World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The Iraq war and the eruption of American imperialism

ஈராக்கியப் போரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பும்

பகுதி 1 | பகுதி 2

By Nick Beams
13 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க தலைமையிலான ஈராக்கிய படையெடுப்பு ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளதை குறிக்கும் வகையில் ஏப்ரல் 4 அன்று சிட்னியிலும், ஏப்ரல் 11அன்று மெல்போர்னிலும் நடந்த பொதுக் கூட்டங்களில் நிக் பீம்ஸ் ஆற்றிய உரையின் முதல் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரான பீம்ஸ் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் ஆவார்.

அரசியல் துறையில் சில நிகழ்வுகள் வரலாற்று நிகழ்வுப்போக்கில் அடிப்படை திருப்பு முனையை குறிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஈராக்கிய படையெடுப்பும், ஆக்கிரமிப்பும் அத்தகைய திருப்பு முனைகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை.

ஈராக்கின் மீது படையெடுப்பது என்ற முடிவை ஏற்கனவே கொண்டுவிட்ட புஷ் நிர்வாகம் செப்டம்பர் 2002ல் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் (National Security Strategy-NSS) என்பதை வெளியிட்டது. இந்த ஆவணம் தெளிவாகவும், குழப்பத்திற்கு இடமில்லாமலும் தன்னுடைய தேசிய நலன்களையும் பூகோள அளவிலான குறிக்கோள்களையும் செயல்படுத்தப்படுவதற்கு இராணுவ சக்தியை முன் கூட்டியே பயன்படுத்தும் உரிமை தனக்கு உண்டு என்பதை கூறியது.

"அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம்'' என்ற ஆவணம் ''நமது மதிப்புகள் மற்றும் நமது தேசிய நலன்களை ஒன்றிணைத்த வகையில் ஒரு தெளிவான அமெரிக்க சர்வதேசிய அடித்தளத்தை கொண்டு பிரதிபலிக்கும்'' என்று அறிவித்திருந்தது.

அல்லது, நன்கு அறியப்பட்டுள்ள பழமைவாத எழுத்தாளரான Atlantic Monthly இன் நிருபர் Robert Kaplan இன்னும் அப்பட்டமாக பிரச்சினையை பற்றி கூறியதுபோல், "பனிப்போரை நாம் வென்றதற்கான பரிசு நேட்டோவை (NATO) விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பிற்காகவோ, இதுகாறும் இல்லாத இடங்களில் ஜனநாயக தேர்தல்களை நடத்துவதற்கு என்றில்லாமல், இன்னும் பரந்த தன்மையை கொண்டிருக்கும்: அதாவது வேறு எவரும் இன்றி, நாம்தான் சர்வதேச சமூகத்திற்கு அது எப்படி இருக்க வேண்டும் எனக் கட்டளையிடுவோம்." (Warrior Politics, New York 2002, pp.144-45, வலியுறுத்ததல் மூலத்திலேயே உள்ளது.)

2002 அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் குறிக்கப்பட்ட கோட்பாடுகள் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை மாற்றத்தை தெளிவுபடுத்திக் கூறின. உலகின் மேலாதிக்கம் மிகுந்த ஏகாதிபத்திய சக்தி என்னும் முறையில் அமெரிக்கா முன்னரே தன்னுடைய நலன்களையும், இலக்குகளையும் இரக்கமற்ற முறையில் பின்தொடர்ந்ததுடன், தேவையானபோது இராணுவ சக்தியையும் பயன்படுத்தியுள்ளது. போர்கள், இராணுவத் தலையீடுகள், அரசியல் கொலைகள், இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆட்சிக் கவிழ்புக்கள் என்று பலவும் நீண்ட காலமாக நடத்தப்பட்டமை இதற்கு தக்க சான்றுகள் ஆகும்.

ஆனால் அவை அனைத்தும் கொள்கை அளவிலேனும் அரசியல் நோக்கங்களை அடைய இராணுவ சக்தி ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்தக்கூடாது என்ற கருத்தை ஒட்டித்தான் இருந்தன. நூரெம்பேர்க் போர்க்குற்றங்கள் விசாரணை நாஜி ஆட்சியின் பிரதிநிதிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டபோது அக்கருத்துத்தான் அடிப்படையாக இருந்தது; அதாவது நாஜிக்கள் ஆக்கிரமிப்பு போரை கொள்கைக் கருவியாக பயன்படுத்தினர் என்பதே அது.

