World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

War spreads to the north of Sri Lanka

யுத்தம் வட இலங்கைக்கு விரிவடைந்துள்ளது

By Sarath Kumara
14 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதோடு வாரக் கடைசியில் யுத்தம் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் விரிவடைந்துள்ளதுடன் 200க்கும் அதிகமான உயிர்கள் அதில் பலியாகியுள்ளன. இரு சாராரும் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகாத அதே வேளை, உடன்படிக்கை ஒரு வெற்றுக் கடதாசியாகியுள்ளது. தீவு துரிதமாக ஒட்டுமொத்த உள்நாட்டு யுத்தத்தை நோக்கி சரிந்து செல்கின்றது.

புலிகள் கடந்த வெள்ளியன்று, வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பலாலி விமானப்படைத் தளத்தில் உள்ள ஒரு ஆட்டிலறித் தளம் உட்பட பிரதான இராணுவ நிலைகள் மீது ஒரு கூட்டுத் தாக்குதலை முன்னெடுத்தனர். தீவின் தென்பகுதியை இணைக்கும் பாதைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாக செல்வதோடு இப்போது அவை அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள படையினருக்கு இந்த நிலைகள் தீர்க்கமானவையாகும்.

ஒரு இராணுவ பெல் 212 ஹெலிகொப்டர் அதே போல் விமானத் தளத்தின் ஓடு பாதையின் பகுதிகளும் சேதமடைந்துள்ளமை, இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான விமானங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு படைகளின் தலைமையகமும் அதே கட்டிடத்திலேயே உள்ளதோடு, சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஏவப்படும் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கும் அது உள்ளாகியுள்ளது. இராணுவம் தனது தரைப்படைகளை அதிகப்படுத்துவதற்கு துருப்புக்களை எடுத்துச் செல்ல ஹெலிகொப்டர்களிலேயே தங்கியிருக்கத் தள்ளப்பட்டுள்ளது.

புலிகள் ஆனையிறவில் இருந்து வடக்குத் திசை நோக்கியும் முன்னேறியுள்ளனர். ஆனையிறவானது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான பிரதான மூலோபாய நுழைவாயிலாக செயற்படுவதோடு 2000 ஆண்டில் புலிகளால் அது கைப்பற்றப்பட்டது. புலிகள் முன்நிலையில் இருந்த பல இராணுவ பங்கர்களையும் கடந்து சென்றுள்ளனர். இலங்கை கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ரொபன் நில்சன் ராய்ட்டருக்குத் தெரிவித்ததாவது: "இராணுவத்தின் பத்து பங்கர்களை புலிகள் கைப்பற்றிய போதிலும் பின்னர் ஐந்தை மீண்டும் பாதுகாப்புப் படைகள் கைப்பற்றின... அவர்கள் (புலிகள்) இன்னமும் (இராணுவ) பாதுகாப்பு முன்நிலைகளை கடந்து 500 மீட்டர் தூரத்தில் இருந்துகொண்டுள்ளனர்."

ஞாயிறு காலை, யாழ்ப்பாணத்திற்கு துருப்புக்களையும் மற்றும் இராணுவ விநியோகங்களையும் கப்பல் மூலம் கொண்டு செல்வதற்கான தீர்க்கமான இணைப்பும் ஒரு பிரதான கடற்படைத் தளமுமான கிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகத்தின் மீதும் புலிகள் செல் தாக்குதல் நடத்தியுள்ளனர். 2000 ஆண்டில், பத்தாயிரக்கணக்கான துருப்புக்கள் இடையில் சிக்கிக்கொண்ட போது இலங்கை இராணுவம் பெரும் அழிவை எதிர்கொண்டதுடன் யாழ்ப்பாணத்தை நோக்கிய புலிகளின் திட்டமிட்ட தாக்குதலையும் எதிர்கொண்டது. இந்தியாவும் மற்றும் பெரும் வல்லரசுகளும் புலிகளின் நகர்வுகளை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்ததோடு இராணுவத்திற்கு நேர இருந்த பெரும் இழப்பையும் அவை தடுத்தன.

