World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

Lecture two: Marxism versus revisionism on the eve of the twentieth century

இரண்டாம் விரிவுரை: இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பொழுதில் மார்க்சிசத்தை எதிர்த்து திருத்தல்வாதம்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

By David North
2 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

இது "இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பொழுதில் மார்க்சிசத்தை எதிர்த்து திருத்தல்வாதம்" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன் அன் ஆர்பரில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில், ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20, 2005 வரை நிகழ்த்திய இரண்டாம் விரிவுரையின் மூன்றாம், மற்றும் இறுதிப் பகுதியாகும். முதல் இரு பகுதிகளும் தமிழில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 7ம் தேதிகளில் வெளிவந்தன.

இது கோடைப் பள்ளியில் அளிக்கப்பட்ட இரண்டாவது விரிவுரையாகும்."ரஷ்ய புரட்சியும், இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்று பிரச்சினைகளும்", என்ற தலைப்பில் டேவிட் நோர்த்தினாலேயே வழங்கப்பட்ட முதல் விரிவுரை நான்கு பகுதிகளாக ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையில் வலைத் தளத்தில் பதிவிடப்பட்டது.

அடுத்ததாக, டேவிட் நோர்த்தினால் வழங்கப்பட்ட "போல்ஷிவிசத்தின் தோற்றுவாய்கள் மற்றும் என்ன செய்ய வேண்டும்?" என்ற மூன்றாவது விரிவுரை, ஏழு பகுதிகளாக தமிழில் வெளியிடப்படும்.

மார்க்சிசத்தின் வெற்றி

19ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளின்போது ஐரோப்பிய சோசலிச இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது மார்க்சிசத்தின் செல்வாக்கு ஆகியன உலக வரலாற்றில் மிகவும் அசாதாரணமான அரசியல் மற்றும் அறிவார்ந்த இயல்நிகழ்ச்சி ஆகும். 1849ம் ஆண்டின் இறுதியில் மார்க்சும், பின்னர் ஏங்கல்சும் இங்கிலாந்திற்கு அரசியல் அகதிகளாக வந்திறங்கினர். இதற்கு அடுத்த இரு தசாப்தங்களில், மிகுந்த சொந்த இடர்ப்பாடுகள் நிறைந்த சூழ்நிலையில், முதலாளித்துவ சமுதாயத்தின் இயக்க விதிகள் பற்றிய தத்துவார்த்த ஆய்வை மார்க்ஸ் மேற்கொண்டார். 1863 ஜனவரி 8ம் தேதி, ஏங்கல்சுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இருந்து துன்பத்தை பொறுத்துக்கொள்ளும் எத்தகைய மன நிலையில் மார்க்ஸ் இருந்தார் என்பது பற்றி நாம் அறிய முடிகிறது:

"நம்முடைய வட்டத்தில் ஒவ்வொருவருக்கும் துரதிருஷ்டம் ஏன்தான் துரத்துகிறதோ என்பதை சாத்தான்தான் அறியமுடியும். எந்தப்புறம் செல்வது என்பது தெரியாமல் நான் திகைத்து நிற்கிறேன். பிரான்சிலும், ஜேர்மனியிலும் பணம் திரட்டுவதற்கு நான் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை; இரண்டு வாரங்களுக்கும் மேலாக வறுமைப் புயலின் சீற்றத்தை 15 பவுன்கள் தாக்குப்பிடிக்க முடியாது என்பது அறிந்ததேயாகும். கசாப்புக் கடைக்காரரையும், ரொட்டிக்கடைக்காரரையும் தவிர, வேறு ஒருவரும் எங்களுக்கு கடன் கொடுக்க மாட்டார்கள் என்ற உண்மை ஒரு புறம் இருக்க (அச்சலுகையும் இந்தவார இறுதியுடன் முடிந்துவிடும்), பள்ளிக்கட்டணங்கள், வாடகை என்று அனைவராலும் பிடுங்கலுக்குட்பட்டுள்ளேன். கணக்கில் சில பவுன்கள் வைத்திருந்தவர்கள் தந்திரமாக அவற்றைப் பதுக்கிவிட்டு, என்னிடம்தான் இரட்டை வேகத்தில் சார்ந்து நிற்க முயலுகின்றனர். இதற்கும் மேலாக வெளியே செல்வதற்கு தேவையாக குழந்தைகளுக்கு உடைகளோ, காலணிகளோ இல்லை. சுருங்கக் கூறின், நரகத்தின் எல்லாக் கூறுபாடுகளும் சூழ்ந்துள்ளன...

