனில் தற்போதைய போர் ஈராக்கின் பெரும்பாலான நகரங்களிலும், சிறு நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. "தற்போதைய போரில் சாதாரண மக்கள் மிகவும் பாதிப்பிற்கு உட்படுள்ளனர். சமீபத்திய போரில் ஊனமுற்ற வகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை என்ற உணர்வுதான் வலுப்பட்டுள்ளது."

ஈராக்கிய சமுதாயத்தில் பெண்களுடைய கல்வி மற்றும் நிலை பற்றி எழுதுகையில், ILCS அறிக்கையின் கட்டுரையாளர்கள் சுகாதார பாதுகாப்பு பற்றி அவர்கள் கூறிய கருத்தை போலத்தான் இதிலும் தெரிவித்துள்ளனர்; 1970 களிலும், 1980 களிலும் நல்ல முன்னேற்றத்தைக் கண்ட பிறகு, பொருளாதார தடைகள், போர் ஆகியவற்றின் பாதிப்பினால் நிலைமை மிகத் தீவிரமாக மோசமடைந்துள்ளது என்பதேயாகும் அது.

"ஈராக்கின் கல்வி முறை இப்பிராந்தியத்தில் சிறந்தவற்றுள் ஒன்றாக இருந்தது; அதன் மக்கள் கல்வியறிவில் சிறந்தவர் என்பது ஒரு நாட்டின் முக்கியமான சொத்துக்களில் ஒன்றாகும். கல்விச்சீர்திருத்தங்கள் 1970-கள், மட்டும் 1980-களில் மேற்கொள்ளப்பட்டத்தை அடுத்து வயதுவந்தோரிடையே மிக உயர்ந்த கல்வியறிவு விகிதம் காணப்பட்டது. உதாரணமாக, 1978-ம் ஆண்டு பாத்திஸ்ட் அரசாங்கம் தேசியரீதியாக பரந்தளவில் பிரச்சாரம், கல்வியற்ற தன்மையை அகற்றும் முயற்சியை மேற்கொண்டது; அதன்படி 15-ல் இருந்து 45 வயது வரை இருந்தவர்கள் அனைவரிடையேயும் எழுத்தறிவின்மையை அகற்ற இலக்கு கொண்டிருந்தது. இதில் சிறப்பாக மகளிர் முழுப் பங்கு பெற்று விடுதலை அடையவேண்டும் என்ற வலியுறுத்தல் இருந்தது."

இன்று 15-ல் இருந்து 24 வரை உள்ளவர்களிடையே கல்வியறிவு என்பது 25 வயதில் இருந்து 34 வயது இருப்போரைவிடக் குறைவாக இருக்கிறது, இளைய தலைமுறை தன் முன்னோர்களைவிட பின்தங்கியுள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. கடந்த 10, 15 ஆண்டுகளில் கல்வி முறையில் சரிவு ஏற்பட்டுள்ளதின் விளைவாகும் இது. மகளிருக்கான கல்வியறிவு வீதம் தேக்க நிலை அடைந்து விட்டது, சில பிராந்தியத்தில் மகளிர் கல்வியறிவின்மை மிக உயர்ந்து போய்விட்டது. ஈராக்கில் வயது வந்தோரில் கிட்டத்தட்ட 65 சதவீதத்தினர் கல்வி அறிவு உடையவர்கள் ஆவர், ஜோர்டானில் இது 86 சதவிகிதம் ஆகவும், சிரியாவில் 75 சதவிகிதம் ஆகவும் உள்ளது.

அனைத்து மட்டங்களிலும் பள்ளிச் சேர்க்கை கடந்த தசாப்தத்தில் குறைந்து விட்டது. ஐ.நாவின் மில்லினியம் வளர்ச்சி இலக்கான அனைத்துச் சிறுவரும், சிறுமியரும் ஆரம்ப பள்ளி நிலையை முடித்திருக்க வேண்டும், ஆரம்ப, இடைநிலையில் இருபாலுக்கும் இடையே வேறுபாடு அதிகம் கூடாது என்ற இலக்கில் இருந்து ஈராக் மிகவும் பின்தங்கிவிட்டது. கிராமப்புறப் பகுதிகளில் 15-ல் இருந்து 24 வயதிற்குட்பட்ட மகளிரில் 38 சதவீதத்தினர் ஆரம்பக் கல்வியைக் கூட முடிக்கவில்லை.

ஈராக்கிய சமுதாயத்தில் மகளிரின் பொது நிலையைபற்றி ILCS கூறுகையில், 1970-களின் முன்னேற்றத்திற்கு பின்னர் கணக்கிலடங்காத பின்னடைவுகள் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. 1960 களின் கடைசிப் பகுதியில் பாத் கட்சி உழைக்கும் சக்தியிலும் கல்வியிலும் மகளிர் பங்கு பெற வேண்டும் என்ற கருத்தியல் பிரச்சாரத்தை தொடங்கினர். இந்த "அரசு பெண்ணிலைவாதம்" முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளில் காலனித்துவம் அகன்ற பின் பொதுவாகப் பேசப்படுவதுதான். மகளிருக்கான ஒரு தேசிய கல்வியறிவற்ற தன்மையை அகற்றும் முயற்சி 1978-ல் தொடக்கப்பட்டது; பாத்திஸ்ட் ஆட்சியின்படி, 1.5 மில்லியன் மகளிருக்கு அடையப்பட்டது மற்றும் சில பகுதிகளில் எழுத்தறிவின்மை அகற்றப்பட்டுவிட்டது. "ஆயினும் ILCS கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி இன்றைய மகளிரிடையே அதிக அளவு எழுத்தறிவின்மைதான் நிலவுகிறது. தொழிலாளர் சக்தியிலும், கல்வி இவற்றிலும் இப்பகுதியிலேயே மகளிரின் பங்கு மிகக் குறைவுதான்.