யாழ்ப்பாண நகருக்கு அருகில் இருந்த நிலைகள் மீது புலிகளின் துப்பாக்கிப் படகு ஒன்று தொடுத்த தாக்குதலை முறியடித்ததாக இராணுவம் கூறிக்கொண்டது. ஞாயிறு விடியற் காலையில், புலிகளின் பல படகுகளை ஹெலிகொப்டர்கள் மூலம் தாக்கியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் அதுல ஜெயவர்தன தெரிவித்தார். வெள்ளியன்று ஊர்காவற்துறை பகுதிக்குள் ஊடுருவிய புலிகள் குழுவொன்றை துருப்புக்கள் இன்னமும் தேடிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு நாள் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. படையினரில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறைந்தபட்சம் 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ள அதே வேளை, எதிரிகளில் 150 பேரை கொன்றிருப்பதாகவும் அது கூறிக்கொள்கின்றது. புலிகள் தமது உறுப்பினர்களில் 22 பேர் பலியாகியிருப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் மற்றும் அவரது அரசாங்கமும் இந்த புதிய சுற்று மோதல்களுக்கு புலிகள் மீது சிடுமூஞ்சித்தனமாக குற்றஞ்சாட்டுகின்றனர். அரசாங்கப் பேச்சாளர் நிமால் சிறிபால டி சில்வா, அரசாங்கத்திற்குச் சொந்தமான சிலுமின செய்தித்தாளுக்கு ஞாயிரன்று கருத்துத் தெரிவிக்கையில்: "வெகுஜனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் தேசியப் பாதுகாப்பை காத்துக்கொள்ளவும் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் வலியுறுத்திக் கொள்கிறது. இது யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாகாது" என்றார்.

யதார்த்தத்தில், அதிகரித்து வரும் மோதல்கள், கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் இராஜபக்ஷ ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றதை அடுத்து இராணுவமும் மற்றும் அதோடு இணைந்து செயலாற்றும் துணைப்படைகளாலும் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் தாக்குதல்களின் நேரடியான உற்பத்தியேயாகும். நீரோடும் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குதவற்காக "மனிதாபிமான அடிப்படையில்" மாவிலாறு அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்காக தாக்குதல் நடத்துமாறு ஜூலை 26 அன்று ஜனாதிபதி எடுத்த முடிவின் நேரடி விளைவே தற்போதைய மோதல்களாகும். கடந்த வரம் புலிகள் மதகைத் திறந்துவிட்ட போதிலும் கூட, இராணுவம் புலிகளின் பிராந்தியத்தைக் கைப்பற்றுவதற்கான தனது நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இது யுத்த நிறுத்தத்தை தெளிவாக மீறுவதாகும்.

இராணுவத்தின் நடவடிக்கைகள், மாவிலாற்றை சூழ உள்ள பிரதேசங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப் பட்டிருக்கவில்லை. இராணுவம், திருகோணமலை துறைமுகத்திற்கு தெற்கே உள்ள பிரேதசமான சாம்பூர் உட்பட, புலிகளின் பல பிரதான நிலைகள் மீது குண்டுகளைப் பொழிவதற்கான சாக்குப் போக்காக இந்தத் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டது. நேற்று, கிழக்கு நகரான மட்டக்களப்பிற்கு அருகில் உள்ள புலிகளின் முகாங்களை கைப்பற்றி முன்செல்வதற்கு முயற்சித்ததாக விசேட அதிரடிப்படை பொலிஸ் மீது புலிகள் குற்றஞ்சாட்டினர். இராணுவ உயர் மட்டத்தினர், புலிகளைப் பலவீனமாக்கும் வகையில் 2004ல் அவர்களுக்குள் இடம்பெற்ற ஒரு பிளவின் மூலம் முன்னேற்றம் காண நீண்ட முயற்சியை மேற்கொண்டனர். இந்த பிளவு கருணா குழு என்ற ஒன்றை ஸ்தாபிக்க வழியமைத்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தின் பலவீனமான நிலைகள் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் பழிவாங்க புலிகள் முயற்சித்தமை ஆச்சரியத்திற்குரியதல்ல.

