World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The JVP and the political crisis in Sri Lanka

ஜே.வி.பி யும் இலங்கையில் அரசியல் நெருக்கடியும்

By Nanda Wickramasinghe
18 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி தேர்தலில், உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை மேலும் நுளைத்துக்கொள்ள இந்த பிரச்சாரத்தைப் பயன்படுத்திய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஒரு பிரதான காரணியாக இருந்து வந்துள்ளது. இலங்கை ஆளும் தட்டு இந்த ஸ்திரமற்ற சிங்கள பேரினவாத மற்றும் மக்கள் வாத அமைப்பில் தங்கியிருப்பதானது, முதலாளித்துவ அரசியல் ஆழமான முட்டுச்சந்தை சென்றடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

ஜே.வி.பி செப்டம்பர் முற்பகுதியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) ஜனாதிபதி வேட்பாளரான பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுடன் ஒரு தேர்தல் உடன்படிக்கையை கைச்சாத்திட்டது. இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி கடந்த மூன்று மாதத்ததிற்கும் குறைவான காலத்திலேயே அதிலிருந்து வெளியேறியது. இராஜபக்ஷவை பொறுத்தளவில், இது ஒரு ஆச்சரியத்துக்குரிய அடிபணிவாக இருப்பதோடு அவரது சொந்தக் கட்சிக்குள் தற்போதுள்ள எதிர்க் குற்றச்சாட்டுக்களை செயலாற்றச் செய்யும். பிரதமர் ஜே.வி.பி யின் கோரிக்கைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார். ஜே.வி.பி, டிசம்பர் 26 சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை கூட்டாக நிர்வகிப்பதன் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நிராகரிக்குமாறு கோருவதோடு, தற்போதய யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருப்பி எழுதுமாறும் மற்றும் இராணுவத்தை பலப்படுத்துமாறும் கோருகிறது.

யுத்தத்திற்கு வழிவகுக்கும் உடன்படிக்கைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள இராஜபக்ஷ நெருப்புடன் விளையாடுகிறார். ஸ்ரீ.ல.சு.க யின் ஆதரவு எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்றால், கட்சியின் உள்மோதல் எந்தளவுக்கு ஆழமாகியுள்ளது என்றால், தனக்கு வேறு எந்த தேர்வும் கிடையாது என இராஜபக்ஷ தெளிவாக கணக்கிட்டுள்ளார். ஸ்ரீ.ல.சு.க வாக்குறுதிகள் சீரழிந்து ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் கடந்துள்ளதை அடுத்து, கட்சியின் நம்பகத் தன்மைக்கு மீண்டும் உயிர்கொடுக்க பிரதமருக்கு ஜே.வி.பி தேவைப்பட்டுள்ளது. மற்றும் ஸ்ரீ.ல.சு.க யைப் போலன்றி இன்னமும் குறிப்பிடத்தக்க செயற்திறம் வாய்ந்த அடித்தளம் கொண்டுள்ள ஜே.வி.பி யை தேர்தல் பிரச்சாரத்திற்கான ஒரு மூலப்பொருளாக அவர் விரும்புகிறார்.

ஜே.வி.பி தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்தை இரு கைகளாலும் பற்றிக்கொண்டனர். இராஜபக்ஷவின் பிரதான கூட்டங்களில் முன்னிலையில் தோன்றிய அவர்கள், பிரதமரை சிங்கள பெளத்த கொள்கையின் உருவமாக போற்றினர். ஜே.வி.பி பாராளுமன்றக் குழுவின் தலைவர் விமல் வீரவன்ச, இராஜபக்ஷவின் பிரச்சாரங்களில் துணைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஜே.வி.பி யின் பிரதான அரசியல் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேடைகளில் இராஜபக்ஷவிற்கு அருகில் அமர்ந்திருந்ததோடு ஆலோசனைகளையும் வழங்கினார். கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில், ஜே.வி.பி உறுப்பினர்கள் போஸ்டர்களை ஒட்டவும், பதாகைகளை கட்டவும், துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும், பிரச்சாரத்தை ஒலிபரப்பவும் மற்றும் ஏனைய அன்றாட பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் மனிதவளங்களை கொடுத்தனர்.

