World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military threatens antiwar filmmakers

இலங்கை இராணுவம் யுத்த எதிர்ப்பு திரைப்பட இயக்குனர்களை அச்சுறுத்துகிறது

By Nanda Wickramasinghe
28 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த இரு வாரங்களாக, தமது படைப்புக்களின் மூலம் இராணுவத்தையும் நாட்டின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தையும் விமர்சித்திருந்த திரைப்பட இயக்குனர்களுக்கு எதிராக, இலங்கை ஆயுதப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்ச்சியான வெளிப்படையான அச்சறுத்தல்களை விடுத்துள்ளனர். இது வெளிப்படையான ஜனநாயக உரிமை மீறலாக இருக்கும் அதேவேளை, "பக்க சார்பற்ற" ஆயுதப் படைகள் அரசியல் வாழ்க்கைக்குள் நேரடியாக தலையீடு செய்கின்ற அளவில், இத்தகைய நடவடிக்கைகள் இராணுவ உயர்மட்டத்தினர் யுத்தத்திற்கு தயாராகின்றார்கள் என்பதற்கான தெளிவான எச்சரிக்கைகளாகும்.

கடந்த வாரக் கடைசியில் வெளிவந்த சண்டே டைம்ஸ் பத்திரிகையின்படி, ஆயுதப்படைகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர் தயா ரட்னாயக்க, ரியர் அட்மிரால் சரத் வீரசேகரவுடன் சேர்ந்து, பெயர் குறிப்பிடப்படாத ஒரு விளம்பர ஏஜன்சியில் பல முன்னணி யுத்த விரோத திரைப்பட இயக்குனர்களுக்கான ஒரு உத்தியோகபூர்வமற்ற கூட்டத்தை அண்மையில் நடாத்தியுள்ளார். கட்டுரையின்படி ரட்னாயக்கவும் வீரசேகரவும், "மீண்டும் யுத்தம் வெடித்தால் திரைப்பட இயக்குனர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும்" என அவர்களை எச்சரித்ததோடு "இராணுவத்தின் சார்பிலும் திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுலங்க எனு பினிச (கைவிடப்பட்ட நிலம்) இராணுவத்தின் இலக்குக்கு உள்ளாகியுள்ள திரைப்படங்களில் ஒன்றாகும். இத்திரைப்படம் இம்முறை கெனாஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற முதலாவது இலங்கைப் படைப்பாகும். ஏனையவை அசோகா ஹந்தகமவின் மே மகே சந்தய் (இது என் நிலவு), பிரசன்ன வித்தானகேயின் இர மதியம (உச்சிப்பொழுது) மற்றும் சுதத் மஹாதிவுல்வெவவின் சுது, கலு சஹா அலு (மங்கலின் நிழல்கள்) போன்ற சர்வதேச பாராட்டைப் பெற்ற திரைப்படங்களாகும்.

தயாரிப்பாளர்களுடனான இந்த கூட்டமானது திரைப்பட இயக்குனர்கள் மற்றும் ஏனைய கலைஞர்களையும் அச்சுறுத்தும் திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தின் முதல் படியாகும். இது செப்டம்பர் 4 சண்டே டைம்ஸ் பத்திரிகையில் "யுத்தம், கருப்பு சினிமா மற்றும் சிப்பாயின் மனவுறுதி" என்ற தலைப்பில் ரியர் அட்மிரால் வீரசேகர எழுதிய குறிப்புடன் தொடங்கியது. இத்தகைய திரைப்படங்கள் யுத்தத்திற்கு எதிரான பரந்த வெகுஜன உணர்வுகளை ஊடுருவும் என்பதையிட்டு தெளிவாக முன்னுணர்ந்த அட்மிரால் பிரகடனம் செய்ததாவது:

"இன்று யுத்தமானது ஒரு தேசிய பிரச்சினையாக இருக்கின்றது. இதன்படி யுத்தத்தை பற்றி திரைப்படம் தயாரிக்கும் ஒருவர் ஆழமான கவனத்தை செலுத்தவேண்டும் என்பது எனது கருத்தாகும். யுத்தத்தின் அழிவுகரமான பண்பைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சமுதாயம், சமூக வாழ்வு போன்றவற்றில் யுத்தத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் திரைப்படங்களை எந்தவொரு தனிநபரும் எத்தனை திரைப்படங்களை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால் அத்தகைய திரைப்படங்களின் ஊடாக, துருப்புக்களின் சேவைகள் கண்டிக்கப்படுமானால் அல்லது சிப்பாயும் அவரது மனைவியும் ஏளனத்துக்கு உள்ளாக்கப்பட்டால் மற்றும் நாட்டில் உள்ள ஆற்றல் மிக்க இளைஞர்கள் சேவையில் இணைவதில் இருந்து பின்வாங்கச் செய்யப்படுவார்களானால், அது எதிர்ப்புக்களை எழுப்ப வேண்டிய தருணமாகும்."

60,000 ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட மற்றும் தீவு பூராவும் மிகப்பெரிய அவலங்களுக்கு வழிவகுத்த யுத்தத்தின் கொடூரமான யதார்த்தத்தை சித்தரித்துக் காட்டுவதற்கு பதிலாக வீரசேகர் பிரேரிப்பதாவது: "யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில், படைவீரன் மீதான அன்பும் பாசமும் உள்ளடக்கப்பட வேண்டும். ஆகவே திரைப்படத்தின் முடிவில், இரசிகரின் மனதில் சிப்பாய் மீது மதிப்பை அல்லது கெளரவத்தை ஏற்படுத்தும் சித்திரம் வரையப்படும்."

வீரசேகர தனது கட்டுரையின் முடிவில்: "யுத்தம் சம்பந்தமான ஒரு திரைப்படம், பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை விருப்பத்துடன் இட்டுநிரப்புவதை நோக்கி மறைமுகமாக கூட பங்களிப்பு செய்யுமானால், அது தேசத் துரோகத்திற்கு சமமானதும் கடுமையாகக் கையாளப்பட வேண்டியதுமாகும்," என பிரகடனம் செய்கின்றார். இலங்கையின் அரசியல் மொழியில், இந்தக் காலக்கேடான செய்தி ஒரே ஒரு அர்த்தத்தையே கொண்டுள்ளது: எதிர்ப்புக்குள்ளாகியுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கைகளை அல்லது நேரடியாக இராணுவத்தினால் இல்லாவிட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்பட்ட சிங்களத் தீவிரவாத கருவிகளின் வன்முறை தாக்குதல்களை எதிர்பார்க்க முடியும்.

வீரசேகரவின் கட்டுரையை தொடர்ந்து செப்டெம்பர் 13 தேசிய திரைப்படக் கூட்டுத்பானத்திற்கு (தே.தி.கூ) ஒரு விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அட்மிரால், பிரிகேடியர் ரட்னாயக்கவுடனும் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு விமானப்படை அதிகாரியுடனும் தே.தி.கூ தலைவரை சந்தித்தார். பல ஊடக அறிக்கைகளின்படி, அவர்கள் தேசத்துரோகிகள் என்ற கருத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக, திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சர்வதேச பாராட்டு விருதுகளை ரட்னாயக்க பற்றிக்கொண்டார். இந்த இயக்குனர்கள் வெளிநாட்டு எஜமானர்களின் சம்பளத்தில் உள்ளார்கள் என சுட்டிக்காட்டும் வகையில், இந்த திரைப்படங்கள் "வெளிநாட்டு நிதியில் தயாரிக்கப்பட்ட சினிமா," என அவர் பிரகடனம் செய்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது, "பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளை திட்டமிட்டு தாக்கும்" இத்தகைய திரைப்படங்களுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் மீது இந்த இராணுவ பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர். ரட்னாயக்க மேலும் முன்சென்று யுத்த விரோத திரைப்படங்களை "பயங்கரவாதத்தின் புதிய வடிவமாக" வகைப்படுத்தியதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த திரைப்பட இயக்குனர்கள் "ஆயுதப் படைகளை ஏளனஞ் செய்வதோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு களிப்பூட்ட உறுதிபூண்டுள்ள பயங்கரவாத பிரச்சாரத்தின் வாகனங்கள்" என அவர் பிரகடனம் செய்துள்ளார்.

