World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Open warfare erupts in Sri Lanka

இலங்கையில் பகிரங்கமான போர் நடவடிக்கைகள் வெடித்துள்ளன

By K. Ratnayake
27 April 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த வாரங்களாக ஒரு இருண்ட, பிரகடனப்படுத்தப்படாத யுத்தமாக வன்முறைகள் அதிகரித்து வந்ததை அடுத்து, கொழும்பு அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் வெளிப்படையான மோதலை நாடியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய கொழும்பில் உள்ள இராணுவத் தலமையகத்தின் மீது கவனமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் உடனடி உந்துவிசையாக உள்ள அதேவேளை, இந்த மோதலுக்கான முழு பொறுப்பும் இலங்கையை ஆட்சிசெய்த அரசாங்கங்களையே சாரும். இந்த அரசாங்கங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்துவந்துள்ளன.

செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பெண், ஒரு கர்ப்பிணிப் பெண்போல் உடுத்தியிருந்ததோடு உயர் கடும் பாதுகாப்பிற்கு உட்பட்ட உயர் பாதுகாப்பு வலையமொன்றிற்கு அருகில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு சென்றுவரும் பெண்போல் நடித்துள்ளார். இந்தப் பெண், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வரும்வரை காத்திருந்து மேற்கொண்ட தாக்குதலில், அதே இடத்தில் எட்டுபேரை கொன்றதோடு மேலும் 27 பேரை, பிரதானமாக இராணுவ சிப்பாய்களை காயமடையச் செய்தார்.

புலிகள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்க உத்தியோகபூர்வமாக மறுத்த போதிலும், இந்த தாக்குதலை புலிகள்தான் ஏற்பாடு செய்து ஒப்புதலளித்தனரா என்று சந்தேகிப்பதற்கான அவகாசம் மிகக் குறைவாகும். தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், புலிகளின் உரிமைக்குறியாகும். எல்லா சாத்தியக்கூறுகளின் படியும், புலிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற பொன்சேகாவின் பகிரங்க வலியுறுத்தல்களினாலேயே அவர் இலக்குவைக்கப்பட்டிருக்கலாம். அவர் கடுமையாக காயமடைந்த போதிலும் உயிர்தப்பினார். நாட்டின் தலைநகரில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் மீதான தாக்குதலானது இராணுவத்தில் அல்லது அரசாங்கத்தில் உள்ள எவரும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்ற செய்தியை அனுப்புவதற்காகவே திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் இராணுவமும், கிழக்கு நகரமான திருகோணமலைக்கு அருகில் உள்ள சாம்பூர் பிரதேசத்தில் உள்ள பலிகளின் தளங்கள் மீது விமானத் தாக்குதலையும் ஆட்டிலரி தாக்குதலையும் நடத்துவதற்கான சாக்குப் போக்காக இந்த குண்டுத்தாக்குதலை பற்றிக்கொண்டனர். அருகில் உள்ள முத்தூரிலும் மேலும் மோதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்கள் முன்கூட்டியே சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளன என்பதில் சந்தேகம் கிடையாது. திருகோணமலையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மற்றும் கடற்படை தளங்களுக்கு நெருக்கமாக புலிகள் இருப்பது நீண்டகாலமாக கொழும்பு ஊடகங்களில் இராணுவ ஆதரங்களை கொண்டு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

புலிகளின் பேச்சாளரின் படி, சாம்பூர் பிரதேசத்தில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் உட்பட குறைந்த பட்சம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முத்தூர் மற்றும் சாம்பூர் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள அகதிகளின் தொகை முறையே 15,000 மற்றும் 40,000 வரை என உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூன்று முஸ்லிம்கள் புலிகளின் மோட்டார் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறி முத்தூர் மீதான தாக்குதலை இராணுவம் புலிகள் மீது சுமத்துகிறது. இராணுவம் மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளூடாக வடக்கில் உள்ள யாழ்ப்பாண குடாநாட்டிற்கு செல்லும் ஏ9 பிரதான பாதை மூடப்பட்டுள்ளது.

அரசாங்கமும் புலிகளும் தாம் "சமாதானத்தை" விரும்புவதாக கூறிக்கொள்வதோடு இருசாராரும் யுத்தநிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ஒதுக்கித் தள்ளவுமில்லை. ஆனால் இந்த எல்லா அறிகுறிகளும் ஒட்டுமொத்த உள்நாட்டு யுத்தத்தை நோக்கி இழுபட்டுச் செல்வதை சுட்டிக்காட்டுவதோடு அத்தகைய ஒரு யுத்தம் தீவில் உள்ள சிங்கள, தமிழ் முஸ்லிம் உழைக்கும் மக்களுக்கு ஒரு அழிவுகரமான விளைவை ஏற்படுத்தும். 2002ம் ஆண்டுக்கு முன்னதாக, இந்த கொடூரமான மோதலில் 65,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவிலானவர்கள் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர் அல்லது அகதிகளாகியுள்ளனர்.