இராஜபக்ஷவின் பிரச்சாரத்தில் ஜே.வி.பி க்கு ஒரு முன்னணி பாத்திரம் வழங்கப்பட்டுள்ளதில் இருந்து ஒரு கேள்வி எழுகின்றது: ஏன் ஜே.வி.பி தனது சொந்த வேட்பாளரை நிறுத்தவில்லை? ஜே.வி.பி தலைமைத்துவம் இதற்கு பதிலளிக்க குறிப்பிடத்தக்க வகையில் தயங்குகிறது. அமரசிங்க உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருந்தால் ஜே.வி.பி "தயக்கத்துடனேனும்" ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கும் என குறிப்பிட்டார். "ஆயினும் திரு. இராஜபக்ஷ எங்களது பிரேரணைகளுக்கு உடன்பட்டதால் அத்தகைய தேவை ஏற்படவில்லை. நாங்கள் அதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்," என அவர் குறிப்பிட்டார்.

இந்தத் "தயக்கம்" ஏன்? காரணம் என்னவென்றால், உண்மையில் ஜே.வி.பி பலமான நிலைப்பாட்டில் இருந்து இராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மாறாக கணிசமான பலவீனங்கள் இருந்தன. 2004 ஏப்பிரலில் நடந்த பொதுத் தேர்தலை அடுத்து ஆளும் ஸ்ரீ.ல.சு.க கூட்டணியில் இணைந்துகொண்ட ஜே.வி.பி, முதற்தடவையாக நான்கு அமைச்சுப் பொறுப்புக்களுடன் அரசாங்கத்தில் அங்கம் வகித்தது. அது இப்போது தனது பல வாக்குறுதிகளை அனுசரித்துச் செல்ல கடமைப்பட்டுள்ளது.

விசேடமாக ஜே.வி.பி குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்டுள்ள சிங்களவர்கள் வாழும் தெற்கில் உள்ள சிறு விவசாயிகள், ஜே.வி.பி யின் மீது பெரும் எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்த போதிலும், அவை துரிதமாக கரைந்து போயின. கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளின்படி ஜே.வி.பி யின் விவசாய அமைச்சர் உர விலையை குறைக்கத் தவறியதுடன், நெல்லுக்கான அரசாங்கத்தின் "உத்தரவாதம்பெற்ற" விலையை கொடுப்பதற்கு தேவையான நிதியை வழங்கவும் தவறிவிட்டார். "பத்தாயிரம் குளங்களை" புதுப்பிப்பதற்காக அல்லது கட்டுவதற்காக பெரும் ஆரவாரத்துடனும் அதிக விளம்பரத்துடனும் ஆர்பிக்கப்பட்ட திட்டங்கள் முடிவுக்கு வந்திருந்தாலும், அவற்றில் பல "தொண்டர் சேவையின்" மூலமே மேற்கொள்ளப்பட்டதுடன், பல குளங்கள் மிகவும் சிறியவையாகும். அவை கழுவுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். இந்த நிகழ்வுகளில், இந்தத் திட்டம் "பத்தாயிரம் குளிக்கும் இடங்களை" அமைப்பதற்கு ஒத்தததாக இருந்தது.

மீன்படித் துறைக்கு பொறுப்பான ஜே.வி.பி அமைச்சரால் மீனவர்களும் விரைவாக ஏமாற்றப்பட்டார்கள். 2004 தேர்தல் விஞ்ஞாபனத்தில், புதிய படகுத் துறைமுகங்கள் மற்றும் தரிப்பிடங்களையும், மீன்பிடி நடவடிக்கைத் தொழிற்சாலைகள், உள்நாட்டு மீன் வளர்ப்பு, உள்ளூர் தோணி உற்பத்தி மற்றும் மலிவான கடன்களையும் தருவதாக ஜே.வி.பி வாக்குறுதியளித்தது. ஒரு சில நாள் வேலைக்கு மட்டும் பயன்படும் விதத்தில் பெரிய மற்றும் சிறிய தோணிகளுக்கான எண்ணெய் மானியத்தை தவிர, இவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதே சமயம் ஜே.வி.பி அமைச்சர் தோணிகள் மற்றும் வலைகள் மீதான அனுமதிச்சீட்டு என்ற பெயரில் மீனவர்கள் மீது புதிய அழுத்தங்களைத் திணிக்கின்றார்.

