World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party publishes right-wing election programme

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி தனது வலது-சாரி தேர்தல் வேலைத்திட்டத்தை வெளியிடுகிறது

By Antoine Lerougetel
26 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய கோலிச அரசாங்கத்தின் பெருகிவரும் நெருக்கடிக்கிடையே, பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி 2007 ஜனாதிபதிக்கும் மற்றும் சட்ட மன்றத்திற்குமான தேர்தல்கள் பற்றிய தன்னுடைய வரைவு வேலைத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.

கோலிஸ்ட்டுக்கள் வெகுஜன எதிர்ப்புக்களால் தள்ளாடும் நிலையிலும், சிராக்-வில்ப்பனுடைய அரசாங்கம் ஒரு ஊழலில் இருந்து அடுத்த ஊழலுக்கு தட்டுத் தடுமாறி சென்று கொண்டிருக்கையிலும், பெருவணிகத்தின் விசுவாசமான பாதுகாப்பாளர் என்று சோசலிஸ்ட் கட்சி தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. சோசலிஸ்ட் கட்சிக்கு அடுத்த ஜனாதிபதி வாய்ப்பு கிடைத்து அடுத்த அரசாங்கத்தின் தலைமை வாய்ப்பும் கிடைத்தால் பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்கள் பாதுகாப்பான கரங்களில் இருக்கும் என்று தேர்தல் ஆவணம் நிரூபணம் செய்ய முற்பட்டுள்ளது.

"சமத்துவமின்மையை எதிர்த்து போரிட, செல்வத்தை மறுபங்கீடு செய்ய, சுற்றுச் சூழல் சமநிலையை காப்பாற்ற, சுருங்கக் கூறின் சமூகத்தை மாற்றிட" என்ற வனப்புரையான பளபளக்கும் உறுதி மொழிகளின் கீழ், தன்னுடைய உரிமைகள், வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தப்படும் தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையிலும், சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளதற்கு விடையிறுக்கும் வகையிலும், ஒரு புதிய காலனித்துவ முறையிலான, இராணுவ வாத வெளியுறவுக் கொள்கைகளை வரைவு ஆவண திட்டம் முன்வைத்துள்ளது.

உள்ளூர் கட்சி அமைப்புக்களில் இப்பொழுது விவாதிக்கப்படுகின்ற இந்த ஆவணம் ஜூலை 1ம் தேதி கட்சி மாநாட்டில் உறுப்பினர்களின் வாக்கிற்கு விடப்படும். அந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல்களுக்கான வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஜனாதிபதி தேர்தல்களை ஒட்டி தன்னுடைய வேட்பாளர் யார் என்பது பற்றி சோசலிஸ்ட் கட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை; பல போட்டியாளர்கள் இப்பதவிக்கு உள்ளனர். தலைமையிடத்தால் வெளியிடப்பட்டுள்ள வரைவு வேலைத்திட்டம் எவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் முற்றிலும் வலதுசாரி வேலைத்திட்டத்திற்கு உறுதியளிப்பார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

தலைமையானது, கட்சியின் அடிமட்ட முக்கிய இடங்களுக்கு புதிய, அதிக அனுபவமற்ற, பொதுவாக மத்தியதர வர்க்க உறுப்பினர்களை கொண்டு நிரப்பி வருகிறது. சமீபத்திய நிலவரப்படி கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 135,000 என்று இருக்கும்போது, வலைதளத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் சமர்ப்பிக்கப்படும் உறுப்பினர் மனுக்கள் மிக அதிக அளவில் இருப்பதாக தகவல் கொடுத்துள்ளது. புதிய உறுப்பினர்களுக்கும் வரைவு வேலைத்திட்டத்தின் மீது வாக்களிப்பதற்கு அனுமதி உண்டு.

தேசியவாதமும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலும்

இந்த ஆவணத்தின் மிக முக்கியமான கூறுபாடு அதன் தடையற்ற தேசியவாதமாகும். உதாரணமாக, "பிரான்ஸ் ஒரு மகத்தான நாடு, தன்னுடைய உலகளாவிய பரந்த கருத்துக்களை பற்றி பெருமிதம் கொண்டுள்ளது. ...பிரான்சின் ஆடவரும் பெண்டிரும் மிகச் சீரிய தன்மை மற்றும் போட்டித்தன்மை ஆகியவற்றை புறக்கணிக்கவில்லை..." என்று அறிவித்துள்ளது.

