World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Bush menaces Iran with threat of military attack

இராணுவத்தாக்குதலின் அச்சுறுத்தலுடன் புஷ் ஈரானை பயமுறுத்துகிறார்

By Peter Symonds
17 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சென்ற வெள்ளிக்கிழமையன்று ஆத்திரமூட்டுகின்ற வகையில் வெளியிட்டுள்ள கருத்துக்களான இராணுவத்தாக்குதல் மூலம் ஈரானை பயமுறுத்துவது அமெரிக்க நிர்வாகத்தின் சட்டவிரோத தன்மையை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. "இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து சாத்தியங்களும் எங்கள் முன் உள்ளது" என்று அவர் அறிவித்திருப்பது ஈரானுடன் அதன் அணு திட்டங்கள் தொடர்பாக ஒரு உடன்பாட்டை உருவாக்குவதற்கு ஐரோப்பா மேற்கொண்டுள்ள முயற்சிகளை நேரடியாக கீழறுக்கும் வகையில் அமைந்திருக்கிறது, மற்றும் வாஷிங்டன் தன்னிச்சையாக இராணுவ ஆக்கிரமிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் சமிக்கை காட்டுவதாக உள்ளது.

ஈரானின் அணு ஆலைகள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதலாக இருந்தாலும் அல்லது மொத்த ஆக்கிரமிப்பாக இருந்தாலும், ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பை போன்று, ஈரானுக்கெதிராக எந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதற்கு சர்வதேச சட்டத்தில் எவ்விதான நியாயப்படுத்தலுமில்லை. ஈரான் திரும்ப திரும்ப அதன் அணுத்திட்டங்கள் அமைதி நோக்கங்களுக்காகத்தான் என்று அறிவித்திருப்பதுடன் அதன் முக்கியமான இரகசிய வசதிகளை புதிதாக சோதனையிடுவது உட்பட சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தி வருகிறது.

உண்மையிலேயே, வாஷிங்டன்தான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT) மீறி செயல்பட்டு வருகிறதே தவிர தெஹ்ரான் அல்ல. அமெரிக்காவும், EU-3 என்றழைக்கப்படுகின்ற (பிரிட்டன், பிரான்சு மற்றும் ஜேர்மனி) ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஈரான் தனது யூரேனிய செறிவூட்டத்திட்டங்களை கைவிட்டுவிட வேண்டும் என்று கோரி வருகிறது-----ஈரான் அணு எரிபொருள் சுழற்சி முழுவதையும் சமாதான நோக்கங்களுக்காக மேம்படுத்த கொண்டுள்ள உரிமையை மீறுவதாகும். அதற்கு மாறாக அமெரிக்கா, ஏற்கனவே உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் குவியலோடு புதியதொரு தலைமுறை அணு ஆயுதங்களை அவற்றுடன் சேர்த்துக்கொண்டு வருகிறது, தற்போதுள்ள அணு வல்லரசுகள் படிப்படியாக தங்களது அணு ஆயுதங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை வெளிப்படையாக அசட்டை செய்வதாகும்.

புஷ் தனது கருத்துக்களை இஸ்ரேல் தொலைக்காட்சியில் தெரிவித்திருப்பது குறிப்பாக ஆத்திரமூட்டுவதாகும். மத்திய கிழக்கில் வாஷிங்டனின் குற்றங்களில் பிரதான பங்குதாரர் இஸ்ரேல் ஒன்றாகும், அரசியல் படுகொலைகளிலும், இராணுவ ஆத்திரமூட்டலிலும் நீண்ட வரலாறு படைத்ததாகும். 1981ல், இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈராக்கில் பிரான்சு கட்டிய ஓசிராக் அணு உலைமீது குண்டு வீசின மற்றும் நடப்பு ஷரோன் அரசாங்கம் ஈரானின் அணு ஆற்றல் நிலையங்கள் மீது அதே தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது. எந்த விதமான சான்றும் இல்லாமல் தெஹ்ரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று கூறி வருகின்ற வாஷிங்டன் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இஸ்ரேல் மறுத்துவிட்ட உண்மையை கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டிருப்பதுடன், இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்திருக்கும் இஸ்ரேல் அதன் அணு ஆற்றல் நிலையங்களை சோதனை இடுவதற்கு தடைவிதித்துள்ளது.

ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருமானால், அதை எவ்வகையிலும் நியாயப்படுத்தலாம். ஒரு அணு ஆயுதங்களைக் கொண்ட இஸ்ரேலையும் தன்னை ''தீய அச்சு என்று முத்திரை குத்திய விரோதப்போக்கு கொண்ட அமெரிக்காவையும் மற்றும் தனது இரண்டு பக்கத்து நாடுகளில் ஏராளமான இராணுவங்களை வைத்திருக்கின்ற அமெரிக்காவையும் அது எதிர்கொண்டிருக்கிறது. புஷ் தனது கருத்துகளில் வலியுறுத்தியிருப்பதைப்போல், ஈரானின் அணு ஆலைகள் மீது தாக்குதல் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் அறிவித்திருக்கின்றன. அவர் குறிப்பாக அறிவித்திருப்பதைப்போல், அமெரிக்காவும் இஸ்ரேலும் "ஈரானுக்கு ஒரு அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளும் எங்களது நோக்கத்தில் நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம்."

வாஷிங்டனின் போலியான இரட்டைவேடம் இஸ்ரேலோடு மட்டும் நிற்கவில்லை. அமெரிக்காவின் இதர இரண்டு நட்புநாடுகளான இந்தியாவும், பாக்கிஸ்தானும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததுடன் அணு ஆயுதங்களை தயாரித்து சோதனைகளும், அபிவிருத்திகளும் செய்திருக்கின்றன, அப்படியிருந்தும் அவற்றிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக அச்சுறுத்தவில்லை. இந்தியாவை பொறுத்தவரை, 1998ல் ஒரு அணு ஆயுதத்தை சோதித்த பின்னர் இந்தியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த மிச்சமிருந்த தடைகளையும் வாஷிங்டன் அண்மையில் நீக்கிவிட்டது.

தன்னுடைய மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை ஈரானுக்கு எதிராக பயன்படுத்துவதில் தான் வெற்றி பெற முடியும் என்று புஷ் கருதுவாரானால் அதற்கு காரணம் தனது போலி நியாயங்களை ஊடகங்களோ அல்லது ஜனநாயகக் கட்சியோ ஆட்சேபிக்காது என்று அவர் தெளிவாக தெரிந்து கொண்டதால்தான். அமெரிக்க-ஈரான் உறவுகளின் உண்மையான வரலாற்றை யாரும் வெளியிடமாட்டார்கள். குறிப்பிடத்தக்கவகையில், ஈரானின் அணு திட்டம் மூலஉருவாக்கம் அமைந்திருப்பது தெஹ்ரானினால் அல்ல ஆனால் வாஷிங்டனினாலாகும். அணு ஆராய்ச்சியில் அதிகமாக முதலீடு செய்ய அதன் ஏதேச்சாதிகார கூட்டாளியான Shah Mohammed Reza Pahlavi யை அது தீவிரமாக ஊக்குவித்தது.

புஷ் நிர்வாகம் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி வருவது என்னவென்றால், Natanz யூரேனிய செறிவூட்ட தொழிற்சாலை உட்பட, தெஹ்ரான் இரகசிய அணு ஆற்றல் நிலையங்களை கட்டியிருக்கிறது என்பதால் இது அவற்றின் தீய நோக்கங்களை எடுத்துக்காட்டுகின்ற சான்று என்று கூறி வருகிறது. ஆனால், ஈரான் தனது அணுத்திட்டங்களை அமெரிக்காவின் பார்வையிலிருந்து மறைப்பதற்கு எல்லாவிதமான காரணங்களையும் கொண்டிருக்கிறது. 1979ல் ஷாவின் வீழ்ச்சிக்கு பின்னர், எந்த அணு தொழில் நுட்பத்தையும் ஈரான் பெறுவதை தடுப்பதற்கு வாஷிங்டன் தனது வல்லமை முழுவதையும் எல்லா வகையிலும் பயன்படுத்திவருகிறது. Bushehr இல் தனது அணு மின்சார உலையை அமைப்பதில் அதை பூர்த்தி செய்வதற்கான ஈரானின் முயற்சிகளை அமெரிக்கா பல ஆண்டுகளாக வெற்றியுடன் தடுத்து நிறுத்தி விட்டது. ஜேர்மனிக்கு அழுத்தங்கள் கொடுத்து கட்டுமான ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சான்றுகள் அனைத்துமே ஈரானிடம் எந்த அணு ஆயுதங்கள் திட்டமும் இல்லை என்பதை காட்டுகின்றன மற்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அளவிற்கு அதிகமாகவே வளைந்து கொடுத்திருக்கிறது. சென்ற நவம்பரில், EU-3 இலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ், அதன் அணுத் திட்டங்கள் தொடர்பாகவும், பொருளாதார மற்றும் அரசியல் ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிற நேரத்தில் தானாக முன்வந்து அதன் யூரேனிய செறிவூட்ட நடவடிக்கைகளை முடக்கியது. பேச்சு வார்த்தைகள் காலவரையற்று முடக்கம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெஹ்ரான் வலியுறுத்தியதுடன் மற்றும் எந்த உடன்படிக்கையும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் அதன் உரிமைகளை ஏற்றுக்கொள்வதாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தியது.