இளைஞர்கள் தமது எதிர்பார்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதை கண்டனர். முன்னைய ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க) தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்வதில் ஜே.வி.பி முன்னணியில் நின்றது. 2004 தேர்தலுக்கு முன்னதாக, ஜே.வி.பி--ஸ்ரீ.ல.சு.க முன்னணி பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி பட்டதாரிகளுக்கும் 100,000 தொழில்களை வழங்குவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் ஒரு முறை அரசாங்கத்தில் இருந்த போதும் வெறும் 32,000 நிரந்தர நியமனங்களையே அது வழங்கியது. ஏனையவர்கள் தற்காலிகமானவர்களாகவும், குறைந்த சம்பளம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முற்றிலும் மாறாக தம்மை போராளிகளாகவும் மற்றும் "சோசலிஸ்டுகளாகவும்" கூட காட்டிக்கொண்டதன் மூலம் கடந்த தசாப்தத்தில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஊடுருவியது. ஆயினும் ஜே.வி.பி இத்தகைய சந்தர்ப்பவாத அமைப்புக்களிலும் பார்க்க வேறுபட்டதல்ல என்பதை தொழிலாளர்கள் வேகமாகக் கற்றுக்கொண்டனர். மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கத்துடன் முன்சென்ற அமைச்சரவையில் ஜே.வி.பி உறுப்பினர்களும் பங்காளிகளாக இருந்ததோடு வேலை நிறுத்தங்களை எதிர்க் கட்சியின் சூழ்ச்சி எனவும் கூட கண்டனம் செய்தனர். ஜே.வி.பி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை தடுப்பதற்காகவே வெளிப்படையாக செயற்படுகின்றன. அன்மையில் சுகாதார ஊழியர்கள் தீவு பூராவும் மேற்கொண்ட வேலைத் நிறுத்தத்திலும் ஜே.வி.பி இதையே செய்தது.

30,000 உயிர்களை பலிகொண்ட டிசம்பர் 26 சுனாமிக்கு ஜே.வி.பி பிரதிபலித்த விதமானது உழைக்கும் மக்களை அது எவ்வாறு அலட்சியம் செய்கின்றது என்பதற்கான வெளிப்படையான உதாரணமாகும். கட்சி பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக கவலை வெளியிட்டதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சில தொண்டர் குழுக்களை அனுப்பிவைத்தத அதேவேளை, அதன் அமைச்சர்கள் தமது வாழ்வை பழைய நிலைக்குத் திருப்ப முயற்சித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவி என்ற பெயரில் மிகச் சிறிய சேவையையே செய்தனர். பேரழிவு நடந்து ஒரு வருடமாகின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு சிறிய அரசாங்க உதவியுடன் அல்லது அதுவும் இல்லாமல் தற்காலிக தங்குமிடங்களில் அல்லது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் வாழ்துகொண்டிருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை விடுத்து பிரிவினையான இனவாத முரண்பாடுகளை கிளறிவிடுவதற்காக, தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகிய அனைவரையும் பாதித்த இந்த பெரும் அவலத்தை ஜே.வி.பி இறுக்கமாகப் பற்றிக்கொண்டது. ஜே.வி.பி பிரச்சாரத்தின் குவிமையமாக இருந்தது என்னவெனில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை விநியோகிப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் ஒரு தற்காலிகமான கூட்டு நிர்வாக கட்டமைப்பை அமைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் பிரேரணையாகும். ஜே.வி.பி யை பொறுத்தளவில் இது விடுதலைப் புலிகளின் தனித் தமிழ் அரசு கோரிக்கையை பலப்படுத்த சேவை செய்யும் ஒரு மிகப்பெரும் சலுகையும் நாட்டைக் "காட்டிக்கொடுக்கும்" செயலுமாகும்.

