World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Aid workers murdered execution style in Sri Lanka

இலங்கையில் தொண்டு நிறுவனத் தொழிலாளர்கள் மரணதண்டனை பாணியில் கொல்லப்பட்டுள்ளனர்

By Shantha Ajithan
12 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கிழக்கு நகரான முதூரைக் கைப்பற்றுவதற்காக நடந்த தீவிரமான மோதல்களை அடுத்து, ஆகஸ்ட் 5 அன்று 17 தொண்டு நிறுவனத் தொழிலாளர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்களில் இருவரைத் தவிர ஏனையவர்கள் மரண தண்டனை பாணியில் தலையின் பின்புறம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த உறைய வைக்கும் படுகொலைகள் இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த தொண்டு நிறுவனத் தொழிலாளர்கள், 1996ல் இருந்து இலங்கையில் செயற்பட்டு வரும் பட்டினிக்கு எதிரான இயக்கம் அல்லது ஏ.சி.எப். (Action Contre la Faim) என்ற பிரான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாகும். மூதூர் பிரதேசத்தில், தூய்மையான தண்ணீர் வழங்குதல் மற்றும் 2004 சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பொருளாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வந்துள்ளது. ஒருவரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தமிழர்கள் மற்றும் மிகவும் இளம் வயதுடையவர்களாவர்.

ஆகஸ்ட் 1, திருகோணமலையில் இருந்து மூதூருக்கு படகில் சென்ற இந்தக் குழுவினர், புலிகள் நுழைந்து நகரின் சில பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து திட்டமிட்டபடி உடனடியாக திரும்பி வர முடியாமல் போயினர். தண்ணீர் அனைக்கட்டைக் கைப்பற்றுவதற்காக இராணுவம் ஒரு பெரும் தாக்குதலை முன்னெடுத்த மாவிலாறு பிரதேசத்திற்கு செல்லும் வீதியில் மூலோபாயம் கொண்ட இடத்தில் மூதூர் அமைந்துள்ளது. இராணுவம் மேற்கொண்ட கடுமையான ரொக்கட் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களால் பத்தாயிரக்கணக்கான மூதூர்வாசிகள் இடம்பெயரத் தள்ளப்பட்டனர்.

ஆகஸ்ட் 4 நகரை இராணுவம் மீண்டும் கைப்பற்றும் வரை, ஏ.சி.எப். நிறுவனம் தனது மூதூர் அலுவலகத்தில் இருந்த தொழிலாளர்களுடனான தொடர்பை இழந்திருந்தது. இந்தப் படுகொலைகள் தொடர்பான செய்தி அடுத்த நாளே வெளியானது. புலிகள் கண்ணி வெடிகளைப் புதைத்திருப்பதாக கூறிய இராணுவம், எவரையும் இந்த அலுவலகத்தை நெருங்க விடவில்லை.

ஆகஸ்ட் 6, மூதூரை அடைந்த மனிதாபிமான முகவர் அமைப்பின் தகவல் அறியும் குழுவொன்று, ஏ.சி.எப். அலுவலகத்திற்கு வெளியில் இருந்து 15 சடலங்களைக் கண்டது. "எல்லா சடலங்களும் கவிழ்ந்து கிடந்ததோடு, வரிசையாக வைத்து மிக நெருக்கமாக நின்று சுட்டது போன்றே தோன்றுகிறது. பார்ப்பதற்கு மிகக் கோரமானதாக இருந்தது," என ஒரு பிரதிநிதி குறிப்பிட்டார். ஏனைய இருவரதும் சடலங்கள் ஒரு காரில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த சடலங்கள் தப்பிச் செல்லும்போது கொல்லப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன.

ஆகஸ்ட் 7, மூதூருக்கு வந்த ஏ.சீ.எப் அலுவலர்கள் இந்த மரணங்களை உறுதிப்படுத்தினர். அடுத்தநாள் வெளியிடப்பட்ட ஒரு ஊடக அறிக்கை பிரகடனம் செய்ததாவது: "இவர்கள் மனிதாபிமான ஊழியர்கள் என்பதை தெளிவாக அடையாளங்கண்டு கொண்டே இலக்கு வைக்கப்பட்ட மனிதப் படுகொலை என்பது இப்போது தெளிவாகியுள்ளதுடன், இந்த மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடமிருந்து உறுதியற்ற பதில்களை எதிர்பார்ப்பதில்லை என ஏ.சி.எப். உறுதிகொண்டுள்ளதோடு... எடுத்துக்காட்டான தண்டனைகளையும் கோரும்." இந்த ஊழியர்கள் ஏ.சி.எப். டீ சேர்ட்டுகளை அணிந்திருந்ததோடு மூதூர் அலுவலகமும் சின்னம் மற்றும் கொடியால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

