World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Vote "no" in French referendum on European constitution

For the United Socialist States of Europe

ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய பிரெஞ்சு கருத்து வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக

Statement of the WSWS Editorial Board
25 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

மே 29 அன்று பிரான்சில் உள்ள வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பு ஏற்கப்படலாமா அல்லது நிராகரிக்கப்படலாமா என்பது பற்றி முடிவெடுக்க உள்ளனர். உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு இந்த அரசியலமைப்பிற்கு உறுதியுடன் எதிர்ப்பை கொண்டுள்ளது. மே 29 வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளுகிறோம்.

500 பக்கங்கள், 448 விதிகள் மற்றும் 36 துணை உடன்பாட்டு நெறிகள் ஆகியவற்றை கொண்டுள்ள, திட்டமிடப்பட்டுள்ள, ஐரோப்பிய அரசியலமைப்பு மே 29, 2004 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நாட்டுத் தலைவர்களாலும், அரசாங்கத் தலைவர்களாலும் ரோம் நகரில் சிறப்புக் கூட்டத்தில் கையெழுத்திடப்பட்டது. இது அனைத்து 25 உறுப்பு நாடுகளிலும், அவற்றின் ஒப்புதலை பெற்றாகவேண்டும்.

10 நாடுகளில் இது மக்கள் வாக்கெடுப்பிற்கு உட்படும்; மற்ற 15 நாடுகளில், தேசிய பாராளுமன்றங்கள் இது பற்றிய முடிவை எடுக்கும். இதுவரை இந்த அரசியலமைப்பு ஸ்பெயின் ஒன்றில்தான் ஏற்கப்பட்டுள்ளது; அங்கு மக்கள் வாக்கெடுப்பு ஒரு தெளிவான பெரும்பான்மையை கொடுத்திருந்தபோதிலும்கூட, மிகக் குறைந்த வாக்காளர்கள்தான் வாக்கெடுப்பில் பங்குபெற்றிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முக்கிய உறுப்பு நாடாகிய பிரான்சில் அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டால், அது அரசியலமைப்பு திட்டத்திற்கு ஒரு நீண்ட கால முறையில் கடும் தாக்குதலாக அமையும். ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு 2002ல் நீஸ் நகரில் ஏற்கப்பட்டுள்ள உடன்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து இருக்கும்; தனிப்பட்ட உறுப்பு நாடுகளின் பரந்த தடுப்பு அதிகார (Veto Rights) உரிமைகளின் காரணமாக, வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்புத் துறை, பொருளாதார விஷயங்கள் இவற்றில் ஒரே மாதிரியான கொள்களை கடைப்பிடித்தலை கடினமாக்கிவிடும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு இந்த அரசியலமைப்பை வெறுமனே தந்திரோபாய கருதிப்பார்த்தல்கள் என்பதைவிட அடிப்படை கருதிப்பார்த்தல்களின் அடிப்படையில் நிராகரிக்கிறது. அரசியலமைப்பு அரசின் ஆதரவாளர்கள் கூறுவது போல் "வேண்டும்" என வாக்களிப்பவர்கள் அனைவரும் ஒன்றும் "ஐரோப்பாவிற்காக" என வாக்களித்து விடுவதில்லை. அத்தகைய வாக்கானது முதலாளித்துவ அரசு, முதலாளித்துவ தனிச்சொத்துடைமை, இராணுவவாதம், ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை நெறிப்படுத்திவிடுவதுபோல் ஆகிவிடும். மக்களுடைய சாதாரண நலன்களைக் கூட பெரு நிறுவன, பெரு வங்கிகளின் இலாப நோக்கு நலன்களுக்கு கீழ்ப்படுத்தும் ஒரு ஐரோப்பாவை அது சட்டரீதியானதாக்கும்.

அரசியலமைப்பில் தொகுத்து கூறப்பட்டுள்ள அடிப்படை கோட்பாடுகளாவன, "போட்டி சுதந்திரமாகவும், சிதைவற்றும் இருக்கும் ஓர் உட் சந்தை", மற்றும், "ஒரு மிகப் போட்டி வாய்ந்த சமூகச் சந்தைப் பொருளாதாரம்" என்பனவாகும். இது பெருவணிக நலன்களை சமூகவாழ்வின் அனைத்து கூறுபாடுகளின் மீது ஆதிக்கம் கொள்ளச் செய்வதை ஒரு அரசியலமைப்பு கோட்பாடாகச் செய்திருக்கிறது.

