World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Colombo meeting concludes Sri Lankan SEP election campaign

கொழும்பு கூட்டத்துடன் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது

By our correspondent
16 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 17ம் தேதி ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய கடைசி பொதுக்கூட்டத்தை சனிக்கிழமை மாலை கொழும்பில் நடாத்தியது. 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் இல்லத்துணைவியர் உட்பட சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரும், பொதுச் செயலாளருமான விஜே டயஸின் உரையைக் கேட்க குழுமியிருந்தனர். மத்திய மலைப் பகுதி மாவட்டங்களான கண்டி, பண்டாரவல, மற்றும் தீவின் தெற்குப் பகுதி அம்பலங்கொடவில் இருந்தும் பல பணி நேரம் பயணித்து சிலர் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து வருகைதந்தவருமான பீட்டர் சைமனும் கூட்டத்தில் உரையாற்றினர். ஆங்கிலம், தமிழ், சிங்களம் என்று மூன்று மொழிகளிலும் உரைகள் நிகழ்த்தப்பெற்றன. மொழிபெயர்ப்பிற்காக நேரம் செலவழிந்த போதிலும்கூட, குழுமியிருந்தவர்கள் பெரும் கவனத்துடன் உரைகளை கேட்டனர்.

கடந்த ஆறு வாரங்களாக சோசலிச சமத்துவக் கட்சி பரந்த முறையில் பிரச்சாரத்தை நடத்தியிருந்தது; 11 பொதுக் கூட்டங்களும், சாதாரண முறை விவாதங்களும் தீவின் பல பகுதிகளிலும் நடத்தப் பெற்றன. காலி, குருநாகல, பொலனறுவ, மாத்தறை ஆகிய இடங்களில் நடாத்தப்பட்ட கூட்டங்களும் இதில் அடங்கும்; அந்த இடங்களில் கட்சியின் செயலூக்கமான கிளைகள் இல்லை. செய்தித் பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் டயஸ் பரந்த முறையில் பேட்டி கொடுத்திருந்தார்; இதைத்தவிர அரசாங்கத்திற்கு சொந்தமான TV மற்றும் வானொலியில் ஒதுக்கப்பட்டிருந்த மூன்று அரை மணி நேரப் பேச்சுக்களையும் நிகழ்த்தினார். ஐக்கிய தேசிய கட்சி (UNP), சிறீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உயரும் வாழ்க்கைத்தர செலவினங்கள் பற்றிய இரண்டு மணி நேர Swarnavahina தொலைக்காட்சி விவாதத்திலும் அவர் பங்கு பெற்றார்.

கடந்த சனிக்கிழமைக் கூட்டத்திற்கு முன்னதாக, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறத்திலும் ஒருமுகப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான தேர்தல் அறிக்கைகளும், 25,000 துண்டுப் பிரசுரங்களும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. கட்சிக் குழுக்கள் Dematagoda, Jayawadanagama, Slave Island ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ததுடன், இரயில்வே நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் பிரச்சாரம் செய்திருந்தன.

கூட்டத்தை ஆரம்பித்து வைத்த தலைவர் கே.ரட்னாயக்க ஜனாதிபதி தேர்தலில் பங்கு பெறும் கட்சிகள் பற்றிய மதிப்பீடு ஒன்றை இப்பொழுது பெற முடியும் என்று கூறினார். ஆளும் SLFP வேட்பாளரான மகிந்தா ராஜபக்ச, UNP வேட்பாளரான ரனில் விக்கிரமசிங்க என்னும் இரு முக்கிய முதலாளித்துவ கட்சிகளின் வேட்பாளர்கள், சாதாரண மக்களுக்கு வெற்று உறுதி மொழிகளை தவிர வேறு எதையும் கொடுப்பதற்கில்லை என்று நிரூபித்துள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சி கட்சியும், அதன் வேட்பாளரான டயஸும்தான் வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாளர்களை தயார்படுத்தும் வகையில் செயல்படுத்தக் கூடிய சோசலிச, சர்வதேச முன்னோக்கை முன்வைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் தேர்தல் வந்துள்ளதாக விலானி பீரிஸ் கூறினார். LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மீது தலைமை நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று இவர் சுட்டிக் காட்டினார். LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படக்கூடாது என்று தீர்ப்பு தடைவிதித்ததோடு மட்டும் இல்லாமல், வாக்குச் சாவடிகள் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. "தமிழ் மக்களுக்கு எதிரான இந்த பாரபட்சத்தையும் அவர்களுடைய ஜனநாயக உரிமையை நசுக்குதலையும் நாங்கள் எதிர்க்கிறோம். தாங்கள் வாழும் பகுதிகளில் வாக்களிப்பதற்கான உரிமை தமிழர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது" என்று அவர் கூறினார்.

