World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Profit system, not nature, main obstacle to rebuilding New Orleans

நியூ ஓர்லியன்சை திரும்ப கட்டியெழுப்புவதற்கு பிரதான தடைக்கல் இயற்கையல்ல, இலாப முறையே

By the Editorial Board
15 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

கடந்து செல்கின்ற ஒவ்வொரு நாளும் கத்திரினா சூறாவளி விளைவித்த பாரிய பேரழிவின் வீச்சை தெளிவாக காட்டுவதுடன், அத்துடன் ஏறத்தாழ 2 மில்லியன் மக்களுக்கு வீடுகளையும், சமுதாய உள்கட்டமைப்புகளையும் திரும்பக் கட்டியெழுப்புவதற்கு தேவைப்படுகின்ற பேரளவு முயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது. இதுவரை ஏறத்தாழ 700 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன மற்றும் சூறாவளி வேகத்தால் புகுந்து விட்ட தண்ணீரில் மூழ்கிக் கிடந்த வீடுகளை தேடுகின்ற குழுக்கள் சென்றடைந்த பின்னர் சாவு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும் என்று நிச்சயமாக தோன்றுகிறது.

இந்த பாரிய புயல் 95,000 சதுர மைல்களை நாசப்படுத்திவிட்டது. இந்த பரந்த எல்லைக்குள் பெரிய பிரித்தானியாவை போன்றதொரு பெரும் பகுதியில் இருந்த பல இடங்கள் ஏறத்தாழ அழிந்துவிட்டன. வளைகுடா கடற்கரையிலிருந்த மிசிசிப்பி, வேவ்லாந்து பகுதிகளில் வாழ்ந்த 7000 பேரில் 2 டஜன் வாழ்விடங்கள்தான் மிச்சமிருக்கின்றன. மற்றவர்கள் அனைவரும் பாதுகாப்பு இடங்களில் இருக்கிறார்கள். மிசிசிப்பி கடற்கரையில் இருக்கும் மற்றொரு நகரமான பாஸ் கிறிஸ்டியனில் ஒரு காலத்தில் 8,500 மக்கள் வாழ்ந்தார்கள், இப்போது 50 முதல் 100 வீடுகள் தான் நிற்கின்றன. மிசிசிப்பி கடற்கரையில் மிகப் பெரிய இரண்டு நகரங்களான கல்ப்போர்டும் பிலோக்சியும் பெரும்பாலும் அழிந்துவிட்டன.

நியூ ஓர்லியன்ஸ் பெருநகர பகுதியில் தான் மிக பரவலான சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு உள்ளூர் அவசர உதவி அதிகாரி செய்துள்ள மதிப்பீட்டின்படி நியூ ஓர்லியன்ஸ் பாரிஸ் பகுதியில் மட்டுமே (அது அந்த நகரத்தையும் உள்ளடக்குகின்றது) 1,50,000 வீடுகள் அழிந்துவிட்டன மற்றும் அவற்றை இடித்தாக வேண்டும், அத்துடன் 8,00,000திற்கு மேற்பட்ட டயர்கள் பொருத்தப்பட்ட 1,63,000 வாகனங்களும் அப்புறப்படுத்த வேண்டும். மற்றும் 93,000 படகுகளையும் அப்புறப்படுத்த வேண்டும். மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், தண்ணீர் வழங்குதல், கழிவு நீரோட்டம், சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும். அத்துடன் கடல் அலை தடுப்பு அணையும் மேம்படுத்தி செப்பனிட வேண்டும். அந்த நகரத்தில் அப்புறப்படுத்த வேண்டிய குவிந்து கிடக்கும் குப்பை இடிபாடுகள் 20 மில்லியன் தொன்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது, அதில் பெரும்பகுதி நச்சுத் தன்மையுள்ள கழிவுப் பொருட்களாகும்.