தன்னுடைய சுருக்க உரையில் அந்த விசாரணையில் தலைமை அமெரிக்க வக்கீலாக இருந்த Robert Jackson அறிவித்திருந்தார்: "ஆக்கிரோஷமான போர், ஒரு கொள்கையின் கருவியாகும் என்ற நினைப்பில் ஜேர்மனி அதில் ஈடுபட்டதற்குக் காரணமாக இருந்த உந்துதல்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் இவற்றின்மீது விசாரணை நடத்தவில்லை; மாறாக சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு என்ற குற்றத்தைத்தான் சாட்டுகிறோம். இருக்கும் நிலையில் காணப்படும் நன்மை, தீமை பற்றி அரசியலைம்போல் சட்டம் அதனை கருத்தில் கொள்ளுவதில்லை; அதே போல் குறைகளின் மதிப்புத் தன்மையையும் அது பொருட்படுத்துவது இல்லை. இருக்கும் நிலையை மாற்ற வன்முறைத்தாக்குதல் கூடாது என்றும் கொள்கைகள் போர் மூலம் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதே கட்டாய தேவையாகும். இன, கலாச்சார குழுக்களை கடந்து, பொருளாதார தடைகளை கடந்து 1930களில் முரண்பாடான தேசிய பேரவாக்கள் இருந்திருக்கும் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம்; அதேபோல் அவை ஜேர்மனிக்கும் ஐரோப்பாவிலுள்ள மற்ற மக்களுக்கும் தொடர்ந்து பெரும் சிக்கல்களை தோற்றுவிக்கவும் கூடும். அதேபோல் போருக்கு மாற்றாக கெளரவமான ஏற்கத்தக்க அரசியல், சட்ட தீர்வுகளை உலகம் கொடுக்கவில்லை என்பதையும் நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம். எங்களுடைய நாடு உட்பட எந்த நாடும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது ஒழுக்க நெறியையோ, புத்திசாலித்தனத்தையோ கைவிட்டுவிடக் கூடாது என்பதையும் கூறுகிறோம். ஆனால் 1939க்கு சற்று முன்னர் இருந்தது போல், இப்பொழுதும், ஜேர்மனியோ அல்லது எந்த நாடோ தன்னுடைய குறைகளை தீர்க்க அல்லது விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபடுவது சட்டவிரோதமானதும் குற்றம் சார்ந்ததும் என்று உறுதியாக கூறுகிறோம்."

ஆக்கிரமிப்பு நெறியை கொண்ட போரை தொடர்தல் -- இதில் இருந்துதான் ஹிட்லருடைய ஆட்சியின் மற்றய குற்றங்கள் விளைந்தன.

அக்டோபர் 1937ல் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் நிகழ்த்திய புகழ்வாய்ந்த உரை ஒன்றில் சர்வதேச அமைதி பற்றிய நம்பிக்கைகள், "தற்போதைய பயங்கரவகை ஆட்சி மற்றும் சர்வதேச சட்டமற்ற தன்மையினால், பெரும் அழிவை உணர்த்தும் சஞ்சலமான அச்சத்திற்கு" வழிவிட்டுள்ளது என்று கூறினார். "மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் நியாயமற்ற தலையீட்டினால் அல்லது ஒப்பந்தங்களை மீறிய வகையில் பிறருடைய நிலத்தின் மீது படையெடுப்பு நிகழ்த்துவதால் இப்புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது" என்றும் அவர் தொடர்ந்து கூறினார். இதையொட்டி நாகரிகத்தின் அஸ்திவாரங்களே தீவிர அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள கட்டம் வந்துவிட்டது. நாகரிகம், சட்டம் ஒழுங்குச் சிறப்புக்கள் ஆகியவற்றின் முன்னேற்றத்தை காட்டிய சிறப்பு மரபுகள், நிலைப்பாடுகள் ஆகியவை அழிக்கப்பட்டு வருகின்றன. உலக சட்ட சீர்குலைவு தொற்று நோய் போல் பரவியிருக்கும் நிலை வந்துள்ளது." என்று அவர் முடித்தார்.