எத்தகைய சர்வதேசப் பின்னணியில் இந்த ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது என்பது பற்றி பீட்டர் சைமன் கோடிட்டுக் காட்டினார். ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் என்னும் முறையில் கொழும்பில் நடக்கும் சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தில் தான் பேசுவது முற்றிலும் இயல்பான செயல்தான் என்றும் நான்காம் அகிலத்தில் அனைத்துலகக் குழுவின் அனைத்து பிரிவுகளும் ஒவ்வொரு நாட்டிலும் இதே மூலோபாயத்திற்குத்தான் போராடி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். "இங்கு நடக்கும் தேர்தல் பிரச்சாரம் பூகோள முதலாளித்துவத்திற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களைத் திரட்டுவது என்னும் எமது பரந்த, ஒருங்கிணைந்த மூலோபாயத்தின் ஒரு பகுதிதான்" என்று அவர் கூறினார்.

ஓராண்டிற்கு முன்னர், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியை சேர்ந்த, ஜனாதிபதி வேட்பாளரான பில் வான் ஓகென் கொழும்பிலும் கண்டியிலும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்களால் மறுதாக்குதல் நடாத்தப்படவேண்டிய தேவையை பற்றி வலியுறுத்திப் பேசியதை சைமன் நினைவுகூர்ந்தார். அதே அச்சுத்தான் அக்டோபர் 2004ல் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கும், இந்த செப்டம்பர் மாதம் ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சிக்கும் உந்துதலைக் கொடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வர்க்க ஒற்றுமை பற்றிய தெளிவற்ற உணர்வைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான ஒன்று முதலாளித்துவ முறையை எதிர்த்துப் போரிடும் சர்வதேச இயக்கத்தைக் கட்டமைக்கத் தேவை என்று சைமன் கூறினார். வரலாற்று, சர்வதேச விஞ்ஞான பகுப்பாய்வுமுறையை அடிப்படையாக கொண்ட அரசியல் வேலைத்திட்டம் ஒன்று அதற்குத் தேவை என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக அத்தகைய முன்னோக்கிற்காக போராடும் ஒரு அரசியல் கட்சி, தலைமை ஆகியவையும் தேவை என்றார் அவர்.

உலக அரசியலில் அமெரிக்க இராணுவவாதம்தான் முக்கிய காரணியாக உள்ளது என்றும் ஈராக்கில் சட்ட விரோதமாக தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த புஷ் நிர்வாகம் கூறிய பொய்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். ஈராக்கில் நடைபெற்ற சமீபத்திய வாக்கெடுப்பு பற்றி அவர் கூறியதாவது: "இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் குடியேற்ற அதிகாரிகள் இந்தியாவிலும், இலங்கையிலும் 'ஜனநாயகம்' என்ற பெயரில் நடத்திய போலித் தேர்தல்கள் எந்த அளவிற்கு உண்மையற்றவையோ, அதைவிடவும் அமெரிக்க இராணுவம் ஈராக்கில் தன்னுடைய துப்பாக்கிமுனையை காட்டி நடத்திய தேர்தல்கள் செல்தகைமை அற்றவையாகும்."

