World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Striking plantation workers speak to the WSWS

வேலைநிறுத்தம் செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினர்

By our correspondents
14 December 2006

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் குழு, சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சில தோட்டத் தொழிலாளர்களுடன் உரையாடியது.

ஹட்டன் பிரதேசத்தில் தமிழ் பேசும் தொழிலாளர்களே மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களின் மூதாதையர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரித்தானிய பண்ணையாளர்களால் தென்னிந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக கொண்டுவரப்பட்டவர்கள். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறையான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலை முறைகள் இவர்களது வாழ்க்கையில் இன்னமும் எஞ்சியுள்ளன.

தமிழ் பேசும் தொழிலாளர்கள் குறைந்த சம்பளம் பெறும் அடிப்படை வசதி வாய்ப்பற்றவர்கள் மட்டுமல்ல, சிங்கள மேலாதிக்கவாதக் கருத்துப்போக்கால் வழிநடத்தப்படும் அரச இயந்திரத்தின் கீழ் திட்டமிட்ட பாரபட்சங்களுக்கு உள்ளாகுபவர்களுமாவர். இவர்களில் பெண் தொழிலாளர்களே மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாவர். இவர்கள் அதிக நேரம் தேயிலை கொழுந்து பறிப்பதோடு பின்னர் குழாய் தண்ணீர் மற்றும் மின்சார வசதி குறைபாடுகள் கொண்ட நெரிசலான வீட்டுக்குள் குடும்பத்தைப் பராமரிப்பதில் சிரமப்பட வேண்டும்.

பன்மூர் தோட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி விளக்கியதாவது: "எமது தற்போதைய சம்பளம் சாப்பாட்டுக்குக் கூட போதாது. நாம் எமது பிள்ளைகளின் கல்வி மற்றும் ஏனைய தேவைகளை நிவர்த்தி செய்வது எப்படி? நான் மாதம் 25 நாட்கள் வேலை செய்தால், என்னால் 3,500 ரூபா (35 அமெரிக்க டொலர்கள்) பெற முடியும்.

"விலைவாசி அன்றாடம் அதிகரிக்கின்றது. எனது பிள்ளைகள் படிக்கின்றார்கள். ஒரு பிள்ளை சாதாரண தரம் வரை படித்துவிட்டது. அதற்கு மேல் எங்களால் படிக்கவைக்க முடியாது. எமது வாழ்க்கை கடனில் தங்கியுள்ளது. நாம் எமது நகைகளையும் ஏனைய வீட்டுப் பொருட்களையும் சாப்பாட்டுக்காக அடகு வைக்க வேண்டியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் உள்ளூர் வட்டிக்காரர்களிடம் ஒரு நாளைக்கு 2 வீத வட்டிக்கு கடன் வாங்குவோம். தொழிற்சங்கங்களுக்கு இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்வதில் அக்கறை இல்லை. ஆனால் தொழிலாளர்கள் தாங்களாகவே நடவடிக்கையில் இறங்கினார்கள்."

மேலும் அவர் தனது அன்றாட நடவடிக்கைகளை விளக்கினார். "நான் காலையில் 5 மணிக்கு எழும்பி, சாப்பாடு செய்து, பிள்ளைகளை தயார்படுத்துவேன். பின்னர் 7.30 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு வேலைத் தலத்தை அடைவேன். பின்னர் பகல் சாப்பாட்டை தயார் செய்வதற்காக வீட்டுக்கு வந்து மீண்டும் 2 மணிக்கு வேலைக்கு நிற்க வேண்டும். பின்னர் 5 மணி வரை வேலை. தூரத்தைப் பொறுத்து சில வேளை நான் வீடு திரும்பும் போது 6 மணியாகிவிடும். பின்னர் நான் இரவு சாப்பாட்டை சமைக்க வேண்டும். நாங்கள் ஓய்வு எடுத்துக்கொள்வது சிறிது நேரம் தான்."

"எமக்கு குழாய் தண்ணீர் கிடையாது. தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் நடக்க வேண்டும். இங்கு (தோட்டத்தில்) சுகாதார வசதிகள் கிடையாது. ஆஸ்பத்திரிக்கு 5 கிலோமீட்டர் தூரம் போக வேண்டும். மகப்பேறு போன்ற கடுமையான நிலைமைகளின் போது நாங்கள் எங்கள் தோட்டத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாவலப்பிட்டிய ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். போக்குவரத்துச் செலவு 700 அல்லது 800 ரூபாவையும் நாங்களே செலுத்த வேண்டும். தோட்ட நிர்வாகம் எமக்கு உதவுவதில்லை.

''எமது தோட்டத்தில் பலருக்கு ஒழுங்கான வீட்டு வசதி கிடையாது. அவர்கள் கடினமான நிலைமைகளுக்குள் தற்காலிக குடில்களில் வசிக்கின்றனர். பெருந்தொகையான இளைஞர்களுக்கு நிரந்தர தொழில் இல்லாததோடு அவர்கள் கைக்காசுக்கு வேலை செய்கிறார்கள். அவர்கள் நிரந்தர நியமனம் பெற மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு வேலை செய்ய வேண்டும்."

நாட்டின் உள்நாட்டு யுத்தம் பற்றி அவரிடம் கேட்டபோது: "நாங்கள் இந்த யுத்தத்தை விரும்பவில்லை. எமக்கு சமாதானம் வேண்டும். இந்த யுத்தத்தால் எங்களது பிள்ளைகள் கொழும்புக்கு அல்லது வேறு எங்கேயும் வேலை தேடி செல்ல முடியாமல் உள்ளது. பொலிஸ் இளம் தமிழர்களை கொழும்பில் கைது செய்கிறது. தோட்டங்களில் பல இளைஞர்கள் தமது கல்வியை முடித்துவிட்டுள்ள போதிலும் அவர்களுக்கு இங்கு தொழில் கிடையாது. அவர்கள் வேலை தேடி கொழும்புக்குச் செல்ல வேண்டும்" என பதிலளித்தார்.

ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த எம். கனகரட்னம் தெரிவித்ததாவது: "தொழிற்சங்கங்கள் எங்களை தொடர்புகொள்ளாமல் (நிர்வாகத்துடனான) கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் எங்களது சம்பளத்தை தீர்மானிக்கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். எங்களது பிரச்சினைகளை அறிந்தவர்கள் நாங்கள் மட்டுமே. நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் அதைப் பற்றித் தெரியாது. எங்களது சம்பளத்தை நாங்களே தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் யுத்தத்திற்காக பில்லியன் கணக்கான ரூபாய்களை செலவு செய்கிறது. அவர்கள் எங்களுடைய சம்பளத்தை அதிகரிக்கத் தயாரில்லை. ஆனால் அவர்கள் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை இரட்டித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு சொகுசு வாகனங்கள் உண்டு. ஆனால் நாங்கள் இங்கு பட்டினி கிடக்கின்றோம்."

டிக்கோயாவைச் சேர்ந்த யோகராணி உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் தெரிவித்ததாவது: "தொழிற்சங்கத் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வீடுகளுக்கு வருவார்கள். நாங்கள் அவர்களை அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்கிறோம். 80 வயதானவர்களைக் கூட வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்று அவர்களது வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எமக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாவுக்காக போராடத் தயாரில்லை. நாங்கள் இப்போது தொழிற்சங்கங்களுக்கான சந்தாவை நிறுத்திவிட எண்ணுகிறோம்.''

பண்டாரவளைக்கு அருகில் ஐஸ்லபி தோட்டத்தில் இ.தொ.கா. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்ப மிகவும் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததாக ஒரு தொழிலாளர் குழுவினர் எமது வலைத் தளத்திற்குத் தெரிவித்தனர். உள்ளூர் இ.தொ.கா. தலைவர் விஸ்வலிங்கம் வீட்டுக் கதவுகளைத் தட்டி, தேயிலை விலை அதிகரிக்காமல் சம்பளத்தை அதிகரிப்பது நிர்வாகத்திற்கு சாத்தியமற்றது என வேலைநிறுத்தக்காரர்களுக்கு புரியவைக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். நாள் சம்பளம் 300 வரை அதிகரிக்கப்பட்டால் தொழிலாளர்கள் ஏனைய சலுகைகளை இழந்துவிடுவார்கள் என அவர் எச்சரிக்கை செய்தார். தொழிலாளர்களின்படி, அவர்கள் விஸ்வலிங்கத்திற்கு பதிலளித்து திருப்பி அனுப்பிவிட்டனர்: "சம்பளம் போதும் என்றால் ஏன் நீங்கள் போய் கொழுந்து பறிக்கக் கூடாது" என அவர்கள் அவரிடம் கேட்டனர்.

குருக்குதே தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களும் இ.தொ.கா. வைப் பற்றி இதே கதையையே தெரிவித்தனர்: "தேயிலை விலை எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை அவர்கள் எங்களுக்குத் தெரிவிப்பது கிடையாது. ஆனால் அவர்கள் 135 ரூபா மட்டுமே எங்களுக்குத் தருகிறார்கள். தோட்ட மருந்தகத்தில் உள்ள மருந்து பனடோல் மட்டுந்தான். பல மாதங்களாக இங்கு வைத்தியரோ தாதியோ கிடையாது. கடுமையாக சுகயீனமுற்ற தொழிலாளர்கள் லொறியில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். நாங்கள் செத்தால் அவர்கள் சவப்பெட்டிக்கு 2,000 ரூபாவும் குழிவெட்ட நான்கு தொழிலாளர்களையும் தருகிறார்கள்."

"நாளுக்குநாள் வசதிகள் மோசமாகிக்கொண்டு வருகின்றன. முன்னர் அவர்கள் எங்கள் லயன் அறைகளுக்கு சுன்னாம்பு பூசினார்கள். கொசு மருந்து தெளித்தார்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் துப்புரவு செய்தார்கள். இப்போது அவர்கள் ஒன்றுமே செய்வதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலும் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த சந்தர்ப்பத்திலும் (ம.ம.மு தலைவர்) சந்திரசேகரன் (வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்து) தனது அங்கத்தவர் தொகையை கூட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார். தொழிற்சங்கங்கள் தமது சந்தாப் பணத்தைப் பெறுவதிலேயே கவனமாக உள்ளன. எந்தவொரு தொழிற்சங்கமும் எங்களுக்கு எதுவும் செய்ததில்லை."

அவர்கள் 2003ல் உயிரிழந்த தோட்டத் தொழிலாளியும் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினருமான சன்முகம் சுந்தரலிங்கத்தின் வசனங்களை நினைவூட்டினர். "இன்று என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி அவர் எங்களுக்கு எச்சரிக்கை செய்தார். தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடவில்லை. தொழிலாளர்கள் போராடுவதற்கு அவர்களுக்கென்று ஒரு கட்சி வேண்டும். நாங்கள் இப்போது உண்மையை உணர்ந்து கொண்டுள்ளோம்."

See also :

இலங்கையில் அரை மில்லியன் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக தொடர்ந்தும் வேலை நிறுத்தம்