பேச்சுவார்த்தைகள் கிடையாது

கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ஃவ் ஹென்றிக்ஸன், இரு தரப்பினரும் உடனடியாக மோதல்களை நிறுத்தாவிட்டால் நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் நாட்டைவிட்டு வெளியேற சிபாரிசு செய்துள்ளதாக டெயிலி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்தார். "கண்காணிப்புக் குழு இரு தரப்பினராலும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், அது இயங்கவேண்டிய தேவை இருப்பதை நான் காணவில்லை. ஆகவே குழுவை விலக்கிக்கொள்வது பற்றி கவனம் செலுத்துமாறு நான் நோர்வேக்கு சிபாரிசு செய்துள்ளேன். எனவே, இரு தரப்பினருக்கும் நாங்கள் தேவையில்லாத போது, சில சமயங்ககளில் உயிருக்கும் ஆபத்தான நிலையில் நாங்கள் ஏன் இங்கு இருக்க வேண்டும்? நாங்கள் அவர்களுக்கு ஒரு அரசியல் மூடுதிரையாக இருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர்," என அவர் தெரிவத்தார்.

மாவிலாறு அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்கான அரசாங்கத்தின் தாக்குதல்கள் "மனிதாபிமான" அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளோ அல்ல, அது ஒரு ''எதிர்த் தாக்குதல்'' என நான் முடிவு தெரிவித்துவிட்டேன் என ஹென்றிக்ஸன் தெரிவித்தார். "அவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகள் அல்லது தற்காப்பு விமானத் தாக்குதல்களைப் பற்றி பேசுகிறார்கள்... அது ஒரு இராணுவ எதிர்ப்பு நடவடிக்கை என நான் முடிவு செய்துவிட்டேன்... நிச்சயமாக, நீங்கள் உங்களது எதிரிக்கு எதிராக போராடுவதோடு இதுவரையான அனைத்து நடவடிக்கைகளும் தற்காப்புக்கானது என அரசாங்கம் உணர்கின்றது. ஆனால் அது பற்றிய எனது நோக்கு அதுவல்ல. குறைந்தபட்சம் இது யுத்தநிறுத்த உடன்பாட்டிக்கு உரியதல்ல," என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய மோதல்களுக்கு மத்தியில், அரசாங்கத்தின் சமாதான செயலகத்தின் தலைவர் பாலித கோஹன, பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான ஒரு அழைப்பை புலிகளிடம் இருந்து பெற்றதாகத் தெரிவித்தார். கோஹன இந்த பிரேரணையை உடனடியாக அணைத்துக்கொண்டார் -- இந்த நடவடிக்கை, இராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்ட விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட உதவுவதாகும். இந்த அறிக்கையை உடனடியாக மறுத்த புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் எஸ். புலித்தேவன்; "நாங்கள் சமாதானப் பேச்சுக்களுக்காக பிரேரணைகளை முன்வைக்கவில்லை. அரசாங்கத்தின் எதிர்த் தாக்குதல்கள் சமாதானப் பேச்சுக்களை சாத்தியமற்றதாக்கியுள்ளன," எனத் தெரிவித்தார்.

மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதுடன் யுத்த நிறுத்தத்திற்கான வாய்ப்புகள் தோன்றாத நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், மோதல்களை நிறுத்தி புதிய பேச்சுவர்த்தைகளை முன்னெடுக்குமாறு அழைப்புவிடுத்து வெள்ளியன்று ஒரு அறிக்கையை இறுதியாக வெளியிட்டுள்ளது. இந்தக் கருத்துக்கள், இரண்டு வாரங்களுக்கு முன்னர் அரசாங்கம் அதனது தாக்குதல்களை முன்னெடுத்த பின்னர் முதற் தடவையாக வெளிவந்துள்ளதோடு, இலங்கை இராணுவம் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதையிட்டு வாஷிங்டன் கவலை கொண்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றன. இதுவரை மெளனம் காத்தமையானது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஏறத்தாழ புஷ் நிர்வாகம் பச்சைக் கொடி காட்டுவதற்கு சமமானதாகும்.