நியூ ஓர்லியன்சுக்கு கிழக்கிலுள்ள ஒரு லூயிசியானா புறநகர் பகுதி செயிண்ட் பேர்னார்ட் பாரிசில் 28,000 கட்டுமானங்களில் 52 கட்டிடங்கள் மட்டுமே தற்போது சேதமின்றி நிற்கின்றன, மற்றும் அந்த பகுதி முழுவதுமே தண்ணீருக்குள் மூழ்கிக்கிடக்கிறது. அந்த பாரிஸ் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த 3,000 மக்கள் அடங்கிய கூட்டம் மாநில தலைநகரான பேட்டன் ரவ்ஜில் நடந்தபோது உரையாற்றிய அதிகாரிகள் அடுத்த ஆண்டு வரை அந்த பகுதிக்கு திரும்ப செல்ல முடியாது என்று கூறியதுடன், மற்றும் தற்போது அப்பகுதிக்கு திரும்புகின்ற முயற்சி எதுவுமில்லை. அது கத்திரினாவிக்கு முன்னர் அப்பகுதியில் 66,000 மக்கள் வாழ்ந்த பெரும்பாலும் தொழிலாள வர்க்க பகுதி. இந்த ஆண்டு கடைசியில் மேலும் வளைகுடா சூறாவளி ஏதாவது தாக்குமானால் அப்பகுதி மேலும் பேரழிவை சந்திக்கக் கூடும், ஏனென்றால் புயல் அலையிலிருந்து அந்த பாரிஸ் பகுதியை பாதுகாப்பதற்கு கட்டப்பட்ட தடுப்பு அணை முழுவதையும் கத்திரினா அழித்துவிட்டது.

மறுசீரமைப்பிற்கு தேவைப்படும் பாரிய செலவினங்களில் ஒரு சிறு பகுதியைக் கூட தனிப்பட்டவர்களின் அறக்கட்டளைகள் அல்லது காப்புறுதி நிறுவனங்களின் இழப்பீடுகள் சரிக்கட்டிவிட முடியாது. காப்புறுதி நிறுவனங்கள் தர வேண்டிய இழப்பீடு 20 முதல் 40 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது, இது ஒரு பெரிய தொகை, ஆனால் இந்த சூறாவளியில் ஏற்பட்ட இழப்புகளை சரிகட்டுவதற்கு தேவைப்படுகின்ற 200 பில்லியனுக்கு மேற்பட்ட டாலர்கள் தொகையோடு ஒப்பிடும்போது இது தரும் இழப்பீடு மிகமிகக் குறைவு. வளைகுடா கடற்கரையின் பல பகுதிகளில் பெரும்பாலான சொத்துக்கள் வெள்ள ஆபத்து காப்பீடு செய்து கொள்ளவில்லை. மிசிசிப்பியின் மூன்று கடற்கரை பிராந்தியத்தில் வெள்ளம் பாய்ந்த 400,000 இல் 21,600 சொத்துக்களுக்கு மட்டுமே வெள்ள ஆபத்து காப்பீடு செய்யப்பட்டிருப்பதாக மாகாண காப்புறுதி ஆணையாளர் ஜோர்ஜ் டேல் தெரிவித்தார்.

செஞ்சிலுவை சங்கத்திற்கும் இதர அறக்கட்டளைகளுக்கும் வந்து குவிந்து கொண்டுள்ள நன்கொடைகள் இதுவரை 9/11 ற்கு பின்னரும் மற்றும் ஆசிய சுனாமிக்கு பின்னரும் குவிந்த சாதனை அளவான நன்கொடைகளைவிட அதிகமாகும். இந்த மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் தொழிலாளர்கள் காட்டிய தீரம் செறிந்த முயற்சிகள் உழைக்கும் மக்களின் மில்லியன் கணக்கானவர்களின் சிறப்பு மிக்க ஆரோக்கியமான உணர்வுகளான கருணை, பெருந்தன்மை, மற்றும் ஒரு சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் எல்லா அறக்கட்டளைகளும் திரட்டியுள்ள நிதி 1 பில்லியன் டாலரை கூட தொடாது, அவசர நிவாரணப் பணிகளுக்காக அமைப்பான FEMA இரண்டு நாட்களில் செலவிடுகின்ற தொகைக்கும் குறைவானதுதான்.