குறிப்பாக மார்ச்சில் பேச்சு வார்த்தைகளில் ''ஒத்துழைக்க'' அமெரிக்கா சம்மதித்த பின்னர் EU-3 இல் அமெரிக்கா நல்லெண்ணத்தில் பேரம் செய்து கொள்ள விருப்பம் கொண்டதாக இல்லை என்ற சமிக்கைகள் வளர ஆரம்பித்த மத்தியில் தெஹ்ரானில் விரக்தி மனப்பான்மைகள் பெருகின. இந்த பயங்களை உறுதிப்படுத்துகின்ற வகையில், வாஷிங்டனின் ஒப்புதலோடு ஒரு வாரத்திற்கு சற்று முன்னர் இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முன்மொழிவு வந்தது. அந்தத் திட்டப்படி யூரேனிய செறிவூட்டல் உட்பட பல திட்டங்களை ஈரான் கை விடவேண்டும் மற்றும் அதன் அணு மின்சார உலைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்திருக்க வேண்டும். இந்த முன்மொழிவு தன்னை ''இழிவுபடுத்துவதாக'' உள்ளது என்று தெஹ்ரான் தள்ளுபடி செய்தது மற்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வை கீழ் இஸ்பகானில் தனது யூரேனியத்தை மாற்றியமைக்கும் திட்டத்தை மீண்டும் தொடங்கியது. இந்த அணு ஆற்றல் நிலையங்களில் யூரேனியம் ஹெக்சாபுளோரைடு வாயு தயாரிக்கப்படுகிறது----அதுதான் சர்வதேச அணுசக்தி அமைப்பின் முத்திரையின் கீழ் இருக்கும் நாட்டன்ஸ் யூரேனிய செறிவூட்டத் தொழிற்சாலைக்கு எரிபொருள் வழங்குவதாகும்..

புஷ் நிர்வாகம் ஈரானின் இந்த அறிவிப்பை கண்டித்தது மற்றும் இஸ்வாகன் தொழிற்சாலையை மூட வேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை சந்திக்க வேண்டும் என்று கோரியது. சென்ற வாரம் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி அமைப்பின் அவசரக் கூட்டமொன்றில் தெஹ்ரான் நடவடிக்கையை ஐ.நா. பாதுகாப்பு சபையின் முடிவிற்கு விடவேண்டும் என்று அமெரிக்கா தரப்பிலிருந்து பாரிய அழுத்தங்கள் வந்தது. ஆனால் வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்களை தங்கள் பக்கம் சாயச் செய்வதற்கு தவறிவிட்டன. அவர்கள் கவலையடைந்தது என்னவென்றால், ஈரானுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற எந்த நடவடிக்கையும் எதிர்காலத்தில் பிற நாடுகளில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த அனுமதி பெற்றத் திட்டங்களை அமெரிக்கா மூடுவதற்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்திவிடும்.

சர்வதேச அணுசக்தி அமைப்பின் இறுதி அறிக்கை ஐ.நா. பற்றியோ அல்லது தடைகள் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. ''சட்டபூர்வமாக கட்டுப்படுத்தாத அடிப்படையில் தானே விரும்பி மாற்றியமைப்பது உட்பட செறிவூட்டல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்'' என்று மட்டுமே கேட்டுக்கொண்டது. ''செப்டம்பர் 3 வாக்கில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த பாதுகாப்புக்கள் தொடர்பான உடன்படிக்கையை ஈரான் அமுல்படுத்தியிருப்பது தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை உருவாக்குமாறும்'' அது சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவரை கேட்டுக்கொண்டது என்றாலும் கடந்த காலத்தைப்போல், சர்வதேச அணுசக்தி அமைப்பு ஈரான் எந்த அணு ஆயுதத் திட்டத்தையும் மேற்கொண்டிருக்கிறது என்பதற்கான சான்று எதுவும் இல்லை என முடிவு செய்யலாம் என்று தோன்றுகிறது.