அரசாங்கம், புலிகள் ஆகிய இரு தரப்பினரும் இந்தப் படுகொலைகளை கண்டனம் செய்துள்ளதோடு ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆகஸ்ட் 7, பாதுகாப்பு பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல சீ.என்.என். செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஒரு விசேட பொலிஸ் குழு இந்த படுகொலைகளைப் பற்றி விசாரணை நடத்தும் என்றார். அவர் மூதூரில் இந்த தொண்டு நிறுவனத் தொழிலாளர்களையும் ஏனைய பொது மக்களையும் புலிகளே கொலை செய்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறிக்கொண்ட போதிலும், எந்தவொரு ஆதாரத்தையும் அவர் முன்வைக்கவில்லை.

இந்தக் கட்டத்தில் இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பது நிச்சயமில்லாத போதிலும், சகல அறிகுறிகளும் இலங்கை இராணுவத்தை அல்லது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் கொலைகளை மேற்கொண்ட இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துணைப் படைகளையும் சுட்டிக் காட்டுகின்றன.

வெளித்தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடும் போது, புலிகள் ஏ.சி.எப். தொழிலாளர்களை கொல்வதற்கான தெளிவான காரணங்கள் கிடையாது. மறு பக்கத்தில், இராணுவமும் மற்றும் பலவித சிங்களப் பேரினவாத அமைப்புக்களும், தீவின் யுத்தப் பிராந்தியத்தில் செயற்படும் எ.சீ.எப். போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறி அடிக்கடி அவற்றை கண்டனம் செய்துவந்துள்ளன. புலிகள் மூதூரைக் கைப்பற்றியதற்கு எதிராக அவமானத்திற்குள்ளான இராணுவம் தமிழ் தொண்டு ஊழியர்களை குறிவைத்து பழிவாங்கியிருப்பதற்கான முற்றிலுமான சாத்தியங்கள் உள்ளன.

ஏற்கனவே மூடிமறைப்புக்களுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ராய்ட்டர் செய்திகள், இலங்கை பாதுகாப்புப் படைகளின் முரண்பாடான அறிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளன. இராணுவ பேச்சாளர் மேஜர் உபாலி இராஜபக்ஷ, இராணுவம் நகரத்தைக் கைப்பற்றிய போதே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். ஆனால் ராய்ட்டர் நிருபர் ஆகஸ்ட் 5 மூதூருக்குச் சென்றிருந்த போது, உயிரிழந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் பற்றி இராணுவ கமாண்டர்கள் அந்த இடத்தில் எதனையும் சொல்லவில்லை. ஆதலால், அவர்கள் பின்னர் உயிரிழந்ததாகவே எண்ணவைக்கின்றது.

பாதுகாப்புப் படைகள் மரண பரிசோதனைகள் பற்றி நுண்ணுனர்வுடன் இருந்து வருகின்றன. ஆகஸ்ட் 7, சடலங்கள் பரிசோதனைக்காக திருகோணமலை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சட்ட வைத்திய அதிகாரி விடுமுறையில் சென்றிருந்ததால், அரசாங்கம் வட மத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் இருந்து ஒருவரைக் கொண்டுவந்தது. திருகோணமலை ஆஸ்பத்திரியில் இருந்து உலக சோசலிச வலைத் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் இந்த நடைமுறை வழமைக்கு மாறானவை எனத் தெரிவிக்கின்றன. சட்ட வைத்திய அதிகாரி இல்லாத போது ஆஸ்பத்திரியில் உள்ள ஆணையாளர் இன்னொருவரை நியமிப்பதே வழமை.

மரண விசாரணைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளாமல் ஊடகங்களைத் தடுப்பதில் பொலிஸாரும் நீண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பத்திரிகையாளர்கள் பொலிஸ் அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதாக ஆகஸ்ட் 9 லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதுபற்றி உப பொலிஸ் மா அதிபர் ரொஹான் அபேவர்தனவிடம் கேட்ட போது, செய்தியாளர்கள் தகவல்களை திரிப்பதாகவும் இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாகவும் கூறி இந்த நடவடிக்கையை அவர் நியாயப்படுத்தினார்.

இந்தப் படுகொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு என்பதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சந்தேகம் இருக்காது. உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவித்த பலியான தொண்டு நிறுவன ஊழியரின் தந்தை, தனது மகன் அதே தினம் திரும்பி வருவதாகக் கூறி ஆகஸ்ட் 1 அன்று மூதூர் அலுவலகத்திற்குச் சென்றதாகத் தெரிவித்தார். "பின்னர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) மாலை, எனது மகன் தொலைபேசியில் என்னுடன் பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு செல்வீச்சு சத்தங்கள் கேட்டன," என அவர் கூறினார்.