இத்தகைய நிபந்தனை வரலாற்றளவில் முன்னோடியில்லாதது ஆகும். தற்கால வரலாற்றில் பெரும் பூர்சுவா அரசியலைமைப்புக்கள், 1787ம் ஆண்டின் அமெரிக்க அரசியலமைப்பு, மற்றும் 1789ம் ஆண்டு மனித உரிமைகள் மற்றும் குடிமக்கள் உரிமைகளின் பிரெஞ்சு பிரகடனம் போன்றவைகூட முதலாளித்துவ சந்தை உறவுகளை பாதுகாக்கவில்லை; மாறாக, "இயற்கையான, பிறரிடம் ஒப்படைத்துவிட முடியாத, மனிதனின் புனித உரிமைகள்" என்றுதான் அவை குறிப்பிட்டுள்ளன. தனிப்பட்ட குடிமகனின் சமூக, ஜனநாயக உரிமைகளை அவை பாதுகாக்கின்றனவே அன்றி மூலதனத்தின் தடையற்றுச் செல்லும் அதிகாரத்தை பாதுகாக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றிய ஆவணத்தின் முழு உரையும், ஒரு ஜனநாயக அரசியலமைப்பு எனப்படுவதை காட்டிலும், ஒரு "ஐரோப்பிய வணிகக்குழுவின்" விதிகளைத்தான் ஒத்துள்ளது. சந்தையையும் போட்டியையும் அரசியலமைப்பு உயர்நெறி உண்மைகளின் தரத்திற்கு உயர்த்தியதின் மூலம், நடைமுறையில் எந்த சமூக போராட்டமும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அது பறைசாற்றுகின்றது.

அடிப்படை பூர்சுவா ஜனநாயகக் கொள்கைகளின் நிலைப்பாட்டில் இருந்துகூட, இந்த அரசியலமைப்பு இழிதன்மை உடையதாகும். அதிகார பிரிவினைக் கோட்பாடு, அரசாங்கத்தின் பொறுப்புக்கள், மக்கள் இறைமை போன்ற சட்டக் கொள்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

உறுப்பினர் நாடுகளின் அரசாங்கங்களை கொண்டிருக்கும் மந்திரிகள் குழு சட்டமியற்றும், செயல்படுத்தும் அதிகாரங்கள் இரண்டையும் ஒன்றாகக் கொண்டுள்ள அமைப்பு ஆகும். இத்துடன் கூட ஓர் இரண்டாம் நிர்வாகக்குழு ஐரோப்பிய ஒன்றியக் குழு என்ற வடிவமைப்பில் இருக்கிறது; இது பெரிதும் கட்டுப்பாடற்ற, சுதந்திரமான செயற்பாடுகளையும் பரந்த அதிகாரங்கள், மிகப் பெரிய அரசியல் குறுக்கீட்டு அதிகாரங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனமான ஐரோப்பிய பாராளுமன்றம் நிர்வாகப் பிரிவை தேர்ந்தெடுப்பதற்கோ, சட்டமியற்றுவதற்கோ உரிமை இல்லாமல் உள்ளது. குறைந்த அதிகாரம், வரையறுக்கப்பட்ட தடுப்பு அதிகாரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இம்மன்றம் ஐரோப்பிய இளவரசர்களால் 19ம் நூற்றாண்டில் தக்கவைத்துக் கொள்ளப்பட்டிருந்த முதுகெலும்பற்ற பாராளுமன்றங்களையே நினைவிற்குக் கொண்டுவருகின்றது.

200 ஆண்டுகள் நிரம்பிய அமெரிக்க அரசியல் யாப்புடன் ஒப்பிடும்போது, ஐரோப்பிய ஒன்றிய ஆவணம் மங்கிய, மிகத் தொலைவான கடந்த காலத்தைப் பற்றிய பழம்பொருள் போல் காட்சியளிக்கிறது. ஒரு (மிகச்சாதாரண) அடிப்படை உரிமைகள் பட்டியலையும் அரசியல் அமைப்பு கொண்டுள்ளது; ஆனால் இவை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்காடப்படமுடியாது; வெறும் ஏட்டளவிலேயே உள்ளது.

அதிகாரபூர்வமாக ஆதரவு கொடுக்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்து இந்த ஆவணம் பிரெஞ்சு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற உண்மை அரசியல் செல்வந்த தட்டினுள்ளே ஜனநாயக நனவு எந்த அளிவிற்கு அரித்துப்போய் உள்ளது என்பதைக்காட்டும் அளவுகோலாக உள்ளது. மனிதகுல வரலாற்றிலேயே Condorcet, Danton and Robespierre, Proudhon, Louis Blanc மற்றும் Jaurès போன்ற தலைசிறந்த ஜனநாயக, சோசலிச சிந்தனையாளர்கள், செயல்வீரர்கள் ஆகியோரின் இல்லமாக பிரான்ஸ் திகழ்ந்திருந்தது. சுயநலம் வாய்ந்த வணிகத்தை மனித கண்ணியத்திற்கும் மேலாக இருந்தும் இந்த ஆவணத்தைப் பற்றி அவர்கள் என்ன கூறியிருப்பர்?

வேறு எந்த நாட்டிலும் இல்லாத முறையில் 1789, 1848, 1871 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த பெரும் புரட்சிகளால் உருவாக்கப்பட்ட வரலாற்றைத்தான் பிரான்ஸ் திரும்பிப் பார்க்கிறது. உலகத்திற்கு "சோசலிசம்" என்ற சொல்லையே நடைமுறையில் கொண்டுவந்தது பிரான்ஸ்தான். இப்பொழுது சோசலிசத்தின் பெயரால் Francois Hollande மற்றும் Lionel Jospin ஆகியோர் இந்த இரங்கத்தக்க ஆவணத்தை விற்க முற்படுகின்றனர்! முன்னோக்குகள், கருத்துக்கள் ஆகியவற்றின் சரிவிற்கு எத்தகைய அத்தாட்சி! இவர்கள் மூலதனத்தின் அதிகாரத்தின் முன்னர் கால்களில் விழுந்து நிற்பதுடன், ஜனநாயகம், சோசலிசம் அல்லது முற்போக்கு சீர்திருத்தம் போன்ற எந்த கருத்துருக்களில் இருந்தும் முறித்துக்கொண்டு நிற்கின்றனர்.

