World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP public lecture in Colombo: new SLFP-UNP coalition to expand civil war

கொழும்பில் சோ.ச.க. பகிரங்க விரிவுரை: யுத்தத்தை விரிவுபடுத்த ஸ்ரீ.ல.சு.க - ஐ.தே.க. புதிய கூட்டு

By our correspondent
28 November 2006

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), கொழும்பில் நவம்பர் 14 அன்று, இரு பிரதான ஸ்தாபனக் கட்சிகளான ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.) முன்னெப்போதும் இல்லாத ஒரு கூட்டணியை ஸ்தாபித்துக்கொண்டதில் தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ள அரசியல் தொடர்பு பற்றியும் மற்றும் இலங்கையில் விரிவடைந்துவரும் உள்நாட்டு யுத்தம் பற்றியும் கலந்துரையாடுவதற்காக ஒரு பகிரங்க விரிவுரையை நடத்தியது.

நவம்பர் 10 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ மழைக்கும் மத்தியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த விரிவுரையில் பங்குபற்றினர். இவர்களில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் குடும்பத் தலைவிகளும் அடங்குவர். சிங்களத்தில் ஆற்றப்பட்ட இந்த விரிவுரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த சோ.ச.க அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க, தனது ஆரம்ப உரையில், ஸ்ரீ.ல.சு.க - ஐ.தே.க. கூட்டு புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தால் உருவாக்கப்பட்ட கடுமையான அரசியல் நெருக்கடியின் அறிகுறியாகும் எனத் தெரிவித்தார்.

"ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தன்னை 'சமாதான விரும்பியாகக்' காட்டிக் கொண்ட போதிலும், கடந்த நவம்பரில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஒரு தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பதன் மூலம் 2002ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் ஒவ்வொரு விதிகளையும் மீறினார்," என அவர் தெரிவித்தார்.

"கடந்த 50 ஆண்டுகளாக கசப்பான எதிரிகளாக இருந்த ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க, இப்போது யுத்தத்தை முன்னெடுக்கவும் கூட்டுத்தாபனங்களின் நிகழ்ச்சி நிரலான சந்தை சீர்திருத்தத்தை அமுல்படுத்தவும் ஒன்று சேர்ந்துள்ளன. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்கள் இந்த மறுசீரமைப்பின் சுமைகளை தவிர்க்க முடியாமல் சுமக்கத் தள்ளப்படுவர். இந்த மறுசீரமைப்பில் ஒரு சில செல்வந்தர்களே இலாபமடைவர்."

பிரதான உரையாற்றிய சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமாவார். அவர் தனது உரையின் ஆரம்பத்தில், யுத்தத்தால் அதிகரித்துவரும் அவலங்கள், சீரழிந்துவரும் வாழ்க்கை நிலைமை மற்றும் உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்கள் போன்ற ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஒரு வருட கால ஆட்சியின் கொடூரமான விளைவுகளை சபையோருக்கு நினைவூட்டினார்.

"கடந்த டிசம்பரில் இருந்து, 3,500 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 200,000 ற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக முகாங்களில் அகதிகளாக தள்ளப்பட்டுள்ளனர். இங்கு சுகாதார நிலைமைகள் பற்றாக்குறையாக உள்ளன. வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிட்டத்தட்ட 600,000 தமிழர்கள் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் இருப்பதோடு கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிற்கு படகுகளில் சென்றுள்ளனர்," என டயஸ் விளக்கினார்.

இந்த மொத்த எண்ணிக்கையானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மொத்த ஜனத்தொகையில் 10 வீதத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 11 மாதங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையே அர்த்தப்படுத்துகிறது என டயஸ் வலியுறுத்தினார்.

