World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Who is Stephen Harper, the Conservative poised to be Canada's next prime minister?

கனடாவின் அடுத்த பிரதம மந்திரியாகக் வரக்கூடும் எனக்கூறப்படும் கன்சர்வேடிவ் ஸ்டீபன் ஹார்ப்பெர் யார்?

By Richard Dufour
20 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

12 ஆண்டுகள் தடையற்ற லிபரல் ஆட்சி, பொருளாதாரக் கவலை பெருகியுள்ள உணர்வு, ஏராளமான ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டது ஆகிய 2006 கனடியத் தேர்தல்களைச் சூழ்ந்துள்ள நிலைமையானது, கனடாவின் பெருவணிக மேல்தட்டுகளினால் அரசியலை தீவிர வலதிற்குத் தள்ளுவதற்கு நீண்ட காலமாகத் தேடிவரும் வாய்ப்பாக ஆவலுடன் பற்றி எடுத்துக் கொள்ளப்பட்டது. செய்தி ஊடகம், ஊழல் பிரச்சினைகளைப் பற்றி ஏராளமான தகவல்களைத் திகட்டவைக்கும் வகையில் கொடுத்திருந்தது, மிதவாத கொள்கைகளை ஏற்றுள்ளோம் என்று கூறும் கன்சர்வேடிவ் (பழைமைவாத) உடைய கருத்துக்களை ஆய்வுக்குள்ளாக்க அதன் விருப்பமின்மை, பிரதம மந்திரி போல் மார்ட்டினை தடுமாற்றத்திற்குட்பட்டவர், பதவி முடிந்துவிட்டவர் என்று அது தாக்கிப் பேசும் தன்மை ஆகிய அனைத்தும் புஷ் நிர்வாகத்தைப் பல வகைகளிலும் பின்பற்ற இருக்கும், அத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொள்ள விழையும் ஸ்டீபன் ஹார்ப்பெருடைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவரும் கூறுபாடுகளை உடைய பிரச்சாரத்தைக் காட்டுகின்றன.

அடுத்த திங்கள் தேர்தலுக்குப் பிறகு அனைத்துக் கருத்துக் கணிப்புக்களின்படியும் கனடாவின் பிரதம மந்திரியாக வரக்கூடியவர் ஒரு வலதுசாரிப் பொருளாதார வல்லுனரும், புதிய கன்சர்வேடிவ் சிந்தனையாளரும் ஆவார். கடந்த 15 ஆண்டுகளாக, சீர்திருத்தக் கட்சித் தலைவர் என்ற முறையிலோ, பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலோ, தேசியக் குடிமக்கள் கூட்டணி என்னும் தீவிர வலதின் தலைவர் என்ற முறையிலோ அல்லது கனடிய கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையிலோ, 2004ல் இருந்து புதிய கன்சர்வேடிவ் கட்சியில் தலைவர் என்ற முறையிலோ, சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் போன்ற அனைவருக்கும் கிடைக்கும் சமூக நலன்கள் பற்றி அவரது கடும் விருப்பமின்மை பற்றியோ அல்லது தனியார் மயம், கட்டுப்பாடுகள் அகற்றப்படுவது பற்றித் தன்னுடைய ஆதரவு பற்றியோ அவர் எதையும் இரகசியமாகக் கொண்டது இல்லை. 2003ம் ஆண்டில் அமெரிக்காவின் தலைமையில் ஈராக் மீது ஆக்கிரமித்த புஷ் நிர்வாகத்துடன், கனடாவையும் போரில் ஈடுபடுத்தாதற்காக லிபரல்கள் மீது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், ஹார்ப்பர் அண்மையில் தன்னுடைய விருப்பம் "கனடிய இராணுவத்தை மறுசீரமைத்தல்" என்றும் "அதன் நோக்கம் கனடாவின் வெளியுறவுக் கொள்கைகள் சுதந்திரமாக இருக்கும் என்பதோடன்றி உலகம் முழுவதும் இருக்கும் மற்ற சக்திகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்" என்றும் அறிவித்துள்ளார்.

மரபுவழியிலான "கனடிய மதிப்பைக்" காட்டிக் கொடுக்கிறார் என்ற குற்றம் தேர்தல் எதிர்ப்பாளர்களால் ஹார்ப்பர் மீது சுமத்தப்பட்டுள்ளது. தாராளவாதிகளும் புதிய ஜனநாயகக் கட்சியின் சமூக ஜனநாயகவாதிகளும் கனடிய சமூகத்தில் இருக்கும் வர்க்க வேறுபாடுகளை மறைப்பதற்கும், அவற்றில் தாங்கள் பெருவணிகங்களின் கட்சிகள் என்ற வகையில் தங்களின் சொந்த பங்கை மறைப்பதற்கும் ஊக்கமற்ற அனுபவப்பூர்வமாக சாத்தியம் அல்லாத எண்ணங்களைத்தான் நம்பியுள்ளனர்.

