World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Racist attacks on Tamil newspaper in Sri Lanka

இலங்கையில் தமிழ் செய்தித்தாள் மீது இனவாதத் தாக்குதல்

By our correspondent
3 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகஸ்ட் 12 படுகொலை செய்யப்பட்டதில் இருந்து, கொழும்பில் உள்ள வெகுஜன ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இனவாத பதட்டம் மற்றும் பீதியான ஒரு நிலவரத்தை கிளறிவிட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் செய்தித்தாளான சுடர் ஒளி மீது ஒரு தொடர்ச்சியான சரீர ரீதியிலான வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 29 மாலை, இரு அடையாளந்தெரியாத குண்டர்கள், கொழும்பு கிராண்ட்பாஸில் உள்ள பத்திரிகையின் ஆசிரியர் பீட காரியாலயத்திற்கு இரண்டு கைக்குண்டுகளை எறிந்துள்ளனர். இதில் நான்கு பேர் காயமடைந்ததுடன் சுடர் ஒளியால் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருத்தப்பட்டிருந்த டேவிட் செல்வரட்னம், வயது 60, வைத்தியசாலையில் உயிரிழந்தார். ஏனைய மூவரும் பத்திரிகையில் தொழில் செய்பவர்கள். தாக்குதல்காரர்கள் முதலில் ஆசிரியர் பீட ஊழியர்கள் சேவையாற்றும் இரண்டாவது மாடிக்கு செல்ல முயற்சித்த போதிலும், பாதுகாப்பு உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டனர். கைக்குண்டுகளை வீசிய பின்னர் அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த கைக்குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் 20, கொழும்பு தெற்கில் வெள்ளவத்தையில் உள்ள சுடர் ஒளி கிளை அலுவலகத்தின் மீதும் இரு கைக்குண்டுகள் வீசப்பட்டன. குண்டுகள் வெடிக்கத் தவறியமையினாலேயே அப்போது அங்கிருந்த மூன்று ஊழியர்களும் உயிர் தப்பினர்.

மூன்று நாட்களின் பின்னர், ஆகஸ்ட் 23, மத்திய கொழும்பில் உள்ள கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நடத்திய ஆர்ப்பாட்டத்தை அறிக்கைசெய்ய சென்றிருந்த சுடர் ஒளியின் தமிழ் பத்திரிகையாளரான பிரேமசந்திரன் யதுர்ஷன், அங்கு ஜே.வி.பி உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். இந்த கும்பல் அவரது டிஜிடல் கமரா, செல்லிடத் தொலைபேசி மற்றும் பணம், அதே போல் சுடர் ஒளி நிருபர் ஆனதற்கான நியமனப் பத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்களையும் அபகரித்துக்கொண்டது.

பின்னர், தான் ஒரு பத்திரிகையாளர் எனத் தெரிவித்த போதிலும், அவரை அவர்கள் ஒரு "விடுதலைப் புலி" சந்தேக நபராக சித்தரித்து பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். ஜே.வி.பி யின் பக்கம் சாய்ந்த பொலிஸார், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பத்திரிகையாளரையே கைது செய்தனர். அவர் அடுத்தநாள் 7,500 ரூபா (75 அமெ. டொலர்கள்) --ஒரு மாத சம்பளத்திற்கு சமன்-- சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவரது உடமைகள் திருப்பித் தரப்படவில்லை.

ஜே.வி.பி, கதிர்காமர் கொலைக்காக விடுதலைப் புலிகளை கண்டனம் செய்யவும், அரசாங்கம் மேலும் உக்கிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகள் உட்பட, இந்தக் கொலைக்கு விடுதலைப் புலிகளைக் குற்றஞ்சாட்டும் எவரும் தீர்க்கமான ஆதாரங்களை வழங்கவில்லை. உண்மையில், விடுதலைப் புலிகளை குற்றஞ் சாட்டவும் மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள "சமாதான முன்னெடுப்புகளை" மீண்டும் தொடங்குவதற்கான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பரீட்சார்த்த முயற்சிகளை பயனற்றதாக்கவும் சிங்களத் தீவிரவாதிகளால் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட வெறுமனே ஒரு சதித்திட்டம் போல் தோன்றுகிறது.

சுடர் ஒளி மற்றும் அதன் பத்திரிகையாளர்கள் மீதான அண்மையத் தாக்குதல்கள், அத்தகைய தட்டினர் வன்முறை வழிமுறைகளை விரும்பி நாடுவதையே உறுதிப்படுத்துகிறது. கைக்குண்டுகளை வீசியவர்கள் யார் என்பது தெளிவாக ஸ்தாபிக்கப்படாவிட்டாலும், வெளிப்படையான சந்தேகங்கள், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாதக் கட்சிகள் மற்றும் இராணுவ அமைப்பில் உள்ள அவற்றை ஒத்த போக்கு கொண்ட சக்திகள் மீதே எழுகின்றன. இத்தகைய வட்டாரங்களில், தமிழர்கள் "விடுதலைப் புலி சந்தேக நபர்களாகவும்" மற்றும் அதன் காரணமாக வன்முறைத் தாக்குதல்களுக்கான சட்டரீதியான இலக்காகவும் கருதப்படுகின்றனர்.

அண்மைய மாதங்களாக, டிசம்பர் 26 சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள் கட்டுமான உதவி விநியோகத்தை கூட்டாக நிர்வகிப்பதன் பேரில், குமாரதுங்கவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு எதிராக ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் மோசமான பிரச்சாரங்களை உக்கிரப்படுத்தியிருந்தன. ஜூன் மாதம் ஜனாதிபதி இந்த உடன்படிக்கைக்கு அதிகாரமளித்ததை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஜே.வி.பி விலகிக்கொண்டது. கதிர்காமர் கொலையிலிருந்து விடுதலைப் புலி விரோத ஆர்ப்பாட்டங்களும் உக்கிரமடைந்துள்ளன.