"உங்களிடத்தில் இக்கொடுமைகளை இந்நேரத்தில் கூறுவது என்பது மிக மோசமான தன்னலம்தான். ஆனால் இது ஒரு ஹோமியோபதி மருந்து போல் ஆகும். ஒரு பெருந்துன்பம் என்பது மற்ற பெருந்துன்பத்தில் இருந்து சற்று மாறுதலைக் கொடுக்கும். மேலும், இறுதியாக பார்த்தால், நான் வேறு என்ன செய்யக்கூடும்? லண்டன் முழுவதும் நான் என்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லை; என்னுடைய வீட்டிலேயே மறுபுறத்தில் இருந்து வரும் வெடிப்புக்களை சமன்படுத்தும் வகையில் பெரும் மெளனத்தைக் கடைபிடிக்கிறேன். இத்தகைய சூழ்நிலையின் கீழ் பணிசெய்வது என்பது கிட்டத்தட்ட இயலாததாகும்."[1]

இந்தக் கடிதம் எழுதப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்புதான், ஆகஸ்ட் 1867ல் அவர் முடித்திருந்த மூலதனம் என்ற நூலுக்கு இன்றியமையாத முன்னுரையான, அவரை நினைவூட்டவல்ல வியத்தகு மூன்று தொகுதிகள் கொண்ட உபரி மதிப்பு பற்றிய தத்துவங்களின் (Theories of Surplus Value) முக்கிய பகுதியின் வரைவை மார்க்ஸ் எழுதி முடித்திருந்தார்.

அக்காலத்திய முதலாளித்துவ பொருளாதாரவாதிகளால் அதிகம் கவனிக்கப்படாமல் விடுபட்டு விட்டாலும், மூலதனம் எழுதப்பட்டு 25 ஆண்டுகளுக்குள்ளாக, மார்க்சிசம் ஐரோப்பாவில் முதல் வெகுஜனக் கட்சியின் வளர்ச்சிக்கு தத்துவார்த்த ஊக்கம் கொடுத்ததுடன், வழிகாட்டுதலையும் வழங்கியது. ஜேர்மனியில் இந்த வெற்றி ஏற்பட்டது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. Aufklarung (Englightenment- அறிவுவொளிக் காலத்தில்) சகாப்தத்தில் கலாச்சாரம் மற்றும் அறிவார்ந்த வாழ்வியற்கூறுபாடுகளில் கற்பனையும் செய்து பார்க்கமுடியாத பெரும் சிறப்பு நிலையை ஜேர்மனி எய்தியிருந்த நிலையில் மார்க்சிசம் முதன்முறையாக அந்நாட்டின் தொழிலாள வர்க்கத்திடையே பெரும் திரளானோரின் கவனத்தை ஈர்த்தது.

தொல்சீர் ஜேர்மன் தத்துவஞான கருத்துவாதத்தின் பரந்த மரபியம், மிக ஆழ்ந்த முறையில் கான்ட், Fichte, எல்லாவற்றிற்கும் மேலாக ஹெகெல் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது, 1848ம் ஆண்டு புரட்சிக்கு பின்னர் மார்க்ஸ், ஏங்கல்ஸ் மூலம் தொழிலாள வர்க்கத்திடம் சென்றடைந்தது. உண்மையில், அனைத்துவிதமான கருத்துவாதப் பொறிகளைத் தவிர்த்து, விமர்சனரீதியாக சடரீதியான அடிப்படையில் மறுவேலைசெய்தல், இயற்கையில் வேரூன்றி நிற்றல், மனித சமுதாயத்தின் பொருளாதார அடிப்படைகளை ஆய்வு செய்வதை நோக்கி இயக்குதல் என்ற வழிவகையில், ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் விடுதலையில் மெய்யியல் ஆற்றவிருந்த முக்கிய பங்கை மார்க்ஸ் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தார். 1843ல் அவர் எழுதினார்:

"விமர்சனம் என்னும் ஆயுதத்தை, நிச்சயமாக ஆயுதங்களின் விமர்சனத்தினால் பதிலீடு செய்யமுடியாதுதான், சடரீதியான சக்தி, சடரீதியான சக்தியால்தான் தூக்கிவீசப்படமுடியும்; ஆனால் தத்துவமும் கூட அது மக்களைப் பற்றிக் கொண்டதும் ஒரு சடரீதியான சக்தியாக உருவெடுக்கும்."[2]