ஐரோப்பிய ஆட்சேபனைகள்

சர்வதேச அணுசக்தி அமைப்பு அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டவுடன், சென்ற வெள்ளியன்று தெரிவிக்கப்பட்ட புஷ்ஷின் கருத்துக்கள் வாஷிங்டன் சர்வதேச அணுசக்தி அமைப்பை மட்டுமல்ல, EU-3 உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளையும் முழுமையான புறக்கணிப்பு மனப்பான்மையோடு வாஷிங்டன் கருதுகிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

''படையை பயன்படுத்துவது எந்த ஜனாதிபதிக்கும் கடைசி வாய்ப்பாகவே இருக்கும்'' என்று புஷ் அறிவித்தார். இது ஒரு பொய். ஈராக்கை போல் மிகப் போதுமான அளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதைப்போல் மலைப்பூட்டச் செய்யும் இராணுவப் படைகளை பயன்படுத்துவது கடைசி சாத்தியக்கூறல்ல. ஆனால் முதலாவதாகும். இராணுவப் படையெடுப்பிற்கு வாஷிங்டன் திட்டங்களை தீட்டியது, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் படையை ஒழுங்குபடுத்தியது மற்றும் அதற்கு பின்னர் போருக்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு பொய் மூட்டைகளை கற்பனையாக உருவாக்கியது. அமெரிக்கா தீவிரமாக மிரட்டல்களை கொடுத்த பின்னரும், ஐ.நா. பாதுகாப்பு சபை ஒரு படையெடுப்பிற்கு ஒப்பபுதல் தராது என்பது தெளிவான பின்னர், சர்வதேசச் சட்டம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பகிரங்கமாக மீறுகின்ற வகையில் புஷ் நிர்வாகம் ஈராக் மீது ஒருதலைப்பட்சமாக தாக்குதலை கொடுத்தது.

புஷ் நிர்வாகம் ஈரான் தொடர்பாக வேறுபட்ட எந்த நடவடிக்கையையும் எடுக்கும் என்று நம்புவதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை. இதில் எந்த முக்கியமான கருத்தையும் எவரும் தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக புஷ் அந்த அச்சுறுத்தலை வலியுறுத்துகின்ற வகையில் ''மிக அண்மைக் காலத்தில் நமது நாட்டிற்கு பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்காக நாம் படையை பயன்படுத்தினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்'' என்று அறிவித்தார்.

ஈரானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்பது குறித்து வாஷிங்டன் கவனம்கொண்டிருப்பதற்கு காரணம், அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தன்னை சிறப்பாக தற்காத்துகொள்வதற்காக தெஹ்ரானுக்கு அது உதவும் என்பதாலாகும். ஈரானைவிட வாஷிங்டன்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு கொள்ளக்கூடும். காப்பறை தகர்க்கும் குண்டுகள் (bunker busters) என்றழைக்கப்படுகின்ற --புதிய தலைமுறை அணு ஆயுதங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது-- அவை ஈரான் தனது இரகசிய வசதிகளை தற்காத்துக்கொள்வதற்கு உருவாக்கிக் கொண்டுள்ள உறுதியான நிலத்தின் கீழான பாதுகாப்பு அறைகளையும் சிதைக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டவை.

புஷ்ஷின் கருத்துக்களிலிருந்து உடனடியாக பிரிட்டன் மற்றும் ஜேர்மன் அரசுகள் தம்மை விலகிக் கொண்டன. பிரிட்டனின் வெளியுறவுத்துறை பேச்சாளர் ஒருவர் வெளியிட்ட அறிவிப்பு ''`எங்களது நிலைப்பாடு தெளிவானது மற்றும் வெளியுறவு செயலாளர் மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார். ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதை நியாயப்படுத்துவதற்கு எந்த சூழ்நிலைகளும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. அது பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையின் ஓர் அங்கமாக இருக்கவில்லை.''

ஜேர்மன் அதிபர் ஹெரார்ட் ஷ்ரோடர் சென்ற வாரக் கடைசியில் நடைபெற்ற ஒரு தேர்தல் பேரணியில் கூறினார்: ''ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்ற அன்பு நண்பர்களே நாம் வலுவானதொரு உடன்பாட்டு பேச்சு நிலைபாட்டை உருவாக்குவோம். ஆனால் நாம் இராணுவ நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பை நமது மேஜையிலிருந்து தூக்கி எறிந்துவிடுவோம். அது பயன்படாது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.'' ஷ்ரோடரின் கருத்துக்களில் தெளிவாக தேர்தல் பிரச்சார அம்சம் ஒன்று இருந்தாலும், அமெரிக்காவின் ஒருதலைபட்சமான இராணுவ நடவடிக்கை மீண்டும் ஒருமுறை மத்திய கிழக்கில் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற ஆழமான கவலைகளை எதிரொலிப்பதாக பிரிட்டன் மற்றும் ஜேர்மனியின் அறிக்கைகள் அமைந்திருக்கின்றன.