கடந்த சில வாரங்களில், பிரெஞ்சு மக்கள் அரசியலமைப்பிற்கு ஆதரவாக சற்றும் சளைக்காத பிரச்சாரத்திற்கு உட்பட்டுள்ளனர். பொது மற்றும் தனியார் செய்தி ஊடகப் பிரிவுகளும் பொது வரிப் பணமும்கூட இந்த இலக்கிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

அரசாங்கம் அரசியலமைப்பின் பிரதிகளை மில்லியன் கணக்கில் தயார் செய்து, வழுவழுப்பான சிறிய கையேடுகளை தயார் செய்து "வேண்டும்" வாக்களிப்பிற்காக ஒவ்வொரு வீட்டிலும் அதை வழங்கும் வகையில் பெரிதும் பாடுபடுகின்றனர். செய்தி அறிவிப்பாளர்கள் பொதுநிலைத் தன்மையை முற்றிலும் கைவிட்டுவிட்டு அரசியல் அமைப்பு நிராகரிக்கப்படுதல் என்பது "ஆபத்தான தவறாகும்" என்று பல முறையும் எச்சரித்து வருகின்றனர். இப்படி செய்தி ஊடகத்தின் பாரபட்சத்தனம் மிக வெளிப்படையாக இருப்பதால், ஒளிபரப்பு நிர்வாகம் கூட வானொலி, தொலைக் காட்சி நிலையங்கள் அவை, சட்டப்படி ஒதுக்கப்படவேண்டிய நேரத்தை, அரசியலமைப்பை ஏற்பது கூடாது எனக் கூறுபவர்களுக்கும் ஒதுக்காததற்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை அரசியல் அமைப்பை ஏற்குமாறு செய்தல் பிரான்சில் மட்டும் நடைபெறவில்லை. ஜேர்மனிய பாராளுமன்றத்தின் மேல் பிரிவினால் இந்த அரசியலமைப்பு பிரெஞ்சு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இசைவு கொடுக்கப்படவேண்டும். பிரான்சில் "வேண்டும்" பிரச்சாரத்திற்கு ஓர் இறுதி ஊக்கம் கொடுக்கும் வகையில் அந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

ஜேர்மனியின் அதிபர் ஷ்ரோடரும், ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜாபெடெரோவும் பிரான்சில் பலமுறையும் தோன்றி அரசியலமைப்பு ஏற்கப்படவேண்டும் என்று வாதிட்டுள்ளனர். ஜேர்மனிய சமூக ஜனநாயகவாதிகளும் பசுமைக் கட்சி உறுப்பினர்களும் பிரான்ஸ் நாடெங்கிலும் "வேண்டும்" வாக்கிற்காக பிரச்சாரம் செய்துள்ளனர். புகழ்பெற்ற கலைஞர்களும் அறிவுஜீவிகளும், எழுத்தாளர் Gunter Grass, தத்துவஞானி Jurgen Habermas போன்றோரும் அரசியலமைப்பிற்கு ஆதரவு கோரி குரல் கொடுத்துள்ளனர்.

இத்தகைய பெரும் பிரச்சார வெள்ளம் இருந்தபோதிலும், மக்கள் இந்த வாக்கெடுப்பு தங்களுடைய நலன்களுக்கு எதிரானது என்ற உணர்வை கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஜாக் சிராக்கினால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதில் இருந்து, திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான ஆதரவு மூன்றில் இரண்டு பங்கு என்று தொடக்கத்தில் இருந்தது, இப்பொழுது 40 முதல் 50 சதவீதம் என்று சரிந்துள்ளது. இத்தகைய மாறுதலுக்கு முக்கிய காரணி அரசியலமைப்பில் பொதிந்திருக்கும் தாராளவாத பொருளாதாரத்தின் விளைவுகளை பற்றிய அச்சமும், சிராக் மற்றும் பிரதம மந்திரி Jean-Pierre Raffarin ஆகியோருடைய சமூக கொள்கைகளுக்கு இருக்கும் பரந்த அளவு எதிர்ப்பும்தான். ஞாயிறன்று நடைபெற இருக்கும் வாக்கெடுப்பின் முடிவு சந்தேகத்தில்தான் உள்ளது.

