World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Threats of violence against SEP meeting in Jaffna, Sri Lanka

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்திற்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்கள்

By the Socialist Equality Party
5 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த ஞாயிற்றுக் கிழமை சோசலிச சமத்துவக் கட்சியால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை, வன்முறை அச்சுறுத்தல் காரணமாக நடத்த முடியாமல் போனது. இந்த அச்சுறுத்தல் உள்ளூர் மக்கள் கட்சியின் கொள்கைகளை பற்றி தெரிந்துகொள்வதை தடுப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

நவம்பர் 17 நடைபெறவுள்ள தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் முன்நோக்கு மற்றும் வேலைத் திட்டம் பற்றி கலந்துரையாடுவதற்காகவே இந்தக் கூட்டம் அக்டோபர் 30 பிற்பகல் 2.30 மணிக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை, தீவின் யுத்தத்தால் சீரழிந்துள்ள வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்யக்கூடிய வேட்பாளரை நிறுத்தியிருப்பது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமேயாகும்.

கூட்டத்திற்கு முன்னதாக, மண்டபத்தின் மூடப்பட்ட கதவுகள் மீது ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்: "இலங்கை ஜனாதிபதித் தேர்தலை நிராகரியுங்கள். இலங்கையின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழர் தாயகத்தில் இடம்கிடையாது. கடந்த கால அனுபவங்கள் எங்களுக்கு போதும். எந்தவொரு ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கும் இடம் கொடுக்க மாட்டோம்," என பிகடனம் செய்தன.

சோசலிச சமத்துவக் கட்சிக்கும் மற்றும் கூட்டத்திற்கு வருகை தந்தவர்களுக்கும் எதிராக நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்த சுவரொட்டி மேலும் குறிப்பிட்டதாவது: "இது ஒரு எச்சரிக்கை. எமது அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாது செயற்படும் எவருக்கும் மக்கள் படை பதில் சொல்லும்." மக்கள் படை என்பது இந்த அச்சுறுத்தல்களை ஏற்பாடு செய்தவர்களின் உண்மையான அடையாளத்தை மறைத்துக்கொள்ள பயன்படும் ஒரு போலியான பெயர் என்பது தெளிவானது.

கூட்டம் நடைபெறவிருந்த அன்று, மண்டப பொறுப்பாளரின் வீட்டுக்குச் சென்ற இரு இளைஞர்கள் மண்பத்தை திறக்க வேண்டாம் என எச்சரித்தனர். பின்னர், கூட்டத்திற்கு வருகைதந்தவர்கள் மண்டபத்திற்கு வெளியில் கூடியிருந்தபோது, தலைக்கவசம் அணிந்து தங்கள் முகங்களை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த இருவர்: "இங்கு கூட்டம் நடந்தால் குண்டு வெடிக்கும்," என உரத்த குரலில் எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் வன்முறை ஆத்திரமூட்டுதலின் வரலாறு இருப்பதை கணக்கில் கொண்டு, சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தை விருப்பமின்றி இரத்து செய்ய முடிவு செய்தது. இந்த நகரம் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தில் முக்கிய இடம் வகித்துள்ளதுடன் கடுமையாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் உள்ளூர் தமிழ் மக்களை அடக்குமுறை அரசாங்கத்தின் கொடூரமான கட்டுப்பாடுகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்துகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்த நகரத்தில் செயற்படுகின்றனர். விடுதலைப் புலிகள் யாழ் குடாநாட்டின் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளதுடன், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக வன்முறைகளை பயன்படுத்துவதில் இழிபுகழ் பெற்றவர்கள்.

இந்த ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளோ அல்லது அதற்கு சார்பான அமைப்போ பொறுப்பாளிகளாக இருக்கலாம் என்பது மிகவும் சாத்தியமானதாகும். விடுதலைப் புலிகளுக்கு சார்பான உயர் கல்வி மாணவர் அமைப்பு, அக்டோபர் 26 வெளியிட்ட அறிக்கையில் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதோடு, அனைத்து வேட்பாளர்களையும் "சிங்களவர்கள்" என்ற இனவாத பதத்தில் கண்டனம் செய்துள்ளது.