அரசியல் ஸ்தாபனத்தில் எவரும் இராணுவத்தை விமர்சிக்கவோ அல்லது பின்வாங்க அழைப்புவிடுக்கவோ இல்லை. இதற்கு நேர்மாறானவையே நடந்தன. சுலங்க எனு பினிச செப்டெம்பர் 7 முதல் 18 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியின் போது அங்கு திரையிடப்படவிருந்தது. தே.தி.கூ மற்றும் இராணுவத்திற்கும் இடையிலான சந்திப்பை அடுத்து திரைப்படம் இரத்து செய்யப்பட்டது.

யுத்த ஆபத்து

திரைப்பட இயக்குனர்களுக்கு எதிரான இராணுவத்தின் அச்சுறுத்தல்கள், யுத்த விவகாரம் மையமாகவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியிலேயே விடுக்கப்படுகின்றன. அரச இயந்திரம் மற்றும் இராணுவம் உட்பட்ட ஆளும் கும்பல்கள், தற்போதுள்ள யுத்த நிறுத்தத்தை தொடர்ந்தும் பேணுவதுடன் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதா அல்லது நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளுவதா என்பது சம்பந்தமாக தெளிவாகப் பிளவுபட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, பெரும் வர்த்தகர்களின் பக்கபலத்துடன் "சமாதான முன்னெடுப்புகளின்" தொடர்ச்சிக்கு முயற்சிக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) வேட்பாளர் மஹிந்த இராஜபக்ஷ, சுனாமி நிவாரணங்களை விநியோகிப்பதற்காக அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை ஒதுக்கித் தள்ளுமாறும் தற்போதைய யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்யுமாறும் கோரும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட சிங்கள பேரினவாத அமைப்புகளுடன் அணிசேர்ந்துகொண்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் பிரச்சாரம், ஆகஸ்ட் 12 வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து உக்கிரமடைந்துள்ளது. ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனமும், இந்தக் கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக பூரணமான ஆதராங்கள் இன்றி குற்றம் சுமத்துகின்றன. ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும், விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் நிச்சயமாக யுத்தத்திற்கு வழிவகுக்கும் தமது கோரிக்கைகளுக்கான பிரச்சாரத்தை இடைவிடாமல் முன்னெடுப்பதற்காக இந்தக் குற்றத்தை பற்றிக்கொண்டுள்ளன.

எந்தப்பக்கமும் சாராத பார்வையாளரான இராணுவம் ஏறத்தாழ ஒரு அரசியல் கட்சிபோல் இயங்குவது, மூலாதார செல்வாக்கு மற்றும் யுத்தத்தில் இருந்து பொருள் இலாபங்களையும் கொண்டுள்ள அதன் அதிகாரிகள் வர்க்கத்தின் நலன்களை முன்கொணர்கின்றது. சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ள இராணுவ உயர்மட்டத்தின் சில தட்டினருக்கு, யுத்த நிறுத்த உடன்படிக்கையும் கூட ஒரு காட்டிக்கொடுப்பு நடவடிக்கையாக உள்ளது.

2001 முதல் 2004 வரை ஐ.தே.க ஆட்சியில் இருந்தபோது, சமாதான பேச்சுக்களையும் மற்றும் யுத்த நிறுத்தத்தையும் கீழறுப்பதற்காக, விடுதலைப் புலிகளின் படகுகள் மீது ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் தாக்குதல்களை மேற்கொள்வதில் இராணுவ உயர் அதிகாரிகள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் உடந்தையாய் இருந்தனர். கடந்த ஆண்டு பூராவும், கிழக்கில் பழிக்குப்பழி வாங்கும் கொலைப் பிரச்சாரத்திலும் மற்றும் விடுதலைப் புலிகளுடன் ஆயுத மோதலிலும் ஈடுபட்டு வரும் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கோஷ்டிக்கு ஆயுதப் படைகளின் சில பிரிவுகள் மறைமுக ஆதரவு வழங்கிவருகின்றன. இந்த மோதல் யுத்த நிறுத்தத்தை தகர்க்க அச்சுறுத்துகிறது.

