World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

The New York Times and the war in Lebanon: A cynical defense of US-Israeli war crimes

லெபனானில் போரும் நியூயோர்க் டைம்சும்: அமெரிக்க-இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு சிடுமூஞ்சித்தனமான ஆதரவு

By Barry Grey
22 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

வெள்ளியன்று வெளிவந்த தலையங்கம் ஒன்றில் நியூயோர்க் டைம்ஸ் லெபனானுக்கு எதிரான அமெரிக்க ஆதரவுப் போர் பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாராளக் குரலாய் சீர்தூக்கி மதிப்பிடும் கருத்துக்களை கூறியுள்ளது.

"போர்நிறுத்த ஒப்பந்தத்தையும்விட அதிகமானது தேவை" என்ற தலைப்பின்கீழ், இஸ்ரேல் பாதிக்கப்பட்டுள்ள நாடு, ஹெஸ்பொல்லா ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற வகையில் வாஷிங்டனும் ஜெருசலேமும் கொண்டுள்ள பிரச்சார வழியைத்தான் டைம்ஸ் மீண்டும் கூறுகிறது. சர்வதேச சட்டத்தை மிக வெளிப்படையாக தாக்குதல் நடத்தி மீறும் வகையிலும், மிக அப்பட்டமான முறையில் குடிமக்களுக்கு எதிராகவும் நிகழும் இந்த தாக்குதல் பற்றி, இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம் காணவேண்டும் என்பதை எதிர்க்கும் அமெரிக்க இஸ்ரேலிய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இது எழுதியுள்ளது; இத்தாக்குதலின் கொடூரத் தன்மையினால் ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர் ஆணையாளரான லூயி ஆர்பர் புதனன்று போர்க்குற்றங்களுக்கு சொந்த முறையில் "இப்போருக்கு தலைமை தாங்குபவர்களும், கட்டுப்பாட்டில் கொண்டவர்களும்" ஆளாக நேலாம் என்று அறிக்கை விடும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

"சர்வதேச சமூகம்", "இஸ்ரேல் மற்றும் லெபனான் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் குறுக்கிட வேண்டும்" என்ற அறிவிப்புடன் தலையங்கம் தொடங்குகிறது.

"இஸ்ரேலின் பாதுகாப்பு" என்ற கோரிக்கைக்கு பின்னணியில் கூறப்படாத உறுதி மொழிகள் மற்றும் முன்கருத்துக்களின் பொய் வலைகளைப் பற்றி விளக்கம் தருவதில் டைம்ஸ் ஆர்வம் காட்டவில்லை. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் சியோனிச அரசின் வரலாறு விளக்கிக் காட்டியுள்ளதுபோல், பாலஸ்தீனியர்களை வன்முறையில் அடக்கியும், அவர்களை நாடற்ற, குடிபெயரும் மக்கள் அந்தஸ்தில் நிரந்தரமாக வைத்திருப்பதுடன், மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு அரசும் தன் காலடியில் விழ வேண்டும் என்பதில்தான் தனது பாதுகாப்பு தங்கி இருக்கிறது என்ற முன்கருத்தில்தான் இஸ்ரேல் தன்னுடைய செயல்களை நடத்திவருகிறது.

வரலாற்று சான்றுகள் மேலும் காட்டுவது போல், இஸ்ரேலிய பாதுகாப்பும் உண்மையான லெபனிய பாதுகாப்பும் ஒன்றோடு ஒன்று சமரசப்படுத்த முடியாத எதிர்ப்பில்தான் உள்ளன. அரசியல் நாச வேலை அல்லது இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பல தசாப்தங்களாக லெபனிய இறையாண்மையை கீழறுப்பதற்கு இஸ்ரேலின் உந்ததுதலானது, லெபனானுக்கு அனுமதிக்கப்படும் ஒரே "பாதுகாப்பு" இஸ்ரேலின் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளுடன் இணைந்ததாக அதன் வெளியுறவு மற்றும் உள்நாட்டு கொள்கைகள் இருப்பதை உறுதிப்படுத்தும் ஒன்றுதான் என்பதை அது தெளிவுபடுத்துகிறது..