1998ல் வன்னியில் கட்சியின் வேலைத்திட்டத்திற்காக பிரச்சாரம் செய்ததற்காக நான்கு சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களை விடுதலைப் புலிகள் கைது செய்திருந்தனர். 2002ல் ஊர்காவற்துறை தீவில் உள்ள அம்பிகை நகர் கிராமத்தில் கடற்தொழிலாளர் சங்கம் ஒன்றை அமைத்து அதை வழிநடத்திய சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் மரண அச்சுறுத்தல் விடுத்தனர்.

இத்தகைய குண்டர் நடவடிக்கைகள், ஆயுதப் படைகளுடன் நெருக்கமாக செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற (ஈ.பி.டி.பி) தமிழ் ஆயுதக் குழுக்களின் வேலையாகவும் இருக்கக் கூடும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பாகமாக உள்ள ஈ.பி.டி.பி, இராணுவ நடைமுறைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக முன்னர் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களை தொந்தரவு செய்தும் அச்சுறுத்தியும் வந்துள்ளது. 2002ல் ஈ.பி.டி.பீ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊர்காவற்துறையில் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவரை சரீரரீதியில் தாக்கினார்.

விடுதலைப் புலிகளும் மற்றும் அவர்களின் எதிரிகளும் இனவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ளதோடு, சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்நோக்கை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். மக்கள் படை அச்சுறுத்தலின் தெளிவான நோக்கம், உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வர்க்க முன்நோக்கு உட்பட, சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் பற்றிய எந்தவொரு கலந்துரையாடலையும் தவிர்ப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

20 ஆண்டு கால யுத்தத்தின் பின்னரும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காத 2002 யுத்த நிறுத்தத்தின் பின்னரும், பல சாதாரண தமிழ் மக்கள் ஒரு பதிலீட்டை எதிர்பார்த்திருக்கின்றனர். இரு பிரதான முதலாளித்துவக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கோ (ஐ.தே.க) அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ யுத்தத்திற்கு அல்லது வளர்ச்சியடைந்து வரும் சமூக சமத்துவமின்மைக்கு எந்தவொரு தீர்வும் கிடையாது. விடுதலைப் புலிகள் உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளை இட்டு நிரப்ப தவறியுள்ளதோடு சேர்ந்து, அவர்களின் ஜனநாயக விரோத வழிமுறைகளும் ஆழமான பகைமையை தோற்றுவித்துள்ளன.

இந்த அச்சுறுத்தலுக்கு யார் பொறுப்பாளியாக இருந்தாலும், அவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் குறிப்பிடத்தக்க அரசியல் தாக்கத்தை கொண்டுள்ளதையிட்டு தெளிவாகவே அக்கறை கொண்டுள்ளனர். கட்சி நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததோடு, தமிழ் மொழியில் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் இலக்கியங்களையும் விநியோகித்திருந்ததுடன் ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் போன்ற தீவுப் பகுதிகளிலும் அதேபோல் யாழ்ப்பாண நகரிலும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு கிராமங்களிலும் நடந்த சோசலிச சமத்துவக் கட்சி கூட்டங்களில் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதான கூட்டம் பற்றிய செய்திகளை உள்ளூர் செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தன. இந்த பிரதான கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி மத்திய குழு உறுப்பினர் நந்த விக்கிரமசிங்க உரையாற்றவிருந்தார்.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அறுபது பேர் வருகைதந்திருந்தனர். அவர்களில் மீனவர்கள், சீனோர் தொழிற்சாலையின் தொழில் வல்லுனர்கள், குடும்பத் தலைவிகள் மற்றும் இளம் யுவதிகளும் அடங்குவர். கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னியில் இருந்தும் நான்கு பேர் பயணித்திருந்தனர். அவர்கள் அனைவரும் சம்பவத்தையிட்டு ஆத்திரமும் வெறுப்பும் அடைந்தனர்.

