World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Sydney's racial violence: a warning from Sri Lanka

சிட்னியில் இனவெறி வன்முறை: இலங்கையில் இருந்து ஒரு எச்சரிக்கை

Comment by Wije Dias, general secretary of the Socialist Equality Party of Sri Lanka
23 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் 11 அன்று சிட்னி புறநகர்ப்பகுதிகளில் வெடித்த இனவெறி வன்முறையில் இருந்து ஆஸ்திரேலிய மற்றும் உலகம் பூராவும் உள்ளத் தொழிலாள வர்க்கம் தீவிர எச்சரிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து உழைக்கும் மக்களதும் பின்னணியை அலட்சியம் செய்து, அவர்களது ஜனநாயக உரிமைகளை அழிக்கும் பரந்த திட்டத்தை மேலும் முன்னெடுப்பதற்காக, அரசியல் ஸ்தாபனத்தால் இழிந்த இனவாத உணர்வுகள் எவ்வாறு தூண்டிவிடப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட்டன என்பதை அன்றைய நிகழ்வுகள் நன்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.

வட கிரோனுல்லா கடற்கரையில் உயிர்பாதுகாப்பு சேவையில் ஈடுபடும் ஒரு லெபனிய குடிபெயர்ந்த இளைஞருடன் சம்பந்தப்பட்ட ஒரு தனிப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு தோற்றமுடைய எவருக்கும் எதிராக இனவெறி வன்முறையை தூண்டுவதற்காக எல்லா விதத்திலும் மிகைப்படுத்தப்பட்டது. இது ஒன்றும் தன்னியல்பாக வெடித்ததல்ல. ஆரம்ப சம்பவத்தை அடுத்து வந்த வாரத்தில், ஒரு இனவெறி உணர்வு கொண்ட சூழலை தூண்டும் வகையிலான சூழ்நிலையை ஏற்படுத்திய வலதுசாரி ஊடக வர்ணனையாளர்கள், இலங்கையில் நாம் பலதடவைகளுக்கும் மேல் துண்பகரமாக கண்டது போன்ற மிலேச்சத்தனம் மிக்க குண்டர்களுக்கு களம் அமைத்தனர்.

இதில் பிரதானமாக இலாபம் அடைந்தவர் யார்? தனது சொந்த பிற்போக்கு பொருளாதார மற்றும் சமூக திட்டத்தில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, குடிபெயர்ந்தோர் எதிர்ப்பு உணர்வுகளையும் பயங்கரவாத தாக்குதல் பற்றிய பீதியையும் கிளறிவிடுவதில் பேர் போன பிரதமர் ஜோன் ஹோவர்ட்டும் மற்றும் அவருடைய லிபரல் அரசாங்கமுமேயாகும்.

ஹோவர்டின் கொள்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் லேபர் கட்சி, அது ஆட்சியில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மானில சட்ட மன்றத்தின் ஊடாக அடக்குமுறையான புதிய போலீஸ் அதிகாரங்களை திணிக்க உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. கொழும்பில் வாடிக்கையாக நடக்கும் வீதித் தடைகள், வாகனச் சோதனைகள், அடையாள சோதனைகள் மற்றும் ஒருதலைப்பட்சமாக தடுத்து வைத்தல் போன்றவற்றை முதன்முதலாக கடந்த வாரம் சிட்னி நகர மக்கள் அனுபவித்தனர்.

அரச இயந்திரத்தை பலப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் இருகட்சி கூட்டு நடவடிக்கைகள், உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கத்தினதும் சாதாரண நெறியாகி வருகின்றது. இது வேறு எந்தக் காரணியையும் விட, மனித சமுதாயம் எதிர்கொண்டுள்ள எதிர்கொண்டுள்ள சமூக, அரசியல் நெருக்கடியின் சர்வேதச தன்மையை தெளிவாக புலப்படுத்துகிறது. ஒரு சில செல்வந்தர்களின் நலன்களுக்கான கொள்கைக்கு மக்கள் ஆதரவை திரட்ட முடியாதுள்ள அரசாங்கங்கள், இப்பொழுது பொய்கள், பிற்போக்கு ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஜனநாயக விரோத சட்டங்கள் போன்ற வழிமுறைகளை நாடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.