1993ல் இருந்து அரசாங்கத்தை அமைத்து நடத்திவரும் லிபரல்கள் மிகப் பெரிய வகையில் சமூகச் செலவினங்களைக் குறைத்தும், வரி வெட்டுக்களைக் கொண்டுவந்த வகையிலும், உழைக்கும் மக்களிடமிருந்து செல்வந்தர்களின் கைளில் மகத்தான வகையில் மறுசெல்வக்குவிப்பு நடப்பதற்குக் காரணமாக இருந்தனர் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஜூன் 2004 தேர்தல்களில் அவர்கள் நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்த பின்னர் லிபரல்கள் அதிகாரத்தில் தொடர்வதற்கு புதிய ஜனநாயகக் கட்சி உதவியது. அதன் பின்னர் ஊழல் பிரச்சினையைப் பயன்படுத்தி கன்சர்வேடிவ்கள் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்று நினைக்கும் திட்டத்துடன் இணைந்து, லிபரல்களின் வலதுசாரி பதிவுச்சான்றுகளை அல்லாமல், அறநெறி பிறழ்தல் என்ற காரணத்தைக் காட்டி கன்சர்வேடிவ் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மான வரைவிற்கு உதவியும், அதற்கு ஆதரவாக வாக்கும் அளித்தும் அரசாங்கத்தின் வீழ்ச்சியை அவர்கள் நியாயப்படுத்தினர். Bloc Quebecois உடைய உண்மையான தன்மை மாநில அளவில் அதன் தோழமைக் கட்சியான Parti Quebecois உடைய செயல்களால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பிந்தையது கியூபெக் அரசாங்கத்தை 1994ல் இருந்து 2003 வரை அமைத்திருந்தபோது, அது தன்னுடைய மிகப் பெரிய செலவினக் குறைப்புக்களைப் பொதுக் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, மற்ற பொது சமூகச் செலவினங்களில் காட்டியது.

லிபரல் பிரதம மந்திரி போல் மார்ட்டின், புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேடன், Bloc Quebecois உடைய தலைவர் ஜில் டியூசெப் ஆகியோர் ஹார்ப்பெருடைய "இரகசியச் செயற்பட்டியல்" பற்றிக் கூறியுள்ள கண்டனங்களின் பாசாங்குத்தன்மையை அம்பலப்படுத்துவது ஒரு விஷயம்தான். ஆனால் அத்தகைய செயற்பட்டியல் இருக்கிறது என்பதை மறுப்பது மற்றும் கன்சர்வேடிவ் அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கும் வாழ்க்கைத் தரங்களுக்கும் அச்சுறுத்தல் கொடுக்காது என்று கூறுவதும் முற்றிலும் வேறு விஷயம்தான். ஆயினும்கூட இதைத்தான் செய்தி ஊடகம் துல்லியமாகச் செய்துவருகிறது.

ரோரொன்டோவின் Globe & Mail, மொன்ட்ரீயலின் La Presse போன்ற செய்தித்தாள் நிறுவனங்கள் ஒரு கன்சர்வேடிவ் தேர்தல் வெற்றிக்கு தலையங்க ஒப்புதல் கொடுத்துள்ளதுடன், 46 வயதுடைய ஹார்ப்பெர் தன்னுடைய கன்சர்வேடிவ்களைப் போதுமான அளவிற்கு அரசியலின் மையத்தானத்திற்குக் கொண்டுவந்து, ஓய்ந்துவிட்ட, திறமையற்ற லிபரல் ஆட்சிக்கு செயல்படக்கூடிய "முக்கிய போக்குடைய" மாற்றீடாக கொண்டுவந்துவிட்டார் என்று நியாயப்படுத்தியும் எழுதியுள்ளன.

ஸ்டீபன் ஹார்ப்பெருடைய "பெரிய அரசாங்கத்திற்கு" எதிரான வாழ்நாள் முழுவதுமான கருத்தியல் போராட்டத்தையோ, சமூகக் கொள்கையின் அனைத்துக் கூறுபாடுகளிலும் சந்தையின் முழு ஆட்சிதான் இருக்க வேண்டும் என்ற கருத்தையோ, அமெரிக்க புதிய கன்சர்வேடிவ் இயக்கத்துடன் அவர் கொண்டுள்ள நெருக்கமான தொடர்பு பற்றியோ, புஷ் நிர்வாகத்தைப் பெரிதும் அவர் வியப்பதைப் பற்றியோ, இன்னும் கூடுதலான ஆக்ரோஷமான வகையில் வெளியுறவுக் கொள்கை இருக்க வேண்டும் என்பதற்காக கனடிய இராணுவச் சக்திகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற அவருடைய துடிப்பு பற்றியோ எதிர்ப்புக் குரல் வெளிவந்தால், அது எள்ளி நகையாடப்படுகிறது.