வருகைதந்திருந்த கூட்டத்தினர் மத்தியில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் சோமசுந்தரம் விளக்கியதாவது: "உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் பற்றிய எந்தவொரு முக்கியமான அரசியல் கலந்துரையாடல் சம்பந்தமாகவும் பீதியடைந்துள்ள பிற்போக்குச் சக்திகளின் கோழைத்தனமான அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் இந்தக் கூட்டத்தை இரத்து செய்யத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த அச்சுறுத்தல் ஜனநாயக உரிமைகள் மீதான படுமோசமான வன்முறையாகும்.

"வடக்கு கிழக்கில் உள்ள உழைக்கும் மக்களுக்கு இரு தசாப்த காலத்திற்கும் மேலான உள்நாட்டு யுத்தத்தின் கசப்பான அனுபவங்களைப் பற்றி கலந்துரையாட வேண்டிய நேரம் நிச்சயமாக வந்துள்ளது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் உழைக்கும் மக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஒரு பொறி என்பது இப்போது தெளிவாகின்றது. சர்வதேச சக்திகளின் உதவியுடன் இந்த உட்படிக்கையை முன்கொணர்ந்த ஐ.தே.க அரசாங்கமோ, அல்லது தற்போதைய சுதந்திர முன்னணி அரசாங்கமோ சதாரண வெகுஜனங்களின் நன்மைக்காக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கொழும்பின் அடக்குமுறை இராணுவம் இன்னும் வடக்கிலும், கிழக்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"கடந்த கால அனுபவங்களில் இருந்து ஏதாவது நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால், அது கொள்ளையடிக்கும் சர்வதேச சக்திகளின் ஆதரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் கொள்கைகள் முழுமையாக வங்குரோத்தடைந்துள்ளது என்பதேயாகும்." பேச்சாளர் அங்கு வருகை தந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸுக்கான பிரச்சாரத்தற்கு செயலூக்கமான ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சிலர் விடுதலைப் புலிகளே இதற்கு பொறுப்பாளிகள் என கருதினர். சிலர் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களிடம்: "தமிழ் பகுதியில் இருந்து இலங்கை ஆயுதப் படைகளை திரும்பப் பெறவேண்டும் என்று கோரும் இந்தக் கட்சி ஏன் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவதில் இருந்து தடுக்கப்படுகிறது?" என்று கேட்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சி, அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன், 1983ல் இருந்தே யுத்தத்தை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த ஒரே கட்சியாகும். அதன் வேட்பாளர் விஜே டயஸ், இந்த ஜனாதிபத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை பாதுகாப்புப் படைகள் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கப்பட வேண்டும் என பிரச்சாரம் செய்துவருகின்றார்.

அதே சமயம், உழைக்கும் மக்களுக்கு விடுதலைப் புலிகள் எந்தப் பாதையையும் காட்டவில்லை என்பதையும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகின்றது. மாறாக அது தமிழ் முதலாளித்துவத்துன் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. 2002ல் இருந்தே, அது தொழிலாள வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதற்காக பலவிதமான கொழும்பு அரசாங்கங்களுடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை எட்டுவதற்கு முயற்சித்துக்கொண்டுள்ளது.

சர்வதேச ரீதியிலும் மற்றும் இந்தியத் துணைக் கண்டம் பூராவும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா--ஈழம் ஐக்கிய சோசலிசக் குடியரசுக்கான போராட்டத்திற்காக, அனைத்துத் தொழிலாளர்களும் இன, மொழி அல்லது மத பேதமற்று ஐக்கியப்படுமாறு சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்கின்றது.

நாம் கட்சியின் முன்நோக்கையும் கொள்கைகளையும் பற்றி பகிரங்கமாக கலந்துரையாடுவதற்கான அதன் ஜனநாயக உரிமை மீதான தாக்குதலை கண்டனம் செய்யுமாறு தீவு பூராவும் உள்ள இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் வேண்டுகோள் விடுப்பதோடு நவம்பர் 17 தேர்தலுக்கான எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

Top of page