பாதுகாப்பை நிறுவுவதற்கு எது தேவை என்று டைம்ஸ் கருதுகிறது? "அதற்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சமாதானம் காப்பவர்கள் மட்டும் போதாது, இஸ்ரேல் மீது நிரந்தரமாக தாக்குதல்களை நிறுத்த ஹெஸ்பொல்லா உறுதியளிக்க வேண்டும், தன்னுடைய குடிப் படையை கலைத்துவிடவேண்டும்."

வேறுவிதமாகக் கூறினால், இஸ்ரேலின் போர் நோக்கங்களை உறுதிப்படுத்த சர்வதேச அழுத்தம் கொண்டுவரப்படவேண்டும். லெபனானின் வறிய ஷியைட் மக்கள் பெரும்பாலானவர்களால் ஆதரவு கொடுக்கப்படும் வெகுஜன தேசிய இயக்கமான ஹெஸ்பொல்லாவை ஆயுதம் களையச் செய்து, அரசியல் முறையில் அழித்துவிடுவது, இதன் அர்த்தம் லெபனான் மீதான இஸ்ரேலிய ஆதிக்கத்திற்கும் அதேபோல பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச அரசின் ஒடுக்குமுறைக்கும் எதிராக வரும் அனைத்து மக்கள் எதிர்ப்பையும் கலைத்துவிடுவதாகும்.

சிறிதும் விமர்சனமற்ற வகையில், டைம்ஸ் கூறுகிறது: "வாஷிங்டனின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேலிய அதிகாரிகள், தனியான முறையில் பல நாட்களோ, வாரங்களோகூட, மிகக் கூடுதலான முறையில் தாக்குதல் நடத்தினால்தான் ஹெஸ்பொல்லாவின் பெரிய ஏவுகணை கிடங்குகளை அழித்து, சிரியாவில் இருந்தும் ஈரானில் இருந்து வரும் அதன் வரத்து வழிவகைகளையும் நிறுத்தி, பயங்கரவாத குழுவிற்கு பாதுகாப்பு கொடுத்தால் அதற்கு எவ்வளவு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை லெபனிய மக்கள் உணரும் வகையில் செய்ய முடியும்." எனக் கூறியுள்ளது.

இத்தகைய அவலட்சணமான செய்தித்தாளின் இரட்டை நிலை ஹெஸ்பொல்லாவின் ஏவுகணை இருப்புக்களை பற்றி "மிகப் பெரிய" என்று கூறுகையில் உயர்த்திக் காட்டப்படுகிறது. ஹெஸ்பொல்லாவின் "மிகப்பெரிய" ஏவுகணை இருப்புக்கள், அனைவரும் அறிந்துள்ளபடி, அமெரிக்காவில் கொடுக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவ வலிமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகச்சிறியதாக்கிவிடும்.

ஹெஸ்பொல்லாவின் ஏவுகணைகள் எதுவுமே இஸ்ரேலின் போர் விமானங்களை தாக்கும் திறனுடையவை அல்ல; பிந்தையவை தெற்கில் உள்ள ஷியைட்டுக்களின் சிறுநகரங்கள் மற்றும் கிராமங்கள்மீது குண்டு பொழிவதுடன், பெய்ரூட்டின் தெற்குப் புறநகரங்களையும் அழிப்பதுடன், சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், விசை உற்பத்தி ஆலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் என்று நாடெங்கிலும் அழித்துக் கொண்டிருக்கின்றன.

போரின் முதல் பத்து நாட்களில், இஸ்ரேல் 3,000 விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பெரும்பாலான மதிப்பீடுகள் தெரிவிக்கன்றன. 330க்கும் மேற்பட்ட லெபனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 1,300 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் இறப்பு எண்ணிக்கையைவிட லெபனியர்களின் இறப்பு பட்டியல் பத்து மடங்கு கூடுதலாக உள்ளது; இதுகூட பெருமளவு இஸ்ரேலிய படைகள் முன்னேறாத நிலையில் நிகழ்ந்தவையாகும். இரு தரப்புக்களினாலும் தாக்குப் பிடிக்கப்படும் இறப்புக்களில் காணப்படும் வேறுபாடுகள் லெபனான், ஹெஸ்பொல்லா இரண்டையும் சேர்த்து பார்த்தால் வாஷிங்டனால் நன்கு ஆயுதபாணியாக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் மகத்தான இராணுவ மேன்மையை கூர்மையான முறையில் அடையாளம் காட்டுகிறது.