"பாட்டாளி வர்க்கத்தில் மெய்யியல் அதன் சடரீதியான ஆயுதங்களைக் கண்டுகொள்ளுவது போல பாட்டாளி வர்க்கமும் அதன் ஆன்மீக (spiritual) ஆயுதங்களை மெய்யியலிற் கண்டுகொள்ளும்... ஜேர்மனியனின் விடுதலை, மனிதகுலத்தவனின் விடுதலையாகும். இந்த விடுதலையின் தலை மெய்யியல் ஆகும், அதன் இதயம் பாட்டாளி வர்க்கமாகும். பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கமாக இருப்பதை இல்லாமற் செய்யாமல் மெய்யியலை ஒரு யதார்த்தமாக்க முடியாது, மெய்யியலை யதார்த்தமாக்காமல் பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கமாக இருப்பதை இல்லாமற் செய்ய முடியாது."[3]

இந்தப் பந்தி ஹெகலின் கருத்துமுதல்வாத மெய்யியலைப் பற்றி மார்க்ஸ் தனது விமர்சனத்தை ஆரம்பிக்குமுன் எழுதப்பட்டது ஆகும். ஹெகலின் கருத்துமுதல்வாத முறையின் அறிவுபூர்வமான கருவை பிழிந்தெடுத்து, அதாவது தன்னையே அந்நியப்படுத்திக் கொள்ளுவதாக ஹெகலால் உருவாக்கப்பட்ட இயங்கியல் வகையினங்கள் மற்றும் கருத்துப் படிவங்கள் மீது மீளவேலை செய்தல் மற்றும் முழுமுதல் கருத்து (Absolute Idea) இவற்றை சடரீதியில் மீளக்கட்டியமைத்தல் என்பது மகத்தான அளவில் தத்துவார்த்த-அறிவார்ந்த சாதனையாகும். ஆயினும், ஹெகலியனிசத்தை விஞ்சிநிற்பது என்பது ஊகச் சிந்தனையின் எல்லைக்குள் விமர்சனத்தை நடத்துவதன் மூலம் அடையப்பட முடியாததாகும். மார்க்சிற்கு முன்னரே ஜேர்மன் மெய்யியலாளரான ஃபயர்பாக், ஹெகலியனிசத்திற்கு ஒரு சடரீதியான விமர்சனத்திற்கான அஸ்திவாரத்தை ஏற்கனவே அமைத்திருந்தார். ஆனால் அவருடைய விமர்சனத்தின் வலிமை பெரும்பாலும் இயற்கைவாதம் மற்றும் அவருடைய சடவாதத்தின் இயந்திரவியற் பண்பினால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஃபயர்பாக்கால் மெய்யியல் ரீதியாய் கருக்கொண்ட "மனிதன்" இயற்கையில் வாழ்ந்தானே அன்றி, வரலாற்றில் வாழவில்லை. அத்தகைய வரலாறு அற்ற இருப்பு அனைத்து சமூக ஸ்தூலத் தன்மையையும் இழந்து நிற்கும்.

இவ்வாறு சிந்தனையைவிட சடத்தின் தலைமைச் சிறப்பை வலியுறுத்திய போதிலும், அந்த அடிப்படையில் மனித நனவின் வடிவங்களின் சிக்கல் வாய்ந்த பன்முகத் தன்மைக்கு ஃபயர்பாக் சரியான விடையைக் காணமுடியவில்லை. அதிலும் குறிப்பாக மனிதகுலத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் நனவில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஒரு சரியான விளக்கத்தை அவரால் தரமுடியவில்லை.

ஹெகல் 1770லும், ஃபயர்பாக் 1804 லிலும் பிறந்த ஐரோப்பாவும் ஜேர்மனியும், பிரெஞ்சுப் புரட்சி மற்றும் நெப்போலியனின் போர்களின் எழுச்சிகளால் பெரும் மாற்றங்களுக்கு ஆளாயின. ஆனால் அத்தகைய நிகழ்வுகள் எவ்வாறு விளக்கப்படலாம்? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயர் எண்ணங்களின் வெறும் விளைவுகள்தான் அவையா? இந்த உயர் சிந்தனைகளின் சக்தியை ஒருவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றால், அவை எங்கிருந்து வந்தன? முழுமுதற் கருத்தின் சுய அந்நியமாதலில் தர்க்க ரீதியாக தீர்மானிக்கப்படும் கணங்களில் இந்த அரிய சிந்தனைகள் தோன்றின என்று ஹெகலால் கூறப்பட்ட விடை, ஸ்தூலமான வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின் விளக்கம் என்ற வகையில் போதுமானதாக இல்லை. மனிதனின் வலரலாற்றை, ஒரு சமூக இருப்பு என்ற நிலையின் அடிப்படையில் ஆராய்ந்தால்தான், ஒரு சடவாத அடிப்படையில், சமூக நனவின் மூலங்கள், வளர்ச்சி ஆகியவற்றை பெறமுடியும்.

