World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Despite president's denials, Sri Lankan military continues offensive war

ஜனாதிபதியின் மறுப்புக்களுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவம் ஆத்திரமூட்டல் யுத்தத்தை தொடர்கிறது

By Sarath Kumara
23 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, திங்களன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பானின் இராஜதந்திரிகளுடன் நடந்த கூட்டத்தில், தனது அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுக்கின்றது என்ற கூற்றை மறுத்தார். ஊடகங்களுக்கு முன்னர் கூறிய கருத்துக்களையே மீண்டும் தெரிவித்த அவர், இலங்கை இராணுவம் புலிகளின் தாக்குதல்களுக்கு மட்டுமே பதிலடி கொடுத்ததாகவும் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்றும் கூறிக்கொண்டார்.

கடந்த வாரம் பூராவும் நடைபெற்று வருகின்ற பகிரங்க மோதல்களுக்கு மத்தியில், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையுடன் சேர்ந்து குழம்பிப் போயுள்ள இலங்கை சமாதான முன்னெடுப்புகள் என்று சொல்லப்படுவதன் இணைத்தலைமை நாடுகளின் பிரநிதிகளே இந்த இராஜதந்திரிகளாவர். ஜனாதிபதி கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசாங்கம் யுத்த நிறுத்தத்திற்கு கட்டுப்பட்டு இருப்பதாகவும் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்காக புலிகளின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் நகைப்புக்கிடமான முறையில் பிரகடனம் செய்தார்.

இராஜபக்ஷவின் கருத்துக்கள் ஒரு தொகை பொய்களை அடிப்படையாகக் கொண்டதாகும். ஜனாதிபதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்காக ஜூலை 26 அன்று 2,000 துருப்புக்களுடன் ஒரு ஆக்கிரமிப்புத் தாக்குதலை முன்னெடுக்க உத்தரவிட்டதன் மூலமே தற்போதைய மோதலைத் தொடக்கி வைத்தார். இந்த நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை என அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ஃப் ஹென்றிக்ஸன், இது 2002 யுத்த நிறுத்தத்தை வெளிப்படையாக மீறுவதாகும் என பிரகடனம் செய்தார்.

புலிகளின் பிரதான நிலைகளின் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான ஒரு சாக்குப் போக்காக இராணுவம் மாவிலாறு விவகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டிருக்கும் எதிர்த் தாக்குதல்களைத் தூண்டிவிட்டுள்ளது. ஆகஸ்ட் 11 தொடக்கம், வடக்கில் யாழ் குடாநாட்டில் உள்ள இராணுவ நிலைகளின் மீது புலிகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் கடுமையான மோதல்கள் நடைபெறுவதாகவும் புலிகள் பிரதான பலாலி இராணுவத் தளம் மற்றும் இராணுவக் கட்டிடத்தின் மீதும் ஆட்டிலரித் தாக்குதல்களை நடத்துவதாகவும் கடந்த வெள்ளியன்று செய்திகள் வெளியாகியிருந்தன. அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள குடாநாட்டின் வடக்குப் பகுதி தரைமார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாகவும் ஏறத்தாழ தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இராணுவத்தால் வெளியிடப்பட்ட உயிரிழந்தவர்களின் பட்டியல், மோதல்களின் அளவை சுட்டிக்காட்டுகிறது. பத்திரிகைகளுக்கு விடுக்கப்பட்ட அறிக்கைகளின் படி, ஆகஸ்ட் 1 முதல் 12 வரை 159 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் 452 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவம் 600 புலிகளை கொன்றுள்ளதாகவும் மேலும் பலரை காயமடையச் செய்துள்ளதாகவும் அறிவித்த போதிலும், இந்த எண்ணிக்கைகள் அதிகரித்துக் காட்டப்படுவதாகவே தோன்றுகிறது. உதாரணமாக, கடந்த வாரம் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பெருந்தொகையான பாடசாலை மாணவிகள் "சிறுவர் போராளிகளே" என பாதுகாப்பு பேச்சாளர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார்.

குறிப்பிடத்தக்க விதத்தில், திங்கட்கிழமை கூட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சக்திகள் இராஜபக்ஷவை விமர்சிக்கவில்லை. பல வாரங்களாக இராணுவம் மாவிலாறில் தனது ஆத்திரமூட்டல் தாக்குதல்களை முன்னெடுத்து வந்த போதிலும், இந்த இணைத் தலைமை நாடுகள் முழுமையாக மெளனம் சாதித்ததன் மூலம், இலங்கை அரசாங்கத்திற்கு முன் செல்வதற்கான பச்சை விளக்கை விளைபயனுள்ள விதத்தில் காட்டியுள்ளனர். இந்த இணைத் தலைமைகள் கடந்த வாரம் மோதல்களுக்கு முடிவுகட்டி பேச்சுக்களை மீண்டும் தொடங்குமாறு அழைப்புவிடுத்த போதிலும், அதுவும் ஜனாதிபதியுடனான சந்திப்பைப் போலவே ஒரு சம்பிரதாய பூர்வமான நடவடிக்கையாகவே தோன்றுகிறது.

கூட்டத்தை அடுத்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் "விரிவான மற்றும் உறுதியான விதத்தில் பகைமைக்கு முடிவுகட்டுவதாக" ஒரு நம்பகமான விருப்பத்தை தெரிவித்தால், மோதல்களுக்கு முடிவு கட்டுவது பற்றி அரசாங்கம் அக்கறை செலுத்தும் என இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். "அத்தகைய ஒரு மோதல் நிறுத்தமானது, சாம்பூர் பிரதேசம் திருகோணமலை துறைமுகத்திற்கும் மற்றும் அதை சூழ உள்ள பிரதேசத்திற்கும் இராணுவ அச்சுறுத்தலை விடுக்காது என்பதை உறுதிப்படுத்தும் ஐயத்திற்கிடமற்ற விதிமுறைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்," என்ற நிபந்தனையை ஜனாதிபதி உடனடியாக சேர்த்துக் கொண்டார்.