ரியர் அட்மிரால் வீரசேகர திரைப்பட இயக்குனர்களை பயமுறுத்துவதில் ஈடுபடுவது தற்செயலானதல்ல. அவர் திருகோணமலை துறைமுகத்தை தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படை பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்ததுடன் எப்பொழுதும் பதட்டநிலைமையுடன் காணப்படும் வடகிழக்கு மாவட்டங்களில் இராணுவப் பாதுகாப்பு மேலதிகாரியாகவும் இருந்தார். யுத்த நிறுத்தத்திற்கான அவரது எதிர்ப்பு, மிகவும் பகிரங்கமாக வெளிப்பட்டது கடந்த மே மாதத்திலாகும். இந்த மாதத்திலேயே திருகோணமலையின் மையப் பிரதேசத்தில் ஒரு புத்தர் சிலையை நிர்மாணித்த சிங்களத் தீவிரவாதிகள், உள்ளூர் தமிழர்களுக்கு எதிராக வன்செயல்களை தூண்டியதுடன் இனவாத பதட்டநிலைமையையும் உக்கிரப்படுத்தியுள்ளனர். இந்த ஆத்திரமூட்டல்களை வீரசேகர வெளிப்படையாகவே ஆதரித்தார். பெரும் கூச்சல் நிறைந்த இந்த நடவடிக்கை, அவரை பிரதேசத்தை விட்டு இடமாற்றம் செய்யுமளவுக்கு ஜனாதிபதி குமாரதுங்கவுக்கு நெருக்குவாரத்தை ஏற்படுத்தியது.

ஆயினும், வீரசேகர ஒழுக்கத்திற்கோ அல்லது கண்டனத்திற்கோ உட்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவர் கடற்படைத் தலைமையகத்தில் அதிகாரிகளின் இரண்டாவது தலைவராக விசேடமாக உருவாக்கப்பட்ட பதவியில் அமர்த்தப்பட்டார். இராணுவ உயர் மட்டத்தினரின் சில தட்டுக்களின் அதிருப்தியையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தும் வகையில், அவர் தொடர்ந்தும் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான கிளர்ச்சியை தொடர்ந்தார். டெயிலி மிரர் பத்திரிகையின் படி, கடந்த ஜூலையில் புனானை கடற்படை பயிற்சி முகாமில் நடந்த பயிற்சி பெற்றவர்கள் வெளிச்செல்லும் விழாவின்போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுப்பவர்கள் "பயந்தாங்கொள்ளிகள், கோழைகள்" என அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜூலை 26 நடந்த உயர் மட்ட இராணுவ அதிகாரிகளின் கூட்டத்திலும் வீரசேகர பங்குபற்றினார். இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி குமாரதுங்க, விடுதலைப் புலிகளுடனான அரசாங்கத்தின் சுனாமி நிவாரண கட்டமைப்பு உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்தார். அட்மிரால், கிழக்கில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஜனாதிபதி பயங்கரவாத தடைச் சட்டத்தை அல்லது அவசரகால நிலைமையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என பகிரங்கமாக பிரகடனம் செய்வதன் மூலம் இந்த அழைப்புக்கு பதிலளித்தார்.