பொதுக் கட்டமைப்பு என்றழைக்கப்படும் இந்த உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பி யின் தாக்குதல் முற்றிலும் சிடுமூஞ்சித்தனமானதாகும். அரசாங்கத்தில் நுளைந்து வெறும் எட்டு மாதங்களுக்குள் அதன் ஆதரவு குன்றிப்போன நிலையில், பொதுக் கட்டமைப்புக்கு எதிரான ஒரு உக்கிரமான பிரச்சாரம் நிச்சயமாக வெற்றியளிக்கும் என கணக்கிட்டுள்ளனர். அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை ஜே.வி.பி அச்சுறுத்தியதோடு அவர் ஜூன் மாதம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதை அடுத்து அது அரசாங்கத்தை விட்டு வெளியேறியது. ஆனால், தனது ஆதரவை மீண்டும் உயிர்பெறச்செய்யும் மற்றும் பொதுக் கட்டமைப்பு விரோத பிரச்சாரத்தின் மூலம் தமது அமைச்சர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதை மூடிமறைக்கச் செய்யும் ஜே.வி.பி யின் எதிர்பார்ப்புகள் தூக்கியெறியப்பட்டுள்ளன.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஜே.வி.பி, தீவு பூராவும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கும் வெகுஜன போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்த போதிலும் அந்த பிரச்சாரம் தோல்விகண்டது. பாராளுமன்றத்திற்கு வெளியில் ஜே.வி.பி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. ஆனால் ஏனைய இடங்களில் தொழிலாளர்களோ கிராமத்தவர்களோ இந்த பிரச்சாரத்தில் பங்குபற்றவில்லை. கொழும்பில், சுமார் 60 பேர் தேசிய வைத்தியசாலைக்கு வெளியில் நடந்த கூட்டத்தை பார்த்தனர்; துறைமுகத்தில் 200 பேர் பங்குபற்றியிருந்ததோடு இலங்கை மின்சார சபை தலைமையகத்திற்கு வெளியில் நடந்த மறியல் போராட்டத்தில் சுமார் 100 பேர் பங்குபற்றியிருந்தனர். பல கிராமங்களிலும் நிலைமை இதுவாகவே இருந்தது.

"தாயகம் முதலாவது! வேலைத்தலம் இரண்டாவது!! தாயகத்தை பாதுகாக்க பங்களிப்பு செய்யாதவர்கள் தேசத் துரோகிகள்" போன்ற ஜே.வி.பி யின் அச்சுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டன. சுனாமியானது மொழி, மதம், அல்லது இனத்துக்கும் அப்பால் அனைவரையும் தாக்கியது என்பது பலரும் அறிந்ததே. அனைவரும் ஒரே படகில் இருப்பதோடு அனைவருக்கும் உதவிகள் தேவைப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் பற்றியும் மற்றும் யுத்தம் பற்றியும் அவர்களது சிந்தனைகள் என்னவாக இருந்தாலும், வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணங்களை விநியோகிப்பதற்கான ஒரு தற்காலிகமான, மட்டுப்படுத்தப்பட்ட உடன்படிக்கை "தாய்நாட்டைப் பிரிக்கப் போவதில்லை."

ஜே.வி.பி தலைமைத்துவம் தனது பிரச்சாரத்தையும் ஒன்றுகூடுவதையும் முடிவுக்கு கொண்டுவர தள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்டில் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்தே விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் வாய்வீச்சுக்கள் சற்று ஈர்ப்பை ஏற்படுத்த தொடங்கின. விடுதலைப் புலிகளை குற்றஞ் சாட்டுவதற்கான ஒரு ஆதாரமும் இன்றி இந்தப் படுகொலையை பற்றிக்கொண்ட ஜே.வி.பி, இதற்கு வேறு யாராவது பொறுப்பாளியாக இருக்கக்கூடும் என ஆலோசனை தெரிவித்தவர்களையும் தாக்கியது. இந்தப் படுகொலையில் அரசியல் இலாபம் பெற்ற ஜே.வி.பி உட்பட பலவித சிங்களத் தீவிரவாத கும்பல்கள் இந்தக் குற்றத்துடன் சம்பந்தப்பட்டிருக்க கூடிய சாத்தியங்களும் உள்ளன.