ஏகபோகமும், சமத்துவமின்மையும்

உயிர் பிழைத்தால் போதும் மீண்டும் இழந்த பொருள்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று என்னதான் உறுதியோடு தனிமனிதர்கள் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது தவிர்க்க முடியாத அளவிற்கு கடக்க முடியாத ஒரு தடைக்கல்லை சந்திக்கின்றன. அது விரல்விட்டு எண்ணத்தக்க செல்வந்த தனிமனிதர்களும், பெரிய பன்னாட்டு நிறுவனங்களும் சமுதாயத்தில் வளங்களை தங்களது ஏகபோக சொத்துடைமை ஆக்கிக் கொண்டிருக்பதுடன் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயமே அவர்கள் கடைபிடித்து வருகின்ற அராஜக இலாப நலன்களுக்காக கீழ்படிந்து செயல்பட்டு வரும் 21ம் நூற்றாண்டின் அமெரிக்காவின் சமூகக்கட்டமைப்பால் பண்பிட்டுகாட்டப்படுகின்றது.

உதவி மற்றும் மறுசீரமைப்பிற்கான இரண்டிற்கும் பாரிய வளங்கள் தேவைப்படுகின்றன. இதற்கான சடபொருள் வளங்கள் அளவிற்கு அதிகமாகவே இந்த கோளத்திலேயே பணக்கார சமுதாயமான அமெரிக்காவில் உள்ளன. வளைகுடா கடற்கரை பகுதிகளில் வாழ்ந்து துன்பத்தில் தத்தளித்து கொண்டிருக்கிற மக்களுக்கு ஏராளமான உணவு, உடை, குடியிருப்பு, மின்சார இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள்களை வழங்குவதற்கு ஏராளமான வசதிகள் உள்ளன. ஆனால் இந்த வளங்களின் பெரும்பகுதி பெருநிறுவனங்களின் பிடியில் உள்ளது, அவை தங்களது இலாப நலன்களுக்கு பயன்பட்டால்தான் அந்த பெரு நிறுவனங்கள் அந்த பொருட்களை மற்றவர்களுக்கு அவர்கள் தருவார்கள். அப்படி செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது.

கத்திரினாவின் பேரழிவை நேரடியாக தாங்கிய தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை மக்களுக்கு இந்த 200 பில்லியன் டாலர்கள் மிகப் பெரும் தொகைதான் என்றாலும், ஈராக்கில் புஷ் மேற்கொண்டுள்ள போருக்கான மொத்த செலவினத்தை விட குறைவுதான் மற்றும் முதலாளித்துவ ஆளும் செல்வந்ததட்டு குவித்து வைத்துள்ள செல்வத்தோடு ஒப்பிடும்போது சிறியளவாகும். அமெரிக்க சமுதாயத்தின் உச்சியிலுள்ள ஒரு சதவீத மக்கள் நாட்டின் செல்வத்தில் 40 சதவீதத்திற்கு மேல் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். வீடுகளை தவிர்த்து விட்டு நிதி மற்றும் வர்த்தக செல்வத்தை மட்டுமே கணக்கிட்டால் கூட மக்கள் தொகையில் மிகக் குறுகலான குழுவினராக இருக்கும் இவர்கள் 90 சதவீத சொத்துகளை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

நியூ ஓர்லியன்சை மறுபடியும் கட்டியெழுப்புவதற்கான 200 பில்லியன் டாலர்களை அதியுயர் பணக்காரப் பிரிவுகளின் நடப்பு வருமானத்திலிருந்து எளிதாக பெற்றுவிட முடியும். அமெரிக்காவில் இருக்கும் மொத்த வீடுகளில் ஒரு சதவீதத்தில் மேநிலையிலுள்ள பத்தில் ஒரு பகுதியினராக இருக்கின்ற 1,29,000 தனிமனிதர்களும் குடும்பங்களும் சராசரியாக ஆண்டிற்கு 4 மில்லியன் டாலர்களை சம்பாதிக்கின்றனர், இவர்களது ஒட்டு மொத்த வருமானம் 505 பில்லியன் டாலர்கள். இந்த ஆண்டு நியூ ஓர்லியன்சை திரும்ப கட்டியெழுப்புவதற்கான மொத்த தொகைகளையும் அவர்கள் செலுத்தினாலும் கூட சராசரியாக 2.5 மில்லியன் டாலர் வருவாயை அவர்கள் பெறுவார்கள். அது நடுத்தர தொழிலாள வர்க்க குடும்ப சராசரி வருவாயைவிட 50 மடங்கிற்கு மேலானதாகவே இருக்கும்.