இந்தக் கருத்துக்கள் எல்லாவற்றிக்கும் மேலாக நாஜி ஜேர்மனியை இலக்காக கொண்டவை. இன்றோ அதே வேகத்தில் அது சர்வதேச சட்டமற்ற தன்மையின் மையத்தில் உள்ள அமெரிக்காவிற்கு பொருந்தும்.

2001 செப்டம்பர் 11 நிகழ்வு "அனைத்தையும் மாற்றிவிட்டது" என்றும் நாகரிகத்தின் மதிப்பீடுகளுக்காக பயங்கரவாதத்தின்மீதான உலகப் போரில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாகவும் புஷ்ஷின் தலைமைப் பிரச்சாரகரான டோனி பிளேயர் கூறிய வகையில் இராணுவ முறையின் வெடிப்ப நியாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் மாறியுள்ளது எது? இங்கு 2002 அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணம் வெளிப்படையாகவே கூறுகிறது: "செப்டம்பர் 11, 2001 நிகழ்வுகள் அமெரிக்காவிற்கும் உலகசக்தியின் மற்ற முக்கிய அதிகார மையங்களுக்கும் இடையே உள்ள உறவின் பின்னணியை அடிப்படையிலேயே மாற்றிவிட்டதுடன், பரந்த, புதிய வாய்ப்புக்களைத் திறந்துள்ளது." அந்த வாய்ப்புக்கள் யாவை? ஆவணம் மேலும் விளக்க முற்பட்டுள்ளது; "அமெரிக்க இராணுவ வலிமையின் இன்றியமையாத பங்கினை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது."

செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு மாறுதல் தரும் பங்கை செய்துள்ளன; ஆனால் இது ஒன்றும் புஷ், பிளேயர் மற்ற ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் கூறுவது போல் அல்ல. பயங்கரவாதத்தின்மீதான போர் என்ற கூற்று உலகம் முழுவதும் தன்னுடைய தேசிய இலக்குகளை அடைவதற்கு இராணுவ சக்தியை பயன்படுத்தும் உரிமையை வலியுறுத்தும் போலிக்காரணத்தை கொடுத்துள்ளது; அதாவது எந்தப் போக்கு போர்க்குற்றவாளிகள் என்று நாஜித் தலைவர்களை உட்படுத்த காரணமாக இருந்ததோ, அதே போக்குத்தான் பின்பற்றப்படுகிறது.

அண்மையில் அமெரிக்க அரச செயலாளர் கொாண்டலிசா ரைஸ் ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்தி பேசிய கருத்துக்களை ஆராய்வோம். போர் தொடக்கப்படுவதற்கு முன், பேரழிவு ஆயுதங்களை பற்றி மிகத் தீவிரமான எச்சரிக்கைகளை ரைஸ் வெளியிட்டார். "புகைக்கும் துப்பாக்கிகள்", "காளான் மேகங்கள்" வடிவில்கூட வந்துவிடக் கூடும் ஆதலால், பேரழிவு ஆயுதங்கள் பற்றிய நிரூபணத்திற்காக அமெரிக்கா காத்திருக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்கள் அம்பலப்படுத்தப்பட்ட பின்னர், புதிய நியாயப்படுத்தும் தொகுப்புக்கள் இப்பொழுது முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் பிரிட்டனுக்கு வருகை புரிந்தபோது வெளியுறவுக் கொள்கை வல்லுனர் குழு ஒன்றிடம் மார்ச் 31 அன்று பேசிய ரைஸ் விளக்கியதாவது: "சாதாம் ஹுசைனை மத்தியில் கொண்டிருந்தாாலும் வேறுபட்ட மத்திய கிழக்கை நீங்கள் எதிர்கொள்ளப்போவதில்லை." என குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துக்கள் மார்ச் 26ம் தேதி NBC யின் "செய்தி ஊடகத்தை சந்திக்கவும்" என்ற பேட்டியை தொடர்ந்து வந்தவை; "9/11 அன்று சிலர் விமானங்களை கட்டிங்களின் மீது மோதினர் என்ற நிகழ்வு மட்டுமே நடந்தது என்று நீங்கள் நம்பினால், நாங்கள் 9/11 அன்று எதிர்கொண்ட நிகழ்வை பற்றி ஒரு குறுகிய கண்ணோட்டத்தைத்தான் நீங்கள் கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். மத்திய கிழக்கு முழுவதும் படர்ந்திருக்கும் வெறுப்பு சிந்தனைப் போக்கின் விளைவை நாங்கள் சந்தித்தோம்; அந்த பழைய மத்திய கிழக்கின் ஒரு பகுதியாக சாதாம் ஹுசைன் இருந்தார். புதிய ஈராக் புதிய மத்திய கிழக்கின் ஒரு பகுதியாக இருக்கும்; நாங்களும் பாதுகாப்பாக இருப்போம்."