நாட்டை பிடியில் கொண்டிருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடி பெருவணிகத்தின் நிலைப்பாட்டில் இருந்து விலக்கிவைத்து வரையறுக்கப்படுகிறது. இவ் வேலைத்திட்டம் பிரான்சில் "எமது போட்டித் தன்மையில் ஆழ்ந்த சரிவு மற்றும் ... கவலைக்கிடமளிக்க கூடிய பொதுக் கடனின் அளவு" இரண்டும் நிறைந்துள்ளன என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கான சோசலிஸ்ட் கட்சியின் விடையிறுப்பு சாரத்தில் ஐரோப்பாவில் இருக்கும் ஒவ்வொரு முக்கிய பூர்ஷ்வா கட்சியில் இருந்தும் வேறுபட்டதில்லை. "நாம் பொருளாதார வளர்ச்சியை வருங்கால தலைமுறைகள் பற்றிய பொறுப்பு உணர்வுடன், செல்வச்செழிப்பை கொண்டுவருவதுடனும் செல்வத்தை மறுபங்கீடு செய்வதுடனும் இணைக்க விரும்புகிறோம்."

இச்சொற்களுக்கு உறுதியான பொருள் உண்டு. "பொருளாதார வளர்ச்சி", "செல்வக் கொழிப்பு" இரண்டுமே "தடையற்ற சந்தை" கொள்கைகள் மற்றும் வேலைச் சூழ்நிலை மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதலுக்கு அடையாளச் சொற்கள் ஆகும்; "வருங்கால தலைமுறை பற்றிய பொறுப்பு" என்பது சமூகநல செலவினங்கள் குறைக்கப்படும் என்பதை அலங்காரமாக கூறுதல் ஆகும். செல்வத்தை மறுபகிர்வு செய்துகொள்ளுதல் என்பது தொழிலாள வர்க்க வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது.

பிரான்சின் "மகத்தான தன்மை", பிரெஞ்சு வணிகத்தின் மீதான அக்கறை ஆகியவற்றின்மீது காட்டியுள்ள குவிப்பை கவனிக்கையில், ஆவணம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் விதி பற்றி உதட்டளவு பரிவுணர்வு கூடக் காட்டவில்லை என்பதில் வியப்பில்லை; அத்தொழிலாளர்களோ சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு தாழ்ந்து நடக்கும் அரசாங்கங்களின் செயல்களால் வறுமையையும் சமூக நல இழப்புக்களையும் எதிர்கொண்டு நிற்கின்றனர்.

மாறாக, சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பதவிக்கு கோலிசத்தின் சார்பில் நிற்கக்கூடிய உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியுடன் போட்டியிட முற்பட்டுள்ளது; இதற்காக புலம்பெயர்ந்தோர் மீது கருத்தியல் தாக்குதலையும் நடத்தியிருக்கிறது. கடந்த வசந்த காலத்தில் சார்க்கோசியின் புலம்பெயர்தல் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சில சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டாலும், ஆவண வேலைத்திட்டம் கடுமையான புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு ்கொள்கையைத்தான் முன்வைத்துள்ளது. "சட்டவிரோத புலம்பெயர்தலை உறுதியுடன் ஒடுக்கும் கொள்கையை செயல்படுத்தி, வேலை ஆய்வு பற்றி கூடுதலான இருப்புக்களை அளித்து ஆவணமற்ற தொழிலாளர்களை வேலைக்கு இருத்தும் முதலாளிகள்மீது கடுமையான தண்டனைகளையும் வழங்குவோம்" என்று கூறப்பட்டுள்ளது.