ஐரோப்பாவின் கவலைகள் அல்லது ஈராக்கில் ஆழமாகிக்கொண்டு வரும் அமெரிக்க பேரழிவு ஆகியவை ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் நடவடிக்கைகள் எடுப்பதை ஷ்ரோடர் உட்பட யாராவது கட்டுப்படுத்துவர் என்று கற்பனை செய்துகொள்ளும் எவருக்கும் ஒரு கடுமையான அதிர்ச்சி காத்திருக்கிறது. தற்போது ஈராக்கில் அமெரிக்க இராணுவம் புதைசேற்றில் சிக்கிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை சில தந்திரோபாய பிரச்சனைகளை உருவாக்கினாலும், புஷ் நிர்வாகம் அரசியல் நெருக்கடிகள் தோன்றும்போது படுவேகமாக அதிரடி இராணுவ நடவடிக்கைகளில் நிதானம் இழந்த நிலையில் ஈடுபடும் என்பது ஏற்கனவே எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. 1930களிலும், 1940 களிலும் நடைபெற்ற நாஜி ஆட்சி காலத்திற்கு பின்னர், வரலாற்றில் இதற்கு முன்னர் நடைபெற்றிராத அளவிற்கு புஷ் நிர்வாகம் இராணுவ ஆக்கிரமிப்பிலும், இராஜதந்திர ரெளடித்தனத்திலும் அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறது.

ஐரோப்பிய கோரிக்கைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக, தனது ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டி நாடுகளுக்கு எதிராக அவற்றின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் எண்ணெய் வளமிக்க பிராந்தியங்களில் அமெரிக்காவின் தட்டிக்கேட்பாரற்ற மேலாதிக்கத்தை நிலைநிறுத்த தனது இராணுவ வலிமையை பயன்படுத்துவதுதான் வெள்ளை மாளிகை மூலோபாயத்தின் மைய உந்து சக்தியாகும். வாஷிங்டனை பொறுத்தவரை, ஈராக் மீது படையெடுத்தமை ஒரு பிரதான நோக்கத்தை அடைவதில் வெற்றிபெற்றுக்கொண்டு வருகிறது. அந்த நாட்டை மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரை- காலனித்துவ காவல் நாடாக ஆக்கிவிட்டது. தெஹ்ரானிலும் ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்புக்கள் உள்ளன மற்றும் அந்த நாடு ஒரு முக்கிய மூலோபாய சந்தியில் அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தெஹ்ரானுக்கு எதிராக அமெரிக்கா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்குவது தற்போது ஈரான் ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பானுடன் கொண்டிருக்கின்ற உறவுகளை சீர்குலைப்பதையும், இறுதியாக அந்த நாட்டை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும்தான் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

ஈரானிலும் மிக பரந்தரீதியாக பிற நாடுகளிலும், அமெரிக்காவின் நோக்கத்தை அடைவதற்கு புதிய இராணுவ அதிரடி நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்த முடியும் என்பது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதில் அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு பொதுக் கருத்து உருவாகியுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிற வகையில் ஈரானுக்கு எதிராக புஷ் கடைசியாக விடுத்துள்ள அச்சுறுத்தல்களுக்கு ஜனநாயகக் கட்சி அல்லது அமெரிக்க ஊடகங்கள் எந்தவிதமான விமர்சனக் கண்ணோட்டமும் இல்லாமல் ஏற்றுக்கொள்வதிலிருந்து தெளிவாக தெரிகிறது. அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் கடுமையான எதிர்ப்பு இல்லாதமை இராணுவ நடவடிக்கைகளை முன்னின்று தூண்டிவிடுபவர்களை நிராயுதபாணிகளாக ஆக்கினால்தான் போர் ஆபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற உண்மையை வலியுறுத்திக் கூறுவதாக உள்ளது. அத்தகைய ஒரு நடவடிக்கைக்கு அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியது அவசியமாகும். இதன்மூலம் தங்களது தனிச்சலுகைகள் மற்றும் செல்வக்குவிப்பை பாதுகாப்பதை தவிர வேறொன்றையும் நிறுத்தமுடியாத தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்ளும் தேசிய ஆளும் குழுக்கள் மேலாதிக்கம் செலுத்தும் இலாபநோக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

Top of page