இந்த எச்சரிக்கை, தான் கட்டுப்படுவதாகக் கூறிக்கொள்ளும் 2002 யுத்த நிறுத்தம் இலங்கை இராணுவத்தின் நிலைகளை பலப்படுத்தும் விதத்தில் திருப்பி எழுதப்படல் வேண்டும் என்ற கோரிக்கைக்கு சமமானதாகும். இராஜபக்ஷ கடந்த நவம்பர் தேர்தலில் சிங்களப் பேரினவாத பங்காளிகளின் ஆதரவுடன் குறுகிய வெற்றியைப் பெற்றதில் இருந்து, யுத்த நிறுத்தம் பற்றிய ஒரு மீள் பேச்சுவார்த்தைக்கு ஆத்திரமூட்டும் விதத்தில் அழுத்தம் கொடுத்து வருகின்றார். தற்போதைய மோதலிலும், புலிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதற்காக தனது சாம்பூர் தளத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். திருகோணமலைத் துறைமுகம், ஒரு பிரதான மூலோபாய வசதியும் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்கத் துருப்புக்களுக்கான ஒரு இன்றியமையாத இணைப்புமாகும்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, வலது சாரி ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய கருத்துக்களில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஏப்பிரலில் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய பொன்சேகா: "இது புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதான காலம் பற்றிய ஒரு பிரச்சினையாயாகும்," எனப் பிரகடனம் செய்தார். "இராணுவம் தமிழர்களுக்கு எதிரானதல்ல" என பிரகடனம் செய்த அவர், புதுக்குடியிருப்பில் கடந்த வாரம் கொல்லப்பட்ட மாணவிகள் "சிறுவர் போராளிகள்" எனக் கூறியதன் மூலம் அதை அவர் நியாயப்படுத்தினார். ஸ்தலத்திற்கு சென்று பார்த்த கண்காணிப்புக் குழு மற்றும் யுனிசெஃப் அலுவலர்கள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர்.

புலிகளுடனான வெளிப்படையான மோதல்களின் மத்தியில், இராணுவமும் அதன் துணைப்படை பங்காளிகளும், புலி ஆதரவாளர் என கருதும் எவருக்கும் எதிரான மூடிமறைக்கப்பட்ட அச்சுறுத்தல் யுத்தத்தையும் மற்றும் பயங்கரவாதத்தை பயன்படுத்துவதையும் தொடர்கின்றனர். கடந்த நவம்பரில் இருந்து, புலிகளை பலவீனமாக்குவதையும் மற்றும் 2002 யுத்த நிறுத்தத்தை கீழறுப்பதையும் இலக்காகக் கொண்ட ஆத்திரமூட்டல் படுகொலைகள் மற்றும் அதிகரித்தும் வரும் வன்முறைகளுக்கும் அவர்களே தலைமை வகித்துள்ளனர்.

ஆகஸ்ட் 18, யாழ்ப்பாண நகருக்கு அருகில் புலிகளுக்கு சார்பான உதயன் பத்திரிகையின் களஞ்சியசாலை ஆயுதம் தரித்த குண்டர்களால் தாக்கப்பட்டது. கண்களை மூடிக் கட்டியிருந்த குண்டர்கள், கட்டிடத்திற்கு தீ மூட்டுவதற்கு முன்னதாக அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கொல்வதாக அச்சுறுத்தினர். கடந்த இருவாரங்களாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் கடுமையான பாதுகாப்புக்கும் மற்றும் விரிவான ஊரடங்கு சட்டத்திற்கும் கீழ்ப்படுத்தப்பட்டுள்ளமை, இந்தத் தாக்குதலில் இராணுவத்தின் தலையீட்டை சுட்டிக்காட்டுகிறது. இதே ஆண்டும் மேலும் நான்கு உதயன் பத்திரிகை ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 19 காலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான படையினர் சர்வதேச தமிழ் மாணவர் கழகத் தலைவர் டி. பகீரதனை கைது செய்துள்ளனர். மாணவர் கழக அலுவலகத்திற்குள்ளும் நுழைந்த இராணுவம், கழகத்திற்கு சொந்தமான கம்பியூட்டர்கள் மற்றும் ஆவனங்களையும் கைப்பற்றியது. முதற்தடைவையாக இந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, துருப்புக்கள் கதவுகளை உடைத்து, கட்டிடத்தை சோதனை செய்த நிலையில் அன்று மாலை வரைத் தொடர்ந்தது.

ஆகஸ்ட் 20 இரவு, அடையாளந்தெரியாத ஆயுததாரிகள் சின்னத்தம்பி சிவமகாராஜவை சுட்டுக் கொன்றது. 68 வயதான இவர், ஒரு முன்நாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் புலிகளுக்கு சார்பான நமது ஈழநாடு பத்திரிகையின் நிர்வாக இயக்குனருமாவார். ஆயிரக்கணக்கானவர்களை தமது வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களில் இருந்தும் வெளியேற்றிய பரந்த உயர் பாதுகாப்பு வலயங்களில் இராணுவம் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதற்கு எதிரான பிரச்சாரங்களை சிவமகாராஜா ஏற்பாடு செய்திருந்தார். யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள இந்த உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு வெளியிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார்.

Top of page