World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Half a million Sri Lankan plantation workers continue strike for higher pay

இலங்கையில் அரை மில்லியன் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக தொடர்ந்தும் வேலை நிறுத்தம்

By M.Vasanthan and S.Jayanth
14 December 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் அரை மில்லியன் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி இரண்டாவது வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை காலவரையறை இன்றி தொடர்வதில் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள போதிலும், தொழிற் சங்கங்கள், அரசாங்கம் மற்றும் தோட்ட உரிமையாளர்களும் இந்தப் பிரச்சாரத்திற்கு முடிவு கட்ட வழி தேடுவதில் நம்பிக்கையிழந்துள்ளனர். இந்தப் போராட்டமானது தொழிலாளர் வர்க்கத்தின் ஏனைய பிரிவினர் மத்தியிலும் இத்தகைய கோரிக்கைகள் எழுவதற்கான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

300 ரூபா அல்லது 3 அமெரிக்க டொலர்களுக்கும் குறைந்த நாள் சம்பளத்தை பெறுவதற்கான இந்த வேலை நிறுத்தம் டிசம்பர் 5 அன்று ஆரம்பமானது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) மற்றும் லங்கா ஜாதிக தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரு பிரதான தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் மத்தியிலும், ஒட்டு மொத்தமாக மத்திய மலையகப் பகுதிகளிலும் மற்றும் தென் மாவட்டங்களிலும் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். மூன்று வாரம் தொடர்ந்த மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தை அடுத்து, மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) மற்றும் மேலும் பல சிறிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தன.

கடந்த வாரம் பூராவும், பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், பல பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களுடன் விரிவான போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை குறிக்கும் முகமாக நகரங்களிலும் தோட்டங்களிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

தொழிற்சங்கத் தலைவர்கள் மீதான நம்பிக்கையீனம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. "300 ரூபா சம்பளம் கிடைக்கும் வரை போராடுவோம்"; "தொழிற்சங்கங்களுக்கு சந்தாவை நிறுத்துவோம்"; "எங்கள் மீது கூட்டு ஒப்பந்தத்தை திணிக்க வேண்டாம்"; "வாழ்க்கைச் செலவின்படி சம்பளத்தை உயர்த்து" போன்ற சுலோகங்களை தொழிலாளர்கள் உள்ளடக்கியிருந்தனர்.

டிச்பர் 6, ஆண்களும் பெண்களுமாக சுமார் ஆயிரம் தொழிலாளர்கள், டிக்கோயா, தரவளை, டன்பார் மற்றும் ஹட்டன் பிரதேசங்களில் இருந்து வந்து டிக்கோயா நகரில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் வட்டவளை பெருந்தோட்ட அலுவலகத்தை நோக்கி நடக்க முற்பட்ட போது ஆயுதம் தரித்த பொலிசாரினால் மீண்டும் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களின் பதாதைகளைக் கைப்பற்றவும் முயற்சித்தனர். தொழிலாளர்கள் அலுவலக கட்டிடத்தை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்ததோடு அங்கு இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் கொடும்பாவியையும் எரித்தனர்.

அதே தினம், ஹட்டன் நகரை நோக்கி ஊர்வலமாகச் சென்ற ஒஸ்போன் மற்றும் என் பீல்ட் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை பொலிஸ் தடுத்தது. "நாங்கள் பொலிசாரின் நடவடிக்கையை கண்டிக்கிறோம். நாங்கள் சமாதானமான முறையில் எமது சம்பளக் கோரிக்கையை முன்வைக்கின்றோம். ஆனால் ஊர்வலம் செல்வதற்கான எமது உரிமையை பொலிஸ் மறுக்கின்றது. நாங்கள் பங்கரவாத நடவடிக்கையிலா ஈடுபடுகிறோம்?" என தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.

அடுத்த நாள் அறுநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஹட்டன் நகரில் குவிந்தனர். ஊர்வலத்திற்கும் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவிக்கும் முகமாக நகரில் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. ஞாயிற்றுக் கிழமை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நுவரெலியாவில் ஊர்வலம் சென்றதோடு ஏனையவர்கள் மத்திய மலையக மாவட்டங்கள் பூராவும் நடந்த போராட்டங்களில் பங்குபற்றினர்.

இலங்கை தொழிலாளர் வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் தொழிற்சங்கத் தலைவர்கள், அதே போல் அரசாங்கம் மற்றும் முதலாளிமார்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது தெளிவு. இந்த வேலை நிறுத்தம், 1998ல் நடந்த தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டத்தின் பின்னர் இடம்பெறும் மிகப் பெரிய போராட்டமாகும்.

இ.தொ.கா, ம.ம.மு ஆகிய இரண்டும் அரசியல் கட்சிகளாகவும் அதே போல் தொழிற் சங்கங்களாகவும் இயங்குவதோடு தற்போது ஆளும் கூட்டணி அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கின்றன. இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ம.ம.மு தலைவர் பி. சந்திரசேகரன் ஆகிய இருவரும் அமைச்சரவை அமைச்சர்களாவர். முன்னணி தொழிற்சங்கத் தலவர்கள் எவரும் ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது ஊர்வலங்களிலோ பங்குபற்றாமல், வேலை நிறுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக மூர்க்கத்தனமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல.

