World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

Lecture one: The Russian Revolution and the unresolved historical problems of the 20th century

முதலாம் விரிவுரை: ரஷ்ய புரட்சியும் 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

By David North
31 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

இது "ரஷ்ய புரட்சியும், 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன், அன் ஆர்பரில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில் ஆகஸ்ட் 14ல் இருந்து ஆகஸ்ட் 20, 2005 வரை நிகழ்த்திய உரைகளின் இரண்டாம் பகுதியாகும். இவ்விரிவுரை நான்கு பகுதிகளாக வெளியிடப்படும். முதல் பகுதி (தமிழில்) செப்டம்பர் 2ம், இரண்டாம் பகுதி செப்டம்பர் 5, 2005 அன்றும் வெளியிடப்பட்டது.

1989ம் ஆண்டின் கருத்தியல் விளைவுகள்

1930களில், ஸ்ராலினிச, பாசிச பிற்போக்குத்தனங்களுக்கு அரசியல் சரணாகதி பற்றி விளக்குகையில், பலாத்காரம் வெற்றிபெறுவதோடு மட்டும் இன்றி மக்களை நம்பவும் வைக்கிறது என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். ஸ்ராலினிச ஆட்சிகளின் திடீர் பொறிவானது, பல தீவிரப்போக்கினர் மற்றும் இடது சார்புடைய அறிவுஜீவிகளுக்கும் முற்றிலும் வியப்பை கொடுத்தோடு, பேர்லின் சுவர் தகர்ப்பை தொடர்ந்து முதலாளித்துவத்தின் தாக்குதல் மற்றும் ஏகாதிபத்தியத்தின் வெற்றிஎக்காளத்தின் முன்னே தத்துவார்த்த ரீதியாக, அரசியல் ரீதியாக மற்றும் ஓழுக்கநெறி ரீதியாகவும் நிராயுதபாணியாக்கி விட்டது. குட்டி முதலாளித்துவ இடது அரசியலின் எண்ணற்ற வண்ணங்களும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகாரத்துவ ஆட்சிகள் திடீரென மறைந்துவிட்டதில் முற்றிலும் திகைப்படைந்ததோடு, பெரும் மனச்சோர்விற்கும் ஆளாயின. அரசியல் ரீதியாக வெடிகுண்டின் பெரிய அதிர்ச்சிக்கு ஆளான குட்டி முதலாளித்துவ கல்வியாளர்கள், அதிகாரத்துவ ஆட்சிகளின் முடிவானது மார்க்சிசத்தின் தோல்வியை பிரதிபலித்தது என்றும் பறைசாற்றினர்.

கோழைத்தனம் ஒருபுறம் இருக்க, அவர்களுடைய கூற்றான மார்க்சிசம் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பினால் செல்வாக்கிழந்தது என்பதில் கணிசமான அளவிற்கு அறிவுஜீவி நேர்மையின்மையும் சம்பந்தப்பட்டிருந்தது. உதாரணமாக, பேராசிரியர் Bryan Turner எழுதினார்: "மார்க்சிச தத்துவத்தின் மதிப்பு கடுமையாக சவாலுக்கு ஆளாகியுள்ளது; ஆகக் குறைந்த பட்சம் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிசம் மற்றும் சோவியத் ஒன்றியம் முழுமையாக பொறிந்ததை மார்க்சிசம் எதிர்பார்க்காதது பெரும் தோல்வியாகும்." [14] இத்தகைய அறிவிப்புக்கள் வெறும் அறியாமையில் தோன்றியவை என மட்டும் கூறிவிடமுடியாது. இதையும், இதேபோன்ற அறிக்கைகளையும் எழுதிய இடது கல்வியாளர்கள், ஸ்ராலினிச ஆட்சியின் தன்மை பற்றிய ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வை முற்றிலும் அறிந்திராதவர்கள் அல்ல, ட்ரொட்ஸ்கியின் ஆய்வு அதிகாரத்துவத்தின் கொள்கைகள் இறுதியில் சோவியத்தின் பொறிவிற்கே வழிவகுக்கும் எனக் கூறியிருந்தது.