வேறுவிதமாக கூறினால், அமெரிக்க அங்கு இருக்கும் அரசியல் ஒழுங்கில் திருப்தி அடையாமல், அதை இராணுவ வலிமை கொண்டு மாற்ற முற்பட்டது. ஆனால் இதே குற்றத்திற்குத்தான் நாஜிக்கள் குற்றவாளிகள் எனத் துல்லியமாக தண்டிக்கப்பட்டனர். அமெரிக்க வக்கீல் அப்பொழுது கூறியதாவது: "ஒரு நாடு எவ்வாறான துன்பகரமான நிலைமையில் இருந்தபோதிலும், அதன் இருக்கும் நிலையை எத்தகைய விருப்பத்திற்குரியதற்றதாக இருந்தாலும் ஆக்கிரோஷமான போர்தொடுத்தல் என்பது அந்த நிலைமைகளை மாற்றுவதற்கு அல்லது பிரச்சனைகளை களைவதற்குமான சட்டவிரோதமான வழிவகைகள் ஆகும்."

தேசியப் பாதுகாப்பு மூலோபாயம் 2005

2002 தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணம் ஈராக்கிய படையெடுப்பிற்கு தயார் செய்யும் வகையில் இயற்றப்பட்டது என்ற தவறான கருத்து எவருக்கேனும் இருக்குமாயின், அது நீண்டகால வாஷிங்டனின் மூலோபாய இலக்குகளை பிரதிபதிக்கவில்லை என்ற தவறான கருத்து இருக்குமேயாயின், சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 2005 தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தை பற்றி குறிப்பிடுவதற்கு என்னை அனுமதியுங்கள்.

புஷ்ஷின் புதிய ஆவணத்திற்கான முன்னுரை கருத்துக்கள் ஏகாதிபத்திய அரசியல் வாதிகளின் பேச்சுக்களுக்கும் உண்மை நிலைக்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய பிளவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

ஆப்கானிஸ்தானில் ஒரு "புதிய ஜனநாயக அரசாங்கம்" எழுச்சி பெற்றுள்ளதாக அவர் விளக்கியுள்ளார். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ கடந்த மாதம் அந்நாட்டில் நிலைமை மிக மோசமாகி விட்டதால், அகதிகள் தாயகம் திரும்பவேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. ஆட்சி எத்தன்மையான ஜனநாயகத்தை கொண்டிருக்கிறது என்றால் இஸ்லாத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு நபர் மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.

அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து, அணுவாயுத சோதனைகள் நடத்தியுள்ள இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பு புஷ் "ஆபத்தான ஆயுதங்கள் பரவலில் உள்ள தீமை பற்றி உலகின் கவனத்தை நாங்கள் குவித்துள்ளோம்" என அறிவித்தார்.

"பரந்த மத்திய கிழக்கில் நாங்கள் ஜனாநாயகம் பரவுவதற்கு துணை நிற்கிறோம்" என்று புஷ் அறிவித்தார்; ஆனால் பாலஸ்தீனிய அதிகாரத்திற்கு நடந்த தேர்தலில் ஹமாஸ் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்த அங்கீகாரம் கிடையாது.