சிரிய, லெபனிய ஆதரவு ஹெஸ்பொல்லாவிற்கு இருப்பதை வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் ஆதரவு என்று டைம்ஸ் எதிர்க்கிறது. (ஹெஸ்பொல்லாவை "ஒரு பயங்கரவாதக் குழு" என்று அழைப்பதில், செய்தித்தாள் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து எதிர்ப்ப்பையும் பயங்கரவாதி எனக் கூறுவதைத்தான் சம்பிரதாயமுறையில் ஏற்கிறது). அமெரிக்க நிதிய, இராணுவ ஆதரவு பில்லியன் டாலர்கள் ஆண்டு ஒன்றுக்கு கொடுக்கப்படுவது பற்றி இதேபோன்ற கவலைகள் தெரிவிக்கப்படவில்லை என்பதை கூறத் தேவையில்லை.

குறிப்பாக இழிவானதாக இருப்பது ஹெஸ்பொல்லாவிற்கு "அடைக்கலம் கொடுப்பதற்கு கொடுக்க வேண்டிய அதிக விலை" என்பதை லெபனியர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்பது பற்றிய பேச்சாகும். இது சிவிலிய மக்கள்மீது கூட்டுத் தண்டனையை சுமத்துவதற்கு ஒப்பாகும்.

தலையங்கம் தொடர்கிறது: "விமான சக்தி இந்த இலக்குகளை அடைந்துவிட முடியுமா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான்; இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிப்பது என்ற தவறினை மீண்டும் செய்துவிடக்கூடாது."

வேறுவிதமாகக் கூறினால், தெற்கு லெபனானின் பெரும்பகுதிகளை மக்கட்தொகை இல்லாமல் செய்யும் பொருட்டு தரைமார்க்க படையெடுப்பு மேற்கொள்ளுதல், அங்கு வாழம் மக்களை அகதியாக மாற்றுவது சரிதான் என்றும் இஸ்ரேல் அப்பகுதியில் ஒரே ஆக்கிரமிப்பு சக்தியாக இருக்கக் கூடாது என்ற ஆலோசனை வழங்கப்படுகிறது.

டைம்ஸ் மேலும் கூறுகிறது: "இந்நெருக்கடியை தூண்டிவிட்ட ஹெஸ்பொல்லா வன்முறையானது லெபனிய இராணுவம் மற்றும் அரசாங்கத்தை வலிமை இழக்கச்செய்தால், குறிப்பாக அதுதான் தன்னுடைய நீண்டகால அக்கறை என்று நம்புகிறது."

இங்கு இந்நாளேடு போருக்கு காரணம் ஹெஸ்பொல்லாதான் என்ற அதிகாரபூர்வ பிரச்சாரத்தைத்தான் எடுத்துரைக்கிறது. இது ஒரு பொய்யாகும்; டைம்ஸுக்கு அது நன்றாகத் தெரியும். கடந்த வாரம் எல்லையில் நடத்திய தாக்குதல் ஒரு போலிக் காரணமாக இஸ்ரேலினால் வாஷிங்டன் ஒப்புதலுடன், முன்னரே தயாரிக்கப்பட்டிருந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

San Francisco Chronicle வெள்ளிக் கிழமையன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை இதை இன்னும் வெளிப்படையாக்குகிறது. "கடந்த வாரம் ஹெஸ்பொல்லா போராளிகளின் ஆத்திரமூட்டலுக்கு இஸ்ரேலின் இராணுவம் விமானம், தரை மற்றும் கடல் மூலம் கொடுத்த விடையிறுப்பு ஓராண்டிற்கு முன்னர் இறுதிவடிவம் கொடுக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதாக அமைந்துள்ளது." என்று அது எழுதியுள்ளது.

