World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Bush in Baghdad

பாக்தாத்தில் புஷ்

By Patrick Martin
14 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

செவ்வாய் கிழமையன்று ஜனாதிபதி புஷ் பாக்தாத்திற்கு விஜயம் செய்ததை அமெரிக்க செய்தி ஊடகமும் வாஷிங்டனும் ஏதோ பெரும் அரசியல் அரிய செயல் என்பது போல் பாராட்டியுள்ளன. உண்மையில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட பெயரளவிற்கு இறைமை கொண்ட ஈராக்கிய அரசாங்கம்கூட தெரிந்திராத வகையில் நிகழ்ந்த, திடீரென்று மேற்கொள்ளப்பட்ட இப்பயணம், ஈராக்கில் இருக்கும் நிலைமை எவ்வளவு மோசமாக போயுள்ளது என்பதையும் புஷ் நிர்வாகத்தின் அரசியல் தனிமைப்படல் மற்றும் திசைவிலகல் இரண்டையும் நிரூபித்துக் காட்டுகிறது.

ஓர் அமெரிக்க ஜனாதிபதி வெளிநாட்டுத் தலைநகரில் திருட்டுத்தனமாக நுழைந்து தரையில் ஐந்து மணி நேரம் தங்கி, தொடர்ச்சியான தயார் செய்யப்பட்ட, பொருளற்றவகையில் பொது மேடைகளில் தோன்றி, பாக்தாத் நகரின் பச்சை வலையமெனும் கோட்டைக்குள் இருந்துவிட்டு, பின்னர் இருட்டின் பாதுகாப்பில் மீண்டும் இருப்பிடத்திற்கு பறந்து சென்றது பற்றி எப்படிப்பட்ட "புனைந்துரைகள்" எழுதினாலும் இழிவான, கேலிக்கூத்தான, இக்காட்சியின் தன்மையை அவை மாற்றிவிடாது,

இந்தப் பயணத்தின் மிகக் குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதியை காண்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் ஈராக்கிய பிரதம மந்திரியான நெளரி அல்-மாலிகி ஜனாதிபதியின் வருகை பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தார். அதுவரை அமெரிக்கத் தூதரகத்தில், மேரிலாந்து டேவிட் முகாமில் ஜனாதிபதி ஓய்வு எடுக்கும் இடத்திலுள்ள புஷ் மற்றும் அவருடைய போர் அமைச்சரவை உறுப்பினர்களுடன் வீடியோமுறை சந்திப்பில் காண இருப்பதாகத்தான் அவர் நம்புதற்கு இட்டுச்செல்லப்பட்டிருந்தார்.

புஷ்ஷின் வருகை பற்றிய மாலிகியின் அறியாமை, அமெரிக்க படையெடுப்பாளர்களால் பாக்தாத்தில் நிறுவப்பட்டுள்ள அரசாங்கம் தேசிய இறைமையின் மிக அடிப்படையான கூறுபாடுகளில் ஒன்றைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளது: அதாவது நாட்டிற்கு எவர் வருகிறார் என்பதை கட்டுப்படுத்தும் அதிகாரம் அதற்குக் கிடையாது என்பதே அது.

ஒருவேளை, மற்றொரு அமெரிக்க கால்வருடி அரசாங்கத்தின் தலைநகரான காபூல் தவிர, வேறு எந்தத் தலைநகரத்திலாவது புஷ் இவ்வாறு இறங்கியிருந்தால், அவருடைய விமானம் அல்லது ஹெலிகாப்டர் தடுக்கப்பட்டிருக்கும் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கும். ஆனால் ஈராக்கோ ஒரு சுதந்திரமான நாடு அல்ல. அமெரிக்க பேரரசினால் வெற்றி கொள்ளப்பட்ட மாநிலமாகத்தான் அது இருக்கிறது.

ஈராக்கிய "அரசாங்கம்" பாக்தாத்தில் கூட ஆட்சி நடத்தவில்லை. அமெரிக்கத் தூதர் Zalmay Khalilzad தலைமையில், 130,000 அமெரிக்கத் துருப்புக்களினால் கட்டுப்பாட்டிற்குட்பட்டுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சி என்ற உண்மையான அரசாங்கத்தின் முகவராகத்தான் அது உள்ளது.