பேரழிவுகர ஸ்ராலினிச வளைவரைபாதையை, தான் முன்கூட்டியே பார்த்த ஏராளமான ஆவணங்களை அனைத்துலகக் குழுவால் முன்வைக்கமுடியும். சோவியத்தின் முடிவிற்கு முன்னர், குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர் இத்தகைய எச்சரிக்கைகளை குறுங்குழுவாத பைத்தியக்காரத்தனத்திற்கும் பார்க்க ஒன்றும் குறைந்ததில்லை என்று கருதினர். சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்கு பின்னர், "மெய்யாய் நிலவிய சோசலிசத்தின்" தோல்விக்கு, தங்களுடைய அரசியல் பார்வையை விமர்சன ரீதியாய் ஆய்வு செய்வதைவிட, மார்க்சிசத்தை குற்றம்சாட்டுதல் அவர்களுக்கு எளிதாயிற்று. சீற்றத்துடனும், ஏமாற்றத்துடனும், இப்பொழுது அவர்கள் சோசலிசத்திற்கான தங்களின் அரசியல், அறிவார்ந்த மற்றும் உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பை ஒரு மோசமான முதலீடு என்றும் அதை ஆதரித்ததற்கு வருந்துவதாகவும் கூறுகின்றனர். இவர்களுடைய பார்வையானது, நீண்ட நாள் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், பல தசாப்தங்கள் ஸ்ராலினிசத்திற்கு வக்காலத்து வாங்கிவந்த வரலாற்றாளர் எரிக் ஹொப்ஸ்பாம் ஆல் சுருக்கிக் கூறப்படுகிறது. தன்னுடைய சுயசரிதையில் அவர் எழுதுவதாவது:

"கம்யூனிசம் இப்பொழுது மடிந்துவிட்டது: சோவியத் ஒன்றியமும் நம்மை ஊக்குவித்த அக்டோபர் புரட்சியின் குழந்தைகளாக அந்த மாதிரியில் கட்டியமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான அரசுகளும், சமுதாயங்களும், தமக்குப் பின்னே சடரீதியான மற்றும் ஒழுக்கநெறி அழிபாடுகளின் காட்சியை விட்டுவிட்டு, முற்றிலும் பொறிந்துவிட்டன; ஆரம்பத்தில் இருந்தே அரசியல் நிறுவனம் தோல்வியில்தான் கட்டமைக்கப்பட்டிருந்தது என்பது ஐயத்திற்கிடமில்லாததாக கட்டாயமாக இருந்தது."[15]

அக்டோபர் புரட்சி ஒரு தோல்வியில் அழிய நேரும் துணிகரச்செயல் என்னும் ஹொப்ஸ்பாமின் கூற்று சோசலிசத்தின் வெட்கப்படாத வலதுசாரி எதிரிகளின் வாதங்களுக்கு ஒரு சரணாகதி ஆகும். சோசலிசம் ஒரு பைத்தியக்காரத்தனமான கற்பனைத் தோற்றம் என்பதற்கு சோவியத்தின் பொறிவு நிராகரித்து மறுக்க முடியாத நிரூபணம் என்று முதலாளித்துவப் பிற்போக்கு கருத்தியலாளர் வலியுறுத்துகின்றனர்.

நாசமாக்கப்பட்ட நூற்றாண்டு மீதான நியாயவிசாரணை பிரதிபலிப்புக்கள் என்ற தன்னுடைய புத்தகத்தில் றொபர்ட் கான்க்வெஸ்ட், "மண்ணில் கற்பனை உலகு கட்டியமைக்கப்பட முடியும் என்ற பழங்காலக் கருத்தையும்", "அனைத்து மனிதப்பிரச்சினைகளுக்கும் இயேசுவின் நல்லாயிரமாண்டு ஆட்சியின் இறுதிநாள் தீர்வு வழங்குதலையும்" கண்டனம் செய்கிறார்.[16] போலந்து-அமெரிக்க வரலாற்றாளரான Andrzej Walicki, "இயல்பாகவே இத்தோற்றம் ஒருபோதும் அடையப்படமுடியாது என்பதை உலகம் முழுவதிலுமான கம்யூனிசத்தின் கதி குறிப்பாய் தெரிவிக்கிறது... எனவே அதைச் செயல்படுத்துவதற்கான மகத்தான ஆற்றல் முழுவதும் வீணாய்த்தான் போகும்."[17] அண்மையில் காலமான அமெரிக்க வரலாற்றாளர் மார்ட்டின் மாலியா இக்கருத்தைத்தான் தன்னுடைய 1994ம் ஆண்டு வெளியிட்ட சோவியத் துன்பியல் (The Soviet Tragedy) என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறினார். அவர் குறிப்பிட்டதாவது: ஒருங்கிணைக்கப்பட்ட சோசலிசத்தின் தோல்வி, அது முதலில் தவறான இடமான ரஷ்யாவில் சோதிக்கப்பட்டதை மூலமாயக் கொண்டு தோன்றவில்லை, மாறாக சோசலிச கருத்தே அடிப்படையில் தவறான கருத்தாகும். முதலாளித்துவத்தை முற்றிலும் அகற்றிய சோசலிசம் என்பது இயல்பாக நடைமுறைப்படுத்த முடியாதது என்பதே இத்தோல்விக்கான காரணமாகும்." [18]