அடுத்த நாள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வோ ஆகிய சமாதான முன்னெடுப்புக்கான இணைத் தலைமை நாடுகள், மோதல்கள் வெடித்ததில் இருந்து முதலாவது உத்தியோகபூர்வ பிரகடனத்தை வெளியிட்டன. பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டு மற்றும் பத்தாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயரும் வரை அமைதியாக இருந்துவிட்டு, இந்த இணைத்தலைமை நாடுகள் மோதல்களைப் பற்றி ஆழமான கவலையை போலித்தனமாக வெளியிட்டதுடன் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறும் வலியுறுத்துகின்றன.

எவ்வாறெனினும், பலருடன் சேர்ந்து திட்டமிட்ட ஒரு சர்வதேச தலையீடு நிகழ்தற்கரியதாக உள்ளது. கடந்த வாரக் கடைசியில் ஒரு மேல்நாட்டு இராஜதந்திரி ராய்ட்டருக்குத் தெரிவித்தாவது: "அவர்கள் (அரசாங்கமும் புலிகளும்) தலையை முட்டிக்கொள்ளும் வரை நாங்கள் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கத் தள்ளப்பட்டுள்ளோம்." இதே உணர்வுகளை வெளிப்படுத்திய கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்ஃவினர் ஒமர்சன்: "இரு தரப்பினரிடமிருந்தும் எந்தவொரு ஆரம்பிப்புகளும் இல்லையெனில், அது (யுத்தத்தை நிறுத்த முயற்சிப்பது) பயனற்றதாகும்... இரு சாராருமே எந்தவொரு ஆரம்பிப்பையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை," என்றார்.

வடக்கு கிழக்கில் உள்ள பொதுமக்கள் ஆழமடைந்துவரும் சமூக பேரழிவை எதிர்கொண்டுள்ளனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்படி, மட்டக்களப்பின் வடக்குப் பகுதியில் புலிகளின் முன்னரங்குகளுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். மூதூர் நகரைக் கைப்பற்றுவதற்காக இடம்பெற்ற கடுமையான மோதல்களை அடுத்து கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் இன்னும் 40,000 அகதிகள் அரசாங்கக் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மோதல்கள் தொடங்குவதற்கு முன்னதாக, தென்மராட்சி, எழுதுமட்டுவாள், புலோப்பளை, கிளாலி, கொடிகாமம், கச்சாய் மற்றும் வரனிப் பகுதிகளில் உள்ள இராணுவ நிலைகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு வெள்ளியன்று புலிகளின் வானொலி ஒரு செய்தியை வெளியிட்டது. எவ்வாறெனினும், படையினர், அன்று மாலை ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மக்கள் இடம்பெயர்வதைத் தடுத்தனர். கடைகளை மூடுமாறு கட்டளையிடப்பட்டதோடு மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கத் தள்ளப்பட்டனர். இடம்பெயர முற்படுபவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என படைகள் அச்சுறுத்தின.

இதன் விளைவாக, பல குடியிருப்பாளர்கள் பின்தொடர்ந்த மோதல்களில் அகப்பட்டனர். அண்மைய வராங்களில், புலிகள் பொதுமக்களை "மனிதக் கேடயங்களாகப்" பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியதன் மூலம், பெருந்தொகையான அப்பாவி மக்களை கொலை செய்த இராணுவ நடவடிக்கைகள் மற்றும் விமானத் தாக்குதல்களை இராணுவம் நியாயப்படுத்த முயற்சித்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தளவில், நெருங்கிவர இருந்த புலிகளின் தாக்குதல்களை தோற்கடிக்க உள்ளூர் தமிழ் மக்கள் இடம்பெயர்வதை படையினர் வேண்டுமென்றே தடுத்ததாகவே தோன்றுகிறது. அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பொறுத்தமட்டில், தீவின் முழுத் தமிழ் மக்களும் எதிரிகள், அவர்கள் இவ்வாறே நடத்தப்பட வேண்டும்.

Top of page