புஷ்ஷின் பயணத்தின் ஆரம்ப நடவடிக்கைகள் பற்றிக் கொடுத்த தகவலில் அமெரிக்க செய்தி ஊடகம் இப்பிரச்சினையை எழுப்பவில்லை; மாறாக "பாதுகாப்புக் காரணங்களுக்காக" ஈராக்கிய அரசாங்கத்திற்கு இது பற்றிக் கூறப்படவில்லை என்ற கூற்றை கிளிப்பிள்ளை போல் கூறியது. எவரும் ஜனாதிபதியின் பறக்கும் பயணத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை; ஆனால் ஈராக்கிய அரசாங்கத்திடமே, மிக உயர்ந்த மட்டத்தில்கூட, தகவல் கொடுக்காமல் போனது இரண்டு விளக்கங்களுக்கு மட்டுமே உரியது; இவை இரண்டுமே புஷ் நிர்வாகத்தின் பாசாங்குகளுக்கு ஆதரவாக முகஸ்துதி பாடுவதாக இல்லை.

ஒன்று, ஜனாதிபதி வருகிறார் என்பதை ஜனாதிபதி ஜலால் தாலபானி அல்லது பிரதம மந்திரி மாலிகி மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு உணர்த்தினால் ஈராக்கிய அரசாங்கம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு விரோதிகளை ஏராளமாகக் கொண்டிருக்கும் நிலையில் அது ஒரு பாதுகாப்பு ஆபத்தாக போய்விடும். அல்லது உலகைப் பற்றியும் ஈராக்கிய மக்கள் கருத்து பற்றியும் புஷ் நிர்வாகம் அசட்டைத்தனமாக இருக்கும் நிலையில் பாக்தாத்தில் உள்ள அரசாங்கம்தான் உண்மையான அதிகாரத்தை இயக்குகிறது என்ற கட்டுக்கதையை அதனால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

புஷ்ஷுடன் இருக்கும் நேரம் முழுவதும் பிரதம மந்திரி மாலிகியின் முகத்தில் இருந்த அதிருப்தி நிறைந்த சுருக்கம்தான் இரண்டாம் கருத்தாய்வை நன்கு விளக்குகிறது. தன்னுடைய நாட்டிலேயே தன்னை ஒரு விருந்தாளிபோல் அமெரிக்க ஜனாதிபதி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை அதிருப்தியுடன் அவர் உணர்ந்திருந்தார் எனத் தோன்றியது -- இவ்வுணர்வு இன்னும் கூடுதலான முறையில் ஜனாதிபதி அவரிடம் சாய்ந்து, "நாட்டின் வருங்காலம் உங்கள் கையில் உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளது பற்றி நான் பாராட்டுகிறேன்." என்று கூறியபோது நன்கு அடிக்கோடிட்டுப் புலப்பட்டது. உண்மையில் புஷ்ஷின் திடீர்ப்பயணமே நிரூபித்தவாறு மாலிக்கின் கைகளில் வருங்காலமோ, நிகழ்காலமோ இல்லை.

ஈராக்கிய பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு மாலிக்கியின் மந்திரிசபை பதவி ஏற்றதை ஒட்டி புஷ்ஷின் பயண நேரம் பெயரளவிற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்நநிகழ்வோ போட்டியிட்டிருந்த மத, இனவழிப் பிரிவுகள், ஷியைட்டுக்கள், சுன்னிக்கள் மற்றும் குர்திஷ் பிரிவுகள் (கன்னைகள்) பல அரசாங்க பதவிகள், முக்கியமாக முதன்மையான பாதுகாப்பு பதவிகள் பற்றி அரசியல் பூசல்கள் ஏழு மாதங்கள் நடத்திய பிறகு முடிவிற்கு வந்துள்ளன. இந்த மந்திரி சபை அமைப்பை புஷ் "மிக நேர்த்தியாக உள்ளது" என்று பாராட்டியுள்ளார்; மாலிக்கியை தவிர மந்திரிசபையில் எவரேனும் ஒருவரை அவர் அடையாளம் காட்ட முடியுமா என்பது ஐயப்பாடுதான்.