சோசலிசம் ஏன் "உள்ளார்ந்த வகையில் இயலாததாகும்" என்பதன் ஒரு விளக்கம் அமெரிக்க மார்க்சிய-விரோத குளிர்யுத்தகால வரலாற்றாளர்களின் தலையாய மனிதரும், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இருப்பவருமான ரிச்சார்ட் பைப்சினால் எழுதப்பட்ட புத்தகத்தில் காணக்கிடைக்கிறது. சொத்தும் சுதந்திரமும் (Property and Freedom) என்ற தலைப்புடைய புத்தகத்தில் தன்னுடைய சொத்து பற்றிய தத்துவத்திற்கு ஆழ்ந்த விலங்கியல் அடிப்படையை கொடுத்துள்ளார்:

"சட்டம் இயற்றல் மற்றும் உபதேசவகை கையாளல்கள் ஊடுருவமுடியாத, மாறாத மனித இயல்புகளில் ஒன்று, தேடிப்பெறுவது ஆகும்... இது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கிறது; விலங்குகள், குழந்தைகள், பெரியவர்கள் என்று நாகரிகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இருப்பவர்களிடம் இது காணப்படுகிறது; இக்காரணத்தினால் இது ஒழுக்கநெறிக்குக் கட்டுப்பட்டதில்லை. மிக அடிப்படையான அளவில், தப்பிப் பிழைப்பதற்கான இயல்பூக்கத்தின் வெளிப்பாடாக இது உள்ளது. ஆனால் இதற்கும் அப்பால், மனித ஆளுமையில் அடிப்படைக் குண நலனாக இது உள்ளது; இதற்கான சாதனைகளும், ஈட்டல்களும் சுய திருப்திக்கான வழிவகையாக இருக்கின்றன. தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ளுவது என்ற அளவு, சுதந்திரத்தின் சாரமாக இருக்கிறது: சொத்துடைமையும் அதில் இருந்து பிறக்கும் சமத்துவமின்மையும் பலாத்காரமாக அகற்றப்படும்பொழுது சுதந்திரம் தழைத்தோங்க முடியாது."[19]

பைப்சினுடைய சொத்து பற்றிய தத்துவத்திற்குற்கு அதற்குக் கொடுக்க வேண்டிய கவனத்தைக் கொடுத்து ஆராய்வதற்கு இது இடம் இல்லை. சொத்தின் வடிவங்கள் மற்றும் அவற்றின் சமூக, சட்ட கருத்துருவாக்கங்கள் வரலாற்றளவில் வளர்ச்சியுற்றவை என்பதைச் சுட்டிக்காட்ட என்னை அனுமதியுங்கள். சொத்து என்பது பிரத்தியேகமான முறையில் தனிநபர் உடைமை என்று அடையாளம் காட்டப்பட்ட நிலை பதினேழாம் நூற்றாண்டில் இருந்துதான் தோன்றியது. முந்தைய வரலாற்றுக் கால கட்டங்களில் சொத்தானது பரந்த அளவில் இன்னும் விரிந்த, பொது உபயோக முறையில்கூட வரையறுக்கப்பட்டிருந்தது. பொருளாதார வாழ்வில் சந்தை உறவுகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் வந்த சொத்து பற்றிய வரையறையைத்தான் பைப்ஸ் பயன்படுத்துகிறார். அந்தக்கட்டத்தில் சொத்து என்பது ஒரு தனி மனிதன் "மற்றவர்களை ஒரு பொருளின் பயன்பாடு, நுகர்வு இவற்றிடம் இருந்து ஒதுக்குவதற்கு" உரிமை பெற்றவர் என்ற கருத்தில் முக்கியமாக அறியப்பட்டிருந்தது. [20]

இத்தகைய சொத்து வடிவமைப்பு, -சொல்லப்போனால் மற்ற விலங்கினங்களிடையே ஏறத்தாழ மிகக் குறைந்த அளவில்தான் இருந்தது என்று கூடக் கூறவியலும்!-- இதன் முக்கிய பங்கு மனிதர்களிடையே ஒப்புமையில் அண்மைக் காலமாகத்தான் இருந்து வருவது எனலாம். எப்படி இருந்த போதிலும், உங்களுடைய I-pods, இல்லங்கள், கார்கள் மற்ற மதிப்புமிக்க தனிச் சொத்துக்கள் சோசலிசத்தின் கீழ் என்ன ஆகும் என்ற கவலை உடையவர்களுக்கு, எத்தகைய சொத்துவகையை நிறுவுவதற்கு சோசலிசம் விழைகிறது என்றால், உற்பத்திசக்திகள் தனியார் உடைமையாக இருப்பது நீக்கப்படவேண்டும் என்பதைத்தான் சோசலிசம் கூறுகிறது என்பதை உத்தரவாதமாகக் கூற அனுமதியுங்கள்.