"புலிகள் மூதூர் பிரதேசத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து அப்பிரதேசத்திற்குள் நுழைந்த பாதுகாப்புப் படைகளால் சில அரச சார்பற்ற அமைப்பின் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கேள்விப்பட்டோம். நான் எனது மகனை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தன. நாங்கள் உதவி நிறுவனத்தையும் நாடிய போதிலும் அவர்களும் தமது ஊழியர்களுடன் தொடர்பை இழந்திருந்தார்கள். சனியன்று இந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வானொலி செய்தியில் கேள்விப்பட்டோம். இந்த தொண்டு நிறுவனம் உட்பட எவரும் மூதூர் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை."

ஒரு அயலவர் பின்வருமாறு கேட்டார்: "ஏனையவர்களுக்கு இங்குள்ள (திருகோணமலையில்) வைத்தியர்களால் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் போது, இவர்களுக்கு மட்டும் அரசாங்கம் வெளியில் இருந்து வைத்தியர்களைக் கொண்டுவருவது ஏன்? இலங்கை இராணுவத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், மோதல்களை அடுத்து உடனடியாக பொதுமக்கள் மீது பாய்ந்து விழுவது வழக்கமானதாகும். மன்னார் பேசாலையில் நடந்ததும் இதுவே. (அண்மையில் கடற்படையினர் ஐந்து மீனவர்களைச் சுட்டுக் கொன்றனர்) இதுவும் அது போன்றதாக இருக்கலாம்."

தனது 24 வயது மகனை இழந்த ரிச்சர்ட் அருள்ராஜ் என்பவர் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்ததாவது: "இது இராணுவத்தின் வேலை (தொண்டர் ஊழியர்களைக் கொன்றது) என்றே நாம் நம்புகின்றோம். வெள்ளியன்று (ஆகஸ்ட் 4), தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர் சனிக்கிழமை திரும்புவதாகத் தெரிவித்தார். பின்னர் இராணுவம் வந்து அவர்களைச் சுட்டுக் கொன்றதாக கேள்விப்பட்டோம்."

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அரசாங்கம் பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்துவதோடு குற்றத்தை மூடி மறைக்காது, என புதனன்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பிரகடனம் செய்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஆஸ்திரேலிய சட்ட வல்லுனர்களின் உதவியுடன் இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளது. புலிகளே பொறுப்பாளிகள் என்ற முன்னைய குற்றச்சாட்டை அவர் மீண்டும் தெரிவிக்காமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விசாரணைகளை வரவேற்ற அதே வேளை, அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியாவுக்கான அதிகாரி பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியதாவது: "குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவருவதாக அரசாங்கம் கூறி, பின்னர் அந்த நடவடிக்கைகள் ஓரங்கட்டப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. இம்முறை அது வேறுபட்டதாக இருக்க வேண்டும்."

* ஜனவரி முற்பகுதியில், இராணுவம் திருகோணமலையில் ஐந்து தமிழ் இளைஞர்களை மரண தண்டனை பாணியில் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அரசாங்கம் விசாரணை செய்வதாக வாக்குறுதியளித்த போதிலும் அது முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது.

* மே மாதம், ஒரு இளம் பிள்ளை உட்பட எட்டு பேர் யாழ்ப்பாண குடாநாட்டின் அல்லைப்பிட்டியில் துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டனர். சாட்சிகள் கடற்படையினர் சம்பந்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய போதிலும், பொலிஸ் விசாரணைகள் கேலிக்கூத்தான நிலையில், அடிப்படை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதற்காக பொலிஸ் அதிகாரிகளை உள்ளூர் நீதவான் தீவிரமாகக் கண்டித்தார்.

* ஜூன் மாதத்தில், ஐந்து மீனவர்களையும் ஒரு வயது முதிர்ந்த பெண்ணையும் கொலை செய்ததில் கடற்படை நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தது. உத்தியோகபூர்வ விசாரணை ஒன்று கடற்படை சிப்பாய்கள் சம்பந்தப்பட்டிருப்பதை நிரூபித்த போதிலும், அவர்களுக்கு எதிராக எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க அரசாங்கமும் இராணுவமும் தவறிவிட்டன.

மூதூர் படுகொலைகள் சம்பந்தமான புதிய விசாரணைகள், முன்னைய விசாரணைகளைப் போன்று சுன்னாம்பு பூசுவதையும் விட குறைந்ததாக இருக்காது என நம்புவதற்கு காரணங்கள் தேவையில்லை.

Top of page