எவ்வாறெனினும், ஜே.வி.பி தனது பழைய மக்கள்வாத வாய்வீச்சுக்களை நாடுவதற்கு பதிலாக, அரச இயந்திரம், வியாபாரிகள் மற்றும் பெளத்த உயர் பீடத்தினருக்கும் வழிதிறந்துவிட முயற்சிக்கின்றது. இராஜபக்ஷவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தறுவாய்க்கேற்றவையாகும். பிரதமர் ஜே.வி.பி யின் கோரிக்கைகளுக்கு உடன்பட்டது மட்டுமல்லாமல் தனது பிரச்சாரத்தில் அதற்கு ஒரு முன்னணி பாத்திரத்தையும் வழங்கியுள்ளார். கட்சியின் வாக்குகள் நாடகபாணியில் வீழ்ச்சிகண்டு வந்த நிலையில் அவர் ஒரு வேட்பாளராக நிறுத்தப்பட்டு தடுமாற்றத்துடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்துகொண்டு பெரும் வர்த்தகர்களின் கோரிக்கைகளை அமுல்படுத்துவதாக அவர்களிடம் ஜே.வி.பி திரைமறைவில் இரகசியமாக வாக்குறுதியளிக்கின்றது. ஜே.வி.பி யின் லங்கா பத்திரிகைக்கு அக்டோபர் 30 வழங்கிய பேட்டியில், ஜே.வி.பி யின் தலைவர் அமரசிங்க பின்வருமாறு பிரகடனம் செய்தார்: "சில ஊடகங்கள், நாட்டை மீண்டும் கற்காலத்திற்கு திருப்ப விரும்பும் தலைக்கனம் பிடித்த தீவிரவாதிகளின் கும்பல்கள் என எங்களை காட்ட முயற்சிக்கின்றன. இவை மாபெரும் பொய்களாகும்.... நாங்கள் தனியார்துறையை ஊக்குவிக்க முற்றிலும் உடன்படுகின்றோம், ஏனெனில் செல்வத்தை சேகரிப்பது சமுதாய நலன்களுக்கு அத்தியாவசியமானது என நாம் கருதுகிறோம்."

"1960 களில் எமது கட்சி தோன்றியபோது, எமக்கு சோவியத் மற்றும் சீன அமைப்பு முறைகளின் அடிப்படையிலான ஒரு மார்க்சிய பொருளாதார அமைப்புமுறை இருந்தது. ஆனால் இப்போது, ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய நாடுகளும் கூட சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த சந்தைப் பொருளாதாரத்தை பயிற்சிக்கு விட்டதன் மூலம், பெரும் கம்யூனிஸ்ட் நாடான சீனா, 2020ம் ஆண்டளவில் உலகில் மிகப்பெரும் பொருளாதார நாடாக தோன்றப் போகின்றது. இப்போது அது 9 வீத வளர்ச்சியை எட்டியுள்ளது."

இவை மிகவும் அம்பலத்திற்கு வந்துள்ள கருத்துக்களாகும். கடந்த காலத்தில் சிங்கள பேரினவாதம், மா ஓ வாதம் மற்றும் குவேராவாதத்தின் ஒரு கலவையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது ல.ச.ச.க 1964ல் ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.க அரசாங்கத்தில் நுளைந்துகொண்ட உடன், அதிருப்தியடைந்திருந்த கிராமப்புற சிங்கள இளைஞர் தட்டுக்கு அழைப்புவிடுக்கும் இயலுமையை பெற்றது. ல.ச.ச.க சோசலிச அனைத்துலகவாதத்தையும் சிங்கள, தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்ததன் மூலம், ஜே.வி.பி மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற தீவிர இனவாதத்தை அடிப்படையாக கொண்ட அமைப்புக்களுக்கு கதவை திறந்துவிட்டது.

இன்று, ஸ்ரீ.ல.சு.க உடன் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிப்பதோடு பெரும் வர்த்தகர்களின் கட்டளைகளை அமுல்படுத்துவதன் மூலம், ஜே.வி.பி தலைவர்கள் அன்று எதற்காக ல.ச.ச.க யை கண்டனம் செய்தார்களோ அதையே இன்று அவர்களே செய்கின்றார்கள். ஜே.வி.பி யினர் எப்போதும் சோசலிஸ்டுகளாக இருந்ததில்லை. இப்போது கூட்டுத்தாபன கும்பல்களின் பக்கம் சார்ந்துள்ள நிலையில், அவர்கள் தமது போலியான மார்க்சிச வாய்வீச்சுக்களின் கடைசி சுவடுகளையும் கூட கைவிட்டுவிட்டனர். ஜே.வி.பி தலைவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் வாஷிங்டனின் குற்றச்செயல்கள் சம்பந்தமாக மெளனம் காப்பதோடு, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வருகைதரும் அமெரிக்க அதிகாரிகளுடன் காதும் காதும் வைத்து கலந்துரையாடுகின்றனர்.