பிரான்சில் இருந்து வெளியெற்றப்படும் புலம்பெயர்ந்தோரின் நாடுகள் அவர்களை மீண்டும் எடுத்துக்கொள்ளுவதற்கும், அதற்கு இடைவழியில் உள்ள நாடுகள் அவர்களை தடுப்பதில் ஒத்துழைக்கவும் கோரப்படுவர் என்பதை வலியுறுத்தும் தற்போதைய கொள்கை தொடருவதற்கு உறுதி அளிக்கிறது. இதன் பொருள் நடைமுறையில் வறுமையில் இருந்தும் அடக்குமுறையில் இருந்து தப்பி ஓடி வரும் ஆயிரக்கணக்கானவர்கள், குறிப்பாக ஆபிரிக்காவில் இருந்து படகில் வருபவர்கள், இறப்பிற்கு உட்படுவர் என்பதே ஆகும்.

"புலம்பெயர்ந்தோர் வெற்றிகரமாக சமூத்துடன் இணைந்து கொள்ளும் வகையில் தனிப்பட்ட கொள்கைகளை மேற்கொள்ளுவோம்" என்று கட்சித் தலைவர் பிரான்சுவா ஹோலன்ட், "Ca se discute" என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அப்படியே ஒட்டு மொத்தமாக புலம்பெயர்ந்தோர் அனைவரையும் சோசலிஸ்ட் கட்சி சட்டபூர்வ குடிமக்கள் உரிமை என்ற நெறிக்கு உட்படுத்திவிடாது என்று அவர் கூறினார். மாறாக, ஒவ்வொரு வழக்கும் தனித்தனிச் சிறப்பு அடிப்படையில் ஆய்வு செய்யப்படும் என்றார்; இதன் பொருள் பலத்த போலீஸ் மற்றும் அதிகாரத்துவ கண்காணிப்பு புலம்பெயர்ந்தோர்மீது இருக்கும் என்பதாகும்.

ஒரு சோசலிசக் கட்சி அரசாங்கம், "ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையில் ஒற்றைப் பொது போலீஸ் படையை தோற்றுவிப்பதற்கான ஐரோப்பிய கொள்கைக்கு ஆரம்ப முயற்சியை கொடுக்கும்" என்றும் அவர் அறிவித்தார். வேறுவிதமாகக் கூறினால், கட்சி, புலம்பெயர்வோருக்கு எதிராக, பாதுகாப்பான கோட்டை போன்ற ஐரோப்பா என்ற கொள்கையை கடைபிடிக்கும் என்பதாகும்.

இளைஞர்கள் மீது அடக்குமுறை

அண்மையில்கூட சோசலிஸ்ட் கட்சி, குறைந்தபட்சம் சொற்களிலாவது இளைஞர்கள் பிறழ்ந்து நடப்பதை ஒட்டிய பிரச்சினைகளில், சமூக வேர்களின் பங்கு பற்றி ஆராயப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டிருந்தது. இப்பொழுது அவ்வாறு இல்லை. வேலையின்மையில் வாடுவோரிடைய, பெரும்பாலும் தொழிலாள வர்க்க புறநகரங்களில் உள்ள அதிக அளவு குடியேறிய இளைஞர்களிடையே இருக்கும் அமைதியின்மையின் வெளிப்பாடு அனைத்தையும் கட்சி குற்றத்தின் வெளிப்பாடு என்று முத்திரையிடுகிறது; இங்கோ போலீஸ் மிருகத்தனமும் ஆத்திரமூட்டல்களும் அன்றாட வாழ்வின் வாடிக்கை உண்மைகளாக இருக்கின்றன. "இளைஞர் குற்றங்களுக்கு" சோசலிஸ்ட் கட்சியின் விடையிறுப்பு அப்பட்டமான அடக்குமுறையாகும்.

"சோசலிஸ்டுகளை பொறுத்தவரையில் சட்டம், ஒழுங்கு என்பவை இன்றியமையாத அடிப்படை முன்னுரிமையாகும்" என்று வரைவு வேலைத்திட்டம் அறிவிக்கிறது. பிரிட்டிஷ் தொழிற்கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயரின் கருத்தான "குற்றங்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பதும், குற்றங்களின் காரணங்கள்மீதும் கடுமையாக இருப்பதும்" என்ற சொல்வண்ணத்தை அப்படியே கூறும் வகையில், ஆவணம் அறிவிப்பதாவது: "நெறிபிறழ்ந்து நடப்பது மற்றும் அதற்கான காரணங்களுக்கு எதிராக நாங்கள் மிக உறுதியான கொள்கையை கடைப்பிடிப்போம்."