"வேண்டும்" முகாமின் வாதங்கள்

அரசியலமைப்பிற்கு ஆதரவாளர்களான சிராக், அவருடைய ஆளும் UMP கட்சி (Union for a Popular Movement), சோசலிசக் கட்சியின் பெரும்பான்மை, "தடையற்ற சந்தை" யை விரும்பும் தாராளவாத UDF (Union for the French Democracy) ஆகியவை ஒரு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கான வாதத்தையே பெரிதும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். அரசியலமைப்பு பிரான்சையும் ஐரோப்பாவையும் பொருளாதார, அரசியல், இராணுவ முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மாற்றீடாக எதிர்த்து நிற்க உதவும் என்று அவர்கள் அதற்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

"ஐரோப்பாவின் செல்வாக்கை சர்வதேச அரங்கில் தக்கவைத்துக் கொள்ளுவதற்கான முக்கியமான நடவடிக்கை" என்று ஷ்ரோடரும் சிராக்கும் அரசியலமைப்பை விளக்கிக் கூறியுள்ளனர். சோசலிஸ்ட் கட்சியின் Pierre Moscovici அரசியலமைப்பின் தோல்வியானது, ஐரோப்பாவில் முடக்கம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு அது நன்கொடை அளிப்புப் போல் ஆகும் என்றும் எச்சரித்துள்ளார். பிரான்சின் வெளிவிவகார மந்திரியான Michel Barnier வாக்கெடுப்பு பிரெஞ்சு மக்கள் "ஐரோப்பிய ஐரோப்பா" வேண்டுமா அல்லது "அமெரிக்க செல்வாக்கிற்குட்பட்ட ஐரோப்பா" வேண்டுமா என்பதை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க எதிர்ப்பு வகை, "வலுவான ஐரோப்பாவை" கட்டமைப்பது என்பது "சமூக சந்தைப் பொருளாதாரம்", "பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய சமூக மாதிரியை" "ஆங்கில-அமெரிக்க தாராளவாதத்திற்கு" எதிராக பாதுகாத்தலுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று தொடர்பு படுத்தப்படுகிறது. UDF தலைவரான Francois Bayrou, அரசியலமைப்பை ஏற்றால் "அமெரிக்க தனிமனித தாராளவாதம், சீனாவின் முழுச் சர்வாதிகார அதி தாராளவாதம்" இவற்றிற்கெதிரான பாதுகாப்பை தரும் என்று அறிவித்துள்ளார்.

பெல்ஜியத்தின் சோசலிஸ்ட் கட்சித் தலைவரான Elio Di Rupes, நிராகரித்தல் என்பது "பொருளாதார வளத்திற்கான, சமூக பாதுகாப்பிற்கான, பண்பாட்டுக் கூறுபாடுகள் பலவற்றை பேணும் பொறுப்பிற்கான ஐரோப்பிய முன்மாதிரியை பெரிய பிரித்தானியாவிற்கு மாற்றிவிடும் என்றும் அது தன்னுடைய மிகத் தாராளவாத கருத்துக்களை நிறைவேற்றிவிடும்" என்று கூறினார். இதன் விளைவாக தொாழிலாளர்களுடைய சமூக நலன்கள் தாழ்ந்துவிடும் என்றும் "உலக அரங்கில் ஐரோப்பியரின் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளுவதற்கு" பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தேவைகளில் நம்பியிருக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்றும் கூறினார்.

இத்தகைய தர்க்கத்தின் அடிப்படையில்தான், அதாவது ஒரு நாட்டின் பாதுகாப்பு சோசலிசத்தை அமைப்பதற்கு முன்தேவை என்று வலியுறுத்தும் வகையிலான தர்க்கத்தை ஒட்டித்தான், ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகள் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை முதலாம் உலகப் போரின் களங்களில் எந்தவித அர்த்தமும் இல்லாமல் இறப்பதற்கு அனுப்பிவைத்தது.

அரசியலமைப்பு ஆதரவாளர்களால் கூறப்படும் மற்றொரு வாதம் போர், பாசிசம் ஆகியவை மீண்டும் வரும் ஆபத்தை அது தவிர்க்கும் என்ற கூற்றாகும். ஜேர்மனிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்றில், ஷ்ரோடர் உண்மையில் ஆபத்திற்குட்பட்டிருப்பது ஒரு பெரும் வரலாற்று பிரச்சினையாகும்: பாசிச கொடுமைகளுக்கு பதிலளிப்பதில் ஐரோப்பா ஐக்கியப்படும் கருத்துதான் அது என்று அறிவித்தார்.

உண்மை இதற்கு முற்றிலும் எதிரானது ஆகும். இந்த முழு அரசியலமைப்பு திட்டமும் முக்கிய ஐரோப்பிய சக்திகள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெருகி வரும் அழுத்தங்கள், மற்றும் ரஷ்யா, சீனா போன்ற மற்ற சக்திகளால் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் ஆகியவற்றை, எதிர்கொள்ளும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது; இந்த வேறுபாடுகள் ஈராக்கிய போரின்போது தெளிவாக வெளியே வந்திருந்தன. அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச போக்கிற்கு எதிராக ஒரு பொது வெளியுறவுக் கொள்கை, தனித்த, சுதந்திரமான இராணுவ வலிமை ஆகிய வழிமுறைகள் மூலம் உறுதியுடன் நிற்கக்கூடிய வகையில் ஐரோப்பா ஒரு பெரிய வல்லரசாக கட்டியமைக்கப்பட வேண்டும். இத்தகைய வழிவகையின் தவிர்க்க முடியாத விளைவு மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆபிரிக்கா இன்னும் முக்கியமான மூலப் பொருட்களை கொண்டிருக்கும், பல மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் பூசல்கள் பெருகி, இராணுவ நடவடிக்கைகளை உக்கிரப்படுத்தும். இராணுவவாதம் நோக்கிய இந்த உந்துதலுக்கு கொடுக்கும் விலை எப்பொழுதும் போல் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில்தான் நடைபெறும்.