பேராசிரியர் பைப்சின் சமீபத்திய, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னர் எழுதப்பட்ட படைப்புக்களில் ஒரு நல்லவிதமான தன்மை என்னவென்றால், சோவியத் வரலாறு பற்றி அவர் முன்னர் எழுதியிருந்த சுவையற்ற ஏராளமான நூல்களுக்கும், அவருடைய வலதுசாரி அரசியல் செயற்பட்டியலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு முற்றிலும் வெளிப்படையாக வந்துள்ளது. பைப்சைப் பொறுத்தவரையில் அக்டோபர் புரட்சியும் சோவியத் ஒன்றியம் தோன்றியதும் சொத்து மற்றும் தனியார் உடைமை என்ற சிறப்பு சலுகைகளின்மீது தாக்குதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சமூக சமத்துவத்திற்காக உலகம் முழுவதுமான மற்றும் வெகுஜனங்கள் நடத்திய புனிதப் போராட்டத்தின் சிகரமாக, அறிவொளி காலத்தின் சிந்தனைகளுடைய பலாபலனாகவும் அது இருந்தது. ஆனால் வரலாற்றின் அந்த அத்தியாயமும் இப்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது.

"சொத்துடமை உரிமைகள், சமூக சமத்துவம், அனைத்தையும் தழுவி நிற்கும் பொருளாதார பாதுகாப்பு என்ற அடையப்பட முடியாத இலக்கிற்கு தியாகம் செய்யப்படுவதற்குப் பதிலாக, தக்க அளவுகோலில் அவற்றின் உரிய இடத்திற்கு மீட்கப்படல் வேண்டும்:" என்று பைப்ஸ் பிரகடனப்படுத்துகிறார். பைப்ஸ் கோரும் சொத்துரிமைகளை மீட்டல் என்பது எத்தகைய விளைவைக் கொடுக்கும்? "இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சியுற்ற நலன்புரி அரசு என்ற கருத்து முழுவதும், தனிநபரின் சுதந்திரம் என்பதுடன் இயைந்து நிற்காது... அதன் பலவகையான 'உரிமையுடைப் பெயர்கள்' மற்றும் போலியான 'உரிமைகள்' ஆகியவற்றுடன் நலன்புரி கருத்தை அகற்றுதல், இருபதாம் நூற்றாண்டிற்கு முன் பொறுப்பேற்றிருந்த, குடும்பத்திற்கு அல்லது தனியார் அறக்கட்டளைக்கு சமூக உதவி என்பதற்கான பொறுப்புக்களுக்கு திரும்புதல் ஆகியன இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பெரிதும் உதவும்."[21]

ஆளும் செல்வந்த தட்டுக்குகளுக்கு, சோவியத் ஒன்றியத்தின் முடிவு உலகம் முழுவதும் மீண்டும் முதலாளித்துவ பழைய ஆட்சியின் மீட்பு, சொத்துரிமை மீது அனைத்துத் தடைகளும் அகற்றப்பட்ட சமூக ஒழுங்கு மீண்டும் நிறுவப்படல், தொழிலாளரை சுரண்டும் உரிமை, தனியார் சொத்துக் குவிப்பின்மீதான தடைகள் நீக்கப்படுதல் என்பவையாக தெரிகிறது. சோவியத் ஒன்றியம் பொறிந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அதைத் தொடர்ந்து சமூக சமத்துவமின்மையில் மகத்தான வளர்ச்சியும், உலக மக்கட்தொகையில், செல்வக்குவிப்பு மேல்தட்டு 1 சதவிகிதத்தில் (அதிலும் உயர் 10 சதவிகிதம் செல்வக் கொழிப்பினரிடையே இருத்தல்) தோன்றியுள்ளது என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. மார்க்சிசம் மற்றும் சோசலிசத்தின் மீது உலகெங்கிலும் தாக்குதல் நடத்தப்படுவது, சாரம்சத்தில், இந்தப் பிற்போக்கான மற்றும் வரலாற்றளவில் பின்தங்கிய சமூக மாற்றுப்போக்கின் சிந்தனையோட்ட பிரதிபலிப்பாகத்தான் உள்ளது.