இரு சாராரும் யுத்த அச்சுறுத்தலை விடுக்கின்றனர். புலிகளின் பேச்சாளர் எஸ். புலிதேவன் ஊடகங்களுடன் பேசுகையில், "அவர்கள் ஆட்டிலரி மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்துகிறார்கள். திருகோணமலை யுத்த நிலமை போன்று தோற்றமளிக்கிறது. தாக்குதல்கள் தொடர்ந்தால், புலிகளும் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளப்படுவர்," எனத் தெரிவித்தார். புலிகளின் திருகோணமலை தலைவர் எஸ்.எஸ். எழிலன் எச்சரித்ததாவது: "நாங்கள் தயார் நிலையில் இருப்பதோடு வலிமையுடன் பிரதிபலிக்க எமது தலைமைத்துவத்தின் கட்டளைக்காக காத்திருக்கின்றோம். அது எதிரிக்கு பேரழிவுகரமான இழப்பை விளைவிக்கும்."

அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் கேஹேலிய ரம்புக்வெல்லவும் போர் ஊக்கத்தில் குறைந்தவராக இருக்கவில்லை. "பாதுகாப்பு விவகாரங்களில் கால அளவோ அல்லது வரையறைகளோ கிடையாது. புலிகள் தமது தாக்குதல்களை தொடர்ந்தால், ஒன்றிணைந்த பதில் தாக்குதல்கள் அல்லது தற்காப்பு தாக்குதல்கள் நடத்தப்படும். புலிகள் பாதுகாப்புப் படைகளை இலக்குவைத்தால் இது தொடரும்," என பிரகடனம் செய்தார். இலங்கை இராணுவம் முதல் முறையாக வெளிப்படையாக யுத்த நிறுத்தத்தை மீறியதையடுத்து அது முறிந்துபோகவில்லை என மறுத்த ஊடக அமைச்சரான அனுர பிரியதர்ஷன யாப்பா, "அது ஒரு சிறிய சட்டபூர்வமான நடவடிக்கை மட்டுமே" என்றார்.

இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் உல்ஃவ் ஹென்ரிக்ஸன், விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தால் சமாதானப் பேச்சுக்களை நடத்துவது கடினமானதாக இருக்கும் என எச்சரித்தார். மிக மோசமான விவரக் குறிப்பு மீண்டும் யுத்தத்திற்கு திரும்புவதாக உள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார். "இரு சாராரும் அதற்காக தயாராகவில்லை என நான் நினைக்கின்றேன். அவ்வாறில்லை எனில், அது இலங்கை மக்களுக்கும் மற்றும் அவர்களது சொந்த இராணுவ ஆற்றலுக்கும் பேரழிவை ஏற்படுத்தக் கூடும்," என அவர் மேலும் தெரிவித்ததார்.

எவ்வாறெனினும், பெரும் வல்லரசுகளின் அனுசரணையிலான பெயரளவிலான சமாதன முன்னெடுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சுமார் மூன்று வருடங்களின் பின்னர் முதல் முறையாக கடந்த பெப்பிரவரி மாதம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இராஜபக்ஷவின் அரசாங்கம் தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையில் பிரதான மாற்றங்களை ஏற்படுத்தக் கோரிய நிலைமையில் பேச்சுக்கள் கவிழ்ந்து போகும் நிலைக்கே வந்தது. முடிவில் இரு சாராரும் உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டு அதை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டிருந்தாலும் வடக்கிலும் கிழக்கிலும் மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் ஏப்பிரல் 19--21ம் திகதிகளில் இடம்பெற இருந்த போதிலும், மீண்டும் ஏப்பிரல் 24-25ம் திகதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டு முடிவில் இரத்துசெய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னர் செய்தது போன்று, கிழக்கு மாகாணத்தில் இருக்கும் புலிகளின் தளபதிகள் வடக்கில் வன்னி பிரதேசத்தில் உள்ள புலிகளின் தலைமையகத்திற்கு செல்ல ஒரு இராணுவ ஹெலிகொப்டரை வழங்க மறுத்ததை அடுத்தே ஆரம்பத்தில் முரண்பாடுகள் தோன்றின. பின்னர் தமிழ் துணைப்படைகளை நிராயுபாணிகளாக்க அரசங்கம் தவறிவிட்டதாகவும் மற்றும் கிழக்கில் உள்ள தமது உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களுக்கு முடிவுகட்ட தவறிவிட்டதாகவும் சுட்டிக்காட்டிய புலிகள் பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்துவிட்டனர்.