ஹார்ப்பெருடைய முழு அரசியல் வாழ்வும் அழிக்கப்பட்டுவிட முடியாத வகையில், அவருடைய வாழ்க்கைச் சரித்திரம் தக்கவர்களாலும், பெருவணிக ஊடகத்தாலும் அவர் அரசியலில் முதிர்ச்சி வழிவகையைக் கடந்து வந்துள்ள ஒரு கோபமுடைய இளைஞர் என்னும் வகையில் சித்தரித்துக் காட்டப்படுகின்றது (Globe கட்டுரையாளர் ஜோன் இப்பிஸ்டன், ஹார்ப்பர் ஒரு "உணர்ச்சி வெறியர்" என்று ஒப்புக் கொள்கிறார்).

உண்மையில், ஹார்ப்பெரும் அவருடைய புதிய கன்சர்வேடிவ் கட்சியும் முக்கியத்துவத்தில் ஏற்றம் பெற்றுள்ளதானது, ஒரு புறம் கனடிய மேல்தட்டினர் இன்னும் வலதிற்கு மாற்றம் பெற்றுள்ளதின் விளைவு எனலாம் -- சுகாதார நலன்கள் பாதுகாப்பு என்பது இப்பொழுது சிந்தனைத் தீவிரத்தின் விளைவு என்று தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. மற்றும் ஹார்ப்பெர் கூடுதலான வகையில் பெருவணிகத் தொடர்புக்கு ஏற்ப நடந்து கொள்ளும் ஒரு அரசியற் கருவிக்குள் (சீர்திருத்த/கனடியக் கூட்டணி) முதன்மைநிலை பெற்றவராக, முதலில் வந்த அரசியல் இயக்கத்திற்கு மீண்டும் வடிவம் கொடுத்தவராக உள்ளார்.

1984ம் ஆண்டு கூட்டாட்சித் தேர்தலில் கன்சர்வேடிவ்களுக்கு ஆதரவு தருவதில், 25 வயதான ஹார்ப்பெர் மிகத் தீவிரமாக இருந்தார். மல்ரோனி முன்னேற்ற கன்சர்வேடிவ் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து சிறிது காலத்தில் இவர் ஒரு டோரி பாராளுமன்ற உறுப்பினருக்கு முக்கிய பாராளுமன்ற அலுவல்களில் உதவியாளராகப் பணியாற்ற ஒட்டோவாவிற்குச் சென்றார். அமெரிக்க ஜனாதிபதி றேகன் மற்றும் பிரிட்டனின் பிரதம மந்திரி மார்க்கரெட் தாட்சர் ஆகியோரின் அரசாங்கக் கொள்கைகளைப் பின்பற்றி மல்ரோனி கன்சர்வேடிவ்கள் அக் கொள்கைகளைச் செயல்படுத்த முயன்றனர். ஆனால், அரசாங்கத்தில் இருந்து ஓராண்டிற்குப் பிறகு ஹார்ப்பெர் வெளியேறினார். அது புதிய கன்சர்வேடிவ் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்துவிட்டதாக அவர் கருதினார். 1987ம் ஆண்டு அவர் புதிதாக நிறுவப்பட்ட வலதுசாரி மக்களை ஈர்க்கும் கட்சியான பிரெஸ்டன் மன்னிங்குடைய கட்சியில் சேர்ந்து சீர்திருத்தக் கட்சியின் முதல் கொள்கை ஆலோசகராக இருந்தார். அத்தகுதியின்படி, அவர் 1980களின் கடைசிப்பகுதி, 1990களின் முற்பகுதிகளில் சீர்திருத்தக் கட்சியின் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். ஓட்டோவோவில் பல மில்லியன் டாலர் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் பற்றாக்குறையை அகற்றுதல் என்ற பெயரில் மகத்தான சமூகச் செலவினக் குறைப்புக்களுக்குக் காரணமாக இருந்தார். இந்தக் கொள்கைதான் பின்னர் நாடு முழுவதும் மற்ற அரசாங்கங்களாலும் பின்னர் ஏற்கப்பட்டது. கனடாவில் இருந்து கியூபெக் பிரிந்துசெல்ல நினைத்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் B திட்டம் (Plan B) என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய கடுங்கோட்பாட்டு மூலோபாயத்தை வளர்ப்பதிலும் ஹார்ப்பெர் முக்கிய பங்கு கொண்டிருந்தார். 1995 கியூபெக் வாக்கெடுப்பிற்குப் பிறகு கூட்டாட்சியில் இருந்த லிபரல் அரசாங்கம் இத்திட்டத்தைத் தான் பெரிதும் நம்பியது. பின்னர் Clarity Act என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து கூட்டாட்சி நாடாளுமன்றம்தான் எந்தவித வருங்கால வாக்கெடுப்புக்களிலும் கியூபெக் பிரிந்து செல்லும் அச்சுறுத்தல்களிலும் "தெளிவான பிரச்சினை", "தெளிவான பெரும்பான்மை" என்றால் என்ன என்பதை நிர்ணயிக்கும் ஒரே நடுவர் மன்றமாக இருக்கும் என்று கொள்ளப்பட்டது.