அமெரிக்கா ஹுசைன் ஆட்சியில் மீது கொடுத்த அழுத்தத்தின் ஒரு விளைவு, 1990க்கு பின்னர் கூடுதலான, வலுவான முறையில் ஹுசைன் சமயத் தலைவர்களுடனும், அண்டை நாடுகளில், அதிக சமய சார்புடைய ஆட்சிகளுடனும் நட்பு பெறவிருந்தார்; இது ஈராக்கிய சமுதாயத்தில் பழமைவாத மற்றும் குடும்பத்தலைவர் போக்குகளை வலுப்படுத்தியது.

தன்னுடைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ILCS, வேலையின்மை வீதத்தை 18.4 சதவிகிதம் என்று மதிப்பிட்டுள்ளது; இதில் ஊக்கம் குன்றிவிட்ட தொழிலாளர்களும் (அதாவது வேலை தேடுவதை விட்டுவிட்டவர்கள்) சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த மக்கட்தொகையில் 39 சதவீதம் 15-க்கும் குறைவான வயது என்ற நிலை உள்ள நாட்டில், இளைஞர்களிடையே வேலையின்மை வீதம் 33.4 சதவீதம் ஆகும் மற்றும் இது இடைநிலை அல்லது உயர்நிலை கல்வியுடைய ஆடவர்களிடையே "வியத்தகு முறையில் 37.2 சதவீதமாக உள்ளது."

அமெரிக்கப் படையடுப்பிற்கு முன்னால் வேலை பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலையுடனேயே இருக்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது; இதற்கு முக்கிய விதிவிலக்கு இராணுவத்தில் இருந்தவர்கள் ஆவர்; பெரும்பாலான புதிய வேலையற்றவர்கள் உழைப்புச் சந்தைக்கு புதிதாக வந்துள்ளவர் ஆவர்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் குவிக்கப்பட்டுள்ள சோகங்கள் ஒரு சராசரி ஈராக்கிய வீட்டில் 1980-ல் இருந்ததை விட 2004-ல் குறைந்த உண்மையான ஊதியம்தான் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ILCS 2003 ம் ஆண்டில் சராசரிக் குடும்ப வருமானம் 366,000 டினார்கள் அதாவது 255 டாலர் என்று கண்டறிந்துள்ளது. ஈராக்கிய இல்லங்களில் 16 சதவீதம் அடிப்படைத் தேவையான ஆறில் எதையும் வாங்க முடியாத நிலையில் உள்ளதாக (புதிய துணிகள், இல்லத்தை வெப்பப்படுத்துதல் போன்றவை); 35 சதவீதத்தினர் ஒரு பெரும் நெருக்கடியின்போது கூட 100,000 டினார்களைத் திரட்ட முடியாது; 28 சதவீதத்தினர் "ஈராக்கில் உள்ள ஏழைகளில்" தாங்களும் ஒருவர் எனக் கூறிக்கொள்ளுகின்றனர். மிக ஏழ்மை நிலையில் உள்ள 20 சதவீதத்தினர் மொத்த ஈராக்கிய இல்லங்களின் வருவாயில் 7 சதவீதத்தைத்தான் பெறுகின்றனர்; மிகச் செல்வம் படைத்த 20 சதவீதத்தினர் 44 சதவீதம் மொத்த வருவாயில் பெறுகின்றனர்; இருப்பினும், வருமானச் சமத்துவமின்மை ஈராக்கில் ஏனைய இடங்களில் இருப்பதைவிட ஒப்பீட்டளவில் குறைவானதுதான்.

ILCS புள்ளிவிவரங்கள் மக்களின் பரந்த தட்டுக்கள் தற்கால சமூகத்தில் ஒப்பீட்டளவில் வளங்கள் கொழித்திருந்த ஒரு நிலையில் இருந்து ஏழ்மை மற்றும் இழிநிலைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையினால் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன; தொடர்ந்த ஆக்கிரமிப்பினால் இந்த நிலைமை இன்னும் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார, சமூக உண்மைகள் ஈராக்கில் அமெரிக்காவின் "ஜனநாயகமாக்குதல்", :"தேசத்தைக், கட்டமைத்தல்" பணிகள் நடைபெற்று வருகின்றன என புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க செய்தி ஊடகம் கூறுவதை மறுக்கின்றன. குடியரசுக்கட்சி, மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டினாலும் பின்பற்றப்படும் அமெரிக்கக் கொள்கைமீதான கடுமையான குற்றச் சாட்டைத்தான் இவை பிரதிநிதித்துவம் செய்கின்றன.

ஈராக்கிய மக்கள் படும் மகத்தான துயரங்களைக் குறைப்பதற்கு முதலிலும், முக்கியமாக அனைத்து அமெரிக்கப் படைகள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; 2003 படையெடுப்பிற்குக் காரணமான அதிகாரிகள் அனைவரும் போர்க்குற்றத்திற்காக விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் மற்றும் இழப்புத் தொகையாக பலபத்து மடங்கு பில்லியன் டாலர்கள் வழங்கப்படவேண்டும்.

Top of page