மேலும், ஐரோப்பிய முதலாளித்துவம், "அமெரிக்க நிலைமைகளை" கண்டம் முழுவதிலும் அறிமுகப்படுத்தாமல் அதன் அமெரிக்கப் போட்டியாளருடன் போட்டியிட முடியாது. இதுதான் அரசியலமைப்பின் அடிப்படை பணியாகும்; இதன் நோக்கங்கள் மூலதனம் தடையற்று செயல்படுவதற்கு மற்றும் தொழிலாள வர்க்கத்தை தடையின்றி சுரண்டுவதற்கும் இன்னும் இருக்கும் அனைத்து தடைகளையும் துடைத்துக்கட்டுவதாகும். இந்த அரசியலமைப்பு ஏற்கப்பட்டால், இது கடந்த காலத்தில் பெற்ற சமூக நலன்கள் அழிக்கப்படுவதை விரைவுபடுத்தும்; இருபது ஆண்டுகளாக அத்தகைய தகர்ப்பு முறைதான் நடைபெற்று வருகிறது; கன்சர்வேட்டிவ் அரசாங்கங்களுக்கும் குறைவில்லாத வகையில் சமூக ஜனநாயகமும் அவ்வாறேதான் நடந்துள்ளது. சர்வதேச மூலதனத்தின் பார்வையில், ஐரோப்பிய ஊதியங்கள், சமூக நிலைமைகள் மற்றும் வரிகள் ஆகியவை இன்னும் அதிகமாகவே இருக்கின்றன.

"வேண்டும்" முகாமில் இருந்து குறைந்தது ஒரு உறுப்பினராவது இவ்விதத்தில் மிக வெளிப்படையாக கூறுகிறார். ஆளும் UMP இன் தலைவரான நிக்கோலா சார்கோசி அதி தாராளவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை ஏளனம் செய்திருக்கிறார் மற்றும், அவர் அரசியலமைப்பை ஆதரிப்பதற்கு காரணம், பிரான்சில் புதிய தாராளவாத நடவடிக்கைகளை திணிப்பதற்கு அது உதவி செய்யும் என்பதால்தான் என்று கூறியுள்ளார். Le Monde செய்தித்தாளுக்கு அவர் கூறியதாவது: "நான் ஒரு ஐரோப்பியன்; ஏனென்றால் பிரான்சில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கு ஐரோப்பா ஒரு சிறந்த நெம்புகோலாகும்."

"வேண்டாம்" முகாமின் வாதங்கள்

அரசியலமைப்பை எதிர்க்கும் குழுக்கள் பல வெளிப்படையாக அதன் ஆதரவாளர்களின் ஏகாதிபத்திய நோக்கங்களை பகிர்ந்துகொள்கின்றன. மேலும் அவை ஒரு வலுவான பிரான்ஸ், ஒரு வலுவான ஐரோப்பாவிற்குள் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களுடைய கருத்தில் அரசியலமைப்பு இந்த இலக்கிற்கு ஒரு தடையாக இருக்கிறது என்பதாகும்.

ஐரோப்பா, பிரெஞ்சு தேசத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்று தீவிர வலது கருதுகிறது. அவர்களுடைய பிரச்சாரம் வண்ணப்பூச்சு இல்லாத நாட்டுவெறியைத்தான் காட்டியுள்ளது. அரசியல் அமைப்பிற்கு எதிரான அவர்களுடைய போராட்டத்தின் இதயத்தானத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக என்று பொதுவாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி சேர எடுத்துள்ள முயற்சிகளுக்கு எதிராக குறிப்பாகவும் ஓர் இனத்தாக்குதல் உணர்வு காணப்படுகிறது.

அரசியலமைப்பிற்கு இடது எதிர்ப்பு, சோசலிஸ்ட் கட்சியின் சிறுபான்மை பிரிவில் இருந்து Jean-Pierre Chevenement- ஆல் தலைமை தாங்கப்படும் முழு இறைமையாளர்கள் வரை, பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கமான அட்டாக், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிக் கம்யூஸ்ட் கழகம் (LCR) ஆகியவற்றின் பரந்த கூட்டணி உள்ளது; இது இப்பிரச்சாரத்தில், அரசியலமைப்பின் புதிய தாரளவாத தன்மையை வலியுறுத்திப் பேசி வருகிறது. ஆனால் இந்தக் குழுக்களும்கூட அரசியல் அமைப்பு கூடுதலான முறையில் ஐரோப்பாவில் அமெரிக்க செல்வாக்கிற்கு இடம் கொடுப்பதாகத்தான் வாதிட்டு, இது நிராகரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளன.