ஆனால் இந்த மாற்றுப்போக்கு அதிவலதுசாரிகளின் மார்க்சிச விரோத வசைமாரிகளில் மட்டும் வெளிப்பாட்டைக் காணவில்லை. முதலாளித்துவ சமுதாயத்தின் அறிவுஜீவித அழுகிக்குலைதலானது அதிவலதுகளின் கருத்தியல் தாக்குதல்களுக்கு மிச்சமீத குட்டிமுதலாளித்துவ இடதுகளின் மனம்தளர்ந்த சரணாகதியில் விளக்கிக் காட்டப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் புத்தகக் கடைகளில் முன்னாள் தீவிரப்போக்கினரால் எழுதப்பட்டு நிரம்பிவழியும் நூல்கள், தங்கள் நம்பிக்கைகள் கனவுகள் அனைத்தும் மூழ்கிப்போன கப்பலாயின எனப் பறைசாற்றுகின்றன. தங்களுடைய மனத்தளர்ச்சி, ஊக்கமின்மை, திராணியின்மை இவற்றை கேட்போருக்கெல்லாம் கூறுவதில் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒருவகை இழி திருப்தி கொள்ளும் தன்மையைத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் தங்கள் தோல்விக்கு எந்த அளவிற்குத் தாங்கள் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தாங்களும் மார்க்சிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறுகின்றனர்; மார்க்சிசம் அவர்களுக்கு ஒரு சோசலிசப் புரட்சியை உறுதியளித்ததாகவும் அதனால் அதைக் கொடுக்கமுடியவல்லை என்றும் குமுறுகின்றனர்.

இவர்களுடைய பாவமன்னிப்பு பரிதாபத்திற்கு உரியவை மட்டுமல்ல, சற்று வேடிக்கையாகவும் உள்ளது. தங்களுடைய தனிப் பேரழிவுகளை ஒரு வகையிலான உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக வெளிப்படுத்தும் முயற்சியைக் கொண்டுள்ள இவர்கள் தங்களை இன்னும் நகைப்பிற்கிடமாக்கும் வகையில்தான் முடிவுறச்செய்கின்றனர். உதாரணமாக பேராசிரியர் ரேமண்ட் அரொன்சன் மார்க்சிசத்திற்கு பின்னர் (After Marxism) என்ற தன்னுடைய நூலை பின்வரும் மறக்கமுடியாத சொற்களில் ஆரம்பிக்கின்றார்:

"மார்க்சிசம் முடிந்துவிட்டது; நாம் இனி நம்முடைய கால்களில்தான் நிற்க வேண்டும். அண்மைக்காலம் வரை, இடதில் இருந்த பலருக்கும் தங்கள் காலில் நிற்பது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத பேரிடர் -- ஆதரவு முழுவதும் அற்ற, அனாதையின் நிலை அது.... மார்க்சிசத்தின் கடைசித் தலைமுறை என்ற வகையில், நாங்கள் வரலாற்றினால், விரும்பத்தக்கதல்லாத பணியான மார்க்சிசத்தை புதைத்தலை செய்யும்படி ஒதுக்கப்பட்டுள்ளோம்." [22]

இவ்வித இறுதிச்சடங்கிற்குப் பொறுப்பேற்பவர்களுக்குப் பொதுப் பல்லவி சோவியத் ஒன்றியத்தின் சரிவு அவர்களுடைய அரசியல் சமநிலையைச் சிதைத்துவிட்டது என்பது மட்டும் இல்லாமல் உணர்வு வகைச் சமநிலையையும் சிதைத்துள்ளது என்பதாகும். கிரெம்ளின் அதிகாரத்துவத்தைப் பற்றி அவர்களுடைய அரசியல் விமர்சனங்கள் எப்படி இருந்தபோதிலும், அவர்கள் அதன் கொள்கைகள் சோவியத்தின் அழிவிற்கு இட்டுச் சென்றுவிடும் என்று ஒருபோதும் கற்பனைசெய்ததில்லை, அதாவது அவர்கள் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வான ஸ்ராலினிசம் எதிர்ப்புரட்சிகரமானது என்பதை ஏற்றுக்கொண்டதில்லை. இவ்விதத்தில் அரன்சன் குற்றத்தைஒப்புக் கொள்ளுவதாவது:

"சோவியத் ஒன்றியத்தின் அசைக்கமுடியா நிலை மற்றும் கணிசமான எடை எங்களுடைய கூட்டு மன வெளியில் மிகப் பெரிய இடத்தைக் கொண்டிருந்தது; ஒரு வெற்றிகரமான சோசலிசம் இன்னும்கூட வெளிப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்தது. இதன் பின்னணியில், சிலருக்கு, மார்க்சிசத்தின் மற்ற கூறுகள் தொடர்ந்து செல்தகைமையானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்பட, மற்ற மாற்றீடுகள் சிந்திக்கப்பட முடிந்தது, விவாதிக்கப்பட முடிந்தது; ஆனால் இப்பொழுது அவ்வாறில்லை. கம்யூனிசத்தின் மரணத்திலிருந்து அதன் தத்துவார்த்த சாத்தியத்தை மீட்பதற்கு நாம் முயற்சிக்கலாம், கார்ல் மார்க்சின் பெயரில் அடையாளம் காணப்பட்டிருந்த, உலக வரலாற்றுப் போராட்ட செயல்திட்டம் முற்றிலுமாக முடிந்துவிட்டது போல்தான் தோன்றுகிறது. தற்கால பின்நவீனத்துவவாதிகள் அறிந்துள்ளபடி, மார்க்சிசத்துடன் சேர்ந்து முழு உலகக் கண்ணோட்டமும் சரிந்து விழுந்துவிட்டது. மார்க்சிஸ்டுகளும் சோசலிஸ்ட்டுகளும் என்று மட்டும் இல்லாமல், மற்ற தீவிரப் போக்கினரும், தங்களை முற்போக்கினர், தாராளவாதிகள் என்று கருதியவர்கள் அனைவருமே செல்லும் திசையை இழந்துவிட்டு நிற்கின்றனர்." [23]

போருக்குப் பிந்தைய தீவிரப்போக்கினரின் அரசியலில் நிறைந்திருந்த கறைபடிந்த சிறிய இரகசியத்தை அரன்சன் தெரியாமலேயே வெளிப்படுத்தியுள்ளார்: அதாவது ஸ்ராலிஈனிச அதிகாரத்துவத்தின் மீது, ஏனைய தொழிலாளர் அதிகாரத்துவங்களின் மீதும் என்பதும் சேர்க்கப்பட்ட வேண்டும், அது தங்கியிருக்கும் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்த தங்கியிருத்தலானது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் வர்க்க மற்றும் அரசியல் உறவுகளில் ஒரு ஸ்தூலமான சமூக அடிப்படையைக் கொண்டிருந்தது. தங்களுடைய சொந்த வர்க்க சூழலின் அரசியல், சமூக மனக்குறைகளைக் களைவதற்கு முயற்சி எடுக்கையில், குட்டி முதலாளித்துவப் பிரிவுகளில் முக்கியமான பகுதிகள் சக்திவாய்ந்த தொழிலாளர் அதிகாரத்துவங்களினால் அதிகாரம் செலுத்தப்படும் வளங்களில் தங்கியிருந்தன. இந்த அதிகாரத்துவங்களுடன் ஒரு பகுதியாக அல்லது அதோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு, அதிருப்தி அடைந்திருந்த மத்தியதரவர்க்க தீவிரப்போக்கினர் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து தங்கள் கைகளை உயர்த்தி சில சலுகைகளைப் பெற முடிந்தது. சோவியத் ஆட்சியின் பொறிவைத் தொடர்ந்து, பின்னர் உடனடியாக உலகம் முழுவதுமே சீர்திருத்தவாத தொழிலாளர் அமைப்புக்கள் சிதறுற்ற அளவில், இந்த தீவிரப்போக்கினர் நம்பியிருந்த அதிகாரத்துவ ஆதரவை அவர்கள் இழந்துவிட்டனர். திடீரென்று, இந்த தீவிர அரசியல்போக்கின் களிப்பற்ற Willy Loman கள் தங்கள் காலிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.

இந்தப் போக்குகளின் மத்தியில் தொல்சீர் மார்க்சிசத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பணி என்பது கிட்டத்தட்ட அழிவுகரமான பிழை என்ற கருத்து சரிபார்க்கப்படாது உண்மையெனக் கொள்ளப்பட்டது. அதிகபட்சமாய், பாதுகாப்பாக கடந்த காலத்தில், அது நியாயப்படுத்தப்படுவதாக இருந்தபொழுது, ஒரு கட்டத்தில் அது இருந்தது என்று ஏற்க அவர்கள் தயாராக இருந்திருக்கக்கூடும். ஆனால் நிச்சயமாக இப்பொழுது அந்த நிலை இல்லை. "முதலாளித்துவத்தில் கட்டமைப்புரீதியான உருமாற்றங்களின் காரணமாக, தொழிலாள வர்க்கத்திடமும் அதேபோல் மாற்றம் உள்ளதன் காரணமாகவும் மார்க்சிச செயற்திட்டம் முடிந்துவிட்டது என்ற வாதத்திற்கான ஆதரவுச் சான்றுகள் நிறைய உள்ளன. வர்க்கத்தின் முதன்மைத்துவம் கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதுபோல, மார்க்சிசத்தின் முக்கிய வகையினமான, மையத்தன்மை உழைப்பு, முதலாளித்துவத்தின் சொந்த பரிணாமத்தால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது." [24]