முடிவுரையாக புஷ் கூறியது: "ஈராக்கியர்களுடன் இணைந்து நின்று ஒன்றுபட்ட, உறுதியான, ஜனநாயக ஈராக்கை காக்க நாங்கள் போரிடுகிறோம் -- பயங்கரவாதத்தின் மையத்தானமான மத்திய கிழக்கில் ஒரு புதிய நட்புநாட்டை கொண்டுள்ளோம்." இது ஈராக் அன்றாடம் எரியூட்டும் நிகழ்வுகளை கொண்டுள்ளது என்பதை தவறாக்கும் கூற்றாகும்.

இன்றுவரை புதுப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தை பொறுத்தவரையில், அது தடுத்து நிறுத்த முடியாத போர் கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்துவது மட்டும் இல்லாமல் ஈராக்கிற்கு மட்டுமின்றி பரந்த அளவில் அது பயன்படுத்தப்படும் என்றும் தெளிவாக்கியுள்ளது. "தாக்குதல்கள் நடக்க இருப்பதற்கு முன்பே வலிமையை (Force) பயன்படுத்தும் உரிமையை அமெரிக்கா நிராகரிக்கவில்லை; எதிரி எங்கு, எப்பொழுது தாக்குதல் நடத்தக்கூடும் என்பது உறுதியாக இல்லாவிட்டாலும், இதே நிலைமைதான்." அதாவது, எந்த உறுதியான சான்றும் தேவையில்லை. நிர்வாகம் ஏதேனும் ஒரு இடத்தில் எப்பொழுதாவது தாக்குதல் நடக்கலாம் என்று நம்பினால் போதும்.

கடைசி தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணம் வெளிவந்த காலத்தில் ஈராக் இலக்காக இருந்தது. இப்பொழுது இராணுவ நடவடிக்கை ஈரானுக்கு எதிராக தயாரிக்கப்படுகிறது. "ஈரான் என்ற தனிப்பட்ட ஒற்றை நாட்டை தவிர கூடுதலான வகையில் அமெரிக்க பெரும் அறைகூவலை எதிர்கொள்ளாது" என்று ஆவணம் கூறுகிறது. மேலும் ஈரான் அணுவாயுத வளர்ச்சியை மறைத்துள்ளது என்ற கருத்தையும் பல முறை கூறியுள்ளது. இதன்பின்னர், அணுவாயுத பிரச்சினைகள் முக்கியம் என்றாலும், அமெரிக்காவிற்கு "பரந்த நலன்களும்'' என்று அது கூறுகிறது.

இதைத் தொடர்ந்து வழக்கமான ஆட்சேபனைகள் கூறப்படுகின்றன. ஈரான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கிறது, இஸ்ரேலை அச்சுறுத்துகிறது, ஈராக்கில் ஜனநாயகத்திற்கு தடைகள் கொடுக்கிறது, தன்னுடைய மக்களின் சுதந்திர விருப்புகளை மறுக்கிறது என்பனவையே அவை. "அணுவாயுத பிரச்சினை மற்றும் எங்கள் பிற விடயங்களும் இறுதியில் ஈரானிய ஆட்சி மூலோபாயரீதியாக இந்தக் கொள்கைகளை மாற்றிக் கொண்டு, தன்னுடைய அரசியல் முறையை வெளிப்படையாக அமைத்து, மக்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் தீர்க்கப்பட முடியும். இதுதான் அமெரிக்க கொள்கையின் இறுதி இலக்காகும்." என்றும் அது கூறுகிறது.

வேறு விதமாகக் கூறினால், அணுப் பிரச்சினை ஒரு போலிக்காரணம் ஆகும். ஈரானிடம் அமெரிக்க கொள்கையின் உண்மையான இலக்கு ஆட்சி மாற்றமாகும் -- அதாவது ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுதல்; அவ்வாட்சி அமெரிக்க கட்டளைகளை நிறைவேற்றி 1979ல் ஷா விரட்டியடிக்கப்படுவதற்கு முன்னால் இருந்த நிலைமையை மீண்டும் உருவாக்கவேண்டும்.