"வேண்டாம்" முகாமின் முக்கியமான பேச்சாளர், சோசலிஸ்ட் கட்சிக்குள் இருக்கும் Laurent Fabius ஆவார்; அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தால், "ஒரு வலுவிழந்த பிரான்சும்", "ஒரு செயல்திறனற்ற ஐரோப்பாவும்தான்" மிஞ்சும் என்று கூறியுள்ளார். அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட நேட்டோவின் பாதுகாப்புக் கொள்கைகளினால் ஐரோப்பா கட்டிப்போட்டது போல் இருக்கும் என்று அவர் வாதிட்டுள்ளார்; மேலும் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கும் வெளியுறவுக் கொள்கை முடிவுகளை பொறுத்தவரையில் தடுப்பதிகாரம் கொடுத்திருப்பது, புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்சை விட ஜேர்மனிக்கு கூடுதலான வாக்குரிமை மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான L'Humanite, அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்துவிட்டால் ஐரோப்பா மீண்டும் ஆயுதமேந்துவதை அமெரிக்கா நாசவேலைக்குட்படுத்தி பயனற்றதாக்கிவிடக் கூடும் என்று எச்சரிக்கும் அளவுக்கு சென்றது.

"பிரெஞ்சு சமூக முன் மாதிரி" என்ற எண்ணக்கரு "புதிய தாராளவாதத்திற்கு" எதிராக பிரெஞ்சு தேசிய அரசின் வடிவமைப்பிற்குள் காக்கப்படமுடியும் என்பது, அது ஐரோப்பிய அரசியலமைப்பின் வடிவமைப்பிற்குள் காக்கப்படமுடியும் என்று கூறும் சிராக்கின் மடத்தனமான கூற்றைப் போலவே போலித்தனமானது ஆகும். உற்பத்தி மற்றும் நிதியச் சந்தைகள் பூகோளமயமாதல் என்பது எத்தகைய சமூக சீர்திருத்த கொள்கைக்கும் அடிப்படையை அகற்றிவிட்டது; பிரான்சிற்குள் என்று இல்லாமல் ஐரோப்பா முழுவதுமே இந்த நிலைதான். எந்தத் தேசிய அரசும் உலகச் சந்தைகளின் அழுத்தங்களை எதிர்த்து நிற்க முடியாது.

இதுதான் அனைத்து சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இன்னும் சமூக நீதிபற்றி தொடர்ந்து பேசிவரும் பல அமைப்புக்களின் வலது வளைவரை பாதையின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. எந்தெந்த நாடுகளில் முன்பு பதவியில் இருந்திருந்தாலும், அண்மையில் பதவியில் இருந்திருந்தாலும் -- ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD), பிரான்சில் லியோனல் ஜோஸ்பன் தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி, அல்லது இன்னும் தீவிர வடிவமைப்பில் பிரிட்டனின் தொழிற்கட்சி என்று -- கன்சர்வேடிவ் அரசாங்கங்களால் தொடுக்கப்பட்டிருந்த, சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் இவற்றிற்கெதிராக தாக்குதல்களை தொடர்ந்தன மற்றும் சில சமயம் தாக்குதலை தீவிரமாகவும் நடத்தியுள்ளன.

தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுடைய நலன்களை காத்து நீண்ட நாளாகிவிட்டது; மாறாக அவை முறையாக வேலையிழப்புக்களுக்கு நாசம் தரக்கூடிய முறையில் நடந்து கொள்ளுவதுடன் ஊதியக் குறைப்புக்கள், சமூக நிலை பாதிப்பு ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுக்கும் துணை நிற்கின்றன. அவை எப்பொழுதேனும் எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்தால், அது பொங்கி வரும் நீராவியின் அழுத்தத்திற்கு ஒரு வடிகால் என்ற அளவிற்கும், தொழிலாளர்களின் எதிர்ப்பு கையைவிட்டு மீறிப்போய்விடக் கூடாது என்பதற்கும்தான். CDFT தொழிற்சங்கமும் பிரான்சில் இப்பொழுது ஐரோப்பிய தொழிற்சங்க அமைப்புடன் சேர்ந்து கொண்டு "வேண்டும்" வாக்கெடுப்பிற்கு பிரச்சாரம் செய்கிறது. CGT இன் பொதுச் செயலாளர் Bernard Thibault ம், அவருடைய அமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக அரசியலமைப்பிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான முன்னோக்கு

தொழிலாள வர்க்கம் இந்த எதிரெதிர் முகாம்கள் எதையும் ஆதரிக்கக் கூடாது; ஏனெனில் அவை இதை முதலாளித்துவ பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பகடைக்காயாக குறைத்துவிடும். இதற்கு தன்னுடைய சுயாதீனமான முன்னோக்கு தேவைப்படுகிறது. இந்தப் பிற்போக்குத்தன்மையுடைய அரசியல் அமைப்பை அது உறுதியாக நிராகரித்தாக வேண்டும்; ஆனால் அதற்காக முதலாளித்துவ "வேண்டாம்" குழுவை இது தழுவுவதாக பொருள் இல்லை; அது அதனுடைய நோக்கங்களை "வேண்டும்" வாக்கிற்காக வாதிடுபவரின் பிற்போக்குத்தன்மைக்கு குறைவில்லாத வகையில்தான் பின்பற்றுகிறது.