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் வலியத்தாக்கும் போர் வலிமையின் அடையாளம் அல்ல என்றும் வலுவிழந்த தன்மையின் அடையாளம்தான் என்றும் சைமன் விளக்கினார். அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மை, புஷ் நிர்வாகத்தைச் சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடி ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை அவர் எடுத்துரைத்தார். உலக அரசியலில், ஈராக்கியப் போர் ஒரு திருப்புமுனை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பெப்ரவரி, மார்ச் 2003ல் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வரவிருந்த போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்; ஆனால் அவர்களுடைய கருத்துக்கள் எந்த நாட்டின் அரசியல் அமைப்புமுறையிலும் வெளிப்பாட்டை காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியத் துணைக் கண்டத்தை பற்றிக் குறிப்பிடுகையில், அனைத்துவித அரசியல் கட்சிகள், பிரிவுகள் ஆகியவையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரைப்பதை கைவிட்டுவிட்டன என்று பேச்சாளர் கூறினார். இலங்கையிலுள்ள பெரிய கட்சிகள் எதுவும் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்துள்ளதை எதிர்க்கவில்லை என்றார் அவர். "UNP, SLFP, JVP அனைத்துமே பயங்கரவாதத்தின் மீதான பூகோளப்போர் எனக் கூறுப்படும் மோசடியில் இருந்து தாங்கள் எந்த அளவிற்கு அமெரிக்க ஆதரவை தங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு, நிலைமையில் ஆதாயம் பெறலாம் என்றுதான் கணக்கிட்டுக் கொண்டு உள்ளன."

"முதலாளித்துவக் கட்சிகள் அல்லது அவர்களுக்கு மரபுவழியிலான தொழிலாளர் கட்சிகள் எனக் கூறப்படுபவை மத்தியில் அவர்களுக்கு வால்பிடிக்கும் அமைப்புக்கள் எவற்றின் மீதும் தொழிலாளர்கள் எத்தகைய நம்பிக்கையையும் வைக்கக் கூடாது. போரை நோக்கி சரிந்து செல்லும் நிலைமையை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஏகாதிபத்தியம், உலக மூலதனத்தின் சூறையாடும் நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தினாலான ஒரு பூகோள எதிர்த்தாக்குதலை அபிவிருத்தி செய்வதற்கு முயன்று வருகிறது." என்று அவர் குறிப்பிட்டார்.

சோசலிசத்திற்கான போராட்டம் தன்னெழுச்சியாக வளர்ந்துவிடாது என்பதை விளக்கிய சைமன் முதலாளித்துவம் மற்றும் அதன் பாதுகாவலர்களுக்கு எதிராக இடையறா அரசியல், தத்துவார்த்த போராட்டம் தேவை என்று கூறினார். அதைத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பல பிரிவுகளும், நாளாந்தம் உலக சோசலிச வலைத்தளத்தின் ஊடாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவற்றில் இணைந்து அதன் அரசியல் வேலைத்திட்டத்திற்காக போராட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துதோடு தனது உரையை அவர் முடித்துக் கொண்டார்.

இலங்கையின் நெருக்கடி

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தில் சர்வதேசியம் மையக்கருத்தாக இருப்பதை வலியுறுத்தி விஜே டயஸ் தன்னுடைய உரையை ஆரம்பித்தார். சோசலிச சமத்துவக் கட்சிக்கும் இடது என்று கூறிக்கொள்ளும் மற்ற வேட்பாளர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். சர்வதேசியம் இல்லாமல் அவர்கள் சோசலிசத்தைப் பற்றிப் பேசுவது வெறும் வெற்றுப்பேச்சுத்தான். சோசலிசம் சர்வதேசியமாகும்; உலகத் தொழிலாளர் வர்கத்தினால் மட்டுமே அது அடையப்படமுடியும்.

இலங்கையில் இருக்கும் அரசியல் நிலைமையை விவரித்து, டயஸ் கூறினார்: "இலங்கையின் ஆளும்வர்க்கத்தின் நெருக்கடி மிகத் தீவிரமாகிவிட்டது. இரண்டு முக்கிய ஆளும் கட்சிகளில் இருந்தும் மக்கள் விரோதப் போக்கைத்தான் கொண்டுள்ளனர். எனவேதான் உயர் தட்டுக்கள் அடக்குமுறையை கையாள முற்பட்டுள்ளன மற்றும் இத்தேர்தலே நெருக்கடிநிலைமையின் கீழ் நடத்தப்படுவது இதனை அடையாளப்படுத்துகிறது."