இதுவரை, வீரசேகர சிலவேலைகளில் ஒரு ஒழுக்கங்கெட்ட அதிகாரியாக பதவி விலக்கப்பட்டிருக்க முடியும். ஆனால், திரைப்பட இயக்குனர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல் பிரச்சாரமானது அவர் இராணுவ உயர் தலைமையகத்தின் உயர்மட்டத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் செயற்படுகின்றார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கை வெறுமனே கலைஞர்களுக்கு எதிராக மட்டுமன்றி, ஊடகங்கள் மற்றும் மீண்டும் யுத்தத்திற்குத் திரும்புவதற்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராகவும் இலக்குவைக்கப்பட்டுள்ளது. இப்போது செயற்படுவதன் மூலம், ஜனாதிபதி தேர்தல்களுக்கு மத்தியில் அதன் பெறுபேறுகளிலும் செல்வாக்குச் செலுத்த இராணுவம் எதிர்பார்ப்பு கொண்டிருக்கலாம்.

திரைப்பட இயக்குனர்கள் சாதாரணமாக ஒரு வசதியான இலக்காக உள்ளனர் --இராணுவத்தின் உள வலிமை குன்றுவதற்கும் மற்றும் இராணுவத்தை விட்டு ஓடுபவர்களின் வீதம் அதிகரிப்பதற்கும் இவர்கள் பலிகடாக்கள் ஆக்கப்படுகின்றனர். நோக்கத்தை ஆதரிப்பதற்கு பதிலாக, அவர்களது திரைப்படங்கள் தீவின் சிங்கள கிராமப்புற ஏழைகளுக்கு மத்தியில் நிலவும் பிரதான பொருளாதார பிரச்சினையின் காரணமாக கட்டாயமாக படைத்துறைக்குச் சேரத் தள்ளப்பட்டுள்ள சாதாரண சிப்பாய்கள் உட்பட, ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்களின் பரந்த மனப்பான்மையை பிரதிபலிக்கின்றன. சுமார் 140,000 பேர் கொண்ட இராணுவத்தில், 2002 யுத்த நிறுத்தம் வரை நடந்த யுத்தத்தின் காரணமாக இராணுவத்தை விட்டோடியவர்களின் தொகை 50,000 என்ற உயர்ந்த எண்ணிக்கையில் உள்ளது.

"இராணுவ சிப்பாய்கள் மீது அன்பும் மரியாதையும் காட்டும்" மற்றும் முடிவில் அதை உயர்த்திக் காட்டும் திரைப்படங்களை உருவாக்குவதற்கான வீரசேகரவின் அழைப்பானது, யுத்தத்திற்காக வெகுஜன ஆதரைவை தயார்செய்வது இராணுவத்தின் தேவையாக உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். பிரதான கட்சிகள் அல்லது ஊடகங்களும் அட்மிராலை விமர்சிக்கவும் திரைப்பட இயக்குனர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் இலாயக்கற்றிருப்பது உயர்ந்த மட்டத்தில் அம்பலத்திற்கு வந்துள்ளது. ஆளும் கும்பலில் ஒரு பகுதி விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலமான சமாதான தீர்வை எதிர்பார்க்கின்ற அதேவேளை, மற்றைய பகுதி சிங்கள இனவாதத்தில் மூழ்கிப் போயுள்ளதன் காரணமாக, இராணுவத்தை அல்லது அதன் யுத்த ஆரவாரத்தை சவால் செய்ய இலாயக்கற்றுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி திரைப்பட இயக்குனர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலை கண்டனம் செய்வதோடு, அவர்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கிறது. அரசியல் வாழ்க்கைக்குள் இராணுவம் நேரடியாக தலையீடு செய்வதானது தீவில் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத யுத்தத்திற்கு மீண்டும் திரும்பும்போது அது அனைவரதும் ஜனநாயக உரிமைகள் மீதான நாகரீகமற்ற தாக்குதலையும் இணைத்துக் கொண்டிருக்கும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும்.

இத்தகைய ஆபத்துக்களை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் முதாளித்துவ கட்சிகளில் நம்பிக்கை வைக்க முடியாது. நாம் சோசலிச சமத்துவக் கட்சியையும் அதன் வேட்பாளர் விஜே டயஸையும் ஆதரிக்குமாறு எமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த முன்நோக்கின் அடிப்படையில் இலங்கையிலும் தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த பிரச்சாரம் செய்யும் ஒரே வேட்பாளர் விஜே டயஸ் மட்டுமே.

Top of page