வரலாறு பற்றிய சடரீதியான எண்ணக்கருவின் அடிப்படைக் கூறுபாடுகள் 1844ல் இருந்து 1847 வரையிலான அசாதாரணமான ஆண்டுகளில் மார்க்சாலும், ஏங்கல்சாலும் வளர்த்தெடுக்கப்பட்டன. அக்காலக்கட்டத்தில் அவர்கள், புனிதக் குடும்பம், ஜேர்மன் சித்தாந்தம், தத்துவத்தின் வறுமை இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகியவற்றை எழுதினர். இதற்கு அடுத்த 20 ஆண்டுகளில் மூலதனம் எழுதப்படுவதற்கு வகை செய்த அரசியல் பொருளாதாரம் பற்றிய மார்க்சின் ஆராய்ச்சி, ஆய்வின் இயங்கியல் வழிமுறை மற்றும் வரலாற்றின் சடவாதக் கருத்துரு ஆகிய இரண்டிற்கும் தத்துவார்த்த அளவில் ஆதாரங்களை வழங்கியது. 1859ம் ஆண்டை ஒட்டி அரசியல் பொருளாதாரத்துறையில் மார்க்சின் படைப்பு மிக முன்னேற்றமான கட்டத்தை அடைந்து, அவர் தன்னுடைய தத்துவார்த்த படைப்பின் "வழிகாட்டும் நெறியை" சுருக்கிக் கூறினார்:

"தங்களுடைய வாழ்விற்காக சமூக உற்பத்தியில் ஈடுபடும்போது, மனிதர்கள் தவிர்க்கமுடியாமல் திட்டவட்டமான உறவுகளைக் கொள்கின்றனர்; இவை இவர்களுடைய தனிவிருப்பத்தனின்றும் சுதந்திரமானவை; அதாவது அவர்களுடைய சடரீதியான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில், ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு தக்கவகையில் உற்பத்திஉறவுகள் இருக்கும். இந்த உற்பத்தி உறவுகளின் முழுமையில்தான் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு, உண்மையான அடித்தளம் இருக்கும், அதில்தான் சட்டபூர்வ, அரசியல் மேற்கட்டுமானங்கள் எழுகின்றன; சமூக நனவின் திட்டவட்டமான வடிவங்கள் அதற்கு ஒத்ததாக இருக்கும். சடரீதியான வாழ்வின் உற்பத்தி முறையானது, சமூக, அரசியல் மற்றும் அறிவார்ந்த வாழ்வின் பொதுவழிவகைகளை வரையறுக்கிறது. மனிதர்களுடைய நனவு ஒன்றும் அவர்களுடைய வாழ்வை நிர்ணயிக்கவில்லை; மாறாக அவர்களுடைய சமூக இருப்புதான் அவர்களுடைய நனவை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் சடரீதியான உற்பத்தி சக்திகள் நிலவும் உற்பத்தி உறவுகளுடன் ஒரு மோதலுக்கு வருகின்றன; அல்லது, இதையே சட்டபூர்வ சொற்களில் கூறவேண்டும் என்றால், இதுகாறும் அவர்கள் செயல்படுத்திவந்திருக்கும் சொத்து உறவுகளின் வடிவமைப்புக்களுடன் இந்த மோதல் வரும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி வடிங்களில் இருந்து, இந்த உறவுகள் அவர்களுடைய தளைகளாக மாறிவிடும்.