ஆளும் வர்க்கக் கட்சிகள் மரபுவழியில் தவறான உறுதிமொழிகளை தேர்தல் காலத்தில் கூறுவது வழக்கம் என்று சுட்டிக்காட்டிய டயஸ், இந்தத் தேர்தலின்பொழுது அவற்றால் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளின் நீண்ட பட்டியல் முன்னோடியில்லாத வகையில் உள்ளது என்றார். SLFP தலைமையிலான கூட்டணி அளித்துள்ள சமீபத்திய பட்ஜெட் அதன் வேட்பாளர் கொடுத்துள்ள உறுதிமொழிகளை சிறிதும் எடுத்துக் கூறவில்லை. ஏழைகளுக்கும், வேலையற்றோருக்கும் எந்த உதவியும் கொடுக்கப்பட்டிராத நிலையில், செல்வந்தர்களுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரி அகற்றப்படும் என்ற ராஜபக்சவின் உறுதிமொழி பட்ஜெட்டில் காப்பாற்றப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இருக்கும் ஆளும் உயர் அடுக்குகள் அனைத்தும் அவற்றின் சந்தை சீர்திருத்த செயற்பட்டியலுக்கு சாதாரண உழைக்கும் மக்களுடைய பெருகிய விரோத உணர்வில் இருந்து எழும் நெருக்கடிகளைத்தான் எதிர்கொண்டுள்ளன. "பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங், புஷ் நிர்வாகத்தில் இருந்து வார்த்தையைக் கடன் வாங்கி, இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும் "தோல்வியுற்ற நாடுகளாகிவிட்டன" என்று அறிவித்தார்.

இந்தியாவிலேயே கொதித்திக் கொண்டிருக்கும் நெருக்கடி பற்றி டயஸ் சுட்டிக்காட்டினார்; "கடந்த வாரம் வெளியுறவு மந்திரி நட்வர் சிங் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் கடந்த காலத்திலேயே வாழ முயன்றார் -- அதாவது அணிசேரா மற்றும் குளிர்யுத்தகாலத்தில், ஆனால் இந்திய ஆளும் வர்க்த்தின் உயரடுக்குகளில் சக்தி வாய்ந்த பிரிவுகள் அமெரிக்காவுடன் வலுவான தொடர்புகளை விரும்பின, எனவே சிங் அதற்குத் தடையாக இருந்தார்."

சர்வதேச முதலீட்டிற்கு வழிவகுக்கும் முறையில் பகுதி முழுவதும் இருக்கும் சாதாரண மக்களுடைய வாழ்க்கை நிலைமைகள் வெட்டிக்குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டுவந்த சலுகைகள், உதவித்தொகைகள் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. பொதுநலத் திட்டங்கள் குறைக்கப்படுகின்றன; தனியார் இலாபம்தான் கல்வி, சுகாரதாரம் போன்ற துறைகளில் கூட ஊடுருவுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைத்தரத்தைக் குறைப்பதற்கு அழுத்தம் தொடர்ந்து இருக்கிறது; இதற்கு துணையாக தடையற்ற வணிக உடன்படிக்கைகள் உள்ளன; அவைதான் சார்க் மூலம் பேரம் பேசப்படுகின்றன.

"தொழிலாள வர்க்கத்திற்கு செயற்படுத்தப்படக்கூடிய ஒரே முன்னோக்கு சர்வதேச சோசலிசம் ஒன்றுதான். தெற்கு ஆசியாவில் நீண்ட கால ட்ரொட்ஸ்கிச மரபு உள்ளது. இந்திய போல்ஷேவிக் லெனினிச கட்சி (BLPI) என்பது நான்காம் அகிலத்தின் பகுதியாக இருந்து, பிரிட்டிஷ் காலனித்துவம் மற்றும் அதன் உள்ளூர் அடிவருடிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்தியா, இலங்கை, பர்மா, மலேயா உள்ளிட்ட இப்பகுதி முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச முன்னோக்கை முன்வைத்தது. இதற்கு எதிரானவகையில், பிரிட்டிஷாரும் உள்ளூர் ஆளும் உயர் அடுக்குகளும் இப்பகுதியை செயற்கையான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என்று பிரித்து வகுப்புவாத, மத வகையிலான உணர்வுகள் நிறைந்த நாடுகளைத்தான் ஏற்படுத்தின.