அமெரிக்காவிலேயே மிகப்பெரும் பணக்காரர்களான ஒரு சதவீத மக்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக 555 பில்லியன் டாலர்கள் அளவிற்கு புஷ் நிர்வாகம் 2001ல் வரி வெட்டு சலுகைகளை தந்திருக்கிறது. மற்றும் இந்த ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட ஒருவரின் மரணத்தால் கிடைக்கும் சொத்துமீதான வரி மற்றும் மரபுரிமைவரி முற்றிலும் நீக்கம், தற்போது செனட் சபையின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறது, அது நிறைவேறிவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் பணக்கார அமெரிக்கர்கள் 290 பில்லியன் டாலர்களை மீதப்படுத்துவர் மற்றும் அந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 70 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துவர். அவை மூன்றாண்டுக்கு ஒரு முறை நியூ ஓர்லியன்சை போன்ற ஒரு நகரத்தை திரும்ப கட்டியெழுப்புவதற்கு போதுமானதாகும்.

புஷ் நிர்வாகம் ஆளும் செல்வந்தத் தட்டிற்கு மேலும் சலுகைகளை காட்டுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்: வளைகுடா கடற்கரைப் பகுதி மக்களை அவர்களது துன்பத்தை ஒரு சோதனை பொருளாக்கி கல்வி, மருத்துவ சேவை போன்ற பொது சேவைகளை இலாபம் தருகின்ற புதிய வளங்களாக மாற்ற முடியுமா என்று முடிவு செய்வதற்கு பல்வேறு அரசியல் சோதனைகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். வாஷிங்டன் போஸ்டில் புதன் கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியின் படி ''தனது தலைமை மூலோபாய ஆலோசகரான துணை தலைமை பாதுகாப்பு அலுவலர் கால் ரோவ் மற்றும் இதர உதவியாளர்களை ஏற்கனவே புஷ் அனுப்பி இருக்கிறார். அவர்கள் அரசாங்க அமைப்புக்கள் குடியரசு கட்சிக்கு நெருக்கமான (GOP) சட்டம் இயற்றுவோர் மற்றும் மாநில அதிகாரிகள் ஆகியோர் நியூ ஓர்லியன்சை திரும்ப கட்டியெழுப்புவது தொடர்பாகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் வழிகாட்டுவர் மற்றும் கருத்துக்களை திரட்டுவார்கள்''.

போஸ்ட் செனட் குடியரசுக் கட்சி தலைவர்களின் நம்பிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது, அது ''தேசிய அளவில் செயற்படுத்த சிரமமான கருத்துக்களை பரிசோதித்து பார்ப்பதற்கு வழக்கத்திற்கு மாறானதொரு வாய்ப்பை இந்த கட்டமைப்பு பணிகள் பழைமைவாதிகளுக்கு வழங்கியுள்ளது. அந்த முயற்சிகளில் இடம் பெயர்ந்த மாணவர்களுக்கான கல்விச் செலவை ஈடுகட்டும் உத்திரவாத சீட்டுகளும் (vouchers) வர்த்தக முதலீட்டிற்கான வரி ஊக்குவிப்புகளும் அடங்கும்'' ஏற்கனவே வெள்ளை மாளிகை டேவிஸ்-பேகன் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது, அதன்படி கட்டுமான ஒப்பந்தங்களில் பணியாற்றுகின்ற தொழிற்சங்க - ஊதிய விகிதங்களை கட்டுப்படுத்தும். மற்றும் அதே போன்று மெக்னமாரா- ஓ ஹாரா சேவை ஒப்பந்தச் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க ஆராய்ந்து கொண்டிருக்கிறது, அது சேவைப்பணிகளுக்கு தற்போது நிலவும் ஊதிய விகிதங்களை செயல்படுத்துவதாகும்.

மற்றும் நிவாரண முயற்சி மட்டுமே பெருவர்த்தக நிறுவனங்களுக்கு இலாபங்களை தருகின்ற ஒரு ஆதாரம் அல்ல. மறுசீரமைப்புத் திட்டங்கள் அதை விட இலாபகரமானவை, FEMA போன்ற அமைப்புக்கள் ஏலம் எடுக்காமல் செலவு மதிப்பிடும் இலாபமும் அடங்கிய முறையில் செய்யும் 10 பில்லியன் கணக்கான ஒப்பந்தங்களை வழங்கி வருவது மத்திய அரசாங்க ஒப்பந்தக்காரர்களிடையே ஈராக்-பாணி தங்கத்தேடல் மனப்பான்மையில் ஒப்பந்தங்களுக்காக முந்தியடித்துக் கொண்டு வருகின்ற போட்டியை உருவாக்கியுள்ளது.