டிசம்பர் 7-8ம் திகதிகளில் தொழில் அமைச்சர் அத்தாவுட செனவிரட்னவின் மத்தியஸ்தத்துடன் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமாருக்கும் இடையில் நடந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் காணப்படவில்லை. இலங்கை முதலாளிமார் சம்மேளனம், அடிப்படை நாள் சம்பளத்தை 160 ரூபா வரை அதிகரிக்கவும், மேலும் நிலையற்ற கொடுப்பனவாக 100 ரூபா வழங்கும் தமது நிலைப்பாட்டில் இருந்து நகரவேயில்லை. ம.ம.மு தலைவர் பி. சந்திரசேகரன் டிசம்பர் 9 அன்று ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை சந்தித்த போதும், எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. மீண்டும் திங்கட்கிழமை சங்கங்களுக்கும் முதலாளிமாருக்கும் இடையில் நடந்த இன்னொரு சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

தொழில் அமைச்சர் செனவிரட்ன திங்களன்று இரத்தினபுரியில் உரையாற்றிய போது, பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றன எனத் தெரிவித்ததுடன் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் திட்டினார். அரசாங்கமும் கம்பனிகளும் நஷ்டமடைந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், "அரசாங்கம் இந்த வேலை நிறுத்தத்திற்கு முடிவுகட்டத் தீர்மானித்துள்ளது" எனவும் எச்சரித்தார்.

செனவிரட்னவின் கருத்துக்கள், வேலைநிறுத்தம் இழுபட்டால் தொழிலாளர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவைகள் என்ற அடக்குமுறை விதிகளை திணிப்பதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் தயங்காது என்பதற்கான அறிகுறியே ஆகும். அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரப்படுத்துகின்ற நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்த அடுத்த நாள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. இந்த முடிவின் காலமுன்னேற்பாடு தற்செயலானதல்ல. இந்தச் சட்டத்தில் "பயங்கரவாதம்" பற்றி உள்ளடக்கப்பட்டுள்ள வரையறைகள், மிக விரிவானதும் மற்றும் எந்தவொரு முறையிலான அரசியல் எதிர்ப்பு அல்லது தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிராகவும் பயன்படுத்தக் கூடியதுமாகும்.

வேலைநிறுத்தக்காரர்கள் ஏற்கனவே குண்டர் கும்பல்களின் பயமுறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். திங்கள் இரவு, கொழும்பில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எட்டியாந்தொட்டையில் லெவன்ட் தோட்டத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஒரு கும்பல், தொழிலாளர்களை தாக்கியுள்ளது. காயமடைந்த இரு தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிசார் ஊடகங்களுக்குத் தெரிவித்த தகவலின்படி, இந்தக் குண்டர்கள் அரசாங்க நிறுவனமொன்றின் ஊழியர்களாவர். நிவித்திகலையில் கொலம்பகம தோட்டத்திலும் இது போன்ற சம்பவமொன்று கடந்த வெள்ளியன்று நடந்துள்ளது. தோட்ட லயன் வீடுகளுக்குள் நுழைந்த ஆயுதக் கும்பல், தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு அச்சுறுத்தியுள்ளது. இன்னுமொரு இடத்தில் ஒரு தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்த வேலை நிறுத்தம் தீர்க்கமான திருப்புமுனையை அடைந்துகொண்டிருக்கின்றது. வேலைநிறுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக தொழிற்சங்கத் தலைவர்கள் திரைக்குப் பின்னால் முதலாளிமாருடன் உடன்பாடு காண வெறித்தனமாக முயற்சித்துக்கொண்டிருக்கின்ற அதே வேளை, தொழிலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கும் வன்முறைகளுக்கும் முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம், ஏனைய தொழிலாளர் பகுதியினரும் சிறந்த ஊதியம் மற்றும் நிலைமைகளுக்காக போர்க்குணம் மிக்க பிரச்சாரத்தைத் தொடங்குவார்கள் என்பதையிட்டு அரசாங்கம் மேலும் மேலும் அமைதியிழந்துள்ளது. இங்கு அவசியமாகியிருப்பது என்னவெனில், 300 ரூபாவுக்கான ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைக்காக சமரசம் காண்பதல்ல. மாறாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் தாங்கமுடியாத வாழ்க்கை நிலைமைகள், வேலையின்மை மற்றும் வறுமைக்கும் முடிவுகட்டும் ஒரு உக்கிரமான பிரச்சாரமாகும்.

இத்தகைய போராட்டத்திற்கு இ.தொ.கா. அல்லது ம.ம.மு. தலைமை தாங்காது. "வேலைநிறுத்தம் செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச முன்நோக்கு" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையை வாசித்து அதில் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் பற்றி அக்கறை செலுத்துமாறு நாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த அறிக்கை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பரந்தளவில் விநியோகிக்கப்படுகிறது.