பார்-இலன் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியாக இருக்கும் ஜெரால்ட் ஸ்டீன்பேர்க் கூறியிருப்பதை இக்கட்டுரை மேற்கோளிட்டுள்ளது. பேராசிரியர் கூறியிருப்பதாவது: "1948ல் இருந்து இஸ்ரேல் நடத்திய போர்கள் அனைத்திலும், இதில்தான் இஸ்ரேல் மிகவும் தயாரிப்புடன் இருந்தது. ஒருவிதத்தில் இதற்கான தயாரிப்பு 2000 மே மாதம் தொடங்கிவிட்டது; அதாவது இ்ஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்பட்டவுடன் ... 2004 ஐ ஒட்டி, இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள், மூன்று வாரம் நடந்திருக்க வேண்டியவை, தடுப்பிற்கு உட்பட்டன; அதன் பின்னர் கடந்த இரு ஆண்டுகளில் இதுபற்றிய ஒத்திகைகள் அறைக்குள்ளேயே நடத்தப்பட்டன."

Chronicle கட்டுரை தொடர்கிறது: "ஓராண்டிற்கு முன்பு, ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி பவர்-பாயின்ட் (PowerPoint) மூலம் காட்சிகளை வழங்கினார்; அதுவும் பதிவு செய்யப்படக்கூடாது என்ற அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஏனைய ராஜீயதூதர்கள், செய்தியாளர்கள், சிந்தனைக் குழாமினர் ஆகியோருக்கு இப்பொழுது நடைபெறும் செயலைப் பற்றிய முழு விவரங்களும் அதில் அடங்கியிருந்தன." இந்த அதிகாரி ஒரு மூன்றுவாரத் தாக்குதலை விளக்கினார் என்றும் "மூன்றாம் வாரம் தரைப்படை வீரர்கள் மிகப் பெரிய அளவில் நுழைக்கப்படுவார்கள் என்றும்" விவரித்ததாக கட்டுரை மேலும் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் "அதிகாரபூர்வ செய்தித்தாள்" என அழைக்கப்படும் டைம்சிற்கு இத்திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது எனக்கூறுவது ஏற்கமுடியாத ஒன்றாகும்.

இன்னும் "வலிமையுடைய" ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானம் ஒன்று "வலிமையான" தூதரக நடவடிக்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்று டைம்சின் தலையங்கம் அழைப்பு விடுத்துள்ளது. "இஸ்ரேலியர்கள் மற்றொரு பாதுகாப்புக் குழு தீர்மானம் எவ்வித மாற்றத்தையும் கொடுக்காது என்று அவநம்பிக்கை கொண்டிருப்பது ஆச்சரியத்தை தரவில்லை" என்று தலையங்கம் பரிவுணர்வுடன் குறிப்பிடுகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரி, அது அதனை புறக்கணித்தது உள்பட, கணக்கிலடங்கா பாதுகாப்புக்குழு தீர்மானங்கள் பற்றி தலையங்கம் குறிப்பு ஏதும் கூறவில்லை.

இத்தீர்மானம் "எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் தண்டனை என்ற தெளிவான அச்சுறுத்தலை உள்ளடக்கியிருக்க வேண்டும்" என்று அத்தலையங்கம் வலியுறுத்துகிறது. "ஹெஸ்பொல்லா இஸ்ரேலிய எல்லைகளில் இருந்து வெளியேறி, ஆயுதங்கள் களைதலையும் தொடங்கவேண்டும்; சிரியா, ஈரான் இரண்டும் அவற்றின் வாடிக்கை அமைப்பிற்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்" என்கிறது. (இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவ ஆதரவு தொடர்பாக இத்தகைய கோரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை.)