வடக்கு கிரோனுல்லா கலகத்தை தொடர்ந்து வெளிவந்த ஹோவர்டின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படையானவையாக இருந்தன. கலகக் கும்பலின் உணர்வுகளுக்கு அனுதாபம் காட்டும் வகையில் ஹோவர்ட் பிரகடனம் செய்ததாவது: "ஆஸ்திரேலியர்கள் குலமரபு பற்றை விரும்புகிறார்கள் என நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஆஸ்திரேலியர்களாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்." வேறுவிதமாகக் கூறினால், மத்திய கிழக்கு புலம் பெயர்ந்தோர் பொருந்தி வாழத் தவறியதே வன்முறைக்கு காரணம் என்பதாகும்.

ஹோவர்டின் சொற்களை கேட்டவுடன், ஒரு இலங்கை சோசலிஸ்ட் என்ற முறையில், எனக்கு 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரமான சம்பவங்களே நினைவிற்கு வந்தன. 1983 ஜூலை 23 தொடங்கி மூன்று நாட்களுக்கு, தீவு முழுவதும் அரசாங்க ஆதரவு பெற்ற குண்டர்கள் கண்மூடித்தனமாக தமிழர்களை தாக்கிய இனவெறிக் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் பல மில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள வீடுகளும் வியாபார நிலையங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

இந்த இனவாத படுகொலைகள், இரு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டை பீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போருக்கு உடனடி முன்னோடியாகியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் யுத்தப் பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்கில் நிலப்பகுதிகள் கற்கூளங்களால் நிரம்பிப்போயுள்ளன.

சிங்கள இனவெறிக் கும்பலை மூன்று நாட்கள் தெருவில் ஆட்சி நடத்த அனுமதித்த பின்னர் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் உயிரிழப்புக்களையும் அழிவுகளையும் நியாயப்படுத்தினார். ஹோவர்டின் அதே சொற்களில் பேசிய அவர்: "2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று மரபுரிமையை கொண்டுள்ள சிங்கள மக்கள் நாடு பிளவுபடுவதை எதிர்க்கின்றனர்" என்றார். "சிங்கள மக்களுடைய விருப்பத்தின் பேரில், பிரிவினைவாத பிரச்சாரம் அனைத்தையும் சட்ட விரோதமாக்கும் ஒரு பாராளுமன்ற சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் முடிவெடுத்துள்ளோம்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விதத்தில் வன்முறை அழிவுக்கான குற்றம் முற்றிலும் பாதிக்கப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டது. சிங்களப் பேரினவாதிகளின் ஆதிக்கத்திலான அரசாங்கங்களால் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட தமிழர் விரோத வேறுபாடுகளும் அடக்குமுறைகளுமே தமிழ் பிரிவினைவாத கோரிக்கைக்கு வித்திட்டது என்ற உண்மை வசதியாக மூடி மறைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 4, அவசர நடவடிக்கை எனும் பெயரில் அரசியலமைப்பின் ஆறாம் சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தின் மூலம் ஜயவர்தன நிறைவேற்றினார். இதற்கான கலந்துரையாடலுக்கும் விவாதத்திற்கும் வெறும் 13 மணித்தியாலங்களே ஒதுக்கப்பட்டிருந்தன. அது "ஒற்றை ஆட்சிக்கு" விசுவாசமானவர்கள் என சத்தியப்பிரமானம் செய்துகொள்வதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்பட வைக்கும் ஒரு விதியையும் அது உள்ளடக்கியிருந்தது. பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (த.ஐ.வி.கூ) இதை நிராகரித்ததோடு அதன் ஆசனங்கள் பறிக்கப்பட்டன. விளைபயனுள்ள வகையில் வாக்குரிமையிழந்த தமிழ் இளைஞர்கள், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியான தமிழீழ அரசுக்கான கோரிக்கையை விடுத்த ஒரு முதலாளித்துவ தேசியவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டனர்.

ஆழமடைந்துவந்த சமூக, பொருளாதார நெருக்கடிக்கு சிங்கள ஆளும் தட்டுக்களின் பிரதிபலிப்பே இந்தப் படுகொலைகளாகும். உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கைகளை தெற்காசியாவிலேயே முதல் முறையாக ஜயவர்தனவின் கீழ் இலங்கை ஏற்றுக்கொண்டது. வெளித் தோன்றிக்கொண்டிருந்த வர்க்கப் போராட்டங்களுக்கு தயார் செய்யும் வகையில், 1978ல் அரசியலமைப்பை மாற்றியமைத்த அவர், பரந்த அதிகாரங்களுடனான ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஸ்தாபித்தார். 1980ம் ஆண்டு தங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு முழுமையற்ற பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தமைக்காக 100,000 க்கும் மேலான தொழிலாளர்கள் சடுதியாக வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.