இந்த அப்பட்டமான இலாபத்தை வேட்டையாடும் சூழ்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக புஷ் அமெரிக்க மக்கள் ''பணத்தை அனுப்ப வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டிருப்பது அவரது வழக்கமான - அசட்டுத்தன சிரிப்போடு வந்திருக்கின்ற வேண்டுகோள்கள் குறிப்பாக ஆத்திரமூட்டுபவை. இந்த மந்திரம் பெரு நிறுவன அமெரிக்காவின் சார்வில் ஒரு பிணைப்பணம் கோருகின்ற குறிப்பாகும்: ''பணத்தை எங்களுக்கு செலுத்துங்கள் மற்றும் கத்திரினாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரை-நாகரீக வாழ்க்கைநிலைக்கு திரும்பவும் வரலாம்.''

சமுதாயத்தின் வளங்களில் பெரும் பகுதி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சார்பாக புஷ் தங்களது செலவினங்களை ஈடுகட்டுவதற்கு போராடிக் கொண்டிருக்கிற உழைக்கும் மக்களை ஏமாற்றுகின்ற வகையில் வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கிறார், அவர் கூறுவது என்னவென்றால் சூறாவளி கத்திரினாவின் பாதிப்பிற்கு இலக்கானவர்களை காப்பாற்றும் பொறுப்புள்ளவர்கள் ஆளும் வர்க்கமல்ல அல்லது அரசு அல்ல என்று கூறுகிறார். ஆனால் ஒரு பொருளில், புஷ் ஒப்புக்கொள்வது என்னவென்றால் நியூ ஓர்லியன்சை திரும்ப உருவாக்குவதற்கு பிரதான தடைக்கல் சமுதாய தடைக்கல்லே தவிர இயற்கையல்ல என்பதை ஒப்புக் கொள்கிறார். வளங்கள் இருக்கின்றன, பொதுமக்களுக்கு விருப்பமும், அனுதாபமும் இருக்கிறது. இலாப நோக்கு முறை மட்டுமே தடைக்கல்லாக இடையில் நிற்கிறது.

அராஜகமும் திட்டமிடலும்

கோடீஸ்வரர்களின் சுயநல பணத்தாசை மட்டுமே இதற்கு காரணமல்ல, ஆனால் அந்த சமுதாய முறையிலேயே அடங்கியுள்ள அராஜகநிலைதான் காரணமாகும், அதில் ஒவ்வொரு முதலாளித்துவ தொழிலதிபரும் தொழிலாள வர்க்கம் தனது உழைப்பால் உருவாக்கிய உபரிமதிப்பில் முடிந்த வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பங்கை அபகரித்துக் கொள்வதற்கு கசப்பான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பரவலான நகர்புற பகுதிகளில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ள பொதுச்சேவைகள், போக்குவரத்து, கழிவு நீரேற்றம், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் இதர பொதுச்சேவைகளில் கவனமாக திட்டமிடவேண்டிய தேவை ஏற்படுகிறது. தண்ணீர் வழங்குவது அல்லது வீட்டு வசதிகளை செய்வது போன்ற சேவைகளை முடிவு செய்து ஒன்றையொன்று பாதிப்பதாக அமைந்திருக்கிறது மற்றும் இரண்டுமே தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கும் பணிகளுக்கும் திரும்புகின்ற ஆற்றலை பாதிக்கிறது, ஆக மேலும் சீரமைப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கான தொழிலாளர்கள் கிடைப்பது பாதிக்கப்படுகிறது. ஆனால் முதலாளித்துவத்தின் கீழ், இந்த முடிவுகள் எல்லாமே தனித்தனியாக எடுக்கப்படுகின்றன, இத்தகைய முடிவுகள் பெரும்பாலும் தனித்தனியாகவும் வர்த்தகநலன்களின் மோதல் அடிப்படையிலும் எடுக்கப்படுவதால் நியாயமான ஒருங்கிணைப்பும் மேலும் திட்டமிடலும் இயலாத காரியமாக ஆகிவிடுகின்றன.