"சோசலிச சமத்துவக் கட்சியானது தொழிலாளர்கள் அனைவரும் இன, வகுப்புவாத, மத, சாதி, பால் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபடவேண்டும் என்ற அதன் முன்னோக்கை முன்வைக்கிறது. தெற்கு ஆசிய சோசலிசக் குடியரசுகளின் கூட்டமைப்பு என்பதுதான் எமது முன்னோக்கு; இதில் ஸ்ரீலங்கா-ஈழ சோசலிசக் குடியரசும் அடங்கும்" என்று டயஸ் கூறினார். தேசிய முறையில் சோசலிசம் கட்டமைக்கப்பட முடியாது என்று கூறிய அவர் சோவியத் ஒன்றியத்தின் பொறிவை சுட்டிக்காட்டினார்; அது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற பிற்போக்குக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது என்றார்.

தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து ஸ்ரீலங்காவின் இராணுவப் படைகள் உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் திரும்பப் பெறவேண்டும் என்பது போரை முடிவிற்குக் கொண்டுவதற்கு முதற் படியாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோருவதாக டயஸ் விளக்கினார். அனைவருக்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுவுவதற்கான ஒரு புதிய அரசியல் அமைப்பை இயற்றுவதற்கு உண்மையான அரசியலமைப்பு சட்டசபை கூடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுவதாக அவர் கூறினார். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுயாதீனமாக சோசலிச அடிப்படையில் அணிதிரட்டப்பட்டு, ஐக்கியப்படுத்தப்படுவதன் மூலம் அத்தகைய வேலைத்திட்டம் போராடப்பட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இருந்த குறுகிய விவாதத்திற்கான நேரத்தில், இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன; யாழ்ப்பாணத்தில் அதன் அரசியல் கூட்டம் அடக்கப்பட்டதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி எவ்வாறு போரிடும்; இரண்டாவதாக, தெற்கு ஆசிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்ற முழக்கத்தின் பொருள் என்ன?

முதல் கேள்விக்கு விடையிறுக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்ப்பாணக் கூட்டம் இரத்து செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த குண்டர்கள் யாராக இருந்தாலும், அது அவர்களுடைய பலவீனத்தைத்தான் குறிக்கிறது என்றார். தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் கொழும்பு அரசாங்கம் மற்றும் அதன் நட்புக் கட்சிகள் இவற்றுடன் நீண்ட காலத்திற்கு முன்பே நம்பிக்கையை இழந்து விட்டனர்; இப்பொழுது LTTE இடமும் நம்பிக்கையை இழந்துவருகின்றனர். ஒரு மாற்றீடு தேவை என்ற முறையில் யாழ்ப்பாண தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கை விவாதித்து அதற்காகப் போராட வழிவகைகளைக் கண்டுகொள்வர்.

இரண்டாவது கேள்விக்கு கருத்து தெரிவிக்கையில், சைமன் ஐரோப்பிய சோசலிச குடியரசுகள் அல்லது தெற்கு ஆசிய சோசலிசக் குடியரசுகள் என, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடர்ச்சியான பிராந்திய திட்டங்களுக்காக போராடவில்லை -- மாறாக உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்கு கீழானதாக இவை முற்றிலும் அமைக்கப்படும். அந்தப் பின்னணியில் தெற்கு ஆசியாவில் இருக்கும் தொழிலாளர்கள் அப்பகுதியில் பொதுவான வரலாற்று வேர்களை கொண்டிருந்து, பிரிட்டஷ் பேரரசினால் தனித்தனியே தோற்றுவிக்கப்பட்ட செயற்கையான, வகுப்புவாத அடிப்படையிலான அரசுகளில் குடிமக்களாயினர். முதலாளித்துவத்திற்கு எதிரான உலகப் போராட்டத்தின் ஒரு அத்தியாவசிய அங்கமாக, இப்பகுதியில் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு இத்தகைய பிரிவுகளை கடந்து வருவது இன்றியமையாத தேவையாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் நிதிக்கான அழைப்பிற்கு கூட்டத்திற்கு வந்தவர்கள் ஆதரவுடன் விடையிறுத்து 11,300 ரூபாய்கள் நன்கொடை தந்தனர்; கூட்டம் முடிந்தும் சிலர் இன்னும் விவாதத்திற்காக நின்றிருந்தனர். இதனுடன் இணைந்த பேட்டிகளை அடுத்து பார்க்கவும்.

See Also:

இலங்கை தேர்தல்கள்: தமிழர்களை வாக்குப் போடாமல் தடுக்கச் செய்யும் சதி

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி தீவிர "இடதுகளுடன்" விவாதிக்கிறது

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Top of page