1983ல் தொழிலாள வர்க்கம் வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தவும் அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு செயற்பட்டியலை சவால் செய்யவும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கியது. 28 தொழிற்சங்கங்களை கொண்ட ஒரு தொழிற்சங்கக் குழு, தனியார்மயமாக்கத்தை நிறுத்து; தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முழு குடியுரிமை வழங்கு; பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்; தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை காப்பாற்று; அரசியல் கைதிகளை விடுதலை செய் மற்றும் இலவசக் கல்வியின் பாதுகாப்பு போன்ற 11 கோரிக்கைகளை சூழ அணிதிரண்டன.

28 தொழிற்சங்கங்கள் கூடி இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆறே நாட்களில், ஜயவர்த்தனவும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க) தமிழர் விரோத படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டனர். ஐ.தே.க குண்டர்கள் வன்முறைகளில் ஈடுபட்டபோது பொலீஸும் இராணுவமும் பார்த்துக் கொண்டு வாளாவிருந்தன. அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க எதிர்ப்பு கொள்கைகளுக்கும் இந்த இனவெறி ஆத்திரமூட்டல்களுக்கும் இடையேயான நேரடியான தொடர்பு பிழையின்றி அம்பலத்திற்கு வந்துள்ளது.

தங்களுடைய பகைவர்களான தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் கையாளும் மிகப் பழைய கருவிகளில் இனவாத வேறுபாடுகளும் ஒன்றாகும். பெரும் செல்வக் கொழிப்பு ஒரு சிலரின் கைகளில் குவியும் அதேவேளை பெரும்பாலன மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுவரும் நிலையில் சமூகத் துருவப்படுத்தல் மேலும் கூர்மையடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் பிற்போக்கு ஆயுதம் மிகவும் கையாளத்தக்கதாக உள்ளது.

வறுமையில் வாடும் இந்தியத் துணைக் கண்டம் மிகக் கூடுதலான அளவில் இத்தகைய வகுப்புவாதக் கலவரத்தின் பாதிப்பைக் கண்டுள்ளது. உண்மையில், இரண்டாம் உலகப் போருக்கு பின் அமைக்கப்பட்ட தேசிய அரசுகள், ஆரம்பத்தில் இருந்தே இனவாதத்தில் மூழ்கிப் போயிருந்தன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் ஆதரவுடன் தெற்காசியாவை ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் ஒரு இந்து ஆதிக்கத்திலான இந்தியா என பிளவுபடுத்தியதோடு ஒரு பெரும் இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகினர். ஒரு சிறு தீவில் உள்ள அரசான இலங்கையை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இருந்தே சிங்கள மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. இலங்கை ஸ்தாபிக்கப்பட்ட அதே 1948ம் ஆண்டு, ஐ.தே.க அரசாங்கம் ஜனத்தொகையில் பத்து சதவிகிதத்தினரான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை பறித்தது.

ஆஸ்திரேலியாவின் வரலாறு வேறுபட்டது என்றாலும், ஆரம்பத்தில் இருந்தே இனவாதம் தேசியவாதத்துடன் பிணைந்திருந்தது. ஆஸ்திரேலியாவின் இனவாத பாரபட்சங்களை கொண்ட குடியேற்ற கொள்கைகள் ஆசியா முழுவதிலும் இகழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. போருக்குப் பின் ஏற்பட்ட பொருளாதர ஏற்றத்தில், அரசியல்வாதிகளும் செய்தி ஊடகப் பண்டிதர்களும் "இது ஒரு அதிருஷ்டமான நாடு" என்று அழைப்பதில் பெருமிதம் கொண்ட போதிலும், இப்பொழுது மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இனவெறி வன்முறையை நாடுவதானது எப்பொழுதும் தீவிர சமூகப் பதட்ட நிலைமையின் ஒரு அறிகுறியாகும். ஆஸ்திரேலியாவை இலங்கையுடன் ஒப்பிடுவது என்பது நிகழ்தற்கரிது என்றாலும், வகுப்புவாதமானது அதன் சொந்த பயங்கரமான தர்க்கத்தை கொண்டுள்ள அதேவேளை, ஆஸ்திரேலியாவில் உள்ள உழைக்கும் மக்கள் விரைவில் இலங்கை பாதையில் அடித்துச் செல்லப்படும் நிலைக்குத் தள்ளப்படக்கூடும்.