இப்பயணத்தின் உண்மை நோக்கம் ஈராக்கிய அரசியல் என்பதைவிட அமெரிக்க அரசியலுடன் தொடர்பு கொண்டுள்ளது எனலாம். ஈராக்கில் அல் கொய்தாவின் தலைவர் அபு மூசப் அல் சர்காவி கொலையுண்டதை அடுத்து எழுந்துள்ள விளம்பர அலையை புஷ் தனக்குச் சாதகமாக பயன்படுத்தியுள்ளார்; தனக்கு அரசியல் அளவில் சரிந்து நிற்கும் ஆதரவிற்கு ஊக்கம் கொடுக்கவும், பிரதிநிதிகள் மன்றம், ஏன் செனட்டின்மீதுகூட கட்டுப்பாட்டை நவம்பர் தேர்தல்களில் இழக்கக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டுள்ள குடியரசுக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் இது ஊக்கமாக இருக்கும்.

புஷ்ஷும் அவருடைய உயர்மட்ட அரசியல் ஆலோசகர்களும் போர் எதிர்ப்புக் கருத்திற்கு சலுகைகள் கொடுப்பதன் மூலம் தங்களின் சரிவுற்று வரும் தேர்தல் எண்ணிக்கையை மாற்ற முற்படவில்லை. மாறாக, தங்கள் தீவிர வலதுசாரித் தளத்தை ஒருங்கிணைக்கும் வகையில் சர்க்காவியின் கொலையை பயன்படுத்தி ஈராக்கில் இராணுவ வெற்றி என்னும் புதிய உறுதிமொழிகளுக்கு நம்பகத்தன்மையை கொடுக்க முற்பட்டுள்ளனர்.

அந்த இலக்கை கருத்திற்கொண்டு, புதனன்று மாலிகி அரசாங்கம் செயல்படுத்தியுள்ள இராணுவ நடவடிக்கைக்கு முழு ஆதரவு கொடுக்க புஷ் முன்வந்துள்ளார்; அச்செயற்பாட்டின்படி, 75,000 ஈராக்கிய துருப்புக்கள் அமெரிக்க "ஆலோசகர்கள்", போர் விமானங்கள் ஆகியவை பாக்தாத்தின் தெருக்களில் வெள்ளமெனப் புகும்; நூற்றுக்கணக்கான புதிய சோதனைக் கூடங்கள் நிறுவப்பட்டு, இல்லங்கள் தோறும் சோதனைகள் அமெரிக்க-எதிர்ப்பிற்கு ஆதரவு கொடுக்கின்றது எனக் கருதப்படும் பல குடியிருப்புக்களிலும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

பொதுமக்களிடம் உறவுகள் பற்றிய நடவடிக்கைகள் மற்றும் ஆற்றலைக் காட்டுதல் என்பது ஈராக்கிய போரின் அடிப்படை உண்மையை மாற்றப் போவதில்லை: அதாவது, அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு என்பது பெரும்பாலான ஈராக்கியர்களால் மட்டும் இல்லாமல் பெரும்பாலான அமெரிக்க மக்களாலும் பெருகிய முறையில் கடுமையாக எதிர்க்கப்படுகிறது என்பதே அது. புஷ்ஷின் பயணத்திற்கு சற்று முன்னர், அமெரிக்காவில் நடந்த ஒரு புதிய AP-Ipsps கருத்துக் கணிப்பின்படி ஈராக்கை புஷ் கையாளும் விதத்திற்கான ஆதரவு மிகக் குறைவான வகையில் 33 சதவிகிதத்தையும், மொத்தத்தில் அவர் ஆட்சி பற்றிய ஆதரவு 35 சதவிகிதத்தையும் மட்டுமே பெற்றன. வாட்டர்கேட் ஊழலில் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் இராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்ட காலத்திற்கு பின்னர் இது மிகக் குறைவான சதவிகிதம் ஆகும்.

அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு பெரும் ஆதரவு கொடுக்கும் ஜனநாயகக் கட்சி அடிபணிந்து நிற்பதினால்தான் புஷ் நிர்வாகம் அரசியல் அளவில் தாக்குப் பிடித்து நிற்க முடிகிதே அன்றி போருக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவினாலோ அல்லது அதன் வலதுசாரிச் செயற்பட்டினாலோ அல்ல. பாக்தாத்திற்கு புஷ் பயணித்தது பற்றிய மிச்சிகன் ஜனநாயகக் கட்சி செனட்டர் கார்ல் லெவினுடைய விடையிறுப்பு இதற்கு தக்க சான்றாக அமைந்துள்ளது. இராணுவக் குழுவில் இருக்கும் இந்த மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர், இப்பயணம் "இவ்வாண்டும் தொடர்ந்து அடுத்த ஆண்டும் முறையாக படிப்படியே படைகள் பின்வாங்கப்படுவதற்கு வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார்.

உண்மையில், இணையதளத் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளபடி, கடந்த முறை புஷ் அங்கு சென்றபொழுது இருந்ததைவிட இன்னும் கூடுதலாக 8,000 அமெரிக்கப் படைவீரர்கள் உள்ளனர்; அதாவது 2003ல் நன்றியறிதல் தினத்தன்று புகைப்பட விழாவிற்கு அங்கு அவர் சென்றிருந்தபோது, பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வீரர்களுக்கு வான்கோழிக்கறி கொடுப்பது காட்டப்பட்டது; (பின்னர் இந்த வான்கோழி ஒரு பிளாஸ்டிக் பொம்மை எனக் கண்டறியப்பட்டுள்ளது.)

இதே விசித்திர, கிட்டத்தட்ட சிறுபிள்ளைத்தனமான போலித்தனம்தான் சமீபத்திய பொது உறவுகளுக்கான தந்திரக் காட்சியிலும் உள்ளது. மேலும் பாதுகாப்பு எச்சரிக்கை முன் நடவடிக்கைகளில் CIA இயக்குனர், கூட்டுப் படைகளின் தலைவர்கள், வெள்ளை மாளிகையில் பெரும்பாலானவர்கள் கூட இதுபற்றித் தெரியாமல் வைக்கப்பட்டிருந்தனர்? அல் கொய்தா ஊடுருவவும் அபாயம் அங்கு இருந்ததா? பசுமைப் பகுதி மீது எதற்காக போரிடும் ஜெட் விமானங்கள் பறந்து சென்றன? எழுச்சியாளர்களிடம் விமானப் படை ஒன்றும் இல்லை.

இப்படி மர்மமான முறையில் நாடகம் அரங்கேறியதும் மற்றும் பெரும் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளும், அன்றாடம் பல்லாயிரக் கணக்கான இராணுவத்தினர் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் நிலையில், ஈராக்கிய மக்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் நிலையில், கோழைத்தனத்தின் கூறுபாடாகத்தான் உள்ளது. பிறரை மிரட்டுவதில் மகிழ்ச்சி காணும் மனிதர்களான புஷ்ஷை போன்றவர்களிடத்தில் இந்தக் குணநலனைக் காணமுடியும்.

இதே ஜனாதிபதிதான் இளவயதில் தன்னுடைய குடும்பத் தொடர்புகளைப் பயன்படுத்தி வியட்நாம் போரில் பங்கு பெறுவதை தவிர்த்தார் என்பதை நாம் மறக்கவேண்டாம்; ஆனால் ஈராக்கிய கிளர்ச்சியாளர்களை "கொண்டு வருவதற்கு" உரையாற்றியதும் இவர்தான். இவருடைய பாதுகாப்பு மந்திரியான டொனால்ட் ரம்ஸ்பெல்ட், படைவீரர்கள் தங்களுடைய வாகனங்களில் இருக்கும் கவசங்களின் குறைத் தன்மையை பற்றிக் கவலை கொண்டு குறைகூறியபோது, "நீங்கள் வைத்திருக்கும் படையை கொண்டு போர் செய்யுங்கள்" என்று கூறினார்.

இப்பொழுது கிட்டததட்ட 2,500 அமெரிக்க இறப்புக்கள் மற்றும் 100,000 மேலான ஈராக்கிய இறப்புக்களுக்கு பின்னர் அமெரிக்க தலைமைத் தளபதி பாக்தாத் நகரத்திற்கு ஒரு திருடனைப் போல் வந்து செல்லுகிறார்.

See Also:

சர்காவி கொல்லப்படலும் புஷ் நிர்வாகமும்

Top of page