மார்க்சோ, எங்கல்சோ கற்பனை செய்தும் பார்க்கமுடியாத அளவிற்கு இன்று உலக அளவில் தொழிலாள வர்க்கம் சுரண்டப்பட்டுவரும் காலக்கட்டத்தில் இது எழுதப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியினால் மனித உழைப்புச் சக்தியில் இருந்து உபரிமதிப்பு கறந்தெடுக்கும் மாற்றுப்போக்கு பரந்த அளவில் உக்கிரப்படுத்தப்பட்டுள்ளது. உழைப்பானது குட்டி முதலாளித்துவ தீவிரப் போக்கின் சிந்தனையில் ஒரு மத்திய இடத்தைப் பெற்றிருக்கவில்லை என்றாலும்கூட, உழைப்பு, முதலாளித்துவ உற்பத்தி முறையில் முக்கியமான பங்கைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இவ்விடத்தில் ஊதியங்களைக் குறைப்பதற்கும், சமூக நலன்களைவெட்டுவதற்கும், அகற்றுவதற்கும் ஈவிரக்கமற்ற மிருகத்தனமான உந்துதல் இருப்பதோடு, உற்பத்தியை சிக்கனமயமாக்கல் என்ற பெயரில் வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில் கடும் கொடூரம் தொடர்கிறது.

"பார்க்க மறுப்பவர்களைவிட கண்தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது." முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு புரட்சிகர போராட்டம் நடத்தும் உண்மையான திறன் உடைய சமூக சக்தி இல்லை என்றால், நிலவும் நிலைமைக்கு மாற்று எது என்பதை எவ்வாறு ஒருவர் கருத்துருவாக்கம் செய்வது? இந்த இக்கட்டானநிலை தற்கால அரசியல் அவநம்பிக்கைவாதத்தின் மற்றொரு வடிவமான, புதிய கற்பனாவாதத்தின் அடிப்படையாய் உள்ளது. மார்க்சிசத்திற்கு முன்பு இருந்த கற்பனாவாத சோசலிசச் சிந்தனையைப் புதுப்பிக்கும் வகையில் புதிய கற்பனாவாதிகள் சோசலிசத்தை விஞ்ஞான அடிப்படையில் நிலைநிறுத்திய மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் முயற்சிகளைக் கண்டித்துப் புலம்புகின்றனர்.

புதிய கற்பனாவாதிகளைப் பொறுத்த அளவில், புறநிலை சக்திகள் பற்றிய கண்டுபிடிப்புடனான பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆழ்ந்த ஈடுபாட்டை தொல்சீர் மார்க்சிசம் அளவுக்கதிகமாய் உள்வாங்கியது என்ற கருத்து இருக்கிறது. இந்தக் கண்ணோட்டம் தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் அரசியற் கல்வியுடனான சோசலிச இயக்கத்தின் ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு அடிப்படையாய் இருந்தது. மார்க்சிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர உள்ளாற்றலில் நம்பிக்கைவைத்தமை பற்றிக் கூறத்தேவையில்லை, முதலாளித்துவ முரண்பாடுகளின் புறநிலைச் சக்திகளில் மிகைப்படுத்தப்பட்ட, தேவையற்ற நம்பிக்கையை வைத்தனர் என்று நவீன-கற்பனாவாதிகள் கூறினர். மேலும் அவர்கள் ஆய்வறிவுக்கு ஒவ்வாத அதிகார மற்றும் இணங்கச்செய்யும் ஆற்றலையும் மதிப்பீடு செய்யத் தவறிவிட்டனர் என்று கூறுகின்றனர்.