ஜனாதிபதி இராஜபக்ஷ, வியாழன் இரவு புலிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு நான்கு மணித்தியாலங்களின் பின்னர் தேசிய தொலைக் காட்சியில் உரையாற்றினார். அவர் "பொறுமையாகவும் கட்டுப்பாடாகவும்" இருப்பதற்காக இராணுவத்தை பாராட்டியதோடு புலிகளுக்கு எதிராக ஆதரவளிக்குமாறு பெரும் வல்லரசுகளுக்கு அழைப்புவிடுத்தார். "முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்த்துக்கொள்வதற்காக எமது அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அமைதியான அழைப்புக்களுக்கு புலிகளின் பிரதிபலிப்பு தற்கொலைக் குண்டுதாரியை பயன்படுத்துவதே என்பது சர்வதேச சமூகத்திற்கு இன்று போதுமானளவு தெளிவாகியுள்ளது," என அவர் பிரகடனம் செய்தார்.

அவரது கருத்துக்கள் முற்றிலும் பாசாங்கானவை. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு சிங்களத் தீவிரவாதக் கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டதன் பின்னரே நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியை பெற்றார். இந்த கொடுக்கல் வாங்கலானது யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்தல் உட்பட புலிகளுக்கு ஒரு இறுதி நிபந்தனையை விதிப்பதற்கு சமமான வகையில் ஒரு தொகை நடவடிக்கைகளை உள்ளடக்கிக் கொண்டிருந்தது.

இராஜபக்ஷ தன்னை "சமாதானத்திற்கான மனிதனாக" பிரகடனம் செய்துகொண்டாலும், இராணுவம் தமிழ் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீள அமுல்படுத்தியுள்ளதோடு புலி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீதான ஒரு தொகை தாக்குதல்களுக்கு தமிழ் துணைப்படைகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வந்துள்ளது. முதற் சுற்று ஜெனீவா பேச்சுக்களின் போது வன்முறைகளில் ஓரளவு தணிவு காணப்பட்ட போதிலும், ஏப்பிரல் 7 அன்று புலிகளுக்கு சார்பான அரசியல்வாதியான வி. விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தாக்குதல்களும் எதிர்த் தாக்குதல்களும் நாடகபாணியில் அதிகரிக்க தொடங்கின. கடந்த இரு வாரங்களுக்குள் நடந்த சுழற்சிமுறை தாக்குதல்களில் இராணுவ சிப்பாய்கள், புலி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட குறைந்த பட்சம் 100 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெப்பிரவரியில் நடந்த ஜெனீவா பேச்சுக்களில் இருந்து, புலிகளுக்கு எதிராக மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கோரும் தமது பேரினவாத பங்காளின் அதிகரித்துவரும் அழுத்தத்திற்கு இராஜபக்ஷ ஆளாகியுள்ளார். அவரது சிறுபான்மை அரசாங்கம் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற ஆதரவிலேயே தங்கியிருக்கின்றது. இரண்டாவது சுற்று பேச்சுக்களை அண்டிய நாட்களில், இராஜபக்ஷ யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பி மீண்டும் வலியுறுத்தியது.

ஜே.வி.பி செவ்வாய் கிழமை நடந்த தற்கொலை தாக்குதலை ஒரு யுத்தப் பிரகடனமாக வகைப்படுத்தியதோடு யுத்த நிறுத்தத்தை முழுமையாக தள்ளுபடி செய்யுமாறு அரசாங்கத்தை நெருக்கியது. ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா: "யுத்த நிறுத்த உடன்படிக்கை செத்துவிட்டது. அதன் விதிகள் மற்றும் ஆளுமைகள் மேலும் நடைமுறையில் இல்லை. அரசாங்கம் அதைப்பற்றி மேலும் கவலைப்படத் தேவையில்லை," என நேற்றுப் பிரகடனம் செய்தார். ஜே.வி.பி யின் பாரளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச, "பயங்கரவாதத்திற்கு எதிராக தாய்நாட்டை காக்க" அனைத்துக் கட்சிகளும் இராஜபக்ஷவை சூழ ஐக்கியப்பட வேண்டும் என அழைப்புவிடுத்தார்.