இத்தகைய தீவிர வலதுசாரிக்காரர் மிதவாத, மைய-வலது முதலாளித்துவ அரசியல்வாதியாக வளர்ச்சி பெற்றுவிட்டார் என்று செய்தி ஊடகம் நமக்கு இப்பொழுது கூறுகிறது. ஒரு மேற்கின் தளத்தைக் கொண்ட, வலதுசாரி ஜனரஞ்சகவாத சீர்திருத்தக் கட்சியை, அதிகாரத்திற்கு விழையும் தேசிய சக்தியாக மாற்றியது, --முதலில் கனடிய கூட்டணியுடன் இணைந்து நின்று, பின்னர் பழைய முற்போக்கு கன்சர்வேட்டிவின் எஞ்சிய பகுதிகளுடன் ஒன்றிணைத்தது-- அதன் ஆரம்ப கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட, சமய வலது வாக்காளர் தொகுதியை உறுதியாக ஓரங்கட்டுதல் என்று பொருளாகிவிட்டது என்பது உண்மையாகும். இந்தக் குட்டி முதலாளித்துவ, சமூகப் பிற்போக்குக் கூறுபாடு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. பல சமூக ஆர்வலர்கள் கன்சர்வேடிவ் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஹார்ப்பெர் அவர்களை கருக்கலைப்புப் பிரச்சினைகள், குடிபெயர்தல் சட்டங்கள், மரணதண்டனை கொடுத்தலை மீண்டும் கொண்டுவருதல் போன்ற பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கட்சித் திட்டத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அவர் கொடுத்துள்ள பெரிய சலுகை கன்சர்வேட்டிவ் அது ஓரினச் சேர்க்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் திருமண உரிமை நீக்கப்படலாமா என்ற விவாதத்தில் அரசாங்கம் அவர்களுக்குப் நாடாளுமன்றத்தில் சுதந்திரமான வாக்களிக்கும் உரிமை கொடுக்கும் என்பதேயாகும். (ஆனால், சமூகப் பொருளாதாரக் கொள்கையில் வலதுசாரி மாற்றத்தைச் செயல்படுத்தும் பிரச்சினையில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப இப் பிரச்சினை உதவும் என்ற கருத்துடைய பெருவணிகத்தின் களிப்பிற்கேற்ப, கனடாவின் உரிமைகள் சாசனத்தை மீறுவதாக அந்நடவடிக்கை இருக்கும் என்று வரக்கூடிய தலைமை நீதிமன்றத் தீர்ப்பைத் தலைகீழாகப் புரட்ட, தான் அரசியலமைப்பின் "எப்படி இருந்தாலும்", என்பதைப் பயன்படுத்தப் போவதில்லை என்று ஹார்ப்பெர் அறிவித்துள்ளார்)