சமூகக் காவல் முறை கட்டமைக்க வேண்டும் என்றும் இது திட்டமிட்டுள்ளது; பணம் எப்படி செலவழிக்கப்படவேண்டும் என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் உடைய நீதிமன்றத்தால் நியமிக்கப்படுபவர்கள்தான் குடும்ப நலத் தொகைகளை பிறழ்ந்த சிறார்களுக்குக் கொடுக்கும்போது நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஆவணம் கூறுகிறது. இந்தக் கருத்தை முதலில் முன்வைத்தவர் செகொலன் ரோயால் ஆவார்; இவ்வம்மையார்தான் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு முயன்றுவருகிறார். கட்டுக்கு அடங்காத இளைஞர்கள் இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டவரப்பட வேண்டும் என்றும் இவர் கூறினார்.

இந்த திட்ட முன்வரைவு பிந்தைய கருத்திற்கு ஒப்புதல் கொடுக்காவிட்டாலும், அத்திசையைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இன்னும் கூடுதலான வகையில் "Classes-relais" (நெறி பிறழும் மாணவர்களுக்கு உறைவிடங்கள்) கட்டப்பட வேண்டும் என்று இது கூறுவதோடு, "தொடக்கத்திலேயே தடுப்பு மற்றும் தண்டனை கொடுத்தல் என்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளும்" வேண்டும் எனவும் வாதிடுகிறது.

சமூகப் பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே கூடுதலான ஒத்துழைப்பு வேண்டும் என்றும் ஆவணத்திட்டம் கூறுகிறது; இதற்கு பல ஆரம்ப முயற்சிகளான, "கல்வி மையங்கள்", "வேலைப் பயிற்சி பட்டறைகள்", "சமூக வேலை செய்ய வேண்டும் என்ற தண்டனைகள்" கொடுக்கப்பட்டால் "இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சமாதானமான உறவு" ஏற்பட வழி உண்டு என்றும் திட்டம் கூறுகிறது.

இளைஞர்களிடையே நிலவும் மிக உயர்ந்த வேலையின்மைப் பிரச்சினைக்கு விடை தர இயலாத சோசலிஸ்ட் கட்சி, 18ல் இருந்து 25 வரையிலான அனைத்து இளைஞர்களுக்கும் கட்டாய உழைப்பின் வடிவமைப்பு வேண்டும் என்று கூறியுள்ளது. ஆறுமாத காலம் "பொதுப் பணி" இந்த வயது வரம்பில் உள்ளவர்களுக்கு கட்டாயமாக கொடுக்கப்படவேண்டும் என்பதையும் நிறுவ முற்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக, பிரான்சில் இளைஞரிடையே வேலையின்மை விகிதம் 20ல் இருந்து 25 சதவிகிதமாக உள்ளது. உறுதியான, கெளரவமான ஊதியம் கொண்ட வேலை, போதுமான வீட்டு வசதி கொடுத்து தொழிலாள வர்க்க வயது வந்தவர்கள் தங்களையும் காப்பாற்றிக் குடும்பத்திற்கும் ஆதரவாக இருப்பதற்கு வகை செய்வதற்கு மாறாக சோசலிஸ்ட் கட்சி இவர்களை கட்டாய உழைப்பிற்கு வலுக்கட்டாயப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது.

"குடிமைப் பணி" என்பது "நாட்டிற்கான கூட்டுப் பயன்பாட்டுப் பணிகள்", "ஒரிடத்தை சார்ந்துள்ளோம் என்ற அடையாள உணர்வை தோற்றுவிக்கும்" என்று ஆவணம் கூறுகிறது. அதில் இராணுவப் பணி சேர்க்கப்படலாம் அல்லது, திட்டம் குறிப்பிடுகிறவாறு "25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அனைவருக்கும் கட்டாயமாய் செய்து தீரவேண்டிய குடிமைப் பணியில் பாதுகாப்பு கூறுபாடு" சேர்க்கப்படலாம்.

உள்துறை மந்திரி சார்கோசியின் பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது; இதையொட்டி அதை அகற்றுவோம் என்ற உறுதிமொழி ஏதும் இல்லை. டிசம்பர் 9, 2005ல் பாராளுமன்றம் அவ் வரைவை ஏற்றபோது சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வராது தவிர்த்துவிட்டனர்.