ஹோவர்ட் பிரகடனம் செய்தார்: "மக்கள், தங்கள் பழங்குடித்தன்மையை தவிர்த்துவிட்டு, ஒரு பரந்த சமூகத்திற்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துமாறு நாம் அதிகம் வலியுறுத்துகிறோம்." அவரது கருத்தையே எதிரொலித்த நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமரான மோரிஸ் எம்மா: "மத சமரசம் கொண்ட உயிர்துடிப்புள்ள சர்வதேச நகரம் என்ற மதிப்பைப் பெற்ற சிட்னியை, நாம் கண்டது போன்ற இழிநடத்தையில் ஈடுபட விரும்பும் இத்தகைய கருங்காலிகளும் கிரிமினல்களும் களங்கப்படுத்துவதை நான் அனுமதிக்கப் போவதில்லை," என்றார்.

வகுப்புவாத அரசியலின் சங்கேத (குறிப்பு) சொற்களுடன் பரிச்சியமானவர்களுக்கு இத்தகைய கருத்துக்கள் பரிவிரக்கத்துடன் தொடர்புடையவை அல்ல என்பதற்கு சான்றுகள் தேவையில்லை. "பழங்குடிகள்", "கருங்காலிகள்" என்பவை எவரைக் குறிக்கின்றன என்பது வெளிப்படையே. இக்கருத்துக்கள், "லெப்ஸ்" (லெபனியர்கள்) மற்றும் "வொக்ஸ்" என இழிவாகக் குறிப்பிட்படுபவர்களை அச்சுறுத்த, தொல்லை கொடுக்க மற்றும் தாக்கவும் இனவெறிக் சண்டியர்களுக்கு அழைப்பு விடுப்பவையாகும். வகுப்புவாத மோதலின் மொழி இதுவேயாகும்.

இலங்கை அனுபவத்தில் இருந்து இன்னும் ஒரு படிப்பினை பெறப்பட வேண்டும். துன்புறுத்தலுக்குள்ளாகும் சிறுபான்மையினருக்கு வகுப்பாவாதும் தக்க பதிலளித்துவிடாது. ஏதேனும் ஒருவிதத்தில் தனித்துவ அரசியலுக்காக பரிந்துரைக்கும் மத மற்றும் சமூக தலைவர்களை சூழ ஒன்றுசேர்வதன் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் தங்களுடைய உரிமைகளை காத்துக் கொள்ள முடியாது. இலங்கையில் துன்புறுத்தல்கள் மற்றும் பாரபட்சங்களை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்த தமிழ் இளைஞர்கள் முற்றிலும் ஒரு வழிப்பாதையில் வழிநடத்தப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிபலிக்கின்றனவே அன்றி வறுமையில் வாடும் தமிழ் மக்களுடைய நலன்களை அல்ல.

இதற்கான விடை வகுப்புவாதத்தில் அன்றி வர்க்கத் தீர்வில் தங்கியிருக்கின்றது. இந்த வர்க்கத் தீர்வானது அனைத்து தொழிலாளர்களும் மத, நிற, மொழி அல்லது இன வேறுபாடின்றி, இலாப அமைப்பு என்ற ஒரு பொது எதிரியை அடையாம் காண்பதை அடிப்படையாக கொண்டதாகும். பெரும்பான்மையான மக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதற்கு போராட அனைத்துலக தொழிலாள வர்க்கம் நடவடிக்கை எடுக்காவிடில், ஆளும் வர்க்கமானது உடன்பிறப்புக்களையே கொலை செய்யும் மோதல்களை தூண்டிவிடுவதை தொடர்ந்தும் முன்னெடுக்கும்: அது "லெபனியர்களுக்கு" எதிராக "ஆஸ்திரேலியர்களாகவும்" இருக்கலாம் அல்லது தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களாகவும் இருக்கலாம்.

பூகோள முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதை விட குறைந்த எதுவும் மோதல்களுக்கும் யுத்தத்திற்கும் முடிவுகட்டி அனைவரதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் கெளரவமான வாழ்க்கைத் தரத்தையும் உறுதிப்படுத்தாது. எமது ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளிலும் இருக்கும் எமது தோழர்களுடன் ஒன்றிணைந்து, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியனராகிய நாம் இதற்காகவே போராடுகிறோம்.

Top of page