கியூபெக்குடன் "சமரசத்திற்கு" முற்றுப் புள்ளி வைக்கவேண்டும், பெருவணிகத்திற்குக் கூடுதலான அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும், குறிப்பாக மேற்குக் கனடாவில் அல்பெர்ட்டா கோரிக்கைகளுக்கு ஹார்ப்பெர் காட்டியுள்ள உற்சாகம் பெருவணிகம் அவரை வருங்காலப் பிரதமராக ஏற்கும் என்பதற்கான மற்றொரு முக்கிய காரணம் ஆகும். முன்னாள் ஓன்டாரியோ டோரி பிரதமர் மைக் ஹாரிசின் முக்கிய உதவியாளர்களை ஈர்த்ததின் முலம் பே தெருவையும்(Bay Street) ஹார்ப்பெர் திருப்திப்படுத்தியுள்ளார். தன்னுடைய காலத்து விரோதியான (bête noire) மல்ரோனியின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார். முன்னாள் முன்னேற்ற கன்சர்வேடிவ் பிரதம மந்திரி புஷ் குடும்பத்தின் நெருக்கமான நண்பர் என்பதுடன் நாட்டின் முக்கியச் செல்வாக்குப் படைத்த பெருநிறுவன வழக்கறிஞர்களில் ஒருவராகவும் இருக்கிறார். மல்ரோனியின் கீழ் கற்றபடி, ஹார்ப்பெர் கியூபெக்கிற்கு, அதாவது இன்னும் கூடுதலான வகையில் ஓட்டோவோவிலிருந்து தன்னாட்சி வேண்டும் என்ற வகையில் கியூபெக்கின் மேல்தட்டினரின் கோரிக்கைக்கு மிகவும் புகழ்பெற்ற "வெளிப்படை" தன்மையையும் அபிவிருத்தி செய்துள்ளார்.

துவக்கத் துப்பாக்கிக் குண்டு முழக்கம்

லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் அரங்குகளுக்கு இடையே கணிசமான வேறுபாடுகள் இல்லை என்று செய்தி ஊடக பண்டிதர்கள் கூறுகின்றனர். ஆனால் ஸ்தூலமான முறையில் பிரச்சினையை அணுகினால் மக்களுடைய எதிர்ப்பு வெளிப்பட்டுள்ள நிலையில் இன்னும் கூடுதலான வகையில் எஞ்சியுள்ள சமூகநல அரசாங்கச் செற்பாடுகளைத் தகர்க்க வழிவகை செய்வதில் லிபரல்களின் தயக்கத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் கனடா ஒரு இராணுவவாத நாடல்ல, சமாதான நாடு என்ற அரசாங்கத்தின் கருத்தைத் தூக்கி எறிவதற்கும் தயக்கத்தை வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில் லிபரல்கள் தயக்கம் காட்டுதல், மக்களிடம் செல்வாக்கற்ற கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு அரசியல் விருப்பம் காட்டாதது ஆகியவை பற்றி ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம் நிறைந்த பிரிவு பெருகிய முறையில் அதிருப்தி அடைந்துள்ளது பற்றியும் கன்சர்வேடிவ்கள் கவனம் கொண்டுள்ளனர். இத்தகைய சக்திகள் உள்நாட்டில் சமூகச் சமரசத்தின் எச்சங்கள் அனைத்துடனும் முழுமையாக, இனி இல்லை என்ற அளவிற்கு முறித்துக் கொள்ள வேண்டும் என்றும், கூடுதலாக புவிசார் அரசியல் செல்வாக்கைத் தொடர்வதற்காக சிறிதும் வெட்கமின்றி கனடா தன்னுடைய இராணுவ வலிமையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகின்றன.

நிதிக் கொள்கையைப் பொறுத்தவரையில், இரு கட்சிகளும் மிகப் பெரிய அளவில் வரிவிதிப்புக் குறைப்புகள் மூலம் செல்வந்தர்களுக்குக் கூடுதலான நலன்களை அது கொடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அரசாங்கம் சமூக நலன்களுக்காகச் செலவிடுவதைக் குறைக்க வேண்டும் என்றும் விரும்புகின்றன. ஆயினும் கூட, ஜனரஞ்சக பாணியில் GST நுகர்வோர் வரியில் சிறு குறைப்பு வேண்டும் என்ற வகையில், கன்சர்வேடிவ்கள் மூலதன ஆதாயங்களின் மீதான வரிவிதிப்பு முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். செல்வக் கொழிப்பு மிகுந்துள்ள இல்லங்களில் இந்த வருமானக் கூறுபாடுதான் செறிந்துள்ளது. 2000ம் ஆண்டிலேயே லிபரல்கள் மூலதன ஆதாயங்களின் பகுதியை 75ல் இருந்து 50 சதவிகிதம் என்ற வருமான வரிக்குள் வரும்படி குறைக்க "மட்டுமே" செய்தனர். கன்சர்வேடிவ்களுடைய பழைய திட்டத்தின்படி, சொத்துக்கள் அல்லது குடும்ப நிலங்கள் விற்பனையில் இருந்து வரும் வருமானம் மீண்டும் ஆறுமாதத்திற்குள் முதலீடு செய்யப்பட்டுவிட்டால் வரிவிதிப்பு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட முடியும்.