இவ்வாறு ஒரு சமூகப் புரட்சியின் சகாப்தம் தொடங்குகிறது. பொருளாதார அஸ்திவாரத்தில் ஏற்படும் மாறுதல்கள் விரைவிலோ, காலம் கடந்தோ, மிகப்பெரிய, முழு மேற்கட்டுமானங்களின் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும். அத்தகைய உருமாற்றங்களை ஆய்கையில், இயற்கை விஞ்ஞானத்தின் துல்லியத்துடன் தீர்மானிக்கப்படக்கூடிய உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளின் சடரீதியான உருமாற்றத்திற்கும், மற்றும் சட்ட, அரசியல், மத, கலை அல்லது மெய்யியல் என - சுருங்கக் கூறின், எந்த கருத்தியல் வடிவங்களில் இந்த பூசலைப் பற்றி மனிதர்கள் நனவாக இருந்து, தீர்க்க முயல்கின்றனரோ அந்த கருத்தியல் வடிவங்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்த்தல் எப்பொழுதும் இன்றியமையாததாகும். ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை வைத்து, ஒருவர் எவ்வாறு அவரை மதிப்பீடு செய்வதில்லையோ, அதேபோல்தான், மாற்றங்கள் நிகழும் காலத்தைப் பற்றிய மதிப்பீட்டை அதன் நனவின் மூலம் மதிக்க முடியாது; ஆனால் இதற்கு மாறாக, இந்த நனவானது சடரீதியான வாழ்வில் இருக்கும் முரண்பாடுகளை கொண்டு, உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் இடையே நிலவும் மோதலைக் கொண்டு விளக்கப்பட வேண்டும்."[4]

கிட்டத்தட்ட 150 ஆண்டுகளின் பின்னரும்கூட, இந்தப் பந்தியில் முன்வைக்கப்பட்டுள்ள தர்க்க அழகு, சொல்லாட்சித்திறன் இவற்றின் ஊடுருவிச் செல்லும் ஆற்றல் வியப்பையும் மலைப்பையும் தரும். வரலாற்றின் உந்து சக்தியை பற்றியும், மனிதனின் சமூக நனவு அதன் சிக்கல்கள் நிறைந்த அனைத்து வடிவமைப்புக்களிலும் மார்க்சினால் விரிவாக்கப்பட்டிருப்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பின்நவீனத்தின் சிடுமூஞ்சித்தனமான ஊகமாய் கொண்ட ஆய்வுப்பொருள் எவ்வளவு அற்பத்தனமும், அறிவுப் பக்குவமற்றதன்மையும் வெளிப்படையாக கூறினால் முட்டாள்தானத்தையும் அவநம்பிக்கைத்தன்மையையும் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகும். 1859ன் மற்ற அயர வைக்கும் சாதனையான டார்வினின் உயிரினங்களின் தோற்றம் (Origins of the Species) போலவே, மார்க்ஸ் தன்னுடைய, அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு (A Contribution to the Critique of Political Economy) என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் முன்வைத்துள்ள தத்துவார்த்த கருத்துருக்கள் மனிதகுலத்தின் அறிவார்ந்த வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லை குறிக்கின்றன. உண்மையில் இரண்டு படைப்புக்களுக்கும் இடையே ஓர் ஆழ்ந்த, உள்ளார்ந்த தொடர்பு உள்ளது. இந்தப் படைப்புக்களுடன் மார்க்ஸ், வரலாறு பற்றிய ஆய்வையும், டார்வின் உயிரியில், மனித சமூக இயல் பற்றிய ஆய்வையும் எல்லாக் காலத்திற்கும் உரியதாக மாற்றினர் என்று மட்டுமே எளிதாய் கூறமுடியாது.

நிச்சயமாக அது உண்மைதான், அது சிறிய சாதனை அல்லத்தான். ஆனால் இப்படைப்புக்கள் அவற்றையும் விடக் கூடுதலாக ஒன்றைக் கொண்டுள்ளன. 1859 அளவில், டார்வின், மார்க்ஸ் படைப்புக்களில் மனித இனம் தன்னுடைய சொந்த உயிரியல் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிகளின் விதி ஆளுமை செய்யும் வழிவகைகளை ஆளுமை செய்யும் விதிகளை புரிந்து கொள்ள முடிந்த பொழுது, மனித இனம் இறுதியாக ஒரு கட்டத்தை வந்து அடைந்துவிட்டது. மனிதனின் சொந்த உயிரியல் மற்றும் சமூக பரிணாமத்தின் இதுகாறுமான நனவற்ற நிகழ்ச்சிப்போக்கில் அவனது நனவுபூர்வமான தலையீட்டிற்கான அறிவார்ந்த முன்தேவைகள் இப்போது வெளிப்பட்டுவிட்டன.

To be continued

Notes:

[1] Marx and Engels Collected Works, Volume 41 (New York: International Publishers, 1985), p. 442.

[2] Marx and Engels, Collected Works, Volume 3 (New York: International Publishers, 1975), p. 182.

[3] Ibid, p. 187.

[4] Preface to A Contribution to the Critique of Political Economy, Collected Works, Volume 29 (New York: International Publishers, 1987), p. 263.

Top of page