ஸ்ரீ.ல.சு.க--ஐ.தே.க கூட்டணி யுத்தத்திற்கு முடிவுகட்டும் என்ற மாயை பரப்பப்பட்டு வருகிறது என விளக்கிய விரிவுரையாளர், பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பொருளாதார ஆய்வாளரான தினேஷ் வீரக்கொடி எழுதியவற்றில் இருந்து மேற்கோள் காட்டினார்: "இந்த உடன்படிக்கை வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, ஏனெனில் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சி அதை அவசியமானதாக்கியுள்ளதோடு வடக்கு கிழக்கில் பேரழிவை நோக்கி நாங்கள் வேகமாக நகர்ந்துகொண்டிருப்பது போல் தோன்றுகிறது."

கடந்த ஆண்டு பூராவும் இராஜபக்ஷ மீண்டும் யுத்தத்திற்குத் திரும்பியதை ஐ.தே.க எதிர்க்கவில்லை. 1983ல் யுத்தத்தை தொடங்கி வைத்தது ஐக்கிய தேசியக் கட்சியே. அது 2002ல் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களுக்கு சென்றமை கொழும்பில் உள்ள வர்த்தகக் கும்பலின் தேவைகளையே பிரதிபலிக்கின்றது என டயஸ் சுட்டிக்காட்டினார்.

"பெரும் வல்லரசுகளின் அனுசரணையின் கீழ் ஐ.தே.க. அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானப் பேச்சுக்கள், யுத்தத்தின் அழிவை எதிர்கொண்டுள்ள சாதாரண மக்களின் தலைவிதி பற்றிய அக்கறையினால் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கவில்லை. அது புலிகளை கொழும்பு அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு தமது இலாபங்களை குவித்துக்கொள்ள தீவில் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துமாறு நெருக்கும் ஒரு தந்திரோபாயம் மட்டுமேயாகும். புஷ் நிர்வாகத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோள யுத்தத்தில்' இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான வாய்ப்பு வரவேற்பை அவர்கள் கண்டுள்ளனர்," என அவர் தெரிவித்தார்.

இராஜபக்ஷ கடந்த ஆண்டு பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார். அவர் புலிகளுக்கு எதிராக ஒரு மறைமுகமான ஆத்திரமூட்டல் யுத்தத்தை முன்னெடுக்க இராணுவத்தை அனுமதித்ததோடு, பின்னர் கடந்த ஜூலையில் புலிகளுக்கு எதிரான பகிரங்க இராணுவத் தாக்குதலுக்கு கட்டளையிட்டார். பாதுகாப்புப் படைகள் ஆரம்பத்தில் ஒரு சில வெற்றிகளைப் பெற்றதை அடுத்து, கொழும்பில் உள்ள ஊடக ஸ்தாபனங்கள் ஒரு இலகுவான வெற்றியை எதிர்பார்த்து இந்த யுத்தக் கொள்கையை கட்டி அணைத்துக்கொண்டன.

முன்னர் சமாதான முன்னெடுப்புகளை ஆதரித்த சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இருந்து டயஸ் மேற்கோள் காட்டினார். "நுணுக்குக்காட்டியில் மஹிந்த யுகம்" என தலைப்பிடப்பட்டிருந்த பிரதான கட்டுரை ஒன்றில், புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் "பாராட்டப்பட வேண்டியவை" என அந்த செய்தித்தாள் வலியுறுத்தியிருந்தது. "கொழும்பு, சர்வதேச மற்றும் நிதியுதவி சமூகத்திடமிருந்து ஒரு தொகை தொல்லையளிக்கும் எதிர்ப்புக்களை முகங்கொடுக்க வேண்டியுள்ளது. காரணம், இத்தகைய நிகழ்வுகளுக்கு அது பொறுப்பாளி என்பதனால் அல்ல. மாறாக இராஜபக்ஷ அரசாங்கமானது புலிகளுக்கு எதிரான பிரச்சார யுத்தத்தை முன்னெடுப்பதில் ஒரு வித்தியாசமான திறமையின்மையைக் காட்டுவதாலேயே ஆகும்," என அது தொடர்கிறது. தனது ஆலோசனையை வழங்கும் அந்த பத்தி எழுத்தாளர் இவ்வாறு பிரகடனம் செய்கின்றார்: "இதனை சரி செய்வதானது புலிகளுக்கு இராஜத்திர ரீதியிலும் அதே போல் இராணுவ ரீதியிலும் அழுத்தம் கொடுப்பதை இன்றியமையாததாக்கும்."

யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவுகட்டுவதன் பேரில் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒரு பெரும் கூட்டணியை அமைக்க அழுத்தம் கொடுப்பதற்காக, பெரும் வல்லரசுகள் 1997ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் லியம் பொஃக்ஸின் வருகை தொடக்கம் கடந்த காலத்தில் மேற்கொண்ட பலவித முயற்சிகளை விரிவுரையாளர் வெளிக்கொணர்ந்தார். சமாதான உடன்படிக்கைகள் எட்டப்படாவிட்டாலும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கையின் பேரில் அமுல்படுத்திய பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் உழைக்கும் மக்கள் ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடியை எதிர்கொள்ள வழிவகுத்தன. சிங்களப் மேலாதிக்கவாதத்தில் மூழ்கிப்போயுள்ள ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க. ஒரே ஒரு பதிலையே கொண்டிருந்தன: அது தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்த தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறிவிடுவதாகும். சமாதான அறிகுறிகளுக்கு மாறாக, இந்தப் புதிய கூட்டணி யுத்தத்தை உக்கிரமாக்குவதை நோக்கிய ஒரு நகர்வையே பிரதிநிதித்துவம் செய்கின்றது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அறிக்கையில் இருந்தும் டயஸ் மேற்கோள் காட்டினார். "கட்சிசார் அரசியலும் பிரதான கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியும் ஆட்சிக்கு வந்த தலைவர்களை பிரசித்தியற்ற ஆயினும் தீர்க்கமான மறுசீரமைப்புக்களை கைவிடத் தள்ளியது," என அது பிரகடனம் செய்கின்றது. சர்வதேச மற்றும் ஊள்ளூர் முதலீட்டாளர்கள் கோரும் "மறுசீரமைப்புகள்" தவிர்க்க முடியாமல் உழைக்கும் மக்களுக்கு மேலும் சுமைகளைத் திணிக்கும், என அவர் தெரிவித்தார்.

டயஸ் அதிகரித்துவரும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைப் பற்றியும் எச்சரிக்கை செய்தார். "இராஜபக்ஷ, ஐ.தே.க. யின் மெளன ஆதரவுடன், ஏற்கனவே அரசியலமைப்பையும் மற்றும் இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளையும் படு மோசமாக மீறத் தொடங்கியுள்ளார்." அரசாங்கமானது அரசியலமைப்பின் 17வது சரத்தின் கீழ் கோரப்பட்டுள்ள சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்கத் தவறியுள்ளது. இது இராணுவ நடவடிக்கைகள் பற்றிய பத்திரிகை தணிக்கைகள் மற்றும் யுத்தத்திற்கு எதிரான படைப்புக்களை வெளியிடும் கலைஞர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் ஊடாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரிவுரையாளர் இரு கட்சிகளதும் வரலாற்றையும் விவரித்தார். ஐ.தே.க. யிற்கு எதிரான பரந்த தொழிலாளர் வர்க்க எதிர்ப்பை தடம்புறளச் செய்யவும் திசைமாற்றவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே 1951ல் ஸ்ரீ.ல.சு.க. அதன் தலைவர் எஸ்.டிபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவால் ஸ்தாபிக்கப்பட்டது. சிங்கள பெளத்த பேரினவாதத்தை சோசலிச வாய்வீச்சுக்களுடன் ஒன்றிணைத்த பண்டாரநாயக்க, தனது கட்சியை வலதுசாரி ஐ.தே.க. யிற்கு எதிரான ஒரு மாற்றீடாக நிலைப்படுத்தினார். ஸ்ரீ.ல.சு.க. யின் வேலைத்திட்டம் சோசலிசம் அல்ல. மாறாக அது தேசிய பொருளாதார விதியை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