குழந்தைகள் நலனைப் பொறுத்தவரையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலங்களில் அரசு உதவியுடன் பகல் பாதுகாப்பு நிறுவனங்களை ஏற்படுத்தி அவற்றிற்கு கனடா 5 பில்லியன் டாலர்கள் உதவித் தொகை அளித்தது பற்றி லிபரல்கள் பெருமை பாராட்டுகின்றனர். அடிப்படையிலேயே அனைவருக்கும் பொருந்தும் எவ்வித சமூகத் திட்டத்தையும் எதிர்க்கும் கன்சர்வேடிவ்கள், தங்கள் அரங்குகளில் "கனடாவில் விரிவாக்கம் அடைந்து கொண்டிருக்கும் சிறுவர் பாதுகாப்பிற்கு ஒரே விடை எல்லாவற்றிற்கும் பொருந்தும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரத்துவத்தை நிலைநிறுத்துதல்" எனக் கருதுவதாக லிபரல்களையும் NDP க்களையும் கண்டித்துள்ளனர். இதற்குப் பதிலாக கன்சர்வேடிவ்கள் கனடிய ஒரு குழந்தைக்கு ஆறு வயது வரை ஆண்டு ஒன்றுக்கு 1,200 டாலர்கள் புதிதாகக் கொடுத்தால் உயர் வருமானம், ஒற்றை வருமானக் குடும்பம் ஆகியோருக்கு, குறைந்த வருமானம் உடைய இரு பெற்றோர்களும் உழைக்கும் குடும்பங்களைவிட நலன் பயக்கும் என்று நினைக்கின்றனர்.

கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான நிதி சமச்சீரற்ற தன்மை பற்றி, இன்னும் கூடுதலான வகையில் கூட்டரசு வருமானம் பகிர்ந்து கொள்ளப்படலாம் என்னும் கியூபெக் ஆளும் மேற்தட்டினரின் பாரம்பரிய கோரிக்கைகளை செயற்பட்டியலில் வைப்பதற்கான ஹார்ப்பரின் விருப்பம், கியூபெக்கின் தேசியவாதிகளுக்கு பெரும் சலுகையாகிவிடும் என்று மார்ட்டின் கண்டித்துள்ளார். ஓட்டோவாவில் இருந்து மாநிலங்களுக்குக் கூடுதலான அதிகாரம் செல்லலாம் என்பது கன்சர்வேடிவ்களால் கூட்டரசு ஆதரவுடைய சமூக நலத்திட்டங்களைத் தகர்ப்பதற்கான கருவியாக உண்மையில் கருதப்படுகிறது. ஜனவரி 2001ல் ஆல்பெர்ட்டா முதல் மந்திரி Ralph Klein க்கு ஹார்ப்பெர் எழுதினார்: "ஆல்பெர்ட்டாவைச் சுற்றித் தீச்சுவர்கள் எழுப்பவதற்கு, ஒரு ஆக்கிரோஷமான, விரோதப்போக்குடைய கூட்டரசு, மாநில அரசாங்கத்தின் நெறியான அதிகாரங்களில் தலையீடு செய்யாத வகையில், முயற்சிகள் மேற்கொள்ளுவது இன்றியமையாததாகும்." ஒரு வலுவான மத்திய அரசு, தேசிய ஒற்றுமை என்ற வரலாற்றுச் சார்புடைய லிபரல்களின் தன்மைக்கு ஹார்ப்பெரின் ஆல்பெர்ட்டா அல்லது கியூபெக் அல்லது எந்த மாநிலமும் ஓட்டோவாவில் இருந்து அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளுவது பற்றிய கவலையின்மை அவருடைய தீவிர வலது கருத்துக்களில் வேர் கொண்டுள்ளது. 1994ம் ஆண்டிலேயே அவர் வெளிப்படையாகக் கூறினார்: "கனடா ஒரு தேசிய அரசாங்கம் அல்லது இரண்டு அரசாங்கங்கள் அல்லது பத்து அரசாங்கங்கள் என்று கொண்டாலும், நாட்டின் எதிர்கால அரசியலமைப்புத் தகுதி அல்லது ஏற்பாடு எப்படியிருந்தாலும் கனடிய மக்கள் வருங்காலத்தில் குறைந்த அரசுச் செயற்பாட்டைத்தான் எதிர்பார்ப்பார்கள்".