இந்த சமூக உண்மையை புதன்கிழமையன்று நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் தெளிவாக தெரிகின்ற வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது. அமெரிக்காவிலேயே மிக முன்னேறிய மிகவும் தென்பகுதியில் உள்ள நியூ ஓர்லியன்ஸ் இலுள்ள மருத்துவ முறையை காட்டுவதன் மூலம் உண்மையான சமூக ஜதார்த்தத்தை அது வெளிப்படுகிறது. சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை மேற்கோள் காட்டியுள்ள டைம்ஸ் சுட்டிக்காட்டியிருந்தது: ''சில உள்ளூர் அதிகாரிகள் ஒரு மத்திய திட்டம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும், பொருளாதார சக்திகளின் போக்குகள் அடிப்படையில் பிரதான முடிவுகள் எடுக்கப்படலாம்----அந்த நகரத்தின் சுகாதார தேவைகள் அடிப்படையிலேயே அந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவசியமில்லை. கடந்த சில தசாப்தங்களாக மாநில மத்திய அளவிலும் நெறி முறை தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதால் தற்போது மருத்துவ மனை தொழிற்துறையில் பிரதான உந்து சக்தி கண்ணுக்குத் தெரியாத சந்தை நடவடிக்கைகளின் இயக்கும் கரங்களாகும்.''

இலாபமற்ற மருத்துவமனைகளை (சாராரண பங்குதாரர்களுக்காக அல்லாது கடன் பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்காக [bondholders] இலாபத்தை வழங்கும் மருத்துவமனைகள்) சிறப்பாக ஆய்வு செய்கிற ஒரு கடன்பத்திர வோல்ஸ்டீரிட் ஆய்வாளர் இதனை குறிப்பிட்ட தேவைக்கான தீர்மானம் என குறிப்பிட்டார். அந்த பத்திரிகை தந்துள்ள விளக்கம் என்னவென்றால் ''போதுமான அளவிற்கு கட்டணம் செலுத்துகின்ற நோயாளிகள் கிடைப்பார்களா என்ற தங்களது அனுமானங்களின் அடிப்படையில் தனிப்பட்ட மருத்துவ மனைகள் தங்களது மருத்துவமனைகளை தாங்களே சீரமைத்துக் கொள்ளுகின்ற வசதிகளை பெற்றிருக்கின்றனவா என்ற அடிப்படையில் முடிவு செய்வார்கள்.''

டைம்ஸ் தொடர்ந்து ''இது எத்தனை மக்கள் திரும்பி வருகிறார்கள் என்பதை பொறுத்த விவகாரம் மட்டுமல்ல என்று நிபுணர்கள் சொல்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வேலைகள் இருக்கின்றனவா மற்றும் சுகாதார காப்புறுதி உள்ளதா என்பதைப் பொறுத்தும் அமைந்திருக்கிறது. ஏராளமான மக்களுக்கு சுகாதார காப்புறுதி எதுவும் இல்லையென்றால் அல்லது மெடிக்கெய்டு போன்ற பொதுத் திட்டங்களை அவர்களது மருத்துவ செலவினங்களுக்காக நம்பியிருப்பார்களானால் தனியார் மருத்துவமனைகளை திறந்து அவை செயல்படுவதற்கு போதுமான நோயாளிகள் இருக்க மாட்டார்கள்.'' என்று குறிப்பிடுகிறது.

இதைவிட தெளிவானது வேறு ஒன்றும் இருக்க முடியாது: எத்தகைய சுகாதார சேவைகள் நியூ ஓர்லியன்சில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான முடிவுகள் தனியார் இலாப நோக்கு அடிப்படையில் எடுக்கப்படுமே தவிர நகர மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது.

சோசலிஸ்ட்டுகள் வாதிடுவது என்ன

நியூ ஓர்லியன்சை மறுசீரமைக்கும் பணிகள் முதலாளித்துவ சந்தையின் முடிவிற்கு கீழ்படிந்து நடக்க விட்டு விட வேண்டுமென்ற கூற்றை உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் நிராகரிக்கின்றது. ஒரு பெரிய நகரம் அழிந்து ஆயிரக்கணக்கான மக்கள் மடிவதற்கு காரணமாக இருந்த அத்தைகய இழப்புகளுக்கு வகை செய்த முதலாளித்துவ முறையை உழைக்கும் மக்கள் அந்த நகரையே மறுபடியும் கட்டியெழுப்புவதற்கு கட்டளையிடுவதையும் நிபந்தனைகள் விதிப்பையும் அனுமதிக்க முடியாது.