லெபனான் மீது இஸ்ரேலிய கட்டுப்பாடு உண்மையில் வந்து விட்டதை இந்த இரு நாடுகளும் ஏற்க மறுத்தால், இத்தகைய சூத்திரம்தான் சிரியா, ஈரான் இரண்டையும் தனிமைப்படுத்த, போருக்கு ஒரு முன்னோடி நிகழ்வாக இருப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

ஹெஸ்பொல்லா "ஆயுதங்களை களையவேண்டும்" என்பதின் பொருள், உண்மையில், இஸ்ரேலிய, அமெரிக்க கொள்கைகளுக்கு லெபனானில் உள் எதிர்ப்புக்கள் இருத்தல் களையப்படவேண்டும், நாட்டை அமெரிக்க இஸ்ரேலிய சிரிய எதிர்ப்பு, ஈரானிய எதிர்ப்பு, பாலஸ்தீனிய எதிர்ப்பு அச்சின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என்பதாகும். 25 ஆண்டுகள் முன்பு இஸ்ரேலிய பிரதம மந்திரி மெனாச்செம் பெகின் மற்றும் அவருடைய பாதுகாப்பு மந்திரி ஏரியல் ஷரோனும் பஷிர் ஜெமயெல்லை ஜனாதிபதியாக்குவதுடன் ஒரு வலதுசாரி கிறிஸ்தவ பலாஞ்சி அரசாங்கத்தை லெபனானில் நிறுவ வேண்டும் என்று இயற்றப்பட்ட திட்டத்தை அடைவது என்பதைத்தான் இது பிரதிநிதித்துவம் செய்யும்.

டைம்ஸின் "வலிமையான" இராஜதந்திரம் என்பது இஸ்ரேலுடைய எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மட்டும் பிரத்தியேகமாக இயக்கப்படும். இஸ்ரேலுக்கு எதிராக எவ்வித தண்டனை என்ற அச்சுறுத்தலும் கூடாது. சியோனிச அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிடத்தக்க சலுகைகள் ஏதும் கோரப்படக் கூடாது. நியூ யோர்க் டைம்ஸ் இராஜதந்திரம் என்று கூறுவது அழிவு ஏற்படுத்தப்படும் என்ற அச்சுறுத்தலின் கீழ் இஸ்ரேலிய கோரிக்கைகளை கட்டாயப்படுத்தலாகும்.

"இஸ்ரேலின் கடத்தப்பட்ட இராணுவ வீரர்கள் திருப்பியனுப்பப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் கட்டளையிட வேண்டும்" என்று தலையங்கம் கூறுகிறது (ஆனால் இஸ்ரேலிய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள லெபனிய நாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கான கைதிகளை பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது.) "மேலும் கடந்த வார அழிப்பு ஏற்பட்டுள்ளதிலிருந்து லெபனானை மறுசீரமைப்பதற்கு முக்கிய சர்வதேச நன்கொடைகள் உறுதி மொழி கொடுக்கப்பட வேண்டும்; (யாரிடம் என்பதை செய்தித்தாள் கூறவில்லை). அதன் வலுவற்ற ஜனநாயக அரசாங்கத்திற்கு ஆக்கம் கொடுக்கப்பட வேண்டும்."

இஸ்ரேலிய குண்டுவீச்சுக்களால் ஏற்பட்டுள்ள அழிவைப் பற்றி கூறுகையில், அவற்றிற்கான பொறுப்பை கொண்டுள்ள அரசாங்கங்களினால் அவை ஏற்கப்பட வேண்டும் என்பதுதான் உரிமைகள் கூறுவது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இழப்புத் தொகைகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். லெபனானில் அரசாங்கத்திற்கு "முண்டு" கொடுக்க வேண்டும் என்ற அழைப்பை பொறுத்தவரையில், ஒரு சக்தி வாய்ந்த போலீஸ் படை, அமெரிக்க-இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள் எதிர்ப்பை அடக்குவதற்கு தோற்றுவிக்க வேண்டும் என்பது பொருளாகும்.

