World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan air force bombing kills scores of students

இலங்கை விமானப் படை குண்டுவீசி அறுபதுக்கும் மேலான மாணவர்களைக் கொன்றுள்ளது

By Sarath Kumara
15 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் (LTTE ) இடையே போர் அதிகரித்து வரும் நேரத்தில், இலங்கை விமானப் படையினர் LTTE யின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று ஒரு பள்ளியின் மீது குண்டுவீசித் தாக்கியதில் 61 மாணவர்கள் கொல்லப்பட்டதோடு, 100க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்.

LTTE யின் சமாதானச் செயலகம், மாணவர்களில் பெரும்பாலானவர்கள் 15 வயதில் இருந்து 18 வயதிற்குட்பட்ட பெண்கள் என்றும் அவர்கள் வல்லிபுனம் இன்ற இடத்தில் உள்ள செஞ்சோலை சிறார் இல்லத்தில் இரண்டு நாட்கள் தங்கி முதலுதவி பற்றிய பாடங்களைக் கற்பதற்காக கூடியிருந்தபோது, விமானங்கள் கட்டிடங்களை காலை 7 மணியளவில் குண்டுவீச்சிற்கு உட்படுத்தின என்று தெரிவித்துள்ளது. காயமுற்றவர்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மருத்துவமனைகளுக்கு எடுத்தச் செல்லப்பட்டாலும், அவர்களில் பலர் பின்னர் இறந்து போயினர்.

இக்குற்றத்திற்கான பொறுப்பை இராணுவம் பல பொய்கள், மழுப்புதல் வகையிலான செய்திகள் மூலம் மறுக்க முற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆதாரங்கள் முல்லைத்தீவில் LTTE யின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியில் விமானப்படை தாக்கியதை ராய்ட்டருக்கு ஒப்புக்கொண்டாலும், இலக்குகள் பற்றி வேறு தகவல்களைக் கொடுக்க அவை மறுத்துவிட்டன. சர்வதேச அளவில் குண்டுவீச்சு பற்றிய தகவல்கள் வெளிவந்தவுடன், விமானப் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர், குரூப் காப்டன் அஜந்தா சில்வா Assoicated Press இடம், இந்த இடம் LTTE யின் தளம் என்பதற்கான சான்றை இராணுவம் கொண்டுள்ளது என்று கூறினார்.

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், விமானப் படை சாதாரண மக்களைக் குறிவைத்தது என்பதை மறுத்துள்ளது. "முல்லைத்தீவுப் பகுதியில் முன்னரே அடையாளம் காணப்பட்டிருந்த LTTE யின் வெடிகுண்டு நிலைகள் மற்றும் முகாம்கள் மீது இலங்கை விமானப்படை இன்று காலை, திங்கள், ஆகஸ்ட் 14 அன்று தாக்குதல் நடத்தியது" என்றும் "விமானப் படை அதிகாரிகள் குண்டுவீச்சுக்கள் துல்லியமாகவும் நல்ல முறையில் இலக்குகளைத் தாக்கிய வகையிலும் இருந்தன என்று உறுதிப்படுத்தினர்" என்றும் அது அறிவித்தது.

சிரச தொலைக்காட்சியில் பேசிய நோர்வே தலைமையிலான இலங்கை கண்காணிப்புக் குழுவின் (SLMM) தலைவரான உல்ப் கென்றிக்சன், இராணுவத்தின் கூற்றுக்களுக்கு எதிராகக் கூறியுள்ளார். நேற்று சம்பவ இடத்தைச் சென்று பார்த்தபோது தான் குழந்தைகளின் சடலங்களையும் பார்த்ததாக அவர் கூறினார். குறைந்தது 10 குண்டுவீச்சுக்களாவது நிகழ்ந்தன, வெடிக்காத ஒரு குண்டும் இதில் அடங்கும். அப்பகுதியில் LTTE உடைய இராணுவ முகாம் ஒன்றையும் தான் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஓர்லா கிளின்டன் செய்தி ஊடகத்திடம் குறைந்தது 19 மாணவர்களாவது இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும் அவருடைய அமைப்பு இன்னும் கூடுதலான விசாரணையில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறினார். "இப்பொழுது எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் 16 வயதில் இருந்து 18 வயதிலான மாணவர்கள் என்றுதான் தோன்றுகிறது. உயர்தர மாணவர்களான இவர்கள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இருந்து முதலுதவிப் பயிற்சிக்காக இருநாள் முகாமிற்கு வந்துள்ளனர்" என்று இவ்வம்மையார் கூறினார்.

ஒரு படுகொலை என்பதற்கான பெருகிய ஆதாரங்களை எதிர்கொண்ட அளவில், அரசாங்கம் சிறுவர்கள் வேண்டுமேன்றே இலக்கு கொள்ளப்படவில்லை என்றும் LTTE அவர்களை "மனிதக் கேடயங்களாக'' பயன்படுத்துகின்றனர் என்ற குற்றத்தை சுமத்தி, அந்த சிறுவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் கொடுக்கப்பட்டு வந்தது என்றும் கூறியுள்ளனர். "பாடசாலை சிறுவர்கள் இலக்கு கொள்ளப்பட்டனர் எனக்கூறுவது பொய். விமானப்படையினர் அங்குள்ள LTTE யின் பயிற்சி முகாம் ஒன்றின்மீதுதான் குண்டுத் தாக்குதலை நடத்தினர். அவர்கள் சிறுவர் படையினரை அங்கே அனுப்பி வைத்தார்களா என்பது பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது" என்று அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் சந்திரபாலா லியனகே AFP இடம் தெரிவித்தார்.