வெள்ளவத்தை சுடர் ஒளி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜே.வி.பி யின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச, இந்தப் பத்திரிகை "புலி பயங்கரவாதிகளுடன்" நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளதாக பொதுக் கூட்டமொன்றில் கண்டனம் செய்தார். கொழும்பில் உள்ள இனவாத அரசியல் மொழியின் படி, அவரது கருத்துக்கள் வன்முறையைத் தூண்டுவதற்கு ஒத்ததாகும்.

ஜே.வி.பி வெள்ளவத்தை தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்துள்ளது. தனது உறுப்பினர்கள் செய்தித்தாளின் பத்திரிகையாளரை தாக்கவில்லை என பிரகடனம் செய்யும் ஒரு மோசடியான அறிக்கையையும் அது வெளியிட்டுள்ளது. "அங்கு என்ன நடந்தது என்னவென்றால், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட ஒரு நபரை அடையாளங்காண்பதற்கான ஒரு விசாரணையேயாகும். அவர் பின்னர் அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்," என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பின்னர் இந்த செய்தித்தாள் மீதான ஒரு அரச வேட்டைக்கு சமமான ஒன்றுக்கு அழைப்பு விடுக்கின்றது: "சுடர் ஒளி செய்தித்தாள் புலி அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது ஒரு வெளிப்படையான உண்மையாகும். இந்த சந்தேக நபர் தனது பத்திரிகையாளர் எனக் கூறும் சுடர் ஒளி பத்திரிகையின் நடத்தையும் இன்னும் சந்தேகத்திற்குரியதாகும். ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக சரியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாம் பாதுகாப்பு படைகளிடம் கோருகின்றோம்."

பத்திரிகையின் பிரதான அலுவலகம் மீதான புதிய கைக்குண்டுத் தாக்குதலின் பின்னர், பரந்த விமர்சனங்களுக்குள்ளான ஜே.வி.பி இன்னுமொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது "இந்த கோழைத்தனமான தாக்குதலை அதிக வெறுப்புடன்" கண்டனம் செய்வதோடு, இந்த சம்பவத்தின் பின்னணியில் தமது கட்சி இல்லை என்பதை நிரூபிக்கும் முயற்சியில் அறிக்கையின் அரைவாசிப் பகுதியை ஒதுக்கியுள்ளது. அது நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், அதன் எளிதில் தீப்பற்றும் கருத்துக்களின் ஊடாக, அத்தகைய வன்செயல்கள் இடம்பெறக்கூடிய அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தியதற்கு ஜே.வி.பி பொறுப்பாளியாகும்.

பல வெகுஜன ஊடக அமைப்புகள் சுடர் ஒளி மீதான தாக்குதலை கண்டனம் செய்துள்ளன. எல்லைகள் அற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு (Reporters Without Borders -RSF) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயுதபாணிகளான எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எந்தவொரு ஜனநாயகத்தினதும் அத்தியாவசியமான ஆக்கக்கூறான பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மதித்தல் வேண்டும்," என கோரியுள்ளது. சுதந்திர ஊடக அமைப்பு, அண்மைய தாக்குதலை "பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் ஊடக கருத்து வேறுபாடுகள்" மீதான தாக்குதலாக வகைப்படுத்தியுள்ளது.

சுடர் ஒளி ஆசிரியர் பீட அலுவலகத்தில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் நடந்த போதிலும், குற்றவாளிகள் பிடிபடுவதற்கான அறிகுறிகள் இல்லை. பாதுகாப்புப் படைகளும், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் தோற்றுவித்துள்ள ஆழமாக வேரூன்றியுள்ள தமிழர் விரோத பாரபட்சங்களால் ஊக்குவிக்கப்பட்டவையாகும்.

நான்கு மாதங்களுக்கு முன்னர், ஒரு முன்னணி தமிழ் பத்திரிகையாளரான தர்மரட்னம் சிவராம், கொழும்பில் ஒரு சுறுசறுப்பான வீதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சிவராம், விடுதலைப் புலிகள் சார்பு இணையத் தளமான தமிழ்நெட் ஆசிரியர் குழுவின் சிரேஷ்ட உறுப்பினராக இருந்ததோடு, ஆங்கில மொழியிலான டெயிலி மிரர் நாளிதளுக்கும் எழுதினார். ஜாதிக ஹெல உறுமய இந்த கொலையை பாராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தோடு, முன் பின் அறிமுகமில்லாத "தேரபுத்த அபய படை" எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவும் கொலையை பொறுப்பேற்றிருந்தது. பொலிஸ் பல சந்தேக நபர்களைக் கைது செய்திருந்த போதிலும் எந்தவொரு சந்தேக நபருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தவறியது.

கைக்குண்டுத் தாக்குதல் மீதான கண்டனங்கள், சுடர் ஒளிக்கு எதிரான வன்முறைப் பிரச்சாரங்களுக்கு முடிவுகட்ட எதையும் செய்யவில்லை. ஆகஸ்ட் 30 அன்று, இதே பத்திரிகையை சேர்ந்த இரு நிருபர்கள், இலங்கைப் பாராளுமன்ற நிகழ்வுகளை அறிக்கை செய்துவிட்டு பஸ்ஸுக்காக காத்திருந்த வேளை தாக்கப்பட்டார்கள். ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஏனைய கட்சிகளும், இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடூரமான தமிழர் விரோத படுகொலைகள் மீண்டும் இடம்பெறும் சூழ்நிலையையே தூண்டிவிடுகின்றன.

Top of page