சில காலம் இரு கட்சிகளுக்கும் இடையில் அத்தியாவசிய வேலைத்திட்ட வேறுபாடுகள் இருந்தது கிடையாது. "இப்போது ஆளும் வர்க்கமானது இரு கட்சிகளைக் கொண்டிருக்கும் ஆடம்பரத்திற்கு முடிவுகட்டவும் மற்றும் சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய சகல சமூகத்தையும் சார்ந்த உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிரான வர்க்க யுத்தத்தை முன்னெடுக்க சக்திகளை இணைக்கவும் முடிவு செய்துள்ளது. இது அவர்களின் பலத்தின் அறிகுறியல்ல. மாறாக நகர்ப்புற அதே போல் கிராமப்புற வெகுஜனங்கள் இரு கட்சிகளில் இருந்தும் முற்றிலும் தனிமைப்படுவதை எதிர்கொண்டுள்ள அவர்களின் பலவீனத்தின் அறிகுறியாகும்," என டயஸ் கூறினார்.

"இராஜபக்ஷ, விக்கிரமசிங்க ஆகிய இருவருமே, தமது பொது யுத்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லவும், தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கவும் புஷ் நிர்வாகம் வழங்கும் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர். ஆயினும், அண்மையில் அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தலில், அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கமும் இளைஞர்களும் புஷ் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு காலனித்துவவாதத்திற்கு எதிராகவும் உள்நாட்டில் ஜனாநயக விரோத தாக்குதல்களுக்கு எதிராகவும் மிகச் சரியான அடியைக் கொடுத்துள்ளனர்.

"அமெரிக்க, இலங்கை மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர் வர்க்கம் தமது ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் சமூக சமத்துவத்தை அடைவதற்கு தேவையாக இருப்பது என்னவெனில், பூகோள முதலாளித்துவ அமைப்பை உலக சோசலிச ஒன்றியங்களால் பதிலீடு செய்யும் அனைத்துலக சோசலிச முன்நோக்காகும். ஸ்ரீலங்கா--ஈழம் சோசலிசக் குடியரசிற்கான எமது போராட்டமானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் அடிப்படையாகக் கொண்டுள்ள உலக முன்நோக்கின் முழுமையான பாகமாகும்," என டயஸ் தெரிவித்தார்.

விரிவுரையின் முடிவில் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டதுடன் சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸைக் கொன்றவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்குமாறு இலங்கை அதிகாரிகளைக் கோரி சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் முன்னெடுத்துள்ள பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மரியதாஸ் ஆகஸ்ட் 7 கிழக்கில் ஒரு கிராமப்புற நகரான முல்லிப்பொத்தானையில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் அல்லது அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழ் துணைப்படையினர் இந்தக் கொலையின் சந்தேக நபர்களாக இருக்கலாம். விரிவுரைக்கு வருகை தந்திருந்த பலர் சோ.ச.க.யின் மனுவில் கைச்சாத்திட்டனர்.

யுத்தத்தை நிறுத்துவதற்கான சோ.ச.க. யின் கொள்கை பற்றிய கேள்விக்கு பதிலளித்து டயஸ் விளக்கியதாவது: "எல்லாவற்றுக்கும் மேலாக பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வேலைத் திட்டம் நிலையானதாக இருக்கவேண்டும். தெற்காசியாவிலும் மற்றும் குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்திலும் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அரசுகள், யுத்தத்திற்குப் பிந்திய கட்டமைப்பின் துன்பகரமான அனுபவங்கள், பெரிய அல்லது சிறிய தேசிய அரசுகளை ஸ்தாபித்து பேணுவதன் ஊடாக ஜனநாயக சுதந்திரத்தை உணர்வது சாத்தியமற்றது என்பதை வாதத்திற்கிடமின்றி காட்டியுள்ளன. இது இலங்கை, பர்மா உட்பட இந்தியத் துணைக்கண்ட சோசலிச குடியரசிற்காக 1940ல் ட்ரொட்ஸ்கிஸ பி.எல்.பீ.ஐ. (இந்திய போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சி) முதலாவதாக விரிவுபடுத்திய எமது வேலைத்திட்டத்தின் வரலாற்றுப் பெறுமதியை மெய்ப்பித்துள்ளது.