அமெரிக்காவில் மூலோபாய இலக்கு தன்னுடைய நலன்களுக்கு ஏற்ப உலகை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணம் தெளிவாக்கியுள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் மக்கள் "ஏமாற்றுத்தனமான தடையற்ற சந்தை முறையை எதிர்க்கும்" கருத்துக்கள் நிராகரிக்க வேண்டும்; அவை முக்கியமாக வெனிசூலாவில் Hugo Chavez உடன் தொடர்புடையவை ஆகும். ரஷ்யாவை பொறுத்தவரையில் "அது ஐரோப்பாவில் மட்டும் இல்லாமல் தன்னுடைய அண்டை பகுதிகளிலும் பெரும் செல்வாக்கை கொண்டுள்து; இன்னும் கூடுதலான வகையில் மத்திய கிழக்கு, தெற்கு, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளிலும் கொண்டுள்ளது. அது தன் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் என்ற மதிப்பீடுகளுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்; மேலே கூறப்பட்ட பகுதிகளில் சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றிற்கு எவ்விதத் தடையும் கொடுக்கக்கூடாது." அதாவது, ரஷ்யா அமெரிக்காவின் ஆணைகளுக்குட்பட்டு நடந்து கொள்ள வேண்டும்.

ஆவணத்தின் மிக முக்கியமான கூறுபாடுகளில் ஒன்று பொருளாதாரம் மற்றும் இராணுவ பிரச்சினைகளை பிணைத்துள்ளது; அதிலும் குறிப்பாக இது சீனாவைப் பொறுத்தவரையில் நன்கு உணர்த்தப்பட்டுள்து. தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தின்படி, அமரிக்கா சீனாவிற்கு "சீர்திருத்தம், வெளிப்படையாக நடந்து கொள்ளும் பாதை" இவற்றை அடைய பெரும் ஊக்கம் கொடுக்கும். ஆனால் கீழ்க்கண்ட எச்சரிக்கையும் தொடர்கிறது: "பழைய முறைகள், சிந்தனை போக்கு, நடந்து கொள்ளும் முறை இவற்றை சீனத் தலைவர்கள் இன்னும் தொடரக்கூடாது; அவை அப்பிராந்தியத்திலும் மற்றும் உலகம் முழுவதிலும் பிரச்சினைகளைத் தூண்டுபவையாகும்."

"பழைய வழிகள்" என்பவை யாவை? எதிர்பார்க்கும்படி, சீனாவின் இராணுவம் வெளிப்படையாக காண்பிக்கப்படாமல் பெருக்கத்திற்கு உட்பட்டுள்ளது --அதாவது அமெரிக்காவிடம் சீனா தன்னுடைய அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் தெரிவிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் இணைத்துள்ளனர். இதைத் தவிரவும் சில புதிய அக்கறைகள் உண்டு; அவற்றில் அடங்குவதாவது:

"வணிக விரிவாக்கம்; ஆனால் உலகம் முழுவதும் எரிசக்தி விநியோகங்களை "பூட்டி வைத்துக் கொள்ளல்", அல்லது பிறருக்கு தன் சந்தையை கொடுக்காது நேரடி சந்தைகளை நாடுதல்-- இவ்விதத்தில் இழிதன்மைக்குட்பட்டு விட்ட கடந்த கால வணிக முறையை தாங்கள் பின்பற்றலாம் என சீனர்கள் நினைப்பது." மற்றும் "மூலவளங்கள் நிறைய இருக்கும் நாடுகளை ஆதரித்தல்; அங்கு உள்ள தவறான ஆட்சி அல்லது அவை அப்பகுதியில் இருக்கும் மற்ற நாடுகளுடன் தவறாக நடந்து கொள்வதைப் பொருட்படுத்தாமல் இருப்பது."

வேறுவிதமாக கூறினால், சீன எரிசக்தி நிறுவனங்கள் அமெரிக்க சர்வதேச நிறுவங்களின் நடவடிக்கைகளுக்கு பூசல் விளைவிக்கும் நடவடிக்கைகள், அதாவது மற்ற நிறுவனங்களிடம் இருந்து எரிசக்தி வாங்கக்கூடாது, அல்லது பெருநிறுவனங்களோடு இணைந்துகொள்ளக் கூடாது. மேலும் பெய்ஜிங் மூலவளங்கள் கொழிக்கும் ஈரான் போன்ற நாடுகளுடன் நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளக்கூடாது; எங்கெல்லாம் அமெரிக்க பூகோள-அரசியல் நலன்களுடன் போட்டி வரக்கூடுமோ, அவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்."