கீழ்கண்ட குறிக்கோள்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து தருகின்ற வகையில் அமெரிக்க சமுதாயம் வளங்களை ஒரு பாரியளவிற்கு வழங்க உறுதி செய்து தர வேண்டும்.

* வெகுஜன போக்குவரத்து, மின்சார விநியோகம், தண்ணீர் வழங்குதல், கழிவு நீரேற்று வசதி, வெள்ளக் கட்டுப்பாடு, கல்வி மற்றும் சுகாதார சேவை உட்பட நவீன நாகரீக வாழ்விற்கு தேவைப்படும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் திரும்ப உருவாக்கப்பட வேண்டும்.

* நியூ ஓர்லியன்ஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அவற்றுடன் மிசிசிப்பி ஆற்றுப்படுக்கை பகுதிகளை சார்ந்த கிராமப்புற நகரங்கள் மற்றும் மிசிசிப்பி, அலபமா வளைகுடா கடற்கரை பகுதிகளைச் சார்ந்த இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் வெள்ளத் தடுப்பு அடிப்படையில் அமைந்த அல்லது உயரமான உயர்தரமிக்க புதிய வீடுகளில் குடியமர்த்தப்பட வேண்டும். அத்தகைய புதிய வெள்ளத் தடுப்பு கட்டிடங்களை உருவாக்க வேண்டும்.

* சூறாவளி கத்திரினாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பொருள் இழப்பிற்காக முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அத்தகைய இழப்பீடுகளில் சிறு வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் தொழில்திறமை மிக்கவர்கள், விவசாயிகள், மற்றும் மீனவர்களுக்கும் அத்துடன் தனிப்பட்ட முறையிலும் வீட்டு பொருள்கள் இழப்பு என்ற வகையிலும் ஏற்பட்ட சேதங்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

* இந்தப் பேரழிவில் தங்களது வேலைகளை இழந்துவிட்டவர்களுக்கு மறுவேலை தர வேண்டும் - 4,00000 பேர் வேலையிழந்து விட்டதாக ஆரம்ப மதிப்பீடுகள் கூறுகின்றன. மற்றும் நியூ ஓர்லியன்சிலும் கிராமப் பகுதிகளிலும் அந்த சூறாவளி தாக்கிய போது வேலையில்லாமல் இருந்தவர்களுக்கும் அந்த சூறாவளியில் வேலையிழந்தவர்களுக்கும் பத்தாயிரக்கணக்கில் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அந்த நகரத்தையும் ஒட்டுமொத்த கடற்கரை பிராந்தியத்தையும் சீரமைப்பதில் எழுகின்ற சுற்றுப்புற சூழல் பிரச்சனைகள் மற்றும் இயற்கை சூழல்கள் பற்றி ஒரு விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில் அத்தகையதொரு மறுபடியும் கட்டியெழுப்ப வேண்டும். புஷ் நிர்வாகம் எண்ணெய் நிறுவனங்களின் கட்டளைப்படி பூமி வெப்பமடைதலின் விளைவுகள் குறித்து கடுமையான விசாரணைக்கு விதித்திருக்கும் தடையை இரத்து செய்ய வேண்டியது, இந்த சீரமைப்புத் திட்டத்திற்கு அவசியமாகும்.

இதற்கெல்லாம் மேலாக, நியூ ஓர்லியன்சையும் வளைகுடா கடற்கரை பகுதியையும் திரும்ப உருவாக்குவதற்கு சமுதாய திட்டமிடல் அவசியமாகும். அந்தத் திட்டமிடல் பொருள்வள ஆதாரங்களான நிலம், தண்ணீர், கனிம வழங்கள், தொழிலாளர்கள் மற்றும் சாதனங்களை விரிவான அடிப்படையில் மதிப்பீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். திட்டமிடல் ஜனநாயக அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும், அந்த பிராந்தியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உழைக்கும் மக்களுடன் முழு ஆலோசனை கலக்க வேண்டும் மற்றும் அவர்களை மையப்படுத்தி மறுசீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சந்தைப் பொருளாதாரத்தின் குழப்ப நிலையும் பெருநிறுவன அமெரிக்காவின் இலாப நோக்கங்களும் மக்களது தேவைகளுக்கு அடி பணிந்து நடக்கச் செய்ய வேண்டும்.