டைம்ஸ் மேலும் கூறுவதாவது: "பாதுகாப்புக் குழு இத்தகைய வெளிப்படையான கோரிக்கைகளை வெளியிடத் தயாராக இல்லை என்றால், தெளிவான தண்டனைகளுடன் அவற்றை தொடர்புபடுத்த தயாராக இல்லை என்றால், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் முக்கிய அரேபிய நட்பு நாடுகள் தாங்களாகவே தீவிர அழுத்தத்தை கொண்டுவர வேண்டும்." அதாவது, அமெரிக்கா ஈராக்கின் மீது சட்டவிரோத படையெடுப்பு நிகழ்த்தியது போல், ஐ.நா.வின் தீர்மானங்களை காற்றில் பறக்கவிட தயார் செய்ய வேண்டும், மற்றும் சிரியாவிற்கும் ஈரானுக்கும் எதிராக போரைத்தயாரிக்க மற்றொரு "விரும்பும் நாடுகளின் கூட்டணியை" அமைக்க வேண்டும் என்பதாகும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ், சிரிய ஜனாதிபதி பஷீர் அல்-அசாத்துடன் வரவிருக்கும் மத்திய கிழக்கு பயணத்தின்போது பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்; அப்பொழுதுதான் "லெபனானில் தலையிடுவதை தொடர்ந்தால் அவர் சட்டப்படி ஏற்கும் நபராக இருக்க முடியாது" என்பது தெளிவாக கூறப்பட முடியும். இவ்வாறு லெபனானில் சிரிய தொடர்பு (வரலாற்றளவில் சிரியாவின் ஒரு பகுதிதான்), என்பது "தலையீடு செய்வது"; ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக படையெடுத்தல் மற்றும் குண்டுகளை போடுதல் மற்றும் நூறாயிரக்கணக்கான லெபனியர்களை இடம்பெயரவைப்பது உள்பட, லெபனானின் உள் விவகாரங்களில் தலையிடுவது முற்றிலும் நியாயப்படுத்தப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய "தலையீட்டை" சிறந்த முறையில் செய்வதற்கான கருவிதான் இஸ்ரேல் என்பதைவிட வேறு என்னதான் இஸ்ரேலைப் பற்றி விவரிக்க முடியும்?

உண்மையில் தந்திரோபாயரீதியில் ஓரளவு வேறுபாடுகளை மழுப்புதல் என்பதை தவிர, தனக்கும் புஷ் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள கொள்கைகளில் சில வேறுபாடுகளை நிறுவவேண்டும் என்று ஆவல் கொண்டு, டைம்ஸ் "போரை நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு இன்னும் கூடுதலான அவகாசம் கொடுத்து தயக்கம் காட்டும் ரைஸ், ஒரு விமானத்தில் ஏறி டமாஸ்கசுக்கும் ஜெருசலேத்திற்கும் பயணிக்க வேண்டும். இன்னும் இதை அவ்வம்மையார் தாமதிப்பாரேயானால், கூடுதலான உயிர்கள் இழக்கப்படும்; நீடித்த அமைதியை கட்டமைப்பது கடினமாகிவிடும்" என்று அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் புஷ் நிர்வாகம் முன்கூட்டியே அரசியல் காட்சி எப்படி இருக்க வேண்டும், தற்போதைய நடவடிக்கை திட்டமிட்டபடி இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவை ஒட்டித்தான் ரைசின் தயக்கம் உள்ளது என்பதை டைம்ஸ் நன்கு அறியும். டைம்ஸின் "நீடித்த அமைதி" ராஜீய அச்சுறுத்தல் மற்றும் போர் மூலம் அடையப்பட வேண்டும் என்ற கருத்தின் பொருள் அமெரிக்க இஸ்ரேலிய ஆதிக்கத்திற்கு மத்திய கிழக்கில் மக்கள் எதிர்ப்பு இருந்தால் அது நசுக்கப்பட வேண்டும் என்பதுதான்.

See Also:

லெபனானுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய போரின் உண்மையான நோக்கங்கள்

G8 அரசுகள் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அனுமதி கொடுக்கின்றன

இஸ்ரேல் தாக்குதலுக்கு உடந்தையாக உள்ள அரேபிய தலைவர்களை எதிர்ப்புக்கள் கண்டனத்திற்கு உட்படுத்துகின்றன

Top of page