சீனாவை பற்றி தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நிலைப்பாடுகள் ஆழ்ந்த வரலாற்று எதிரொலியை எழுப்புகின்றன. 19ம் நூற்றாண்டின் இறுதியில், ஐரோப்பாவில், 1815ம் ஆண்டு நெப்போலியன் போர்கள் முடிவடைந்ததில் இருந்து காணப்பட்ட வல்லமை சமநிலை (balance of power), புதிதாக ஒன்றிணைந்த அரசு என்ற வடிவத்தில் வந்த ஜேர்மனியின் எழுச்சியால் தடைபட்டது. முன்பு பின்தங்கியிருந்த ஜேர்மனி, கண்டத்தின் பொருளாதார சக்தி மையமாக மாறிவிட்டது. ஆனால் பின்னர் வரலாறு நிரூபணம் செய்ய இருப்பது போல், இது மில்லியன் கணக்கான மக்களுடைய உயிர்களை கொண்டது, முதல் உலகப் போர் என்ற வடிவில் சொல்லவொண்ணா காட்டுமிராண்டித்தனத்தையும் கட்டவிழ்த்தது; ஏனெனில் பழைய முதலாளித்துவ சக்திகளால் புதிய போட்டியாளருடன் இணைந்து இருக்க முடியவில்லை.

சமீப காலத்திலும், இப்பிரச்சினை இன்னும் அதிக முறைகளில் வெளிப்பட்டுள்ளது: இப்பொழுதுள்ள வல்லரசுகள், குறிப்பாக அமெரிக்கா, சீனாவின் எழுச்சியை ஏற்று செயல்படுமா அல்லது அதன் பொருளாதார விரிவாக்கம் இராணுவப் பூசலை விளைவித்து விடுமா?

தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணம் அமெரிக்காவை பொறுத்தவரையில் பொருளாதார, இராணுவப் பிரச்சினைகள் ஒன்றாக பிணைந்தவை என்பதை தெளிவுபடுத்துகிறது. சீனாவில் பொருளாதார வளர்ச்சியும், அதன் விரிவாக்கமும் அமெரிக்காவின் நலன்களுடன் மோதாமல் இருக்கும் வரைதான் பொறுத்துக் கொள்ளப்பட முடியும்.

இத்தகைய நலன்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும்? "நடவடிக்கைக்கான தேவை" என்ற தலைப்பில் தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணமே இதைத் தெளிவாக்குகிறது.

"புதிய மூலோபாய சூழ்நிலைக்கு புதிய தடுப்பு முறை, பாதுகாப்பு அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன ... தாக்குதல்கள், தற்காப்புக்கள் இரண்டுமே அரச மற்றும் அரசு அற்ற செயல்வீரர்களை அச்சுறுத்த தேவைப்படுகின்றன; அதற்கு தாங்குதல்களின் இலக்குகள் மறுக்கப்பட்டால், தேவைப்பட்டால் மிகுந்த வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். பாதுகாப்பான, நம்பகத்தன்மை மிகுந்த அணுசக்தித் திறன் இன்னும் முக்கியமான பங்கை கொண்டுள்ளது. அத்தகைய தடுத்து நிறுத்தும் சக்தியை வலிமைப் படுத்துவதற்கு நாம் ஒரு புதிய மூன்றுவகை உத்தியைக் கொண்டுள்ளோம்; இதில் தாக்கும் முறைவகைகள் உள்ளன; அதில் அணுசக்தி மற்றும் மரபார்ந்த திறனின் முன்னேற்றக் கருவிகளும் உள்ளன; தீவிர, நிதான பாதுகாப்பு வகைகள் உள்ளன; இதல் ஏவுகணை காப்புக்கள் உள்ளன; மூன்றாவதாக பொருத்தமான உள்கட்டுமானம், அது மிகக்கூடுதலான கட்டளையிடுதல், கட்டுப்பாடு, திட்டமிடுதல் மற்றும் உளவுத்துறை வழிவகைகள் போன்றவற்றுடன் முற்றிலும் பிணைந்துள்ளது."

தொடரும்...

Top of page