பெரும் வர்த்தகர்களின் சார்பில் யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமாக முடிவுகாண தள்ளப்பட்ட எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க), கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கோரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐ.தே.க துணைப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க இராஜபக்ஷவை சந்தித்த பின்னர் தற்கொலை தாக்குதலை கண்டனம் செய்து எச்சரித்ததாவது: "சமாதான முன்னெடுப்புகள் முழுமையடைய வேண்டுமானால், தனது வன்முறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த புலிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." ஐ.தே.க இதற்கு முன்னர் இனவாத பதட்டங்களைத் தூண்டுவதாக ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவையும் குற்றஞ்சாட்டியது.

இராஜபக்ஷவைப் போல், கொழும்பு ஊடங்களும் சமாதானத்தை பற்றி ஆங்காங்கே இன்னமும் பேசிய போதிலும், அவையும் யுத்தத்திற்கே தயாராகின்றன. வலதுசாரி ஐலண்ட் பத்திரிகையின் நேற்றைய வெளியீட்டின் ஆசிரியர் தலையங்கம் பிரகடனம் செய்ததாவது: "புலிகள் முழுமையாக கைவிட்டுள்ள ஜெனீவா பேச்சுக்கள் மீதான எதிர்பார்ப்புகளை நேற்றைய தாக்குதல் வெடித்துச் சிதறச் செய்துள்ளது. யுத்தம் ஏற்கனவே தொடங்கிவிட்டது எனக் கூறக்கூடிய வகையில் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கையை புலிகள் மேற்கொண்டுள்ள நிலையில், புலிகளுடன் இன்னமும் யுத்த நிறுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றதா என்பது பற்றி ஒருவர் ஆச்சரியப்படலாம். கண்ணிவெடிகளை கவனமாக தவிர்த்துக்கொண்டு சமாதானப் பாதையில் பயணஞ்செய்யும் அதே வேளை, நேரிடக்கூடிய எதற்கும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்."

பொதுவில் சமாதானப் பேச்சுக்களை ஆதரிக்கும் டெயலி மிரர் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கத்தில், "விடுதலையை அல்லது உயிர்களை மதிக்காத கொடூரமான பயங்கரவாதிகளுக்கு" எதிராக ஒரு ஐக்கியத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது. புலிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விடுக்கும் அழைப்புக்களை எதிர்க்குமாறு இராஜபக்ஷவுக்கு தெளிவின்றி அழைப்புவிடுக்கும் அப்பத்திரிகை, "எவ்வாறெனினும், பேச்சுக்களுக்கான கதவுகள் இன்னமும் திறந்திருக்கும் நிலையில், நாடு அழிவுகரமான யுத்தத்திற்குள் சரிந்துவிழாமல் பொறுப்புடன் செயற்பட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது" என பிரகடனம் செய்துள்ளது.

அமெரிக்காவும் ஏனைய பெரும் வல்லரசுகளும் இந்திய துணைக்கண்டத்தின் ஸ்திரமற்ற நிலைமைக்கு வழிவகுக்கும் இந்த மோதலுக்கு முடிவுகட்டுவதன் பேரில் இந்த சமாதான முன்னெடுப்புகளை ஆதரித்தன. ஆயினும், இந்த யுத்தம் இலங்கை வெகுஜனங்கள் மீது சுமத்தயுள்ள துன்பங்களை பற்றி அவர்களில் எவரும் கவலைப்படுகிறார்கள் இல்லை. வாஷிங்டன், மேலும் மேலும் முக்கியத்துவமடைந்து வருகின்ற பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை அபிவிருத்தி செய்வதன் பேரில் குறிப்பாக இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவும் இந்த தற்கொலை தாக்குதலை கண்டனம் செய்ததோடு யுத்த நிறுத்தத்திற்கு கட்டுப்படுமாறும் மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புமாறும் இரு சாராருக்கும் அழைப்புவிடுத்தன. இந்திய அரசாங்கம் நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக புது டில்லியில் தனது நெருக்கடி நிர்வாக குழுவை புதன் கிழமை கூட்டியதோடு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாக்குநீரிணையில் மேலதிக யுத்தக் கப்பல்களையும் அனுப்பிவைத்திருந்தது.