சீன அமைப்பு முறை பற்றிய ஜே.வி.பி யின் மேற்கோள்களையிட்டு தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் வறியவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இலங்கையை பொறுத்தளவில், அது தொழிலாள வர்க்கத்தை இரக்கமின்றி சுரண்டுவதற்கான ஒரு பொருளாதாரத்தை அமுல் செய்யும் ஒரு பொலிஸ் அரசை ஸ்தாபிதம் செய்வதைப் பார்க்கிலும் குறைந்ததாக இருக்க முடியாது. "சோசலிஸ்டுகளாக" இருத்தல் அல்லது "மக்களுக்கு உதவுவதற்கும்" அப்பால், சீனாவில் முதலாளித்துவ சந்தையின் தடையற்ற செயற்பாடு, விவசாயிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு பல கோடி மக்களை தொழிலில் இருந்து வெளித்தள்ளியுள்ள அதேவேளை, தோன்றிவரும் முதலாளித்துவ மற்றும் மத்தியதர வர்க்கத்தின் மெல்லிய தட்டுக்ளை செல்வந்தர்களாக்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் என்னவாக இருந்தாலும், ஜே.வி.பி ஒரு ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் ஒரு ஆழமான காரணியாக இருக்கும். இராஜபக்ஷ வெற்றிபெற்றால், அடுத்த அரசாங்கத்தில் ஒரு உயர்ந்த பாத்திரத்தை இட்டுநிரப்பக் கூடியவகையில், ஒரு அரசியல் கொடுப்பனவை ஜே.வி.பி எதிர்பார்க்கும். அவர்கள் பெரு வர்த்தகர்களுக்கு மேலும் மேலும் அடிபணியும் போது, அவர்களது முன்நாள் ஆதரவுத் தொகுதிகளில் மற்றும் அவர்களது சொந்த அமைப்புக்குள்ளும் கூட எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். இதற்கு கடந்த காலத்தில் போல் ஒரே ஒரு பிரதிபலிப்பே ஜே.வி.பி யினரிடம் உள்ளது. அது இனவாத நச்சுப் புகையை கிளறுவதும் மீண்டும் யுத்தத்தை துரிதப்படுத்துவதுமாகும்.

இராஜபக்ஷ தோல்வியடைந்தால், ஜே.வி.பி க்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் ஒரு தொடர்ச்சியான இனவாத ஆத்திரமூட்டல்களை முன்னெடுப்பதன் மூலம் இந்தப் பெறுபேறுகளை நிராகரிக்கக் கூடும். 1980களின் பிற்பகுதியில் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக ஜே.வி.பி முன்னெடுத்த மோசமான பிரச்சாரத்தை தொழிலாளர்கள் நினைவில்கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில் அது ஒழுங்கு செய்த "தேசப்பற்று" ஆர்ப்பாட்டங்களிலும் வேலை நிறுத்தங்களிலும் பங்குபற்ற மறுத்தவர்களையும் தொழிலாளர்களையும் மற்றும் அரசியல் எதிரிகளையும் டசின் கணக்கில் படுகொலை செய்வதற்காக ஆயுதக் குண்டர்களை ஜே.வி.பி பயன்படுத்தியது.

உண்மையில், உத்தியோகபூர்வ அரசியலில் ஜே.வி.பி ஒரு பிரதான பங்காளியாக உருவாகியிருப்பதானது இலங்கையில் முதலாளித்துவ ஆட்சி எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் ஆழத்தை சுட்டிக்காட்டுகிறது. ஒரு புதிய மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியிலான தீவிர நடவடிக்கைகளுக்கு தயார் செய்வதைத் தவிர வேறு தீர்வுகள் இந்த ஆளும் வர்க்கத்திடம் கிடையாது. தொழிலாள வர்க்கம் தனது சொந்த தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, தீவு பூராவும் உள்ள எல்லாப் பகுதியிலுமான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புவதை நோக்கித் திரும்ப வேண்டும். அது ஒரு சோசலிச மற்றும் அனைத்துலகவாத முன்நோக்கின் அடிப்படையில் முதலாளித்துவ அமைப்பை முழுமையாக சவால் செய்யும். சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர் விஜே டயஸும் போராடும் முன்நோக்கு இதுவேயாகும்.

See Also:

சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான் போர் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக ஒரு தெளிவான வேலைதிட்டத்தை முன்வைத்துள்ளது
கொழும்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சர்வதேசியத்தின்பால் கவரப்பட்டனர்

இலங்கைத் தேர்தல்: விஜே டயஸிற்கும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் வாக்களிக்கவும்

கொழும்பு கூட்டத்துடன் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: நவ சமசமாஜ கட்சியும் தேசிய சந்தர்ப்பவாதத்தின் முட்டுச் சந்தும்

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Top of page