இராணுவத்தைப் பொறுத்தவரையில், கன்சர்வேடிவ்கள் அடுத்த ஐந்த ஆண்டுகளுக்கான இராணுவச் செலவுகளுக்கு கனடிய 5 பில்லியன் டாலர்கள் புதிதாகக் கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்துள்ளனர். 13,000 நிலையான படையினர்களின் அதிகரிப்பும் 10,000க்கும் மேற்பட்ட ரிசேர்வ் படையினர்களின் நியமனமும் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அமெரிக்கத் தலைமையிலான ஈராக்கியப் போரில் சேராததற்காக லிபரல் அரசாங்கத்தை கன்சர்வேடிவ்கள் பலமுறையும் கண்டித்துள்ளனர். "இது சிதைந்த வகையிலான நடுநிலை" என்று ஹார்ப்பெர் அழைத்துள்ளார். மார்ச் 2003 ல் எண்ணெய் வளம் மிக்க நாட்டின்மீது அமெரிக்கச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு துவங்கியவுடன், ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஹார்ப்பெர் கூறியதாவது: "நம்முடைய நண்பர்களுக்கு உதவி செய்யாததற்கு இந்த அரசாங்கத்தின் ஒரே விளக்கம் ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலை அவர்கள் பெறவில்லை என்பதுதான். அந்தப் பாதுகாப்புக் குழுவில் கனடாவிற்கு ஓர் இடம் கூடக் கிடையாது". அதற்கு அடுத்த மாதம் மற்றொரு உரையில் ஹார்ப்பெர் கூறினார்: "சர்வதேசச் சட்டங்கள் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும், சுதந்திரமான ஜனநாயகத்தின் முன்னேற்றம் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இராணுவ வலிமையை நம்பியிருக்கும் தன்மையுடைய உலகில் அமெரிக்கா முன்னோடியில்லாத வகையில் அதிகாரத்தைக் கொண்டு, அதைச் செலுத்தும் என்பதை உணர வேண்டிய காலம் வந்துவிட்டது." சமாதானத்தைக் கொண்ட நாடு என்ற "மிருதுவான அணுகுமுறையை" மாற்றி "கடினமாக இராணுவ சக்தியை" மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் கனடாவிற்கு வந்து விட்டது என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

கன்சர்வேடிவ்களுடைய தேர்தல் பிரச்சார அரங்கு கடுமையான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை முன்வைக்கிறது. இவற்றில் "கூட்டரசு நிறுவனங்களில் உள்ள கைதிகளுக்கு தேர்தல்களில் வாக்குரிமை கிடையாது என்பதற்கு அரசியல் திருத்தம் கொண்டுவரப்படும்" என்பதும் அடங்கும். 1000 புதிய RCMP (Royal Canadian Mounted Police கனடிய அரசாங்க சிறப்புப் போலீசார்) அதிகாரிகள் மற்றும், பிறவகையில் 2,500 கூடுதலான போலீசாரை நியமித்து, "அயல்நாடுகளில் உளவு சேகரிக்கத் திறமையுடன் உதவும் வகையில் கனடிய வெளியுறவு உளவுத் துறை அமைப்பை" ஏற்படுத்துதல், 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தீவிர வன்முறை மற்றும் பலமுறை குற்றங்கள் இழைத்தால் வயது வந்தோருக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனைகளை உடனடியாக வழங்குதல்" ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. முழுமையாகப் பார்க்கும்போது இது ஜனநாயக உரிமைகள் மீதான மிகப் பெரிய ஆக்கிரமிப்பாகும்.

கன்சர்வேடிவ்களுடைய சுகாதாரப் பாதுகாப்புக் கொள்கையும் முற்றிலும் ஏமாற்றுத்தனம் மிகுந்தது ஆகும். அவர்களுடைய கட்சி "அனைவருக்கும் பொருந்தும், பொதுச் செலவில் நிறுவப்படும் சுகாதாரப் பாதுகாப்பு முறையை" ஏற்கிறது என்று கூறுகிறது. அதே நேரத்தில், கனடாவில் தலைமை நீதிமன்றம் Chaouilli தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி, "நோயாளிகள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதற்கான உத்தரவும்" செயல்படுத்த அது முயலும் என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கில் நாட்டின் தலைமை நீதிமன்றம் தனியார் காப்புரிமை உடைய சுகாதாரப் பாதுகாப்பிற்குத் தடை என்பது மருத்துவ அளவில் ஏற்கப்படமுடியாத, காத்திருக்கும் நேரத்தை அதிகரித்து, தனிநபரின் பாதுகாப்பு என்ற நோயாளியின் அடிப்படை உரிமையை மீறுகிறது என்று குறித்துள்ளது. சட்டச் சொற்களை நீக்கிப் பார்த்தால், இதன் பொருள் தனியார் சுகாதாரப் பாதுகாப்பு தனியார் மயமாக்கப்படுவதற்குப் பச்சை விளக்கு காட்டிவிட்டது என்பதாகும். ஏனெனில் தன் குடிமக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சட்ட பூர்வப் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்று நீதிமன்றம் கூற மறுத்துவிட்டது. Chaouilli பற்றிய வெளிப்படையான குறிப்பு கன்சர்வேடிவ்கள் இரு அடுக்கு சுகாதாரப் பாதுகாப்பு முறையைக் கட்டமைக்க தயாராக உள்ளனர் என்றும் இதில் செல்வந்தர்கள் தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவர் என்றும் பொது முறை தொடர்ந்து மோசமடைவதை அனுமதிக்கத் தயாராக உள்ளனர் என்றும் பொருளாகும்.