குடி உரிமைகள் மீது கடுமையான தாக்குதல்களுக்கு சட்டம் ஒப்புதல் கொடுத்துள்ளது. அனைத்து தொலைபேசி மற்றும் இணைய தள தகவல்களையும் கண்காணிக்கும் அதிகாரம் அரசிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது; தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இணையதள வசதி கொடுப்பவர்கள் அரசாங்க ஒற்று வேலைக்கு உடந்தையாக இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது. உள்துறை மந்திரியின் வட்டாரப் பிரதிநிதிகளான prefets உடைய அதிகாரம் விரிவாக்கப்பட்டு அவர்கள் மசூதிகள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் உட்பட பொதுக் கட்டிடங்களில் காட்சிகளை காண தொலைக்காட்சி பதிவுகளை செய்யவும் அனுமதித்துள்ளது.

இத்தகைய போலீஸ் அரசாங்க நடவடிக்கைகள் சோசலிஸட் கட்சியின் தலைமையிடத்திற்குள் எந்த மாறுபட்ட விவாதங்களையும் தூண்டவில்லை.

இராணுவ வாதம்

வரைவு வேலைத்திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கைகளிலிருந்து இளைஞரிடையே ஒரு தேசியவாத, தீவிர தேசியவெறி கண்ணோட்டம் புகுத்தப்படவேண்டிய தேவை வெளிப்பட்டுள்ளது.

"ஐரோப்பாவிலும் உலகிலும் பிரான்சை வெற்றியுடையதாக செய்திடுக" என்ற தலைப்பு கொண்ட பிரிவு, "உலகில் ஒரு முக்கிய பங்கை பிரான்ஸ் ஆற்றக்கூடும்; ஆனால் இன்று அதன் செல்வாக்கு பின் தங்கியுள்ளது" என்ற சொற்றொடருடன் ஆரம்பிக்கிறது. "ஆசியாவின் பெரும் அரசியல் பொருளாதார சக்திகளாக சீனாவும் இந்தியாவும் எழுச்சி பெற்றுள்ளதை" திட்டம் உயர்த்திக் காட்டுகிறது; மேலும் "விசைக்கான தற்போதைய, வருங்கால பூசல்கள்", "நிலவும் உலகளாவிய பயங்கரவாதம்" மற்றும் "அமெரிக்க உயர் சக்தியின் தீவிர முரண்பாடுகள்" ஆகியவை பற்றியும் இது கூறியுள்ளது.

ஆனால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் படையெடுத்து ஆக்கிரமிப்பு நடத்தியதற்கு பிரெஞ்சு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இராணுவ மற்றும் கணிப்பியல் திட்டம் சார்ந்த ஆதரவு பற்றி ஆவணம் மெளனமாக உள்ளது. இதன்மூலம் கட்சி அதற்கான இணக்கத்தை கொடுத்துள்ளது என்று சமிக்கை காட்டப்படுகிறது..

அல்ஜீரிய போர் அதற்கும் பின்னால் பிரெஞ்சுக் காலனித்துவ முறைக்கு தீவிர ஆதரவு கொடுத்த நீண்ட வரலாற்றைத்தான் சோசலிஸ்ட் கட்சி கொண்டுள்ளது. பிரான்சுவா மித்திரோன் ஜனாதிபதியாக (1981-95) இருந்தபோது நடந்து கொண்டதை போன்றே, சோசலிஸட் கட்சி ஆபிரிக்காவிலும் உலகெங்கிலும் பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களை காப்பதில் அக்கறையைத்தான் கொண்டுள்ளது. உலகின் இருப்புக்களை பயன்படுத்த, அமெரிக்காவுடன் போட்டியிடுவதற்கு வகையின்றி தன்னுடைய நிலைப்பாட்டில் பிரான்ஸ் வலுவற்று இருப்பதால் சோசலிஸ்ட் கட்சி ஐரோப்பிய உடன்படிக்கைகளை பெரிதும் நம்புகிறது.

அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட NATO வில் இருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திட்டம் அறிவிப்பதாவது: "பிரான்சின் பாதுகாப்புக் கொள்கை பல நாடுகளுடனும் வலுவாக ஒத்துழைக்கும் வகையில் இருக்க வேண்டிய ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கையில் பங்கு பெறுவதற்கு பிரான்ஸ் உறுதியுடன் உள்ளது.... NATO வை விட இதுதான் வருங்காலம் பற்றிய உறுதிகொடுக்கும் முன்னோக்கு ஆகும். இது இரண்டு கட்டாயங்களான ஐரோப்பிய நாடுகளின் பங்காளித்தன்மை, ஆபிரிக்க மக்களின் விருப்பம் இரண்டு கட்டளைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது." (மூலத்திலேயே வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)

முந்நாள் சோசலிஸ்ட் கட்சிப் பிரதமராக இருந்த லோரன்ட் பாபியுஸ் (1984-86), அண்மையில் பிரெஞ்சு, ஜேர்மனிய இராணுவங்கள் கூட்டாக செயல்படுவது பற்றி பேசினார். ஆவணத்திட்டம், "பிரான்ஸ், ஜேர்மனி, பெரிய பிரித்தானியா என்ற முக்கோணம் உந்துதலாக இருந்து ஆயுத அமைப்புக்களை நிறுவுதல் பற்றி" கருதலாம் என்று கூறியிருக்கிறது.

"ஆயுதக் களைவு என்ற பேச்சிற்கு இடமில்லை" என்று வலியுறுத்தும் சோசலிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டம், பிரான்ஸ் கண்டிப்பாக அணுவாயுதங்களை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. "பிறரை அச்சுறுத்தும் வகையில் தடுப்பாயுத வகையில் அணுசக்தியை கொண்டிருப்பது நமக்கு எதிராகவும் எமது ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காளிகளின்மீது ஆக்கிரமிப்பை தடுக்கும் தர்க்கத்தின் பகுதியாக கண்டிப்பாக இருக்க வேண்டும்." இங்கு சோசலிஸ்ட் கட்சி அணுவாயுதக் குழுவில் தான் இருப்பது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு ஐரோப்பாவில் ஒரு நலனாக இருக்கும் விருப்பத்தைக் காட்டுகிறது.

ஓய்வூதியங்கள், வேலையின்மை, மற்றும் சமூக நலன்கள்

திட்டத்தின் சமூக சீர்திருத்தங்கள் பற்றி சொற்பமான, தெளிவற்ற உறுதிமொழிகளின் மோசடித்தன்மை 60 வயதில் ஓய்வு பெறும் உரிமையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் அதேவேளை, இது தங்கள் ஓய்வூதியத்திற்கு தொழிலாளர்களின் அளிப்பு அல்லது அவர்களின் ஓய்வூதியங்களின் மதிப்பு ஆகியவற்றின் தரம் பற்றி ஏதும் கூறவில்லை; "பரந்த பேச்சுவார்த்தைகள்" வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது.

சோசலிஸ்ட் கட்சிக்கு இப்பிரச்சினை மிக முக்கியமானது ஆகும். 2002ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசாங்கத் தலைவர்கள் பார்சிலோனாவில் கூடியபோது, அந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன், ஜனாதிபதி சிராக்கும் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த லியோனல் ஜோஸ்பன்னும் லிஸ்பன் செயற்பட்டியலுக்கு ஏற்ப ஓய்வூதிய உரிமைகளை குறைத்து ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்தான் பின்னர் லியோனல் ஜோஸ்பன் தேர்தலில் தோற்பற்கு முக்கிய காரணமாக போயிற்று.

"பரந்த பேச்சு வார்த்தைகள்" என்பதற்கு, ஓய்வூதிய செலவுகள் குறைக்கப்படுவதற்கு தொழிற்சங்கங்கள், முதலாளிகள் அமைப்புக்களுடன் சோசலிஸ்ட் தலைமையிலான அரசாங்கம் வழிவகை செய்யும் என்பதுதான் பொருளாக இருக்க முடியும். லிஸ்பன் செயற்பாட்டில் தாங்கள் கையெழுத்திட்டுள்ளோம் என்பது பற்றி சோசலிஸ்ட் தலைவர்களுக்கு நன்கு தெரியும்; அதன் நோக்கமே ஐரோப்பிய பொருளாதாரத்தை "உலகின் மிக அதிக போட்டி உடைய பொருளாதாரமாக" ஆக்குதல் என்பதாகும்; எந்த புதிய சட்டமும் நீடித்த வேலைகளை கொண்டு, தங்களின் ஊதியங்களில் இருந்து கூடுதலான பங்களிப்புக்கள் தொழிலாளர்களால் செலுத்தப்படுவதும், ஓய்வு பெறுபவர்கள் (இளைப்பாறுவோர்) குறைவான ஓய்வூதியம் பெறுவதும் என்று பொருளை பெறும்.