எவ்வாறெனினும், வாஷிங்டனின் வலியுறுத்தலில் ஒரு மாற்றம் இருந்தது. தெற்காசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கூறுகையில்: "தமிழ் புலிகள் சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு பதிலாக யுத்தத்தை மீண்டும் தொடங்க தீர்மானித்துள்ளனர் என்பது கண்டிக்கத்தக்கது. நாம் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட தமிழ் புலிகளுக்கு எங்களால் முடிந்த அழுத்தங்களை திணிக்கவும், அச்சுறுத்தல்களை எதிர்த்துச் சமாளிக்க அரசாங்கத்திற்கு எம்மால் முடிந்த ஆதரவை வழங்குவதற்கான வழிகளை தேடவும் உலகை சூழ உள்ள அரசாங்கங்களுடன் நாம் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்திருக்கின்றோம்."

பெளச்சரின் கருத்துக்கள், யுத்தத்திற்கான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் புலிகள் மீது திணிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், பேச்சுவார்த்தை மேசைக்கு மீண்டும் திரும்புவதற்கு மட்டுமன்றி, "அச்சுறுத்தலை எதிர்த்துச் சமாளிப்பதற்காக" கொழும்புக்கு சர்வதேச ஆதரவு வழங்கவும் அழைப்புவிடுக்கின்றார். ஜனவரியில், மேலும் தெளிவுபடுத்திய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெஃவ்ரி லன்ஸ்டன்ட், யுத்தம் வெடிக்குமானால் புலிகள் "பலம்வாய்ந்த, மிகவும் இயலுமை கொண்ட மற்றும் மிகவும் அசையா உறுதிகொண்ட இலங்கை இராணுவத்தை" எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார்.

வெளிப்படையான யுத்தத்தை நோக்கிய இலங்கையின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவத்தின் சரிவானது ஒரு கண்டிக்கத்தக்க குற்றமாகும். எந்தவொரு மோதலிக்கும் தவிர்க்கமுடியாமல் விலைகொடுக்கத் தள்ளப்பட்டுள்ள நாட்டின் சதாரண பொதுமக்களுக்கு யுத்தம் தேவையற்ற ஒன்றாகும். உழைக்கும் மக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை தரத்தையும் உறுதிசெய்ய முடியாத ஆளும் வர்க்கமானது மீண்டும் மீண்டும் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் இலங்கை அரசை தூக்கிநிறுத்தவும் இனவாத பதட்டங்களை தூண்டுவதையே தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் அதிகரித்துவரும் வன்முறைகள், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரிலான அரசாங்கத்தின் கடுமைநிறைந்த வேலைத்திட்டங்கள் மற்றும் சந்தை சீர்திருத்தங்களின் தாக்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வறியவர்களும் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் கட்டுண்டிருப்பது தற்செயலானதல்ல. அண்மையில் இலட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் ரொக்கட் வேகத்தில் அதிகரிக்கும் விலைவாசியை எதிர்த்துப் போராட சம்பள உயர்வுக் கோரி இரு முறை பெரும் ஒருநாள் போராட்டத்தில் பங்குபற்றினர். பணப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கமானது அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகள் தவிர்ந்த ஏனைய கிராமியத் துறைக்கான எரிபொருள் மானியங்கள் மற்றும் உரமானியங்களையும் வெட்டித்தள்ளப் போவதாக அறிவித்தது.

புலிகளை பொறுத்தளவில், தமது ஜனநாயக விரோத வழிமுறைகள் மற்றும் எதேச்சதிகாரமான வரி நடைமுறைகள் காரணமாக தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்கு வருடங்களாகியும் இலட்சக்கணக்கான மக்கள் இன்னமும் அகதி முகாம்களில் வாழ்ந்துவருகின்றனர். பெரும்பாலான தமிழர்கள் தமது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் காணவில்லை. முரண்பாடுகளுக்கு ஒரு முன்னேற்றகரமான தீர்வுகாண முன்நோக்கில்லாத புலிகளின் தலைமைத்துவம், கொழும்பில் உள்ள தமது சிங்கள சரிநேர் தரப்பினர் போலவே தமது அரசியல் நெருக்கடிகளை தீர்ப்பதற்கான ஒரே வழிவகையாக யுத்தத்தில் கவனம் செலுத்தக் கூடும்.

See Also:

இலங்கை சமாதானப் பேச்சுக்கள் பொறிவின் விளிம்பில்

இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு முன்னோக்கிய பாதை

சமாதானப் பேச்சுக்களின் மத்தியிலும் இலங்கை உள்நாட்டு யுத்தத்தை நோக்கி இழுபடுகிறது

இலங்கையில் யுத்த அபாயத்திற்கு ஒரு சோசலிச பதில்

Top of page