நீஸ் உடன்பாட்டின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பராமரிக்கப்படவேண்டும் என்ற இதன் முன்னோக்கு, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஐரோப்பாவின் மையத்தானத்தை வளர்த்தல், அல்லது ஐரோப்பாவை பிரித்து போட்டித் தேசிய அரசுகளாக மாற்றுவது போன்றவை அனைத்துமே, அரசியலமைப்பை ஆதரிப்பவர்களின் முன்னோக்கு ஊக்குவிக்கும் தீமைகளைப் போலவே - வளர்ந்து வரும் தேசியவாதம், எல்லைகள் மூடுதல், பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஐரோப்பா கண்டத்தில் புதிய போர் ஆபத்து, ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான உரிமைகளும் நலன்களும் கூட இன்று முதலாளித்துவ சொத்து உறவுகளை சவால் செய்யும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கட்டமைப்பிற்குள்ளேதான் பாதுகாக்கமுடியும். அத்தகைய சோசலிச வேலைத்திட்டம் சர்வதேச அடிப்படையின்மூலம்தான் அடையப்படமுடியும். அதற்கு அனைத்து தேசிய, இனவழி, கலாச்சார பிளவுகளை கடந்து, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துதல் தேவையாகும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அரசியல் அமைப்புக்கு ஒரே மாற்றீடு, உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பொதிந்து வைத்துள்ள ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் ஆகும்.

அந்த அடிப்படையில்தான் கண்டம் போட்டியிடும் தேசிய அரசுகளாக பிளவுபடுதலை கடக்கமுடியும்; ஐரோப்பாவின் மகத்தான செல்வத்தையும் மற்றும் உற்பத்தி சக்தியையும் சமுதாயம் முழுவதிற்குமான நன்மைகளுக்கு பயன்படுத்த மேலும் அபிவிருத்தி செய்யும். ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்பது தொழிலாள வர்க்கத்தை, ஏகாதிபத்தியத்தை புறநிலை ரீதியாக எதிர்க்கும் நலன்களை உடைய ஒரு சமூக சக்தியை -அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சவால்விட வைக்கும். அது அமெரிக்க தொழிலாளர்களையும் வெள்ளை மாளிகையில் இருக்கும் போர் வெறியர்களுக்கு எதிரான தங்களுடைய போராட்டத்தை ஊக்கப்படுத்தும். உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களை ஏகாதிபத்தியத்திற்கு சவால்விடச்செய்யவும் இது ஒரு மகத்தான ஊக்க சக்தியாக அமைந்து, ஒடுக்குபவர்களை தங்களுடைய சொந்த நாடுகளுக்குள்ளேயே சவால்விடச் செய்யவும் வைக்கும்.

இந்த முன்னோக்கை அடைவதற்கு தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஒழுங்குடன் அதைப் பிணைக்கும் அனைத்துக் கட்சிகளுடனும் முறித்துக் கொண்டு, தன்னை ஒரு சர்வதேச சோசலிச கட்சியில் சுயாதீனமாக ஒழுங்கமைத்துக் கொள்ளுவது தேவைப்படுகிறது. பிரான்சில் "தீவிர இடது" எனக் குறிக்கப்படும் இந்தக் கட்சிகளின் முக்கிய அரசியல் பங்கு, அத்தகைய வளர்ச்சி வராமல் தடுப்பதேயாகும்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் என்பது (Ligue Communiste Révolutionnaire) முதலாளித்துவத்தின் "வேண்டாம்" குழுவின் உட்பகுதியாக இருந்து, அதற்கு ஒரு இடது மறைப்பாக செயல்படுவதாகும். இந்த அமைப்பின் பேச்சாளர்கள் சோசலிச, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள், Attac உறுப்பினர்கள் மற்றும் இறைமை வாதிகளுடன் சேர்ந்து தொடர்ச்சியாக அரசியலமைப்பு எதிர்ப்பு அணிகளில் முறையாக வந்துபங்கு பெறுகின்றனர். அவர்கள் ஒரு அதிகாரபூர்வ பிரச்சாரத்தில் கடும் தேசிய வாதிகளுடன் இணைந்து செயல்படுகின்றார்கள் என்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் செயற்பாடு வேண்டும் என்பதற்கு அவர்கள் காட்டும் விரோதப்போக்கின் உச்சப்பட்ச வெளிப்பாடு ஆகும்.

LCR தன்னுடைய அதே தேசியப் பகட்டுரையை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகள் போலவோ அல்லது சோசலிஸ்ட் கட்சியின் சமூக ஜனநாயகவாதிகள் போலவோ பயன்படுத்துவதில்லை; அவர்கள் "தொழிலாளர்களுடைய ஐரோப்பா" என்று கூடக் கூறுகின்றனர்; ஆனால் இது அவர்களுடைய சமூக சோவினிஸ்டுகளை அத்தி இலை கொண்டு மறைப்பதைத்தான் செய்கிறது. LCR தன்னுடைய பிரச்சாரப் பங்காளிகளுக்கு எதிரான எந்த சர்ச்சையையும் தவிர்க்கிறது; மாறாக அரசியலமைப்பு பற்றி முதலாளித்துவ எதிர்ப்பாளர்களின் அரசியலுக்கும் மற்றும் தொழிலாளர் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அரசியலுக்கும் இடையே இருக்கும் சமரசத்திற்கு இடமில்லாத வேறுபாடுகளை மறைக்கத்தான் முற்படுகிறது.