இத்தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இக்கட்டிடங்கள் முன்பு அனாதை இல்லமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன, மற்றும் இராணுவம் கூறுவது போல் இந்த இலக்குகள் "முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டவை" என்றால், நிறைய சிறுவர்கள் இருந்திருப்பர் என்பது வெளிப்படை. LTTE க்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர், வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் தமிழ்ச் சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்தாக்குதல் இருந்திருக்கக்கூடும்.

கடந்த வார இறுதியில், சண்டை வடக்கிலுள்ள யாழ்பாணக் குடாநாட்டிற்கும் பரவியது. LTTE யின் தாக்குதல்கள் இராணுவ நிலைகள் மீது ஏராளமாக நடந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த பலாலி விமானத் தளத்தின் மீது பீரங்கித் தாக்குதல்களும் நடந்தன. கடந்த வெள்ளி முதல் 60 படையினர்களுக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் இராணுவம் LTTE இடம் இழந்திருந்த நிலவறைகள் மற்றும் இடங்களை மீண்டும் கைப்பற்ற முயல்வதாகவும், பாதுகாப்பு ஆதாரங்கள் AFP இடம் தெரிவித்தன. அரசாங்கம் இதுவரை 200 LTTE போராளிகளைக் கொன்றிருப்பதாகக் கூறியுள்ளது.

முல்லைத்தீவினில் நிகழ்ந்த தாக்குதல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை அல்ல. பலாலி தளத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுக்கள் மற்றும் பீரங்கித் தாக்குதலில், ஞாயிற்றுக் கிழமை 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமுற்றனர். இவர்கள் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 5 கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள அல்லைப்பிட்டியில் இருக்கும் St. Philip Nari தேவாலயத்தில் புகலிடம் நாடிய நூற்றுக்கணக்கான மக்களில் ஒரு பகுதியினராவர்.

கிளிநொச்சி Christian Caritas இயக்குனரான ஜி.பீற்றர் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: "மக்கள் சண்டையிலிருந்து பாதுகாப்பு தேடி வந்திருந்த தேவாலயத்தைத் ஒரு பீரங்கிக் குண்டு தாக்கியது. தேவாலாயத்தை சுற்றி பல வீடுகள் இருந்தமையால், மக்கள் பீரங்கி குண்டுத் தாக்குதலில் இருந்து உயிர் தப்புவதற்காக ஆலயத்தை நோக்கி ஓடினர். ஆனால் ஒரு குண்டு தேவாலயத்தின் மீது விழுந்தது. ஊரடங்கு உத்தரவினாலும் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறதாலும் இப்பொழுது அப்பகுதியில் எவரும் நுழையமுடியாது." இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அதன் ஊழியர்கள் கயமடைந்தவர்கள் பலரை யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாக அறிவித்துள்ளது.

பொதுமக்கள் வாழும் பகுதியில் இப்படிப்பட்ட இராணுவத் தாக்குதலை நடத்தியதை மீண்டும் நியாயப்படுத்தி அரசாங்க செய்தித் தொடர்பாளர் மீண்டும் கூறுகையில், "LTTE சாதாரண மக்களுடன் கலந்து நின்று இராணுவத்தின் பீரங்கி தாக்குதலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்" என்றார்.

பொதுமக்களை இலக்கு வைத்து மிகக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் கிழக்கு நகரமான மூதூரில் சமீபத்திய சண்டையில் நிகழ்த்தப்பட்டன. LTTE ஆகஸ்ட் 2 அன்று அச்சிறு நகரத்தில் நுழைந்து சில பகுதிகளைக் கைப்பற்றியபின், இராணுவம் தொடர்ச்சியான பீரங்கி, ராக்கெட் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டது. ஏராளமான மக்கள் இந்த குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதோடு, பலர் காயமுற்றனர். கிட்டத்தட்ட 40,000 மக்கள் இந்த நகரத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மூதூரைக் கைப்பற்றும் LTTE உடைய முயற்சியானது, திருகோணமலையில் உள்ள இராணுவத் தளங்களிலிருந்து இராணுவ விநியோகப் பொருட்கள் அதற்கு வராமல் தடுக்க வேண்டும் என்றும், இன்னும் தெற்கில் இருக்கும் மாவிலாறு பாசன வசதியை இராணுவம் கைப்பற்றிவிடமால் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருந்தது. தன்னுடைய தாக்குதலின் வரம்பு குறைவானது என்று அரசாங்கம் வலியுறுத்தினாலும், LTTE யின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கூடுதலாக ஊடுருவல் நடத்துவது பரந்த அளவிலான போருக்குத் தூண்டுதலாக இருக்கும் என்பது நன்கு தெரியும்.

கடந்த வார இறுதியில் யுத்தம் வடக்கிற்கும் பரவி, தலைநகரான கொழும்பிலும் சில தாக்குதல்கள் நடந்தன. சனிக்கிழமையன்று ஒரு துப்பாக்கிதாரியினால் அரசாங்கத்தின் சமாதான செயலகத்தின் துணை இயக்குனர் கேதீஸ்வரன் லோகநாதன் கொழும்பின் புறநகரான தெகிவலவில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று மத்திய கொழும்பில் நடந்த ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதில் பாகிஸ்தான் தூதுவர் பஷிர் வாலி முகம்மதின் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்புக் கொடுத்திருந்த இராணுவ கமாண்டோ படையினரும் அடங்குவர். இலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவ உதவியை அளித்திருந்ததால் தாம் இலக்கு வைக்கப்பட்டதாக தூதுவர் கூறினார்.

Top of page