இப்படி முற்றிலும் நேர்மையற்ற வகையில் செய்தி ஊடகம் ஹார்ப்பெர், அவருடைய கன்சர்வேடிவ்களை "கருணையுள்ளவர்கள் மற்றும் மிருதுவானவர்கள்" என்று காட்டும் முயற்சியில் ஈடுபட்டாலும்கூட (முதல் ஜனாதிபதி புஷ் தேர்தல் பிரச்சாரத்தின் கனடிய பாணியிலான மறு ஒளிபரப்புப் போல்), கன்சர்வேடிவ்கள், கருத்துக் கணிப்புக்களில் முதலிடம் பெற்ற நிலையில், தாங்கள் அடுத்த அரசாங்கத்தை அமைப்போம் என்பதில் நம்பிக்கை பெற்றுள்ள நிலையில், தங்கள் சுய உருவத்தைக் காட்டுகிறார்கள். கடந்த வாரம் ஹார்ப்பெர் கியோடொ சுற்றுச் சூழல் உடன்பாட்டில் கனடாவின் கையெழுத்தை நீக்குதல், கனடாவில் இருக்கும் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டைக் கூடுதலான வகையில் முதலாளித்துவ பொருளாதாரத்துடன் இணைக்கும் வகையில் லிபரல்கள் கொண்டு வந்திருந்த சட்டத்தைப் புதுப்பித்தல், அமெரிக்க ஏவுகணைக் கேடயத்தில் கனடா பங்கு பெறுவது பற்றிப் நாடாளுமன்றத்தில் சுதந்திர வாக்குரிமை கொடுத்தல் என்று தொடர்ச்சியாக பல தூண்டிவிடும் திட்டங்களை முன்வைத்துள்ளார். சமூக கன்சர்வேடிவ் சிந்தனைக் கருத்துக்களின் சொல்லாட்சியைப் பயன்படுத்தி, ஹார்ப்பெர் தாராண்மை சார்புடைய "துடிப்புடன் செயலாற்றும்" நீதிபதிகளையும் கண்டித்துள்ளார்.

இன்னும் கூடுதலான வகையில் ஹார்ப்பெரின் உண்மையான அரசியல் எண்ணத்தின் உட்கருத்தைப் பெறவேண்டும் என்றால் ஜூன் 1997ல் வலதுசாரி அமெரிக்கச் சிந்தனைக் குழுவான, (Council for National Policy) தேசியக் கொள்கைக்கான அவையில் அவர் ஆற்றிய உரையைக் கவனித்தால் போதும். அந்த உரையில் அவர் கனடா "ஒரு வடக்கு ஐரோப்பிய பொதுநல அரசு என்பதில் பிழையான பொருள் முழுவதையும் கொண்டிருக்கிறது" என்று கண்டித்தார். மேலும் அமெரிக்கப் புதிய கன்சர்வேடிவ் இயக்கம் கனடாவிற்கும் "உலகின் மற்ற பகுதிகளுக்கும் ஒளி போன்று மக்களுக்கு ஊக்கம் தருவது" என்றும் கூறினார்.

இந்த உரை இணையத் தளத்தில் பரந்த வகையில் கிடைக்கிறது. தற்போதைய தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிலும் ஹார்ப்பெர் வெற்றியடைவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறும் நிலையில், முற்றிலும் இந்த உரை பொருத்தமானதுதான். ஆயினும்கூட பிரச்சாரத்தின் துவக்கத்தில் அது மேற்கோளிடப்பட்டபோது, ஒரு பழைய தகவல் என்று கூறி பெருவணிகச் செய்தி ஊடகம் அதற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. புதிய கன்சர்வேடிவ்களுடைய தலைவர், ஒரு மிதமான பொறுப்பு உடைய அரசியல் மேதையாக "பரிணாம வளர்ச்சியுற்றுவிட்டார்" என்ற தகவலைக் கனடியர்கள் கேட்டால் போதும் என்று அது நினைக்கிறது. ஹார்ப்பரே கூட வேறு கருத்தைத்தான் கூறுகிறார்: "ஒரு தசாப்தத்தில் என்னுடைய அடிப்படை நம்பிக்கைகள் மாறிவிட்டன என்று நான் நம்பவில்லை."

Top of page