இந்த கண்ணோட்டங்கள் அனைத்துமே நியூ ஓர்லியன்ஸ் மற்றும் வளைகுடா கடற்கரை பகுதிகளுக்கு மட்டுமே பொருந்துபவை அல்ல. அவை ஒட்டுமொத்த அமெரிக்க சமுதாயத்திற்கும் சம ஆற்றலோடு பொருந்துபவை. பல மில்லியன் உழைக்கும் மக்கள் ஒரு நாளைக்கு 24 அல்லது 48 மணிநேரம் வீசிய ஒரு பொருளாதார சூறாவளியால் நாட்கணக்காக மட்டுமல்ல ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில், மிகப் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு அவர்களது வாழ்க்கைத்தரம் முடங்கிக் கிடக்கிறது அல்லது பின்தங்கிவிட்டது. நவீன தொழில் நுட்பம் புரட்சிகரமயமாக்கப்பட்டு, சமுதாயம் ஒட்டு மொத்தமாக அளவிட முடியாத செல்வத்தை குவித்துக் கொண்ட பின்னரும் கூட இது நடந்திருக்கிறது.

1972 முதல் இன்று வரை, உயர் மட்டத்திலுள்ள ஒரு சதவீதம் பேர் தங்களது சமூக செல்வத்தை 19 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாற்றம் உழைக்கும் மக்களை பாதிக்கின்ற வகையில் கிடைத்திருக்கிறது. அவர்களது வாழ்க்கைத் தரம் குறைக்கப்பட்டது மற்றும் 1930 களிலும் 1960 களிலும் புதிய உடன்படிக்கை மற்றும் பெரிய சமுதாய சீர்திருத்தங்களின் கீழ் உருவாக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வளையங்களில் பெரும்பகுதி அழிக்கப்பட்டது உட்பட இரண்டு வகைகளிலுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிபோக்குகளை மேற்கொண்டதன் மூலம், ஆளும் வர்க்கம் அமெரிக்க சமுதாயத்தின் இழையோடும் கட்டுக்கோப்பை சூறாவளிகளைவிட, பூகம்பங்களைவிட, சுனாமிகளைவிட அல்லது பயங்கரவாத தாக்குதல்களை விட அதிகமாக சேதப்படுத்திவிட்டது.

வறுமையும், ஒடுக்குமுறையும், சமுதாயத்தில் நிலவுகின்ற துன்பங்களும் ''இயற்கை'' இயல்நிகழ்ச்சியல்ல. அவைகள் ஒரு முதலாளித்துவ முறையின் உற்பத்தியாகும். சமூக தேவைகள் தோன்றுகின்ற ஒவ்வொரு திருப்பத்திலும் தனிப்பட்டவர்களின் மூர்க்கமான இலாப நோக்குகள் மோதுகின்றன. கத்திரினா சூறாவளியால் ஏற்பட்ட அனுபவம் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக ஆக வேண்டும். அது ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளிலிருந்து முற்றிலும் சுயாதீனமாக செயல்படுகின்ற அடிப்படையிலும் உழைக்கும் மக்களின் ஒரு வெகுஜன அரசியல் இயக்கத்தை வளர்ச்சியடையச்செய்ய ஒரு ஊக்குவிப்பாக அமையவேண்டும். இந்த முன்னோக்கை ஏற்றுக் கொள்ளுகின்ற இளைஞர்களும் உழைக்கும் மக்களும் அதற்காக போராட விரும்புபவர்களும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர வேண்டும்.

See Also :

நியூ ஓர்லியன்ஸ்: இராணுவ சர்வாதிகார காட்சி

கேட்ரினாவின் பேரழிவுகரமான தாக்கத்தின் அரசியல் பொறுப்பை தட்டிக்கழிக்க வாஷிங்டன் முயலுகிறது

Top of page