இத்திட்ட வரைவு ஐரோப்பிய நடைமுறையை ஒட்டி "தேசிய முத்தரப்பு மாநாடு ஒவ்வொரு ஆண்டும்" நடைபெற வேண்டும் என்ற கருத்தையும் கூறியுள்ளது. இதில் அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இருப்பர்: "இவர்களுடைய இலக்கு ஊதியக் கொள்கையை குறிக்கும் வகையில் நோக்குநிலைகள் மற்றும் முன்மொழிவுகள் ஆகியவற்றை பற்றி விவாதிப்பதாக இருக்கும்."

"2012 க்குள் முழு வேலை" என்ற இலக்கு அடையப்படும் என்று வரைவு வேலைத்திட்டம் கூறுகிறது; இதன் பின் குறைவூதிய தொழிலாளர் திட்டங்கள், முதலாளிக்கு வரிச்சலுகைகள் போன்ற முன்கணிப்புக்களையும் கூறியுள்ளது; கடந்த 20 ஆண்டுகளில் இவை வேலையின்மையை விகிதத்தை 10 சதவிகிதத்திற்கும் குறைவாக கொண்டு வரும் முயற்சிகளில் தோல்வியடைந்துள்ளன.

வேலைத்திட்டத்தின் வரைவு வந்த இரு நாட்களிலேயே, சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலரான ஹோலண்ட் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு "Ca se discute" என்ற நிகழ்ச்சியில், உண்மையில் இதன் நோக்கம் வேலையின்மையை 5 சதவிகிதமாக கொண்டுவரவேண்டும் என்று உள்ளது என்று குறிப்பிட்டார். வேலை நீக்கங்களை தடை செய்ய சட்டம் வராது என்பதை தெளிவாக்கிய அவர், செழிக்கும் நிறுவனங்கள் அதிகம் இலாபம் ஈட்டும் கருத்துடன் தொழிலாளர் எண்ணிக்கையை குறைப்பவை தண்டிக்கப்படலாம் என்றார். 56 வயது வேலையற்றோருக்கு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் என்ன செய்யும் என்று வினாவப்பட்டபோது, ஹோலன்டினால் பதில் கூறமுடியவில்லை; கேள்வி கேட்டவர், இவரை பரிதாபமாக இருக்கும் நிலையில் கண்டார்.

வேலைத்திட்டத்தில் உள்ள சமூக சீர்திருத்தம் பற்றிய உறுதிமொழிகளின் சிடுமூஞ்சித் தன்மையானது, பல முன்வைப்புக்களில் செலவினங்கள் பற்றி விரிவாகக் கூறப்படவில்லை என்ற உண்மையில் இருந்து தெளிவாகிறது.

சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி மிசேல் ரொக்காவின் (1988-1991) கீழ் திட்டமிடலுக்கான முன்னாள் அரசு செயலராக இருந்த, லியோனல் ஸ்டோலெரு (Lionel Stoleru), Le Monde க்கு ஜூன் 10 அன்று தெரிவித்த கருத்துக் கட்டுரையில் ஓர் இடது அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் "தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு" வழிவகை கொண்டிருப்பர் என்பது "நடைமுறைக்கு ஒவ்வாது" என்பதை "ஒவ்வொருவரும் அறிவர்" என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: "வலதும் இடதும் சந்தைப் பொருளாதாரத்தில் ஆட்சி நடத்தவேண்டும்; இல்லாவிடின் அவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும்; எல்லைகளை முடிவிட்டு, வணிகங்களை தேசியமயமாக்க வேண்டும்.... எவரும் அதைச் செய்யப்போவிதில்லை. EDF (தேசிய மின் நிறுவனம்) 2007க்கு பின்னர் மீண்டும் தேசியமயமாக்கப்படும் என்பது உண்மையில்லை; ஓய்வூதிய சட்டத்தை அவர்கள் அகற்றி விடுவர் என்பதும் உண்மையில்லை."