இதன் பெயர் எவ்வாறு இருந்தாலும்கூட, LCR இன் அரசியல் கம்யூனிசத்தையும் கொண்டிருக்கவில்லை புரட்சிகரத்தன்மையையும் பெற்றிருக்கவில்லை. இது "சமூக மற்றும் ஜனநாயக ஐரோப்பாவிற்கு" அழைப்பு விட்டுள்ளது; ஒரு சோசலிச ஐரோப்பாவிற்கு அல்ல. இது "புதிய தாராளவாதக் கொள்கையை" எதிர்க்கின்றதே அன்றி முதலாளித்துவ அமைப்பை எதிர்க்கவில்லை. இது ஒன்றும் சொற்றொடர் பற்றிய வினா அல்ல; இது முன்னோக்கு பற்றிய பிரச்சினையாகும்.

முதலாளித்துவத்தின் இலாப முறையின் இழிந்த பெருக்கங்களை LCR கண்டனத்திற்கு உட்படுத்திகிறதே அன்றி, அந்த முறையையே சவாலுக்கு உட்படுத்தவில்லை. முதலாளித்துவம் தொழிலாளர் நலன்களுக்கு ஏற்ப சீர்திருத்தப்படலாம் என்ற பொய்த் தோற்றத்தை அது ஊக்குவித்து, பல ஆண்டுகளும் அரசாங்க நடவடிக்கையில் ஈடுபட்டு முற்றிலும் செல்வாக்கிழந்துவிட்ட சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளை மறுபடியும் புணருத்தாரணம்செய்ய முற்படுகிறது. பிரேசிலில் அவர்களுடைய சகோதர அமைப்பால் விளக்கிக்காட்டியவாறு அவர்கள் அரசாங்கப் பொறுப்பையும் முதலாளித்துவ அரசின் ஓர் அங்கம் என்று தங்களை கருதிக் கொள்ளும் வகையில் ஏற்கத் தயாராக இருக்கின்றனர்.

LCR அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிரான பரந்த எதிர்ப்பை, முதலாளித்துவ கட்சிகளின் பின்புறம் தள்ள தீவிரமாக முயற்சி செய்கையில், Lutte Ouvriere (LO) உம் இதையே செய்கிறது; ஆனால் ஒரு மந்தமான நிலையில் இதைச் செய்கிறது. இது தொழிலாளர்களை அரசியலில் இருந்து வெளியே விலகி நின்று, எதிர்ப்புக்கள், வேலை நிறுத்தங்கள் இவற்றில் கவனம் செலுத்துமாறும் அரசியல் முன்முயற்சிகளை மற்றவர்களுக்கு விட்டுவிடுமாறும் கேட்டுக் கொள்ளுகிறது.

மார்ச் 18ல் வெளியிடப்பட்ட தலையங்கம் ஒன்றில், LO வின் தலைவரான Arlette Laguiller எழுதினார்: "மார்ச் 10 ஆர்ப்பாட்டங்களின் போதும் அதற்குப் பின்னரும், தங்களுடைய வெற்றியை வாக்கெடுப்பில் "வேண்டாம்" வாக்கிற்கு வெற்றி என்று மாற்றவேண்டும் என்று கூறப்பட்டது. இதை எவர் கூறினாலும் அவர்கள் தொழிலாளர்களுடைய நலன்களைக் காட்டிக் கொடுப்பவர்கள் ஆவர். பெருகிவரும் அதிருப்தி வாக்கெடுப்புப் பெட்டியில் திசை திருப்பிவிடக்கூடாததாகும்... ஆலைகளிலும், தெருக்களிலும் நாம்தான் வலிமையுடையவர்கள் ஆவோம்."

லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட உலக சோசலிச கட்சியான நான்காம் அகிலத்தின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை காப்பதற்காக, மிசேல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் ஆகியோரின் அரசியல் திரித்தல்களுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) 1953ம் ஆண்டுநிறுவப்பட்டது, அவர்களின் வழித்தோன்றல்தான் இன்றைய LCR ஆகும். ICFI இன் சர்வதேச வெளியீடான உலக சோசலிச வலைத் தளம் ஒரு சர்வதேச வெகுஜன சோசலிச கட்சியை வளர்த்தெடுப்பதற்கு தத்துவார்த்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தாயார்செய்து வருகிறது. இது மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளை அன்றாடம் பகுப்பாய்வு செய்து ஒரு சோசலிச நோக்குநிலையையும் முன்னோக்கையும் அளித்து வருகிறது.

ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக உண்மையாய் போராட விரும்புவர்கள் அனைவரையும், உலக சோசலிச வலைத் தளத்தை பின்பற்றுமாறும் ஆதரிக்குமாறும், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சோசலிச இயக்கத்தை கட்டியமைப்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் போராட்டத்தில் பங்கேற்குமாறும் நாம் அழைக்கின்றோம்.

See Also :

பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு : ஆளும் கட்சி வலதுக்குத் திரும்புவதற்கு சர்கோசி தலைமைதாங்குகிறார்

பிரான்ஸ்: ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராக பெருகிவரும் உணர்வை மாற்ற சிராக் தொலைக்காட்சி மூலம் "வேண்டும்" என்று வாக்களிக்கக் கோரியது தோல்வியை தழுவுகிறது

பிரெஞ்சு இடதும் ஐரோப்பிய அரசியலமைப்பு மீதான கருத்தெடுப்பும்

ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கான ஸ்பெயினின் வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்

Top of page