"இதனாலேயே நாம் புலிகளின் தேசிய பிரிவினைவாத வேலைத் திட்டத்தை எதிர்க்கின்றோம். எமது போராட்டமானது முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான சுயாதீனமான போராட்டமொன்றில் ஈடுபடுவதற்காகவும் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காகவும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களையும் ஏழைகளையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டமாகும். இதற்கான முதற்படியாக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்றுமாறு தொழிலாளர் வர்க்கம் கோரிக்கை விடுக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார்.

கூட்டம் உத்தியோகபூர்வமாக முடிவடைந்ததை அடுத்து, சோ.ச.க. உறுப்பினர்களுடன் ஆர்வமான கலந்துரையாடல்கள் நடந்தன. கிழக்கில் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து வந்திருந்த இளைஞரான பிரசன்ன, 1983ல் யுத்தம் வெடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே பிறந்துள்ளார். அவர் இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்தது ஏன் என்பதை எமது வலைத் தளத்திடம் தெரிவித்தார்.

"நான் எனது வாழ்நாள் முழுவதையும் யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளின் ஊடாக கடத்தியுள்ளேன். எமக்கு பெரும்பாலும் யுத்தத்திற்கு முடிவு, ஒழுக்கமான தொழில் மற்றும் குறைந்த வாழ்க்கைச் செலவே தேவை. ஆனால் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் எதையும் செய்வதில்லை. ஸ்ரீ.ல.சு.க.--ஐ.தே.க கூட்டணி யுத்தத்தை நிறுத்தும் என நாம் நினைத்தோம். ஆனால் உங்களது விரிவுரையின் தலைப்பு ஒரு வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தது. அது எனக்கு அதிர்ச்சியூட்டியதோடு இந்த விரிவுரையில் என்னைப் பங்குபற்ற உந்தியது. மேலும், உங்களது கட்சியின் பெயர் சோசலிச சமத்துவம். நான் சமூக நிலைமைகளுக்கும் யுத்தத்திற்கும் எதிராக குரலெழுப்பாத ஜே.வி.பி. உட்பட பழைய இடதுசாரிக் கட்சிகளை வெறுக்கிறேன். நான் ஒரு புதிய கட்சியைத் தேடுகிறேன்."

ஒரு நிர்வாக அலுவலர் விளக்கியபோது, "நான் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகன் என்ற வகையில், சோ.ச.க. எப்பொழுதும் தொழிலாளர் வர்க்க நிலைப்பாட்டில் இருந்தே அரசியல் பிரச்சினைகளை நோக்கும் என்பது எனக்குத் தெரியும். ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க. கூட்டு முன்னெப்போதும் இல்லாதது என்பது எனக்குத் தெரியும். இந்த நகர்வு ஆபத்தானது என்பதை நான் உணர்ந்திருந்த போதிலும், என்னிடம் அதைப்பற்றிய உறுதியான கருத்து இருக்கவில்லை. சோ.ச.க. யைப் போல் உறுதியான மற்றும் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை முன்வைக்கும் வேறு அமைப்புகள் கிடையாது. அதனாலேயே நான் என்னுடன் தொழில் செய்யும் ஒருவரையும் அழைத்துக்கொண்டு வந்தேன்" என்று குறிப்பிட்டார்.