Le Figaro வில் ஜூன் 16ம் தேதி வந்த கட்டுரை ஒன்று இப்பொழுதுதான் அவர்கள் ஒருமனத்துடன் ஏற்றுக் கொண்ட ஆவணத்தில் உள்ள அற்ப உறுதி மொழிகளில் இருந்தும் ஜனாதிபதி வேட்பிற்கு போட்டியிடுபவர்கள் விரைவில் தங்களை விடுவித்துக் கொண்டுவிடுவர் என்று தெளிவாக கூறியுள்ளது; "டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான் முன்மொழிவுகளில் இருந்து "தேர்ந்தெடுக்க விரும்புகிறார்"; ஜாக் லோங் "அவை போதுமானவை அல்ல" எனக் கூறுகிறார்; செகொலன் ரோயால் தன்னுடைய "பேச்சுரிமையை தான் தக்க வைத்துக் கொண்டுள்ளதாக கூறுகிறார் .... இயலக்கூடிய வீட்டுத் திட்டங்கள் அதிக செலவு உடையதாக தோன்றுகின்றன; சமூகத் திறனை பற்றியும் நாம் கவலைப்படவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்; இப்படிப்பட்ட முறையில் ஜனாதிபதி வேட்பாளர்களாக விழைபவர்கள் பலவற்றையும் கூறியுள்ளனர்."

EDF மறுபடியும் தேசிய மயமாக்கப்படுவதை பற்றி ஸ்ட்ரவுஸ் கான் கூறினார்: "ஐயத்திற்கு இடமின்றி இதைவிட முன்னுரிமை பெற்றுள்ள விஷயங்கள் பல உள்ளன." செகொலன் ரோயால், "தன்னுடைய கருத்தான இராணுவ மேற்பார்வை (பிறழும் இளைஞர்கள் மீது) என்பதை விட்டுவிடவில்லை. எமது சீருடை வேலைகளை பற்றி நாம் வெட்கப்படவேண்டிய தேவையில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் மற்றும் அரசாங்க கூட்டணியை சோசலிஸ்ட் கட்சியுடன் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, வேலைத்திட்ட வரைவு பற்றி எந்தக் குறைகூறலும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 9ம் தேதி வெளியிட்ட கட்டுரை ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான l'Humanite வேலைத்திட்ட வரைவில் பல "நேரியக் கூறுபாடுகளை" பட்டியல் இட்டுள்ளது; ஆனால் திட்டத்தின் உறுதிமொழிகளில் இருக்கும் மோசடித் தன்மை பற்றி ஏதும் கூறவில்லை.

"அதி இடது" புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) நாளேடான Rogue, மற்றும் Lutte Ouvriere இரண்டும் வரைவு வேலைத்திட்டத்தில் போதுமான அளவில் சமூகத் திட்டங்கள் இல்லை என்பதை குறைகூறிய பின்னர், தன் ஜனநாயக விரோத பரிமாணங்களை புறக்கணிக்கிறது; அதன் இராணுவவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக் கொள்கைகள் பற்றிய கருத்துக்களையும் புறக்கணிக்கிறது. LCR இன் செய்தித் தொடர்பாளரான பெசன்சநோ, சோசலிஸ்ட் கட்சியுடன் தற்பொழுது தேர்தல் கூட்டணி இல்லை என்று கூறினாலும் "நாம் ஒன்றாகச் செய்யக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன" என்று ஹோலன்ட் இடம் தெரிவித்தார்.

See Also :

பிரான்ஸ்: சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடலாம் என கருதக்கூடியவர் குழப்பம் விளைவிக்கும் இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்க விரும்புகிறார்

பிரான்ஸ்: "புதிய வேலை ஒப்பந்ததிற்கு" எதிரான போராட்டத்தின் படிப்பினைகளை அமியான் கூட்டம் விவாதிக்கிறது

 

Top of page