இந்த இக்கட்டானநிலையில் இருந்து மீள்வதற்கான வழி, ஊக்கம் கொடுக்கும், பேரார்வம் கொடுக்கும் "கட்டுக்கதைகளை" தழுவிப் பிரச்சாரம் செய்தலேயாகும் என்று புதிய-கற்பனாவாதிகள் கூறுகின்றனர். அத்தகைய கட்டுக்கதைகள் எந்தப் புறநிலை உண்மையுடனாவது ஒத்து இருக்கிறதா இல்லையா என்பது உண்மையான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்த புதிய-கற்பனாவாதக் கட்டுக்கதைபுனைதலின் முன்னணி விரிவிரையாளரான Vincent Geoghegan, மார்க்சும் எங்கல்சும் "உளவியலை வளர்த்தெடுக்கத் தவறினர். அவர்கள் மனித செயற்தூண்டலின் சிக்கல்கள் பற்றி அதிகம் ஆராயாமல் மிக மோசமான மரபுரிமை செல்வத்தைக் கொடுத்துள்ளனர்; அவர்களுடைய உடனடிப் பின்தோன்றல்கள் பெரும்பாலானோரும் இந்தக் குறையைக் கடப்பதற்கான தேவையை அதிகம் உணரவில்லை." என்று விமர்சித்தார். [25] சோசலிஸ்டுகளைப் போல் இல்லாமல், தீவிர வலதுசாரிகள், குறிப்பாக நாஜிகள்தாம் கற்பனை, உருவகப்படுத்துதல் ஆகியவற்றின் சக்தியை உணர்ந்திருந்தனர் என்று Geoghegan புகார் செய்கிறார். "டியூடானிக் குதிரைவீரர்கள், சாக்சன் அரசர்கள், "குருதியின்" புதிரான அழைப்புக்கள் என்ற கற்பனைக்குரிய கருத்துருக்களில் இருந்து ஆயிரமாண்டுகள் ஆட்சி நடத்த இருக்கும் Reich என்ற போலித் தோற்றத்தை நாஜிக்கள்தான் உருவாக்க முடிந்தது. பிற்போக்கைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டு, பிற்போக்கிற்கு அழைப்பு விடுத்துக் கொண்டு இடதுகள் இந்தத்தளத்தைப் பலமுறையும் கைவிட்டிருந்தனர்."[26]

அதன் ஆழ்ந்த பிற்போக்கு அரசியல் உட்குறிப்புக்களுடன், பகுத்தறிவற்ற தன்மைக்கு விடும் இத்தகைய படுமோசமான அழைப்பானது, சோசலிசப் புரட்சிக்கு புறநிலை அடிப்படை இல்லை என்ற உளச்சோர்வடைந்த கருத்திலிருந்து வரும் ஒருவகை விபரீத தர்க்கத்திலிருந்து ஊற்றெடுக்கின்றது.

மார்க்சிசத்தின் தோல்வி, சோசலிசத்தின் தோல்வி, கண்டிப்பாக, தொழிலாள வர்க்கத்தின் தோல்வி பற்றிய உளச்சோர்வடைந்த புலம்பல்கள் எதிலும், இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை பற்றிய எந்த ஸ்தூலமான வரலாற்று ஆய்வும், இருபதாம் நூற்றாண்டின் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் காரணங்களாக இருந்த நிகழ்வுகள், கட்சிகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றிய துல்லியமான ஆய்வின் அடிப்படையில், திரைவிலக்கிக்காட்டும் எந்த முயற்சியும் காணப்பட முடியாது. கற்பனாவாத கருத்துக்கு அர்ப்பணித்துக்கொண்ட, 2000ம் ஆண்டிற்கான அதன் பதிப்பில் சோசலிச பதிவேடு (Socialist Register), "மார்க்சிசத்திற்கு ஒரு புதிய கருத்துருவாக்க அடுக்கை, முன்னர் இராத அல்லது வளர்ச்சியுறாதிருந்த ஒரு பரிமாணத்தை" மேலும் சேர்ப்பது அவசியமானது" [27] என்று எமக்கு அறிவிக்கிறது. இதுதான் அதற்கு கடைசியாக தேவைப்படும் பொருள் போலும். உண்மையில் தேவையானது என்னவென்றால், இருபதாம் நூற்றாண்டை பற்றி பயில்வதிலும் பகுத்தாய்வதிலும் இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாத வழிமுறையை பயன்படுத்தல் ஆகும்.

தொடரும்.......

Notes:

[14] Preface to Max Weber and Karl Marx by Karl Löwith (New York and London, 1993), p. 5.

[15] Interesting Times (New York, 2002), p. 127.

[16] New York, 2000, p. 3.

[17] விணீக்ஷீஜ்வீsனீ ணீஸீபீ tலீமீ லிமீணீஜீ tஷீ tலீமீ ரிவீஸீரீபீஷீனீ ஷீயீ திக்ஷீமீமீபீஷீனீஜிலீமீ ஸிவீsமீ ணீஸீபீ திணீறீறீ ஷீயீ tலீமீ சிஷீனீனீuஸீவீst ஹிtஷீஜீவீணீ (ஷிtணீனீயீஷீக்ஷீபீ, 1995)

[18] P. 225.

[19] New York, 2000, p. 286.

[20] C. B. Macpherson, The Rise and Fall of Economic Justice (Oxford, 1987), p. 77.

[21] Ibid, pp. 284-88.

[22] New York, 1995. p. 1.

[23] Ibid, pp. vii-viii.

[24] Ibid, p. 56.

[25] Utopianism and Marxism (New York, 1987), p. 68.

[26] Ibid, p. 72.

[27] Necessary and Unnecessary Utopias (Suffolk, 1999), p. 22.

Top of page